மூவருமே உயிருக்கு போராடிக் கொண்டிருக்க வெளியே இருந்தவர்களின் நெஞ்சம் திக் திக்கென்று தான் அடித்தது. பூர்ணிமா வேறு அழுத படி இருக்க “சரவணனுக்கும் வெண்மதிக்கும் ஒண்ணும் ஆகாது பூர்ணி. உன் வயித்துல குழந்தை இருக்கு டா. இப்ப நீ அழக் கூடாது”, என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த செந்தில் கண்களும் கலங்கித் தான் இருந்தது.
ஒவ்வொருவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்க வெண்மதி தான் முதலில் கண் விழித்தாள். கண் விழித்ததும் அவள் அவசரமாக எழுந்து அமர “பாப்பா”, என்ற படி அவளை நெருங்கினார் குற்றாலம். மருத்துவர் ஒருவரை தான் பார்க்க அனுமதிக்க அவர் தான் உள்ளே வந்திருந்தார்.
குற்றாலத்தைக் கண்டதும் “அப்பா, அப்பா… அவருக்கு என்ன ஆச்சுப்பா? அவர் நல்லா இருக்காராப்பா? இல்லை அவரும் நிர்மல் மாதிரி என்னை விட்டுட்டு போய்ட்டாரா? ஏன் பா ஏன் இப்படி நடக்குது?”, என்று அவள் கதற அவளை ஓடி வந்து அணைத்துக் கொண்டார்.
“அப்பா அவர்….”, என்று அவருடைய சட்டையைப் பற்றியவள் “எனக்கு அவரைப் பாக்கணும் பா. என்னால நிர்மல் முகத்தை தான் பாக்க முடியலை. இவரையாவது பாக்கணும் பா. என்னை அவர் கிட்ட கூட்டிட்டு போங்கப்பா”, என்று அழுதாள்.
“சரவணனுக்கு ஒண்ணும் இல்லை மா. அந்த தம்பி நல்லா இருக்கு. டாக்டர் பாத்துட்டு இருக்காங்க. இப்ப அங்க போக முடியாது டா”, என்று சொல்லி அவளை அமைதி படுத்த முயன்றார். மகளின் கண்ணீரில் அவர் கண்களும் கலங்கியது. அடுத்தவர்களின் கண்ணீரை சந்தோசத்துடன் வேடிக்கை பார்த்தவர் முதல் முறையாக ஏங்கி ஏங்கி அழுதார்.
அவர் அழுகையில் வெண்மதி மிரண்டு போக அதைப் பார்த்த குற்றாலம் “பாப்பா ஒண்ணும் இல்லை டா. எல்லாம் சரியாகிரும்”, என்றார்.
“எனக்கு அவர் வேணும் பா. என்னால அவர் இல்லாம இருக்க முடியாது. எனக்கு அவரைப் பாக்கணும் பா. அவர் பேசுறதைக் கேக்கணும். அவர் கூடவே இருக்கணும். அவர் கண்ணு அழகா இருக்கும் பா. அதே மாதிரி தான் நிர்மல் கண்ணும் இருக்கும். ரெண்டு பேரோட கண்ணும் ஒண்ணு போல இருக்கும் பா. நிர்மல் என்னை விட்டுட்டு போன மாதிரி இவர் என்னை விட்டு போக மாட்டார் தானேப்பா?”, என்று வெண்மதி கேட்க மகளின் பேச்சை அவருக்கு எப்படி எடுத்துக் கொள்ள என்று தெரியவில்லை.
அதனால் “சரவணனை உனக்கு பிடிக்குமா டா?”, என்று கேட்டு மெல்ல அவள் மனதை தெரிந்து கொள்ள முயன்றார்.
“ரொம்ப பிடிக்கும் பா… அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் பா”, என்று பட்டென்று வந்தது அவள் பதில்.
“சரவணன் கண்ணு நிர்மல் கண்ணு மாதிரி இருக்குறதுனால சரவணனைப் பிடிக்குமா டா?”
“இவர் கண்ணு மாதிரி நிர்மல் கண்ணும் இருந்ததுனால தான் பா எனக்கு நிர்மலை பிடிச்சது. இவரை மாதிரியே நிர்மல் இருந்ததுனால தான் பா எனக்கு நிர்மலைப் பிடிச்சது. இவரை மாதிரியே தான் பா நிர்மலும் என்னை மதின்னு கூப்பிடுவார். இப்ப என்னை யாரு மதின்னு கூப்பிடுவா? அவர் என்னை விட்டு போக மாட்டார்ல பா?”, என்று அவள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே புலம்ப மகளின் மனதில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்.
தன்னுடைய மகளுக்காகவாது சரவணன் பிழைத்து வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். மருந்தின் வீரியத்தால் அழுத படியே தூங்கிப் போனாள் வெண்மதி.
அவள் தூங்கட்டும் என்று சொல்லி வெளியே வந்து அமர்ந்தவர் தலையில் கை வைத்துக் கொண்டார். தன்னுடைய மகள் சரவணனைத் தான் நிர்மலிடம் தேடி இருக்கிறாள் என்று புரிந்தது. அப்போது ஏன் திருமணம் வேண்டாம் என்றாள் அவர் யோசிக்க அப்போது தான் அவளிடம் மாப்பிள்ளை யார் என்று சொல்லாதது புரிந்தது.
அப்போது போலீஸ் அங்கே வந்து சில விவரங்களை கேட்டு விட்டு சென்று விட்டனர். அந்த டிரைவரோ மூக்கு முட்டக் குடித்திருந்ததால் அவனுக்கு டிரீட்மெண்ட் பார்க்க டாக்டர்ஸே திணறினார்கள். சிறிது நேரத்தில் அவன் இறந்தும் விட்டான்.
சிறிது நேரத்தில் சரவணனுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அதைக் கேட்ட பிறகு தான் வெண்மதியும் அமைதியாக இருந்தாள். ஆனால் அவனைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்க அவளை சமாளிப்பதற்குள் குற்றாலம் திணறி விட்டார். மகளுக்கு இப்படி ஆகி விட்டதே என்ற கவலையில் இருந்த விசாலம் மகளின் நடவடிக்கைகளை கவனிக்கத் தவறினாள்.
“அப்பா எனக்கு அவரைப் பாக்கணும் பா. பிளீஸ் பா கூட்டிட்டு போங்க”, என்று அவள் கண்ணீருடன் கெஞ்ச அப்போது அந்த அறைக்குள் வந்தாள் பூர்ணிமா.
“பூர்ணி பூர்ணி… எனக்கு அவரைப் பாக்கணும் போல இருக்கு டி. பிளீஸ் டி கூட்டிட்டு போ டி”, என்று வெண்மதி கெஞ்ச பூர்ணிமாவுக்கே வியப்பாக இருந்தது.
“அண்ணனுக்கு ஒண்ணும் இல்லை டி வெண்மதி. நல்லா ஆகிட்டாங்க. நீயும் கொஞ்சம் நல்லா ஆகு. அப்புறம் உன்னைக் கூட்டிட்டு போறேன்”, என்று சொல்லி தோழியை சமாதானம் செய்தாள்.
“அவருக்கு ஒண்ணும் இல்லை தானே டி? அவர் நல்லா ஆகிறுவார் தானே? நிர்மல் மாதிரி என்னை தனியா விட்டுட்டு போக மாட்டார் தானே?”, என்று அவள் மீண்டும் கேட்க “வெண்மதி உனக்கு அந்த பையனைப் பிடிக்குமா டா?”, என்று கேட்டாள் விசாலம்.
“ஆமா மா, ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவருக்கு ஒண்ணும் ஆகாதுள்ள மா. லாரி வந்து மோதிருச்சு மா. ரொம்ப ரத்தம் போயிட்டு மா. எனக்கு அவரைப் பாக்கணும். கூட்டிட்டு போ மா”, என்று இப்போது அன்னையிடம் கெஞ்சினாள்.
“அந்த பையனை இவ்வளவு பிடிக்கும்னா எதுக்கு டி அவரைக் கல்யாணம் பண்ண சம்மதிக்கலை நீ?”, என்று கேட்டாள் விசாலம். அதைக் கேட்டு பூர்ணிமாவுக்கு திகைப்பு தான். “அத்தை நீங்க என்ன சொல்றீங்க?”, என்று கேட்டாள் பூர்ணிமா.
“உங்க அப்பாவும் பெரியப்பாவும் உங்க அண்ணனுக்கு வெண்மதியை பொண்ணு கேட்டு வந்தாங்க மா. எங்களுக்கும் ஆசை தான். ஆனா இவ வேண்டாம்னு சொல்லிட்டா”, என்று சொன்ன விசாலம் மகளைப் பார்த்தாள்.
குற்றாலமும் பூர்ணிமாவும் கூட அவளின் பதிலுக்காக ஆவலாக அவளைப் பார்த்தார்கள்.
“என்ன சொல்ற நீ?”, என்று அதிர்ச்சியாக அன்னையிடம் கேட்டாள் வெண்மதி.
“கொஞ்ச நாள் முன்னாடி உன் கிட்ட கல்யாண விஷயம் பேசினோம்ல? அன்னைக்கு பூர்ணியோட அண்ணனுக்கு தான் உன்னை பொண்ணு கேட்டாங்க? நீ செத்துருவேன்னு சொன்ன? எதுக்கு வெண்மதி அப்படிச் சொன்ன?”, என்று கேட்டாள் விசாலம்.
அப்பாவை திரும்பிப் பார்த்தவள் “அப்பா நீங்க பாத்த மாப்பிள்ளை சரவணனா?”, என்று கேட்டாள்.
“ஆமா மா”
“எனக்கு தெரியாதே?”, என்று வெண்மதி திகைப்பாக சொல்ல “இப்ப தெரிஞ்சிருச்சுல்ல? எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிறியா?”, என்று சந்தோஷமாக கேட்டாள் பூர்ணிமா.
என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் வெண்மதி அமைதியாக இருக்க “மாமா இனி வெண்மதி கிட்ட எதுவும் கேக்க வேண்டாம். எங்க அண்ணா சரியாகி வந்த உடனே நாம இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிருவோம். நீங்க பெரியவங்க கிட்ட பேசிருங்க”, என்றாள் பூர்ணிமா.
“மாப்பிள்ளை சரியாகி வீட்டுக்கு வரட்டும் மா. கொஞ்ச நாள் கழிச்சு எல்லாம் பேசலாம்”, என்றார் குற்றாலம். பூர்ணிமா மற்றும் விசாலம் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது. ஆனால் வெண்மதி மனதில் மட்டும் ஏதோ நெருடல். அதை என்னவென்று வரையறுக்க அவளுக்கு தெரிய வில்லை.
அன்று மாலை மீண்டும் வெண்மதி அவனைக் காண வேண்டும் என்று சொல்ல குற்றாலம் அவனைப் பார்க்க அவளை அழைத்துச் சென்றார். அவன் அறைக்கு வெளியே வெற்றிவேல் மட்டும் அமர்ந்திருந்தார். மற்றவர்களை எல்லாம் அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
வெண்மதியைக் கண்டதும் “இப்ப எப்படி இருக்க மா?”, என்று கேட்டார் வெற்றிவேல்.
“பரவால்ல… நான்… அவரைப் பாக்கணும்”, என்று வெண்மதி சொல்ல அவர் அனுமதி கொடுத்தார். அந்த அறைக்குள் அவன் மட்டுமே இருக்க “நீ போய் பாரு மா”, என்று சொல்லி வெளியவே குற்றாலம் நின்று கொண்டார்.
அவள் மட்டும் படபடக்கும் மனதுடன் அந்த அறைக்குள் சென்றாள். சரவணன் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தான். ஆனால் அவன் உடல் எல்லாம் கட்டுகள் போடப் பட்டிருந்தது. அதுவும் தலையில் பெரிய கட்டாக இருந்தது. அவன் அருகே நெருங்கிச் சென்றவள் அங்கிருந்த சேரில் அவனைப் பார்த்த படி அமர்ந்தாள்.
அவன் முகத்தில் காயங்கள் இல்லாமல் போனாலும் அவன் கை கால்களில் எல்லாம் காயம் இருந்தது. தலையில் பெரிய கட்டு போடப் பட்டிருந்தது. தன்னுடைய கையை நீட்டி அவன் தலையில் போடப் பட்டிருந்த கட்டை மெல்ல வருடினாள்.