அதியன் புரியாமல் பார்க்க, ” இவ உன்னோட கடமை தான் இல்லையா.. என் மகளை நீ கடமைக்காக கூட வளர்க்க வேண்டாம்.. அவளுக்கு அத்தனையுமா நான் இருக்கேன்.. நீ தேவையில்லை..” என்றாள் ஆத்திரத்துடன்..

                       அதியன்புரியாம பேசாத அலர்.. நான் ஒரு வார்த்தை சொன்னதுக்கு இவ்ளோ அர்த்தம் கண்டுபிடிப்பியா நீ.. அவ என்னோட மகள் இல்லையா..” என்று சரிகட்ட 

                        “உனக்கு ஞாபகம் இருந்தா சரிதான் அண்ணா…” என்றாள் அப்போதும்..

                       “இப்போ என்ன சொல்ல வர்ற..” என்று அதியன் அலுப்புடன் வினவவும் 

                        “உனக்கும், உன் மாமியார் வீட்டு ஆளுங்களுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்லைன்னு சொல்றேன்இதே என் அண்ணி உயிரோட இருந்திருந்தா, இந்த வீட்டு மகாராணி என் மக.. அவங்க ஒரு ஆள் இல்ல.. இந்த குழந்தையை ஏன்னு கூட கேட்கல நீங்க எல்லாம்….”

                         “உன்னோட மக தானேண்ணா.. பேயை கண்டது போல ஓடற.. நீ அவளை புறக்கணிக்கிறது கூட தெரியாது அவளுக்கு.. எப்படி மனசு வருது உங்களுக்கெல்லாம்ஏற்கனவே அம்மாவை இழந்துட்டா.. நீ அப்பாவும் இல்ல ன்னு செயல்ல காட்டிட்டு இருக்க..” என்று நிறுத்தினாள் அலர்.

                          அண்ணன் அமைதியாக தலை குனிய, “என் அண்ணி என்னை வளர்த்தாங்க.. அவங்க மகளை நான் வளர்க்கிறேன்.. என்ன இப்போ?? என்னால முடியும்என் மகளுக்கு நீங்க யாரும் தேவையில்லைஇதுக்கு மேல என் படிப்பை பத்தி பேசாத.. நான் நிச்சயமா படிப்பேன்.. ஆனா, அது என் விருப்பம் தான்..” என்றாள் முகத்தில் அடித்தது போல 

                      அதியன் அமைதியாக அவளை பார்த்தவன் மகளையும் ஒரு பார்வை பார்க்க, கண்கள் கலங்கி விடும் போல் இருந்தது மீண்டும். அவன் பார்த்த நேரம் குழந்தை தூக்கத்தில் எதையோ கண்டு பயந்தது போல் லேசாக முகத்தை சுருக்க, கைகாலையும் அசைத்து லேசாக அழுதது.. அந்த காட்சியே கவிதை போல் இருக்க, இவளையா இத்தனை நாட்கள் தவிர்த்து வந்தோம் என்ற எண்ணமிடும்போதே தன்னையும் மீறி வாய்விட்டு அழுதுவிட்டான் அதியன். அவன் அழுவதை கண்டு கூட மனம் இரங்கவில்லை அலர். “நல்லா அழு..” என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் அதியனை.

                      அவன் சத்தம் சிறிது அதிகரிக்கவும், குழந்தையின் உறக்கம் கலைய அப்போதுதான் அதட்டினாள் அவனை. “அவளே ராத்திரி எல்லாம் விளையாடிட்டு இப்போதான் தூங்கி இருக்கா.. நீ அழுது அவளை தொந்தரவு பண்ணாத…” என்றுவிட, வேகமாக கண்களை துடைத்துக் கொண்டான் அதியன். தன்னைப்போல சத்தமும் அடங்கிவிட்டது.

                        உறங்கி கொண்டிருந்த குழந்தையின் பூவையொத்த விரல்களை லேசாக தொட்டு பார்த்தவன், தன் தலையை தன் மகளின் பாதத்தில் அழுத்தமாக ஒருமுறை அழுத்தி எடுத்தான். மானசீகமாக மன்னிப்பு கேட்கிறானோ என்னவோ ??

                         அவளின் பிஞ்சு கால்களில் மெல்லிய முத்தத்தை பரிசாக்கியவன் தன் தங்கையின் தலையிலும் ஆசிர்வதிப்பது போல கையை வைத்து எடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான். அண்ணனின் நிலை சற்றே கவலையை கொடுத்தாலும், விரைவில் தெளிந்து விடுவான் என்று அருகு ஒரு நம்பிக்கையை கொடுத்திருந்தான் அதியன்.

                            அலர் அன்று முழுவதுமே ஒரு நிம்மதியான மனநிலையிலேயே இருக்க, அன்றைய இரவே அதை மொத்தமாக அழித்து இருந்தான் அதியன். வழக்கம் போலவே அண்ணனுக்காக அவள் காத்திருக்க, வந்தவனோ நேராக நிற்க கூட முடியாமல் தள்ளாடிக் கொண்டே தான் வந்து சேர்ந்தான்.

                             தங்கையின் முன் பெரிதும் முயற்சி எடுத்து அவன் நேராக நின்றுவிட பார்க்க, அடுத்த நிமிடம் வீட்டின் நிலைவாசல் படியில் தட்டி கீழே விழுந்திருந்தான். பாதி உடல் வீட்டிற்கு உள்ளேயும், மீதி உடல் வீட்டிற்கு வெளியேயும் கிடக்க, தன் அண்ணனின் பழைய கம்பீரத்தை நினைத்து பார்த்தவளுக்கு கண்களில் நீர் முட்டியது.

                          ஆனால், எப்போதும் போலவே இது உனக்கான நேரமில்லை என்று கண்ணீரை அடக்கி கொண்டவள் தந்தையின் அறைக்கதவை தான் பார்த்தாள். நல்லவேளையாக அருணகிரி எழுந்து வராமல் இருக்க, சற்றே நிம்மதியாக இருந்தது அவளுக்கு. தந்தை என்றாலும் தன் அண்ணன் இப்படி ஒருநிலையில் அவரின் முன் நிற்க தேவையில்லை என்றுதான் எண்ணம் போனது அலருக்கு.

                         ஆறடியில் அதற்கேற்ப உடல்வாகுடன் அவன் நின்று இருந்தாலே அவனை அசைப்பது கடினம். இப்படி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடப்பவனை எங்கிருந்து அசைப்பது.. ஆனால், அவனை அப்படியே விட முடியாதே.. வந்த கோபம் மொத்தத்தையும் கண்களை மூடி அடக்கியவள் அவனை மல்லாக்க படுக்க வைத்தாள் முதலில்.

                           அவன் தலைக்கு பின்புறம் நின்று, அவனது சட்டை காலரை பற்றி இழுத்து எழுப்பி அமர்த்தியவள் அதற்கே சோர்ந்து விட்டாள். ஒரு வழியாக அவனை தன் கால்களில் சாய்த்து அமர வைத்து, மெல்லியதாக மூச்சு விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள் அலர். பின் மீண்டும் முன்பு போலவே அவன் சட்டையின் காலரை பிடித்து இழுத்துக் கொண்டே கீழே இருந்த ஒரு அறைக்குள் அவனை தள்ளி இருந்தாள்.

                            அந்த வீட்டின் மரக்கட்டில்கள் சற்றே உயரமாகவே இருக்கும். அதில் இந்த நிலையில் இவனை ஏற்றுவதெல்லாம் முடியாத காரியம் என்று புரிய, கட்டிலுக்கு அருகில் தரையிலேயே அவனை கிடத்திவிட்டு, தன் அறைக்கு செல்ல பார்க்க, மெல்லிய குரலாகபசிக்குதுடி.. குந்தவி..” என்று முனங்கி கொண்டிருந்தான் அதியன்.

                            அண்ணனின் அந்த வார்த்தைகளில் அவளுக்கும் கண்ணீர் வர, “இவனை ஏன் அண்ணி இப்படி விட்டுட்டு போனீங்க…” என்று கண்ணீருடன் கேட்டுக் கொண்டாள். பின் அவளாகவே தெளிந்து கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவனுக்கு உணவை எடுத்துக் கொண்டு வர, கண்களை திறக்கவே முடியவில்லை அவனால்.

அவன் இருந்த நிலை கடுப்பை கிளப்பினாலும், தன் அண்ணன் இதையெல்லாம் தொட்டது கூட கிடையாதே, இன்று மட்டும் என்ன வந்தது?? என்றும் ஓடியது சிந்தனை

               மீண்டும் அவனை எழுப்பி கட்டிலின் காலிலேயே அவனை சாய்த்து அமர வைத்து மெல்ல அவன் கன்னத்தில் தட்டி எழுப்ப பார்க்க, ம்ஹும்.. தெரியவே இல்லை அதியன். அதில் கடுப்பானவளாக அவன் கன்னத்தில் தன் பலம் கொண்டமட்டும் வேகமாக அவள் அடிக்க, மெதுவாக கண்களை திறந்தவன் மீண்டும்குந்தவி..” என்று புலம்ப தொடங்க 

                   “அண்ணா.. நான் அலர்.. கண்ணை திறந்து பாரு..” என்று கத்தினாள் அலர்..

                  புரிந்தவனாக இப்போது மீண்டும்அலரு..பாப்பாஎன்னை மன்னிச்சிடுடாஎன்னால உன் படிப்பு போச்சே…” என்று மீண்டும் புலம்பலை தொடங்கி இருந்தான் அதியன்.

                      “என் மகளை கூட நான் நினைக்கலையே.. நான் யாரையும் யோசிக்காம போய்ட்டேன் அலர்.. என்னை மன்னிச்சுடு பாப்பாகுந்தவி மொத்தமா என்னை விட்டு போய்ட்டா..” என்று தொடர்ந்தவன் 

                      இறுதியில்நானும் வரேன் குந்தவிஎன்னை வேண்டாம் சொல்லாத.. என்னையும் கூட்டிட்டு போய்டு..” என்று அழ, வந்த கோபத்திற்கு பேசிய அவன் வாயிலேயே ஒன்று போட்டாள் பட்டென. ஆனால், அதற்கும்என்னை அடி குந்தவி.. என் அப்பாவையும், அலரையும் எப்படி தனியா விட்டுட்டு வர முடியும் என்னாலஎன்னால சாக முடியாது குந்தவி.. இப்போ என் பொண்ணு வேற இருக்கா..” என்று அவன் பேசிக்கொண்டே போக, அவனின் அழுத்தங்கள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருந்தது.

                       தன் அண்ணன் சாக நினைத்தானா?? அதுவே பேரதிர்ச்சி தங்கைக்கு.. “இவனும் இல்லாமல் நாங்க என்ன செய்வோம்.. யோசிக்கவே மாட்டானா எங்களை.. ” என்று குமுறியவள் அவனை மேலும் இரண்டு அடி அடிக்க, அதுகூட தெரியவில்லை அவனுக்கு

                    கண்களை துடைத்துக் கொண்டே, சாதத்தை பிசைந்து அவள் ஊட்ட, “நல்லாருக்குடா பாப்பா..” என்று சொல்லிக்கொண்டே ஒரு வழியாக உண்டு முடித்தான். அவன் வாயில் இருந்து சாக வேண்டும் என்ற வார்த்தைகளை கேட்ட பிறகு அவனை  பயமாக இருக்க, அலர் அந்த அறையின் கதவை நன்றாக திறந்து வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

                      தனது அறைக்கு சென்று குழந்தையை தூக்கி வந்தவள் அவனின் கட்டிலிலேயே குழந்தையை படுக்க வைத்து விட்டு, அருகில் தானும் அமர்ந்து கொண்டாள். உறக்கம் மருந்துக்கு கூட அவளை அணுகாமல் போக, அன்று இரவு முழுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது அதியனின் உளறல்கள்

                      இந்த இரவை போலவே எங்களின் வாழ்வும் இருளடித்து போனதா?? இந்த வீட்டின் மகிழ்ச்சி இனி கிடைக்காமலே போய்விடுமா?? கடவுளே.. இன்னும்  வைத்திருக்கிறாய் எங்களுக்கு…??? அப்படி என்ன எங்களின் மீது வஞ்சம் உனக்கு??? என்று கண்ணீர் வடித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் அலர்.

                     ஆனால், அவள் வாழ்வின் முக்கிய நிகழ்வை இறைவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டான் என்று அறியவில்லை அவள். அவளின் சோதனைகள் இன்னும் முடியவே இல்லை அவசரப்பட்டு அழுதுவிடாதே என்று சொல்லாமல் சொல்லி வேடிக்கை பார்த்தது விதி.