அறைக்குள் சென்ற வெண்மதியோ விம்மி விம்மி அழுதாள். அவர்கள் சொன்னது சரி தானே என்று தான் தோன்றியது. முதலில் நிர்மல் இறந்தது, அதற்கு பிறகு சரவணனுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்தது, அனைத்துக்கும் அவள் தான் காரணம் என்று முடிவு கட்டிக் கொண்டாள்.

ஆறுதல் சொல்ல யாருமில்லாத தனிமை ஒரு அழுத்ததைக் கொடுக்க அதை கண்ணீரால் கரைக்க முயன்றாள். அப்போது வீட்டுக்கு வந்த சரவணன் அன்னை முகம் சரியில்லாததை கண்டான்.

“அம்மா என்ன ஆச்சு? எதுக்கு ஒரு மாதிரி இருக்க? மதி எங்க?”

“சரவணா, வீட்ல ஒரு பிரச்சனை டா”

“என்ன மா?”, என்று அவன் கேட்டதும் நடந்ததைச் சொன்னாள் வசந்தா. “உன் சித்தியும் உன் மேல உள்ள அக்கறைல தான் டா சொன்னா. ரெண்டு பேர் மேலயும் தப்பில்லை. போய் வெண்மதியை சமாதானப் படுத்து”, என்றாள்.

“சரி மா, இந்த விஷயம் அப்பாவுக்கோ சித்தப்பாவுக்கோ தெரிய வேண்டாம். சித்தியை தான் தப்பா நினைப்பாங்க”, என்று சொன்னவன் அறைக்குச் சென்றான். வெண்மதி படுக்கையில் குப்புறப் படுத்து அழுது கொண்டிருக்க அவனால் தாங்க முடிய வில்லை.

அவள் அருகே சென்று “மதி என்ன இது சின்ன பிள்ளையாட்டம்?”, என்று கேட்ட படி அவள் அருகே அமர்ந்தவன் அவள் தோள் தொட்டு தூக்கி அவளை அமர வைத்தான்.

அவள் அழுது கொண்டே இருக்க “சித்தி சொன்னது தப்பு தான். அதை அவங்களும் உணர்ந்துட்டாங்க. வேணும்னா உன் கிட்ட மன்னிப்பு கேக்கச் சொல்லவா?”, என்று கேட்டான்.

“அவங்க சொன்னதுல என்ன தப்பிருக்கு? எனக்கே உங்களுக்கு ஏதாவது ஆகிருமோன்னு பயமா இருக்கு”

“அப்படி எல்லாம் இல்லை மா. அதான் அன்னைக்கே சொன்னேனே? ராசி எல்லாம் சும்மான்னு”

“இல்லை, உண்மை தான். என் கூட வந்தப்ப தானே உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆச்சு? அன்னைக்கும் உங்க கால்ல அடி பட்டுச்சு. உங்களைக் கல்யாணம் முடிஞ்சதுக்கே உங்களுக்கு இந்த நிலைமை. உங்க கூட வாழ ஆரம்பிச்சா உங்க உயிருக்கே ஆபத்தாகிரும். அதனால தான் நீங்களும் என்னைப் பிரிஞ்சு இருக்கீங்களோ?”, என்று மனதில் இருப்பது தவறான நேரத்தில் வெளியே வந்து விட்டது.

“என்ன உளறுற வெண்மதி? எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற?”

“நான் உண்மையைத் தான் சொல்றேன். ஒண்ணு உங்களுக்கு என்னைப் பிடிக்காம இருக்கணும். இல்லைன்னா என் கூட வாழ்ந்தா நிர்மல் மாதிரி உங்களுக்கு ஏதாவது ஆகிருமோன்னு நீங்க பயந்து விலகி இருக்கணும். எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலை. பொம்மை மாதிரி நான் இங்க உக்காந்துருக்கேன். நான் எங்க வீட்டுக்கே போறேன். நான் உங்களை விட்டு விலகி போனா உங்களுக்கு ஒண்ணுமே ஆகாது”, என்று அவள் அழுத படியே சொல்ல “வாயை மூடு டி”, என்று கத்தினான் சரவணன்.

அவன் கத்தலும் அவன் டி என்ற அழைப்பும் அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க அவனைக் கண்டு பேந்த பேந்த விழித்தாள். அவள் அதிர்ந்து விழிக்க அவனுக்கு அவளைக் கண்டு பாவமாக இருந்தது. சித்தியின் பேச்சு அவளை குழப்பி இருக்கிறது என்று அவனுக்கு புரிந்தது.

“இங்க பாரு மதி, இந்த ராசில எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. கடவுளை நம்புறேன் அவ்வளவு தான். நான் கல்லுல போய் மோதிட்டு உன் ராசி தான் காரணம்னு பழி போட்டா நான் மெண்டல்ன்னு அர்த்தம். அப்புறம் உன்னை விட்டு விலகி இருக்குறது என் உயிரைக் காப்பாத்திக்க இல்லை. உன் மனசு மாற நான் கொடுக்குற டைம். இதெல்லாம் புரிஞ்சிக்காம போறேன்னு சொல்றல்ல? போடி போ. உன்னை யாரும் தடுக்கலை. அம்மா கிட்டயும் என்னை விட்டு போயிறேன்னு சொல்லிருக்க? அப்படின்னா என்னைப் பிரியுறது உனக்கு சாதாரண விஷயம் அப்படித் தானே? சந்தோஷமா போ. போ டி”, என்று கத்தி விட்டான்.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனும் அவளை முறைத்துப் பார்த்த படி அமர்ந்திருந்தான். அவளை இழுத்து அணைத்திருந்தால் எல்லாம் சரியாகி இருக்கும். அவன் செய்யாததால் அவளுக்கும் வீம்பு வந்தது.

“நான் என் வீட்டுக்கு போகணும். என்னைக் கொண்டு போய் விடுங்க”, என்றாள்.

இனி பிரிந்து போகிறேன் என்று அவள் சொல்லக் கூடாது என்று தான் அவன் அப்படிப் பேசினான். அவள் மீண்டும் போகிறேன் என்று சொல்லவும் “என்னை விட்டு ஒரெடியா போக முடிவு பண்ணிட்ட? அப்படித் தானே?”, என்று கலக்கமாக கேட்டான்.

“இல்லை, எனக்கு கொஞ்சம் அமைதி வேணும். இங்க இருந்தா என்னால சகஜமா இருக்க முடியாது”

“சரி கிளம்பு”, என்று சொல்ல அவளும் கிளம்பி விட்டாள். வசந்தா கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவள் கிளம்புவதைக் கண்ட சாந்தி அவளிடம் மன்னிப்பு கேட்க “எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்லை சின்னத்தை. ஒரு ரெண்டு நாள் அம்மா வீட்ல இருந்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.

உண்மையிலே அவளுக்கு யார் மீதும் கோபம் இல்லை. ஏன் சரவணன் மீது கூட அவளுக்கு கோபம் கிடையாது. இது ஒரு ஏக்கம். அவன் தன்னிடம் கணவனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே காரணம். அந்த ஏக்கத்தை சுமந்து கொண்டு ஒவ்வொரு நாளும் அவனுடன் ஒரே அறையில் இருப்பது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அதனால் தான் கிளம்பி விட்டாள்.

வண்டியில் செல்லும் போது “வீட்டுக்கு போய் உங்க அப்பா கிட்ட கண்ணைக் கசக்கிறாத டி. அப்புறம் என் மகளை எப்படி அழ வைக்கலாம்னு உங்க அப்பாவே என்னைப் போட்டுத் தள்ளிருவார்”, என்று சொன்னான் சரவணன்.

அவன் சொன்னதைக் கேட்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் முதுகில் ஒரு அடி அடித்தாள். “ஏய் என்ன டி அடிக்கிற?”, என்று வியப்பாக கேட்டான் சரவணன். அவள் சிரிப்பு அவன் மனதையும் கொஞ்சம் அமைதி படுத்தியது.

“நான் அடிப்பேன். உங்களை கொலையும் செய்வேன். என்னை யார் கேப்பா?”

“யாரும் கேக்க மாட்டாங்க. கொன்னுக்கோன்னு உன் காலடில விழுந்துருவேன் டி”, என்று அவன் சொன்னதும் நெகிழ்ந்து போனாள். அதை மறைத்து “ஆமா இது என்ன புதுசா?”, என்று கேட்டாள்.

“என்ன?”

“இல்லை, இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு டி எல்லாம் புதுசா இருக்கு?”

“முன்னாடியே எனக்கு உன்னை அப்படிக் கூப்பிடணும் போல தான் இருக்கும். ஆனா எப்படி ஆரம்பிக்கன்னு தயக்கமா இருந்துச்சு. இன்னைக்கு ஸ்டார்ட் பண்ணியாச்சுல்ல? இனி விடாம வரும் டி. டி. டி. டி”

“போதும்”, என்று அவள் சிரிக்க அவள் வீடும் வந்திருந்தது. “ஏய் உங்க வீடு வந்துருச்சு டி. அத்தை கையால ஒரு டீ குடிச்சிட்டு நம்ம வீட்டுக்கே கிளம்பிருவோமா? உன்னை விட்டுட்டு போக மனசே இல்லை டி. நம்ம ரூமுக்கு வந்து எனக்கு என்ன தண்டனை வேனாலும் கொடேன். இந்த பிரிவு மட்டும் வேண்டாம் டி, பிளீஸ்”, என்று ஏக்கமாக கேட்டான் சரவணன்.

அவளுக்கும் அவன் கூடவே சென்று விட வேண்டும் என்று தான் தோன்றியது. ஆனால் அதை மறைத்து “நான் இல்லாம சந்தோஷமா இருங்க. அப்ப தான் என் அருமை உங்களுக்கு புரியும்”, என்று சொல்லி விட்டு வண்டியில் இருந்து இறங்கினாள்.

அவனும் பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு அவளுடன் வீட்டுக்குள் சென்றான். அவளது பெற்றோர் கேள்வி கேட்டால் என்ன சொல்வது என்று அவன் குழம்பினான். ஆனால் அங்கே சென்றதும் அப்படி எந்த பிரச்சனையும் வர வில்லை.

விசாலம் மற்றும் குற்றாலம் இருவரும் அவர்களை அன்போடு வரவேற்றார்கள். விசாலம் அவனுக்கு டீ போட்டுக் கொடுக்க அதை வெண்மதி தான் அவனுக்கு கொடுத்தாள். அப்படிக் கொடுக்கும் போது “அப்பா கிட்ட எதுவும் உளறி வைக்காதீங்க. நானும் உங்க கூட வரேன். என்னாலயும் உங்களைப் பிரிஞ்சு இருக்க முடியாது”, என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தாள்.

அதைக் கேட்டு அவன் முகம் மலர்ந்தது. இதை விட வேறு சந்தோஷம் அவனுக்கு என்ன இருக்கப் போகிறதாம்? அவள் மனம் மாறுவதற்குள் சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் என்று எண்ணி அரை மனதுடன் குற்றாலத்துடன் பேசிக் கொண்டிருந்தான். அவனுக்கு எப்போதடா மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்வோம் என்று இருந்தது.

சிறிது நேரம் கழித்து “நீங்களும் அத்தையும் எப்படி இருக்கீங்கன்னு பாத்துட்டு போகலாம்னு தான் வந்தோம். அப்ப நாங்க கிளம்புறோம் மாமா. வரோம் அத்தை. வா மதி”, என்று சொல்லி எழுந்து கொண்டான் சரவணன்.

“நீங்க மட்டும் கிளம்புங்க மாப்பிள்ளை. மதி இங்கயே இருக்கட்டும்”, என்று குற்றாலம் சொல்ல இருவரும் திகைத்துப் போனார்கள். சரவணன் நோந்தே போனான். “சாமியே கூட வறேன்னு வரம் கொடுத்துருச்சு. ஆனா பூசாரி காரியத்தையே கெடுக்குறாரே?”, என்று எண்ணிக் கொண்டு பாவமாக நின்றான்.

காதல் வெடிக்கும்…..