“இதென்ன ஜேம்ஸ் உன் தோசை மட்டும் வட்டமும் இல்லமா சதுரமும் இல்லாம, ஏதோ ஒரு வித்தியாசமான வடிவத்துல இருக்கு.டைனோசர் படத்துல சொல்ற மாதிரி…. அந்த ஆபத்து நம்மளை நோக்கி வருது… ஓடுங்கன்னு… உங்க தோசையைப் பாத்து நாங்க தலை தெறிக்க ஓடனும் போலையே..’’
வள்ளி தொடர்ந்து ஜேம்சை கலாய்த்துக் கொண்டிருக்க, அவனோ, “மேம்… நான் எல்லாம் இப்பத் தான் சமயல் ஸ்கூல்ல கிண்டர்கார்டன் கிட். நான் இந்த அளவுக்கு அழகா தோசை ஊத்துறதுக்கே நீங்க எனக்கு அவார்ட் தரணும். அதைவிட்டுட்டு கிண்டல் பண்ணிட்டு இருந்தீங்க, டெய்லி தோசை ஊத்திக் கொடுத்துடுவேன்..’’ என போலியாய் மிரட்டினான்.
‘வேண்டாம் சாமி’ என்பதைப் போல, வள்ளி இரு கரங்களையும் தலைக்கு மேலே தூக்கி அவனைக் கும்பிட, ஜேம்ஸ், ‘அது’ என கெத்துக் காட்ட, இருவரும் சற்று நேரம் கலகலத்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
இவர்களின் சிரிப்பொலி, கொல்லையில் வெண்டை செடிகளில் இருந்த களைகளை நீக்கிக் கொண்டிருந்த தனத்தின் காதுகளில் விழுந்ததும் அவர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
ஆம் தனத்தின் கொள்கை முரண்பாட்டை உடைக்கவே வள்ளி ஜேம்சை சமையல் பழக சொன்னது. தனம் ஆரம்பத்தில் கலங்கிய முகத்தோடு மறுக்க முயல,
அவரை அணைத்துக் கொண்ட வள்ளி, “தனம்மா… உங்களுக்கு ஒரு கணக்கீட்டோட மதிப்பு தெரியுமா…? உலகத்துலையே சிறப்பா சமைக்க தெரிஞ்சவங்க ஆண்கள் தானாம்.ஏன் நம்ம உள்ளூர் ஹோட்டல்ல இருந்து வெளியூர் ஸ்டார் ஹோட்டல் வரை எல்லா ஸ்பெஷல் அயிட்டத்துக்கும், மாஸ்டரையோ, செப்பையோ தான நம்பிட்டு இருக்கோம்.
நான் வேணா உங்களுக்கு ஒரு உறுதி தரேன். ஜேம்ஸ் கல்யாணத்துக்கு அப்புறம் அவர் மனைவியோட உங்க வீட்டுக்கு தேனிலவு கொண்டாட வர சொல்லிடுறேன். பொண்ணு கர்ப்பம் ஆனதுக்கு அப்புறம் தான் அவங்களை வெளியவே விடுறோம்… எப்படி….!’’ வள்ளி கண் அடித்து வினவ, தனம் அம்மாவின் முகத்தில் வெட்கத்தோடு கூடிய சிரிப்பு முகாமிட்டது.
அன்றிலிருந்து வீட்டில் இருக்கும் மூவரும் சமையல் பழகுகிறேன் என்று பொழுது போகாத போதெல்லாம் சமயல் அறையில் கொட்டம் அடித்துக் கொண்டிருப்பர். ஆனி ஐயா காபி போடும் அளவிற்கு சமயலில் தேர்ந்து இருந்தார்.
ஜேம்ஸ் தட்டில் தான் சுட்ட மூன்றாவது தோசையை கொண்டுவந்து போட்டதும், வள்ளி போதும் என்பதாய் சைகை காட்ட, அடுப்பை அணைத்துவிட்டு அவள் அருகில் காலியாய் இருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டவன்,
“சீக்கிரம் நீங்க சாப்பிட்டு… எனக்கு தோசை ஊத்திக் கொடுங்க மேடம். நான் சுட்ட தோசையாச்சும் ஏதோ ஒரு வடிவத்துல வந்துச்சி. உங்க கைவரிசை எப்படி இருக்குன்னு பாப்போம்.’’ ஜேம்ஸ் அப்படி சொன்னதும், வள்ளி தட்டில் இருந்த தோசைகளை சுவாகா செய்த படியே,
“நாங்க எல்லாம் தோசை ஊத்த ஆரம்பிச்சா…. வானத்துல இருக்க நிலா… வட்டில்ல வந்து உக்காந்துக்கும் ஜேம்ஸ். யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டீங்க…. இப்போ காட்றேன் பாருங்க என் திறமையை…’’ பேசிக் கொண்டே உண்டு முடித்தவள்,
கூட்டத்தில் இருந்த சிங்கில் கை அலம்பிவிட்டு, தன் வெண்ணிற காட்டன் சட்டையின் கைப்பகுதியை மடித்து விட்டுக் கொண்டு ஏதோ, போருக்கு போகும் வீராங்கனைப் போல வீரா வேசமாய் சமைலறைக்குள் நுழைந்தாள்.
ஆனால் அந்தோபரிதாபம், ஜேம்ஸ் சுட்ட தோசை ஏதோ ஒரு வடிவிலாவது தோசைக் கல்லை விட்டு இறங்கி வந்தது.
வள்ளி சுட்ட தோசைகள், தோசைக்கல்லோடு ஐக்கியம் ஆகிவிட, வள்ளி அதை போராடி பிரித்ததில், பாதி பாதியாய் பிய்ந்து போன தோசைகளே ஜேம்சின் தட்டை அடைந்தது.
தோசையைக் கண்டதும் ஜேம்ஸ் வள்ளியை முறைக்க, வள்ளியோ, “ஜேம்ஸ் உங்க தட்டுல ரெண்டு நிலா…. பட் ரெண்டுமே தேய்பிறை நிலா…. கொஞ்சம் பொறுங்க அடுத்து பௌர்ணமி தோசை தான்…’’
வள்ளி அவனுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க, அங்கே வந்த தனம் அம்மா, “நீ அடுப்புல தோசையை ஊத்திட்டு இங்க நின்னு வாய் பேசிட்டு இருந்தேனா அடுத்த தோசை அம்மாவாசையா தீஞ்சே போயிரும்தா… நகரு… தம்பிக்கு தான் தோசை ஊத்திதாரேன்… நீ போய் உன் எழுத்து வேலை ஏதாச்சும் இருந்தா பாரு…போ’’ என்று அவளை சமயலறையில் இருந்து பத்திவிட, ஜேம்ஸின் முகம் நிம்மதியில் மலர்ந்தது.
அதை ஓரக் கண்ணில் கவனித்த வள்ளி, “ஹும்… என்ன விட்டா எங்க சமயல்ல பெரிய ஆளா வந்துடுவேனோன்னு உங்களுக்கு எல்லாம் பயம். இப்போ போறேன். நைட் டின்னர் சப்பாத்தி பன்னீர் குருமா நான் தான் பண்ணப் போறேன்.’’ என்று சொன்னவள், ஜேம்சின் முகத்தில் மரண பீதியைக் கண்ட பிறகே அங்கிருந்து நகர்ந்தாள்.
ஜேம்ஸ் முகம் வெளிப்படுத்திய பாவத்தில், உதடுகளில் விரிந்த புன்னகையோடு வள்ளி தன் அறையை அடைந்தாள். தன்னுடைய மடிக் கணினியை எடுத்துக் கொண்டு அமர்ந்தவள், கட்டுரையின் இறுதி பகுதியை வார்த்தைகளில் வார்க்கத் தொடங்கினாள்.
என்னவோ அன்று வார்த்தைகள் அவளுக்கு வாய்தா காட்ட, சற்று நேரம் முட்டிப் பார்த்தவள், அது தந்த அலுப்பில், இதுவரை எழுதி இருந்த கட்டுரையை முதலில் இருந்து வாசிக்கத் தொடங்கினாள்.
அவள் எழுத்துக்கள் விவரித்த பயணத்தில், மனம் அமைதியுற, முகத்தில் தெளிவு பிறக்க, தன் எழுத்தில் தானே மூழ்கிப் போனவளாய் அமர்ந்திருந்தாள் வள்ளி.
கட்டுரையை முழுதாய் வாசித்து முடிந்ததும், ஒரு அரை மணி நேரத்தில் கட்டுரைக்கான இறுதிப் பகுதியை மட மடவென எழுதி முடித்தவள், வழக்கம் போல தங்களின் பொறுப்பாசிரியருக்கும், வில்லனுக்கும் அனுப்பி வைத்தவள், மடிக்கணியை மூடிவிட்டு, திறந்திருந்த ஜன்னலின் அருகே வந்து நின்றாள்.
கண்ணனுக்கு எட்டிய வரை பசுமை பார்வையை நிறைக்க, அதைத்தாண்டி ஊர்ந்துக் கொண்டிருந்த மேகத் திரளில் அவளின் பார்வை நிலைத்தது. மன திரையில் கடந்த கால நியாபகங்கள்.
அன்று கைகளில் ரத்தம் சொட்ட, சொட்ட பிரிந்து போனவன் தான் வில்லன். அதன் பிறகு அவன் சொன்னதைப் போல வள்ளியின் விழிகளில் அவன் விழவே இல்லை.
சுற்றி இருந்தவர்கள் அவளுக்கு வேண்டிய தனிமைக் கொடுத்து விலகிப் போக, வள்ளி வேண்டுமட்டும் அழுது தீர்த்தாள்.
அடுத்த நாள் சோகப் பதுமையாய் யாரிடமும் பேசாமல் நடமாடினாள். மூன்றாம் நாள்… “இன்னைக்கு மருத்துவ வசதிகள் பத்தி உங்களுக்கு விளக்க எனக்கு உத்தரவு நண்பர்..’’ என மதி வந்து முன்னால் நிற்க, தன் சோகங்களை மூட்டைக் கட்டி வைத்தவள், மதியோடு அடுத்த ஆச்சர்ய பயணத்துக்கு தயாரானாள்.
ஆம் அந்தப் பயணமும் அவள் எதிர்பார்த்தபடியே அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
கிராமத்தில் இருந்த சுகாதார நிலையத்தில், உயிர்காக்க அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தனை மருந்துகளையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்து இருந்தனர்.
ஆங்கில மருத்துவத்தோடு, சித்த மருத்துவமும் இணைந்து மக்களின் பிணி போக்கிக் கொண்டிருந்தது. அதோடு உயர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, அந்த மருத்துவம் குறிந்த விளக்கம் மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடத்தின் முகவரி போன்றவற்றை விளக்க ஒரு தன் ஆர்வலர் மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அன்றைக்கு மதியோடு கழித்துவிட்டு வந்த நேரம், வள்ளியை பெரிதும் மீட்டிருந்தது. வழக்கம் போல கட்டுரையை எழுதி முடித்தவள், அதை அன்றே பத்திரிக்கை பொறுப்பாசிரியருக்கும், வில்லனுக்கு அனுப்பி வைத்தாள்.
ஏனோ மனம் லேசாக, வில்லனிடம் சிறுபிள்ளை போல நடந்துக் கொண்ட விதத்தை எண்ணி அந்த நொடி சிரிக்கக் கூட தோன்றியது.
மற்ற மனிதர்களைப் போல, முள்ளை காலில் ஏற்றிக் கொண்டு, முள் என்னைக் குத்திவிட்டது என்று புகார் சொல்லும் மன நிலையில் தானும் இருந்ததை எண்ணி அவளுக்கே அருவருப்பாய் இருந்தது.
அன்று அவர்களுக்குள் நடந்த சங்கமம், சாதாரண மனித தேவையின் சாராம்சம். அதில் ஏதோ தான் பெரிதாய் ஏமாற்றப்பட்டதைப் போல ஏன் பரிதவித்தாள் என்று இன்று வரை வள்ளிக்கே விளங்கவில்லை.