அத்தியாயம் – 4
இரவு உணவை முடித்த விக்ரமின் பார்வை சுவர் மூலையில் இருந்த மந்தாகினியின் உடைமைகள் மீது விழ வெறுப்புடன் அதை இழுத்துச் சென்று படுக்கையறையை ஒட்டி இருந்த சின்ன உடை மாற்றும் அறைக்குள் போட்டான். கல்யாணம் முடிந்து மருமகள் வீட்டுக்கு வரும்போது எல்லா வசதிகளும் இருக்க வேண்டுமென்று படுக்கையறையின் ஒரு பகுதியை பிரித்து உடை மாற்றுவதற்காய் தடுத்திருக்க இப்போது இப்படி உபயோகமானது.
“என் அனுமதி இல்லாம என் வாழ்க்கைல நுழைஞ்சு இப்ப என் ரூமுக்குள்ளயும் நுழையப் பார்க்கிறாளா, மங்கி தேவி…? எப்படி இந்த ரூமுக்குள்ள வர்றான்னு பார்க்கறேன்…” எனக் கருவிக் கொண்டே கதவைத் தாழிட்டு கட்டிலுக்கு வந்தான்.
சாய்ந்து அமர்ந்தவன் மனதில் பொங்கி வந்த வெறுப்பை திசை திருப்புவதற்காய் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாலும் மனம் அதில் ஈடுபடாமல் சண்டித்தனம் செய்ய கடுப்புடன் கீழே வைத்தான் விக்ரம்.
கடிகாரத்தை நோக்க சமயம் பதினொன்றரை என்றது. தாழிடப்பட்ட கதவை யோசனையுடன் பார்த்தவன், “அவ வந்து கதவைத் தட்டினா நல்லா ஒரு வாங்கு வாங்கலாம்னு பார்த்தா ஆளைக் காணமே… ஒருவேளை இங்க இருக்க பயந்து மூட்டை முடிச்சை கூட விட்டுட்டு ஊருக்கே கிளம்பிட்டாளா…? இல்ல, வேற ஏதாச்சும் ரூம்ல தங்கி இருக்காளா…? ப்ச், சனியன் எங்கயோ போயித் தொலையட்டும்…” எனத் தேற்றிக் கொண்டவனுக்கு உறக்கம் மட்டும் வரவில்லை. சில்லென்று தண்ணீர் குடித்தால் தேவலாமென்று தோன்ற கதவைத் திறந்து வெளியே வந்தவன் மாடிப்படி இறங்கி அடுக்களை நோக்கி நடந்தான்.
ஹால் சுவிட்சைத் தேய்த்ததும் வெளிச்சம் பரவ டைனிங் ஹாலில் இருந்த பிரிட்ஜைத் திறக்க தண்ணிக் குப்பியோடு பியர் குப்பியும் கண்ணில் படவும் அதன் உதவியினாலாவது உறக்கம் வருமா பார்க்கலாம் என்று அதையும் எடுத்துக் கொண்டான் விக்ரம். ஹாலுக்கு வந்தவன் அங்கே சோபாவில் ஒரு உருவம் படுத்திருப்பதைக் கண்டதும் திகைத்தான். அருகே சென்று நோக்கியவனின் விழிகள் அது அவன் மனம் கவரா மனைவி மந்தாகினி தேவி எனச் சொல்ல வெறுப்புடன் முகத்தை சுளித்தான்.
வரும்போது உடுத்த புடவை முந்தானையிலேயே இழுத்துப் போர்த்திக் கொண்டு சோர்வுடன் சுருண்டு படுத்திருந்தாள் மந்தாகினி. அழுதழுது விழிகளும், முகமும் வீங்கி இருந்தது. அவன் மீது பழி சுமத்தி அவனது உறக்கத்தைக் கெடுத்துவிட்டு அவள் இங்கே நிம்மதியாய் உறங்குகிறாள்.
எல்லாம் மறந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தைக் கண்டதும் மனம் கடுகளவு நெகிழ அடுத்த நிமிடமே ஆத்திரமாய் வந்தது. கையிலிருந்த தண்ணீரை அப்படியே அவள் மீது கவிழ்த்து விடலாமா எனத் தோன்றியது. வெறுப்புடன் அவளைக் கடந்து தனது அறைக்கு வந்தவன் பீர் பாட்டிலைத் திறந்து கடகடவென்று தொண்டைக்குள் கவிழ்த்துக் கொண்டான். மனதுக்குள் எரிந்து கொண்டிருந்த தீக்கு அந்தக் குளிர்ந்த பானம் சற்றே ஆசுவாசத்தைக் கொடுக்க, மனதின் ஆழத்தில் அமர்த்தி வைத்திருந்த மந்தாகினியின் அழகிய குழந்தை முகம் எட்டிப் பார்த்து அவன் வேதனையைக் கூட்டியது.
“பாவி, படுபாவி…! குழந்தை மாதிரி மூஞ்சிய வச்சுகிட்டு என் வாழ்க்கையே குதறிப் போட்டுட்டாளே… எல்லார் முன்னாடியும் என்னைக் கேவலமானவனா சித்தரிச்சிட்டு இப்ப எதுவுமே நடக்காத போல எப்படித் தூங்குது எருமை…” அவளைத் திட்டிக் கொண்டாலும் மனதின் ஓரத்தில், “விக்ரம், நீ தப்பே பண்ணலைன்னு உன்னால உறுதியாக் கூற முடியுமா…?” என அவனது மனசாட்சி கேட்க குழப்பத்துடன் அப்படியே அமர்ந்த வாக்கில் படுக்கையில் சரிந்தான். கட்டிலுக்குக் கீழே காலைத் தொங்க விட்டு சுழலும் மின்விசிறியைப் பார்த்துக் கிடந்தவன் மனது பழைய நினைவுகளில் சுழன்றது.
***************************
தங்கமாய் பளபளத்துக் கொண்டிருந்த கதிரவனின் கதிர்கள் பூமியெங்கும் ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருக்க பொன் கதிரின் உபயத்தில் சுமை தாங்காமல் வளைந்து நின்ற நெற்கதிர்கள் பசுந்தங்கமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தன. எங்கெங்கும் பசுமையென நிறைந்திருந்த அந்த அழகான கிராமத்தின் காலைப் பொழுதில் முதுகில் தாங்கிய டிராவல் பாகுடன் இரு மருங்கும் பார்த்துக் கொண்டே நடந்தான் விக்ரம பாண்டியன். சிறு வயதில் அந்த கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்து தங்கியிருந்த நாட்கள் மனதில் வந்தது.
விக்ரமுக்கு கிராம வாழ்க்கையில் பெரிதாய் விருப்பமொன்றும் இல்லை. இருந்தாலும் உறவு முறையில் ஏதாவது விசேஷம் வரும்போது மட்டும் கணேச பாண்டியன் குடும்பத்தோடு கிராமத்தில் இருக்கும் அவர்கள் வீட்டுக்கு வந்து தங்குவதை வழக்கமாக்கி இருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாய் பிசினசில் ஏற்பட்ட சறுக்கலும், உடல் மற்றும் குடும்பப் பிரச்சனைகளுமாய் ஊர்ப்பக்கமே அவர்கள் எட்டிப் பார்ப்பதில்லை. அப்போதும் அவர்களுக்கு சொந்தமான வயல் ஒன்றை விற்பது சம்மந்தமாய் மகனை அனுப்பி இருந்தார்.
பத்து வருட இடைவெளியில் கிராமத்தில் நிறைய வித்தியாசம் வந்திருக்க வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தவன் எதிரில் ஒரு இளம் பெண் சைக்கிளில் வருவதை கவனிக்காமல் நடக்க, அவளோ இவனிடம் ஏதோ சைகை செய்தபடி வருவதை இறுதி நிமிடத்தில் பார்த்து வலப்பக்கமாய் ஒதுங்க அவளும் இடப்பக்கம் சைக்கிளைத் திருப்ப அவன் மீது மோத தடுமாறி இருவரும் கீழே மண்ணில் விழ கோபத்துடன் எழுந்தான் விக்ரம். உடையில் படிந்திருந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டவன் எதிரே பாவாடை தாவணி அணிந்து விழுந்து கிடக்கும் பெண்ணைக் கோபத்துடன் முறைக்க அவள் அதை சட்டை செய்யாமல் எழுந்து சைக்கிளை ஆராயத் தொடங்க இவனுக்கு கோபம் பொங்கியது.
“சைக்கிளை மேல இடிச்சு விழ வைச்சதும் இல்லாம ஒரு ஸாரியாச்சும் கேக்கத் தெரியுதான்னு பாரு, பட்டிக்காடு…” மனதுக்குள் முணுமுணுத்தபடி அவளை அழைத்தான்.
“ஹலோ, அறிவிருக்கா…?” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“ஏன் உங்களுக்கு வேணுமா…?” எனப் பதில் கேள்வி கேட்க சற்று அதிர்ந்து கடுப்புடன் பார்த்தான்.
“என்ன நக்கலா…?”
“இல்லியே, நீங்கதான எனக்கு அறிவிருக்கான்னு கேட்டிய, அதெல்லாம் மண்டை நிறையக் கெடக்கு… அதான் உங்களுக்கு வேணுமான்னு கேட்டேன்…” என்றாள் சற்றும் சிரிக்காமல் அந்தப் பெண்.
“ஏய் திமிரா…? இப்படி தான் கண்ணு தெரியாம எதிர்ல வர்றவன் மேல சைக்கிளை விட்டு லொள்ளுப் பேசுவியா…? இதான் உங்க கிராமத்துப் பழக்கமா…?”
“அட, சாரு ரொம்பத்தான் பொங்கறிங்க…? நான் வண்டில பிரேக் இல்லன்னு சைகை காமிச்சிட்டு தான் வந்தேன், நீங்க டவுனுக்காரவ கவனிக்காம வந்துபோட்டு எங்க கிராமத்த எதுக்கு வம்பிழுக்கறிய…?”
“அடக் கடவுளே…! இவ கையைக் காலை அசைச்சது பிரேக் இல்லன்னு சொல்லவா…? நாம தான் கவனிக்கலயோ…? யோசித்தவன் சற்றுத் தணிந்து, எதிரில் நின்ற கிராமத்து அழகியை ஆராய்ந்தான்.
மஞ்சள் தேய்த்துக் குளித்த பளிச்சென்ற முகம். படிய வாரிப் பின்னலிட்டிருந்தாலும் லேசாய் கலைந்திருந்த தலைமுடி ஒரு பிரத்யேக அழகைக் கொடுத்திருந்தது. மஞ்சள் நிற தாவணியும் பிரவுன் வண்ணப் பாவாடை, பிளவுசும் அணிந்து முந்தானையை இடுப்பில் சொருகி இருந்தாள். முழங்கையில் படிந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு நிமிர்ந்தவள் அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, “என்ன டவுனுக்காரவ பொம்பளைப் புள்ளையவே பார்க்காத போல பாக்குறிய…? என்ன சேதி, எங்க கிராமத்துக்கு வந்திருக்கிய…?” என்றாள்.
“உங்க கிராமமா…? என்னமோ கிராமத்தையே உன் பேருல சொந்தமா வாங்கிட்ட போல சொல்லுற…?” அவனுக்கு என்னவோ அவளை சீண்டுவது பிடித்திருந்தது. அவன் பதிலில் சற்றுக் கடுப்பானவள், முறைத்துக் கொண்டே சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்ப அவன மீண்டும் அழைத்தான்.
“ஏய்…! இந்தா பொண்ணு, கொஞ்சம் நில்லு… அப்படியே எனக்கு மாரியம்மன் கோவிலுக்குப் போக வழி சொல்லிட்டுப் போ…” எனக் கூற, அவனது பேச்சில் எரிச்சலாய் திரும்பிப் பார்த்தவள்,
“இப்படியே நேராப் போயி சோத்தாங்கைப் பக்கம் திரும்பி பீச்சாங்கைப் பக்கம் ரெண்டாவது வீதில திரும்பி மறுபடி சோத்தாங்கை பக்கம் திரும்புங்க, கோவில் வந்திரும்…” எனச் சொல்லிக் கொண்டே சைக்கிளை மிதித்தபடி நகர, அவள் சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டு நடந்தான் விக்ரம்.
மாரியம்மன் கோவில் வீதியின் இறுதியில் இருந்து பார்த்தாலே மாமன் நந்தகுமாரின் வீட்டுக்குச் செல்வதற்கான பாதை புலப்படும் என்பதால் அவன் இந்த அடையாளத்தைச் சொல்லிக் கேட்டிருந்தான். ஆனால் அந்த கிராமத்து அழகியோ அவன் பேச்சில் கடுப்பாகி மீண்டும் இங்கேயே வந்து சேருவதற்கான வழியைச் சொல்லிச் சென்றிருந்தாள்.
வெயில் இருந்தாலும் அங்கங்கே இருந்த மரத்தின் நிழலும், இதமான காற்றும் அசதி தெரியாமல் அவனை நடக்க வைத்தது. அவள் சொன்னது போலவே நடந்தவன் இறுதியில் தான் பழைய இடத்திற்கே மீண்டும் வந்து சேர்ந்ததைக் கண்டு அதிர்ந்து குழப்பத்துடன் நின்றான். அப்போது பின்னில் சைக்கிள் பெல் சவுண்டு கேட்க திரும்பியவன் வாய் நிறைய சிரிப்புடன் வந்து கொண்டிருந்தவளைக் கண்டு கோபமாய் முறைக்க அவள் சிரிப்பு மேலும் அதிகமானது.
“என்ன டவுனுக்காரரே…! நீங்க தேடி வந்த மாரியம்மன் கோவிலைக் காணமேன்னு பார்க்கறியளா…? என்ன செய்ய, சாமி இங்க இருக்க மாட்டேன்னு கிளம்பி வேற பக்கம் போயிருச்சே… நான் அது தெரியாம வழியை மாத்தி சொல்லிட்டன், இந்த முறை சரியா சொல்லித் தரேன்…” என்றவள், “இப்படியே நேராப் போயி…” எனச் சொல்லத் தொடங்க கையெடுத்துக் கும்பிட்டவன்,
“எம்மாத் தாயே…! தெரியாம உன்கிட்ட வழியக் கேட்டுட்டேன், உன் வழியப் பார்த்திட்டு போம்மா…” என்று சொல்ல புன்னகைத்தாள் அவள்.
“சரி, சரி…! நான் அந்தப் பக்கமா தான் போறேன், என் பின்னாடியே வாங்க…” என்றாள், அவனை ஊரைச் சுற்ற வைத்துவிட்டு மனது கேட்காமல் வந்திருந்தவள்.
“ஐயோ, வேணாம் மா மஞ்சக்கிளி, நான் தனியாவே கண்டு பிடிச்சுப் போயிக்கறேன்… ஊருக்குள்ள வந்ததும் பார்த்த முதல் ஆளே இப்படியா…?” எனப் புலம்பியபடி நடக்க அவன் பின்னாலேயே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அவள் வர, திரும்பியவன் சிடுசிடுத்தான்.
“இந்தாம்மா பொண்ணு, எதுக்கு நீ என் பின்னாடியே வர்ற…?” என்றவனை நோக்கி கிண்டலாய் சிரித்தவள்,
“நான் எங்க உங்க பின்னாடி வாறன்…? நீங்க தான் எம்முன்னாடி போறிய…?” எனப் பதிலடி கொடுக்க அவன் பதில் சொல்ல முடியாமல் முழித்து நிற்க, “என்ன, லகுட குசல பாண்டியரே…! அப்படியே நின்னுட்டிக…?” எனக் கேட்க அவன் மூஞ்சியை சுருக்கினான்.
“லகுட குசல பாண்டியனா…? நம்ம பேரு விக்ரம பாண்டியன்னு இவளுக்கு தெரிஞ்சு தான் ஒருவேளை இப்படி சொல்லிக் கூப்பிடறாளா…?” என யோசித்தபடி அவன் மௌனமாய் நடக்க அவள் தொடர்ந்தாள்.
சற்றுத் தூரம் நடந்தபின் வரிசையாய் வீடுகள் தென்படத் தொடங்க வலதுபக்கமாய் சென்ற ஒரு வழியைக் காட்டி, “இனியாச்சும் புதுசா ஒரு ஊருக்குள்ள வரப்ப கொஞ்சம் மரியாதையா பேசக் கத்துக்கங்க டவுனுக்காரரே… நீங்க தேடி வந்த மாரியம்மன் கோவில் அதோ அங்க தெரியுது பாருங்க…” எனக் கைகாட்ட திரும்பிப் பார்த்தவனுக்கு கோவில் தெரிய, நிம்மதியுடன் அவளிடம் திரும்ப அவளோ சைக்கிளில் ஏறி அவனைக் கடந்து அந்த வீதிக்குள் வேகமாய் போய்க் கொண்டிருந்தாள்.
“அட, அந்த மஞ்சக்கிளிக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம விட்டுட்டமே…” என நினைத்தபடி கோவிலை அடைய அங்கிருந்தே அவனது மாமாவின் வீடு சற்று இறக்கத்தில் பசுமையாய் வரிசையாய் நின்ற தென்னந்தோப்புக்கு நடுவே கம்பீரமாய் தெரிந்தது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே வீடு என்றாலும் புதுப் பொலிவுடன் கம்பீரமாய் நின்றது.
வீட்டை அடைந்தவன் உரிமையுடன் கேட்டில் கை வைக்க ராஜபாளையம் நாய் ஒன்று கூண்டுக்குள் இருந்து உர்ரென்றது. அதன் குரலில் பயந்து கையெடுக்க அதன் குரைப்பைக் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தார் சுபாஷினி.
தயக்கத்துடன் நின்ற அழகிய வாலிபனைக் கண்டதும் சட்டென்று முகம் மலர்ந்தவள், “வாங்க விக்ரம் தம்பி…, இன்னைக்குப் பார்த்து மாமா ஒரு வேலையா டவுனுக்குப் போயிட்டாக… இல்லன்னா கூட்டிட்டு வர பஸ் ஸ்டாப்புக்கு வந்திருப்பாங்க… நீங்க சின்ன வயசுல எப்பவோ ஊருக்கு வந்ததாச்சே, வழியெல்லாம் உங்களுக்கு மறந்திருக்கும்னு நினைச்சேன்… பரவால்ல, சரியாக் கண்டு பிடிச்சு வீட்டுக்கு வந்துட்டிங்களே…” என விசாரிக்க அவருடன் நடந்து வீட்டுக்குள் நுழைந்தான் விக்ரம்.
“வழி மறந்துதான் போயிருச்சு அத்தை, வழியில ஒருத்தங்க கிட்ட விசாரிச்சேன்…”
“ஓ… அதெல்லாம் மாமா பேரைச் சொல்லிக் கேட்டா நம்மாளுங்க சரியா வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருவாங்க…” என “ஒருவேளை, மாமா பேரைச் சொல்லி விசாரித்திருந்தால் அந்த மஞ்சள் அழகி நம்மை சுத்த விட்டிருக்க மாட்டாளோ…” எனத் தோன்றியது. வெயிலின் தாக்கமே இல்லாமல் குளுகுளுவென்று இருந்த அந்தப் பெரிய வீட்டின் ஹாலுக்குள் நுழைந்தான் விக்ரம்.
“உக்காருப்பா, வீட்டுல அண்ணன், அண்ணி எல்லாம் சவுக்கியம் தான…? அவங்களையும் பார்த்து எவ்ளோ வருஷம் ஆகிருச்சு… நீயும் படிப்பை முடிச்சு அப்பாவோட பிசினஸைப் பார்த்துக்கறேன்னு அண்ணன் சொன்னாரு…”
“ஆமா அத்தை, எல்லாரும் சவுக்கியம்…”
“ம்ம்… நந்து மா, உன் மாமா வந்துட்டாரு பாரு…” எனக்குரல் கொடுக்க, அப்போதுதான் குளித்து தலை துவட்டிக் கொண்டிருந்த நந்தினி அறையிலிருந்து வந்தாள்.
“ஹலோ விக்ரம் மாமா, எப்படி இருக்கீங்க…? எங்களை எல்லாம் நினைவு இருக்கா…? ஊருப்பக்கம் வந்து எவ்ளோ நாளாச்சு…” எனக் கேட்க எப்போதோ பாவாடை சட்டையில் பார்த்தவள் இப்போது சுரிதார் அணிந்து வந்த சொர்கம் போல் நிற்க, அவளது மாற்றத்தில் பிரமித்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் புன்னகைத்தான்.
“அதெப்படி உங்களை எல்லாம் மறக்க முடியும்..? படிப்பு, பிசினஸ், அப்புறம் அப்பாவுக்கு வந்த ஹார்ட் பிராப்ளம்னு மாறி மாறி வந்த பிரச்சனைகள்ல இந்தப் பக்கம் வர முடியாமப் போயிருச்சு, அதுக்காக மறந்திருவமா…? உன் ஸ்டடீஸ் எல்லாம் முடிஞ்சுதுன்னு மாமா சொன்னார், அடுத்து என்ன பிளான்…?” என விசாரித்தான்.
“அடுத்து எனக்கு ஒரு பிளானும் இல்ல விக்ரம் மாமா, உங்க அத்தையும், மாமாவும் தான் என்னை இந்த வீட்டை விட்டுத் துரத்தப் பிளான் பண்ணிட்டு இருக்காங்க…”
அவள் சொன்னது புரியாமல் முழித்தவன், “என்னது, உன்னை விட்டுத் துரத்தப் பிளான் பண்ணறாங்களா…?”
“ஆமா, வீட்டுக்கு ஒரே பொண்ணாச்சேன்னு கொஞ்சம் கூட ஈவு இறக்கம் பார்க்க மாட்டேங்கறாங்க…”
அதற்குள் அவனுக்குக் குடிக்க மோருடன் வந்த சுபாஷினி சிரிப்புடன் சொன்ன மகளின் தலையில் செல்லமாய் கொட்டிவிட்டு, “மோர் குடிங்க தம்பி, வெயிலுக்கு இதமா இருக்கும்…” ஒரு சொம்பை நீட்ட வாங்கிக் கொண்டான்.
“என்னத்தை, நந்து என்னவோ சொல்லுறா…?”
“அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கணும்னு பேசிட்டு இருந்தோம், இவ இப்ப வேணாம், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிட்டு இருக்கா… அதுக்குதான் நாங்க இவளுக்குக் கல்யாணம் பண்ணி வீட்டை விட்டுத் துரத்த பிளான் பண்ணறோம்னு சொல்லுறா கழுதை…” எனச் செல்லமாய்த் திட்டியபடி மகளின் காதைத் திருகினார்.
“அட அவ்ளோதானா…? பெரியவங்க ஆசைப்படி கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட வேண்டியதுதான…?” என்ற அண்ணன் மகனை யோசனையுடன் பார்த்த சுபாஷினி,
“சரி, தம்பிக்கு ரூமைக் காட்டு நந்து, பிரஷ் ஆகிட்டு சாப்பிட வரட்டும், நான் எடுத்து வைக்கறேன்…” என நகர நந்தினியும், விக்ரமும் படிப்பு தொழில் கலந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“சரி மாம்ஸ்… நீங்க பிரஷ் அப் பண்ணிக்கங்க, சாப்பிடலாம்…” எனக் கூறிய நந்தினி ஒரு அறையைக் காட்ட, விக்ரம் அதற்குள் நுழைந்தான்.
மாறன் அம்புகள்
மனதில் துளைத்திட
மங்கை மான்விழி
மயக்கம் தந்திட
மதி நிறைந்த நன்னாளில்
மனதுக்குள் கால் பதிக்கும்
மங்கையவள் யாரோ…?