IAS 21 2 12106 “என்னவா இருந்தா என்ன உனக்கு சொல்லியே ஆகணுமா..?” அம்பை எரிச்சலாக சொல்ல, சிவனேஷ்வரன் அதற்கு மேல் அவளிடம் பேசவில்லை. அவள் வீட்டு பக்கம் காரை செலுத்த, “இப்போ வீட்டுக்கு போகணும்ன்னு நான் உங்ககிட்ட கேட்டேனா..?” என்றாள். வண்டியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டவன், சீட்டை சாய்த்து கண் மூடி படுத்து கொண்டான். அம்பைக்கு அவன் மேல் கோவத்தை காட்டுவது அதிகப்படி என்று புரிந்தாலும், முடியவில்லை. உள்ளுக்குள் அவ்வளவு கலக்கம். திரும்ப சிவனேஷ்வரனை அதே வழிக்கு கொண்டு சென்று விடுவார்களோ என்று. தான் சொன்னால் கேட்க மாட்டான் என்பதும் அவளுக்கு தெரியுமே. வெளியில் முழு இருள் சூழும் வரை அப்படியே இருக்க, “சாரி..” என்றாள் அம்பை. “என்ன கோவம்ன்னு சொல்லு..” என்றான் அவன். “ம்ப்ச்.. அதை விட்டுடு..” என்றாள் அம்பை. “என்னை பத்தின்னா என்கிட்ட பேசு..” என்றான் அழுத்தமாக. விடமாட்டான் என்று புரிய, மாறன் பேசியதை சொல்லிவிட்டாள். “இதுக்கு எதுக்கு இவ்வளவு கோவம்..?” சாதாரணமாக கேட்டான். “அவங்க திரும்ப உன்னை அதே இடத்துக்கு கொண்டு போக நினைச்சா எனக்கு கோவம் வராதா..? அவங்க பிரச்சனைகளுக்கு உன் தலையை ஏன் எல்லாம் உருட்டுறாங்க..?” என்றாள். “அம்பை.. இப்போதைக்கு நான் யாருக்கும் கமிட்மென்ட் கொடுக்க போறதில்லை. சோ அதை நினைச்சு டென்சன் ஆகாத..” என்றவன், “டீ குடிப்போமா..?” என்று கேட்டு டீ குடிக்க சென்றனர். நேரம் இரவு எட்டு ஆகிவிட, அவளை வீட்டில் விட சென்றான். “உனக்கு டின்னர்..?” அம்பை கேட்க, “என்ன புதுசா புட் பத்தி எல்லாம் கேட்கிறீங்க மேடம்..?” என்றான். “மறக்கவே மாட்டிங்களா..? அப்போ என்கிட்ட வந்த புதுசுல உங்கமேல இருந்த கோவத்துல வாங்கி கொடுக்காம சாப்பிட்டேன், அதை நான் கொஞ்ச நாள்லே ரியலைஸ் பண்ணிட்டேனே, அப்புறம் என்ன..?” என்றாள். “ஹாஹா.. அப்போ நாம எப்படி எல்லாம் இருந்திருக்கோம் இல்லை..” என்றான் சிரிப்புடன். “மாத்தி மாத்தி கடிச்சுக்காதது மட்டும் தான் குறை.. பாக்கி எல்லாம் நடந்தது..” அம்பையும் நினைத்து சிரித்தாள். இப்படியே பேச்சுடன் அவள் அபார்ட்மெண்ட் வர, “நீங்களே கார் எடுத்திட்டு போங்க..” என்றாள் பெண். “அப்போ அந்த காரை என்ன பண்றது..?” என்று தள்ளி இருந்த காரை காட்டினான். “புதுசு வாங்கிட்டீங்களா..?” அம்பை அவன் காட்டிய பார்டியூன் காரை பார்த்து கேட்டாள். “இதுவும் உன் அப்பா பணம் தான், கொஞ்சம் வருஷம் முன்ன வாங்கினது. என் பசங்ககிட்ட இருந்துச்சு..” சிவனேஷ்வரன் சொல்ல, அம்பை அவனை பார்த்து தயங்கினாள். “என்ன கேட்கணும்..?” சிவனேஷ்வரன் கேட்க, “எங்க.. எங்க தங்கியிருக்கன்னு..?” அம்பை அவனை பார்க்காமல் வேறெங்கோ பார்த்து கேட்டாள். உள்ளே இருந்து கொண்டே இருக்கும் கேள்வி தான். ஆனால் கேட்க முடியவில்லை. இன்று கேட்டுவிட்டாலும், அவள் அப்பா செய்ததற்கு அவன் முகம் பார்க்க முடியவில்லை. சிவனேஷ்வரன் அவள் தலை பிடித்து தன்னை பார்க்க வைத்தவன், “பசங்களோட தான்..” என்றான். அம்பை முகம் கசங்கி போக, “அவங்க என் பசங்க அம்பை, காலேஜ் முடிச்சுட்டு இப்போ தான் வேலைக்கு போறானுங்க, ஆதித்யன் விஷயத்துல எனக்காக அவ்வளவு ரிஸ்க் எடுத்த பசங்க, அவங்களோட இருக்கிறதுல நான் சந்தோஷம் தான் படுறேன்..” என்றவன், “நீ கிளம்பு.. நேரம் ஆச்சு..” என்றான். “ஞானம் அத்தை அதிகமா தான் டின்னர் செஞ்சிருப்பாங்க, சாப்பிட்டு போ..” என்றாள். “வேண்டாம்.. நான் பார்த்துகிறேன்.. இதுக்கே உன் அப்பா என்ன ரியாக்ட் பண்ணுவார் தெரியல..” என்றான். அம்பை உடனே ஏதோ பேச வர, “நோ.. என் முன்னாடி அவரை பத்தி எதுவும் பேசாத..” என்றான். அம்பை உதட்டை சுளித்து வீட்டிற்கு சென்றுவிட, சிவனேஷ்வரனும் கிளம்பிவிட்டான். அடுத்த நாளும் சிவனேஷ்வரன் அவளை பிக் அப் செய்ய வர, அம்பை தானே கார் எடுத்தவள், “காயம் ஆறர வரை ரெஸ்ட் எடுக்கலாம் இல்லை..” என்றாள். “உன்னை ஸ்டுடியோல விட்டுட்டு அதை தானே பண்றேன்..” என்றான். அம்பைக்கும் அவனை மறுக்க முடியாமல் போக, விட்டுவிட்டவள், தானே தான் கார் எடுத்தாள். அவனை டிரைவராக கேட்டு, இவள் தான் ட்ரைவ் செய்து கொண்டிருந்தாள். இதுவே தினமும் தொடர்ந்தது. அதிகமான நேரம் சேர்ந்திருக்க ஆரம்பித்தனர். மாறன் அவனிடம் தனியே, என்கிட்ட சேர்ந்துக்கோ என்று பேசி பார்த்து விட்டுவிட்டார். அம்பைக்கு தெரிந்து அதனால் சில சில சலசலப்புகள் வந்த போதும் அவர்களுக்கான நேரம் இனிமையாக தான் சென்றது. அந்த வாரம் முழுதும் இவர்கள் நாட்கள் இப்படியே செல்ல, அங்கு ஆதிசங்கர் நிலை வேறு மாதிரி இருந்தது. மனிதர் ரூமினுள்ளே அடைந்து கிடந்தார். ஆபிஸ் செல்லவில்லை. எங்கும் வெளியேவும் செல்லவில்லை. பூரணிக்கு கணவர் இப்படி இருப்பது கவலைய கொடுத்ததோடு, என்ன செய்வாரோ என்று பயத்தையும் கொடுத்தது. இது குறித்து அம்பையிடம் பேசவில்லை. ஆதிசங்கர் மனதில் என்ன ஓடுகிறது என்று புரியாமல், தானே எதுவும் சொல்ல முடியாதே..? மனோவும் பூரணி பிஸ்னஸ் டென்சன் என்று சொன்னதை நம்பி அப்பாவை தொந்தரவு செய்யவில்லை. அக்காவிடம் அவர் குறித்து பெரிதாக பேசவில்லை. ரொம்ப அப்செட்டாவே இருக்கார்க்கா என்று சொல்லி வைத்தான். அம்பைக்கு புரிந்தது. சிவனேஷ்வரன், தன்னை பற்றிய அப்செட் அது என்பது. சிவனேஷ்வரனிடம் பேசவில்லை. பூரணியின் கவலையை கூட்ட, பலராம், இளங்கோ வந்தனர். ஆதிசங்கர் ஆபிஸ் அறைக்கு சென்று அவரிடம் தீவிரமாக பேசினர். “அவனை இப்படியே விட கூடாது, நம்ம பொண்ணு கூட அவன் பழக்கம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பிச்சிடுச்சு, இதுக்கு உடனே எதாவது செய்யணும்..” என்று இளங்கோ பேச, “நான் முதல்லே சொன்னேன் அவனை அம்பைகிட்ட அனுப்பாதன்னு, இப்போ பாரு நம்ம தலையிலே கல்லு விழுந்திடுச்சு..” பலராம் சொன்னவர், “சரி விடு.. இப்போ கூட ஒன்னும் பெருசா ஆகிடலை, ஏதாவது செஞ்சு அவனை உடனே நம்ம பொண்ணுகிட்ட இருந்து விலக்கி வச்சே ஆகணும்..” என்றார். “மிதுனுக்கு அம்பை நோ சொன்னது எனக்கு வருத்தம் தான் தவிர கோவம் கிடையாது. என் நண்பன் குடும்பம் இது, அம்பை எனக்கும் மகள் போல. அவளோட வாழ்க்கை இப்படி சிக்கல் ஆக நான் விட மாட்டேன், உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம், நீ என்ன செய்யணும்ன்னு மட்டும் சொல்லு, அடுத்த நிமிஷம் செஞ்சு முடிச்சுடலாம், நம்மகிட்ட இல்லாத பணமா, பவரா, ஆளுங்களா..?” இளங்கோ கேட்க, அங்கு சில நொடி அமைதி. ஆதிசங்கரை பார்த்து நண்பர்களுக்கு இன்னும் தான் கொதிப்பு. “நாம ஏன் செய்யணும் இளங்கோ..? அவனை வந்த இடத்துக்கே அனுப்பி வைக்கலாம்..” என்றார் பலராம். இளங்கோ கேள்வியாக பார்க்க, “ஜெயில்..” என்றார் மனிதர். “சங்கர் கொடுத்த வாழ்க்கையே பிடுங்கிட்டா..? இரண்டு வருஷத்துக்கு முன்னாடி சிவனேஷ்வரன் ஹாண்டில் பண்ண ப்ராஜெக்ட்ல ஒருத்தன் இறந்தான் இல்லை, அந்த குடும்பத்துக்கிட்ட பேசிட்டேன், கேஸ் கொடுத்து உடனே தூக்கிடுவோம்..” என்றார் பலராம். “ஆனா அது வேற ஒருத்தன் செஞ்சது தானே..?” இளங்கோ கேட்க, “அது நமக்கு மட்டும் தானே தெரியும்..” பலராம் சொல்ல, அடுத்த நொடி அதற்கான ஏற்பாடு ஆரம்பித்தது. அந்த குடும்பம் அடுத்த நாள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கேஸ் ரீஓப்பன் செய்ய காவல்துறைக்கு ஆணை வந்தது. அந்த சர்க்கிள் கிஷோர் காதுக்கு விஷயம் சென்றது. ஆதிசங்கர் பவரில் தான், அவர் வழக்கறிஞர் தான் செய்கிறார் என்று புரிய, கிஷோர் வேறு வழி இல்லாமல், கோர்ட் ஆர்டரை நிறைவேற்றும் பொருட்டு சிவனேஷ்வரனை விசாரணைக்கு எடுக்கும் கட்டாயத்திற்க்கு வந்தார். அன்று பப் நாள். அம்பை முடித்து வெளியே வர, சிவனேஷ்வரன் கார் எடுத்தான். அம்பை விரல்களை நீட்டி, மடக்கி சோம்பல் முறிக்க, “வலிக்குதா..?” என்றான். “ம்ம்.. தொடர்ந்து கம்போசிங், இதுன்னு கஷ்டமா இருக்கு, மனோ இருந்தா மசாஜ் செஞ்சிருப்பான், நீ இருக்கன்னு அவனை வேணாம் சொல்லிட்டேன்..” என்றாள். “இப்போ என்ன நான் செய்றேன்..” சிவனேஷ்வரன் காரை ஒரு கெபே முன் நிறுத்திவிட, “நீங்களா..? உங்களுக்கு தெரியுமா..?” என்றாள் அம்பை. “சொல்லி கொடுத்தா கத்துகிறேன்.. காலத்துக்கும் தேவைப்படுமே..” என்றான் கண்ணடித்து. அம்பை சிரிப்புடன் விரல்களை நீட்ட, “ஒரு விரல் கேட்டதுக்கு, இப்போ மொத்த விரலும் எனக்கு தான்..” என்று பிடித்து கொண்டவன், அம்பை கார் டேஷ் போர்டில் இருந்த ஆயில் எடுத்து அவள் சொல்ல சொல்ல மசாஜ் செய்தான். “போதும்.. இப்போ ஓகே..” அம்பை சொல்ல, விரல்களை விடவில்லை. அம்பை கை இழுக்க, ஒவ்வொரு விரலாக வருடி மெல்ல மெல்ல விட்டான். அம்பை முகம் சிவக்க, அவனை பார்க்க முடியாமல் திணறினாள். ஒரு ஏகாந்த அமைதி அங்கு. சிவனேஷ்வரன் அம்பையின் கடைசி விரலை அவனை நோக்கி தூக்க, அம்பை அவனை கண் விரித்து பார்த்தாள். சிவனேஷ்வரன் நீண்ட தவம் போல அவள் விரலை தன் முன் கொண்டு வர, கார் ஜன்னல் தட்டப்பட்டது. ஏசி குளுமையில் கார் கண்ணாடிகள் மெலிதான பனி போல படர்ந்திருக்க, அம்பை அந்த சத்தத்தில் விரலை இழுத்து கொண்டாள். சிவனேஷ்வரன் ஏமாற்றத்துடன் நெற்றி நீவி விட்டு கொண்டவன், கண்ணாடியை இறக்க, போலீஸ். சிவனேஷ்வரன் கேள்வியாக பார்த்து இறங்க, “கிஷோர் சார் உங்களை கூட்டிவர சொன்னார்..” என்றனர். “ஏன்..?” அம்பை வேகமாக இறங்கி வர, “மர்டர் கேஸ் விஷயமா விசாரணை.. எங்களோட கிளம்புங்க..” என, அம்பை, திரும்பவுமா என்று கலங்கி போனாள். சிவனேஷ்வரனிடம் புருவம் சுருங்க தீவிர யோசனை. “சரி.. நான் இவங்களை வீட்ல விட்டு வரேன்..” என்றான். “இல்லை.. கையோட கூட்டிட்டு வர சொல்லி..” போலீஸ் சொல்ல, சிவனேஷ்வரன் போன் எடுத்து கிஷோருக்கு அழைத்தவன், “அம்பையை வீட்ல விட்டு நானே ஸ்டேஷன் வரேன்..” என்றான். அவரும் சரி என்றுவிட, சிவனேஷ்வரன் அம்பையுடன் கிளம்பினான். சிவனேஷ்வரன் முகம் மிகவும் இறுக்கமாக இருக்க, அம்பை அவனை பார்த்தே வந்தாள். பாண்டி போன் வர, எடுக்க, “அண்ணாத்தை.. இது அவர் வேலை தான்.. நாங்க போய் அவரை என்னன்னு..” “பாண்டி.. அவர்கிட்ட யாரும் போக கூடாது..” என்றான் சிவனேஷ்வரன் கண்டிப்புடன். “அண்ணாத்தை..” பாண்டி கூப்பிட, போனை வைத்துவிட்டான். இங்கு அம்பைக்கு பாண்டி பேச்சு கேட்டிருக்க, அந்த அவர் டாடியா..? என்ற கேள்வி வர, அப்படி ஒரு கோவம். ஆரம்பிச்சுட்டாரா..? இப்போதே அவரிடம் செல்ல நினைக்க, “நீ எங்கேயும் போக கூடாது..” என்றான் சிவனேஷ்வரன் காரை அப்பார்ட்மெட்டினுள் நிறுத்தி இறங்கி நின்றபடி. அம்பை அவனை முறைத்து பார்க்க, கை பிடித்து அவள் வீட்டிற்கு அழைத்து சென்றவன், “இது எனக்கும் அவருக்கும் உள்ளது. அவர் என்னை என்ன செஞ்சாலும் எனக்கு சம்மதம்.. நீ இதுல தலையிட கூடாது..” என்றான் அழுத்தமாக. அம்பை மறுக்க வர, “நான் சொன்னது சொன்னது தான்.. நீ அவரை பார்க்கவும் போக கூடாது, எனக்காக எதுவும் செய்யவும் கூடாது..” என்றான். “அதை நீ சொல்லாத..” அம்பை கோவப்பட, “நான் தாண்டி சொல்வேன்.. நீ எதுவும் செய்ய கூடாதுன்னா செய்ய கூடாது தான், மீறி செஞ்ச என்னை திரும்ப பார்க்க மாட்ட நீ..” என்றான். நிச்சயம் செய்வேன் என்ற உறுதி தெரிய, அம்பை அவனை வெறித்த பார்த்து நின்றிருக்க, கார் கீயை அவள் கை பிடித்து அழுத்தம் கொடுத்து வைத்தவன், போலீஸ் ஸ்டேஷன் கிளம்பிவிட்டான்.