எங்க ஆனி ஐயா சம்சாரம் தனம் அம்மா தான்,வேலைக்கு வந்தவங்களுக்கு எல்லாம், தினம் கலவை சாதம் கிண்டிக் கொடுப்பாங்க.
அதுக்கு அப்புறம் எங்க தலைவர் நமக்கு எது வேணுமோ அதை நாம் தான் உருவாகிக்கணும்னு சொல்லிட்டு, எங்க ஊர் சாலையில இருந்து குடிநீர், மின்சாரம் இப்படி எங்க தேவையை நாங்க தான் பூர்த்தி செய்துகிறோம்.
இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். அப்புறம் எதுக்கு அரசாங்கம், அதுக்கு எதுக்கு நாம வரிப் பணம் கட்டணும்னு…? உங்க எண்ணம் சரி தான்.
இப்படி தான் நாலு வருசத்துக்கு முன்னாடி நிறையப் பேர் கேள்வி எழுப்பிட்டு இருந்தாங்க. அதுக்கு எங்க தலைவர் சொன்னே ஒரே பதில்,
‘நம்மால முடிந்ததை முதல்ல நாம சமூகத்துக்கு கொடுப்போம். அது கல்வியா இருந்தாலும் சரி. உடல் உழைப்பா இருந்தாலும் சரின்னு.’
இப்போ எங்க கிராம மக்கள் ரொம்ப மகிழ்ச்சியா தான் இருக்காங்க. எங்க ஊர்ல எங்க முயற்சில அரசு சார்ந்த நான்கு பள்ளிகள் இயங்கிட்டு இருக்கு.தனியார் பள்ளிகள்ல சேர்கை குறைஞ்சி ஒரு கட்டத்துல யாருமே போகாததால அதையெல்லாம் அவங்களே இழுத்து மூடிட்டு வேற தொழிலை தேடி போயிட்டாங்க.’’
பேசிக் கொண்டே நடந்ததில் பள்ளி வந்து விட, அவன் விவரித்த காட்சிகள் மனத் திரையில் விரிய, வள்ளியின் மனதில் சொல்லொண்ணா உணர்வுகள். பள்ளியை கண்டவுடன் அவள் மனதில் வந்த எண்ணம், “இது ஊர் கூடி இழுத்த தேர்..’’ என்பது தான்.
நடக்க வருந்திய ஜேம்ஸ் கூட, மதியின் பேச்சை கேட்டுக் கொண்டே வந்ததில், நடந்து வந்த உணர்வே அவனுக்கு தெரியவில்லை.
இவர்கள் வந்த இடம் ஆரம்பப் பள்ளி. முதலில் இவர்கள் நுழைந்தது ஒன்றாம் வகுப்பிற்குள். இளம் பெண் ஒருவர் வடிவங்கள் பற்றிய பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
வகுப்பில் இருந்த முப்பது மாணவர்கள் கையிலும் களி மண்.
அந்த ஆசிரியர் வட்டம் என்று சொன்னதும், மாணவர்கள் களி மண்ணைக் கொஞ்சம் பிட்டு அங்கு ஏற்கனவே தயாராய் இருந்த வட்ட வடிவ செயற்கை அச்சில் வார்த்து ஒரு வட்டத்தை உருவாக்கினர்.
ஆசிரியர்… “உங்கள் வட்டத்தை காண்பியுங்கள்…” என்றுக் கேட்டதும், அனைவரும் ஒரு சேர தங்கள் வட்டக் களிமண் வடிவத்தை உயர்த்திக் காண்பித்தனர்.
அதே போல நான்கு வெவ்வேறு வடிவங்களை அச்சில் எடுத்து முடித்ததும், ஆசிரியர் ஒவ்வொரு வண்ணங்களின் பெயர்களை குறிப்பிட்டு, அதை ஒவ்வொரு வடிவத்திற்கும் அடிக்க சொல்ல,
தங்கள் பிஞ்சு விரல்களால் ஏற்கனவே நீர்க் கரைசலில் தயாராய் இருந்த வண்ணங்களை குழந்தைகள், வடிவத்தில் தூரிகை கொண்டு தீட்ட தொடங்கினர். வகுப்பு முழுக்க ஒரே ஆரவாரக் கூச்சல்.
“ஷ்.. அமைதியாயிரு..’’ என்று மிரட்ட வேண்டிய ஆசிரியையும் அங்கே குழந்தைகளோடு குழந்தையாய் குதூகலித்துக் கொண்டிருக்க, ஜேம்ஸ் தன் கை வண்ணத்தில் அந்த அழகிய மலர்ச் செண்டுகளை தன் கருவியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.
வள்ளிக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம், பிரம்மாண்டம் எல்லாம் தாண்டி ஏதோ ஓர் முக்தி நிலையில் அந்தக் குழந்தைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்து இவர்கள் சென்ற இரண்டாம் வகுப்பில் மொழிப் பாடம். ஏழு வயதுக் குழந்தைகள் பாண்டியாட்டத்தோடு திருக்குறளையும் சேர்த்து, புதுமையாய் ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த மூன்றாம் வகுப்பில் தெள்ளத் தெளிவாய் ஆங்கில நாடகம் ஒன்று அரங்கேறிக் கொண்டிருந்தது. அதுவரை இவர்களோடு தூய தமிழில் உரையாடிக் கொண்டு வந்த மதி அந்த வகுப்பிற்குள் நுழைந்ததும் தானும் ஆங்கிலம் பேச தொடங்கினான். அது அவர்கள் வழமையாம்.
அடுத்து அவர்கள் நுழைந்த இடம் அறிவியில் ஆய்வகம். நான்காம் வகுப்பு குழந்தைகள் எதையோ பரிட்சித்துக் கொண்டிருக்க,
மதியைக் கண்டதும் அங்கிருந்த குழந்தைகள் முகம் வெண் தாமரையாய் மலர்ந்து. அங்கிருந்த ஒரு சுட்டிப் பெண்ணை அழைத்தவன்,
“கவி இவங்க நம்ம பள்ளிக் கூடத்தை பற்றி செய்தி எழுத வந்து இருக்காங்க. எங்க இவங்களுக்கு அதிரடியா உன்னோட மந்திர வித்தை ஒன்னை காட்டுப் பாப்போம்.’’ என சொல்ல,
ஒரு சிறிய கண்ணாடி சோதனைக் குழாயில் நீர் போல எதையோ கொண்டு வந்தக் குழந்தை, வேறு ஒரு சிறியக் காகிதத்தில் உப்பை போல வெண்ணிறப் பொடி ஒன்றைக் கொண்டு வந்து,
“மிஸ் இதுல கொஞ்சம் கொஞ்சமா இந்த உப்பைப் போடுங்க..’’ என சொல்ல, வள்ளி சாதாரணமாகத் தான் உப்பைப் போட்டாள்.
அவள் போட்டு முடித்ததும்…”உனக்கு பிடிச்ச ஊறுகா தட்டுக்குள்ள வச்சிருக்கேன். வந்து எடுத்துக்கோ மாயா..’’ என்று சொல்லியபடி தன் ஸ்கேலால் அந்த குடுவையை நோக்கி மந்திரம் போடுவதைப் போல ஒரு சுழற்று சுழற்ற, குடுவை நொடியில் புசு புசுவென பொங்கி வந்தது.
வள்ளி ஒரு நிமிடம் ஒரே நிமிடம் பயந்தே போய் விட்டாள். அங்கிருந்த மற்றக் குழந்தைகள் குலுங்கிச் சிரிக்க, வள்ளியின் பயந்த தோற்றத்தை பார்த்த ஜேம்ஸ் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான்.
அவனைப் பார்த்து அவள் முறைத்துக் கொண்டிருக்கும் போதே, அவளை கனிவாய் அழைத்தக் குழந்தை,
நீங்க கையில வச்சி இருக்குறது சமயல் சோடா மிஸ். அதோட கெமிகல் நேம் சோடியம் பை கார்பனேட். உங்க கையில இருந்தது வெறும் தண்ணி தான், ஆனா லேசா தேங்காய் எண்ணெய் ஊத்தி உங்கக் கிட்ட கொடுத்துட்டேன்.
நான் கொண்டு வந்து கொடுக்கும் போது நீங்க மேல இருந்த தேங்காய் எண்ணெய் மேல தான் சோடா உப்பை போட்டீங்க. எண்ணையோட அடர்த்தி அதிகம் அதனால அது முதல்ல நீர்ல மூழ்கி அதுக்கு அப்புறம் மிதந்தது. சோ நீங்க போட்ட சமையல் சோடா தேங்கா எண்ணையோட சேர்ந்து வினை புரிஞ்சி பொங்கி வந்தது.’’
எட்டாம் வகுப்பிலோ, பத்தாம் வகுப்பிலோ கஷ்டப்பட்டு மனனம் செய்த வேதியல் பக்கங்கள் வள்ளியின் கண் முன் நிழலாடியது.
அந்தக் குழந்தையை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டவள், அன்பாய் அதன் கன்னத்தில் முத்தம் கொடுக்க, மதி அவளை குறும்போடு பார்த்துக் கொண்டிருந்தான். இந்த ஆசிரியனுக்கு ஒன்றும் இல்லையா என்பதைப் போல.
மேலும் அவர்கள் வகுப்பறைகளை சுற்றி முடித்து கிளம்பும் பொழுது நேரம் மதியத்தை நெருங்கி இருந்தது.
வந்திருந்த முதல் நாளே அவள் எண்ணத்தில் பல பல தாக்கங்களை ஏற்படுத்தி இருந்த பள்ளியை பெருமையோடு பார்த்தவள்,
விடைபெறும் நோக்கோடு மதியின் கரம் பற்றி குலுக்கி விட்டு, “ரியலி ய கிரேட் ஜாப். நான் கண்ணுல பார்த்த விசயங்களை படிக்கிற வாசகர்கள் பீல் பண்ற அளவுக்கு உணர்வுப் பூர்வமா எழுதணும். இன்னைக்கே கட்டுரையோட முதல் பதிவை தொடங்கிடலாம்னு இருக்கேன்.
உங்களோட ஸ்பென்ட் பண்ண டைம் ரொம்ப ரொம்ப எனர்ஜிடிக்கா… ரொம்ப ரொம்ப பெஸ்டா இருந்தது. உங்க ஸ்கூல் கிட்ஸ் பாக்கும் போது ரொம்ப பாசிடிவ் பீல் வருது… நம்ம சொசைடி மேல. நீங்க சென்னை வந்தா கண்டிப்பா என்னை மீட் பண்ண வரணும்.
எங்க அம்மாகிட்ட உங்களைக் காட்டணும். எப்போ பாரு என்னை திட்டிக்கிட்டே இருப்பாங்க. நான் சோசியல் சர்விஸ் பண்றதா சொல்லி புலம்பிட்டே இருப்பாங்க. நான் பண்றது எல்லாம் சர்வீசே இல்ல. ஜஸ்ட் சொசைடிய குறை சொல்ற சுய தம்பட்டம்னு உங்களை மாதிரி ஆளுங்களை பாத்தா தெரிஞ்சிப்பாங்க. மறுபடியும் சந்திப்போம் தோழர்.’’ என அவள் விடை பெற, ஜேம்சும் கைகளை குலுக்கி விடைப் பெற்றுக் கொண்டான்.
மதி, “உங்களோடு தலைவர் வீடு வரை துணைக்கு வரவா தோழர்.’’ என்று அன்பாய் கேட்க, “நாங்களே போய்கிறோம் தோழர். தேங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன்..’’ என்றவள் பின் தன் நாக்கை கடித்துக் கொண்டு,
“உங்க அளவுக்கு தூய தமிழ் பேச முடியல சாரி…’’ என்று சொல்லி சிரிக்க, அவளை மையமாய் பார்த்தவன், “செந்தமிழும் நாப் பழக்கமும் தான் தோழர் பழகிக் கொடுத்துடுவோம் விடுங்க..’’ என்றவன் குறிப்பாய் அவள் இதழ்களைப் பார்த்தான்.
அவன் குறும்புப் பேச்சை ரசித்தவள், “கற்றுக் கொள்ளும் ஆர்வம் வந்தால் கண்டிப்பாய் கற்றுக் கொள்வேன் தோழர். இப்போதைக்கு கிளம்புறேன்.’’ என்ற படி, அங்கிருந்து நடக்க தொடங்கினாள்.
நடந்துக் கொண்டிருந்த அவளை மீண்டும் அழைத்தவன், “நண்பர்… நாளை எங்கள் குடிநீர் தேவை மற்றும் விவசாயம் பற்றி பகிர்ந்துக் கொள்ள, எங்கள் அமைப்பின் துணை தலைவர், நண்பர் ரோஷன் உங்களை சந்திக்கக் வருவார். எங்கள் அமைப்பின் தலைவர் மின் அஞ்சல் முகவரி ஊர்த் தலைவர் ஆனி ஐயாவிடம் இருக்கும். முதல் பத்தியை நீங்கள் முடித்து விட்டால்…அதை அவருக்கு மின் அஞ்சல் செய்து விடுங்கள். அவருடைய அன்பு வேண்டுகோள் அது..’’ என்று தெரிவிக்க,
“கட்டாயம் தோழர்.’’ என கையசைத்து விட்டு மேலே நடந்தாள்.
ஊர் தலைவர் வீட்டை அடைந்து மதிய உணவை முடித்ததும், ஜேம்ஸ் உறக்கத்தில் ஆழ்ந்து விட, வள்ளியோ செல்கள் இணைந்து கருவாகி உயிர் ஆவதைப் போல,
தன் சிந்தனையில் உதித்த சொற்கள் என்ற செல் எடுத்து, தன் கட்டுரையை உயிரோவியமாய் செதுக்கிக் கொண்டிருத்தாள்.
இரவு உணவிற்கு கூட எழுந்துக் கொள்ளவில்லை. தனம் தான் அவளுக்கு, “இதையாவது குடிச்சிட்டு வேலை செய் கண்ணு…’’ என்று பனங்கற்கண்டு கலந்த பாலைக் கொடுத்து விட்டு சென்று இருந்தார்.
ஆனி ஐயா சற்று நேரம் அவளிடம் அவள் பார்த்து வந்த விசயங்கள் குறித்து கேட்டுவிட்டு, அவள் அறியாத சில முக்கிய தகவல்களையும் சொல்லிவிட்டு, இணைந்த கரம் அமைப்பின் தலைவனின் மின் அஞ்சல் முகவரியைக் கொடுத்து விட்டு உறங்க சென்று விட்டார்.
அவள் தன் கட்டுரையின் முதல் பகுதியை திருப்திகரமாய் வடித்த மறுநொடி `பொறுப்பாசிரியருக்கும், இணைந்த கரம் அமைப்பின் தலைவனுக்கும் அந்த கோப்பை மின் அஞ்சலில் அனுப்பிவிட்டு உறங்க சென்று விட,
இரவு முதல் நொடிக்கொரு முறை அலைபேசியை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வில்லன், மின் அஞ்சல் வந்ததின் அறிகுறியாய் அலைபேசி சிணுங்கவும், வேகமாய் தன் உள்ப் பெட்டியை திறந்து, தனக்கு வந்திருந்த கட்டுரையை வாசிக்கத் தொடங்கினான்.
ஏனோ ஐந்து வருடங்களுக்கு முன்னால் கால இயந்திரத்தில் பயணித்து திரும்பி வந்த உணர்வை அந்தக் கட்டுரைக் கொடுக்க, அத்யாயத்தின் இறுதி வரிகளில்,
‘மாற்றத்தின் விதை தனை இம்மண்ணில் விதைத்த மா மனிதரின் சுவடுகளில் பயணிக்க விரும்பும் அவரின் விசிறியாய் நான். அடுத்த பதிவோடு விரைவில் வருகிறேன்.’ என்றிருந்த கடைசி இருவரிகளை மட்டும் எத்தனை முறை வாசித்து இருப்பானோ அவனுக்கே தெரியாது.
அக்கணமே வள்ளியின் பட்டுப் பாதங்களை தன் பாதத்தின் மேல் வைத்துக் கொண்டு,
சுவடின் அரிச்சுவடே நீ தான் பெண்ணே……எனக் கூவ வேண்டும் போல இருந்தது.
முயன்று அடக்கிக் கொண்டு படுக்கையில் வீழ்ந்தான்.
மனதெல்லாம் தித்திப்பாய் அவள் நினைவுகளின் ஊர்வலங்கள்…!