புவி ஏற்கனவே கொஞ்சம் லோ செல்ப் எஸ்டீம் இருக்கவ. என்ன எல்லாம் எந்தப் பையனுக்கும் பிடிக்காதா…? அப்படின்னு அவ வேற ஒரே அழுகை.
எனக்கு அப்போ என்ன பண்றதுன்னே தெரியல. அந்த நேரம் அவளை சமாதானப்படுத்த, “விடு மச்சி. அவ கிடக்கா. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடந்து இருக்கும் இப்போதைக்கு இதானே உன் டவுட். விடு நான் எப்படியாச்சும் தெரிஞ்சிட்டு வந்து உனக்கு சொல்றேன்னு சொல்லிட்டேன்.
வீரா வேசமா சொல்லிட்டேன். ஆனா யார்கிட்டையும் அந்த டவுட்டை கேக்க முடியல. கடைசியா எங்க அக்காகிட்ட கேக்க, அவ செருப்பை எடுத்து அடிக்கதா குறை தான். என் பிரண்டஸ் வேற எப்படி சொல்லுவ எப்படி சொல்லுவன்னு ஒரே நச்சு.
அப்பன்னு பாத்து எங்க பெரியம்மா பொண்ணு கல்யாணம் முடிவாகி இருந்தது. கல்யாண வீட்ல இருந்தப்ப ஒரு நாள் எங்க அக்கா பிரண்ட் ஒருத்தி,
“இந்தாடி இந்த புக்கை பாத்து எல்லாம் தெரிஞ்சிக்கோ… சும்மா சும்மா என்ன கேட்டு டார்ச்சர் பண்ணாதன்னு…’’ அவ பிரண்ட் ஏதோ ஒரு புக்கை கொடுத்துட்டு போனா.
அக்காவும், “ரொம்ப தாங்க்ஸ்டீ…” அப்படின்னு சொல்லிட்டு அந்த புக்கை ஒளிச்சி வச்சா.
ஓ இந்த புக்கல கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்னு இருக்கும் போல இருக்குன்னு… அவ ரூம்ல இல்லாதப்ப அந்த புக்கை அவகிட்ட இருந்து சுட்டு என் பேக்ல வச்சிட்டேன்.
அவ அந்த புக்கை ரூமையே புரட்டி தேடினப்ப கூட ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி என்ன அக்கா தேடுறீங்கன்னு அவளுக்கு ஹெல்ப் பண்ணது எல்லாம் தனிக் கதை.
அப்புறம் கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்கு போனதும் முதல் வேலையா என் ரூமுக்கு போயி, கதவை சாத்திட்டு புக்கோட பஸ்ட் பேஜ் தான் திறந்து பாத்து இருப்பேன்.
ஹா ஹா ஹா…! இன்னைக்கு நினச்சா சிரிப்பா வருது. பட் அன்னைக்கு பயந்து போயி, கை கால் எல்லாம் நடுக்கல் வந்து, ரெண்டு நாள் பேய் அறைஞ்ச மாதிரி சுத்திட்டு இருந்தேன்.
அந்த புக்கை எடுத்து கப்போர்ட்ல ஒளிச்சி வச்சவ தான். டிஸ்போஸ் பண்ண கூட தட தைரியம் வரலைனா பாருங்க.
அப்புறம் என் பிரண்ட்ஸ் நச்சு தாங்காம, எங்க நாலு பேர்ல யாருக்கு பஸ்ட் கல்யாணம் நடக்குதோ…அவங்க மத்த மூணு பேருக்கும் அந்த சீக்ரெட்டை சொல்லணும் அப்படின்னு ஒரு புது ஆர்டரை போட்டுட்டு நான் எஸ் ஆயிட்டேன். வெளி உலகம் என்னனே தெரியாம புக்ஸ் கூடவும், பிரண்ட்ஸ் கூடவும் வாழ்ந்த காலம் அது. தோஸ் ஆர் வொண்டர்புல் டேஸ்.’’
வள்ளி கண்களில் கனவு மிதக்க, உதடுகள் புன்னகையில் விரிய அந்த நாட்களின் நினைவுகளை அவனிடம் பகிர்ந்துக் கொள்ள, வில்லனும், “எஸ் காலேஜ் டேஸ் விட ஸ்கூல் டேஸ் ஆர் வொண்டர்புல் டேஸ்.’’ என அவனும் ரசனையோடு சொல்லிக் கொண்டான்.
“உன் பிரண்ட்ஸ்கிட்ட ஐஞ்சி நிமிசம் டைம் கேட்டுட்டு இப்போ ஹாபன் ஹவரா நாம ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கோம். அதுவும் உன் பிரண்ட்ல ரெண்டு பேத்துக்கு கல்யாணம் வேற ஆயிடுச்சி. சோ நீங்க பேசிக்க நிறைய விஷயம் இருக்கலாம்.’’ அவன் அப்படி சொல்லும் போது அவன் கண்களில் குறும்பு கூத்தாட வள்ளி அவனைப் பொய்யாய் முறைத்தாள்.
அவன் முறைப்பை கண்டுக் கொள்ளாதவன், “நான் காலைல அகைன் ஐஞ்சி மணிக்கு வறேன். உங்களை பிக் பண்ணிக்க. என்ஜாய் யுவர் டே தில்லு…’’ என்றவன், மீண்டும் அவள் கரம் பற்ற அவனோடு வள்ளி மௌனமாய் நடந்தாள்.
அப்பொழுது தான் மூட்டப்பட்டிருந்த நெருப்பின் முன் அமர்ந்து, மூன்று தோழிகளும் தங்களுக்குள் ஏதேதோ பேசியபடி, சிரித்துக் கொண்டிருந்தனர்.
இவர்களைக் கண்டதும், புவி வேகமாய் முன்னால் வந்து, “இதுதான் உங்க அஞ்சி நிமிசமா..?’’ என இடுப்பில் கரம் வைத்து முறைத்தாள்.
வில்லன், “லேட் ஆனதுக்கு நான் காரணம் இல்லமா உங்க பிரண்ட் தான் காரணம்.’’ என சொல்ல, “ஓஹோ..’’ என்ற சத்தத்தை தொடர்ந்து அங்கே பெரிய சிரிப்பலை பரவியது.
முகம் சிவந்த வள்ளி, வில்லனை முறைக்க, கிளம்புகிறேன் என்பதைப் போல அவளைப் பார்த்து தலை அசைத்தவன், மற்ற அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப, தோழிகளின் நாள் துவங்கியது.
புவி, வள்ளியிடம், “ஏன் மச்சி உன்னோட ஆசைன்னு நாங்க சொன்ன எல்லாத்தையும் அண்ணா ரெடி பண்ணிக் கொடுத்து இருக்கார். சரக்கு எங்கடி..?’’ என வினவ,
வள்ளி தலையை அசைத்து, “கொண்டு வந்தார் வேண்டாம்னு சொல்லி திருப்பிக் கொடுத்துட்டேன்.’’ என சொல்ல,
புவி, “அடிப்பாவி என் ஆறு வருசக் கனவுல மண்ணை அள்ளிப் போட்டுட்டியே..’’ எனப் புலம்ப, சற்று நேரம் அதைப் பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.
அடுத்து ஆறு வருடங்களுக்கு முன் அவர்கள் பள்ளி ஆண்டுவிழாவில் இவர்கள் குழு நடனம் ஆடிய பாடலை ஜுலைகா தன் அலைபேசியில் உச்சஸ்தாயிலில் ஒலிக்க விட, நால்வரும் அன்றைக்கு ஆடிய அதே நடன அசைவுகளை மனதில் கொண்டு அந்த நெருப்பை சுற்றி நடனம் ஆடினர்.
ஆடி முடிந்ததும், இவர்களே கைதட்டிக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆடிக் களைத்த பின்பே நெருப்பை சுற்றி வட்டமாய் அமர்ந்தனர்.
ரித்திகா அவர்கள் தாகம் தீர்க்க, குளிர்பான பாட்டில்களை எடுத்துக் கொடுக்க, அனைவரும் அதை அருந்தி முடித்ததும், வள்ளி அனைவரிடமும் தன் விசாரனையை துவக்கினாள்.
“அப்புறம்… எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க…?’’
அவள் அப்படிக் கேட்டதும் புவி தான் முதலில் பதில் சொன்னாள்.
“நான்லாம் பேருக்கு ஒரு டிகிரி முடிச்சேன் மச்சி. அதுக்கு அப்புறம் வீட்ல சும்மா தான் இருந்தேன். இப்போ தான் ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி மேரேஜ் முடிஞ்சது. அவர் பாரெஸ்ட் டிபார்ட்மென்ட்ல ரேஞ்சரா இருக்காரு. என்ன வேற மேல படி படின்னு ஒரே டார்சர்.
நான் யாரு…. சீக்கிரம் குட்டி போட்டு அதை படிக்க வைக்க ப்ளான் பண்ணி இப்ப அந்த ப்ராசஸ்ல மீ வெரி பிசி..’’ என கண் அடித்து சொல்ல, மற்ற மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
ரித்தியோ, “பாவம்டி… அண்ணா…’’ என அவள் கணவனுக்காய் வருத்தப்பட, அதற்கும் மூவரும் வெடித்து சிரித்தனர்.
“சீ லேடிஸ் கல்யாணம் ஆச்சுன்னா இந்த அச்சம், மடம், நாணம், பெயர்ப்பு எல்லாம் உங்களை விட்டு ஓடியே போயிரும்..’’ என அதற்கும் கூலாய் பதில் சொன்னாள். அதற்கும் மூவரும் சிரித்து முடித்ததும், அடுத்து ரித்தி தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினாள்.
“நான் ஐடீ ஆப்பிள் மச்சி. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தான் ஆன்சைட் போய்ட்டு இந்தியா ரிடர்ன் வந்தேன். என்னோட ஹெட் ஆபிஸ் மும்பை. இப்போ தான் சென்னை ட்ரான்ஸ்பர் கிடச்சி இருக்கு. வீட்ல அலையன்ஸ் பாத்துட்டு இருக்காங்க. பட் எனக்கு லவ் பண்ணி தான் மேரேஜ் பண்ணிக்கணும்.
என் பின்னால ஒரு பையனை செமையா சுத்த விடனும். பேஸ் புக்ல காலாய்க்கணும். வாட்ஸ் அப்ல சண்டை போடணும், எனக்கு பாடி காட் வேலை பாக்க வைக்கணும். ஒரு முத்தம் கொடுக்க கூட அவனை கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்ச விடனும். இதெல்லாம் லைப்ல நடந்தா நல்லா இருக்கும் இல்ல மச்சி. நம்மளை கொஞ்சிகிட்டே இருக்க ஒரு ஆள்.’’
ரித்தி கண்களில் கனவு மிதக்க சொல்ல, மற்ற மூவரும் அவள் பேசுவதையே, “ஆ..’’ என்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
“கண்டிப்பா அப்படி நடக்க நான் துவா செய்யிறேன் மச்சி…’’ என ஜூலைக்கா சொல்ல, மற்ற மூன்று தோழிகளும், கைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
ரித்தி ஏதோ அரங்க மேடையில் அமர்ந்திருப்பவளைப் போல, அந்த கைதட்டலை தலை வணங்கி பெருமையோடு ஏற்றுக் கொண்டாள்.
அடுத்து ஜுலைகா, “நான் லா முடிச்சேன். என் ஹஸ்பன்ட் கூட லாயர் தான். நான் அவர்கிட்டயே ஜூனியரா ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருக்கேன். எங்களுக்கு கல்யாணமாகி சிக்ஸ் மன்த்ஸ் ஆகுது. அல்லா எனக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனுசரை கணவனா கொடுத்து இருக்கார். ரொம்ப நல்ல புகுந்த வீட்டு சொந்தங்களையும். ஐயம் ஹாப்பி வித் மை இன் லாஸ். எனக்கு வாழ்க்கை ரொம்ப எளிமையா, நேர்மையா அதே சமயம் ரொம்ப அழகா போயிட்டு இருக்கு….அதுக்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்..’’
ஜூலைக்கா பேசி முடித்ததும், மற்ற மூன்று தோழிகளும், எழுந்து நின்று கைதட்டினர். ஜுலைகா அமர்ந்த படியே அவர்களைப் பார்த்து அன்பாய் சிரிக்க, மற்ற மூன்று தோழிகளும் அவளைப் பாய்ந்து சென்று கட்டிக் கொண்டனர்.
வள்ளி, “மை டியர் கேக் பாக்ஸ்… ஐயம் ஹாப்பி பார் யூ டி…’’ என உணர்ச்சிமயமாய் அவள் காதுகளில் முணுமுணுக்க, ஜுலைகா பதிலுக்கு, “தாங்க்ஸ் மச்சி…!’’ என்றுவிட்டு ஒரு கிள்ளையும் பரிசாய் வாங்கினாள்.
இது அவர்கள் பழைய பழக்கம். நண்பிகள் ஒருவருக்கு ஒருவர் நன்றியோ மன்னிப்போ தெரிவித்தாள் பலமாய் கிள்ளி வைப்பார்கள்.
மூவரும் மீண்டும் அமர்ந்து கொள்ள, ரித்தி தன் ஆழ்ந்த குரலில், “கேஜில இருந்து டுவல்த் வரை ஒண்ணா படிச்சோம். ஸ்கூல் முடிஞ்ச நாள்ல இருந்து ஆளுக்கு ஒரு திக்கா போயிட்டோம் இல்ல.
இப்ப கூட வள்ளி ஹஸ்பன்ட் அவளுக்கு சர்ப்ரைஸ் பார்டி அரேஞ் பண்ண நம்மை தேடி வரலைனா கடைசி வரை நாம மீட் பண்ணாமையே போயிருப்போமா..?’’
ரித்தியின் கேள்வி அங்கிருந்த அனைவரையும் பலமாய் தாக்கியது. வள்ளி ஊரை விட்டே சென்றிருக்க, மேற்படிப்புக்காய் ஆளுக்கு ஒரு ஊரை நோக்கி சென்று இருந்தார்கள்.