வர்ஷாவின் வீட்டினருக்கு நேரில் சென்று பிறந்த நாளுக்கு சொல்லிவிட்டு, அப்படியே விஜயனின் பையனை பார்த்து விட்டு வரலாமே… என துர்கா சொல்ல…. ஆதவன் சரியாகப் பதில் சொல்லவில்லை.
“விஜயன் தான் இங்க வரானே… நான் அப்போ அவன் பையனை பார்த்துக்கிறேன். நீங்க வர்ஷா வீட்டுக்கு போன்ல சொல்லிக்கோங்க.” என்றான்.
பிரமிளா தினமுமே இரவு ஒன்பது மணிக்கு மேல்… அவள் அம்மாவுக்கு அழைத்து ஆதவனைப் பற்றி மறைமுகமாக விசாரித்து விடுவாள். அவன் எங்கே போனான் வந்தான் என்று… அவளுக்குத் தம்பி குடிப்பானோ என்று பயம்.
தம்பி இப்போது வேறு போதையில் இருக்கிறான் என்று அவளுக்குத் தெரியவில்லை இரவு உணவு எட்டு மணிக்கு முடிந்தால்… ஆதவன் ஒன்பது மணிக்கெல்லாம், உறங்கப் போகலாம் என மனைவியை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்று விடுவான்.
ஆருஷி அவள் அப்பாவின் கைபேசிக்கு அழைத்து, “அப்பா நீங்க இவ்வளவு தூரம் அலையணும்னு இல்லை. உங்களால வர முடியலைனா பரவாயில்லை.” என்று சொல்ல….
“அது எப்படிச் சம்பந்தி கூப்பிட்டு வராம இருக்கிறது. அது மரியாதையா இருக்காது. நாங்க கண்டிப்பா வரோம்.” என்றார்.
“ஆமாம் உங்க சம்பந்திங்க உங்களை வரவேற்திட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க.”
“அவங்க மேல தப்பு இல்லைமா… இவ்வளவு ஆனாபிறகும் உங்க வீட்ல இருந்து நகை பணம் வாங்கிட்டு வான்னு அவங்க சொன்னாங்களா… நமக்கு இது போல வேற நல்ல இடம் கிடைச்சிருகாது.” என்றார்.
இந்த அப்பாவை திருத்த முடியாது என ஆருஷி நினைத்துக் கொண்டாள்.
முன்தினம் நள்ளிரவில் வந்து இறங்கி இருந்த விஜயன், வெள்ளிக்கிழமை மதியம் போல மனைவி மகனுடன் இங்கே வந்துவிட்டான். மாமனார் வீட்டில் அவர்கள் பெண்ணுக்காக வாங்கிக் கொடுத்திருந்த விலை உயர்ந்த காரை எடுத்து வந்திருந்தான்.
எல்லோரும் வாயிலுக்கே சென்று அவர்களை வரவேற்க, தான் மட்டும் செல்லவில்லை என்றால் தவறாகத் தோன்றும் என ஆருஷியும் சென்றாள்.
இவர்கள் அவர்களை வரவேற்க… அவர்கள் பதிலுக்கு இவர்களை நலம் விசாரிக்க என எல்லோரும் சேர்ந்து உள்ளே வந்தனர்.
ஆருஷிக்கு சமையல் அறையில் வேலை இருக்க… அவள் பார்த்துக் கொண்டிருக்க… ஆதவனும் விஜயனும் அருகருகே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். விஜயனின் மடியில் இருந்த அவனின் மகனை ஆதவன் வாங்கித் தன் மடியில் வைத்துகொள்ள… அதைப் பார்த்து விட்டு யஸ்வந்த் அங்கே வர… அவனை விஜயன் தூக்கி வைத்துக் கொண்டான்.
“பெரியப்பா… சித்தப்பா…” எனப் பிள்ளைகளுக்கு உறவுமுறை சொல்லிக் கொடுத்தனர்.
“எத்தனை நாள் டா லீவு.”
“திரும்பப் போக டிக்கெட் இன்னும் போடலை ஆதவா… வேலை இருக்கிறதை பொருத்து. ஆனா கண்டிப்பா ஒரு மாசம் இருப்பேன்.”
“ஓ… அவ்வளவு நாள் இருப்பியா? ஆமாம் நீ ரொம்ப நாள் வரலை இல்ல…”
அவள் அம்மா வீட்டில் இருந்து கொண்டு வந்தவைகளைக் கடைபரப்பி… “உங்க அத்தைக்கு நீ கண்டிப்பா இதைக் கொண்டு போகணும்னு சொல்லி அப்பாவே கொடுத்தாங்க அத்தை.” என வாங்கி வந்த தின்பண்டங்களைக் கொடுத்தவள்,
“நான் எப்பவும் அம்மா மீன் குழம்பு வச்சா… எங்க அத்தை வைக்கிறது போல இல்லைன்னு சொல்வேனா… உங்க மாமியார்கிட்டயே போன்னு அம்மா சொல்வாங்க அத்தை.” என வந்ததும் வர்ஷா அவள் வேலையை ஆரம்பித்திருந்தாள்.
பக்கத்திலேயே இருந்து கொண்டு மாதம் ஒருமுறை கூட வந்து எட்டிப் பார்ப்பது இல்லை. ஆனால் அது தெரியக் கூடாது என்பதற்காக… இங்கே வரும் போது இனிக்க இனிக்கப் பேசுவாள்.
“இன்னைக்கு மீன் குழம்பா அத்தை?”
“இல்லை இன்னைக்கு வெள்ளிக்கிழமைன்னு சாம்பார் தான். ஆருஷி தான் செஞ்சா… பசிக்குதா சாப்பிடுறியா?” துர்கா கேட்க…
“இல்லையில்லை… சும்மா தான் கேட்டேன்.” என்றாள்.
“இங்க பார்த்தியா உனக்கு விளையாட தம்பி வந்திருக்கான்.” ஆதவன் யஸ்வந்திடம் சொல்ல… விஜயனும் அண்ணனோட விளையாடனும் எனத் தன் மகன் தர்ஷனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆருஷி சென்று தர்ஷனுக்குக் கணவன் வாங்கி வந்திருந்த உடைகளைக் கொண்டு வந்து கொடுக்க… விஜயன் மனைவியிடம் செய்கை காட்டினான். யஸ்வந்துக்கு விஜயன் வாங்கி வந்தவைகளை எடுத்துக் கொண்டு வர்ஷா வந்தாள்.
“அண்ணி நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாம் சவுக்கியமா?” என விஜயன் ஆருஷியை விசாரிக்க…. வர்ஷாவுக்குக் காந்தவே செய்தது.
“எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க என்ன சவுத் ஆப்ரிக்கா போய், அங்க இருக்கிறவங்க மாதிரியே ஆகிட்டீங்க போல…” எனக் கொழுந்தனை ஆருஷி கேலி செய்ய….
“அப்படி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியலையே…” என வர்ஷா முந்திக்கொண்டு சொல்ல….
“இரு வர்ஷா… அப்போ எல்லாம் லேசா தாடி வச்சிருப்பேன். இப்போ மீசை கூட இல்லையேன்னு அண்ணி கிண்டல் செய்யுறாங்க.” என்ற விஜயன், “அங்க இருக்கிற வெயிலுக்கு நான் கருகி போகாம இருக்கிறதே பெரிசு அண்ணி. காலையில எழுந்து வேலைக்குக் கிளம்பி போகத்தான் நேரம் இருக்கும். தாடி மீசை எல்லாம் வச்சு…. அதை வேற நேரத்துக்கு ட்ரிம் பண்ணனும். அதுதான் சுத்தமா வழிச்சிடுறது.” என்றான் நீங்க விளக்கமாக.
விஜயன் எப்போதுமே அண்ணியிடம் நன்றாகப் பேசுவான். அதனால் ஆருஷியும் அவனிடம் பேசுவாள்.
விஜயன் கட்டிடக்கலை நிபுணன். இங்கே மும்பையில் தான் அவனது தலைமை அலுவலகம் இருக்கிறது. ஆனால் ஒப்பந்தத்தின் பேரில் சவுத்ஆப்ரிக்கா சென்றிருக்கிறான். அவனுக்கும் நல்ல சம்பளமே. ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஊருக்கு வருவான்.
விஜயன் நிறைய விளையட்டுச் சாமான்கள் யஸ்வந்துக்காக வாங்கி வந்திருந்தான். அதை யஷ்வந்திடம் கொடுக்க… விளையாட்டுச் சாமான்கள் என்றாலே பிள்ளைகளுக்குப் பிடிக்கும் தானே… அதனால் அதை யஸ்வந்த் ஆர்வமாக வாங்கிக்கொள்ள… “தம்பியோடு சேர்ந்து ரெண்டு பேருமா விளையாடுங்க.” என்றான் ஆதவன்.
ஹாலில் பாய் விரித்திருக்க… யஸ்வந்தும் தர்ஷனும் அதில் உட்கார்ந்து விளையாட….. பேரன்கள் இருவரையும் சேர்த்து பார்ப்பதே துர்காவுக்குக் கண்ணுக்கு நிறைவாக இருக்க…. விஜயன் அவர்கள் இருவர் விளையாடுவதையும் வீடியோ எடுத்தான்.
துர்கா பேரன்கள் இருவருக்கும் வெள்ளி தட்டில் பருப்பும் நெய்யும் சேர்த்த சாதமும், கீரையும் எடுத்து வந்து ஊட்டிவிட… இருவரும் விளையாடியபடி உண்டு முடித்தனர்.
பிறகு மற்றவர்கள் உண்ண… மகன்கள் அம்மாவை தங்களோடு உண்ண சொல்ல… துர்காவும் கணவர் பிள்ளைகளோடு சேர்ந்து உணவருந்த… ஆருஷியை முந்திக் கொண்டு வர்ஷா பரிமாறினாள்.
எப்போதுமே சுலபமான வேலைகள் மற்றும் மற்றவர் பார்வைக்குப் படும்படியான வேலைகளைத்தான் வர்ஷா செய்வாள். இப்போதும் அவள் முந்திக் கொண்டு செய்ய…
சோறு, சாம்பார், இரண்டு வகைக் காய்கறிகள், அதோடு தயிர், அப்பளம் என இருந்த எல்லாவற்றையும் கொண்டு வந்து உணவு மேஜையில் வைத்து விட்டு, ஆருஷி சென்று பிள்ளைகளுடன் உட்கார்ந்து விட்டாள்.
அண்ணனும் தம்பியும் விளையாட்டுச் சாமான்களை வைத்து முதலில் நன்றாகத்தான் விளையாடிக் கொண்டிருந்தனர்.
தர்ஷன் கையில் வைத்திருந்த விளையாட்டுச் சாமானால்… யஸ்வந்த் மண்டையில் அடித்து விட்டான். சின்னப் பையன் தான் அவ்வளவு வலிமையாக அடிக்கவில்லை தான். ஆனால் யஸ்வந்தும் சின்னப் பிள்ளை அல்லவா… அவனுக்கு வலித்து விட… அழுது விட்டான்.
அச்சச்சோ என எல்லோரும் பதறிப் பார்க்க… ஆருஷி யஸ்வந்தை சமாதானம் செய்ய… அதற்குள் கைகழுவி கொண்டு வந்த ஆதவனும் விஜயனும் யஸ்வந்திற்குக் காயம் எதுவும் பட்டு இருக்கிறதா என ஆராய… காயம் எதுவும் இல்லை.
இருவரும் மீண்டும் சென்று உண்ண…. இப்போது யஸ்வந்த் பதிலுக்குத் தம்பியை அடிக்க வர… ஆருஷி தர்ஷனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டவள், “அடிக்கக் கூடாது டா… தம்பி சின்னப் பையன்.” எனச் சொல்ல… தர்ஷனும் எப்போது யஸ்வந்தை அடிக்கலாம் என்று தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“தர்ஷன் நீதான ஆரம்பிச்ச…”
“அண்ணி அவன் அடிச்சா லேசா ஒரு அடி வைங்க.” என்றான் விஜயன்.
ஆருஷி இருவரும் சண்டை போடாமல் பார்த்துகொள்ள… எல்லோருக்கும் பரிமாறிவிட்டு, ஆருஷியோடு சேர்ந்து உண்ணுவோம் என்று நினைக்காமல்… வர்ஷாவும் தனக்குப் பரிமாறிக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.
“அண்ணியோட சாப்பிட வேண்டியது தான…” என விஜயன் கேட்க…
“எனக்குப் பசிக்குது.” என்று விட்டாள். வந்ததும் கேட்க வேண்டுமே என ஆருஷியை நலம் விசாரித்தாள். அவ்வளவு தான், அதன் பிறகு பேசவே இல்லை.
ஆதவன் உண்டு முடித்தவன், ஒரு இலை எடுத்து விரித்து, தண்ணீர் தெளித்து, அதில் எல்லா உணவு வகைகளையும் பரிமாறியவன், “ஆருஷி நீ வந்து சாப்பிடு. நான் இவங்களைப் பார்த்துக்கிறேன்.” என,
ஆருஷி எழுந்து வந்தவள், கணவன் பரிமாறியிருப்பதைப் பார்த்து விட்டு, “நான் போட்டுக்க மாட்டேனா.” என்றாள் புன்னகையுடன்.
அண்ணனையும் அண்ணியையும் விஜயன் புன்னகையுடன் பார்த்திருக்க… இவன் இப்படி எல்லாம் செய்ய மாட்டானே… என்று துர்கா யோசனையுடன் பார்த்திருந்தார்.
“ஒன்னு எப்போ திருப்பி அடிக்கலாம்னே பார்த்திட்டு இருக்கு.” என மகனை காட்டி சொன்ன ஆருஷி, “அடிச்சிடப் போறான் பார்த்துக்கோங்க.” என்று சொல்லிவிட்டு உணவு உண்ண உட்கார்ந்தாள்.
ஆருஷி உண்பதிலும் வெகு நிதானம் தான். அவள் மெதுவாக உண்ண…. வர்ஷா உண்டு முடித்து எழுந்து கொண்டாள்.
ஆதவன் அசந்த நேரம் யஸ்வந்த் தர்ஷனை திருப்பி அடித்திருந்தான். ஆனால் லேசான அடிதான்.
அழுத மகனை தூக்கி சமாதானம் செய்த விஜயன்,” நீதானா முதல்ல அண்ணனை அடிச்ச…. இனிமே அடிப்பியா?” எனக் கேட்டுக் கொண்டிருக்க…. வர்ஷா அவனிடம் இருந்து மகனை வெடுக்கென்று பறித்தவள். அவர்கள் அறைக்குச் சென்று விட்டாள்.
“தம்பி டா சின்னப் பையன் உன்னைத் தெரியாம அடிச்சிட்டான். நீ திருப்பி அடிப்பியா… அடிக்கக் கூடாதுன்னு நீதான் தம்பிக்கு சொல்லணும்.” என ஆதவன் சொல்ல…
“ரெண்டுமே சின்னப் பிள்ளைங்க. அதுங்களுக்கு என்ன தெரியும்?” என்றார் ஈஸ்வர்.
ஆதவன் பாயில் படுத்திருக்க… யஸ்வந்த் அவன் மீது ஏறி படுத்துக் கொண்டான். மகனை தட்டிக் கொடுத்தபடி ஆதவன் டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.
“அடி ரொம்பப் பட்டுடுச்சா…” என அருஷி விஜயனிடம் கேட்க… அவன் மகனை பார்க்க சென்றான்.
வர்ஷா கட்டிலில் படுத்திருக்க… பக்கத்தில் உட்கார்ந்து தர்ஷன் விளையாடிக் கொண்டிருந்தான். விஜயன் மகனுக்கு அடி பட்டிருக்கிறதா என்று பார்க்க…
“இன்னும் எத்தனை நாள் நான் இதை எல்லாம் பொறுத்துக்கணும்?” என வர்ஷா கேட்க….
ஆதவனின் தம்பி விஜயன், பிறகு அவன் மட்டும் எப்படி இருப்பான். ஆதவனே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு விஜயன் பேசுவான்.