வில் – 22

சாதிகள் சாக, சமத்துவம் பிறக்கும்.

சமத்துவம் மலர, மனிதமும் தழைக்கும்.    

வள்ளியும், மலரும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வந்திருந்தனர். வள்ளிக்கு கோவிலுக்கு செல்ல விருப்பம் இருப்பதில்லை. 

ஆனாலும் அவள் அன்னையின் விருப்பம் பொருட்டு உடன் வந்தவள், வெளியே நின்று மலையின் கீழ் தெரியும் ஊரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். 

வள்ளி வீட்டிற்கு திரும்பிய இந்த ஒரு மாதத்தில், மலரின் உடலிலும் உள்ளத்திலும் எண்ணற்ற மாறுதல்கள். 

ஆரம்ப நாட்களில், வள்ளிக்கு தாயை வீட்டை விட்டு வெளியே வரவழைப்பதே பெரும் போராட்டமாய் இருந்தது. எத்தனை வற்புறுத்தியும், “என்ன எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தி பாக்கணுமா உனக்கு..?’’ என்ற தாயின் அழுகுரல் கேள்வி, அவளை மேலும் வாதம் செய்ய விடாமல் தடுத்துவிடும். 

அந்த நேரத்தில் தான் வள்ளி மெலனி கெய்ட்ஸ் என்ற பெண்ணைப் பற்றி செய்தியை சமூக உடகங்களில் வாசிக்க நேர்ந்தது. 

உடனே அந்த செய்தியை தாயிடம் காட்டியவள், “பாரும்மா.. இந்தப் பொண்ணைப் பாரு…. இவளுக்கு நகம்,பல்,சின்ன எலும்பு இதையெல்லாம் தாக்குற அபூர்வ வகை வியாதி இருக்கு. 

ஐயோ நான் பாக்கவே அசிங்கமா இருக்கேன்னு அவ முக்காடு போட்டுட்டு வீட்ல உக்காராம… நான் இப்படிதான்னு உலகத்தோட முன்னாடி நின்னு சாதிச்சிட்டு இருக்கா. 

அவளோட நம்பிக்கை இருக்கு பாரு அது தான் பேரழகு. வட்டமுகமும், கூர் மூக்கும், நீளக் கண்ணும், வெள்ளை நிறமும் தான் அழகுன்னு நாமளா அழகுக்கு ஒரு வரையறை கொடுத்துட்டு வாழ்ந்துட்டு இருக்கோம். 

உண்மையில அழகு அது இல்ல. வெள்ளை மனசும்.. சூது இல்லாத பிள்ளைக் குணமும், அடுத்தவங்களை நோக செய்யாத பேச்சும், எல்லா மனுஷனையும் சமமா மதிக்கிற குணமும் தான் உண்மையான பேரழகு.   

நீங்க இருக்குறதா சொல்ற கடவுள் உங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து இருக்கார்னு நினைச்சிக்கோங்க. உங்க கூட பழகுற மனுஷங்களோட உண்மை நிலையை நீங்க இப்ப தான் கண்டுபிடிக்க முடியும். 

உங்க மனசை மதிக்கிற மனுசங்க… உங்க உருவத்தைப் பத்தி கவலைப்படமாட்டாங்க அம்மா. அவங்க உதட்ல எப்பவும் உங்களுக்கான சிரிப்பு அப்படியே தான் இருக்கும். 

அப்படிப்பட்ட மனுசங்களை நீங்க இத்தனை வருஷம் வாழ்ந்த வாழ்கையில சேத்து இருக்கீங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கணும்னா கண்டிப்பா நீங்க வெளிய வந்து தான்மா தீரனும்.’’ நீளமாய் பேசி முடித்தவள், 

அந்த அலைபேசியை அங்கேயே வைத்து விட்டு சென்றுவிட, அன்று முழுக்க மலர் பற்களற்ற மெலனின் இதயப் பூர்வ புன்னகையை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தார்.  

அடுத்த நாள் காலை விடியலில், வள்ளியின் துணையோடு தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கும் கிளம்பிவிட்டார். 

வள்ளிக்கு தாய் வீட்டை விட்டு கிளம்பியதே பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது. கோவில் வாயிலிலேயே, பூ விற்கும் சாந்தா,  

“அடடே… மலரம்மா… உங்களைப் பாத்து எவ்ளோ நாள் ஆச்சு. கூட நிக்குறது நம்ம வள்ளிப் பாப்பா தானே. உங்களுக்கு உடம்பு சரியில்லாததால வெளிய வர்றது இல்லைன்னு ஜானகி அக்கா சொன்னங்க… ரொம்ப இளைச்சி போயிடீங்க மலரம்மா. வள்ளிக் கண்ணு தினமும் அம்மாவுக்கு உளுந்தங்களியும், எள்ளு உருண்டையும் வாங்கிக் கொடு. உடம்பு தேறிடும்.’’ என்று நம்பிக்கையாய் புன்னகைத்தார். 

அதுவரை தன் நலிந்த தோற்றம் அவரிடம் எப்படி பிரதிபலிக்குமோ என்று பயந்தபடி நின்றுக் கொண்டிருந்த மலரின் இதழ்களிலும் அந்த புன்னகை எதிரொலித்தது. 

சாந்தாவை அன்புடன் பார்த்தவர், “உன் பையன் எப்படி இருக்கான். இப்ப என்ன படிக்கிறான்.’’ என வினவ, 

“அவன் இப்ப பன்னண்டாவது படிக்கிறான் அம்மா…! அவனாச்சும் கஷ்டம் புரிஞ்சி படிச்சி, நல்லபடியா முன்னேறிட்டானா அதுவே எனக்கு போதும்மா. ஹும்… நம்ம கையில என்ன இருக்கு… எல்லாம் மகமாயி கையில இல்ல இருக்கு. நல்லது நடந்தா சரி.’’ என்றவர் பேசிக் கொண்டே மலர் வழமையாய் வாங்கிச் செல்லும் கதம்ப பூக்களை சிறு பந்தாய் சுற்றி மலரிடம் கொடுத்தார்.

அதை கைகளில் வாங்கிக் கொண்டவர், “நீ எதைப் பதியும் கவலைப்படாதே சாந்தா…! பையன் பிளஸ் டூ ரிசல்ட் வந்ததும் என்னை வீட்ல வந்து பாரு. ஐயாகிட்ட சொல்லி மேல் படிப்புக்கு ஏற்பாடு பண்ணிக்கலாம் சரியா…?’’ என்று சொல்ல, அந்த ஏழைத் தாயின் முகத்தில் புன்னகை பெரும் கீற்றாய் மலர்ந்தது. 

“ரொம்ப சந்தோசம் மலரம்மா. உங்க வார்த்தையே யானை பலம் கொடுக்குது.’’ என அவர் கரம் கூப்ப, கூப்பிய அவர் கரங்களை தன் கரம் கொண்டு தாழ்த்தியவர், புன்னகை முகமாகவே கோவிலுக்குள் நுழைந்தார். 

கோவிலுக்குள் செல்ல பிரியமற்ற வள்ளி அங்கேயே நின்றபடி, சாந்தாவிடம் பேச்சுக் கொடுக்கத் துவங்கி இருந்தாள். 

நீண்ட நாட்கள் கழித்து கோவிலுக்கு வந்த மலரை, அங்கிருந்த அர்ச்சகரும், வரவேற்று நலம் விசாரிக்க, அவருள் முடங்கி இருந்த தன்னம்பிக்கை சிறகுகள் மெல்ல மெல்ல விரிய தொடங்கின.

அன்று முதல் மலர் தன் உருவத்தை யார் பொருட்டும் மறைக்க விரும்பவில்லை. நான் இப்படித்தான் என் நிமிர்ந்த நடையோடு உலா வரத் துவங்கினார். 

சிலர் வெளிப்படையாய் அவர் உருவம் கண்டு முகம் சுளித்த போதும், அதிர்ச்சி அடைந்த போதும், அவரால் அவர்களை ஒரு நேர் கொண்ட புன்னகை முகத்தோடு கடக்க முடிந்தது. 

நடுவில் சென்னையில் இருந்த சசி, அறிமுகங்கள் நடித்த திரைப்படம் ஒன்றில் பாடிய கானா பாடல் ஒன்று பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்ப, வள்ளி சென்னை வரை சென்று சசியுடன் இரண்டு நாட்கள் தங்கி, அவரின் செயலாளர் போல செயல்பட ஒரு இளைஞனை வேலைக்கு நியமித்து விட்டே மீண்டும் திருச்சி திரும்பி இருந்தாள். 

தன் தாயின் நிலையை அவள் சசியிடம் உரைக்க, அவருக்கோ கண்களில் நீர். ஆதாரமாய் வள்ளியின் கைகளைப் பற்றிக் கொண்டவர், 

“முதல்ல அம்மாவை பாரு வள்ளி. என்னைப் பத்தி கவலைப்படாதே. எனக்கு நேரம் ரக்கை கட்டிகிட்டுப் போகுது. இப்பலாம் தினம் ஒரு டிவி, ரேடியோல இருந்து என்னை பேட்டி எடுக்க வந்துகிட்டே இருக்காங்க. நீ பக்கத்துல இல்லைங்கிறது மட்டும் தான் கண்ணு குறை. நீ என்னைப் பத்தி நினச்சி கவலைப்படாம அம்மாவைக் கவனி. நான் தினம் போன் போடுறேன் சரியா..?’’ 

அவர் அப்படி சொன்னதும் வள்ளி அவரைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள். சசியோ, “என் பொண்ணு வள்ளி எப்பவும் எந்த கஷ்டத்துலையும் அழமாட்டாளே…? நீ என் பொண்ணு தான கண்ணு…?’’ என கேள்வியாய் நிறுத்த, அதன் பிறகு வள்ளியின் கண்ணீர் மந்திரத்திற்கு கட்டுப்பட்டார் போல அப்படியே நின்றது.

“வள்ளி போலாமா..?’’ தனக்குப் பின்னால் கேட்ட தாயின் குரலில் வள்ளி தன் நினைவுலகில் இருந்து மீண்டாள். 

“போலாம்மா..’’ என்று பதில் சொல்லியவள், படிகளில் இறங்க துவங்க, அவள் எண்ணம் முழுக்க தற்சமயம் அவள் எழுதிக் கொண்டிருந்த கட்டுரையில் மூழ்க தொடங்கி இருந்தது.   

ஆம் வள்ளி விக்யாவாய், திருச்சியில் காலம் காலமாய் தொடர்ந்து கொண்டிருக்கும் மணல் கொள்ளையைப்பற்றி, அதன் நதி மூலம் ரிஷி மூலம் வரை கண்டறிந்து ஒரு கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தாள். 

அந்த கட்டுரையை தொடங்கிய நாளில் இருந்தே ஏகப்பட்ட எதிர்ப்புகள், கொலை மிரட்டல்கள், வள்ளி எதையும் கண்டுக் கொள்ளாமல் தன் பாணியில் வழமையாய் இயங்கினாள். 

மாகலிங்கம் மகளிடம் அதிகம் பேச முயல்வதில்லை. தானுண்டு தன் ஜவுளிக்கடை உண்டு என்று பெரும்பான்மையான நேரம் கடையிலே தன் பொழுதை போக்கிவிட்டு, உறங்க மட்டுமே வீட்டிற்கு வந்து போய்க்  கொண்டிருந்தார்.  

இம்முறை மலர் வலி மிகுந்த கீமோ, ரேடியோ சிகிச்சை முறைகளை ஆன்ம பலத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்க் கொண்டார். 

காலநதி யாருக்கும் காத்திருக்காமல் ஓடிக் கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஆறு மாத போராட்டத்திற்குப் பின் மலர் புற்று வியாதியின் தாக்கத்தில் இருந்து முழுமையான குணம் பெற்றார் என மருத்துவர்கள் அறிவிக்க, வள்ளி அந்த நாளை பெரிய விழா போல கொண்டாடி மகிழ்ந்தாள். 

மகாலிங்கம் கூட அமைதியாய் அவளுடன் இணைந்து கொண்டார். ஆனால் அடுத்த நாளே வள்ளி, மலரின் முன் சென்று நின்று, 

“மா… எனக்கு சென்னைப் போகணும்..’’ என நிற்க, மலரின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. 

அவள் தலையை பாசத்துடன் வருடிவிட்டவர், “தாராளமா போ வள்ளி…! ரெண்டு பேரும் எனக்கு பெண் குழந்தைகளா பிறந்த நாள்ல இருந்து, நீங்க ஒரு வயசுக்கு அப்புறம் உங்க புகுந்த வீட்டுக்கு போயிடுவீங்கன்னு மனசை தயார்படுத்தி தான் வச்சி இருந்தேன். 

ஆனா உன்னை….இப்ப உன்னோட வேலைக்காக பிரிஞ்சி இருக்கப் போறேன் அவ்ளோ தானே. இனிமே வாராவாரம் லீவுக்கு ஒழுங்கா வீட்டுக்கு வந்துடனும். அம்மா உனக்கு பிடிச்சதை எல்லாம் சமச்சி வச்சிட்டு காத்துட்டு இருப்பேன் சரியா..’’ 

அவர் குரல் தழுதழுத்த போதும், வள்ளிக்கு அவர் தைரியமாய் விடை கொடுத்து அனுப்ப, அவர் கழுதை கட்டிக் கொண்டாள். வில்லனுடனான அவள் வாழ்வு பற்றி கேட்க, அவர் நாக்கின் நுனி வரை வார்த்தை துடித்தாலும், வில்லன் அவரிடம் தனிமையில், அவளிடம் தன்னைப்பற்றி ஒருபோதும் இனி பேசக் கூடாது என்று எச்சரித்து சென்ற விதம் அவர் வார்த்தைகளுக்கு சிறையிட்டு இருந்தது. அடுத்த நாள் பெட்டியோடு வீட்டை விட்டுக் கிளப்பும் போது மகாலிங்கம் அவள் முன் வந்து நின்றார். 

அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் எதிரில் இருந்த சுவற்றைப் பார்த்தவர், 

“இதனை வருஷம் ***** ஜாதிக் கட்சி மாவட்ட தலைவரா இருந்து என்ன சாதிச்சேன்னு தெரியல. ஆனா இதுவரைக்கும் எந்த கட்சியாலையும் ஆட்சியாலையும் தடுக்க முடியாத மணல் கொள்ளையை, உன் எழுத்து, உன்னோட பேனா தடுத்து இருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. 

இப்ப கூட நீ வேற ஜாதி ஆளை கல்யாணம் பண்ணிகிட்டா உன்னை மறுபடி வீட்டுக்குள்ள அனுமதிக்கிற அளவுக்கு எனக்கு பக்குவம் இல்லை.வேற ஜாதியில பிறந்த மனுசனை அக்கம் பக்கத்து ஆளா, நட்பா பாக்க முடியிற என்னால கண்டிப்பா என்னோட குடும்ப உறவா ஏத்துக்க முடியாது வள்ளி. 

நான் இப்படித்தான். இனி என்னால மாற முடியாது. ஆனா இந்த ஊர்ல பிறந்து வளந்த மனுசனா, உன்ன நினச்சி ரொம்ப பெருமையா இருக்கு வள்ளி. ரொம்ப பெருமையா இருக்கு..’’ என்றவர் அதற்கு மேல் குரல் கமற ஆரம்பிக்க அங்கிருந்து விலகி சென்றார்.

வள்ளி சில நொடிகள் அப்படியே உறைந்து போய் நின்றாள். வீட்டின் வாயிலில் கேட்ட மகிழுந்தின் சத்தம், அவளை கலைக்க வள்ளி வாயிலில் நின்றுக் கொண்டிருந்த மலரிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டவள், மீண்டும் சென்னை நோக்கிய தன் பயணத்தை துவங்கினாள். 

சென்னையில் அவள் குடியிருக்கும் காலனிப் பகுதியில் அவள் நுழைத்ததும், அந்த பகுதி மக்கள் முழுவதும் அவளை ஆரவாரமாய் வரவேற்றனர். 

ஹவுசிங் போர்டின் பல சுவர்களில் பாடும் பாவத்தில் சசியின் புகைப்படங்கள் சுவரை நிறைத்திருந்தன. அதை மகிழ்வுடன் கண்டுகளித்தபடியே தன் வீட்டை நோக்கி நடந்தாள். 

“அம்மா…. நான் வந்துட்டேன்…’’ மகிழ்ச்சி ஆரவாரத்துடன் தன்னை நோக்கி ஓடி வந்த, வள்ளியை, சசி தானும் கட்டிக் கொண்டார். தாயும் மகளும் தங்களுக்கான நேச உலகில் மூழ்கிப் போயினர். 

ஆறு மாதங்களுக்குப் பின் : 

கோட்டையில் குடியரசு தினநாள் கோலாகலமாய் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. ஆளுநர் கொடியேற்ற, முதலமைச்சர் முன்னிலை வகிக்க, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்க அங்கே விருதுகள் காத்துக் கொண்டிருந்தன. 

விருதுகள் பெறுவோர் அமர்ந்திருந்த வரிசையில், வள்ளி தன் வழக்கமான உடையுடன் கம்பீரமாய் அமர்ந்துக் கொண்டிருந்தாள். 

அவளுக்கு எதிர் வரிசையில், மகாலிங்கம், மலர், சசி, ஜேம்ஸ், மற்றும் அவளின் சக பணியாளர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். 

அவளின் தோழிகள்… அடிக்கடி வாட்ஸ் அப்பில் அவளை நேரலையில் கவனித்துக் கொண்டிருப்பதாக நொடிக்கு ஒரு முறை செய்திகளை பறக்க விட்டுக் கொண்டிருந்தனர். 

கொடியேற்றம் முடிந்ததும், விருது வழங்கும் நிகவு தொடங்க, 

‘சிறந்த இளம் பத்திரிக்கையாளர் விருதை பெறுபவர்… கனல் விக்யா….’ என்று ஒலிப்பெருக்கி அலற, வள்ளி மிடுக்காய் நடந்து சென்று அந்த விருதைப் பெற்றாள். 

ஆளுநரின் கைகளில் விருதைப் பெற்ற மறுநொடி, அவள் விழிகள் கூட்டத்தில், வில்லனை தேடி அலைந்தது. 

அவள் உள்ளுணர்வு அவளுக்கு சொல்லிக் கொண்டே இருந்தது. கட்டாயம் அவன் இங்கே எங்கோ தான் இருக்கிறான் என. 

அவள் மேடையேறும் வரை, அவள் விழிகளில் படாமல் ஒதுங்கி நின்றுக் கொண்டிருந்தவன், அவள் மேடையேறவும், ஆர்வக்கோளாறில் முன்னால் வந்து இருந்தான். 

அவன் விழி விரிய அவள் வெற்றியை ரசித்த படி, கைகள் நோகும் வரை உற்சாகமாய் கைகளைத் தட்டிக் கொண்டிருக்க, வள்ளி வில்லனைக் கண்டிருந்தாள். 

அவள் தனக்கு வழங்கப்பட்ட விருதை சற்றே உயர்த்திக் காண்பிக்க, அவன் தலை அசைத்து, அவளின் வெற்றியை வரவேற்க, அடுத்த நொடி வள்ளி தன் இருப்பிடம் நோக்கி நடக்க தொடங்கி இருந்தாள். 

விழா முடிந்ததும், அனைவரும் சென்னை கடற்கரை நகரை ஒரு உலா வந்துவிட்டு, இரவு உணவை முடிக்க, வள்ளியின் பெற்றோர் அன்றே ஊருக்கு கிளம்பிவிட்டனர். 

சசியை ஜேம்சுடன் அனுப்பி வைத்தவள், வெகு நாட்களாய் தினம் தொடு திரையில் எடுப்பதும், கடப்பதுமாய் இருந்த வில்லனின் அலைபேசி எண்ணுக்கு அழைத்தாள். 

அவள் அழைப்பாள் என்று காத்திருந்தவன் போல வில்லன் முதல் அழைப்பிலேயே, அவள் அழைப்பை ஏற்று இருந்தான். 

“ஹெலோ.’’ அவனின் கம்பீர குரல் ஒரு நொடி அவளை உறைய வைத்த போதும், தன்னை மீட்டுக் கொண்டவள், 

“எனக்கு உங்களைப் பார்க்கணும்..’’ என சொல்ல, “நீ இருக்க அதே பீச்ல தான் நானும் இருக்கேன்… ஐஞ்சி நிமிஷம் இதோ வறேன்…’’ என்றவன், அவள் அலைபேசியை துண்டித்துவிட்டு திரும்பும் போது சரியாய் அவள் முன் வந்து நின்றான். நேரம் இரவு பத்தை கடந்து இருக்க, சென்னை கடற்கரை ஆளரவமின்றி வெறுமையாய் இருந்தது.

இத்தனை நேரம் தன்னைத் தான் கவனித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான் என்று எண்ணிக் கொண்டவள், அவன் முகத்தில் எவ்வித உணர்வுகளும் பிரதிபலிக்காமல் நிர்மலாய் இருப்பதையும் மனதில் குறித்துக் கொண்டாள். 

வில்லன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனை நெருங்கிய வள்ளி, அவன் என்னவென்று உணரும் முன்னே, அவன் இடதுக் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். 

அவன் அதிர்ச்சியோடு அவளைப் பார்க்கும் போதே, “விக்யாவா பாக்கும் போது திருப்பி வாங்கிக்கிறேன் சொல்லி இருந்தீங்க இல்ல..’’ என வள்ளி இதழ்களில் மலர துடித்த புன்னகையை அடக்கியபடி அவனை வினவ, வில்லன் அவளை முறைத்த படி நின்றுக் கொண்டிருந்தான்.                       

கொடுத்தவை அத்தனையும் 

திரும்ப கொடுக்க வந்திருக்கேன்…! 

காதலோ, ஊடலோ – இனி 

காலம் அதை கணிக்கட்டும்.

வில் நாண் ஏறும்.