வில்லனின் காதலி 1 6777 வில் – 1 அது இது எது என்று நீ எத்தனை பிரித்து வைத்தாலும் அடிப்படையில் நான் மனிதன். பள்ளி வகுப்பறையில், கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த வள்ளியம்மை ஜன்னலுக்கு வெளியே தெரிந்த வானத்தை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் அமர்ந்திருந்த அவளது தோழிகள் அவளை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தனர். புவனா, ரித்திகாவின் உள்ளங்கையை பிடித்துக் கீறினாள். ‘பேசு’ என ஜாடை காட்டியபடி. ரித்திகாவோ ‘நான் மாட்டேன்பா’ என்பதைப் போல, முகத்தை சுளிக்க, புவனா திரும்பி ஜுலைகாவைப் பார்த்தாள். இவள் தன்னைப் பார்ப்பாள் என அறிந்தவள் போல ஜுலைகா தன் முகத்தை கன காரியமாய் வேறு திசையில் திருப்பி வைத்துக் கொண்டிருந்தாள். இவர்கள் யாரையும் நம்பி இனி ஒரு பலனும் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்ட புவனா, தன் வாயே தனக்கு உதவி என்பதைப் போல வள்ளியை நோக்கி தொண்டையை கனைத்துக் கொண்டு திரும்பி அமர்ந்தாள். அவள் கனைத்த சத்தத்தில் திரும்பிய வள்ளி, ‘என்ன…?’ என்பதைப் போல புவனாவை பார்க்க அவளுக்கு பேச வந்த வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கின. தன்னை சுற்றி அமர்ந்து இருந்தவர்களை பார்வையால் அளந்தவள், “ஏதாச்சும் அட்வைஸ் பண்றேன்னு லூசு தனமா பேசி என் உயிரை வாங்காம… போய் படிக்குற வழியைப் பாருங்க. இன்னும் ஒரு வாரத்துல பப்ளிக் எக்ஸ்சாம் வருது. நான் தான் இதுக்கு மேல எதுவும் படிக்கப் போறதில்லைன்னு முடிவாயிடுச்சி….. வெட்டியா வேடிக்கைப் பாத்துட்டு உக்காந்து இருக்கேன். உங்களுக்கு என்ன… போய்ப் படிங்க போங்க….’’ அவள் அப்படி சொல்லியும் புவனா, “இல்ல மச்சி….அது வந்து..’’ புவனா சொல்ல வருவதை முழுமையாய் கேட்கும் பொறுமை கூட வள்ளிக்கு இல்லை. “மூட்டு போறியா….’’ என முறைக்க அடுத்த நொடி மற்ற மூவரும் அவரவர் இருக்கைக்கு திரும்பினர். வருத்தம் சுமந்த முகத்துடன் செல்லும் தன் தோழிகளைக் கண்டு உள்ளுக்குள் உருகினாலும் அதை வெளியே காட்டாது வள்ளி மீண்டும் ஜன்னலை வெறிக்க தொடங்கினாள். திருச்சியின் புகழ் பெற்ற கான்வென்ட் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருத்தி மனதிற்குள் தன்னை வறுத்தெடுப்பதை அறியாத வில்லாளன், மதுரையில் தன் பெரிய மீன் பண்ணையில் வழக்கமான தன் பணியில் இருந்தான். ஏதோ ஆய்வகம் போல தோற்றம் அளித்த பெரிய அறையில் உட்குழிந்த கண்ணாடி பேழைகளில், ஊடு திரவத்தை நிரப்பியவன், “சுப்பு…’’ எனக் குரல் கொடுக்க, அவனின் அந்த உதவியாளன் வளர்ச்சியை எட்டி இருந்த ஆண் சங்கரா மீனை அவன் கைகளில் கொண்டு வந்துக் கொடுத்தான். அதை கவனமாய் கையுறை அணிந்த கரம் கொண்டு வாங்கியவன், அதன் அடிவயிற்றுப் பகுதியில் லேசாக அழுத்தம் கொடுக்க மீனின் விந்தணுக்கள் அந்த பேழையில் சேகரிக்கப்பட்டன. அடுத்து வளர்ந்த பெண் மீனின் கருமுட்டைகளுக்கு அதே போல, அந்த கண்ணாடிப் பேழையில் வெளியேற்றப்பட, கவனமாய் அந்தப் பேழையை கலந்தவன், “சுப்பு நாத்தாங்கால் தொட்டி தயாரா இருக்கு இல்ல… போனவிட்டம் மாதிரி…. தண்ணியில பூச்சி இருந்துச்சி மீனை தின்னுசின்னு பதில் சொல்லிட்டு இருந்தீங்க…’’ வில்லாளன் வார்த்தைகளில் விரவி இருந்த கோபத்தை உணர்ந்த சுப்பு, “அது போனவிட்டம் புதுப் பையன் சரியா கவனிக்காம குஞ்சிகளை விட்டான் சார். இந்தவிட்டம் நான் கவனமா பாத்துக்கிடுதேன்….’’ என சொல்ல, அந்த பதிலில் திருப்தி அடைந்ததைப் போல, “ம்..’’ என்றவன், “எல்லா மீனுக்கும் ஊசிப் போட்டு இருக்கு….. சரியா மூணு மணிநேரத்துக்கு ஒருக்க மீனுக கிட்ட இருந்து முட்ட எடுக்கணும்….’’ சொல்லிக் கொண்டே வில்லாளன் தன் கை உறைகளை நீக்க, அதே நேரம் அந்த அறைக்குள் வாசு நுழைந்தான். “சாரி மாப்பிள்ளை…கொஞ்சம் லேட் ஆயிடுச்சி…’’ என்று மன்னிப்பை வேண்ட, அவனைப் பார்த்து புன்னகைத்தவன், லேசாய் கண்சிமிட்டினான். “பாஸ்…ரம்யமா பொழுதை கழிச்சிட்டு வந்து இருப்பீங்க ..’’ வில்லன் ரம்யதிற்கு கொடுத்த அழுத்தத்தில் வாசுவின் முகம் மெலிதாய் சிவந்தது. “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா நீ வேற..’’ வாசு தலைக் குனிந்துக் கொண்டு பதில் சொன்ன விதத்திலேயே, அது அப்படித் தான் என்ற உண்மை வில்லனுக்கு புரிபட்டது. “டேய்…ஓகே ஓகே….நான் எதுவும் கேக்கல… நீ ரொம்ப வெட்கப்படாத என்னால பாக்க முடில… இன்னைக்கு இங்க எக் பெர்டிலைசேசன் எல்லாம் நீ பாத்துக்கோ…. நான் போய் ஆர்டர் எல்லாம் செக் பண்ணிட்டு பேக்கிங் டிபார்ட்மென்ட் பாத்துக்கிறேன்..’’ என்றுவிட்டு அங்கிருந்து வெளியே நடந்தான். கிட்டத் தட்ட ஏழு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த மீன் பண்ணை. அவன் தந்தை ஆரம்பித்தது. வில்லனுக்கு சிறுவயதில் இருந்தே மீன்கள் வளர்ப்பில் ஆர்வம் அதிகம். பத்து வயதில் இருந்தே தந்தையின் பின் சுற்றி தொழில் கற்று வளர்ந்தவன். பனிரெண்டாம் வகுப்பிற்கு மேல், மீன் வளத்துறையில் மேற்படிப்பை முடித்து, தந்தையுடன் இணைந்து தொழில் நடத்தி வருகிறான். இடையில் வந்த அரசு வேலை வாய்ப்பை வேண்டாமென்று புறம் தள்ளிய இளைஞன். பெரிய பெரிய சிமென்ட் குட்டைகளில் சிறியவகை நாட்டு மீன்கள் நீந்திக் கொண்டிருக்க, அதை தாண்டி செயற்கையாய் அமைக்கப்பட்டிருந்த பண்ணைக் குட்டைகளில், கூட்டு மீன் வளர்ப்பு முறை செயலாக்கத்தில் இருந்தது. மீன் குட்டைகளில் மீனுக்கு முறையாக தீவனம் வைக்கப்பட்டிருக்கிறதா…. என்று பார்வையிட்டுக் கொண்டே நடந்தவன், அதை தாண்டி சிறிதாய் இருந்த நாற்றாங்கால் தொட்டிகளில் இருந்த மீன் குஞ்சுகளின் வளர்ச்சியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலே நடந்தான். உணவிற்கு பயன்படும், லோகு, கெழுத்தி, கெண்டை, விரால், சங்கரா மீன் வகைகளைத் தாண்டியதும், பெரிய கூடாரம் இருக்க அதனுள் கண்ணாடி தொட்டிகளில் வித விதமான வண்ணத்தில் வளர்ப்பு மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு பக்கம் பெரிய பெரிய கண்ணாடிகளை அறுத்து, சிறிய கண்ணாடி தொட்டி அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருக்க, இன்னும் சிலரோ வெளியூரில் இருந்து வந்து இறங்கி இருந்த செயற்கை கடல் அலங்கார பொருட்களை பிரித்து அடுக்கி கொண்டிருந்தனர். அங்கே வேலை செய்துக் கொண்டிருந்தவர்களுக்கு சில கட்டளைகளை பிறப்பித்து முடித்தவன், மேற்பார்வை பணி முடித்து தன் அலுவல் அறைக்குள் நுழைந்தான். அன்று உள்ளூர் உணவு விடுதிகளுக்கும், மீன் சந்தைக்கும் அனுப்ப வேண்டிய மீன் வகையாறாக்களை ஆராய்ந்து முடித்தவன், அலைபேசியில் தகவல்கள் சரி பார்க்கப்பட்டதை உறுதிபடுத்த, மீன் விற்பனைப் பிரிவில் இருந்தவர்கள் தங்கள் பணியை தொடங்கினர். அதிகாலை முதல் தொடங்கிய பணி. நேரம் அப்போது நண்பகலை தொட்டு இருந்தது. அந்த நேரம் நண்பனின் காதலி ரம்யாவின் பெயரைச் சொன்னதும் அவன் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை எண்ணி அவன் மனம் ஏக்கம் கொண்டது… அவன் வீட்டினர் அவன் திருமணத்தை முடிவு செய்திருந்த விதத்தில். தன்னுடைய சுழல் நாற்காலில் அவன் இலகுவாய் சாய்ந்து அமர, அந்த நேரம் அவன் செல்லிடை பேசி அழைத்தது. “அம்மா… அம்மா எனக்காரு அம்மா..’’ அலைபேசியின் கீதத்தில் அழைப்பது தாய் என்று அறிந்தவனின் இதழில் மலர்ச்சி புன்னகை ஒன்று வந்து அமர்ந்தது. அலைபேசியை உயிர்ப்பித்தவன், “என்ன சுந்தரி… இன்னைக்கு எத்தனை கிலோ விரால் வேணும்..’’ என்று பேச்சை துவங்க, “ஆமா… நீ கொண்டாரா அத்தனை விராலும் என் வயித்துக்குள்ள தான போய் நீந்துது. எப்பவும் திங்கிறதைப் பத்தியே யோசனை… ராசா….உங்க மலர் அத்தை வீட்ல இருந்து போன் வந்துகிட்டே இருக்கு… நாங்க என்ன பதிலை சொல்ல..’’ ஏனோ மலர் என்ற பெயரே அவன் கோபத்தை விசிறி விட போதுமானதாய் இருக்க, “அதான் எல்லாரும் ஏற்கனவே முடிவு பண்ணிடீங்க இல்ல… அப்புறம் என்கிட்ட என்ன கேள்வி வேண்டி இருக்கு. உங்க மூத்த பொண்ணை வர சொல்லி நடக்க வேண்டியத பாருங்க..’’ எனக் கோபமாய் இரைந்துவிட்டு அலைபேசியை துண்டித்தான். இந்த திருமண பேச்சு வார்த்தையை எப்படி தவிர்ப்பது என அவன் சிந்தனையில் மூழ்க, திருச்சியில் பள்ளி மரத்தடியில் கூடி இருந்த நால்வர் குழுவும் அதே தீவிர சிந்தனையில் இருந்தது. வில் நாண் ஏறும்.