வில் – 4

பறையும் பரதமும் கலை…. அதிலும் 

பார்ப்பது ஜாதி… யார்ப் பிழை…?

ஐந்து வருடங்களுக்கு பிறகு…..

“ டன்…. டன் டன்…. டண்டண்டன்…..

டன் டன் டன் டண்டண்டன்……

டன் டக்கர டக்கர…டக்கர…டக்கர…

டன் டக்கர டக்கர டக்கர…..டக்கர…’’ 

வள்ளியின் கைகளில் இருந்த பறை உச்சஸ்தாயிலில் ஒலித்துக் கொண்டிருக்க, காலில் இருந்த சலங்கைகளும் ஒரே தாள லயத்தில் இயங்க, வள்ளி அற்புதமாய் தப்படித்துக் கொண்டிருந்தாள். 

அவளுடன் மேலும் ஐந்து பெண்கள். அணிக்கு மூவராய் நின்று தாள லயம் தப்பாத தப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். 

சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேர் நாடி நரம்பையும் முறுக்கேற்றும் விசை கொண்ட இசை, சில பல சிறுவர்களை வீதியில் ஆட வைத்துக் கொண்டிருந்தது. 

சிலர் கைகளிலும், கால்களிலும் தாளம் போட்டு துள்ளாட்டம் போட துடித்த தங்கள் உடலை அடக்கிக் கொண்டிருந்தனர். 

இசை சற்றே ஓய்ந்த நேரத்தில், சசியின் கம்பீரக் குரலில் பாடல் ஒலிக்க தொடங்கியது. 

“ஆடுறான்…. ஆடுறான் ஆட்டத்துல அட 

அடங்காத போதையில் வீட்டுக்குள்ள…அத 

அரட்டி கேக்க இங்க நாதியில்ல…ஆத்தி 

அரசே விக்குது சாராயம் வீதியில…..

அல்லும் பகலும்….உழைச்ச பணம் 

அட அள்ளி முழுங்குது சாராயம்….

அடிச்சி அடிச்சி சரக்கை அடிச்சி 

அம்புட்டு பயலுக்கு ஈரலும் போச்சு.  

                     (ஆடுறான் ஆடுறான்..)

பாடலின் வரிகளின் பாவத்தை முகத்தில் சுமந்த படி அவர்கள் வெகு வேகமாய் ஆடிக் கொண்டிருக்க, காவல் துறை தன் ஏவல் பணியை நிறைவேற்ற அங்கு வந்து சேர்ந்தது. 

சசிக்கு பார்வை இல்லாததால் அவர் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க, வள்ளியுடன் சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்த மற்ற ஐந்து பெண்களும் தற்காலிகமாய் தங்கள் நடனத்தை நிறுத்தினர். 

வள்ளி தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்க, வந்திருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், “ஹலோ… இப்படி நடு ரோட்ல டாஸ்மாக் வாசல்ல டான்ஸ் ஆட உங்களுக்கு யார் பெர்மிசன் கொடுத்தது. இது கவர்மென்ட்க்கு அகைன்ஸ்ட்டான ஆக்டிவிட்டி…. உங்களை எல்லாம் அரஸ் பண்ணி ஜெயில்ல போடலாம் தெரியுமா…?’’ எனக் கேட்க, 

வள்ளி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், “ஒரு பாட்டில் சரக்குக்கு மேல பத்து ரூபா விலை வச்சி காலங்காத்தால ஆறு மணியில இருந்து அந்த கடைக்காரன் வித்துட்டு இருக்கான்… அது உங்களுக்கு கண்ணு தெரியல… குடிச்சா உன் உடம்பும் வீடும் நாசமா போகும்டான்னு விழிப்புணர்வு கொடுக்க டான்ஸ் ஆடுற நாங்க அரசுக்கு எதிரானவங்களா…. சார் மொதல்ல அங்க கேள்வி கேட்டுட்டு அப்புறம் இங்க வாங்க…’’  

வள்ளி என்ன தான் மூச்சைப் பிடித்துக் கொண்டு பேசினாலும், அடித்துப் பழகிய கரங்கள் லாவகாய் தப்பை இசைக்க, வெகு நாட்களாய் ஆடிப் பழகி இருந்த கால்கள், தாளம் தப்பாது ஆடிக் கொண்டிருந்தன. அவள் தைரியத்தை கண்ட பெண்கள் தாங்களும் தங்கள் நடனத்தை தொடர்ந்தனர். 

“திவாகர்…. இவங்களை எல்லாம் கண்ட்ரோல்ல எடுங்க. நாம பேசி கேக்குற ஆளுங்களா தெரியல..’’ அவர் முறைப்புடன் தெரிவிக்க, இரு பெண் காவலர்கள் வந்து அவர்கள் குழுவை அங்கிருந்த காவல் துறை வாகனத்தில் ஏற்றினர். 

அவர்கள் சசியை தொட நெருங்கியதும், “மா… போதும் போலிஸ் வந்தாச்சு…’’ என வள்ளி குரல் கொடுக்க அதன் பிறகே சசி தான் பாடுவதை நிறுத்தினார். அவர் காவல் துறை வாகனத்தில் ஏற உதவிய வள்ளி அதன் பிறகே தான் ஏறி அமர்ந்தாள். 

அவர்கள்  காவல் நிலையத்தை அடைந்து சரியாய் இருபது நிமிடங்களில் எல்லாம், கனல் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜோதிமணி அங்கு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தார். 

அவரைக் கண்டதும் மூத்த அதிகாரி மரியாதை நிமித்தமாய் எழுந்து நின்று கை குலுக்க, அதை ஏற்றுக் கொண்டவர்,  “சார் வள்ளின்னு…’’ அவர் விசாரிக்க தொடங்கியதுமே,   

“ஆமா சார் காலையில டாஸ்மாக் வாசல்ல ஆறு பொண்ணுங்க டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க…. அதுக்குள்ள அந்த நியூஸ் மீடியாவுக்கு வந்துடுச்சா… நாங்க என்ன சார் பண்றது. கவர்மென்ட் என்ன சொல்லுதோ அதை தானே சார் நாங்க செய்ய முடியும். அந்தப் பொண்ணுங்ககிட்ட பேட்டி ஏதாச்சும் எடுக்கணுமா சார்….’’ அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, இடைமறித்த ஜோதி,  

“சார்… அப்படிலாம் ஒன்னும் இல்ல. அந்த வள்ளி வேற யாரும் இல்ல. எங்க கனல் பத்திரிகையில வேலை செய்யிற பத்திரிக்கை நிருபர். அவங்க புனைப் பெயர் விக்யா. கேள்விப்பட்டு இருப்பீங்கன்னு நம்புறேன், கனல் பத்திரிகை தமிழ்ல உருவாகும் போது…. உருவாக்க குழுவுல இருந்த அஞ்சி பேர்ல இருந்த ஒரே பொண்ணு…’’ அவர் அவளைப் பத்திப் பெருமையாய் பேசிக் கொண்டிருக்க, பெண் காவலர் ஒருவர் அவர்கள் குழு முழுவதையும் சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்து அமர வைத்து இருந்தார். 

“சார்… என்ன சார் சொல்றீங்க… இளைய தலைமுறையில் அரசியல் தாக்கம்…தொடர் எழுதின விக்யா இவங்க தானா…? நான் அவங்க பெரிய ரசிகன் சார்..’’ என்று  அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,“அங்கிள் பேசிட்டீங்களா…. நாங்க போலாமா..?’’ எனக் கேட்டபடி வள்ளி வந்து நின்றாள்.

‘The fire’ என்ற தேசிய செய்தி நாளிதழ் தமிழகத்தில் தன் கிளை தொடங்க முனைந்த போது, அதன் உருவாக்க குழுவில் இருந்த ஒரே பெண் வள்ளி. அவளின் மீது ஜோதிக்கு அளப்பரிய அன்பும், மரியாதையும் உண்டு. 

ஆனால் அவளின் சில முரட்டு பிடிவாதங்கள் பல சமயம் அவருக்கு எரிச்சலை தோற்றுவித்துவிடும். இந்த ஒரு மாதத்தில் மட்டும் அவளை காவல் நிலையத்திற்கு வந்து மீட்பது இது ஏழாவது முறை.

ஜோதியும் எவ்வளவோ முறை அவளுக்கு புரிய வைக்க முயன்று இருக்கிறார். தெருவில் இறங்கி ஆடுவதை விட, நீ ஒரு உண்மை தொடர் எழுதி மதுவிற்கு எதிரான உன் கருத்துகளை பதிவு செய் என.

ஆனால் குடிக்க வருபவனில் மூன்றில் ஒருவன் படிக்காத பாமரன். அவனுக்கு அவன்மொழியில் தான் அதனுடைய தீங்கை, அவன் மது அருந்தும் இடம் சென்றே உரக்க சொல்வேன் என்ற அவளின் அந்தப் பாணியை அவரால் என்ன முயன்றும் நிறுத்த முடியவில்லை. 

வள்ளி எப்பொழுது கைதானாலும், ஜோதிக்கு உடனடி தகவல் கிடைக்க காரணம், அவர்கள் பத்திரிக்கையில் புகைப்படக் கலைஞனாய் பணி புரியும் ஜேம்ஸ் தான்.  

வள்ளி எங்கெல்லாம் தப்பாட்டம் ஆட சென்றாலும், அவள் பின்னோடு சென்று அவளை தன் புகைப்படக் கருவியில் சிறை எடுப்பதில் விருப்பம் கொண்டவன். அதோடு அவள் சிறை பிடிக்கப்பட்ட அடுத்த நொடி, பொறுப்பாய் அதை தங்கள் பொறுப்பாசிரியருக்கு வத்தி வைப்பதிலும் வல்லவன். 

வள்ளி பெரும்பாலும் இந்த கைது படலங்களை எல்லாம் கண்டு அஞ்சுவதில்லை. மிஞ்சிப் போனால் ஒரு நாள் காவலில் வைப்பார்கள். அவளின் வழக்கறிஞர் வந்து ‘இனி இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்’ என உறுதி அளித்தால் விட்டு விடுவார்கள். 

ஜோதி அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, சற்று முன் அவளை காவலில் எடுத்து வந்திருந்த அதிகாரி அவளை மரியாதையாய் பார்த்துக் கொண்டிருந்தார். 

வள்ளி கடந்துப் போன இரண்டாண்டுகளில் எத்தனையோ கைது படலத்தை பார்த்துவிட்டவள் தான். ஆனால் அவள் அலுவலகத்திற்கு சொல்லாமல் கொள்ளாமல் இருநாள் விடுப்பு எடுத்தால் தேங்கும் அவள் பணிகளை எண்ணியே ஜோதி அவள் கைது விஷயம் கேள்விப்பட்ட அடுத்த நொடி அவளை மீட்டுச் செல்ல அங்கு வந்து உதிப்பார். 

என்ன சொன்னாலும் அவள் கேட்கப் போவதில்லை என்று உணர்ந்தவர், “சீக்கிரம் ஆபிஸ் வந்து சேரு வள்ளி..’’ என அவளுக்கு ஆணை பிறப்பித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். 

அந்த மூத்த காவல் அதிகாரியோ இவளிடம் மிகவும் பணிவாய் பேசி அவளை வழி அனுப்பி வைத்தார். வள்ளி காவல் நிலையத்திற்கு எதிரே இருந்த பேருந்து நிலையத்தை அடைந்து, தங்கள் ஹவுசிங் போர்ட் காலனியை வந்து அடைவதற்குள் நேரம் காலை பத்தை நெருங்கி இருந்தது. 

பள்ளி விடுமுறை ஆகையால் தெருவில் நின்று பம்பரம் விட்டுக் கொண்டிருந்த சிறுவர்கள் இவளைக் கண்டு உற்சாகமாய், “வள்ளிக்கா’’ எனக் கூவ,  அவர்களைப் போல தானும் ஆர்பரித்து அவர்களை நோக்கி கை அசைத்தவள், அப்புறம் பாக்கலாம் என சைகையில் தெரிவித்து விட்டு, D பிளாக்கின் நான்காம் தளத்தில் இருந்த தங்கள் வீட்டை நோக்கி சசியோடு பொறுமையாய் மாடிப்படி ஏறினாள். 

மஞ்சள் நிற புடவையின் கீழ், பேன்ட் அணிந்து, தப்பாட எதுவாய் இருந்த உடைகளை தன் அறைக்குள் புகுந்த அடுத்த நொடி மாற்றி இருந்தாள். 

சாயம் போன ஊதா நிற ஜீன்சும், வெளிர் நிற காட்டன் முழுக்கை சட்டையும் அணிந்து வெளியே வந்தவள், கூந்தலை கோதக் கூட நேரமின்றி அப்படியே போனிடைல் ஆக்கி இருந்தாள். 

சசி வரவேற்ப்பறையில் இருந்த படுக்கையில் அமர்ந்திருக்க, “அம்மா….மாலா அக்காகிட்ட இட்லி கொடுத்துவிட சொல்றேன். நீங்க சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. மதியம் சாதம் மட்டும் வச்சா போதும். நான் வரும் போது மாலா அக்கா கடையில கொழம்பு கூட்டு எல்லாம் வாங்கிட்டு வந்துடுறேன். நான் கேன்டீன்ல சாப்டுக்கிறேன்… பத்திரமா இருங்க…’’ என்ற படி தோள் பையையும், வண்டி சாவியையும், கண் கண்ணாடியையும் எடுத்துக் கொண்டவள், வேகமாய் படிகளில் இறங்க, “பத்திரமா பாத்து போயிட்டு வா வள்ளி…’’ என்ற சசியின் குரல் படிகளில் தேய்ந்து மறைந்தது. 

கீழே புங்க மரத்தின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த தன் வண்டியை நெருங்கியவள், அதோடு இணைக்கப்பட்டிருந்த தலைக் கவசத்தை நீக்கி, கண்களில் கண்ணாடியை அணிந்த பின் தலைக் கவசத்தை தலையில் பொருத்தினாள். 

தோளின் இருபுறமும் பையை மாட்டியவள், கையுறைகளை அணிந்த பின் அரியணை ஏறும் மகாராணியின் தோரணையோடு, அதன் மீது அமர்ந்தவள், வண்டியின் என்ஜினை உசுப்ப, அது நொடிக்கு நான் நூறு கிலோமீட்டர் தாவ தயார் என்ற ரீதியில் உறுமியது. 

அவள் கியரை முறுக்கிய அடுத்த நொடி, வாயுவின் வேகத்தோடு சென்னையின் தெருக்களில் பயணிக்க தொடங்கினாள் வள்ளி. அவள் பயணித்த வாகனம் அப்படி. ராயல் என்பீல்ட் தன்டர் பேர்ட். இன்றைய இளைஞர்களின் கனவு வாகனம். அவளுக்கு என்னவோ வேகமாய் சாலைகளில் பயணிப்பது பிடிக்கும். 

முகத்தில் வந்து அறையும் காற்றின் வருடலில் தன்னையே மறந்து பயணிக்க பிடிக்கும். எப்போதாவது அரிதாய் ஓய்வெடுக்கும் நாட்களில் காதில் இளையராஜா இசை வழிய தன் வண்டியை எடுத்துக் கொண்டு நீண்ட பயணம் சென்று திரும்ப பிடிக்கும். 

மூன்று வருடாய் சம்பாதித்துக் கொண்டிருகிறாள். ஆனாலும் அவள் தனக்கென வாங்கிக் கொண்ட ஒரே சொத்து இந்த வண்டி தான். அதுவுமே மாத தவணை கட்டிக் கொண்டிருகிறாள். 

அலுவலகம் வந்து விட, வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி பூட்டியவள், தலைக் கவசத்தை அதன் மீது வைத்து விட்டு, கையுறையையும், கண்ணாடியையும் கழட்டிய படியே, மின் தூக்கிக்க்கு காத்திருக்காமல் படிகளில் ஏறக் குறைய ஓடினாள். 

மூன்றாம் தளத்தை அடைந்ததும், முகத்தில் தானாக ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக் கொள்ள. அந்தக் கண்ணாடிக் கதவின் அறையைத் திறந்தவள், நிமிர்வாக உள்ளே நுழைய அங்கிருந்த சல சலப்பு சத்தம் நொடியில் அடங்கியது. 

அனைவரும் அவளுக்கு பணிவாய் காலை வணக்கம் தெரிவிக்க, ஒரு தலை அசைப்போடு அதை ஏற்றுக் கொண்டவள், தன்னுடைய தனிப்பட்ட அறைக்குள் நுழைந்ததும், பணியில் மூழ்கிப் போனாள். 

அதே நேரம் தன் வீட்டின் பால்கனியில் அமர்ந்து செய்தித் தாளை வாசித்துக் கொண்டிருந்த வில்லன்… மூன்றாம் பக்கத்தில் ‘நூதன முறையில் மதுவிற்கு எதிராய் போராடும் இளம் பெண்’ என்ற தலைப்பில் வெளிவந்து இருந்த செய்தியையும் அதில் புகைப்படமாய் தப்போடு ஆடிக் கொண்டிருந்த வள்ளியையும் கண்டவனின் உள்ளத்தில் எண்ணற்ற கேள்விகள். 

சற்று நேரம் புகைப்படத்தில் இருந்து அவனால் கண்களை திருப்பவே முடியவில்லை. அதே நேரம் அவனின் அம்மா, “வில்லா இந்த பொண்ணு போட்டோ பாருடா…இன்னும் எத்தனை நாளைக்கு தனியா இருப்ப..’’ என்று அவன் முன் வந்து நிற்க, 

“மா… நான் நைட்டு சென்னை கிளம்புறேன். எப்போ திரும்பி வருவேன்னு சொல்ல முடியாது. அப்பாவை கொஞ்சம் மீன் பண்ணையை பார்த்துக்க சொல்லுங்க.’’ என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான். 

“நான் என்ன சொல்றேன். இவன் என்ன செஞ்சிட்டு போறான்.” என்று அவன் தாய் சுந்தரி மனதிற்குள் நொந்து போனார். பாவம் அவர் அறியவில்லை, மகன் மீண்டும் ஒரு பெண் பார்க்கும் படலத்திற்கு தான் தயாராகி செல்கிறான் என்பதை.  

வில் நாண் ஏறும்.