மற்ற மூவரும் தொலைபேசி தொடர்பில் இருக்க, வள்ளியை பற்றி அவர்கள் யாராலும் அறிந்துக் கொள்ள முடியவில்லை. வள்ளி இல்லாமல் ஒரு சந்திப்பை யோசிக்க கூட அவர்களுக்கு பிடிக்கவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாய் தொலைபேசி தொடர்புகளும் தேய, தோழிகள் மெல்ல மெல்ல நிதர்சன உலகில் தொலைந்து போயினர்.
ரித்தியின் கேள்விக்கு, வள்ளி பதில் சொன்னாள். “போடி பைத்தியம். டெய்லி மீட் பண்ணிட்டு…சேட் பண்ணிட்டு இருந்தா தான் பிரண்ட்ஷிப்பா. சி…. எனக்கு எப்போ கேக்கை பாத்தாலும் நம்ம ஜுலைகா நியாபகம் வராம இருந்ததே இல்ல.
ரஹ்மான் மியூசிக் கேக்கும் போது எல்லாம் ரித்தி என் முன்னாடி நின்னு ஆடுற மாதிரியே இருக்கும். புவி அவளை நானே நினச்சாலும் என்னால மறக்க முடியாது. நாம தேர்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போது சூடு கொட்டையோட ஹீட்டை செக் பண்றேன்னு என் தொடையில வச்சாலே ஒரு சூடு. அந்த தழும்பு… நான் தினம் குளிக்கும் போது எல்லாம் அந்த தழும்பை பாக்கும் போது புவியை நினச்சி சிரிச்சிப்பேன்.
இப்படி நம்ம நியாபக அடுக்குல பொக்கிசமான நினைவுகளா இருக்கு பாரு அதான் பிரண்ட்ஷிப். இன்னும் இருபது வருஷம் கழிஞ்சாலும் எதேச்சையா எங்கையாவது பாத்துக்கும் போது நம்ம பிரண்டோட குரலை வச்சே அவளை அடையாளம் கண்டுபிடிக்கிறோம் பாரு அது பிரண்ட்ஷிப்.
கண்டு பிடிச்ச அவளை கட்டிப் பிடிச்சிப்போம் பாரு அது பிரண்ட்ஷிப். அப்படி கட்டி பிடிச்சிக்கும் போது நம்மையும் மீறி நம்ம பால்ய காலத்துக்கு போறோம் பாரு அது பிரண்ட்ஷிப். சோ நாம எப்பவும் பிரண்ட்ஸா தான் மச்சி இருக்கோம்.’’
வள்ளி பதில் சொல்லி முடித்ததும், மற்ற மூன்று தோழிகளும் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டனர். அடுத்து ரித்தி அதே இடத்தில் வைத்து அவர்கள் பள்ளியின் பெயரைப் போட்டு, அதனோடு ரௌடிகள் என்ற இணைப் பெயரையும் போட்டு, இவர்கள் நால்வர் வாட்ஸ் அப் நம்பரையும் கேட்டு வாங்கி ஒரு குழுவை தொடங்கி வைத்தாள்.
புவி…. ஒரு வடிவேலு ஸ்டில்லைப் போட்டு, “இப்பவே கண்ணைக் கட்டுதே,,,’’ என குழுவை வெற்றிகரமாக தொடங்கி வைத்தாள்.
அவர்கள் பேச்சு சற்று நேரம் வேறு திசையில் பயணிக்க, ஜுலைகா வள்ளியைப் பார்த்து,
“உனக்கும் அண்ணாவுக்கு கல்யாணம் ஆகி இப்போ சிக்ஸ் இயர்ஸ் இருக்கும் இல்ல. நீ மெட்ராஸ் போனேன்னு மட்டும் தான் தெரியும். நீ எப்போ அவர் கூட சேந்து வாழ ஆரம்பிச்ச..’’
அவள் அப்படிக் கேட்டதும், வள்ளி என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் திகைக்க அங்க ஒரு சங்கடமான மௌனம் சூழ்ந்தது.
புவி உடனே அந்த சூழலை இலகுவாக்கும் பொருட்டு, “மச்சி எப்ப வந்து சேந்தா என்ன..? மனுஷன் எவ்ளோ ரொமாண்டிக் பாத்தியா. பொண்டாட்டி என்ன என்ன ஆசைப்பட்டான்னு தெரிஞ்சிகிட்டு, அதை எல்லாம் இம்மி குறையாம நிறைவேத்திக் கொடுத்து இருக்கார். என்கிட்டக் கூட அண்ணா பேசலை மச்சி. எங்க வீட்டுக்கு போயி என் ஹஸ்பன்ட் அட்ரெஸ் வாங்கி நேரா அவர்கிட்ட பேசி இருக்கார்..’’
புவி அப்படி சொல்லியதும், ஜுலைகா, “எங்க வீட்ல கூட அவர்கிட்ட தான் பஸ்ட் பர்மிசன் கேட்டு இருக்கார்..’’ என பூரிப்போடு சொன்னாள்.
ரித்தியோ, “அண்ணா எனக்கு பேஸ் புக்ல பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தார் மச்சி. நான் கூட ஏதோ ஹன்ட்சம் கை ரிக்வஸ்ட் கொடுக்குதே நம்ம கனவு சீக்கிரம் நிறைவேறிடும் போலன்னு நம்பி அக்கெப்ட் பண்ணேன். பட் ஸ்வீட் சர்ப்ரைஸ்சா உன்னோட ஹஸ்பன்ட்னு இன்ட்ரோ கொடுத்துட்டு உன்னைப் பத்தி பேச ஆரம்பிச்சார். வீட்ல பர்மிசன் வாங்கிட்டு உன்னைப் பாக்க ஓடி வந்துட்டேன் இல்ல…’’ அவள் விளக்கி முடித்ததும்,
புவி அவளைப் பார்த்து, “ஏ அலைஞ்சான் குட்டி. அண்ணா டூ ஸ்மார்ட்ல அதான் நம்ம வள்ளிய செலக்ட் பண்ணி இருக்கார்..’’ என்று அவளுக்கு பழிப்பு காட்டவும்,
“யார்டி அலைஞ்சான் குட்டி…?’’ என சற்று நேரம் அவளை அடிக்க துரத்தியவள், பின்பு ஏதோ நினைவு வந்தவளாக,
“ஏய்… எனக்கு ஒரு மேட்டர் கிடைச்சிடுச்சி…. எல்லாரும் என்னை சுத்தி ரவுண்டா உக்காருங்க. நம்ம கேங்ல முதல்ல கல்யாணம் ஆனது வள்ளிக்கு தான். பட் சில பல இஸ்யூஸ்சால… அவளை விட்ரலாம். நெக்ஸ்ட் நம்ம ஜுலைகா… பாவம் அது பச்சை மண்ணு… அவகிட்ட இந்த கேள்வியை கேக்கவே முடியாது. மூணாவது வாயடி புவி… சோ இப்போ நீ என்ன பண்றன்னா புவி… முன்னாடி வந்து உன்னோட பஸ்ட் நைட் சீக்ரெட்டை ஓபன் பண்ற. விதிய பாத்தீங்களா பிரண்ட்ஸ்… எவ டவுட் கேட்டாலோ கடைசியா அவளே டவுட் கிளியர் பண்ற மாதிரி ஆயிடுச்சி…. காட் இஸ் கிரேட்..’’ என தன் உரையை முடித்தாள்.
புவி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், முன்னே வந்து நின்றாள். வெட்கப்படுவதைப் போல அவள் நடிக்க, ரித்தியோ, வாந்தி எடுப்பதைப் போல நடித்து அதற்கு பரிசாய் ஒரு கிள்ளை புவியிடமிருந்து பெற்றாள்.
அடுத்து, “மச்சி பஸ்ட் நைட் சீக்ரெட் மட்டும் சொன்னாப் போதும்ல செகண்ட் நைட் சீக்ரெட் எல்லாம் கேக்க மாட்டீங்க இல்ல…’’ என உறுதி கேக்க,
ரித்தியோ ஆர்வக் கோளாறில், “ச்சே ச்சே…. நீ ஒருக் கதை மட்டும் சொல்லு மச்சி போதும்.’’ என வாக்கு கொடுத்தாள்.
உடனே புவி தன் கதையை தொடர்ந்தாள்.
“எங்க வழக்கத்துல பையன் வீட்ல தான் பஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணுவாங்க. சோ சாயங்காலமே அங்க போயாச்சு.அடிக்கிற சிவப்பு கலர்ல ஒரு பட்டுப் புடவை. கொஞ்சமா நகை..’’
அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே, ரித்தி இடையிட்டு, “கரெக்ட் மச்சி…. நிறைய நகை போட்டா கழட்டும் போது டைம் வேஸ்ட் ஆகும் இல்ல… ஹி ஹி ஹி…!’’ என சொல்லிவிட்டு அசட்டுத் தனமாய் சிரிக்க,
புவியோ, “இனி நடுவுல பேசின…. அதோட கதைய நிப்பாட்டிட்டு போயிருவேன்..’’ என மிரட்ட, ரித்தி தன் கையால் வாயைப் பொத்திக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
புவி மீண்டும் தன் கதையை தொடங்கினாள்.
“தலை நிறைய மல்லிகைப் பூ. ரெண்டு பேத்துக்கும் ஒண்ணா டிபன் பரிமாறுனாங்க. சாப்டு முடிச்சதும், அவருக்கு அத்தை முறை உள்ள கிழவிக எல்லாம் எங்க ரெண்டு பேத்துக்கும் நலங்கு வச்சாங்க. அப்போ அந்த கிழவிஸ் எல்லாம் நான் வெஜ் ஜோக்கா சொன்னாங்க மச்சி…’’ என சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஜூலைக்கா இம்முறை, “அது என்ன ஜோக் மச்சி..’’ என வாயைப் பிளந்துக் கொண்டு கேட்டாள்.
“உன்ன எல்லாம் பச்சை மண்ணுன்னு சொன்னாலே ஒருத்தி எங்க அவ..’’ என்று ரித்தியை கண்களால் தேட, அவளோ இப்பொழுது தன் வாயிலிருந்து கையை எடுத்துவிட்டு, ஜுலைகாவின் வாயைப் பொத்தி விட்டு, “யூ கண்டினியூ மச்சி..’’ என சொல்ல, வள்ளி சிரிப்புடன் கதை கேட்க தயாரானாள்.
“அப்புறம் முறைக்கு அண்ணியா இருக்கவளுக எல்லாம்…. அப்படி இப்படின்னு ஒரே அட்வைஸ் அலை. அவ்ளோ நேரம் நல்லா தான் இருந்தேன் மச்சி… இவளுக சொல்லிக் கொடுக்குறேன்னு பயம் காட்டிட்டிடாளுக.
அப்படியே பால்கனி செவுத்துல இருந்து குதிச்சி வீட்டைப் பாத்து ஓடிடலாமான்னு இருந்துச்சி. அப்புறம் ஒரு மினி அண்டா சொம்பு நிறைய பாலைக் கையில கொடுத்து எங்க ரூமுக்கு அனுப்பி விட்டாங்க. உள்ள போயி கதவை திறந்ததும், எம் புருஷன் டாப் லெஸ்சா நின்னுட்டு இருந்தார்.’’
புவி அப்படி சொல்லியதும், விழுந்து விழுந்து சிரித்த வள்ளி, “அண்ணா செம ஸ்பீடோ..’’ எனக் கேட்க.
“சட்டப்படி நீ தான் டவுட் கிளியர் பண்ணனும். ஓவரா பேசின அடுத்து உன்ன கோத்து விட்ருவேன்..’’ என மிரட்ட, வள்ளி சிரித்தபடியே, தன் கரம் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள்.
“அது..!’’ என தல அஜீத்தைப் போல வசனம் பேசியவள், “எங்க விட்டேன் ஹா… என்னோட ஹீரோ டாப் லெஸ்ஸா இருந்தார். அதைப் பாத்ததும் எனக்கு உடம்பெல்லாம் ஜில்லோனு ஆயிருச்சி.
என் கையப் பிடிச்சி கூட்டிட்டுப் போயி கட்டில உக்கார வச்சார். அப்புறம் நேரா வந்து என் தலையில இருத்த மல்லிப் பூவை வாசம் பிடிச்சார்.
எனக்கு என்ன என்னவோ ஆயிட்டு இருந்தது. அடுத்து அவர் கை என் முந்தானையை தொட, நான் கண்ணை இறுக்கி மூடிகிட்டேன்.
கொஞ்ச நேரம் ஒரு சத்தமும் இல்ல. முழிச்சி பாத்தா…. என் வீட்டுக்காரர் என் முந்தானையில வாய தொடச்சிட்டு…என்ன பாவமா பாத்து..’’
ரித்தி ஆர்வம் தாங்கமால், “பார்த்து..’’ என அவள் பாட்டுக்கு பின் பாட்டு பாட, “கல்யாண பந்தியில சாப்பிட்டது ஏதோ ஒத்துக்காம அலர்ஜி ஆகி, மனுஷன் நிமிசத்துக்கு ஒரு முறை வாந்தி எடுத்துட்டு இருந்து இருக்கார்.
என் தலையில இருந்த மல்லிபூ வாசம் பிடிச்சது கூட… மல்லிப்பூவை ஸ்மெல் பண்ணா கொமட்டல் நிக்கும்னு தானாம். இது தெரியாம… நான் மெர்சலாகி. ஐயோ ஐயோ… கடைசியா.. என்ன பாத்து நீ ட்ரெஸ் மாத்திட்டு தூங்கு புவி. இப்போ எனக்கு உடம்பு சரியிலைன்னு வெளிய சொன்னா யாரச்சும் ஏதாச்சும் பேசுவாங்கன்னு சொல்லிட்டு, பாத்ரூமை பாத்து ஓடிட்டார்.
நானும் பாவம் புருசன்னு அவர் வாந்தி எடுக்கும் போது எல்லாம் வாய் கழுவ தண்ணி கொடுத்து… கொடுத்து….. கொடுத்து… டயர்ட்டாகி கடைசியா கீழப் படுத்து தூங்கியே போயிட்டேன்.
இந்தக் கொடுமைய எல்லாம் விடப் பெருங் கொடுமை அடுத்த நாள் எங்க வீட்டுக்காரர் ரொம்ப டயர்டா இருக்குறதைப் பாத்து அவர் அத்தை கிழவிஸ் அடிச்ச ஜோக்ஸ் எல்லாம் காது கொடுத்து கேக்க முடியல. யப்பா ஒரு வழியா என் பஸ்ட் நைட் ஸ்டோரிய சொல்லி முடிச்சிட்டேன். யாரங்கே ஒரு கூல் கோக் குடுங்க..’’ என தன் கதையை முடிக்க,ரித்துவோ, பொங்கி எழுந்துவிட்டாள்.
“நோ… இதெல்லாம் போங்காட்டம்… நான் இதை ஒத்துக்கவே மாட்டேன். அடியே இந்த மாதிரி ஒரு சப்பை கதையை சொல்லத் தான் என்னை கை கட்டி வாய் மூடி உக்கார வச்சியா..?’’ என அவளிடம் சண்டைக்கு போக, ஜுலைகாவும் வள்ளியும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
இரவு முழுக்க, தோழிகள் என்ன பேசினார்கள் என்று தெரியாமலேயே, ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்து, கேலி பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது வாழ்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர்.
கருக்கல் வெளுக்க தொடங்கும் நேரத்தில், ஒருவர் மடியில் ஒருவர் விழுந்து அப்படியே உறங்கியும் போயினர். நட்பின் மடியில் அன்பின் அரவணைப்பில்.