யாரோ தன்னை உலுக்குவதைப் போல தோன்ற, விடிய விடிய விழித்திருந்த அலுப்பில், வள்ளி இமைகளைப் பிரிக்கப் பிடிக்காமல், புரண்டு படுத்து, மீண்டும் உறங்க முயன்றாள்.
ஆனால் அப்பொழுதும் யாரோ அவளை தொடர்ந்து உலுக்கிக் கொண்டிருக்க, வள்ளி வேண்டா வெறுப்பாய் கொஞ்சமாய் விழிகளைப் பிரித்தாள்.
அப்படி பிரித்தவள், தன் முகத்திற்கு வெகு அருகே தெரிந்த வில்லனின் முகத்தைக் கண்டதும், தூக்கம் மொத்தமாய் கலைய, விருட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
அவளின் அந்த செய்கையில் புன்னகைத்த வில்லன், “குட் மார்னிங் வள்ளி..’’ என புன்னகை முகமாய் அவளுக்கு காலை வாழ்த்து சொல்ல, வள்ளியும், லேசாய் இதழ் பிரித்து, “குட் மார்னிங்’’ என்றாள்.
வள்ளி அமர்ந்த நிலையிலேயே பார்வையை சுழற்ற, சற்று தொலைவில், ஜுலைகாவின் அருகில் யாரோ ஒருவர், அவளின் உடையில் ஒட்டி இருந்த தூசுகளை வாஞ்சையாய் தட்டி விட்டுக் கொண்டிருக்க, ஜுலைகா மலர்ந்த முகத்தோடு அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
அவர்களுக்கு நேர் எதிரே, புவியும் அவளோடு யாரோ ஒரு நெடியவனும் நின்றுக் கொண்டிருக்க, அந்த நெடியவன், புவியின் கலைந்த கூந்தலை அவள் காதோரம் ஒதுக்கிவிட்டு, அவள் காதுகளில் ஏதோ ரகசியம் பேச, புவி சற்றே முகம் சிவந்து அவன் புஜத்தில் குத்தினாள். அந்தக் காட்சி அழகிய கவிதையை ஒத்து இருந்தது.
அடுத்து அவள் பார்வையால் ரித்தியை தேட, “மதி… ரித்தியை ஏரியை சுத்தி வாக் கூட்டிட்டு போய் இருக்கான். மேடம் திருப்பள்ளி எழுந்தா… டீ குடிச்சிட்டு..எல்லாரும் பெரியம்மா வீட்டுக்கு போலாம்.’’
அவன் அப்படி சொன்னதும், சற்றே தூரத்தில் நின்றுக் கொண்டிருந்த ஜோடிகளைக் காட்டி, “அவங்க ஜூலி, புவி… ஹஸ்பன்ட்ஸ் தானே…?’’ என வினவ,
‘ஆம்..’ எனபதைப் போல தலை அசைத்தவன், “நேத்தே எல்லாரும் அவங்க அவங்க வைப்க்கு பாடிகார்டா அரசனூர் வந்தாச்சி. ரெண்டு பெரும் மதி வீட்ல தங்கி இருந்தாங்க. இன்னைக்கு விளையாட்டு திருவிழா இல்லையா. அதனால எல்லாரையும் இருந்து திருவிழா பாத்துட்டு… அப்புறமா ஊருக்கு கிளம்ப சொல்லி இருக்கேன்.’’
வில்லன் அப்படி சொன்னதும், “ஓ மை காட்… நானும் சீக்கிரம் கிளம்பனும்..’’ என்றவள்,வேகமாய் எழுந்து நின்றாள்.
அவள் எழுந்து நிற்கவும், ஜுலைகாவும், புவியும் இவளை நோக்கி வந்தனர். கூடவே அவரவர் வாழ்க்கைத் துணை.
ஜுலைகா, புன்னகை முகமாய், இரு தோழிகளை நோக்கியும், “இவர் ரபீக்… என்னோட ஹஸ்பன்ட். திருச்சியில பேமஸ் கிரிமினல் லாயர்…’’ என்று அறிமுகப்படுத்த,
புவி, “எங்க கேக் பாக்ஸையே கட்டி மேய்க்குறீங்க. உங்களுக்கு கிரிமினல் கேஸ் எல்லாம் தூசா தான் அண்ணா இருக்கும்.நான் புவனா… இவர் என்னோட ஹஸ்பன்ட் பாரெஸ்ட் ரேஞ்சர் மகேந்திரன்.’’ என்று தன் அறிமுகப்படலத்தை தொடங்க, ரபீக்,
“நாங்க எல்லாம் நேத்தே இன்ட்ரோ ஆயிட்டோம் மேடம்.’’ என புவனாவிடம் கலகலக்க, வள்ளி முகத்தில் ஒரு புன்னகையோடு அத்தனையும் வேடிக்கைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்.
மகேந்திரன் வள்ளியை நோக்கி, “நீங்க எங்க வீட்டு மேடம் சொல்ற கதையில வர இன்ட்ரஸ்டிங் கேரக்ட்டர் வள்ளி தானே. நீங்க எப்படி எல்லாம்….ஸ்கூலுக்கு டிமிக்கி கொடுத்துட்டு….’’ அதற்கு மேல் மகேந்திரன், ‘ஆ…’’ என்ற அலறல் சத்தத்தை மட்டுமே வெளிபடுத்தினான். புவி பலமாய் அவன் கைகளில் கிள்ளிக் கொண்டிருந்தார்.
வள்ளியின் முகத்தில் பெரிதாய் முறுவல் மலர, “எப்படி இந்த காட்டுவாசியை சமாளிக்கிறீங்க…? கிள்ளி கிள்ளியே உடம்புல இருக்குற பாதி கறியை பிச்சி எடுத்துடுவாலே…!’’ என கேட்க,
சோகம் போல முகத்தை வைத்துக் கொண்டவன், “சரியா சொன்னீங்க வள்ளி…! நீங்க எல்லாம் இருக்கீங்கன்னு கையில கிள்றா. இல்லாட்டி… ஆ…..’’ மேலே பேசமுடியாமல் புவி மீண்டும் வலுவாய் கிள்ளி வைக்க, பெரிய சிரிப்பலை ஒன்று அந்த இடத்தை நிறைத்தது.
அதற்குள் தன் ஏரிக்கரை நடையை முடித்துக் கொண்டு வந்திருந்த ரித்திகா, “நானும் வந்துட்டேன்… என்ன விட்டுட்டு எல்லாரும் அப்படி என்ன சொல்லி சிரிக்கிறீங்க… நானும் நானும்…’’ என குழந்தைப் போல காதை தீட்டிக் கொண்டு முன்னால் வர, மீண்டும் அங்கே ஒரு சிரிப்பலைக் கிளம்பியது.
ரபீக், “இவங்க கேங்கே ஒரு மாதிரி ரௌடி கேங் தான் போல. நாம தெரியாம வந்து மாட்டிட்டோம் போல மகேன்.’’ என்று சொல்ல, “சரியா சொன்னீங்க….ரபீக்!” என்று பதில் சொன்ன மகேன், ரபீகிற்கு ‘ஹை பை’ கொடுக்க, பெண்கள் மூவரும் அவர்கள் இருவரையும் முறைத்து நின்றனர்.
உடனே அவர்கள் இணையிடம் கண்களால் கெஞ்ச துவங்க, அதே நேரம் மதி, அனைவருக்கும் புதிதாய் வேப்ப மரத்தில் இருந்து ஒடித்து வந்திருந்த, வேப்பங் குச்சிகளை விநியோகித்தான்.
பெண்கள் தங்களுக்குள் பேசி சிரித்தபடி ஒருபுறம் ஒதுங்கி விட, ஆண்கள் தங்களுக்குள் அளாவலாவியபடி ஒரு பக்கம் நின்று பல் சுத்தத்தை தொடங்கினர்.
இவர்கள் பல் சுத்தம் செய்துவிட்டு, ஏரிக்கரையோரம் இருந்த பொது குழாயில் முகம் கழுவி வரும் போது, ஜேம்ஸ் இரண்டு பெரிய பெரிய ப்ளாஸ்க்குகளில் டீயோடும், மஞ்சள் பையில் பிஸ்கட் பாக்கெட்களையும், பேப்பர் கப்புகளையும் இவர்களுக்காய் சுமந்து வந்திருந்தான்.
சுமந்து வந்தவற்றை மதியிடம் கொடுதவன், நேரே வள்ளியை நெருங்கி, “போங்க மேடம் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா..? நான் பாட்டுக்கு லூசு மாதிரி உங்களை வீடெல்லாம் தேடிட்டு இருந்தேன். அப்புறம் தான் தனம் அம்மா உங்க பிரண்ட்ஸ் வந்து இருக்காங்கன்னு ஏரிக்கரைக்கு போய் இருக்கீங்கன்னு சொன்னாங்க.ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்து இருக்கலாம் இல்ல. இன்னும் பத்து நிமிஷம் அவங்க என்கிட்ட சொல்லாம இருந்து இருந்தா, நான் நம்ம எடிட்டர்க்கு போன் பண்ணி உங்களைக் காணோம்னு சொல்லி இருப்பேன். கொஞ்ச நேரத்துல ரொம்ப பயந்துட்டேன் மேடம்…!’’
ஜேம்ஸ் உரத்த குரலில் வள்ளியிடம் சண்டைப் பிடிப்பவனைப் போல விவாதித்துக் கொண்டிருக்க, “ஜேம்ஸ் ப்ளீஸ்…! ஐயம் ஆல் ரைட் ஓகே. நான் என்ன கிண்டர் கார்டன் கிட்டா…? எங்கப் போனாலும் உங்ககிட்ட சொல்லிட்டுப் போக.’’ என பதிலுக்கு வள்ளியும் அவனைக் கடிந்துக் கொண்டாள்.
அது ஜேம்சை இன்னும் உசுப்பிவிட்டார் போல ஆகிவிட்டது. “நீங்க ஒன்னும் இன்ப சுற்றுலா வரலை மேம். ரெண்டு பெரும் நம்ம பத்திரிக்கை விசயமா முன்ன பின்ன தெரியாத கிராமத்துல தங்கி ஆர்டிகிள் எழுத வந்து இருக்கோம். எடிட்டர் என்னை உங்க கூட அனுப்பும் போது, வள்ளியை நீ தான் பாத்துக்கணும்னு தனிப்பட்ட முறையில சொல்லி அனுப்பி இருக்கார்.
அதோட நீங்க வேற வேலியில போற ஓணானை பிடிச்சி ட்ரெஸ்குள்ள விட்டுக்குற டைப். உங்க ரூம்ல நீங்க இல்ல. உங்க போனும் ரூம்ல அனாதையா கிடக்கு. நான் வேற என்னத்தை நினைப்பேன் சொல்லுங்க…? கொஞ்சமாவது பொறுப்பா பேசுங்க.’’ ஜேம்ஸ் பொங்கித் தள்ள அங்கே என்னப் பிரச்சனை என்பதைப் போல வில்லன் வந்து நின்றான்.
ஜேம்ஸ் உரக்க பேசியதில், அருகில் நின்றுக் கொண்டிருந்த தோழிகளும், “யாருடா இவன் வள்ளிக்கிட்ட இவ்ளோ உரிமையா பேசுறது..?’’ என்பதைப் போல பார்த்து நிற்க, மற்ற ஆண்களின் கவனமும் அவர்கள் புறம் திரும்பியது.
ஜேம்ஸின் அருகில் வில்லன் வந்து நிற்கவும், ஏதோ பிரச்சனை உருவாகப் போகிறது என்று உணர்ந்த வள்ளி. வேகமாய் வில்லனின் கரம் பற்ற வர. அவளை அங்கேயே கைக் காட்டி நிறுத்திய வில்லன்,
“நீங்க சொல்றது ரொம்ப சரி மிஸ்டர் ஜேம்ஸ். அவங்க உங்ககிட்ட சொல்லாம வந்து உங்களை டென்சன் பண்ணது தப்பு தான். அவங்க அப்படி வரக் காரணம் நான் தான். அதனால அவங்களுக்கு பதில் நான் சாரி கேட்டுகிறேன். இன்னைக்கு அவங்க பர்த்டே.அவங்க பிரண்ட்ஸ் எல்லாரையும் வேற வேற ஊர்ல இருந்து வரவழைச்சி ஒரு சர்ப்ரைஸ் பார்டி அரேஞ் பண்ணி இருந்தேன். அதான் அவங்களுக்கே சொல்லாம அவங்களை இங்க கடத்திட்டு வந்தோம்.அவங்களுக்கே தெரியாத விசயத்தை அவங்க எப்படி உங்களுக்கு சொல்வாங்க. நீங்க வீடு முழுக்க தேடின நேரத்துல தனம் பெரியம்மாகிட்ட கேட்டு இருந்தா அவங்க உங்களுக்கு சொல்லி இருப்பாங்க. எனிவே, உங்களை டென்சன் பண்ணத்துக்கு ரொம்ப சாரி…’’
வில்லன் மறுபடியும் மன்னிப்பை வேண்ட, ஜேம்ஸின் மனதில் அத்தனை நேரம் வியாபித்திருந்த கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. வில்லன் ஏதேனும் கோபமாய் பதிலளித்து இருந்தால் அங்கே நிச்சயம் ஒரு போர்க்களத்தை ஜேம்ஸ் உருவாக்கி இருப்பான்.
வில்லன் கேட்ட மன்னிப்பு அவனுள் குற்ற உணர்வை தூண்ட, “சாரி எல்லாம் வேண்டாம் சார். நான் மேடமை காணோம்னதும் கொஞ்சம் எமோசனல் ஆயிட்டேன். இங்கயும் வந்து ஏதாவது வம்பை விலைக் கொடுத்து வாங்கிடுவாங்களோ அப்படின்னு ஒரு பயம் தான் சார்.’’ என்றவன், வள்ளியிடம் திரும்பி,
“ஹாப்பி பர்த்டே மேம்…’’ என மெல்லிய குரலில் வாழ்த்த, வள்ளி ஒரு நன்றி நவில்தலுடன் அவன் வாழ்த்தை ஏற்றுக் கொண்டாள்.
மற்ற இரு தோழிகளுக்கும் கணவன் மனைவியின் செயல் ஆச்சர்யமாய் இருக்க, அவர்கள் வள்ளி வில்லனை வித்யாசமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மதி அனைவருக்கும் தேநீர் கோப்பையை வழங்க, அனைவரும் ஒரே இடத்தில் கூடி நின்று, தேநீரை சுவைத்தபடி கலந்துரையாட தொடங்கினர்.
ரபீக் வள்ளியை நோக்கி, “உங்க பேஸ் எனக்கு ரொம்ப பரிட்சயமா இருக்க மாதிரி இருக்கு…. நீங்க மீடியால வொர்க் பண்றீங்களா என்ன..?’’ எனக் கேட்க,
மகேந்திரனும், “ஆமா எனக்கு கூட இவங்களை எங்கையோ பாத்த பீல் இருக்கு…’’ என்று உரைக்க, வில்லன் முன் வந்து,
“இவங்க வேற யாரும் இல்ல… கனல் பத்திரிகையோட ஒன் ஆப் த பேமஸ் ரிப்போட்டர் விக்யா.அப்புறம் ரொம்ப நூதனமா மதுவுக்கு எதிரா லாஸ்ட் பை இயர்சா போராடிட்டு இருக்க ‘முழக்கம்’ பறை இசைக் குழுவோட தலைவி..’’
வில்லன் அப்படி சொன்னதும், இருவரின் கண்களிலும் அதுவரை இருந்த தோழமை உணர்வு மறைந்து, உடல் மொழியில் ஒரு மரியாதை வந்தது.