வில் – 18

ஆணவக் கொலைகள் செய்யும் 

ஆசையும் இருக்கிறது – ஜாதியை. 

வள்ளியும், ஜேம்சும் வில்லனின் மீன் பண்ணையில் அமர்ந்திருந்தனர். அவனுக்கென்று தனியாய் அமைந்திருந்த அலுவலக வரவேற்பறையில் இருவரும் காத்துக் கொண்டிருந்தனர். 

அன்று வள்ளியின் கண்ணிலும், கருத்திலும் படாத பண்ணையின் பிரம்மாண்டம் இன்று வள்ளியை விழி திருப்ப அனுமதிக்காமல், தன்னுள் அவளை ஈர்த்துக் கொண்டிருந்தது. 

இவர்கள் வரவை அறிந்ததும் வில்லன், தன் உதவியாளனிடம், ஒரு துண்டு சீட்டில், “பத்திரிக்கையாளர் விக்யாவை மட்டுமே சந்திக்க விருப்பம்..’’ என்று எழுதிக் கொடுத்துவிட்டான்.

அந்த செய்தியை வாசித்தவள், இதழ்களில் விரிந்த புன்னகையோடு, “விக்யாவாய் மட்டுமே உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.’’ என பதில் எழுதிக் கொடுத்தாள்.  

உள்ளே சென்று திரும்பி வந்த உதவியாளர், “மேம் ஒரு ஹாபன் ஹவர் வெயிட் பண்ணுங்க. சார் உங்களை பாக்குறதா சொல்லி இருக்கார்..’’  என சொல்லிவிட்டு சென்றுவிட, இருவரும் டீபாயின் மீதிருந்த செய்தி தாள்களை புரட்டிக் கொண்டிருந்தனர்.   

சரியாய் அரைமணி நேரத்தில் இருவரும் உள்ளே அழைக்கப்பட்டனர். வில்லனின் அலுவல் அறை, மிக நூதனமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

கண்ணாடி தடுப்புகளுக்கு அப்பால் யாரிடமோ அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வில்லன், இவர்களைக் கண்டதும், உள்ளே வருமாறு தலையை அசைத்துவிட்டு, அலைபேசியில் தன் உரையாடலை தொடர்ந்துக் கொண்டிருந்தான். 

இருவரும் அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர, அலைபேசியை துண்டித்தபடி நிமிர்ந்தவன், முற்றிலும் வேறொரு வில்லனாய் இருந்தான். 

உடலை இறுக்கிப் பிடித்த வெண்ணிற காட்டன் சட்டையும், அடர் ஊதா நிற டெனிம் ஜீன்சும் அணிந்திருந்தவன், ரோபன் குளிர் கண்ணாடியை சட்டையின் விளிம்பில் தொங்கவிட்டிருந்தான். 

முறுக்கு மீசை, சற்றே முனை மழுங்கி, சாந்த வடிவிற்கு மாறியிருந்தது. இருவரையும் நோக்கி மையமாய் புன்னகைத்தவன், 

“வாங்க வாங்க…உங்களை இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். அப்புறம் என்ன சாப்பிடுறீங்க..? ஹாட் ஆர் கோல்ட்..?’’ 

வரவேற்பும், உபசரிப்பும் இருவருக்கும் பொதுவாய் இருந்தாலும், அவன் பார்வையை ஜேம்சிடம் மட்டுமே நிலைத்திருந்தது. 

அதுவரை கனல் விக்யாவாய் மட்டுமே அவனை சந்தித்து விடை பெற எண்ணி இருந்த வள்ளியின் நெஞ்சத்தில் அவனின் உதாசீனம் சற்றே புகைச்சலைக் கிளப்பியது. 

“நாங்க இப்போ தான் மார்னிங் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டோம் சார். சோ… அதனால இப்ப எதுவும் எங்களுக்கு வேண்டாம்..’’ வள்ளி அழுத்தமாய் தன் மறுப்பை தெரிவிக்க, வில்லன் தன் ஓரப் பார்வையால் அவளை அளந்தான். 

வில்லனின் அலட்சியப் பார்வை வள்ளியின் புகைச்சலை கங்காக்கிக் கொண்டிருந்தது.இலகுவாய் தோள்களை குலுக்கியவன், “உங்க விருப்பம்.’’ என்று உரைத்து விட்டு, 

“கட்டுரை நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப அதிக ரீச் கொடுத்து இருக்கு….. இந்தனை நான் தமிழ்நாட்டுல ஏதோ ஒரு மூலையில இருந்த கிராமத்தை நீங்க உங்க கட்டுரை மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க… ரொம்ப நன்றி விக்யா… 

விக்யாவோட எழுத்துகளை அப்படியே அப்பட்டமா பிரதிபளிக்குற மாதிரி அழகா போட்டோஸ் கொடுத்து, கட்டுரைக்கு தத்ரூபம் கொடுத்த உங்களுக்கும் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ஜேம்ஸ். 

இன்னும் ஒரு நாள்ல நீங்க சென்னை கிளம்பப் போறதா மதி சொல்லிட்டு இருந்தான். நீங்க எப்ப மதுரைப் பக்கம் வந்தாலும் கண்டிப்பா எங்க அரசனூருக்கு வரணும். இன்னும் இன்னும் உங்க துறையில சாதிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்…’’ என்றபடி எழுந்து நின்றவன், 

“செல்வம்…’’ என குரல் கொடுக்க, அவனினின் உதவியாளர் இரு பரிசுப் பொருளோடு உள்ளே வந்தார். 

அவர் கைகளில் இருத்த பரிசுப் பொருளை வாங்கியவன், இருவரிடமும் ஆளுக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டு, 

“எங்க அமைப்பின் சார்பா சின்ன காம்ப்ளிமென்ட். எங்க கிராமத்தை எப்பவும் மறக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்… இருந்தாலும் ஒரு சின்ன நினைவுப் பரிசு…!’’ என்று உரைக்க, ஜேம்ஸ், புன்னகை முகமாய் நன்றி தெரிவித்தான். 

வள்ளியோ கையில் இருந்த பரிசுப் பொருளை, ‘நினைவுப் பரிசு’ என்று அவன் குறிப்பிட்ட தொனியில் வருத்ததுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 

வில்லன் வள்ளியை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல், “தென் எனக்கு வெளிய கொஞ்சமும் இம்பார்டன்ட் வொர்க் இருக்கு. ஐ ஹாவ் டூ லீவ் நவ். மறுபடியும் சந்திப்போம்.’’ என ஜேம்சிடம் கைகுலுக்கி விடை பெற முயல, அவனின் அந்த செயல் வள்ளியின் கோபத்தை அதிகப்படுத்தியது.    

நிதானமாய் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “மிஸ்டர் வில்லன் கட்டுரையோட கடைசிப்பகுதி இன்னும் முழுமை அடையாத ஒரு உணர்வையே எனக்கு கொடுத்துட்டு இருக்கு. 

பிகாஸ் உங்க ஒருத்தரோட முதல் முயற்சி… ஒரு கிராமத்தையே உதாரண கிராமமா மாத்தி இருக்கு. இப்படி ஒரு அமைப்பை, இப்படி ஒரு செயலை ஆரம்பிக்க ஒரு விஷயம் காரணமா…  தூண்டுதலா… இருந்து இருக்கும் இல்லையா..?

ஒரு சின்ன தீப்பொறி…. பெரிய ஜூவாலை ஆகுற மாதிரி, உங்களுக்கு கிராமத்துல இந்த மாதிரி மாற்றங்களை நாம கொண்டு வரணும்னு எப்ப தோணுச்சி….? ஏன் தோணுச்சி..? 

அந்த நிகழ்வை கொஞ்சம் எங்களோட பகிர்ந்துகிட்டீங்கன்னா கட்டுரையின் நிறைவுப் பகுதியோட நான் அந்த விசயங்களையும் சேர்த்து கட்டுரையை முழுமையா நிறைவு செய்ய எனக்கு வசதியா இருக்கும்.’’ 

வள்ளி அவனின் கண்களைப் பார்த்து கனல் விக்யாவாய் கேள்விகள் கேட்க, அவளை ஊன்றிப் பார்த்தவன், பின்பு வாய்விட்டு மலர்ந்து சிரித்தான். 

வள்ளியோடு, ஜேம்சும் அவனை கேள்வியாய் பார்க்க, 

“நான் எல்லாம் நீங்க நினைக்கிற அளவுக்கு பெரிய ஆள் கிடையாது மேடம். தென் அமெரிக்கா போகும் போது காந்தியை ரயில்ல இருந்து இறக்கிவிட்ட காரணத்தினால தான் சாதி, மதம், நிற பேதம் இல்லாத சமத்துவம் வேணும் அப்படிங்கிற எண்ணம் காந்திக்கு வந்தது. 

பள்ளியில படிக்கும் போது மற்ற மாணவர்களோடு உக்கார வைக்காமல், தனியா சாக்குப் பையில் உக்கார வைத்த செயல் தான், அம்பேத்காரை தீண்டாமையை ஒழிக்க தூண்டியது.    

காசியில் சன்யாசியாய் சுற்றும் போது…. மடங்கள் அந்தணர்களுக்கு மட்டும் உணவளிக்க, அதுவரை நண்பர்களாய் சுற்றி திரிந்த அந்தணர்கள் பிரித்து சென்ற சூழலில், பசித்த வயிறு தான் பெரியாருக்கு சாதி மத பேதமைக்கும், மூடப் பழக்க வழக்கங்களுக்கும் எதிராக போராட சொல்லி தூண்டியது. 

இப்படி ஏதாச்சும் ஒரு இன்ட்ரஸ்டிங் ஸ்டோரிய என்கிட்டே எதிர்பாத்தீங்கன்னா கண்டிப்பா ஏமாந்து தான் போவீங்க விக்யா.  ஆனாலும் என்னோட இந்த செயலுக்கு பின்னாடி கொஞ்சம் சுயநலமான காரணம் இருக்கு. 

ஒரு அஞ்சி வருசத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு பொண்ணைப் பாத்து வீட்ல கல்யாணம் பண்ணி வச்சாங்க. அந்தப் பொண்ணு அவங்க வீட்ல நடந்த பிரச்சனையில…கல்யாணம் நடந்த அன்னைக்கே என்னையும் சேத்து தலை முழுகிட்டு போயிட்டா..

அப்போ கொஞ்ச நாள் சொந்த பந்தம் பேசின பேச்சுல பயங்கர மன அழுத்தத்துல இருந்தேன். அரசனூர் எங்க பெரியப்பாவோட ஊர். கொஞ்ச நாள் அங்க போய் தங்கிட்டு வருவோம்னு வந்தேன். 

எங்க பெரியப்பா அதாவது உங்க ஆனி ஐயா, எப்பவும் கிராமத்துல இருக்க ஏதாவது ஒரு பிரச்சனைக்கு மனு எழுதி தினம், தினம் மதுரை கலெக்டர் ஆபிசுக்கும், உள்ளூர் பஞ்சாயத்துக்கும் அலைஞ்சபடியே இருப்பார். 

சும்மா இருக்குறது ரொம்ப கஷ்டமா இருந்தது. அதனால அவர் எழுதுற மனுவை எல்லாம் ஒரு நாள் உக்காந்து படிக்க ஆரம்பிச்சேன். 

அந்த மனுவுல சின்ன விசயம்னு எனக்கு தோணின மனுவை எல்லாம் ஒரு ஓரமா எடுத்துவச்சேன். அதைப் பத்தி பெரியப்பாகிட்ட பேசிட்டு அவர் பண்ணையில இருந்த ஆட்கள் மூலமா….உடஞ்சிப்போன குடிநீர்க் குழாய் இணைப்பை நாங்களே சரி செய்தோம்.  

இப்படி சின்ன சின்னதா நாங்க ஆரம்பிக்க அந்த ஊர்ல இருந்த சில இளைஞர்கள் தாங்களா முன் வந்து எங்களோட கைகோர்த்துக்கிட்டாங்க.

அப்புறம் பெரியப்பாவோட வழிகாட்டுதல் மூலமா, எங்க அமைப்புக்குன்னு ஒரு பெயரை வச்சோம். பதிவு செஞ்சோம். நாங்களா எங்க எங்க பிரச்சனை இருக்குன்னு தேடி தேடி சரி பண்ணோம். 

பிரச்சனைகளை சரி பண்றதை விட அது உருவாகாம இருக்கவும், கிராமம் வளர்ச்சி அடையவும்,கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் இந்த விசயத்துல எல்லாம் நாங்களே முன் வந்து மாற்றத்தைக் கொண்டு வந்தோம். 

இது தான் எங்க ‘இணைந்த கரங்கள்’ உருவான வரலாறு விக்யா மேடம். இப்போ நான் கிளம்பலாமா…? எங்க ஒட்டு மொத்தக் குடும்பமும் எனக்காக காத்துட்டு இருக்காங்க. எந்த விஷயத்துக்கு வேணா லேட்டா போகலாம். பொண்ணு பாக்குற விஷயத்துக்கு லேட்டா போகக் கூடாது இல்லையா..?’’ என்றவன், ஏதோ பெரிய நகைசுவையை சொன்ன தினுசில் மலர்ந்து சிரிக்க, ஜேம்ஸ் அவனை அதிர்ச்சியாய் பார்த்தான்.

வள்ளிக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. மாறாக அவனைக் கூர்மையாய் பார்த்தாள். 

வள்ளியின் பார்வையை சந்திக்க முடியாத வில்லன், “ஓகே நான் கிளம்புறேன். மறுபடி சந்திப்போம்..’’ என்றுவிட்டு அங்கிருந்து நழுவ முயல, 

நீட்டிய அவன் கரங்களை பற்றிய வள்ளி, “வித் ப்ளசர் சார்..’’ என்றால்  கண்களில் ஒரு அதீத பளபளப்போடு. 

அவள் மென்கரத்தின் அழுத்தம் வில்லனை திகைப்பில் ஆழ்த்த, அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவன் கண்கள் பேசிய மொழியில் முற்றிலும் தொலைந்து தான் போனான். 

விலகி போனால் குளிரும்..

நெருங்கி வந்தால் காயும்..

தீயும் நீயும் ஒன்றா பெண்ணே…

தொலைந்தே போவேன் 

பதில் சொல்வாய்க் கண்ணே…

வில் நாண் ஏறும்.