வில் – 23

காதலை கொண்டாடியே..

ஜாதியை திண்டாட செய்வோம். 

முழுதாய் ஐந்து நிமிடங்கள் கடந்தும், வில்லன் தொடர்ந்து வள்ளியை முறைத்துக் கொண்டிருக்க, வள்ளியின் இதழ்களில் மலர இருந்த புன்னகை அப்படியே உறைந்தது. 

‘வில்லனின் கோபத்தை தூண்டிவிட்டோமோ..?’ வள்ளி இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, வில்லன் கடினப்பட்ட குரலில், 

“அப்போ நான் எதைக் கொடுத்தாலும்…. கொஞ்சம் கூட கூடாம குறையாம அப்படியே திருப்பி கொடுப்ப அப்படித் தானே..?’’ வில்லன் அப்படிக் கேட்டதும், வள்ளியின் அனுமதியின்றி அவள் தலை தானாய் மேலும் கீழும் அசைந்து தன் சம்மதத்தை தெரிவித்தது. 

வள்ளி தலையை அசைத்த அடுத்த நொடி, வில்லன் வள்ளியை மிக நெருங்கி நின்றான். வள்ளி அவனை கேள்வியாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சுற்றுப்புறத்தை ஒரு முறை விழிகளால் அளந்தவன், அடுத்த நொடி அவள் முகத்தை தன் இரு உள்ளங்கைகளால் அசையவிடாது அழுத்தப்பற்றியவன், அவள் இதழ்களை தன் இதழ்களால் மிக வன்மையாய் சிறை செய்தான். 

வள்ளியின் விழிகள் வில்லனின் அதிரடி செயலில், முழுதாய் விரிய, அந்த பெரிய விழிகளில் வில்லன் மொத்தமாய் தொலைந்தான். 

தூரத்தில் ஒலித்த விசில் சத்தம், வில்லனை மீட்க, வள்ளியை விட்டு அவசரமாய் விலகியவன், “போலிஸ் ரவுண்ட்ஸ் வராங்க போல வள்ளி. வா கிளம்பலாம்.’’ என அவள் கைப்பற்றி அழைத்து செல்ல, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல, வள்ளி அவனை தொடர்ந்தாள். 

வில்லன் கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் நிறுத்தியிருந்த தன் காரை நெருங்கியதும், ஓட்டுனர் இருக்கையில் அவன் அமர, அவனுக்கு பக்கத்து இருக்கையின் கதவை திறந்து வள்ளி அமர்ந்தாள். 

வில்லன் கொடுத்த முத்த அதிர்ச்சியில் இருந்து வெளியேறியிருந்த வள்ளி, இருபக்க காரின் கதவுகளையும் வேகமாய் ஏற்றிவிட, வில்லன் உதட்டில் மலர்ந்த குறும்புப் புன்னகையோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

“என்ன பண்ணப் போற..’’ வில்லனின் குரல் சீண்டலாய் ஒலிக்க, காரின் ஜன்னல் கதவுகளை மூடி இருந்தவள், அவன் புறம் வாகாய் திரும்பி அமர்ந்து, 

“நீங்க கொடுத்ததை உங்களுக்கே திருப்பிக் கொடுக்கப் போறேன்.’’ என்றவள், வில்லனைப் போல அவசரப்படாமல், மிக மெதுவாய் அவனை நெருங்கி, அவன் இதழோடு தன் இதழ் பதித்தாள். 

முத்தம்…. சில நேரம் காமத்தில் யுத்தமாகும். சில நேரம் காதலில் வித்தையாகும். தினம் தினம் கற்கத் தூண்டும் புதுவித பாடமாகும். 

வில்லன் கொடுத்த அவசர முத்தத்தை விட வள்ளி கொடுத்துக் கொண்டிருந்த மென் சாரல் முத்தம்…. அவன் இதுவரை அனுபவித்தறியாத உணர்வுகளின் குவியல் நோக்கி அவனை தள்ளிக் கொண்டிருந்தது. 

சில நிமிடங்களுக்குப் பின் வள்ளி நிமிர்ந்து அமர, தன் வாயை புறங்கையால் துடைத்துக் கொண்ட வில்லன், 

“இது நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்த மாதிரி இல்லையே. நீ ஏதோ புதுசா கொடுக்குற மாதிரி இருக்கு. பட் நான் கொடுத்ததை விட செமையா இருக்கு.’’ என்று கண் அடித்து சிலாகித்து சொல்ல, 

“உங்களை..’’ என்று அவன் மார்பில் மெதுவாய் குத்தியவள், “சரி… சரி…. வண்டியை எடுங்க…இன்னும் கொஞ்சம் லேட் ஆனாலும் சசிமா பயப்பட ஆரம்பிச்சிடுவாங்க.’’ என்றவள் சாய்ந்து அமர்ந்து கொள்ள வில்லன் வண்டியை கிளப்பினான். 

வழி நெடுகிலும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. வள்ளி வில்லனின் தோள்களில் முழுதாய் சாய்ந்தபடி பயணித்துக் கொண்டிருந்தாள். 

வள்ளியின் வீடிருக்கும் காலனி வரவும், தன் பக்க காரின் கதவுகளை திறந்து இறங்கியவள், முன் பக்கம் சுற்றி வந்து, வில்லனின் முகம் நோக்கி குனிந்தாள்.  

அவன் கண்களில் ஆழமாய் பார்த்தவள், “ஐ லவ் யூ வில்லன். ஐ லவ் யூ. உங்களைத் தவிர வேற யாரையும் என்னால காதலிக்கவே முடியாதுன்னு எனக்கு தெளிவா புரிஞ்சிடுச்சி.’’ 

வள்ளியின் உதடுகள் அல்லாது, இதயத்தில் இருந்து உணர்வுப்பூர்வமாய் வெளிப்பட்ட வார்த்தைகளை செவிமடுத்தவன், தன் காதலை முழுமையாய் கண்களில் பிரதிபலித்தான். 

சற்று நேரம் இருவரும் ஒருவரை ஒரவர் பார்வையில் தழுவியபடி அப்படியே லயித்திருந்தனர். 

“மேம் சாப்..’’ அவர்கள் பகுதியில் இரவு காவல் பணி புரியும் ஜிந்தரின் குரலில் இருவரும் கலைந்தனர். 

அந்த அன்பான நேபாளியைக் கண்டு ஆதுரமாய் புன்னகைத்தவள், “ஹெலோ ஜிந்தர்…. இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆயிடுச்சி.’’ என்றபடி, தன் கைப்பையை திறந்து அவருக்கு ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தாள். 

ஜிந்தர் முகம் முழுக்க புன்னகையோடு, அந்த ரூபாயை பெற்றுக் கொண்டவர்,  விரைப்பான ஒரு சல்யூட்டை பரிசளித்துவிட்டு, கழுத்தில் தொங்கிய விசிலை ஊதியபடியே  அங்கிருந்து விலகி செல்ல, வள்ளியும் வில்லனை நோக்கி விடை பெறுதலாய் தலை அசைத்துவிட்டு தன் வீட்டை நோக்கி நடக்க துவங்கினாள். 

அவள் விலகி செல்ல துவங்கியதும், தன் காரில் இருந்து கீழே இறங்கிய வில்லன், வேகமாய் அவள் வழியை மறைத்தபடி அவள் முன் சென்று நின்றான். 

“இந்த உலகத்துல நான் எல்லாரையும் என் இதயம் வரைக்கும் தான் நேசிச்சி இருக்கேன். என் அப்பா, அம்மா, அக்கா, என் பிரண்ட்ஸ்… ஏன் உன்னை கூட அந்த அளவுக்கு தான் நேசிக்கிறேன். 

என் தலைக்கு மேல என் மூளையை தாண்டி நான் ஒருத்தியை காதலிக்கணும். அவ நடந்து பழக என் சுட்டு விரல் கொடுக்கணும். எழுதிப்  பழக என் கட்டை விரல் உதவனும். 

என் கண்ல வழிகாட்டி… அவ கண்ல நான் உலகத்தை பாக்கணும். என்னோட காதலை உனக்குள்ள தேக்கி….உன்னையே நகல் எடுத்த மாதிரி அவ எனக்கு வேணும். 

ஒரு பொண்ணுக்கு அப்பனா ஆகறதை விட பெரிய சந்தோசம் இந்த உலகத்துல வேற இல்லைன்னு தான் நினைக்குறேன். அப்படி ஒரு சந்தோசத்தை எனக்கு கொடுப்பியா வள்ளி…? அவளை உன்ன மாதிரி வளக்கணும்.’’ 

வில்லன் கண்களில் கனவு மின்ன கேட்க, வள்ளி அவனை கட்டி அணைத்துக் கொண்டாள். வாழ்நாள் முழுவதற்குமான அன்பின் நெருக்கமும், நேசத்தின் கதகதப்பையும் அந்த அணைப்பு இருவருக்கும் உணர்த்தியது. 

அன்றைக்கு வில்லன் வள்ளியோடு அவர்கள் வீட்டில் தங்க, சசியம்மா, “மாப்பிள்ளை… மாப்பிள்ளை…’’ என்று வில்லனை கொண்டாடித் தள்ளிவிட்டார்.

இருவருக்கும் கிடைத்த தனிமையில், வள்ளி வில்லனை ஆழமாய் பார்த்தபடி, 

“உங்களுக்கு கிராமத்துல மாற்றத்தை ஏற்படுத்தணும்னு என் தோணுச்சி வில்லன்..? முதல் முறை உங்ககிட்ட அதைப்பத்தி கேட்டப்ப… வாழ்கையில விழுந்த ரெண்டாவது அடின்னு ஏதோ சொல்லவந்து பாதியில நிறுத்திட்டீங்க.’’ 

அவள் அப்படிக் கேட்டதும், அவள் மடியில் தலைசாய்த்துப் படுத்துக் கொண்டவன், 

“உங்க அக்காவோட மரணம் உன்னை விக்யாவா மாத்தின மாதிரி… என் வாசுவோட மரணம் என்னை சமூக மாற்றத்தை விரும்புற மனுசனா மாத்துச்சி தில்லு.  

எனக்கு ஒரு பிரண்ட் இருந்தான் தில்லு. ரெண்டு பெரும் அஞ்சி வயசுல இருந்து பிரண்ட்ஸ். அவன் பேர் வாசு. ரொம்ப ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். 

படிப்பு முடிஞ்சும் கூட ரெண்டு பெரும் ஒண்ணா தான் இருந்தோம். அவன் நம்ம பண்ணையில தான் மேனேஜர் வேலை பாத்துட்டு இருந்தான். அவன் ரம்யான்னு ஒரு பொண்ணை ரொம்ப சின்சியரா லவ் பண்ணிட்டு இருந்தான். 

இவங்க லவ் மேட்டர் அவங்க வீட்டுக்கு தெரிஞ்சி… ரம்யாவுக்கு அவங்க சொந்த அப்பா, அம்மாவே விஷம் வச்சி கொன்னுட்டு, பொண்ணு வயித்து வலியில, தற்கொலைப் பண்ணிகிட்டானு வெளிய சொல்லிட்டாங்க. 

வாசுவுக்கும் எனக்கும் மட்டும் தான் உண்மை தெரியும்.  அன்னைக்கு நைட் அவன் ரொம்ப ரொம்ப அழுதான். 

நானும் அவனை எப்படி எப்படியோ சமாதனப்படுத்திட்டு இருந்தேன். ரெண்டு பெரும் எங்க ஆபிஸ் ரூம்ல தான் இருந்தோம். 

நைட் ஒரு மணிக்கு மேல தான் அசந்து தூங்கி இருந்தேன். ஒரு மூணு மணி வாக்குல தண்ணி தாகத்துல நான் எழும்பி உக்காரும் போது… என் தலைக்கு மேல வாசு தூக்குல தொங்கிட்டு இருந்தான். 

நமக்கு ப்ரியமானவங்களை உயிரோட பலி கொடுக்குற வலி எப்படி இருக்கும்னு அப்போ தான் உணர்ந்தேன். ரொம்ப உடஞ்சிப் போயிட்டேன். 

என்னவோ அந்த நேரம் வாசுவை தற்கொலைக்கு தூண்டினவங்களை தண்டிக்கணும்ங்கிற கோபத்தை விட, இந்த சமூகத்தை நேராக்கணும் அப்படிங்கிற உணர்வு எனக்குள்ள வளர ஆரம்பிச்சது. 

ஏற்கனவே நீ பிரிஞ்சி போனப்ப நான் அதிக நாள் அரசனூர்ல தான் இருந்தேன். ஏன்னா அது எங்க பெரியப்பா ஊர் மட்டும் இல்ல… என் பிரண்ட் வாசுவோட ஊரும் அது தான். 

எந்த மண்ணுல… ஜாதி பேர் சொல்லி மனுசங்களை பிரிச்சி வச்சி இருந்தாங்களோ அந்த ஊரை… அந்த மக்களை…சமத்துவ நோக்கோட, சமூக நீதியோட ஒரே நேர்கோட்ல சிந்திக்க வைக்கணும்னு நினைச்சேன். முழுசா ஜாதி வெறியை ஒழிக்க முடியாட்டியும்.. ஏதோ என்னால முடிஞ்ச மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கேன்னு தான் நம்புறேன்.’’ 

வில்லன் சொல்லி முடித்ததும், வள்ளி அவனை இடையோடு அணைத்துக் கொண்டாள். இனி என்றென்றும் உன்னைத் தாங்க நான் இருப்பேன் என.   

அடுத்தநாள் வில்லன் ஊருக்கு கிளம்ப, இருவரும் அலைபேசிகளில் உரையாடி தங்கள் இல்வாழ்க்கையை பற்றி ஒரு முடிவிற்கு வந்தனர். 

அதன் படி சிந்தனையாளர்கள் சூழ் அரங்கில், சுற்றமும், நட்பும் சூழ வள்ளி வில்லனை மீண்டும் ஒரு முறை ஊர் அறிய சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டாள். 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பில்லாத முக, அக மலர்ச்சியோடு திருமணம் செய்துக் கொண்ட இளையவர்களை கண்ட பெற்றோரின் நெஞ்சம் பூரிப்பில் நிறைந்து போனது. 

சுயமரியாதை திருமணம் என்பதை இணையேற்பு விழா என்றும் சொல்லலாம். இந்த திருமணத்தில் ஆண் பெண் இருவரும்… சுக துக்கத்தில் உடன் வருவதாய் பெரியோர் முன்னிலையில் உறுதி எடுத்து மணவாழ்வில் இணைவர். மற்ற சாஸ்திர சம்பர்தாயங்கள் எதுவும் இருக்காது. 

வள்ளியின் திருமணத்தில் கலந்துக் கொள்ள வந்திருந்த, ஆனி ஐயா, மணமக்களை வாழ்த்திவிட்டு, 

“திருமணமான ஆண் தன் உடலில் எவ்வித அடையாளங்களையும் சுமக்காத போது, பெண்ணிற்கு மட்டும் மெட்டி, தாலி போன்ற அடையாளங்களை கொடுத்து, அதை சுமக்க சொல்லும் இந்த சமூகத்தின்… உளவியல் கூறுகளை… முரண்பாடுகளை கண்டறிந்து.. களைய இளைய சமூகம் முன்வர வேண்டும். 

இன்று நமது நாடு இருக்கும் நிலையில்… ஜாதி, மதம், பேதம் ஒழிய… வேற்றுமை கலைந்து மனிதம் வாழ, காதலுடன் இணைந்த சுயமரியாதை திருமணங்கள் அவசியமாகிறது. 

அந்த வகையில்… ஜாதி, மத, மொழி, இன அடையாளம் கடந்த… சடங்கு சம்பர்தாயங்களற்ற… சுயமரியாதை திருமணத்தை… பின்பற்றி வாழ்வை தொடங்கி இருக்கும் வள்ளி மற்றும் வில்லனுக்கு வாழ்த்துக்கள் பல.’’ என வாழ்த்திவிட்டு மேடையை விட்டு இறங்க, அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்தது. 

சற்று நேரம் சிந்தனை வாள் வீச்சின் சொற்பொழிவு அரங்கமாய் இருந்த மேடை, வள்ளியின் தோழிகள் மேடையேறியதும், அப்படியே தலை கீழாய் மாறியது. 

‘சாரட்டு வண்டியில சீரட் ஒலியில ஓரம் தெரிஞ்சதும் உம் முகம்..’ என்று பாடல் ஒலிக்க, மூவரும் மேடையை ஆட்டுவித்து விட்டே கீழே இறங்கினர். 

‘இணைந்த கரம்’ அமைப்பினர் அங்கு வந்தும் திருமண தாம்பூலப் பரிசாய் மரக்கன்றுகளோடு, விதைப் பந்துகளையும் விநியோகித்துக் கொண்டிருந்தனர். 

இறுதியாய் மேடையேறிய ஜேம்ஸ், தன் திருமணப்பரிசாய் மணமக்களுக்கு கவிதை ஒன்றை வாசித்தான்.     

சுயமரியாதைத் திருமணம்.

சூரியனுக்கும் சூரியனுக்கும் திருமணம் ஆம் இது 
சுயமரியாதைத் திருமணம்.

இந்த வரிகளை வாசித்து முடித்தவன் மணமக்களை திரும்பிப் பார்த்து… “பொதுவா ஆணை சூரியன்னும் பெண்ணை நிலான்னும் சொல்லுவாங்க. 

ஆனா என்னைப் பொறுத்தவரை இந்த ரெண்டு பெரும் தன்னொளி கொண்ட, சூரியன்கள் தான்.’’ என்றவன் தொடர்ந்து அடுத்த வரிகளை கையில் இருந்த அலைபேசியைப் பார்த்தபடி வாசிக்க ஆரம்பித்தான்.  

நல்ல நேரம் பார்க்கவில்லை…
நாதஸ்வர மேளம் இல்லை…
நெய்த பட்டு உடுத்தவில்லை..
நகையும் நட்டும் மின்னவில்லை…

சாதி, மத பேதமில்லை..
சாஸ்திரங்கள் தேவையில்லை…
ஜாதி என்றே ஏதுமில்லை..
ஆணும் பெண்ணும் வேறு இல்லை..

தாலி கட்டும் வேலை இல்லை..
தலைகுனிவு ஏதும் இல்லை…
மெட்டி போட நேரவில்லை..
முட்டிப் போட விருப்பமில்லை….

அம்மி மிதிக்க ஆசையில்லை… 
அருந்ததிகள் பார்த்ததில்லை..
பூமாலை எதுவும் மாற்றவில்லை..
பூமனதை மாற்ற மறக்கவில்லை.

செம்புலம் சேர்ந்த நீரைப் போல 
அன்புடை நெஞ்சம் கலந்துவிட்டோம். 
சீரிய வாழ்வில் சிறுமை களைந்தே 
செல்வம் என்று அன்பை சேர்ப்போம்.

வாழ்வோம்! வாழ்வோம்! மனிதராய் வாழ்வோம்..!
காப்போம்..! காப்போம் ! மனிதம் காப்போம்..!

ஜேம்ஸ் கவிதையை வாசித்து முடிக்க, “இது நீயா..?’’ என்பதைப் போல வள்ளி அவனைப் பார்த்தாள். கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்ய, ஜேம்ஸ் வள்ளியை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் காண்பித்து, ‘நானே தான்’ என சைகையில் பதில் சொல்லிப் போனான். 

வில்லனின் குடும்பத்தினரோடு வள்ளி அன்போடு பழக, அவர்களும் அவளை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த கசப்புகளை மறந்து தம் உறவாய் வரித்துக் கொண்டனர். 

சசி தன் வீட்டு திருமணம் என்ற உரிமையுடன் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தார். 

திருமணம் முடிந்து தம்பதிகள் வில்லனின் வீட்டிற்கு செல்ல, அன்றைய சோபன இரவில், வள்ளி அறைக்குள் நுழையும் போது வில்லன் அவளுக்கு முதுகு காட்டி படுத்திருக்க, அவனுக்கு உடம்பு சரியில்லையோ என பதறிய வள்ளி,  

“என்னாச்சு வில்லன்..’’ என பதட்டத்துடன் அவன் தோள் தொட,போலியாய் முகத்தை சுளித்துக் கொண்ட வில்லன், 

“எனக்கு எதுக்குமா வம்பு…. நைட் முழுக்க கொஞ்சி கொஞ்சி பேசிட்டு விடிஞ்சதும், நீ என்ன ரொம்ப மோசமா மயக்கிட்ட வில்லன்…. யூ ஆர் ஸெட்யூசிங் மீன்னு…. ஒப்பாரி வைப்ப… தேவையா எனக்கு. 

இன்னைக்கும் உன் பிரண்ட்ஸ் எல்லாம் வந்து உன் கூட டான்ஸ் பண்ணாங்க. உனக்கு பிடிச்ச மாதிரி வேற நாம சுயமரியாதை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கோம். 

எதுக்கும் ஒரு மாசம் போகட்டும் தாயே. இதெல்லாம் நான் உன்ன மயக்க பண்ணலைன்னு  நீ முடிவு பண்ணதும் நாம செகன்ட் நைட் கொண்டாடுவோம். அதுவரைக்கும்…. நாம பிரண்ட்ஸா இருப்போம்.’’ 

வில்லன் பேச பேச…அவனை எதைக் கொண்டு மொத்தலாம் என பொருளை தேடிய வள்ளி, அவன் முகத்தில் இருந்த கேலியைக் கண்டதும், கைகளைக் கட்டிக் கொண்டவள், 

“ஓ… அப்போ நீங்க சும்மா இருக்கப் போறீங்க அப்படித்தானே. பட் நான் சும்மா இருக்க மாட்டேன் வில்லன் சார். ஹவ் டூ ரேப் மேல்னு சமீபமா ஒரு புக் படிச்சேன். இன்னைக்கு அதை ட்ரைப் பண்ணி பாத்துட வேண்டியது தான். 

நீங்க வேண்டாம்னு சொன்னதும்… ‘அப்படியே ஆகட்டும் பிராணநாதான்னு’ ஒதுங்கிப் போக நான் என்ன ஹீரோவோட காதலியா…? பாஸ் நான் வில்லனின் காதலி. இப்போ பாருங்க…என்னோட ஆக்சனை… உங்களை..’’ 

வள்ளி கடைசி இருவரிகளை கிசுகிசுப்பான குரலில் சொல்ல, அவள் வார்த்தைகளே அவனை போதைக் கொள்ள செய்தது.  

வள்ளி சொல்லியதை செயலாற்ற அவன் மேல் விழுந்து உருண்டு புரள, சற்று நேரம், “தில்லு உன் வேகத்தை என் பூ உடம்பு தாங்காதும்மா….தாங்காது’’ என்று மேலும் அவளை வெறுப்பேற்றியவன், சில நிமிடங்களில் அவளிடம் பலவீனமாய் தோற்று அவளுள் உயிர் மெய்யாய் இரண்டறக் கலந்தான். 

வில்லனின் மனைவியாய் அவன் வாழ்வில் நுழைந்தவள்…. இறுதியில் ‘வில்லனின் காதலியாய்…’ அவன் இதயத்தில் அன்பால் நிறைந்தாள்.

வில் இலக்கை அடைந்தது.