வள்ளி விளையாட்டு செய்திகள் பக்கத்தின் கடைசி நேர கட்டமைப்பில் இருந்தாள். அவள் செய்திகளை முடித்ததும், அதை பொறுப்பாசிரியரின் பார்வைக்கு அனுப்பி வைக்க, அவள் எதிர்பார்த்தவாறே அடுத்த இரண்டாம் நிமிடம் ஜோதி அவளை அவர் அறைக்கு வர சொல்லி அழைத்து இருந்தார்.
வள்ளிக்கு அவர் அழைப்பதின் நோக்கம் தெரியும் ஆகையால் உதட்டில் ஒரு முறுவலை தேக்கியபடியே அவர் அறை நோக்கி நடந்தாள்.
உதட்டில் மட்டும் முறுவல் மலந்திருக்க, உள்ளமோ உலைக்கலமாய் கொதித்துக் கொண்டிருந்தது. அவள் அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்ததும்…அவள் சற்று முன் அனுப்பிய செய்தியை தன் மடிக்கணியில் திறந்து வைத்திருந்தவர் அதை அவளை நோக்கி திருப்பி காட்டினார்.
‘என்ன இது என்பதைப் போல’. வள்ளி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அந்த திரையை பார்த்தாள். நேற்று நடந்திருந்த தேசிய அளவிலான கூடைப் பந்துப் போட்டியில், தமிழக அணி முதல் சுற்றிலேயே படு பயங்கர தோல்வியை தழுவி வெளியேறியிருந்தது.
அதற்குண்டான காரணத்தை, ‘தடுக்கிவிட்ட தமிழர்கள்’ என்ற தலைப்பில் கட்டுரையாக்கி இருந்தாள். குழுவில் இருந்த சிறந்த வீரர்கள் தேசிய அணிக்கு தேர்வாகும் நிலையில்…. இவர் அமைச்சரின் மச்சான்…. இவர் பெரிய தொழில்அதிபரின் தமையன்… என முன் பின் எந்த மாநில போட்டியிலும் விளையாடாதவர்களை குழுவில் இணைத்து இருந்தார்கள்.
அதில் கட்டுக்கோப்புடன் இருந்த குழுவின் பயிற்சி சீர்குலைய தேசிய அரங்கில் தமிழகம் தலை குனிந்து வெளியேறும் படி நேர்ந்து இருந்தது. அந்த தோல்விக்கான காரணத்தை….தகுதிகள் இருந்தும் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் மற்றும் கூடைப்பந்து விளையாட்டின் நேர்மையான சில பயிற்சியாளர்களின் ஆவேச பேட்டியோடு வெளிச்சம் போட்டு இருந்தாள்.
வள்ளி மௌனமாய் நிற்கவும், “ஏம்மா எந்த செக்சன் கொடுத்தாலும் ஏதாச்சும் ஒரு வில்லங்கத்த விலை கொடுத்து வாங்கிட்டு வரன்னு தான் உனக்கு ஸ்போர்ட்ஸ் செக்சன் கொடுத்தேன்.
இங்கையாச்சும்…..’சானியாமிர்சா மீண்டும் ஆனார் சாம்பியன்’….. ‘டி 20 உலக கோப்பையை இந்தியா கைப்பற்றுமா..?’ இப்படி ஏதாச்சும் கமர்சியலா எழுதுவன்னு பாத்தா…. இங்கயும் வந்து ஊழல் லஞ்சம் லாவண்யம்னு உன்னோட பாணியிலேயே போறயேமா..?
போனவாட்டி ஆளும் கட்சி எம்.எல்.ஏகிட்ட ஏழரையை இழுத்துட்டு வந்த…. அவன் பாட்டுக்கு வந்து ஆபிஸ் கிளாஸ் டோர் எல்லாம் உடச்சிட்டு போயிட்டான். இந்த வாட்டி அமைச்சர்…ஹும் என்ன ஆகப் போகுதோ…? ஏம்மா இந்த நியூசை அப்படியே தான் போடணுமா…? இல்ல ஏதாச்சும் கொஞ்சம் எடிட் பண்ணி….’’ அவர் அப்படி கேட்கும் போது கணினியை அவர் புறம் திருப்பி வைத்தவள்,
“சிங்கிள் வோர்ட் கூட மாறக் கூடாது சார்…’’ என உறுதியான குரலில் இயம்ப, அவர் தன் கண் கண்ணாடியை கழற்றி துடைக்க தொடங்கினார்.
“சார் நீங்க சொன்னீங்களே கிளாஸ் டோர் உடச்சாங்கன்னு அதுக்கு அப்புறம் நம்ம சர்குலேசன் ரேட் 15 பெர்சென்ட் ரைஸாகி இருக்கு. அதோட எவ்ளோ பிரச்சனை வந்தாலும் நாம உண்மைய மட்டும் தான் சொல்வோம்னு மக்கள் மேல நமக்கு நம்பிக்கை அதிகமாகி இருக்கு. நம்ம தாரக மந்திரம் நியாபகம் இருக்கு இல்ல சார்…’’
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. “ஏன் இல்லாம….? ‘உரக்க சொல்வோம் உண்மையை மட்டும்..’ அதெல்லாம் ரொம்ப நல்லாவே நியாபகம் இருக்கு. ஆனா நீ ரொம்ப உண்மை பேசுறமா…சரி நீ கொடுத்ததை அப்படியே பிரிண்டிங் செக்சன் பாஸ் பண்ணிடுறேன். ஆனா இந்த முறை கிளாஸ் டோர் உடஞ்சா பேசாம வுடன் டோர் ஆர்டர் பண்ணிட வேண்டியது தான்.’’ என அவர் சிரியாமல் சொல்ல, வள்ளியின் முகத்தில் பெரிய புன்னகை மலர்ந்தது.
“டைமிங் காமெடி பின்றீங்க சார்..’’ என உரைத்தவள், “ஓகே சார்…. நாளைக்கு நியூஸ்க்கு இன்னைக்கு கொஞ்சம் அவுட் பிரேம் ரெடி பண்ணனும். நான் வறேன்.’’ என்று விடை பெற்று வெளியேற, அதே நேரம் அறைக்குள் நுழைய முயன்ற ஜேம்ஷின் மீது மோதி நின்றாள்.
“ஐயோ… சாரிங்க… சாரிங்க…’’ என்று அவன் பதட்டம் கொள்ள, அவனை முறைத்துப் பார்த்தவள், ‘ஜேம்ஸ் ரிலாக்ஸ் எதுக்கு இப்போ ஓவர் ரியாக்ட் பண்ணிட்டு இருக்கீங்க…. ஜஸ்ட் நாம தெரியாம மோதிக்கிட்டோம். பாக்கப் போனா போர்ஸ்சா டோர் ஓபன் பண்ணி வந்த நான் தான் உங்ககிட்ட சாரி கேக்கணும்..’’ என சொல்ல, ஜேம்ஸ் அவளுக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் நின்றான்.
அவன் சங்கடமாய் நிற்பதைக் கண்டவள், தலையை குலுக்கி விட்டு, “உள்ள போங்க..’’ என்று விட்டு தன் இருக்கையை நோக்கி நடந்தாள்.
கடந்த ஒரு வருடமாய் ஜேம்ஸ் தன் பின்னால் சுற்றிக் கொண்டு இருக்கிறான் என்பதை வள்ளி அறிவாள். அவளைப் பொறுத்தவரை ‘காதல்… கல்யாணம்… குழந்தை குடும்பம்…’ இது அத்தனையும் சுயநல மனிதனின் கோட்பாடுகளாய் தோன்றின.
என்ன தான் ஜேம்ஸ் அவளை சுற்றி சுற்றி வந்தாலும், அவள் நிமிர்ந்து பார்த்தாலே, ஏதோ அவன் முகத்தில் ஓங்கி அறைந்ததைப் போல பதட்டப்படுவான். சில நேரங்களில் பணியின் அழுத்தத்தில் இருக்கும் பொழுது, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்…. கேண்டின் பையன் அவள் கேபின் தேடி வந்து காபி கொடுத்துவிட்டு செல்வான்.
அவளுக்கு தெரியும் மணிக்கு ஒரு முறை ஏதேனும் சாக்கிட்டு தன் கேபினைக் கடந்து போகும் ஜேம்ஸ் தான் இந்த காபியின் காரணகர்த்தா என்று. ஆனால் அவனை தேடி சென்று நேரடியாய் நன்றி சொல்ல முடியாது.
அவனை தேடி சென்றாலே…வராத அழைப்புக்கு செல்லிடைபேசியை காதில் வைப்பவன், ‘இதோ டூ மினிட்ஸ் சார்… வந்துட்டே இருக்கேன்..’’ என்று அங்கிருந்து நழுவி ஓடி விடுவான்.
அல்லது ஏதோ போர்களத்துக்கு செல்லும் வீரனின் முக பாவத்துடன், “சொல்லுங்க மேம்… எதாச்சும் நியூஸ் கவர் பண்ண வரணுமா..? பட் உங்க டிவிசன் கேமரா மேன் செல்வம் ஆச்சே…’’ என்று பணி பற்றி பேசி அவளை வந்த வழியே திரும்பி நடக்க வைத்து விடுவான்.
சில சமயங்களில் அதையும் மீறி, “நீங்க தான் காபிக்கு ஆர்டர் கொடுத்தீங்களா ஜேம்ஸ்..?’’ என்று கேட்டு இருக்கிறாள்.
அதற்கு, “நோ மேம்…. கேன்டீன் பாய்…. வசந்தி மேம்க்கு காபி கொண்டு வந்தான். பட் அவங்க இப்ப தான் ஏதோ மீட்டிங்னு எடிட்டர் ரூமுக்கு போனாங்க. நம்ம ஆபிஸ்ல அடிக்கடி காபி குடிக்கிற ஒரே ஆள் நீங்க தான்…. சோ அதான் உங்களுக்கு வேணுமான்னு கேட்டு கொடுக்க சொன்னேன்.’’ என்று நீளமாய் ஒரு பதிலை சொல்லி அவள் வாயையும் அடைத்து விடுவான்.
நாளைய பணிக்குண்டான திட்டமிடலை முடித்தவள், வேறு ஒரு நாளிதலுக்கு பெண்ணியம் பற்றி எழுதும் தொடர் ஒன்றிற்கான சிந்தனையில் இருக்கும் பொழுது, சினிமா பிரிவில் பணியாற்றும் லேகா, வந்து அவள் தவத்தை கலைத்தாள்.
“ஹாய்… வள்ளி… சின்ன ஹெல்ப் யா…. இந்த பென்ட்ரைவ்ல இருக்க போட்டோஸ் எல்லாம் காபி பண்ணி என் மெயில் ஐ.டிக்கு அனுப்புமா. என் சிஸ்டம் வேற கால நேரம் தெரியாம ஹேங் ஆகும். பொறுப்ஸ் வேற பெரிய பருப்ஸ் மாதிரி கத்திட்டு இருக்கு… இன்னும் உன் பேஜ் ரெடி ஆகலையான்னு..’’ என்று பொறுமினாள்.
முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் அந்த பென்ட்ரைவை பெற்றுக் கொண்டவள், “ஏன் உங்க கேமரா மேன் சிஸ்டம் என்ன ஆச்சு.’’ என எதிர்க் கேள்வி கேட்டாள்.
“அந்தக் கருவாயன் அவன் சிஸ்டத்தை ஏதோ பாஸ் வோர்ட் போட்டு லாக் பண்ணி இருக்கான்யா. ஏதோ முக்கியமான இஸ்யூ கவர் பண்ண நம்ம ஹோல் கேமரா டீமோட வெளிய போய் இருக்கான். சிஸ்டம் தானே லாக் பண்ண முடியும். அவன் பென்ட்ரைவ் அனாதையா சிஸ்டம்ல தொங்கிட்டு இருந்தது. நான் சுட்டுட்டு வந்துட்டேன்…’’
லேகா ராக பாவத்தோடு பேசும் போது கேட்க இனிமையாய் இருக்கும். அதோடு பத்திரிகையின் சினிமா பிரிவில் பணியாற்றுபவள் என்பதால் இயல்பாகவே அவளுக்கு அங்கு ரசிகர்கள் ஏராளம்.
ஆனால் வள்ளி அனைவரிடமும் ஒரே முகத்துடன் பழகும் தன்மை கொண்டவள். நெருங்கிய நட்பு என்று அவளுக்கு அந்த அலுவலகத்தில் அவன் பணியை தவிர வேற யாரும் இலர்.
லேகா சுட்டுக் கொண்டு வந்திருந்த பென்ட்ரைவ் ஜேம்ஸ் உடையது. பென்ட்ரைவின் ஜென்ரல் போல்டரில் லேகா கேட்ட புகைப்படங்கள் இருக்க, அதை லேகாவின் மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்தாள்.
கொடுத்த பென் ட்ரைவை திருப்ப பெரும் எண்ணம் சற்றும் இல்லாமல், “தேங்க்ஸ் வள்ளி…! நான் பூரணிக்கு போன் பண்ணி ஆர்டிகிள் கம்ப்ளீட் பண்ணி அனுப்ப சொல்றேன்.’’ என்றவள் அங்கிருந்து விரைய, வள்ளி தன் வழக்கமான தலை குலுக்கலோடு அவளை அனுப்பி விட்டு அந்த பென் ட்ரைவை தன்னுடைய கணினியில் இருந்து நீக்க முனைந்தாள்.
அந்த நேரம், வி.ஜே என்ற போல்டர் அவள் கவனத்தை கவர்ந்தது. அதை திறக்க முயற்சிக்க, அதுவோ கடவு சொல்லைக் கேட்டது. ஏதேதோ முயன்று பார்த்தவள் ஒரு அனுமானத்தில் தன் பெயரை ஜேம்ஷின் பெயரோடு சேர்த்து அடிக்க, என்ன அதிசயம் அலிபாபா குகையைப் போல அந்த கோப்பு திறந்தது.
அதன் உள்ளே…. நூற்றுக் கணக்கான பாவங்களில், சிந்தைகளில், புன்னகைகளில், கோபங்களில்… வள்ளி…! வள்ளி…! வள்ளி…! மட்டுமே. அவனுடைய புகைப்படக் கலைத் திறமையை பயன்படுத்தி வள்ளியை வித விதமாய் புகைப்படம் எடுத்து வைத்திருந்தான்.
அந்த புகைப்படங்கள் அத்தனையும் ஒன்று அவர்கள் அலுவலக கூட்டங்களில் எடுக்கப்பட்டிருந்தது. அல்லது வள்ளி அநீதிக்கு எதிராய் குரல் கொடுக்கும் கூட்டங்களில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவளை மட்டும் தனித்து காட்டும் படி புகைப்படக் கோணத்தை அமைத்து இருந்தான்.
அதோடு அவள் இதுவரை எழுதி இருந்த அத்தனை செய்திகளையும் மிகக் கவனமாய் சேகரித்து வைத்திருந்தான். என்னவோ அந்த புகைப்படத்தையும், செய்திகளையும் பார்க்க பார்க்க அவளுக்குள் அந்தக் கணமே அவனுடன் பேச வேண்டும் போல தோன்ற, தன் கணினியை அணைத்தவள், அவனை தேடிக் கொண்டு புறப்பட்டாள்.
வெளியே சென்ற வேலை முடிந்து மின் தூக்கிக்காய் அலுவலகத்தின் நுழைவாயிலில் நின்றுக் கொண்டிருந்தவனைக் கண்டவள், “ஹாய் ஜேம்ஸ்… உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே..’’ என்று அவன் முன் சென்று நிற்க அவனோ அவளை திகைத்துப் பார்த்தான்.
என்ன சொல்லி தப்பிக்கலாம் என்பதை போல அவன் யோசிக்க, அவனின் என்ன ஓட்டம் அறிந்தவள், “டேய்…! என்ன சொல்லி எஸ் ஆகலாம்னு தான யோசிக்கிற…. அதெல்லாம் ஒரு ஆணியும் புடுங்க முடியாது. ஒழுங்கா கிளம்பு..’’ என்று முன்னே நடக்க, ஜேம்ஸ் பலியாடு போல அவளைத் தொடர்ந்து சென்றான்.
அவர்கள் அலுவலகத்தின் வண்டிகள் நிறுத்தும் இடத்தை அடைய, ஜேம்ஸ் தன்னுடைய ஸ்கூட்டி பெப்பை நோக்கி நடக்க, அவனை ஏதோ வேற்று கிரக ஜந்துவைப் போல பார்த்தவள், “இதா உன் வண்டி….’’ என்று அதிர்ச்சியை கண்களில் காட்டினாள்.
“ஓகே…. நாம ஒரே வண்டியில போலாம். நீயே என் வண்டியை ஓட்டு.’’ என வண்டியின் சாவியை அவன் கையில் கொடுக்க, “ஐயோ எனக்கு ஆர்.யி எல்லாம் ஓட்ட கொஞ்சம் கஷ்டம்..’’ என தயங்கி நின்றான்.
வழக்கம் போல தன் தலையை குலுக்கியவள், “உன்னால எனக்கு தான் ரொம்ப கஷ்டம்… நீயெல்லாம் ஒரு கேமரா மேன். சரி சரி நானே ஓட்றேன்…. பின்னாடி உக்காரு..’’ சொன்னவள் தன் வண்டியை உசுப்ப,ஜேம்ஸ் அவளின் பின்னால் தயங்கி நின்றான்.
அவனைப் பார்த்து முறைத்தவள், “வண்டி வண்டியா என்னை போட்டோ எடுத்து வச்சி இருக்க…. என் வண்டி பின்னாடி உக்கார மாட்டியா..?’’ என உஷ்ணமாய் கேட்க, அடுத்த நொடி மறுப்பேதும் சொல்லாமல் அவள் பின்னால் முடிந்த அளவு இடைவெளி விட்டு அமர்ந்தான்.
அவன் மேல் இருந்த கோபத்தை அவள் வண்டியின் மீது காட்ட, வண்டி மணிக்கு என்பதுகிலோ மீட்டார் வேகத்தில் பறந்தது. அவள் தோள்களை முடிந்த அளவு அழுந்தப் பிடித்துக் கொண்டவனோ, “ஏங்க கொஞ்சம் மெதுவா போங்க…. எனக்கு பயமா இருக்கு..’’ என்று அவள் காதுகளில் உரைத்தான்.
அது அவளுக்கு இன்னும் ஆனந்தத்தைக் கொடுத்தது. கொஞ்சம் கூட வேகத்தைக் குறைக்காமல் அதே வேகத்தில் வண்டியை ஒட்டியவள், வண்டியை ஒரு நடுத்தர உணவகத்தின் முன்பு நிறுத்தினாள்.
அவள் வண்டியை நிறுத்திய பின்பும் ஜேம்ஸ் இறங்காமல் பயத்தில் பல்லியைப் போல அவள் முதுகோடு ஒட்டிக் கொண்டிருந்தான். அவள் மெதுவாய் அவன் கைகளில் தட்ட, தன் உணர்வு பெற்றவன், மெதுவாய் இறங்கி நின்றான்.
“வாங்க போய் சாப்டுகிட்டே பேசலாம்..’’ என்றவள் தன் தலைக் கவசத்தை நீக்கி வண்டியோடு பிணைத்து விட்டு உள்ளே நடந்தாள். ஜேம்ஸ் வள்ளி வழமையாய் செய்வதைப் போல தன் தலையை குலுக்கிக் கொண்டவன் அவள் பின்னோடு நடந்தான்.
இருவரும் சென்று எதிர் எதிராய் அமர்ந்ததும், வள்ளி இருவருக்கும் சேர்ந்து உணவு வகைகளை சொல்லி முடித்தும் கூட ஜேம்ஸ் அருகில் இருந்த கண்ணாடி நீர்க் குவளையில் தன் மொத்தக் கவனத்தையும் குவித்திருக்க,
“ஜேம்ஸ் போதும். அது ஆர்டினரி பைபர் கிளாஸ் தான். ஏதோ இண்டியான ஜோன்ஸ் கிறிஸ்டல் மண்டையோட்டை பாக்குற மாதிரி அதை ஆராய்ச்சி பண்ணி பாத்துட்டு இருக்கீங்க..’’ என்று அவன் கவனம் கலைக்க, ஜேம்ஸ் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“என்ன ஜேம்ஸ்… என்ன லவ் பண்றீங்களா..?’’ அவளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் பார்வையை அங்கும் இங்கும் அலை பாய விட,
அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தவள், “என் கண்ணை பாருங்க ஜேம்ஸ்… உங்களுக்கு என்னை பிடிச்சி இருக்கா..?’’
அவள் மறுபடி திடமாக கேட்கவும், “அது வந்து…. வந்து….’’ ஜேம்ஸ் திணறிக் கொண்டிருக்கும் போதே, “வந்து… போயி…. சொல்றதுக்கு வேற ஒன்னும் இல்லையா…?’’
வள்ளி அப்படிக் கேட்டதும், அவளை நிமிர்ந்து பார்த்தவன், “அது வள்ளி… உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க தைரியம். துணிச்சல். எதையும் தெளிவா பேசுறது. இப்படி எல்லாமே பிடிக்கும். நீங்க ஒரு பர்பெக்ட் ஜர்னலிஸ்ட். நான் உங்களை லவ் பண்றேனா தெரியாது. பட் உங்க பெரிய பேன். அதான் உங்க போட்டோ ஆர்டிகிள் எல்லாமே கலெக்ட் பண்ணி வச்சி இருந்தேன்..’’
அந்த நான்கு வாக்கியங்களை பேசி முடிப்பதற்குள் ஜேம்சிற்கு நாற்பது தடவை திக்கியது. அதோடு உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருக்க, அவனின் அந்த செயல் அவளுக்கு ஏனோ ஏற்புடையதாய் இல்லை.
“ஜேம்ஸ்…. எப்பவும் யார்கிட்ட பேசினாலும் இப்படித் தான் திக்குமா…. நீங்க எடிட்டர்கிட்ட போல்ட்டா பேசுறதை எல்லாம் நான் பாத்து இருக்கேனே… ஆர் யூ ஆல்ரைட்…’’ அவள் சற்றே பதட்டத்துடன் கேட்டாள்.
சற்றே தயங்கி தயங்கி ஜேம்ஸ், “இல்ல ஸ்கூல் டேஸ்ல இருந்தே பொண்ணுங்ககிட்ட பேச அளவுக்கு அதிகமா பயப்படுவேன். இப்படி தான் வேர்த்து கொட்டும். நீங்க ஒன்னும் டென்சன் ஆகாதீங்க. நானே கொஞ்ச நேரத்துல சரி ஆயிடுவேன்..’’
ஏனோ அவனின் அந்த நிலையை கண்டவளுக்கு, தான் ஒரு பெண் என்ற எண்ணம் போய் சக மனிதன் தன்னைக் கண்டு அஞ்சும் எண்ணமே மனதில் பதிய,
“ஐயோ ஜேம்ஸ்… நான் என்ன பூதமா..பிசாசா… நல்லாப் பாருங்க…. நானும் உங்களை மாதிரி மனுசப் பிறவி தான்..’’ என்று சொல்லிக் கொண்டே எழுந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்… “இப்ப பயம் போச்சா…?’’ என்றுக் கேட்டபடி.
ஜேம்ஸ் அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, யாரோ ஒருவன் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான்.
வந்தவன் வள்ளியின் புறம் திரும்பி அமர்ந்து, “எனக்கும் அப்படித் தான் மேடம்… உங்ககிட்ட ஏதேதோ பேசணும்னு நினைக்கிறேன். ஆனா எல்லாமே தொண்டைக் குழியிலேயே நிக்குது. ப்ளீஸ் எனக்கு இப்படி ஏதாச்சும் ஹெல்ப் பண்ணீங்கன்னா உங்ககிட்ட பேச வசதியா இருக்கும்..’’ என்று அழுத்தமாய் பேச,
“யாருடா இவன்..?’’ எனபதைப் போல வள்ளி அவனைப் பார்க்க, ஜேம்ஸ் நொடியில் கோபம் கொண்டு இருக்கையில் இருந்து எழுந்தான்.
“ஹெலோ… யாருங்க நீங்க….? நாங்க யாருன்னு தெரியுமா…? என்ன வம்பு பண்ண வந்து இருக்கீங்களா..?’’ விட்டால் வந்த புதியவனை அடித்துவிடுபவன் போல பாய,
அந்தப் புதியவனோ ஜேம்சை கொஞ்சமும் மதிக்காமல், வள்ளியை பார்த்தபடி, “நான் வில்லாளன்…. இதோ உங்க எதிர்ல உக்காந்து இருக்காங்களே அந்த வள்ளி மேடத்தோட புருஷன்…. உங்களை விட அவங்க கையைப் பிடிக்க எல்லாத் தகுதியும் எனக்கு இன்னும் இருக்குன்னு நம்புறேன். ஏன்னா எங்க கல்யாணம் இன்னும் காலாவதி ஆகலை…. என்ன மேடம் நான் சொல்றது சரியா..?’’
வில்லன் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்ட தொனியில் வள்ளி அவனை ஆழ்ந்துப் பார்க்க, ஜேம்ஸ் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் யார்ப் பார்வையையும் மதிக்காமல் வில்லன் அவளைக் காதல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.