இல்லம் சென்றடையும் வரை கேள்விகள் கேட்டு துளைத்து விட்டாள் வருணா. ‘இது வாயா இல்லை வேறு ஏதாவதா திறந்த வாயை மூடாமல் பேசி கொண்டு வருகிறாளே’ என எரிச்சல் மேலோங்கினாலும் சிறு பிள்ளை அவளின் இயல்பு இது தான் என்று ராகவன் முன்பே கூறிட, அவளின் நச்சரிப்பை பொறுத்து கொண்டான் பாலாஜி.
அவனுக்கு முன்பாகவே இறங்கி முன்னே சென்றவள் உள்ளே செல்லாமல் வாசலில் தயங்கி நிற்க,
“என்னம்மா உள்ள போக வேண்டியது தானே?”.
“வீட்டுக்கு சொந்தகாரர் நீங்க, உங்கள பின்னாடி விட்டு நா முன்னாடி போனா நல்லா இருக்காது அதான்..” என வார்த்தைகளை நிறுத்த,
சன்னமாய் புன்னகைத்தவன் “சரி வா” என முன்னே சென்றான்.
“மைத்தி மைத்தி” என்ற குரலுக்கு அறையில் இருந்து வெளிபட்டவள்,
“என்ன மாமா” என புன்னகை முகமாய் முன்னே வந்து நின்றாள்.
அருகில் இருந்தவளை கண்டதும் நொடியில் அவள் முகம் கறுத்திட அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இன்முகமாய் “சொல்லுங்க மாமா” என்றாள் மைதிலி.
“நேத்து சொன்னேனே ஃபிரெண்டோட சிஸ்டர் வர்றாங்கன்னு அது இவங்க தான் பேர்” என அவன் கூறும் முன்பே,
“வருணா” என்றாள் அவனை முந்தி கொண்டு.
“சாரி எனக்கு வாய் துடுக்கு கொஞ்சம் இல்ல ரொம்ப ஜாஸ்தி நீங்க தப்பா எடுத்துக்காதீங்க என்ன நானே அறிமுகபடுத்திக்கிறேன். பேர் வருணா ஊர் திருச்சி ப்ளஸ்டூல நல்ல ரேங்க் வாங்கினாதால சென்னைக்கு படிக்க வந்துருக்கேன்,
ரொம்ப பேசுவேன் அதே நேரம் கொஞ்சம் என்ன பேசுறோம்னு யோசிக்கவும் செய்வேன் வேற வீடு கிடைக்குற வரைக்கும் உங்கள தொந்தரவு செய்யணும்னு அந்த கடவுள் இங்க அனுப்பி வச்சுருக்கான். கொஞ்ச நாள் தான் என்னோட தொல்லைய சகிச்சுகோங்க மைதிலி அக்கா”,கள்ளமில்லா புன்னகை படர படபடவென மூச்சு விடாமல் பேசியவளை கணவன் மனைவி இருவரும் பேவென பார்த்தனர்.
“என்ன ரெண்டுபேரும் அப்டி பாக்குறீங்க இது வெறும் சாம்பிள் தான் மெயின் கேரக்டரை போக போக பாப்பீங்க. சரி உங்கள பத்தி சொல்லுங்க? பாலாண்ணா ஒர்க் பண்றாரு நீங்க என்ன பண்றிங்க க்கா?” என கேட்டாள் வருணா.
மற்றவரும் தன்னை போலவே இருப்பார்கள் என்றெண்ணி வேற்று ஆள் என்பதே இல்லாமல் நீண்ட நாள் பழகியவள் போல பேசியவளின் பேச்சு ஏனோ மைதிலிக்கு அறவே பிடிக்காமல் போனது.
வருணாவின் துறுதுறு பேச்சும் பார்வையும் சிரிப்பும் மைதிலிக்கு எரிச்சலை உண்டு பண்ண,உள்ளே கொதிக்கும் தணல், பார்வையில் பிரதிபலிக்க பாலாஜியை பார்த்தவள் “நா வீட்டுல தான் இருக்கேன் இப்போதைக்கு வேலைக்கு போகலை ம்மா ரொம்ப நல்லா பேசுற, நானும் உன்ன மாதிரி தான் லொடலொடன்னு பேசுவேன். ஆனா பேச்சு துணைக்கு ஆள் இல்லாம வாயை கொஞ்சம் கட்டு படுத்திக்கிட்டேன்” என பெருமையாய் ஜாம்பம் அடித்தவளை திகைத்து பார்த்தான் பாலாஜி.
‘கட்டுப்படுத்திக்கிட்டாளா?’ என உள்ளே ஓரமாய் அதிசயித்த ஊமை குரல், வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டிய நினைவுகளை அசைபோட்டபடி உள்ளேயே அடங்கி போனது.
“சரி நீ போய் குளிச்சிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் மேல இருக்குற ரூம் இப்போதைக்கு காலியா தான் இருக்கு கொஞ்ச நாளைக்கு நீ அங்க தங்கிக்கோ வருணா” என்றதும் சரியென்று உடமைகளை எடுத்து கொண்டு சென்றுவிட,
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் உள்ள வர்றிங்களா” என்று விட்டு வேகமாக அறைக்குள் மறைந்து கொண்டாள் மைதிலி.
அவள் சென்ற வேகமே கோபத்தின் அளவை குறியிட்டு காட்ட ‘என்ன சொல்ல போகிறாளோ?’ என்ற பயத்துடன் உள்ளே நுழைந்தவனை எரிக்கும் பார்வை பார்த்தவள் “உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க” என எடுத்த எடுப்பிலேயே பொறிய தொடங்கினாள்.
“மைத்தி நா சொல்றதை கொஞ்சம் கேளு” என நிலமையை எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றவனை கை நீட்டி தடுத்தவள்,
“எதுவும் பேசாதிங்க நா அவ்ளோ தூரம் சொல்லியும் அந்த பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கீங்க உங்க சம்பளத்துல நாம ரெண்டு பேரும் குடும்பம் நடத்துறதே கஷ்டம் இதுல இன்னொரு ஆள் வேற. இந்த மாசம் வாடகை கொடுக்கணும் அது ஞாபகம் இருக்கா இல்லையா?,
வீட்டுக்கு யாராவது வந்தா வாடகைய கூட்டி கொடுக்க சொல்லி வீட்டுக்காரம்மா கேட்கும் என்ன பண்ண போறீங்க, அந்த அளவுக்கு ஐயாவுக்கு சம்பாத்தியம் இருக்கா”, எள்ளல் தொனிக்க கேட்டவளிடம் என்ன சொல்வது என தெரியமால் ஆயாசமாய் பார்த்தான் பாலாஜி.
மைதிலியின் குணம் இது தான் என்று அவனுக்கு தெரியும் சில காலமாகவே இதை தானே கேட்டு கொண்டிருக்கிறான். இருந்தும் ராகவன் கல்லூரியை பற்றி கேட்கவும் உதவாமல் இருக்க மனம் ஒப்பு கொள்ளவில்லை, ஏதோ தன்னால் முடிந்த சிறு உதவி இன்று தான் உயிருடன் இருப்பாதே அவனால் தான் என்ற நன்றி கடனே எதை பற்றியும் யோசியாமல் உதவி புரிய வைத்தது.
“மைத்தி நா சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளு வேற வீடு கிடைக்கிற வரைக்கும் தான் அந்த பொண்ணு இங்க இருப்பா. க்ளோஸ் பிரெண்ட் இன்னைக்கு நா உயிரோட இருக்கேனா அதுக்கு அவன் தான் காரணம். அவன் கேட்டு எப்டி ஹெல்ப் பண்ணாம இருக்குறது மனசு கேட்கலை வீட்டு ஓனர் கிட்ட நா பேசிக்கிறேன்” என தணிந்த குரலில் சொல்ல,
“மனசுல கர்ண பரம்பரைன்னு நினைப்பு முடியாது இல்லன்னு சொல்ல வாய் வாரதாக்கும் உதவியாம் உதவி”,ஏகத்துக்கும் நொடித்து கொண்டவள்,
“வீட்டு ஓனர் உங்க சொந்தகாரங்க பாரு நீங்க சொன்னதும் சரின்னு தலையாட்ட, இந்த முறை என்னால உங்களுக்கு உதவி எதுவும் பண்ண முடியாது மாசம் ஆனா எப்பவும் வர சம்பளம் கரெக்ட்டா என் கைக்கு வந்திடனும்.
என்ன பண்ணுவீங்களோ தெரியாது முதல வேற வீடு பாத்து அந்த பொண்ணை தங்க வைங்க அதிகமா வாய் பேசுறவங்களை பாத்தாலே எரிச்சலா வருது, என்னமா வாய் பேசுறா. ஒரு பொம்பளை பிள்ளைக்கு இவ்ளோ வாய் துடுக்கு ஆகாது.
யார் என்னனு தெரியாத நம்மகிட்டயே இப்டி பேசுறவ நாளைக்கு வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்காம ஏதாவது பிரச்சனைய இழுத்துட்டு வந்தா என்ன பண்றது?, இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு இருக்கோம் இவளால அசிங்க படணுமா?” என கேட்டவளை உணர்ச்சிகளின்றி வெறித்தான் பாலாஜி.
‘பாவி ரெண்டு நாள் முன்னாடி எதுவுமே நடக்காத மாதிரி பேசுறியேடி இந்த தெருவே உன்ன கரிச்சு கொட்டிச்சு அது உனக்கு அவமானமா தெரியலை, நடக்காத ஒன்னை நடந்துறும்னு கற்பனை பண்ணி பாக்குறது அவமானமா இருக்கு. நடந்த சம்பவம் மறந்து போச்சா?’ என அவளிடம் வெளிப்படையாக கேட்க முடியாததை தனக்குள்ளே கேட்டு கொண்டவனின் இதழ்கள் நிந்தனையான சிரிப்பை உதிர்க்க,
“இப்போ எதுக்கு அவங்களை இழுக்குற பேச்சு உனக்கும் எனக்கும் தான் மைத்தி” என்றான் வேகமாக.
“ஓ.. அம்மாவை பத்தி பேசவும் கோபம் வருதோ ரெண்டு நாள் முன்னாடி இந்த தெருவுல இருக்குற அத்தனை பேரும் என்கிட்ட சண்டைக்கு வந்தாங்களே அப்ப கோபத்தை காட்ட முடியல இப்போ என்கிட்ட காட்டுறிங்க”.
“தப்பு உன்மேல மைத்தி அதனால தான் அன்னைக்கு அமைதியா இருந்தேன்”.
“இல்லன்னா மல்லு வேட்டி மைனர் வரிஞ்சு கட்டிடு மல்லுக்கு வந்துருப்பிங்க பாருங்க ம்ஹும். என்னால யார் முன்னாடியும் தலை குனிச்சு நிக்க முடியாது ரெண்டு நாள் தான் உங்களுக்கு டைம் வேற வீடு பாத்து அந்த பொண்ணை இங்க இருந்து கூட்டிட்டு போறீங்க சொல்லிட்டேன்” என கொக்கரித்தவள் கெடு அளித்து விட்டு செல்ல,
புயல் அடித்து ஓய்ந்தது போல மைதிலி சென்றதும் அத்தனை நிசப்பதமாய் இருந்தது அறை. ‘ஹாப்பாட’ என மூச்சை உள்ளிழுத்து ஆசுவாசம் கொண்டவன், தலையில் ஏற்றிவிட்டு சென்ற எரிச்சலை கட்டுபடுத்த வேண்டி குளியலறைக்குள் புகுந்தான். சவரின் பிடியை திருகி அதன் முன் தலையை காட்ட, தூரலாய் தூவிய நன்னீர் துளிகளில் உச்சி நனைத்து உள்ளங்கால் வரை வழிந்து செல்ல, மெல்ல மெல்ல தணிந்தது எரிச்சலின் சுவடுகள்.
கீழே நடந்த களோபரம் எதுவும் வருணாவின் செவிகளை எட்டவில்லை எட்டி இருந்தால் அந்த ஷணமே வீட்டை விட்டு வெளியேறி இருப்பாள். வாய் துடுக்கு மட்டுமல்ல அளவிற்கு மீறிய தன்மானமும் கொண்டவள். அறைக்கு சென்று குளியலை போட்டுவிட்டு சென்னை வந்து சேர்ந்ததை ராகவனிடம் தெரிவித்து கொண்டிருந்தாள்.
அலைபேசி வழியே அவள் சொல்லும் கதையை சுவாரஸ்யம் குறையாமல் கேட்டு கொண்டிருந்தான் ராகவன்.
“சரி ராகவா ஈவ்னிங் கால் பண்றேன் அம்மாகிட்ட சொல்லிரு” என அணைப்பை துண்டித்தவள் கீழே இறங்கி வர,
புன்னகையை வரவழைத்து கொண்டவள் “என்னம்மா குளிச்சிட்டு வர இவ்ளோ நேரமா உக்காரு” என தட்டை எடுத்து வைத்து பரிமாற,
“அக்கா அண்ணனை எங்க காணோம் அவரும் வரட்டும் சேந்து சாப்டலாம்”.
“அடடே அவரு அப்பவே சாப்டுட்டு போயிட்டாரு வருணா நா நீ மட்டும் தான். நீ முதல சாப்டு டிராவல் பண்ணி வந்ததுல ரொம்ப களைப்பா இருப்ப சாப்டுட்டு போய் ஓய்வெடு” என கூறியது, உள்ளே இருந்தவனின் செவிகளில் தெளிவாகவே விழுந்தது.
“ம்ஹும் போச்சா இன்னைக்கும் விரதம் தானா” என நொந்து கொண்டவன் காய தொடங்கிய வயிற்று பசியை அடக்க தண்ணீரை எடுத்து மடமடவென வயிறு முட்ட மண்டினான்.
“ஓ.. சாப்டாரா. சரி வாங்க நாம ரெண்டு பேரும் சாப்டலாம் தனியா சாப்ட ஒரு மாதிரியா இருக்கும் அங்க வீட்டுல எல்லாரும் சேந்து தான் சாப்பிடுவோம்” என்றவளின் வதனத்தில் கவலையின் வட்டம் நிறைந்திருந்தது.
“இல்லம்மா எனக்கு பசியில்ல முதல நீ சாப்டு லேட்டாவே சாப்ட்டு பழக்கம். கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் டீ குடிச்சேன்” என விளக்கம் அளித்தவள் தட்டை அவள் புறம் நகர்த்தி வைத்தாள் மைதிலி.
சரியென்றவள் அதற்கு மேல் வற்புறுத்த மனமில்லாமல் தயக்கத்துடன் உணவை விழுங்கிவிட்டு அறைக்கு சென்று விட,
வருணா சென்ற சிறிது நேரத்தில் அறையில் இருந்து வெளிப்பட்டவன் “மைத்தி நா காலேஜுக்கு கிளம்புறேன் பாத்துக்கோ உன்னோட கோபத்தை என்கிட்ட காட்டுற மாதிரி அந்த பொண்ணு கிட்ட காட்டாத சின்ன பொண்ணு சூதுவாது தெரியாது” என்றவன் தாமதிக்காமல் விறுவிறுவென நடையை கட்டினான்.