அத்தியாயம் 1

சுடு சொல்லால் சுருங்கிப் போகும் முகம்…. கடும் செல்லால் கருகிப் போகும் இதயம்…. திரும்பப் பெற முடியாதவை மூன்று எனக் கூறுவார்கள். தொடுக்கப்பட்ட அம்பு., கழிக்கப்பட்ட காலம்., விடுவிக்கப்பட்ட சொற்கள்.,எனவேதான் அவைகளை நாம் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்

திருமண மண்டபம் கலை கட்டி இருக்க இருவீட்டாரின் சொந்தங்கள் சூழ கெட்டி மேளம் முழங்க சொந்தங்களின் வாழ்த்துக்களோடு இருமனம் இணையும் திருமணம் நடந்தது….. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் ஒவ்வொரு யோசனையில் இருந்தனர்……

அக்னி வலம் வரும்போது அவள் கையைப் பற்றியிருந்த அவன் கையின் அழுத்தம் சொல்லியது அவன் கோபத்தின் அளவை….

இவ்வளவு கோபம் இருப்பவன் எதற்காக தன்னை கல்யாணம் செய்து கொண்டான் என்று யோசனையுடன் அவள் அவன் முகம் பார்த்தால் அங்கு கோபத்திற்கான சிறு அடையாளம் கூட இல்லை….. சிரித்த முகமாகவே இருந்தான் அவனது செய்கையில் மட்டும் கோபத்தையும் ஒதுக்கத்தையும் இவள் மட்டும் அறியும் வண்ணம் காட்டிக் கொண்டிருந்தான்…

இடையிடையே அவளை தனியாக வைத்துவிட்டு நண்பர்களுடன் சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்… திருமண சடங்கு சம்பிரதாயங்கள் மூடிய மணமகளுக்கான அறையில் ஓய்வு எடு என்று பெரியவர்கள் அவளைத் தனியே விட்டு விட்டு சென்ற பிறகு நேற்றிலிருந்து நடந்தவற்றை அசைப்போட தொடங்கினாள்….

நேற்று மாலை நிச்சயதார்த்தம் நடந்ததிலிருந்து அவனது ஒதுக்கமும் கோபமும் இவளுக்கு மட்டும் தெரிந்தது… இல்லை தனக்கு மட்டும் அப்படி தோன்றுகிறதா… என்று யோசித்துப் பார்த்தால்., ஏன் அப்படி என்று அவளுக்கு புரியவில்லை…. நிச்சயதார்த்த மோதிரம் போடும் போதும் ஏதோ தொடக்கூடாத பொருளை தொட்டது போல விரல் தொட்டு மோதிரம் போட்டதும்…. இரவு நண்பர்களின் கிண்டலோடு உணவு உண்ணும்போது அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்தே அல்வாவை எடுத்து இவளுக்கு உன்ன கொடுத்ததும்…. அவன் வேண்டுமென்றே செய்தது என்று இவளுக்கு தெரிந்தது… ஏனெனில் உணவு பரிமாறுபவர்களிடம் அவளுடைய சகோதரன் அவளுக்கு பிடிக்காது வைக்க வேண்டாம் என்று சொன்னது அனைவருக்கும் தெரியும் …. அதைக் கொண்டே அவன் வேண்டுமென்றே அல்வாவை எடுத்து அவளை சாப்பிட வைத்தான்….

நண்பர்கள் கூட…. ஏண்டா அந்த பொண்ணுக்கு பிடிக்கா தாமே என்றதற்கு….

எனக்கு பிடிக்குமே என்று சொல்லி மற்றவர்களின் வாயை அடைத்தான்…..

சாப்பிட்டு பழகிக்கோ மா அவனுக்கு பிடிக்குமாம்… என்று அவனது தோழர்கள் அவளிடம் சொன்னார்கள்…

பதிலே பேசாமல் கண்ணில் தேங்கிய கண்ணீரை மறைத்துக்கொண்டு…. மருந்தை முழுங்குவது போல முழுங்கி வைத்தாள்…

திருமணப் பட்டுச்சேலை வேண்டுமென்றே மிளகாய் பழ சிவப்பில்அவனது தேர்வில் எடுத்திருந்தது…. இவள் விருப்பம் அங்கு கேட்கப்படவில்லை…..

காலை பார்லர் பெண்களின் கைவண்ணத்தில் அந்த சேலை இவளுக்குப் மிகவும் அழகாக இருக்கிறது என்னும் படி அலங்காரம் செய்யப்பட்டது…. அவளுக்கே ஒரு நிமிடம் இது நமக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது… என்று எண்ணும்படி இருந்தது….

அவள் நந்தினி, செல்வகுமரன்…. புவனேஸ்வரியின்… ஒரே மகள்., மகன் மூத்தவன் அவனுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது அவன் அசோக்., அவன் மனைவி தாரிணி….

அவன் இளமாறன், பாக்கியநாதன்… தேவகி… அவர்களின் மூத்த மகன் இரண்டாவதாக ஒரு பெண் நர்மதா….

நர்மதா இந்த வருடத்தோடு படிப்பை முடிக்கிறாள்… அவளுக்கும் திருமணத்திற்கு வரன்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்…. இளமாறன் க்கு முதலில் அமையவும் பேசி முடித்துவிட்டார்கள்….

இரண்டு குடும்பமும் சொந்தம்தான் செல்வகுமாரன் கிரானைட் பிசினஸ் நடத்துபவர்….. மிக வசதியான குடும்பம்…

பாக்கியநாதன் பேங்க் மேனேஜர்….நடுத்தர குடும்பம்…. அதனால் அதிக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தது ஏதாவது விசேஷங்களில் சந்தித்துக்கொண்டால் நலவிசாரிப்போடு சரி….. மற்றபடி அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள்….

இளமாறன் எம்.இ முடித்துவிட்டு சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தான்…. அதே கம்பெனியின் மூலமாக அவனுக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது… அமெரிக்கா சென்ற பிறகு அவனது வசதி வாய்ப்புகள் பெருக…. அவனும் அவனது திறமையினால் அங்குள்ள வேலையை தக்க வைத்துக் கொண்டான்….

இரு வீட்டுக்கும் பொதுவான ஒரு சொந்தக்காரரின் மூலமாகவே இவர்களின் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.,.

காலை திருமணத்தின்போது தாலி கட்டி முடிச்சுப் போடும் போது தன் சகோதரி இடம் கொடுக்கவில்லை… மூன்று முடிச்சும் அவனே போட்டான்…. சொந்தங்கள் வாழ்த்தி முடிந்த பின்பு தனியே அமர்ந்திருக்கும்போது வேண்டியவர்களை அறிமுகப் படுத்துவது போல அவளிடம் பேசியவன்….

வெளியே சிரித்தபடி….. ஆனால் சற்று கோபமான குரலில்….

 இப்போ நீ நந்தினி செல்வக்குமரன் இல்ல…. நந்தினி இளமாறன்….இத மனசில வச்சிகிட்டு எப்படி இருக்கணுமோ.., அப்படி இருந்துக்கோ என்றான்…. அதற்குள் நண்பர்கள் அருகில் வர சிரித்தபடி பேச்சை நிறுத்தி விட்டான்…

அவளுக்கு ஓரளவு விஷயங்கள் புரிந்தாலும் அவன் வாயிலிருந்து வரும் வரை அமைதி காக்க வேண்டும் என்று இருந்தாள்…

இதே இது கல்லூரியில் படிக்கும் போது இருந்த நந்தினியாக இருந்தால் இந்நேரம் பிரச்சனை தொடங்கி இருக்கும்…. ஆனால் அவளுக்கு அனுபவம் நிறைய பாடங்களை கற்றுத் தந்திருந்தால் அமைதியாக இருந்தாள்…..

இப்பொழுது தனியாக இருந்து இவற்றை யோசித்துக்கொண்டிருந்தாள்….

அதேசமயம் அவளது அண்ணி வந்து அவளை அழைக்க…. பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வெளிவந்தாள்…

நந்தினி கிளம்பஆரம்பிக்கணும் அவங்க வீட்டுக்கு போகணும்….

ம்ம்ம்… என்ற படி யோசனையோடு கிளம்ப தயாரானாள்…..

இளமாறன் வீட்டில் புதுமணத் தம்பதியர் களுக்கான வரவேற்பு நன்றாகவே இருந்தது….

தாரிணியோ தேவகியிடம் போய் நின்றாள் பெரியம்மா நந்தினி கான டிரஸ்ச எங்க வைக்கணும் அவளோட திங்ஸ் எல்லாம் இந்த பேக்ல இருக்கு என்று வந்து நிற்கவும்…..

அவன் இருக்கிற வரைக்கும் மாடி ரூம் யூஸ் பண்ண சொல்லி இருக்கு…. அவன் ஊருக்கு போன பிறகு., அவன் ரூம் கீழ இருக்கு அதுல நந்தினி இருந்துக்கலாம்… இப்போ ரெண்டு பேருக்கும் தேவையான எல்லாத்தையும் மாடியில் எடுத்து வைக்கணும் என்று தேவகி சொன்னாள்…

பேசிக்கொண்டே அவர்களுக்கு தேவையானதை தாரணியின் உதவியுடன் வீட்டிற்கு வந்த உறவில் இளமாறனின் அக்கா முறை உள்ள பெண் உடன் சேர்ந்து எடுத்து வைத்தனர்…..

ஒரே ஊர் என்பதால் தாரிணி அவளை சம்பிரதாயங்களுக்காக இளமாறனின் அறைக்குள் அறிவுரையோடு அனுப்பும் வரை உடனிருந்து விட்டு அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு சென்றாள்….

மனதிற்குள் ஒரு பதட்டம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் உள்ளே சென்றால் நந்தினி….

உள்ளே வரவும்….. இளமாறன் அமைதியாக எழுந்து வந்து கதவைத் தாழ் போட்டான். எதுவும் பேசாமல் அறையிலிருந்த ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்தான். வெளியிலிருந்து யாரும் பார்த்தால் தெரியாத அளவிற்கு இருக்கும் ஜன்னல்கள் அனைத்தையும்…..

உங்க வீட்ல பார்மாலிட்டீஸ் எதுவும் சொல்லிக் கொடுக்கவில்லை யா….

அவள் அமைதியாக யோசித்துக் கொண்டே இரண்டு அடி எடுத்து வைக்கவும்… அங்கேயே நில்லு எனக்கு கேட்டு கிடைக்கிற மரியாதை தேவையில்லை…. மரியாதை என்கிறது மனசுல இருந்து வரணும்…. உன்ன பத்தி எனக்கு தெரியும்…. நீ மனசுல என்ன பேசிட்டு இருப்ப ன்னு….இவன் கால்ல எல்லாம் விழனுமா ன்னு தானே யோசிச்ச….

தலையை குனிந்து கொண்டே…. நிமிர்ந்து பார்த்தா முகத்தைப் பார்த்து கண்டுபிடிப்பாங்க…. இருந்தாலும் எதையாவது சொல்லி உசுப்பேத்தி விட்டுறது…இதே வேலையா போச்சு…. மனசுக்குள்ள தான் நினைச்சிகிட்டா…. வெளியே சொல்ல முடியாது…. அவன் இருக்கிற கோபத்துக்கு பதில் பேச கூட பயந்தாள்…..

இந்தக் கோபம் எதற்கு என்று தெரியவில்லையே…. என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்…. பழைய விஷயங்கள் மனதில் இருந்து இருந்தால்….

கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆகணும்…. தண்ணால வரட்டும் அதுவரை அமைதியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்….

அவனும் அவளை அமர கூட சொல்லவில்லை….. நிற்கவைத்து பேசிக் கொண்டிருந்தான்…..

எதுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்….. ஏன் கோபப்படுறேன் இதெல்லாம் யோசனையா இருக்கு இல்ல…. பழைய விஷயங்கள் எல்லாம் மனசுல வச்சி இருந்தா நம்ம கல்யாணம் பண்ணி இருக்க மாட்டான் என்று யோசிக்க இல்ல….. ஆமா நீ எப்படி சம்மதித்த கல்யாணத்துக்கு…..

அவள் அமைதியாகவே நிற்கவும்….. கோபத்துடன் சொன்னான்.. கேள்வி கேட்டா பதில் சொல்லணும்….. அமைதியா இருந்த நடக்குறதே வேற…. என் கேள்விகளுக்கு எனக்கு பதில் கிடைக்கணும் புரிஞ்சதா…. என்றான்…. கோபமாக….

எதுக்கு மாடிக்கு வந்தேன் தெரியுமா கீழ கல்யாணமாகாத தங்கச்சி இருக்கா அப்படிங்கற காரணத்துக்காக இல்ல…. உன் கூட கொஞ்சி… குலவுவதற்காக மாடிக்கு வரல…. நான் பேசுறது கீழ கேட்கக்கூடாது…. என் மனசுல இருக்குற கோபம் எங்க வீட்டுல உள்ளவங்களுக்கு தெரியக்கூடாது… அதுக்காக தான் மாடி….

என்ன கோபம் என்று தெரியாமல்…. அவன் முகத்தையே பார்த்தபடி நின்றாள்…..

எப்படி சம்மதிச்ச ன்னு கேட்டேன்…. இன்னும் பதில் வரல…..

நான் பெங்களூரில் வொர்க் பண்ணிட்டு இருந்தேன்….

ஏன் உங்க அப்பாவுக்கு இருக்கிற காசு பத்தாதாமா….

அவள் நிமிர்ந்து அவனை பார்க்கவும்…. ம்ம் சொல்லு என்று கையசைத்தான்…..

குனிந்து கொண்டே…. இவரு பெரிய மகாராஜா கையை அசைக்க நான் சொல்லணும்….. மனதிற்குள் தான் வெளியே சொல்ல முடியாது அல்லவா… அவன் எதற்கு கோபமாக இருக்கிறான் என்று இப்போது வரை சொல்லவில்லை…

இதில் இது வேறா….

திடீர்னு ஒரு நாள் போன் பண்ணி வேலையை ரிசைன் பண்ணிட்டு வரச்சொன்னாங்க…… இங்க வந்ததுக்கு அப்புறம் தான் தெரியும் மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சு ன்னு….. அது வரைக்கும் தெரியாது….

நான் தான் மாப்பிள்ளை தெரிஞ்ச அப்போ சம்மதித்து இருக்க மாட்டியே…..

அவள் அமைதியாக நிற்கவும்… ஓ நீ தான் வீட்டுக்கு ரொம்ப நல்ல பிள்ளையே கிழித்த கோட்டை தாண்ட மாட்ட இல்ல….

உனக்கு .யூ.எஸ் க்கு விசா கிடைக்கலை தெரியுமா….

ம்ம்ம்…… சொன்னாங்க…..

ஆனா…. நான் உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா….. நான் உனக்கு விசா ட்ரை பண்ணவே இல்ல…..

அவள் அமைதியாக இருக்கவும்…என்ன பதிலே இல்ல….. கெஸ் பண்ணி இருந்தயா…. நீதான் ஜகஜால கில்லாடி ஆச்சே….கண்டுபிடிச்சி இருப்ப….நான் உனக்கு விசா பற்றி யோசிக்கக் கூட இல்லை…. உன்ன கூட்டிட்டு போற ஐடியாவும் இல்லை…..

என்ன அமைதியாக இருக்க….. பேசுவீயே வாய் கிழிய பேசுவீயே…. என்ன ஆச்சு… உன் பேச்செல்லாம்…. பேசுறத விட்டுட்டுடீயா… இல்ல மௌனவிரதமா…. உனக்கும் சேர்த்து நான் பேசுறேனோ….

என்ன பொருத்த வரைக்கும் நீ யாரோ எவரோ தான்….. ஆனா மத்தவங்க பொறுத்த வரைக்கும் நீ என்னோட வைஃப்… அதை மறந்து விடக்கூடாது…. இந்த வீட்டில்தான் இருக்கிற……… என் பர்மிஷன் இல்லாம எங்கேயும் போகக்கூடாது…… உங்க அப்பா வீட்டுக்கு கூட புரியுதா…..

“தீரா கோபங்கள்

தீர்வு தெரியவில்லை

கனல் தெரிக்கிறது

உன் வார்த்தைகளில்

என்ன செய்வேன் என்று

மனது தவிக்கிறது

மாற்றங்கள் வருமா….

மருகி நிற்கிறேன் நானும்….”

நான் என்னத்த பேச எல்லாத்தையும் நீங்களே தான் பேசுறீங்களே பேசுங்க பேசுங்க என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அமைதியாய் இருந்தாள்…..

கட்டிலில் இருந்து ஒரு தலையணையும் போர்வையும் எடுத்து அவள் மேல் வீசினான்… உங்க அப்பா சொன்னாரு ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு ன்னு…. இனிமேல் தரையில படு…. அப்புறம் அந்த ஏசி மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது….. பேன் மட்டும்தான் ஜன்னலை திறந்து விட்டாச்சி அவ்வளவுதான்……

என்ன யோசிக்க அவன் போனதுக்கப்புறம் ஏசி போட்டு தூங்குனா தெரியவா போகுதுன்னு….. அதை நான் பார்த்துகிறேன்…. நீ யோசிக்காத….. நீ இப்படித்தான் இருப்ப…..இப்படித் தான் இருக்க போறே….

உங்க அப்பா தந்த சீரு செனத்தி இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன் தெரியுமா….. ஏன் சொன்னேன் தெரியுமா… அதெல்லாம் கொண்டுவந்தா உனக்கு திமிரு ஜாஸ்தியாகி விடும்….

திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு அவள் அண்ணன் சொல்லிக் கொண்டிருந்ததை நினைத்துக் கொண்டாள்…. சீர் வேண்டாம்னு சொல்லிட்டாங்க….. இங்க செட்டிலாகும்போது பாத்துக்கலாம்…… இப்ப எதுவும் வேண்டாம்…. என்று சொன்னதை பற்றி வீட்டினரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்…..

பணம் அது எப்படி எல்லாம் மனிதனை மாற்றி பேச வைக்கிறது…… அமெரிக்க மாப்பிள்ளை ன்ன உடனே உங்க அப்பா சம்மத்திச்சிட்டார்…… இல்லாட்டி என்ன பாத்தா உங்க அப்பாவுக்கு எப்படி தெரிஞ்சது… ன்னு உனக்கு தெரியும்….. உங்க அப்பா வாயிலிருந்து வந்த வார்த்தை.., எங்க வீட்டில் இருக்கும் மத்தவங்க யாருக்கும் தெரியாது…. ஆனா எனக்கு தெரியும் அப்படி பேசின ஆளு இன்னைக்கு வலிய வந்து பொண்ணு கொடுக்குறாரு….. அதுக்கு காரணம் அமெரிக்கா., பணம்…… அதனால தாண்டி நீ இங்க இருக்க போற…..

அப்புறம்…. எங்க வீட்ல வேலைக்கு ஆள் எல்லாம் கிடையாது…. நீ தான் செஞ்சுக்கணும்…

அம்மா ஹெல்ப்க்கு ஆள் வைக்க போறதா சொல்றாங்க….. ஆனா உன் வேலையை நீ தான் செய்யணும் யார்கிட்டயும் ஒப்படைக்க கூடாது….

ம்ம்ம்….. என்ற படி தலையாட்ட…..

போய் சொல்லணும் ன்னா சொல்லிக்கோ…… எனக்கு அதைப்பற்றி பிரச்சினை கிடையாது…. சொல்லிட்டு உங்க வீட்ல போய் வாழாவெட்டியா இருந்துக்கோ….

அவள் கால் மாற்றி நிற்கவும்……

என்ன ஆடிக்கிட்டே நிக்கிற….

கால் வலிக்குது உட்காரட்டுமா…..

பரவாயில்ல பெர்மிஷன் கேக்குற அளவுக்கு போயிருக்க….. மாறிட்டயா என்ன…. மாறிட்டன்னா மழை கொட்டு கொட்டுன்னு கொட்டப் போகுது…..

அவள் முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ…. போய் தூங்கு என்றதோடு திரும்பி படுத்துக் கொண்டான்….

போர்வையை விரித்து விளக்கை அணைத்துவிட்டு படுத்தவள்….. இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவனின் வரிவடிவத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்… ஏன் இளா இப்படி மாறிட்ட என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்…… நீயா இப்படி பேசின…

அதேநேரம் அவனும் இதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான்….. ஏன்டி என்னை இப்படி பேச வைக்கிறீங்க எல்லாருமா…..

அவளோ தூக்கமின்றி படுத்துக்கொண்டு… கல்லூரி காலத்தை நினைத்துக் கொண்டிருந்தாள்…….

வானம் வசப்படுவதன் ஆரம்பம் வார்த்தைகளில்., வளர்வது ஆழ்மனதில்., முற்றுப் பெறுவது உழைப்பில்., படைப்பாக்கம் இல்லாத நாக்கு அழிவுக்கு ஆளாக்கும்.”