வில் – 16

சாதிகள் இரண்டொழிய வேறில்லை…

சமத்துவம் பேண வேறு நீதியில்லை. 

திறந்திருந்த சாளரத்தின் வழியே சூரிய ஒளி வந்து ‘சுள்’ என்று முகத்தை தாக்கத் தொடங்கிய பின்பு தான் வில்லன் கண் விழித்தான்.

பொழுது நன்றாக புலர்ந்துவிட்டதை வெளிச்சத்தின் மூலம் அறிந்துக் கொண்டவன், வேகமாய் எழுந்து அமர்ந்தான். 

அதுவரை அவன் தோள்களில் உறங்கிக் கொண்டிருந்த வள்ளி, சற்றே உருண்டு, மீண்டும் தன் துயிலை தொடர்ந்துக் கொண்டிருக்க, தன் கைக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்த வில்லன், 

“வள்ளி… டைம் மார்னிங் செவன் ஆச்சுமா..?’’ என சொல்ல, ஆழந்த உறக்கத்தின் பிடியில் இருந்தவள், “ம்..’’ என்று மட்டும் முனக, இவளை பேசி எழுப்புவது கடினம் என்று உணர்ந்த வில்லன், வள்ளியின் தோள்களைப் பிடித்து பலமாய் உலுக்கத் தொடங்கினான். 

இரண்டு மூன்று உலுக்கல்களில், கண் விழித்த வள்ளி ஜன்னலில் தெரிந்த வெளிச்சத்தைக் கண்டதும், வேகமாய் எழுந்து அமர்ந்தாள். 

“ஓ மை காட்… டைம் என்ன ஆச்சு..? கொஞ்சம் முன்னாடியே எழுப்பி இருக்கலாம் இல்ல..?’’ அவனிடம் கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டே எழுந்தவள், வேக வேகமாய் தன் உடைகளை அணியத் துவங்க, வில்லனும் தன் உடைகளை எடுத்து அணிந்துக் கொண்டே, “நானே இப்போ தான் எழுந்தேன் வள்ளி..மணி ஏழு ஆச்சு..’’ என அவளுக்கு பதில் சொன்னான்.  

வள்ளி உடை அணிந்து முடிந்ததும், தன் கூந்தலை அவசரமாய் ஒரு நூதன கொண்டை ஆக்கினாள். 

அங்கு ஓரமாய் இருந்த கைகழுவும் சிங்கில் சென்று முகம் கழுவி வந்தவள், வில்லனைப் பார்த்து, “போலாமா..?’’ என வினவ, வில்லன், சரி என்பதாய் தலை அசைத்தான். 

வெளியே நடந்துக் கொண்டே, “நான் வேற வெளிய தங்கப் போறதைப்பத்தி தனம் அம்மாவுக்கு சொல்லவே இல்ல. ஜேம்ஸ் இந்நேரம் எத்தனை பேருக்கு என்னைக் காணோம்னு விளம்பரம் பண்ணிட்டு இருப்பாரோ தெரியல….? நேத்து எழுத வேண்டிய ஸ்போர்ட்ஸ் செக்சன் வேற அப்படியே பென்டிங்ல இருக்கு….’’

வள்ளி புலம்பிக் கொண்டே, முன்னால் நடக்க, வில்லன் அவளைத் தொடர்ந்துக் கொண்டிருந்தான். 

“நீ என்கூட வந்ததும் பெரியம்மா, பெரியப்பாவுக்கு தெரியும். சோ யாரும் உன்னை தேட மாட்டாங்க. என்னோட போன் வேற நேத்து நைட் சார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆப் ஆயிடுச்சி. இல்லனா நான் நேத்தே கால் பண்ணி சொல்லி இருப்பேன். நீ அதை நினச்சி எல்லாம் வொரி பண்ணிக்காத..’’ 

இருவரும் பேசிக் கொண்டே ஸ்கார்பியோவை நெருங்கி விட, வள்ளி வேகமாய் தன் பக்கக் கதவுகளை திறந்து, உள் அமர்ந்தாள். 

வெளிச்சத்தில் பண்ணையின் விஸ்தாரம் கண்ணில் பதிந்தாலும் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் வள்ளி இல்லை. 

ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்த வில்லன், வண்டியை இயக்கி, அதன் ஹாரனை அலறவிட, வரதன் தன் குடிலில் இருந்து வெளியே வந்தார். 

அவர் அருகில் வரவும், “வரதா…. நான் பண்ணைக்கு வர லேட் ஆகும், தினேஷ் வந்ததும் எனக்கு போன் பண்ண சொல்லு…’’ என சொல்ல, 

வரதன், “ஆகட்டும் தம்பி..!’’ என பவ்யமாய் விடை அளித்துவிட்டு,  வெளிக்கதவுகளை விரியத் திறக்க, அவர்களின் பயணம் தொடங்கியது. 

வில்லனுக்கு வள்ளியின் நடவடிகைக்கைகள் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. மற்றப் பெண்களைப் போல, காலை தன் முகம் கண்டதும், வள்ளி வெட்கத்தில் சிவக்க வேண்டும் என்று எண்ணவில்லை. 

ஆனாலும், ‘நேற்று நமக்குள் நடத்த பரிமாற்றத்தில் நான் எந்த விதத்திலும் உன்னிடம் நெருங்கவில்லை..’ என்பதை வள்ளி தன் ஒவ்வொரு செய்கையின் மூலமும் நிரூபித்துக் கொண்டிருந்தாள். 

கேள்விகள் கூட அவன் முகத்தைப் பார்த்து கேட்கவில்லை. வில்லன் மனநிலை இவ்வாறு இருக்க, வள்ளியோ, மிகப் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள். 

‘நேற்று நடந்து சரி தவறு எல்லாம் தாண்டி… அவளுக்கு மிக மிக விருப்பமான மனம் ஒன்றிய செயலாய் முடிந்திருந்தது. தானும் மற்ற சராசரிப் பெண்களைப் போல, கணவன், குடும்பம், குழந்தை என்று அவன் அடிபற்றி வாழ நேர்ந்திடுமோ..? என்ற ஒற்றைக் கேள்வியே அவளின் சுயம் மீட்டு இருந்தது. 

வில்லன் எழுப்பிய மறு நொடி, சூரிய ஒளியின் வெம்மை முகத்தில் அறைந்ததும், நேற்றைய இரவின் மயக்கங்கள் முற்றிலும் கரைந்து, நிதர்சனத்தின் வெம்மை அவள் முகத்தில் அறைந்தார் போல இருந்தது.

ஏதோ ஒரு பயம் உள்ளிருந்து அவளை உலுக்கிக் கொண்டிருந்தது. வள்ளி தன் சிந்தனையில் வர, வள்ளியின் இறுக்கத்தின் காரணம் புரியாத வில்லன் குழப்பத்தின் பிடியில் பயணிக்க, இருவரும் சிந்தனை வெவ்வேறு திசையில் இருந்தாலும், அவர்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்தேவிட்டது. 

ஆனி ஐயாவின் வீட்டின் முன் வில்லன் வாகனத்தை நிறுத்த, வள்ளி வேகமாய் தன் பக்கக் கதவுகளை திறந்துக் கொண்டு இறங்கினாள். 

வில்லன் தன்னை தொடர்ந்து இறங்குவதை உணர்ந்தும் பிடிவாதமாய், அவனைக் கண்டுக்கொள்ளாமல், வீட்டை நோக்கி நடந்தவள், வீட்டின் முற்றத்தில் கண்ட காட்சியில், மின்சாரம் தாக்கியவளைப் போல அதிர்ந்து நின்றாள். 

வள்ளியின் தொடர் புறக்கணிப்பில் கோபம் கொண்ட வில்லன், அவளை கேள்வி கேட்டே தீருவது என்ற முடிவோடு, அவளை தானும் வேகமாய் தொடர, வாயிலில் கண்ட காட்சியில் வில்லனும், “இவர் இங்க எப்படி வந்தார்..?’’ என்ற குழப்பத்தில் அப்படியே சமைந்து நின்றான். 

ஆனி ஐயா வீட்டின் முற்றத்தில் இருந்த சாய்வு நாற்காலியில் மகாலிங்கம்  அமர்ந்திருக்க, அவரின் பின்னணியில் எப்போதும் அவருக்கு தூபம் போட்டு திரியும் அவரின் கட்சி அடி பொடிகள் இருவர் பவ்யமாய் நின்றுக் கொண்டிருந்தனர். 

“வள்ளிமா வந்தாச்சு…!’’  வெளி முற்றத்தில் இருந்த பணியாளர் யாரோ ஒருவர் உள் கூடம் நோக்கி குரல் கொடுக்க, நொடியில் வீட்டு வாசலில், தனம் அம்மா, ஆனிமுத்து ஐயா, ஜேம்ஸ், அவர்களோடு இன்னும் சிலரும் வெளி வாயிலுக்கு வந்தனர். 

தன் மகள் வரவை உணர்ந்ததும் மகாலிங்கம் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து நின்றார். அவர் பார்வை மகளை அலட்சியப்படுத்திவிட்டு, அவளுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த மருமகனின் மீது சந்தோசமாய் படிந்தது. 

வள்ளியும் ஆரம்பக் கட்ட அதிர்ச்சிகள் நீங்க, அவரை இளக்காரமாய் பார்த்தாள். மகாலிங்கம் அவளை ஒரு மனுசியாய் மதித்து பேசக் கூட விரும்பாமல், வில்லனை நெருங்கியவர், அவன் கைகளைப்பற்றிக் கொண்டு, அவனிடம் பேச தொடங்கினார்.  

“உங்களை இப்படி பாக்குறதுல ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை… நீங்க கொடுத்த வாக்கை காப்பாத்தீட்டீங்க. இனி என் மக உங்க பொறுப்பு. இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. நான் ஊருக்கு கிளம்புறேன். நீங்க வள்ளியை கூட்டிட்டு திருச்சிக்கு சீக்கிரம் வாங்க. உங்க அத்தை அங்க தனியா இருப்பா நான் கிளம்புறேன். உங்களை ஜோடியா பாத்தா அவளும் ரொம்ப சந்தோசப்படுவா..’’ என்றவர், 

வில்லன் மறுமொழி பேசும் முன், அங்கிருந்த பெரியவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு தன் சகாக்களுடன், தன் வாகனத்தில் ஏறி கிளம்பி சென்றுவிட்டார்.   

மகாலிங்க பேச தொடங்கிய நிமிடத்தில் இருந்து வள்ளியின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் சிவக்கத் தொடங்கியது. 

அதுவும் பெற்ற தந்தை தன்னை அத்தனை உதாசீனம் செய்தது அவளுள் பெரும் கோபத்தை கிளப்பி இருந்தது. அவர் முகம் கண்ட மறுநொடி, தீயில் தீய்ந்துப் போன தமக்கையின் கோர முகம் கண் முன் வந்து போனது. 

அவர் அந்தப் பக்கம் கிளம்பியதும், வள்ளியின் இறுகிய உடல் மொழியில், அவள் மனதினைப் படித்த வில்லன் மெதுவாய் நெருங்கி அவள் தோள் தொட்டு, “தில்லு…!’’ என அழைக்க, 

சூரியனில் இருந்து பிரிந்து வந்த நெருப்பு பந்தாய் வள்ளி அதீத வெப்பத்துடன் அவனை நோக்கி திரும்பினாள். 

தன் தோளின் மேல் இருந்த அவன் கரத்தை அசூசையாய் பார்த்தவள், அவனை அருவருப்பாய் பார்க்க, அந்தப் பார்வையின் கனம் தாங்காது வில்லன், அவள் மீதிருந்த கரத்தை விலக்கிக் கொண்டான். 

வள்ளி கத்தவில்லை… கதறவில்லை… ஆனால் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கொல்லன் காய்ச்சிய இருப்புக் கம்பி போல தெறிக்கும் அனலுடன் வெளிவந்தது. 

அவனை அழுத்தமாய் பார்த்தவள், “சோ எல்லாமே திட்டம் போட்டு நடந்த ட்ராமா. அப்படி தானே. இந்த கிராமமாச்சும் உண்மையா இல்ல….இதுவும் ஏதாவது பிரம்மாண்ட செட்டா. 

என்ன நினச்சா எனக்கே ரொம்ப கேவலாமா இருக்கு வில்லன். நம்ம ஊர்ல புருஷன் பொண்டாட்டிய வசியம் பண்ண மல்லிப்பூ.. அல்வா வாங்கிட்டு போவாங்கன்னு பிரண்ட்ஸ் பேசிக்கும் போது எல்லாம் மனசுக்குள்ள கேவலமா சிரிப்பேன். அது எப்படி ஒரு பொண்ணு அந்த மாதிரி அல்பத்தனமான விஷயத்துக்கு எல்லாம் மயங்குவான்னு. 

ஆனா உன்கிட்ட நான் ரொம்ப ரொம்ப கேவலமா மயங்கிட்டேன் வில்லன். எனக்கு மல்லிப்பூ அல்வாவுக்கு பதில்….. என்னோட பிரண்ட்சை காட்டி என் மூளையை மழுங்கடிச்சி…. ரொம்ப கேவலமா என்ன வசியப்படுத்தி இருக்க. 

ஆனா நீ ஒன்ன மறந்துட்ட வில்லன். நான் வெறும் வள்ளி இல்ல. கனல் விக்யா. நேத்து நடந்த ஒரு சாதாரண விசயத்தை எல்லாம் ரொம்ப மதிச்சி கல்லானாலும் கணவன்னு உன் பின்னாடி வருவேன்னு கனவு காணாத. 

ஆனா எதுலையோ பெருசா தோத்துட்ட மாதிரி ரொம்ப வலிக்குது வில்லன். அக்காவை இழந்து…. சொகுசான வாழ்கையை இழந்து… கனவான படிப்பை இழந்து.. இப்படி எதை எதையோ இழந்தப்ப இல்லாத வலி… நீ எனக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டன்னு தெரிஞ்ச நிமிஷத்துல இருந்து வலிக்குது. 

எங்க அப்பா பேச்சைக் கேட்டுட்டு உங்க வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போகணும்கிற ஒரே மோடிவ் ஓட தான் நேத்து நீ என்கிட்டே அப்படி நடந்துகிட்டியா..?’’ 

வள்ளி எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் அவள் விழிகளில் நீர் திரண்டு இருந்தது. அவளின் அடுக்கடுக்கன குற்றச்சாட்டுகளில் வில்லன் திகைத்துப் போய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

அவள் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீர் துளி அவனை நடப்பிற்கு மீட்டது. “தில்லு…. அப்படியெல்லாம் இல்லமா…..’’ வில்லன் வள்ளியை தொட வர, 

“சீ…. என்ன தொடதா நீ… என்ன தொடக் கூடாது நீ….!’’ வள்ளி அடிவயிற்றில் இருந்து அலறியதில், தனம் அம்மா அவளைத் தாங்க வந்தார். 

வள்ளி அவரிடமிருந்தும் துள்ளி விலகினாள். அழுந்த கண்களைத் துடைத்துக் கொண்டவள், 

“எனக்கு இங்க எல்லாமே பொய்யா தெரியுது. நடிப்பா தெரியுது… ப்ளீஸ் யாருமே என்கிட்ட வராதீங்க….!’’ என்றவள், நடக்கின்ற சம்பவங்களை அதிர்ந்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த, ஜேம்சை நோக்கி சென்றவள்,

“எனக்கு உடனே சென்னை போகணும் ப்ளீஸ் என்னை கூட்டிட்டுப் போறீங்களா..?’’ 

எப்பொழுதும் நிமிர்வும், திமிருமாய் இருக்கும் பெண், திருவிழாவில் தொலைந்த குழந்தையைப் போல, அவன் முன் நின்றது ஜேம்சிற்கு பெரும் வேதனையாய் இருந்தது. 

“உடனே நாம போலாம் மேம்…. நான் போய் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்றேன். நீங்க கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருங்க..’’ சொன்ன ஜேம்ஸ் வீட்டிற்குள் நுழைய முற்பட, 

‘சிலீர்’ என்ற கண்ணாடி உடையும் சத்தத்தைக் கேட்டு, அவன் கவனம் வாயிலை நோக்கி திரும்பியது. 

வள்ளியுமே அந்த சத்தத்தில் திகைத்துப் போய், சத்தம் வந்த திசையை நோக்கினாள். அங்கே வில்லன் காரின் முன்பக்க கண்ணாடியை தன் வெற்றுக் கைகளால் உடைத்திருந்தான். கை எல்லாம் ரத்தம் வழிய, அவன் முகமோ இதுவரை அவள் கண்டறியா கோபத்தின் உச்சத்தில் இருந்தது. 

தனம் பதறிக் கொண்டு அவன் முன் வந்து நிற்க, வேண்டாம் என்பதைப் போல அவரைப் பார்வையை தடுத்து நிறுத்தியவன், தன்னை அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருந்த வள்ளியை நோக்கி நடந்தான்.

அவளை நேர்ப் பார்வைப் பார்த்தவன், “உன்ன மாதிரி ஒரு கோழையை நான் பாத்ததே இல்ல…. உன்னப் போய் பெரிய தியாகின்னு  நினச்சேன் பாரு என்ன சொல்லணும்..

நீ சரியான சுயநலம் பிடிச்சவ. ஐஞ்சி வருசத்துக்கு முன்னாடி என் கூட நடந்த கல்யாணம் உனக்கு பிடிக்கல. நீ நினச்சி இருந்தா உங்க வீட்ல இருந்தே போராடி இருக்க முடியும். 

ஆனா கோழைத் தனமா எங்க என் கூட உன்ன சேத்து வச்சிடுவாங்களோன்னு பயந்து ஓடிப் போன. அந்த வயசுல அந்த ஓட்டம் சரிதான்.  

ஆனா இப்பவும் நீ அதே பழைய கோழையா தான் இருக்க. என்ன விட்டு ஓடி ஒளிஞ்சிக்க பாக்குற. எடுத்த வேலையை பாதியில விட்டுட்டு புறமுதுகு காட்டி ஓடப் பாக்குற. 

இனிமே நீயே என்னைத் தேடி வந்தாலும் நீ எனக்கு வேண்டாம். ஒரு கோழைய நான் ஏத்துப்பேன். ஆனா வீரம் இருக்குற மாதிரி நடிக்கிற கோழையை என்னால சகிசிக்கவே முடியாது. 

யார் வந்தாலும் எது வந்தாலும் என்ன என்ன பண்ணிட முடியும்னு தில்லா நேர்ப் பார்வையோட நிக்குற விக்யாவை பாத்து நான் நிறைய நாள் ஆச்சர்யப்பட்டு இருக்கேன். அந்த பொண்ணு நீ இல்ல. 

உன் மனசை தொட்டு சொல்லுடி… இந்த கிராமம் உனக்கு பெரிய பிரமாண்ட செட்டா தெரியுதா..? ரத்தமும் சதையுமா பழகின மனுசங்க உனக்கு வேசக்காரங்களா தெரியுறாங்களா..? 

இதெல்லாம் நீ நான் ஒதுங்கிப் போகணும்னு தான பேசுற. நான் ஒதுங்கிப் போறேன். ஆனா ஒன்னு காதல் மயக்கம்…. வசியம்… அதெல்லாம் கிடையாது. அதையும் தாண்டி சரணாகதி. உனக்கு எல்லாம் அது புரியவே புரியாது. புரியவும் வேண்டாம்.’’ விரக்தியோடு பேசிக் கொண்டிருந்தவன், திடுமென கைகளைக் கூப்பி, 

“நம்ம சொந்தப் பிரச்சனையில கிராமத்தை இழுக்க வேண்டாம்.நான் இனி உன் கண்லையே படமாட்டேன். நீங்க நிம்மதியா எழுத வந்ததை எல்லாம் எழுதி முடிச்சிட்டு ஊருக்கு கிளம்புங்க. உங்களோட கட்டுரை வந்ததுக்கு அப்புறம்…கிராமத்தை நோக்கி உதவும் கரங்கள் இன்னும் அதிகமாயிருக்கு. அதோட இன்னும் நிறைய கிராமங்களுக்கு நாங்க முன் உதாரணமா மாறிட்டு இருக்கோம். இதுக்கு மேலையும்… போய் தான் தீரனும்னா… அதுக்கு அப்புறம்..’’ 

வேதனையோடு விழிகளை மூடியவன், கடினப்பட்டு வார்த்தைகளை கோர்த்து, “உங்க இஷ்டம்..’’ என முடித்துவிட்டு… தன்னுடைய காரை நோக்கி நடந்துவிட்டான். 

வள்ளி செல்லும் அவனையே இமைக்காது பார்த்திருந்தாள்.

காதல் வீரமாகும்…

காதல் கோழையாகும்…

காதல் நீயுமாகும்..

காதல் நானுமாகும்…. ஒரு நாள் 

காதல் நாமுமாகும்.