பாவனி உடைமாற்ற அறைக்குள் சென்றதும், ராகவியும் அவள் அம்மா இருந்த அறைக்குச் சென்றவள், “இவன் ஏன் இப்படிப் பேசுறான். பாவனி பாவம்.” என்றதும்,
“ரெண்டு பேருக்கும் அடிக்கடி இப்படித்தான் முட்டிக்கும். உன் தம்பி கோபம் வந்தா…. பட்டு பட்டுன்னு தான் பேசுறான். ரெண்டு பேரும் சண்டை போடும் போது…. எனக்கே சில நேரம் பயமா தான் இருக்கு, அவ எங்க கோவிச்சுகிட்டு போயிடுவாளோன்னு.” என்றார் ஊர்வசி வருத்தமாக.
ராகவிக்கு மாலை ஆறு மணிக்கு விமானம். அதனால் அவள் எடுத்து வைத்து கிளம்ப… வீட்டில் செய்து வைத்திருந்த பலகாரங்கள் மற்றும் இரவு உணவை ஊர்வசி மகளுக்காக எடுத்து வைக்க… ஈஸ்வரும் அக்காவின் பிள்ளைகளுக்காக நிறைய வாங்கி வைத்திருந்தான். அதையெல்லாம் பாவனியும் எடுத்து வந்து கொடுத்தாள்.
யாரும் அழைக்காமலே ஈஸ்வரே ராகவி கிளம்பும் நேரம் வந்துவிட்டான். தான் வாடகை வண்டியில் விமான நிலையம் சென்று கொள்வதாக ராகவி சொல்லத்தான் செய்தாள். ஆனால் ஈஸ்வர் விடவில்லை. அவனே அக்காவை அழைத்துக் கொண்டு சென்றான்.
செல்லும் வழியில் ராகவி அமைதியாக இருக்க…
“என் மேல கோபமா? இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு கார்னிகாவை ஸ்கூல்ல போட்டதும், அம்மாவை அனுப்பி வைக்கிறேன்.” என்றான் அவனாகவே.
“அம்மா வரும் போது வரட்டும். அது இல்ல டா…. என்னால பாவனிக்கு தான திட்டு கிடைச்சது. அவ என்னைத் தான தப்பா நினைச்சிருப்பா.” என்றதும்,
“பின்ன லூசு மாதிரி பேசினா திட்டாம. கார்னிகா என்னை விட்டுக் கூட இருந்திடுவா… அவ அம்மாவை விட்டு இருக்க மாட்டா…. அவ வேலையில இருந்து திரும்பி வர்ற நேரம் வாசல்ல போய்த் தான் நின்னு பார்த்திட்டு இருப்பா….”
“சிங்கபூர் என்ன பக்கத்திலேயே இருக்கு, அழுதா போய் உடனே கூட்டிட்டு வர….” என்றான் ஈஸ்வர் இன்னும் குறையாத கோபத்துடன்.
“நான் தானே டா கேட்டேன். அதனால எனக்காகச் சொல்லி இருப்பா.” என அப்போதும் ராகவி பாவனிக்காகப் பேச….
ராகவி விமான நிலையத்தின் வாயிலில் இறங்கிக் கொண்டவள், தான் இனி போய்க் கொள்வதாகச் சொல்லி தம்பியை அனுப்பி வைத்தாள்.
ராகவி அவள் அம்மாவுக்கு அழைத்து விமான நிலையம் வந்துவிட்டதாகச் சொன்னவள், பாவனியிடம் போன்னை கொடுக்கச் சொல்லி சொல்ல… பாவனி கடையில் இருந்ததால்… அவளுடன் பேசியபடியே ஊர்வசி கடைக்குச் சென்று மருமகளிடம் கொடுத்தார்.
“நான் ஏர்போர்ட் வந்துட்டேன் பாவனி, ஈஸ்வர் கிளம்பிட்டான்.” என்றதற்குப் பாவனி சரி என்றவள், “பார்த்து போங்க அண்ணி.” என்று சொல்ல…
“சாரி பாவனி என்னால உன்னைக் கத்திட்டான். நானும் தான் யோசிக்காம கேட்டு இருக்கக் கூடாது.” என்றதும்,
“அவன்கிட்ட வாங்கி வாங்கி உனக்குப் பழகிடுச்சா…” என்றதும் பாவனியும் சிரித்து விட…
“ஒருவேளை வெளிய கத்திட்டு உள்ள தனியா கால்ல விழுவானோ…” என்றதும்,
“யாரு உங்க தம்பியா… அந்த ஆசை எல்லாம் எனக்கு இல்லைப்பா… வேணா அவர்கிட்ட உங்க அக்கா இப்படிச் சொன்னாங்கன்னு வேணா சொல்றேன்.” என்றாள் பாவனி சிரித்துக் கொண்டு.
“எதுக்கு அவன் டிக்கெட் போட்டு வந்து என்னைத் திட்டிட்டு போகவா…. நான் என் வாயை வச்சிட்டு சும்மா இருந்திருக்கலாம். இனி உங்க குடும்ப விஷயத்துல நான் தலையிட மாட்டேன் பா… இதுக்கு முன்னாடியும் நான் தலையிட்டு இருக்கேனா சொல்லு.” என ராகவி மனம் கேட்காமல் புலம்ப….
“விடுங்க அண்ணி, நீங்க எதோ ஆசையில கேட்டீங்க. இதுல என்ன இருக்கு? நீங்க இதை நினைச்சு டென்ஷன் ஆகாதீங்க.” என்றவள், போன்னை மாமியாரிடம் கொடுக்க…
“நேரத்துக்கு எடுத்திட்டுப் போன சாப்பாடை சாப்பிடு. அப்புறம் அங்க போனதும் போன் பண்ணு.” என்ற அம்மாவிடம் சரி என்று சொல்லிவிட்டு ராகவி போன்னை வைத்தாள்.
மாலை நேர டிராபிக்கில் மாட்டி ஈஸ்வர் வீடு வர தாமதமாகிவிட்டது. வண்டியை வீட்டில் விட்டுவிட்டு நேராகக் கடைக்குத் தான் வந்தான். அவனைப் பார்த்ததும் பாவனி வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
தன்னைப் பார்த்ததும் ஏன் சென்றாள்? கோபமாக இருக்கிறாளோ என ஈஸ்வர் யோசித்துக் கொண்டிருந்தான். கடை அடைத்ததும் வழக்கம் போல ஈஸ்வருடன் விமலும் வந்தான்.
ஊர்வசி மகனைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட…. பாவனி தான் இரவு உணவு பரிமாறினாள்.
விமல் அம்மாவிடம் சென்று உண்டு கொள்வதாகச் சொல்லி சென்று விட்டான்.
உண்டு முடித்ததும் பாவனி எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு அவளும் அறைக்குச் சென்றுவிட… ஈஸ்வர் வழக்கமான அவன் வேலைகளை முடித்தவன் அறைக்கு வர… அவன் மகள் அன்று நேரமே உறங்கி இருந்தாள். பாவனியும் கண்ணை மூடி படுத்திருந்தாள்.
“புரியாம பேசாதீங்க ஈஸ்வர், இன்னைக்கு நான் ஏன் ராகவி அண்ணி கேட்டதும் சரின்னு சொன்னேன் தெரியுமா…. சில விஷயம் நீங்க சொன்னா வேற மாதிரி… அதே நான் வேண்டாம்னு சொல்லி இருந்தா… எல்லோருக்கும் கஷ்டமா இருந்திருக்கும். நீங்க சொன்னதும் புரிஞ்சிகிட்டாங்க தானே….”
மனைவி சொன்னதை யோசித்துப் பார்த்த ஈஸ்வர், “சரி அம்மாவை நான் பார்த்துக்கிறேன்.” என்றான்.
“ஈஸ்வர், நீங்க இன்னைக்குப் பேசினதுல ராகவி அண்ணி தான் ஒரு மாதிரி ஆகிட்டாங்க. ஏர்போர்ட்ல இருந்து கூட… என்னால தான் பிரச்சனைன்னு புலம்பி தள்ளிட்டாங்க. அவங்க இதுவரை நம்ம வீட்டு விஷயத்துல தலையிட்டது கூட இல்லை.” என்றதும்,
“ஆமாம் என்கிட்டயும் தான் பீல் பண்ணா….” என்றான் ஈஸ்வர்.
“என் ப்ரண்ட்ஸ் எல்லாம் சொல்லி, நாத்தனார்னா கொஞ்சம் முசுடா, எப்பவும் குறை கண்டுபிடிச்சிட்டே இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா ராகவி அண்ணி அப்படியில்லை.”
“உனக்கு அதுல வருத்தமோ… வேணா இப்படி இருக்காதேன்னு நான் அவகிட்ட சொல்றேன்.” என்ற கணவனைப் பாவனி தோளில் அடித்தாள்.
“நான் ஹாஸ்பிடல்ல லீவ் கேட்டு பார்க்கட்டுமா…. நான் வீட்ல இருந்தா… அத்தை ராகவி அண்ணி வீட்டுக்கு போயிட்டு வரலாம். பாவம் அவங்களும் நமக்காக எங்கையும் போகாமத்தான் இருக்காங்க.”
“அம்மா போனா ஒரு மாசமாவது இருக்கணும் பாவனி. அவ்வளவு நாள் எப்படி லீவ் கொடுப்பாங்க. பாப்பா ப்ளே ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டா மதியம் மட்டும் தானே… நானும் உங்க அம்மாவும் பார்த்துப்போம். அதுவரை இப்படியே போகட்டும்.”
ராகவி சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ரயிலில் அவர்கள் வீடு அருகே இருக்கும் நிறுத்தம் வந்திருந்தவள், அங்கே தனக்காகக் காத்திருந்த கணவனின் காரில் ஏறிவிட்டு முதலில் தன் அம்மாவுக்கு அழைத்துச் சொன்னவள், பிறகு தம்பிக்கும் அழைத்தாள்.
“ஹாய்கா போயிட்டியா?”
“வந்துட்டேன் டா… உன் அத்தான் கூப்பிட வந்துட்டார்.” என்றதும்,
“எங்க இருக்க?” என்றவன், காரில் என்றதும் வீடியோ காலில் வருவதாகச் சொல்லி வைத்தான்.
கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தவன், மனைவியையும் தன் அருகில் வைத்துக் கொண்டு அக்காவை அழைத்தான்.
காரில் கணவனோடு முன் இருக்கையில் இருந்தபடி ராகவி பேசினாள்.
முதலில் அத்தானை நலம் விசாரித்த ஈஸ்வர், அவன் கேட்டதற்கும் பதில் சொல்லிவிட்டு,
“ராகவி, உன் மேல பாவனி கோபமா இருக்கா?” என்று போட்டுக் கொடுக்க… எதற்கு என்று ராகவி திடுக்கிட்டு பார்க்க…. பாவனி கணவனை முறைத்தாள்.
“உன் வீட்டுக்கு நீ அம்மாவை மட்டும் கூப்பிட்டியாம். என் பொண்டாட்டியை கூப்பிடலை தான… அதுதான் கோபம்.” என்றான். அதைக் கேட்டு இரண்டு பெண்களின் முகமும் புன்னகையில் விரிய….
“அவ எப்போ இங்க வந்தாலும், அவளுக்கு இங்க ராணி உபச்சாரம் நடக்கும்னு அவளுக்குத் தெரியும். அதெல்லாம் அவங்க அண்ணன் இருக்கார் கவனிக்க… நாங்க என்ன யாரோவா… இதுவும் அவ வீடு தான். பிறகு நாங்க ஏன் கூப்பிடனும்?” என்றதும், பாவனி கணவனைப் பார்த்து சிரிக்க…
“நீ மத்த நாத்தனார் மாதிரி இல்லைன்னு பாவனி பீல் பண்ணா…. அதுதான் நாமலே ஸ்டார்ட் பண்ணி விடுவோம்னு நினைச்சேன்.” என ஈஸ்வர் சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க…
“ரொம்ப நல்லவன் டா நீ…” என்றான் அவனின் அத்தான்.
“என் பொண்ணு எங்களை விட்டுட்டு வந்து எல்லாம் அங்க இருந்துக்க மாட்டா… பாவனியும் இன்னும் சிங்கப்பூர் பார்க்கலை இல்லையா… நாங்க குடும்பமா வரோம்.” என்று ஈஸ்வர் சொன்னது ராகவிக்கு மகிழ்சியாக இருக்க…. அதற்குள் அவள் வீடும் வந்திருக்க… சந்தோஷமாகவே போன்னை வைத்தாள்.
“நீ அவளை மட்டும் தான் பேசின என்னை எதுவும் சொல்லலை…”
“நீங்க பேசினீங்க, நானும் பேசினேன். கார்னிகாவை இன்னும் மூன்னு மாசத்தில ப்ளே ஸ்கூல்ல போட்டுடுடலாம், பிறகு வேணா நீங்க போயிட்டு வாங்க.” என்றான் ஈஸ்வர்.
“இப்போ தானே உங்க அக்கா வந்திட்டு போயிருக்கா… எனக்கு இப்போ எல்லாம் எங்கையும் போக வேண்டாம். எனக்காகச் சின்னக் குழந்தையைக் கொண்டு போய் ஸ்கூல்லையும் விட வேண்டாம். ரெண்டரை வயசு ஆகட்டும், விஜயதசமி அன்னைக்குச் சேர்ப்போம்.” எனச் சொல்லிவிட்டு ஊர்வசி உள்ளே சென்றார்.
அம்மா சொன்னது ஈஸ்வருக்கும் சரி என்று தோன்ற… அவன் அதோடு விட்டுவிட்டான்.
அம்மாவை தேவையில்லாமல் பேசி விட்டோம் என்ற எண்ணம் ஈஸ்வருக்கும் இருக்க… அதன் பிறகு அவன் அம்மாவை அதிகம் தாங்கினான் என்பது உண்மை.
அன்னைக்கு கோபத்துல பேசிட்டேன், சாரி மா இப்படியெல்லாம் அவன் வாயில் இருந்து வரவில்லை தான். ஆனால் அம்மாவை இப்போது இன்னுமே அதிகம் தாங்கினான்.
அவன் அம்மாவையும் மகளையும் அடிக்கடி வெளியே அழைத்து சென்று வந்தான். வார இறுதியில் ஊர்வசியின் தோழிகளோடு அவரை இரண்டு நாட்கள் சுற்றுலா அனுப்பி வைத்தான்.
அம்மா மகனை கவனித்த பாவனியும் அதன் பிறகு நிம்மதியாக இருந்தாள்.