கணினியின் முன் அமர்ந்திருந்த வள்ளியின் முகம் புன்னகையில் விரிந்து இருந்தது. இதற்கு மேல் இவர்களின் ஒரே ஒரு சாதனையை கேட்டால் கூட அந்த இடத்திலேயே ஆச்சர்யத்தில் மயங்கி விழும் அளவிற்கு வள்ளி ஆச்சர்யங்களின் விளிம்பு நிலையில் இருந்தாள்.
கண்டு வந்த மாற்றங்களை எழுத்துக்களுக்கும் உணர்வுகள் கொடுத்து வார்த்தைகளாய் அவள் வடித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஜேம்ஸ் அவள் அறைக்குள் நுழைந்தான்.
அவள் நிமிர்ந்து பார்க்கையில், “மேம் இதெல்லாம் அநியாயம்…. இன்னைக்கு நைட் தனம்மா பூரி மசால் செஞ்சி இருக்காங்க. ஆசையா சாப்பிட போலாம்னு பாத்தா… நேத்து நைட் நீங்க சாப்பிடாமலேயே படுத்துட்டீங்கலாம். அதனால உங்களையும் கையோட கூட்டிட்டு வர சொன்னாங்க. ரெண்டு பேரும் ஒண்ணா போனாத் தான் இலை வைப்பேன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க.’’
பலூன் பிடுங்கப்பட்ட குழந்தையாய் அவன் முகம் சுருங்கி இருக்க, ஏனோ வள்ளிக்கு யாரைப் பார்த்தாலும் சிரித்துக் கொண்டே இருக்க தோன்றியது. உலகம் முழுமைக்குமான அன்பை ஒற்றைப் புன்னகையில் வாரி வாரி வழங்கத் தோன்றியது.
உடனே தன் மடிக் கணினியை அணைத்தவள், “அவ்ளோ தானே வாங்கப் போகலாம்.’’ என சிரித்தபடி எழுத்துக் கொள்ள, ஜேம்சிற்கு பேசுவது வள்ளி தானா என ஆச்சர்யமாய் இருந்தது.
ஏனெனில் வள்ளிக்கு பொதுவாய் அவள் வேலை நேரத்தில் யார் குறுக்கிட்டாலும் பிடிக்காது. முக தாட்சண்யமின்றி கடுமையாய் பேசிவிடுவாள். அதனால் தான் ஜேம்ஸ் சற்றே வாடிய முகத்தோடு உள்ளே வந்தான்.
ஆனால் அவள் உடனே புன்னகை முகமாய் எழுந்துக் கொள்ளவும், “என்ன ஆச்சு இவங்களுக்கு..?’’ என்ற சிந்தனையோடு அவளைப் பின்தொடர்ந்து நடந்தான்.
இருவரும் உணவுக் கூடத்தை அடையவும், தனம் இருவருக்கும் பரிமாற முன் வர,தனத்தை புன்னகை முகமாய் ஏறிட்டவள்,
“தனம்மா… இன்னைக்கு உங்க கிட்சன்ல இருக்க எல்லா பூரியையும் நான் தான் சாப்பிட போறேன்…. உங்களுக்கெல்லாம் வேணும்னா முன் ஏற்பாடா கொஞ்சம் எடுத்து வச்சிக்கோங்க..’’ என கிண்டல் செய்ய, அவரோ,
“நீ மொதல்ல முழுசா நாலு பூரித் தின்னுத்தா…. எங்க கிழக்கால தோட்டத்தை உம் பேருக்கு மாத்தி தர சொல்றேன்…’’ என்று தானும் பதிலுக்கு வம்பிழுத்த படி இருவருக்கும் பரிமாற தொடங்கினார்.
அவர் கூறியது முற்றிலும் உண்மை என்பதைப் போல. பெரிது பெரிதாய் இருந்த பூரிகளை மூன்றிற்கு மேல் வள்ளியால் உண்ண முடியவில்லை.
எல்லா வகை உணவையும் வெளுத்து வாங்கும் ஜேம்ஸ் கூட ஐந்தாவது பூரிக்கே ஏப்பம் விட்டபடி, வயிற்ரை தடவ தொடங்கி விட, வள்ளி பரிதாபமாய் தனத்தைப் பார்த்தாள்.
வாய்க் கொள்ளா சிரிப்புடன், “ஆத்தி மூணாவது பூரியே இலையில குட்டிக் கரணம் போடுது போலையே..’’ என அவர் இவளை வம்பிழுக்க,
“போங்க தனம்மா… இது போங்காட்டாம்… கால் கிலோ மாவுல ஒரு பூரி சுட்டு இருக்கீங்க… இதெல்லாம் செல்லாது செல்லாது…வேணா ஒன்னு பண்ணுவோம். காலையில சுட்ட மெது மெது ஆப்பம் சுடும் போது நாம போட்டி வச்சிக்கலாம். அப்போ காட்றேன் இந்த வள்ளி யாருன்னு. இந்த ஊரை விட்டுப் போகும் போது உங்க தோட்டத்தை எழுதி வாங்காம நான் போகப் போறதில்லையாக்கும்..’’ என விளையாட்டாய் பதில் சொல்லியபடி, மூன்றாவது பூரியை கொஞ்சம் சிரமப்பட்டே உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் வள்ளி.
ஜேம்ஸ், குழந்தை போல தனத்துடன் சரிக்கு சரியாய் வாயடிக்கும் வள்ளியை வியந்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இப்படியெல்லாம் யாருடனும் பேசி அவன் இதுவரைக் கண்டதில்லை.
தனமும், “பாப்போம்.. பாப்போம்…. எங்க ஊரு ஈருகொலிக்கு சேலைக்கட்டி விட்டா அது கூட உன்ன விட எடுப்பா இருக்கும் போ…’’ என்றபடி சமையல் அறைக்குள் நுழைந்து விட வள்ளியும் இதழில் மலர்ந்த முறுவலோடே உணவருந்தி விட்டு எழுந்துக் கொண்டாள்.
வழக்கம் போல உடனே அறைக்கு திரும்பாமல், தொட்டியில் இருந்த பாத்திரங்களை அவள் விளக்கி வைக்கத் தொடங்கவும்,
தனம் ஒன்றும் பேசமால், அடுப்பு மேடையை சுத்தப்படுத்திய படி, அவளோடு பொதுவான விசயங்களை அளாவளாவ தொடங்கினார்.
வள்ளியும் அவர் கேள்விகளுக்கு புன்னகை முகமாவே பதில் சொல்லத் தொடங்கினாள். சற்று நேரத்தில் ஜேம்ஸ் சமையலறைக்குள் கை கழுவ வர, வள்ளி அவனிடம்,
“ஜேம்ஸ் இந்த யூடன்சில்ஸ் எல்லாம் கிளாத்ல ட்ரை பண்ணிட்டு செல்ப்ல அடுக்குங்க..” என சொல்ல ஜேம்ஸ் உடனே இயல்பாக அந்தப் பணியை செய்ய வந்தான்.
அவள் அவனை பணித்தது ஆங்கிலத்தில் என்பதால் தனத்திற்கு அவள் பேசியது புரியாமல் அமைதியாக இருந்தார். ஆனால் ஜேம்ஸ் அடுப்பு மேடையில் இருந்த துணியை கையில் எடுத்துக் கொண்டு, அவள் கழுவி வைத்திருந்த பாத்திரத்தில் ஒன்றைக் கையில் எடுக்கவும்,
“ஐய தம்பி இதெல்லாம் நீங்க எதுக்கு செய்யிறீக. மொதோ போங்க வெளிய…. யார்னாச்சும் பாத்தா அசிங்கம்.ஏத்தா இந்த வேலை எல்லாம் நீ ஏன் தம்பிகிட்ட ஏவிகிட்டு கிடக்க…. உனக்கு முடியாட்டி வச்சிட்டு போத்தா… நான் செல்விய கூப்பிட்டு வேலை வாங்கிக்கிடுதேன்.’’
அவர் குரலில் இருந்த பதட்டத்தில் வள்ளியின் முகம் சுருங்கியது. அவரின் பதட்டம் கண்ட ஜேம்ஸ் கையில் இருந்த பாத்திரத்தை என்ன செய்வது எனப் புரியாமல் அப்படியே விழித்தபடி இருக்க,
நிதாமனாய் அவரை ஏறிட்டு பார்த்த வள்ளி,. “எது தனம்மா அசிங்கம்..?’’ எனப் பொறுமையாய் அவரைக் கேள்விக் கேட்டாள்.
அவரோ, “எங்க அப்பா காலத்துல ஆம்பளைங்க எல்லாம் சமயல்கட்டு வாசலுக்கு வரமாட்டாங்க. அவுக கைகழுவின தட்டைக் கூட நாங்க தான் எடுத்து வைப்போம். இன்னைக்கு ஆம்பளைக சமயல்கட்டுப் பக்கம் வந்து போனாலும் கூட ஒரு ஆம்பளைய எப்படி பாத்திரத்தை துடைக்க சொல்லுவ வள்ளிமா…. இதெல்லாம் பொம்பளைங்க வேலை தானே… அதோட… ஊருக்குள்ள யாரச்சும் பாத்துட்டு வெளிய பரப்பி விட்டாய்ங்கன்னு வையி…. தம்பிய தானே ஊரு நாளப் பின்ன தப்பா பேசும்..’’
ஏனோ இதுவரை பிரமாண்ட நுரையாய் அவள் மனதில் கூடுக் கட்டியிருந்த ஊரின் மேல் இருந்த பிரமிப்பு காற்றில் உடையும் நீர்க் குமிழிகளாய் சட சடவென உடைந்து கரைந்தது.
மொத்தமாய் முகம் மாறிவிட, சற்றே கடினப்பட்டு விட்ட குரலில், “ஜேம்ஸ் இப்பவே போய் ஆனி ஐயாவ இங்க கூட்டிட்டு வா…’’ என்றவள், கையில் இருந்த பாத்திரத்தை அப்படியே தொட்டியில் வைத்தாள்.
தனம் ஒன்றும் புரியாமல், “ஏத்தா என்ன ஆச்சு உனக்கு..? ஏன் முகம் எல்லாம் சுணங்கிப் போச்சு…? நான் ஏதாச்சும் தப்பா சொல்லிப் போட்டேனா..?’’ அவர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, ஆனி ஐயா ஜேம்ஸோடு சமயலறைக்குள் வந்தார்.
கூர்மையாய் அவரைப் பார்த்தவள், “ஐயா….நான் நாளைக்கே ஊருக்கு கிளம்புறேன். எங்க எடிட்டர்கிட்ட சொல்லி வேற யாரையாச்சும் ஆர்டிகிள் கண்டினியூ பண்ண அனுப்பி வைக்குறேன்..’’ என்று சொல்ல,
அவர், “ஏம்மா… என்ன ஆச்சு திடீர்னு…. யாரச்சும் உங்களை ஏதாச்சும் சொன்னாங்களா..?’’ என பட படப்பாய் வினவினார்.
ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவள், “ஐயா…. உங்க கிராமத்துல இருந்து உங்க சொந்த முயற்சியில நீங்க ஒரு ராக்கெட்டையே தயார் பண்ணி விண்வெளிக்கு அனுப்பி வச்சாலும்…. பொண்ணுக்கு சக ஜீவியா சம உரிமைக் கொடுக்காத சமூகம் முன்னேறி எந்த பிரயோஜனமும் இல்ல…. பொண்ணுங்களும் சமூக முன்னேற்றத்துல ஆணுக்கு இணையா எழுந்து நிக்கணும்..
பூஜ்யத்துக்கு முன்னாடி இருக்க ஒண்ணைப் போல…அப்படி பொண்ணை இணையா நிக்க வைக்காம நீங்க எத்தனை மாற்றத்தைக் கொண்டு வந்தாலும்….. அதெல்லாம் வெறும் ஜீரோவா மட்டுமா தான் இருக்கும்யா..’’ வள்ளியின் குரலில் வெளிப்பட்ட ஆதங்கத்தில் ஜேம்ஸ் சற்றே மிரண்டுப் போய் பின்னால் நின்றுக் கொண்டான்.
ஆனி ஐயா திகைப்புடன், “நீ இப்படி பேசுற அளவுக்கு இங்க என்னமா நடந்துச்சி..?’’ என வினவ, தனம் குறுக்கிட்டு,
“தப்பு என்னோடதுதேன்…. வள்ளிமா… நம்ம ஜேம்ஸ் தம்பிய சாமான் தொடச்சி வைக்க சொல்லுச்சி… நான் தேன் பொம்பளை செய்யிற வேலையை எல்லாம் நீ ஏந்தாயி ஆம்பளைப் பையனுக்கு வைக்குற…. அப்படின்னு சொல்லிட்டேன்….உடனே அவுக முகம் கூட சுணங்கிப் போச்சு..’’ என வருத்தமாய் மொழிய, ஆனி ஐயா, அந்த வீடே கிடுகிடுத்துப் போகும் அளவிற்கு விழுந்து விழுந்து சிரித்தார்.
வள்ளி அவரைப் புரியாமல் பார்க்கவும், “வள்ளிமா இந்த ஒரு சம்பவத்தை வச்சி எங்க ஒட்டு மொத்த கிராமத்தையும் முடிவு செய்யாதீக. கிழவிக்கு வயசு இப்ப ஐம்பத்தி ஏழு. எட்டு வயசுல இருந்து கரண்டி பிடிச்சி வளந்தவ. சில விசயத்துல அவளை மாத்தவே முடியாதுன்னு விட்டாச்சு.
உதாரணமா எங்க ஊர்ப் பக்கம் எந்த விசேஷம்னாலும் மொதோ பந்தி ஆம்பளைக மட்டும்தேன் உக்கார சொல்லுவாங்க….குலசாமி ராப் பூசையை பொம்பளைங்க கண்ணுல பாக்கக் கூடாது… ஊர்க் கோடி மயானத்துக்கு பொம்பளைக வரக் கூடாது.