வில் – 20

ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை…

ஜாதிகள் தவிர இங்கு வேறில்லை. 

மகாலிங்கம் ஜேம்சை பார்வையால் அளப்பதை கண்டு எரிச்சல் அடைந்தவள், “நான் ஒன்னும் நிரந்தரமா இங்க தங்க வரல. அம்மாவை பாக்கணும்னு தோணுச்சி. அதான் வந்தேன். பாத்ததும் போயிடுவேன்.’’ 

அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவர் அமைதியாய் நின்றிருக்க, “ஏங்க யார் வந்து இருக்கா…?’’ என்ற அம்மாவின் குரல் உள் அறையில் இருந்து ஒலித்தது. 

எப்பொழுதும் யார் வீட்டிற்கு வந்தாலும், முதல் ஆளாய் வந்து எட்டிப் பார்க்கும் அம்மா, வீட்டிற்குள் இருந்து கொண்டு குரல் கொடுப்பது வள்ளிக்கு வித்யாசமாய் இருந்தது. 

அதோடு அவளை ஆச்சர்யப்பட வைத்த இன்னொரு விஷயம், தந்தை டாமியின் குரல் கேட்டு வாயிலுக்கு வந்தது. பொதுவாய் அவள் தந்தை, வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலே வாயிலுக்கு வந்து வரவேற்க மாட்டார். 

அவளின் அன்னை சென்று வந்திருப்பது இன்னார் என்று அறிவித்தால் மட்டும், சம்பரதாய நல விசாரிப்பிற்கு தன் அலுவல் அறையில் இருந்து வெளியே தலை காட்டுவார். 

யோசனையோடு  அவர் முகத்தைப் பார்த்தவள், ‘அம்மாக்கு என்ன ஆச்சு. உடம்பு சரியில்லையா..?’’ அவளின் கேள்விக்கும், அவர் பதில் சொல்லாமல் மௌனியாய் இருக்க, அதற்கு மேல் பொறுத்திருக்க முடியாமல் வள்ளி வீட்டிற்குள் ஓடினாள். 

அம்மாவின் குரல் வந்த அறைக்கு ஓடியவள், அங்கே கட்டிலில் படுத்திருந்த உருவத்தைக் கண்டு, முழுதாய் திகைத்தே போனாள். 

தலையில் முடிகலற்று, என்புதோல் போர்த்திய வெற்று கூடாய்… படுந்திருந்தவரைக் கண்டு அவள் திகைத்து நிற்க, மகளைக் கண்டதும், கண்கள் பிரகாசிக்க எழுத்து அமர்ந்தவர், உயிரை குரலில் தேக்கி, 

“வந்துட்டியா வள்ளி…?’’ என கசிந்துருகி கேட்க, வள்ளியின் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது. 

“மா..’’ என்ற ஒற்றை சொல்லை தவிர வேறு சொல்லை உதிர்க்க முடியாதவள், ஓடிச் சென்று அவர் அருகில் அமர்ந்து அவர் கரங்களை பற்றிக் கொள்ள, தாயும் மகளை வாஞ்சையாய் அணைத்துக் கொண்டார்.

சற்று நேரம் அவர் எத்தனை ஆறுதல் வார்த்தைகளை உதிர்த்தாலும், ஏற்றுக் கொள்ள முடியாமல், அழுகையில் கரைந்தவள், 

“என்ன ஆச்சு மா… என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு உங்களுக்கு தோணவே இல்லைல….’’ என வருத்ததோடு கேட்க, 

“எப்படி சொல்லுவேன் வள்ளிமா. உங்க அக்கா போய் சேந்த துக்கத்தை நான் கண்ணீரா ஆத்தி முடிக்கும் முன்ன… நீ வீட்டை விட்டு வெளியேறிட்ட… உங்க அப்பாவையும் போலிஸ் பிடிச்சிட்டு போயிட்டாங்க. 

ஒத்த பொம்பளையா இந்த வீட்ல வாழ்றதுக்கு செத்து போகலாம்னு சில சமயம் தோணும். ஆரம்பத்துல எனக்கு உதவியா இருந்த என் தம்பி குடும்பமும்… வாரிசு இல்லாத சொத்து தானே… எங்களுக்கு கொடுத்தா என்னனு அடிக்கடி என்கிட்ட பணம் கேட்க ஆரம்பிச்சாங்க. 

நம்ம கடை வரவு செலவு ஒன்னும் புரியல. ஒரு கட்டத்துக்கு மேல, அவங்க தொல்லை தாங்காம… இனிமே பணம் தர முடியாதுன்னு சொன்னதுக்கு…. ஒத்தையில நிக்கும் போதே உனக்கு இவ்ளோ திமிரானு என்னை கேவலமா திட்டிட்டு எல்லாரும் என்னை விட்டு விலகிப் போயிட்டாங்க. 

உங்க அப்பாவை வெளிய எடுக்க ஒரு பக்கம் போராடிட்டு இருந்தேன். உன்ன வீட்டுக்கு கூப்பிட ஒரு பக்கம் போராடிட்டு இருந்தேன். ரெண்டு போராட்டமும் ஒன்னு போல தோத்துப் போச்சு. 

அந்த சமயத்துல இடது மார்புல ஊசி குத்துறாப்போல அடிக்கடி வலிக்க ஆரம்பிச்சது. ஆரம்பத்துல எனக்கு இருந்த பிரச்சனையில அந்த வலியை நான் கண்டுக்கவே இல்ல. 

இவ்வளோ பெரிய வீட்ல நானும் டாமியும் மட்டும் தான் இருப்போம். தனியா இருக்குறதுனா எவ்ளோ பெரிய கொடுமைன்னு நான் உணர ஆரம்பிச்ச நேரம் அது. 

அந்த நேரத்துல மாப்பிள்ளை தம்பி தான் வந்து என்னை அடிக்கடி பாத்துட்டுப் போவார். ஒருநாள் நான் வலியில துடிக்கிறதைப் பாத்துட்டு… அவர் தான் என்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனார். 

அங்க போனதும் ஏதேதோ டெஸ்ட் எடுத்துப் பார்த்துட்டு எனக்கு என்னோட இடது மார்ல கேன்சர் கட்டி இருக்குன்னும்… உடனே ஆப்ரேசன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. 

கேன்சர்ங்கிற வார்த்தையை கேட்டதும், எனக்கு ரொம்ப பயம் வந்துருச்சி. நாம சாகப் போற நாள் நமக்கு தெரிஞ்சா வருமே ஒரு பயம் அப்படி ஒரு பயம். 

அந்த நேரம் உங்க அப்பாவோட கையை இறுகிப் பிடிச்சகனும் போல ஒரு பேராசை வந்துச்சி. ஒண்ணுக்கு ரெண்டா பிள்ளைங்களை பெத்தும், ஒரு பொண்ணு துணை கூட இல்லாம ஆப்ரேசன் பண்ணிக்கிட்டு, பெட்ல படுத்து இருந்த நாள் எல்லாம்…. கடவுளே என் துரோகிக்கும் வரக் கூடாதுன்னு இப்போ கூட தினம் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். 

வில்லன் தம்பி வீட்டு ஆளுக தான் அப்போ கூட இருந்தாங்க. கேன்சர் பரவாம இருக்க கரண்ட் வச்சாங்க…. ஏதேதோ ஊசி எல்லாம் போட்டாங்க. அதை எல்லாம் செய்ய செய்ய…. உடம்புல இருந்த முடி எல்லாம் கொட்ட ஆரம்பிச்சது. 

வீட்டோட என்னைப் பாத்துக்க வில்லன் தம்பி ஒரு நர்சை வேலைக்கு ஏற்பாடுப் பண்ணிக் கொடுத்தார். அதோட நம்ம கடையோட போக்கு வரத்து எல்லாத்தையும் வாரம் ஒரு முறை மேனேஜரை கணக்கு காட்ட சொல்லி அவர் தான் மேற்பார்வை பாத்துட்டு இருந்தார். 

ஒரு வழியா கொஞ்சம் மீண்டப்ப, மறுபடி இன்னொரு கட்டி … இடது மாருக்கு கீழ இருந்த எலும்புல புதுசா வந்துடுச்சி. 

இந்த முறை நான் உடைஞ்சே போயிட்டேன். இனி நாம பிழைக்க மாட்டோம்னு உறுதியா மனுசுல தோண ஆரம்பிச்சது. மனுசுல வலு இல்லை. உடம்போட வலுவும் போக படுத்த படுக்கையாய் ஆயிட்டேன். 

மகன் மாதிரி என் கூட இருந்த வில்லன் தம்பி கையை பிடிச்சிட்டு, “நான் சவக்குழிக்குள்ள போறதுக்குள்ள… எம் புருசனையும்… என் பொண்ணையும்.. என் கண்ணுல காட்டிடுங்க சாமின்னு..’’ கதறி அழுதுட்டேன். 

அதுக்கு அப்புறம் தான் வில்லன் தம்பி புது வக்கீலை எல்லாம் ஏற்பாடு பண்ணி, உங்க அப்பா கேஸை மேல்முறையீடுக்கு கொண்டு போனார். 

அப்போ தான் எங்களுக்கே ஒரு உண்மை தெரியவந்தது. உங்க அக்காவை ஆயிரம் தான் வெட்டுவேன் குத்துவேன்னு உங்க அப்பா ஆவேசமா கத்திட்டு இருந்தாலும்… அவர் எந்த ஏற்பாட்டையும் பண்ணல. 

கட்சியில அவருக்கு கீழ இருந்த மாடசாமின்ற ஒரு ஆள்… உங்க அக்கா  குடும்பத்துக்கு ஏதாவது நடந்தா பழி உங்க அப்பா பேர்ல தான் வரும்னு தெரிஞ்சிக்ட்டு… வேணும்னே… உங்க மாமாவை கொன்னு இருக்கான். 

தனியார்ல துப்பறியும் நிறுவனத்துல இருந்த ஆளுங்களை வச்சி தான் வில்லன் தம்பி இந்த விசயத்தையே கண்டுபிடிச்சார். உன் கல்யாணம் முடிஞ்சதுல இருந்த அவர்கிட்டயே பேசாம இருந்தவர், நான் அழுத அன்னைக்கு தான் அவரைப் போய் பார்த்து பேசி இருக்கார். 

அப்போ தான் உங்க அப்பா…. தான் விக்ரமை கொல்ல எந்த ஏற்பாடும் பண்ணலைனும்… ஜாதி சங்க ஆளுங்க… அவர் கமிசனர் ஆபிஸ்ல அவமானப்பட்டத்துக்கு பழி வாங்க… அவரை அவங்களா முடிவு பண்ணி கொன்னுட்டதா சொல்லி இருக்கார்.

ஐஞ்சி வருஷ ஜெயில் வாழ்கை அவருக்கு நிறைய புத்தியை கொடுத்து இருக்கும்னு நினைக்கிறேன். கல்லா உள்ள போன மனுஷன்… கனியா மாறிப் போய் இருந்தார். 

வித்யாவாவை நினச்சி வில்லன் தம்பி முன்னாடியே அழுது இருக்கார். உன்ன பத்தி கூட விசாரிச்சி இருக்கார். எனக்கு இப்படி இருக்குன்னு சொன்னதும், தலை தலையா அடிச்சிகிட்டு, நான் செஞ்ச பாவம் தான் என் குடும்பத்தையே விடாம சுத்துதுன்னு ரொம்ப அழுதாராம். 

இதெயெல்லாம் வில்லன் தம்பி என்கிட்ட சொன்னப்ப என்னால நம்பவே முடியல. ஆனா ஆறுமாசத்துக்கு முந்தி ஜெயில்ல இருந்து விடுதலையாகி வந்ததும், 

என்கையை பிடிச்சிட்டு அழுதாரு பாரு… உங்க அப்பா அவங்க அப்பா, அம்மா சாவுக்கே கலங்காம கல்லு மாதிரி இருந்த மனுஷன். கம்பீரமா எப்பவும் நாலு பேர் பின்னாடி நடந்து வர அவர் இருந்த இருப்புக்கும், உடஞ்சி போயி திரும்பி வந்த அவரைப் பாத்ததும்… என்னால தாங்கவே முடியல வள்ளி. 

எந்த மனுஷன் உணர்ச்சியை வெளிய காட்டினா நல்லா இருக்கும்னு நினைச்சேனோ, அந்த மனுஷன் உடஞ்சி அழுத்தப்ப, என்னால அதை தாங்கவே முடியல. 

இந்தமுறை நான் ஆபரேசன் பண்ணிக்கும் போது என் கையை பிடிச்சிக்கிட்டு உங்க அப்பா என்கூடவே இருந்தார். சொன்ன நம்ப மாட்ட.. உங்க ரெண்டு பேத்தையும் பெத்து எடுக்கும் போது கூட அவர் என் பக்கத்துல இல்ல. அடுத்த நாள் தான் வந்து பாத்தார். 

இந்த முறை கரண்ட் வைத்தியம், மாத்திரை மருந்து எதையும் தாங்குற வலு உடம்புலயும் இல்ல. மனசுலயும் இல்ல. இப்ப உங்க அப்பா தான் என்னை முழுக்க முழுக்க பாத்துகிறார். 

எனக்கு கேன்சர் கட்டி இருக்குன்னு தெரிஞ்ச அடுத்த நிமிசமே, “உங்க பொண்ணுக்கு சொல்லிடலாம் அத்தைனு வில்லன் தம்பி என்கிட்ட கேட்டுகிட்டே தான் இருந்துச்சி. 

நான் தான்…. என்னை தனியா விட்டுட்டுப் போனவ அவ தானே… அவளுக்கா எப்போ என்னை பாக்கணும்னு தோணுதோ அப்பா பக்க வரட்டும்னு சொல்லிட்டேன். 

ரெண்டாவது தடவை கட்டி வந்து இருக்குன்னு தெரிஞ்சி வில்லன் தம்பி கையைப் பிடிச்சிட்டு அழுத்தப்ப… அவரு தான்… உங்க மகளை நான் மறுபடி உங்ககிட்ட கொண்டு வந்து சேக்குறேன் அத்தை. நீங்க அவளை நினச்சி வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கன்னு ஆறுதல் சொன்னார். 

அவர் சொன்ன மாதிரி உன்னை என் கண்ணுல காட்டிட்டார். வில்லன் தம்பி உன் கூட வந்து இருக்கா..? தம்பி வந்து இருந்தா மொதோ வேலையா என்ன இல்ல பாக்க வந்து இருக்கும்.’’ வள்ளியின் தாய் இப்படிக் கேட்டதும், 

அவரை ஆதரவாய் அணைத்துக் கொண்டவள், “ரியலி சாரி மா… எல்லாத்துக்கும்..’’ என்றவள் விடாமல் தேம்ப தொடங்கினாள். 

ஒரு அரைமணி நேரம் கழித்தே, வள்ளிக்கு தான் ஜேம்சை வாயிலிலேயே விட்டு விட்டு வந்தது, நினைவிற்கு வந்தது. 

“மா.. ஒரு நிமிஷம்… இதோ வந்துடுறேன்..’’ என்றவள், அறையை விட்டு வெளியேற, வரவேற்பரையில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி, ஜேம்ஸ் அவள் தந்தையோடு பேசிக் கொண்டிருந்தான். 

டீபாயில் இருந்த காலி கண்ணாடி டம்பளர்கள், அவர் ஜேம்சை உபசரித்து இருக்கிறார் என்பது புரிய, 

அழுது சிவந்த விழிகளோடு அவனை எறிட்டவள், “சாரி ஜேம்ஸ்..’’ என அவனிடம் மன்னிப்பை வேண்ட, இத்தனை நேரம் மகாலிங்கம் வள்ளியின் தாய் பற்றி உரைத்துக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தவன், ஆகையால் வேகமாய் அவளை நெருங்கியவன், ஆறுதலாய் அவன் கரம் பற்றிக் கொண்டு, 

“எல்லாம் சரியாயிடும் மேம்..’’ என உரைக்க வள்ளி அவன் கரத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தேம்பி அழுதாள். 

“நான் ரொம்ப கேவலமான பிறவி ஜேம்ஸ். பெத்த அம்மாவை இங்க தனியா நோயோட தவிக்க விட்டுட்டு… சமூகத்தை நேராக்குறேன்னு… எல்லாரையும் குறை சொல்லிட்டு சுத்திட்டு இருந்து இருக்கேன். எனக்கு மன்னிப்பே கிடையாது ஜேம்ஸ். எனக்கு மன்னிப்பே கிடையாது..’’ அவள் தொடர்ந்து அழ,அவளின் கண்ணீரை நிறுத்துவதற்குள் அவன் பாடு பெரும்பாடு ஆகிப் போனது. 

அவளை கொஞ்சம் தேற்றிவிட்டு, வள்ளியின் தாயையும் பார்த்து தேறுதல் சொல்லிவிட்டு, அவன் கிளம்ப முற்படுகையில், நேரம் இரவை நெருங்கி இருந்தது. 

அதற்குள் மகாலிங்கம் ஜேம்சிற்கு தோசை வார்த்து, சட்னியோடு இரவு உணவை தயார் செய்து இருந்தார். வீட்டின் சமயலறை எந்த மூலையில் இருக்கும் என்று கூட அறியாத தந்ததை இன்று உணவையே சமைப்பது கண்டு வள்ளியின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது. 

இது தான் கால மாற்றம் போலும். உணவை அருந்திவிட்டு, ஜேம்ஸ் புறப்படுகையில், வள்ளி தலையை தாழ்த்திக் கொண்டு, 

“என்னோட ரெசிக்னேசன் லெட்டரை நான் எடிட்டர் சாருக்கு மெயில் பண்ணிடுறேன் ஜேம்ஸ். எல்லாருக்கும் ‘பாய்’ சொன்னேன்னு அரசனூர்லையும் நம்ம ஆபீஸ்லயும் சொல்லிடுங்க. 

சென்னை போனதும்… கொஞ்சம் எங்க காலனிக்கு போய் அம்மாகிட்ட நான் வர கொஞ்ச நாள் ஆகும்னு சொல்லுங்க. அவங்க போன்ல என்ன பிரச்சனைன்னு தெரியல. மூணு நாளா ஸ்விட்ச் ஆப்னே வருது.’’   

வள்ளி தலை நிமிராமல் பேசிக் கொண்டிருக்க, “மேம்… நீங்க ரிசைன் பண்ணப் போறேன்னு சொல்றது வெறும் ஜாப் இல்ல. உங்க ஐடென்டிடி… உங்க அடையாளம்…. நல்லா யோசிச்சி தான் பேசுறீங்களா..?’’ 

ஜேம்ஸ் அப்படிக் கேட்டதும், நீரில் பளபளத்த கண்களோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்னோட அடையாளத்தை விட எங்க அம்மாவோட சந்தோசமும்.. நிம்மதியும் இப்ப எனக்கு ரொம்ப முக்கியம் ஜேம்ஸ்.’’ என்றவள் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் விருட்டென வீட்டிற்குள் சென்று மறைய, ஜேம்ஸ் பதில் சொல்ல முடியாதவனாய் காரை நோக்கி நடந்தான். 

வீட்டின் உள்ளே, வெளியே வந்து அமர மறுத்த தாயை, கட்டாயப்படுத்தி உணவு மேஜைக்கு அழைத்து வந்து அமர வைத்தவள், 

“அம்மா.. உங்க புருஷனை முறுவலா நெய் தோசை சுட சொல்லுங்க. அதனான் உங்க மகளுக்கு பிடிக்கும்.’’ என மறைமுகமாய், தந்தையை ஏவ, நெடு நாட்களுக்குப் பின் வள்ளியின் தாய் மலர்ந்து சிரித்தார். 

“கழுத உனக்கு வேணும்னா நீ போய் சுட்டு தின்னுடி… என் புருஷனை ஏண்டி வேலை வாங்குற..?’’ என அவரும் பேச்சில் இறங்க, நெடு நாட்களுக்குப் பின் அந்த வீட்டை சிரிப்பொலி நிறைத்தது. 

தாயிற்கு தந்தை சுட சுட சுட்டுக் கொண்டு வந்துக் கொடுத்த தோசையை தன் கையால் ஊட்டிவிட்டவள், அவர் இரவு உடைக்கு மாற உதவி செய்துவிட்டு, அவர் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகளை விழுங்க வைத்துவிட்டு… அதன் பிறகும் அவர் உறங்கும் வரை, அவர் கரங்களை பற்றிய படி, பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தாள். 

அவர் உறங்கியதும், இதுவரை அவருக்கு அளிக்கப்பட்டிருந்த சிகிச்சைக் கோப்புகளை எடுத்துப் படித்துப் பார்த்தவள், ஒன்றை மட்டும் தெளிவாய் புரிந்துக் கொண்டாள். 

அது தன் தாய் தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டு இருக்கிறார் என்பதை தான். தன் தாய் சொல்லித் தான் வில்லன் தன்னை தேடி வந்து இருக்கிறான் என்ற செய்தி இதயத்தின் ஒரு மூலைக்கு வலியைக் கொடுத்த போதும், தன் தாயிற்காய் அவன் செய்த செயல்கள் அவள் நெஞ்சில் நெகிழ்வை ஏற்படுத்தி இருந்தன. 

இறப்பின் வாயிலில் இருக்கும் தன் தாய் மகிழ, அவளால் கொடுக்க முடிந்த பரிசு ஒன்றே ஒன்று தான். 

அந்த எண்ணம் அவளுள் தோன்றி வலுப்பட, நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் சற்றும் யோசிக்காமல், வில்லனுக்கு அழைத்ததும், 

அவன் தூக்கக் கலக்கத்தோடு, “ஹெலோ..’’ என்றதும், என்ன பேசுகிறோம் என்பதையே உணராமல், 

“வில்லன்…. எனக்கு உடனே குழந்தை வேணும். எங்க அம்மாவோட கடைசி காலத்துல அவங்க முகத்துல சந்தோசத்தைப் பாக்க, என்னை மாதிரியோ.. இல்ல எங்க அக்கா மாதிரியோ… எனக்கு ஒரு குழந்தை வேணும் வில்லன்..’’ 

அவள் குரல் கரகரத்த குரலில் இருந்தே, அவள் அழுகையை அடக்கிக் கொண்டு பேசுகிறாள் என்பதை உணர்ந்தவன், சுறு சுறுவென்று ஏறிய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, 

“நாளைக்கு நேர்ல வறேன் பேசலாம்.’’ என்ற ஒற்றை வார்த்தையோடு அழைப்பை துண்டித்துவிட்டான். 

ஆனால் அடுத்த நாள் கலை வள்ளியை சந்தித்த வில்லன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து தன் கோபத்தை வெளிப்படுத்துவான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 

வில் நாண் ஏறும்.