இசையின் மொழி 03

                           குந்தவியின் காரியங்கள் முடிந்து ஒருவாரம் கடந்து போயிருக்க, இந்த ஒரு வாரமாக வீட்டில் தான் இருந்தாள் அலரிசை. ஏற்கனவே குந்தவையின் பிரசவம், அவளின் மரணம் என்று வரிசையாக விடுப்பு எடுத்து வைத்திருக்க, எல்லாம் சேர்ந்து ஒரு மாதத்தை தாண்டி இருந்தது. ஆனால், அதை பற்றிய கவலை சற்றும் இல்லாமல் தன் முழு நாளையும் அண்ணன் மகளோடு கழித்து வந்தாள் அவள்.

                          அருணகிரி இரண்டு மூன்று நாட்களாகவே யோசனையுடன் அவளை பார்த்தாலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மகள் என்ன முடிவில் இருக்கிறாள் என்பது லேசாக புரிந்தது அவருக்கு. ஆனால், நடைமுறைக்கு அது சரிவருமா என்பது தான் அவரின் யோசனையாகவே இருந்தது.

                           கூடவே, மகன் நான்கே ஆண்டுகளில் தன் வாழ்வை தொலைத்து இருக்க, மகள் தனக்கென ஒரு வாழ்வை தேடிக் கொள்ளவே மாட்டாளோ என்று அதுவேறு பயம். அதிலும் அவள் தனியாக குழந்தையுடன் இருக்கும் நேரங்களில்அம்மா பாருசின்னக்குட்டி அம்மா இருக்கேண்டா…” என்று சொல்வதும் காதில் விழுந்து இருக்க, மகளின் மனம் பெருமிதத்தை கொடுத்தாலும், என் மகளுக்கு ஒரு வாழ்க்கை வேண்டாமா ??? என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.

                            ஆனால், வெளிப்படையாக எதையுமே பேசிவிட முடியாதேமகள் இல்லாமல் பேத்தியை கவனித்து கொள்வது சாத்தியமே இல்லை.. குழந்தையின் அத்தனை தேவைகளையும் அமைதியாக அலர் கவனித்து கொள்வதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார் அருணகிரி. இந்த நேர்த்தி தனக்கு வருமா?? இந்த வயதான காலத்தில் பேத்தியின் சத்தம் கேட்ட அடுத்த நொடி தன்னால் அவள் அருகில் இருக்க முடியுமா ?? என்று சிந்தனை  ஓட, அதற்கும் பதில் இல்லை அவரிடம்.

                           ஒருபக்கம் தன் மகள், இன்னொரு பக்கமோ தன் பேத்தி அதுவும் தாயை இழந்த பச்சிளங்குழந்தை.. யாருக்காக நான் முடிவெடுப்பது?? என்று அதே சிந்தனையில் தான் இருக்கிறார் அவர். மகன் கொஞ்சம் தெளிந்து இருந்தாலும் அவனிடம் பேசி இருப்பார். ஆனால், அவனை கண்ணில் காண்பதே அரிதாக இருக்கும் போது அவனிடம் பேசுவது எப்படி முடியும்??

                         வீட்டில் குந்தவியின் நினைவுகள் எப்போதும் அவனை சுழற்றிக் கொண்டே இருக்க, வீட்டில் இருக்கும் நேரத்தை கடப்பது அத்தனை சுலபமாக இல்லை அதியனுக்கு. அதன்பொருட்டே தன் விவசாய நிலத்திலும், வாழை தோப்பிலும் தன் முழு நாளையும் கடத்தி விடுகிறான் அவன். இரவு மட்டும் சற்று நேரங்கழித்து என்றாலும் தவறாமல் வீட்டிற்கு வந்து விடுவான்.

                              அவனுக்காக அலரிசை உணவை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதே அவனை இழுத்து வந்துவிடும். இத்தனைக்கும் எங்கே இருக்கிறாய், என்ன செய்கிறாய் என்று எதையுமே கேட்கமாட்டாள் அவனின் தங்கை. காலை உணவு நேரத்திற்கு அவன் இருக்குமிடம் தேடி உணவு வந்துவிடும்

             

                       அதுவும்சாப்பிட்டுட்டு வேலையை பாருங்க தம்பி. அங்கே பாப்பா சாப்பிடாம உக்காந்துட்டு இருக்கு.. அண்ணன் சாப்பிட்டதும் சொல்லுங்க ன்னு சொல்லி இருக்கு..” என்று அதட்டலுடன் வந்து நின்று விடுவான் காத்தன்.  “சாப்பிட்டேன் சொல்லு..” என்பதெல்லாம் ஈடுபடவே செய்யது அவனிடம்

                       “பாப்பாகிட்ட நான் பொய் சொல்ல மாட்டேன் தம்பி.. சாப்பிட்டு முடிங்க..” என்று அவன் உண்ட பிறகே அங்கிருந்து நகர்வான் காத்தன். மதிய வேளைகளிலும் இதுவே தொடரும். இரவு நேரம் அவன் வருவதற்கு எத்தனை தாமதமானாலும், அண்ணனை விட்டு தனியாக சாப்பிடமாட்டாள்.

                      பெரிதாக பேச்சுக்கள் என்று எதுவும் இல்லாமல் மௌனமாகவே கழியும் உணவு நேரம். அண்ணன் இந்தமட்டும் உடலை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கிறானே என்பதே போதுமாக இருக்க, அலரும் அவனிடம் எதையும் பெரிதாக கேட்டுக் கொள்ளமாட்டாள். அவன் வீட்டிற்கு வருவதற்கு வெகு நேரத்திற்கு முன்பாகவே அருணகிரி உறங்க சென்றிருப்பார்.

                    பொதுவாகவே அருணகிரிக்கு வேலைகள் குறைவுதான். அவர்களின் தோட்டத்தையும், தோப்பையும் மகனே கவனித்து கொள்ள, பெரும்பாலும் ஊர்க்காரியங்கள், உறவுகளின் விசேஷங்கள் என்று தான் அலைந்து கொண்டிருப்பார் மனிதர். இன்று வெளிவேலைகள் எதுவும் இல்லாமல் போகவும், வீட்டில் அமர்ந்திருந்தவருக்கு மகளின் யோசனையே பெரிதாக இருக்க, என்ன பதில் கிடைக்கும் என்று தெரிந்தாலும், மகளின் வாய்மொழியாகவே கேட்டுவிட எண்ணி, அவளை அழைத்திருந்தார். *

                      தந்தை அழைக்கவும் வந்து நின்றவள்சொல்லுங்கப்பா..” என்று அவரின் முகம் பார்க்க 

                     “எப்போ காலேஜ் போகப்போற பாப்பா.. ஒரு மாசம் ஆகப்போகுதே.. எதுவும் சொல்லமாட்டாங்களா..” என்றார் அமைதியாக 

                      மகள் முழுதாக இந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள் பதில் சொல்ல. அருணகிரியும் அவள் பேசும்வரை மௌனத்தை நீட்டிக்க, ஒருவழியாகநான் காலேஜ் போகலப்பா.. இந்த வருஷம் போகட்டும்.. வீட்ல இருந்தே படிக்கிறேன்..” என்று அவளுக்கே உரிய அழுத்தத்துடன் அலர் தெரிவித்துவிட 

                      “ஏன் பாப்பா.. படிப்பை ஏன் பாதியில விடணும்..” என்று அருணகிரி கேட்க, “உங்களுக்கு தெரியாதா??” என்பது போல் பார்த்தாள் மகள்.

                       “குட்டியை நான் கவனிச்சுக்கறேன் பாப்பா.. எனக்கு அதைவிட என்ன வேலை.. நீ படிப்பை முடிச்சிடுடா..” என்றவர் கெஞ்சுதலாக மகளை பார்க்க 

                       ”                “உங்களால முடியாதுப்பா.. அதோட நானும் படிக்காம இருக்கமாட்டேன்.. இந்த ஒரு வருஷம் போகட்டும்கண்டிப்பா படிப்பை முடிச்சிடுவேன்…” என்றாள் திடமாக 

                     “ஒரு வருஷம் வீணா போகுதே பாப்பா.. நான் யாராவது ஆள் கூட வச்சு பார்த்துக்கறேண்டாநீ காலேஜ்க்கு போ..” என்று அருணகிரி மேலும் வற்புறுத்த 

                     “ஆள் வச்சு பார்த்துபிங்களா??” என்று தந்தையை ஒரு கண்டனப்பார்வை பார்த்தவள்ஏற்கனவே உங்க சம்மந்தி அம்மா கொஞ்ச நஞ்ச பேச்சு பேசிட்டு போய் இருக்கு.. இன்னும் குழந்தையை பார்த்துக்க ஆயா வேற ஏற்பாடு பண்ணுங்க.. அது மறுபடியும் இங்கே வந்து ஆடட்டும்.. ” என்று கடிந்து கொண்டவள் 

                         “உங்களுக்கு என்னப்பா இப்போ.. ஒரு வருஷம்  தானே, போனா போகட்டுமேநான் படிச்சு என்ன கலெக்டர் வேலைக்கா போகப் போறேன். எப்படியும் உங்க பையன் வேலைக்கு எல்லாம் அனுப்பமாட்டான்.. வீட்ல தான் இருந்தாகணும்.. அதுக்கு ஒரு வருஷம் தாமதமா படிச்சுட்டு போறேன் விடுங்க..” என்று அதட்டலாக சொன்னவள் 

                             “அண்ணன்கிட்ட எதையும் சொல்லி வைக்காதிங்க.. என்கிட்டே கேட்டா நான் பேசிக்கிறேன்.. திரும்பவும் இதை பேசாதீங்க..” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு படிகளில் ஏறிவிட்டாள்

                            ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும், மகளின் வாய் வார்த்தையாகவே கேட்டபோது இன்னும் வலித்தது அருணகிரிக்கு. தங்கையை வேலைக்கு எல்லாம் அனுப்பமாட்டேன் என்று கூறியவன் தான் அதியன்.. ஆனால், மருமகள் அவனிடம் பேசி, அலர் சென்னையில் வேலைக்கு செல்ல அனுமதி வாங்கி இருந்தது தெரியுமே அவருக்கு

                         அதுவும் அவள் ஆசைப்பட்டால் மேலே படிக்கவும் அனுப்ப வேண்டும் என்று அவள் அதியனை சரிக்கட்டி வைத்திருக்க, இன்று மகள் இத்தனை நிராசையாக படிப்பை தூக்கி போடுவது அருணகிரிக்கு வருத்தத்தையே கொடுத்தது. ஆனால், யாரை நான் பழி சொல்ல முடியும் ?? என்று கேட்டுக் கொண்டு அமைதியாக தன் அறைக்கு சென்றுவிட்டார்.

                           அவர் அந்த நாற்காலியில் இருந்து எழுந்து செல்லவும் தான் உள்ளே நுழைந்தான் அதியன். தங்கையின் பேச்சுக்கள் மொத்தமாக காதில் விழுந்திருந்தது. காலையில் ஏதோ நினைவில் கையில் பணம் எதுவும் எடுக்காமல் வெளியில் சென்றிருக்க, ஒரு அவசர தேவைக்காக பணம் எடுக்க வீட்டிற்கு வந்திருந்தான்ஆனால், இப்போது தங்கையை விட எதுவும் பெரிதாக தோன்றாமல் போக, நேரே அவள் அறைக்கு தான் சென்றான்.

                     அவள் அறையின் கதவு திறந்தே இருக்க, அந்த பழைய காலத்து மரக்கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடி இருந்தாள். மூடிய இமையோரம் ஒரு துளி நீர் முத்தை போல் பிரகாசிக்க, தன்னை குறித்தே சங்கடமாக இருந்தது அவனுக்கு

                      குந்தவியின் அளவுக்கு கூட நாம் இவளின் மீது அக்கறை காட்டவில்லையே என்ற எண்ணம் சுட்டது அவனை. தன் சோகத்தில் தங்கையை மறந்து விட்டோம் என்று அவன் மனமே அவனை குறை கூற, போனது போகட்டும் என்ற எண்ணத்துடன் தான் தங்கையின் அருகில் வந்து அமர்ந்தான் அதியன்.

                                 அவன் அருகில் அமரவும், கண்களை திறந்து அவனை பார்த்தவள் மீண்டும் பழையபடியே கண்களை மூடி சாய்ந்து கொண்டாள்

                               அதியன்அலர்..” என்று அழைக்க, கண்ணீரை சுண்டி விட்டவள்என்ன அதிசயமா இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்க..” என்று அவன் முகம் பார்க்க 

                              “வந்ததும் நல்லதா போச்சு. அதான் நீ பேசினது அத்தனையும் கேட்க முடிஞ்சுது..” என்றான் அண்ணன்காரன்.

                                “அதுவும் நல்லதுதான்.. நான் உன்கிட்ட ஒருமுறை போராட வேண்டாம் பாரு.. ” என்று சிறு சிரிப்போடு சொன்னவள்இது விஷயமா எதுவும் பேசாதண்ணா.. ” என்றுவிட்டாள்.

                              ஆனால், அப்படி விட்டு விட முடியுமா அதியனால். “நீ படிப்பை முடிச்சுடு அலர்.. நீ விருப்பப்பட்டா சென்னைக்கு கூட போய் வேலை பார்க்கலாம்.. நான் ஏற்பாடு பண்றேன்.. ” என்றான் அமைதியாக 

                  அலர்என் அண்ணன்தானே.. பேய் எதுவும் அடிக்கலையே உன்னை..” என்று சந்தேகமாக கேட்க 

                    “உன் அண்ணி எப்பவும் என்கிட்டே சொல்லிட்டே இருப்பா. அலர் விருப்பப்பட்டா அவளை மேல படிக்க வைக்கணும், சென்னைக்கு போகணும் சொல்றா.. அவ அங்கே வேலை பார்க்க ஆசைப்பட்டா நீங்க எதுவும் பேசக்கூடாதுஅவளோட விருப்பப்படி அவ நடக்கட்டும்.. அவளை அவ இஷ்டப்படி விடுங்க அப்படி ன்னுநீ காலேஜ் சேர்ந்த நாள்ல இருந்தே இந்த பேச்சுதான் அதிகமா பேசுவா…”

                       “இன்னைக்கு அவ இல்லாததை காரணமா வச்சு நீ படிப்பை பாதியில நிறுத்தினா, அவ சந்தோஷப்படுவாளாஅவ விருப்பம் முக்கியமில்லையா உனக்கு..” என்று அதியன் அவளை உணர்வுபூர்வமாக அணுக, தங்கை இந்த பேச்சுக்கெல்லாம் மசியாவே இல்லை.

                      “அண்ணி எப்பவும் உன்கிட்ட எனக்காக பேசின விஷயம் எல்லாம் எனக்கு தெரியும்ண்ணா.. அண்ணியே சொல்வாங்க..  எனக்கு படிப்பை விடற எண்ணமெல்லாம் இல்ல.. இந்த ஒரு வருஷம் தள்ளி போட நினைக்கிறேன்.. அவ்ளோதான்.. அண்ணி சொன்னமாதிரி கண்டிப்பா நான் மேலே படிப்பேன்…”

                      “ஆனா, இப்போதைக்கு எதுவும் வேண்டாம்..” என்றாள் அலர்.

                     “நீ குழந்தைக்காக பார்க்காத அலர்.. அவளை நான் பார்த்துக்கறேன்.. பெத்த எனக்கு வளர்கிற கடமையும் இருக்கு தானேநான் கூடவே இருக்கேன்.. நீ காலேஜ் முடிச்சு வரவும் நீ பார்த்துக்கோ.. ஆனா, படிப்பை விடாத.. நான் ஒத்துக்கவே மாட்டேன்…” என்றான் கட்டளையாக 

                      எப்போதும் அவன் அதட்டலுக்கு படிந்து விடுபவள் தான் தங்கை.. ஆனால் இன்றுகடைசியா சொல்லிட்ட… ” என்றாள் ஏளனமாக