அதன் பிறகு நடந்தவற்றை நாட்சி என்றுமே நினைத்துப் பார்க்க விரும்பமாட்டாள். நரகம் இப்படித் தான் இருக்கும் என்று உணர்ந்து அனுபவித்த நாட்கள் அவை.
மனிதர்களில் மிருகங்களும் உண்டு எனத் தெரிந்துக் கொண்ட நாட்கள் அவை. காலை, மாலை என இருவேளையும் பரஞ்சோதி அல்லது ராசுமதுரவன் யாருடைய குரலாவது அவளுக்கு கேட்கும் அவ்வளவே.
அவளிடம் உண்மையை வாங்கும் படி, பணித்திருந்த வேலையாள் மிக மிக மோசமான வக்கிர குணம் உள்ளவனாக இருந்து போனது விதியின் சதியோ அல்லது நாட்சியின் கெட்ட நேரமோ யார் அறிவார்.
முதல் நாள் அவளை கன்னத்தில் அடித்தும் கிள்ளியும் விசாரித்தவன், அடுத்த நாள் அடிப்பதைப் போல அவள் உடல் முழுவதும் தன் விரல் தடம் பதித்தான்.
முதல் நாள் வாங்கிய அடிகளுக்கு எல்லாம், “அங்கிள் நிஜமா தெரியாது அங்கிள்… வலிக்குது அங்கிள் ப்ளீஸ் அங்கிள் அடிக்காதீங்க அங்கிள் ’’ என அழுதுக் கொண்டே உரைத்தவள், அடுத்த நாள் பசி மயக்கத்தில் கத்தவும் திராணியற்று மயங்கிக் கிடந்தாள்.
இரண்டாம் நாள் அவளைக் காண வந்த பரஞ்சோதியோடு, ராசு மதுரவனும், கிருஷ்ணனும் உடன் வந்து இருந்தனர். நாட்சியாவை அந்த நிலையில் பார்த்த கிருஷ்ணன்,
“டேய் சின்ன பிள்ளைய என்ன பண்ணி வச்சி இருக்கீங்க…’’ எனப் பதற, பரஞ்சோதியோ, “உங்க மக திங்காம கிடந்து ஹாஸ்பிடல்ல கொண்டு போய் குளுகோஸ் ஏத்திக்கிட்டு இருக்காக மாமா… மறந்து போச்சா…. இந்தக் கழுத நடிக்குது…. டேய் வில்வா… என்னடா சொல்றா இவ..’’ என அங்கிருந்த அடியாளைக் கேட்க,
“ஐயா… குட்டி ரொம்ப அழுத்தமா இருக்குதுங்க… எவ்ளோ அடிச்சாலும் வாயே திறக்க மாட்டேன்கிது. பேசாம நாட்டு சரக்கை வாங்கி வாயில ஊத்துவோம். போதையில உண்மைய கக்கிரும்.’’
அவன் அப்படி சொன்னதும் ராசு மதுரவனும், கிருஷ்ணா ஐயாவும் முகத்தை சுளிக்க, பரஞ்சோதியோ, “என்னமாச்சும் பண்ணி தொலைடா… அந்தக் கழுத உண்மைய சொன்னா சரி… நான் சொன்ன மாதிரி முழுசா ரெண்டு லட்சம் உனக்கு தான். நீங்க ரெண்டு பேரும் ஏன் சுணங்குறீங்க…. பச்ச பிள்ளைங்களுக்கு சளி பிடிச்சா கொஞ்சம் பிராந்தி வாங்கி ஊத்துறது இல்ல… அது மாதிரி இதுவும் ஒரு வைத்தியந்தேன்….’’ என்றவர்கள் கிளம்பி செல்ல,
நாட்சியா கதற கதற, வெறும் வயிற்றில் திகு திகுவென எரியும் நாட்டு சாராயம் வாங்கி ஊற்றப்பட்டது. அது அவர்கள் எதிர்பார்த்தபடி உண்மையை வரவழைக்காமல் அவளுக்கு வாந்தியை தான் வரவழைத்தது.
வில்வனுக்கு மனதில் பரஞ்சோதி உரைத்துவிட்டு சென்ற இரண்டு லட்சம் மட்டுமே ஆசை தீயை பற்றவைத்துக் கொண்டிருந்தது. சின்ன பெண்ணை கொடுமைபடுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் கிஞ்சித்தும் அவனுக்கு நினைவில் இல்லை.
ஏதோதோ செய்து பார்த்தவன், இறுதியில் கம்பியை பழுக்க காய்ச்சி நாட்சியின் தொடையில் சூடு வைத்து விட்டான். இனி முனகுவதற்கும் தெம்பில்லை என மயங்கிக் கிடந்தவள், இறுதியாய், “அம்மா…’’ என்ற கடைசி சத்தத்தை வெளியேற்றிவிட்டு மயங்கி சரிந்தாள்.
அதன் பிறகு என்ன நடந்தது என்று நாட்சிக்கு தெரியாது. கண் விழித்து பார்கையில் ஏதோ மருத்துவமனையில் இருந்தாள். செங்கன் அழுது வீங்கிய கண்களோடு அவள் முன் நின்றுக் கொண்டிருந்தான்.
“சின்னம்மா….. பதறடிச்சி புட்டீங்களே…. உங்களைக் காணோம்னு மூணு நாளா தவிச்சி போயிட்டோம்…’’ அவன் திக்கி திணறி பேச, நாட்சியா வறண்ட உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டே,
“அம்மா… அப்பா..’’ என்றுக் கேட்க, சற்று நேரம் வாயில் துண்டை அடைத்து குலுங்கி அழுதவன், “நாங்க மூணு பேரும் திருநெல்வேலி டவுனுக்கு தான் போனோம் தாயி… ஐயா வழக்கமா தங்குற ஹோட்டல்ல ரூம் போட்டாக…
யாரோ பாதரை பாக்க போறோம்… நீ போயி டவுனு கொட்டாயில படம் பாத்துட்டு வான்னு சொன்னாங்க.. நானும் காலையில காட்சிக்கு போயிட்டு கடை கன்னிக்கு போய்ட்டு வந்து பாக்குறேன், அங்க இருந்த ஹோட்டல் ஆளுக ஐயா ரூம் காலி பண்ணிட்டதா சொல்லிப் போட்டாங்க..
கையில வேற பணம் இல்லையா..? ரெண்டுனா கூலி வேலை பாத்து ஊர் வந்து சேந்தா இங்க உங்களைக் காணோம்னு பாட்டி சொல்லுது… எல்லாரும் பதறி மூணு நாளா பொட்டு தூக்கம் இல்லாம உங்களை தேடிக்கிட்டு இருந்தோம் ராணிமா…
ஐயா… நம்ம ஐயா…. நம்ம அம்மா கூட எங்கனையோ வெளிநாட்டுக்கு ஓடிப் போயிட்டதா சொல்றாங்க ராணிமா… இங்க நீங்க இருக்குறதை கூட பாட்டிக்கு யாரோ தாக்கல் சொல்லி விடப் போயி நாங்க பதறி அடிச்சிட்டு ஓடி வந்தோம்…..என்ன நடக்குதுன்னே புரியல ராணிமா..’’
செங்கன் மீண்டும் அழத் தொடங்க, அவனைத் தேற்ற முடியாத நிலையில் நாட்சியா சோர்ந்து போய் கண்களை மூடிக் கொண்டாள். கண்களின் ஓரத்தில் கண்ணீர் மட்டும் நான் ஓயப்போவதில்லை என்பதைப் போல வழிந்துக் கொண்டு இருந்தது.
அவள் அனுமதிக்கப்பட்டு இருந்தது திருநெல்வேலியில் புகழ்பெற்ற ஏதோ ஓர் தனியார் மருத்துவமனை. மூன்று நாட்கள் கழித்து அவள் விடுவிக்கப்பட, செங்கன் அவள் கைகளில்,
“சின்னம்மா நீங்க ஹாஸ்பிடலை விட்டு கிளம்பும் போது இதை உங்க கையில கொடுக்க சொல்லி உங்களை இங்க சேத்தினவங்க சொல்லிட்டு போனாங்களாம்….’’ செங்கன் கொடுத்த குட்டி பையை திறந்து பார்த்தவள், அதில் இருந்த பாஸ் புக்கை கண்டு திகைத்து போனாள்.
அதை வேகமாய் எடுத்துப் பிரித்துப் பார்க்க, அதில் அவள் கணக்கில் சில கோடிகள் வரவு வைக்கப்பட்டிருந்தன. நாட்சியா இதெல்லாம் யார் செய்வது என ஒரு கணம் குழம்பினாலும், கண்டிப்பாய் தன் தந்தையின் செயலாய் தான் இருக்கும் என மனமார நம்பினாள்.
அருகில் இருந்த வங்கிக்கு சென்று தன் கணக்கில் இருந்தவற்றில் தேவை என தோன்றும் அளவிற்கு பணத்தை எடுத்துக் கொண்டவள், மருத்துவமனைக்கு உண்டான பணத்தை செலுத்தப் போக,
“உங்களை இங்க அட்மிட் பண்ணும் போதே தேவைக்கு அதிகமா பணம் கட்டிட்டாங்க… நாங்க தான் மீதம் கொடுக்கணும்..’’ என சில ஆயிரங்களை கையில் கொடுத்தனர்.
நாட்சியா இரண்டு நாட்களுக்கு முன்பே பள்ளிக்கு திரும்பினாள். தந்தையை பற்றி கேள்விகேட்ட நிர்வாகத்திற்கு, தவிர்க்க முடியாத சூழலால் அவர் வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதாக திடமாக உரைத்தவள், தன் கார்டியன் என்று புதிதாக செங்கனை பள்ளியின் பதிவேட்டில் சேர்த்து வைத்தாள்.
பூங்கோதை பாட்டியோடு சென்று வசிக்குமாறு செங்கனுக்கு அவள் அறிவுரை சொல்ல, அதை முற்றிலும் மறுத்த செங்கன், ஊட்டியில் கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டு தன் ராணிமாவின் கண் பார்வையிலேயே தங்கிக் கொண்டான்.
மனதில் இருந்த இறுக்கத்தை எல்லாம் நாட்சியா வைராக்கியமாய் மாற்றினாள். முன்பு இருந்ததை விட வெறித்தனமாய் படித்தாள். கண்டிப்பாய் தாய், தந்தை தேடி வருவர் என்று திடமாய் நம்பினாள்.
யாரும் தன்னை நெருங்க முடியாதபடி தன்னை சுற்றி மௌன வேலி அமைத்துக் கொண்டாள். பள்ளி படிப்பில் நான்கு வருடங்கள் கழிய, அவள் ஆவலோடு எதிர் பார்த்த தாய் தந்தை மட்டும் அவளை தேடி வரவே இல்லை.
இதற்கு நடுவில் பூங்கோதை பாட்டியும் இறந்து போனார். ஆதரவற்ற செங்கனும், நாட்சியும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகினர். செங்கன் அவளுக்கு அவள் தாய் வாழ்ந்த வாழ்கையை பற்றி லேசாக கோடி காட்டி இருந்தான்.
ஆனால் மனைவி இருக்கையில், தன் தந்தை மற்றொரு பெண்ணிடம் முறை தவறி உறவு வளர்த்திருப்பார் என்பதை நாட்சியாவால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.
ஆனால் அந்த உறவின் சாட்சியாய் ரத்தமும், சதையுமாக தான் நிற்பதை உணர்ந்தவள், எல்லா கேள்விக்கும் தாய் தந்தை வந்தாலன்றி விடை கிடைக்காது என்பதை உணர்ந்து, தனியார் துப்பறியும் நிறுவனத்தின் மூலம் தேட முடிவு செய்தாள்.
அந்த சமயத்தில் தான் அவளுக்கு பிரேமின் அறிமுகம் கிடைத்தது. பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேறிய நாட்சியா, டெல்லியில் இருந்த பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் படிப்பிற்கு விண்ணப்பித்து இருந்தாள்.
அங்கே அவளுக்கு இலகுவாய் இடம் கிடைக்கவே, டெல்லி செல்வதற்கு முன் சென்னையில் பிரேமை சந்தித்து தன் வேண்டுகோளை முன் வைத்து முன் பணமாய் சில ஆயிரங்களை அவர் சம்பளமாய் முன் வைத்தாள்.
செங்கனும், நாட்சியோடு டெல்லிக்கு பயணப்பட்டான். நாட்சியா இம்முறை தன்னிடம் தேங்கி இருந்த பணத்தை எல்லாம் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தாள்.
அதோடு செங்கனையும் பாதுகாப்புக்கலை சொல்லித் தரும் வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தாள். பிரேம் அவர்கள் சிங்கபூர் வரை சென்ற தகவலை மட்டும் கொண்டு வர,
அடுத்து நாட்சியா தன கவனத்தை ராசுமதுரவன், குடும்பம் நோக்கி திருப்பினாள். அதுவரை மனதின் அடியாழத்தில் புதைந்து கிடந்த பழிவெறி மேலோங்க, ‘இவங்களை பத்தின தகவல் வேணும்’ என்று ராசு மதுரவன் குடும்பத்தை கைக்காட்ட, முதலில் செங்கனுக்கு ஒன்றும் புரியவில்லை.
பிரேமை அனுப்பி வைத்ததும், செங்கனிடம் அந்த மூன்றுநாட்கள் தான் அனுபவித்த வேதனையை குரல் இறுக பகிர்ந்துக் கொண்டாள். செங்கன் அன்றே அந்த குடும்பத்தையே அழித்து விடுவதாக துள்ளிக் குதித்தான்.
ஆனால் முகம் இறுகி இருந்த நாட்சியாவோ, “இல்ல செங்கா…. நாம சும்மா எல்லாம் அவங்களை அழிக்க கூடாது. நான் அனுபவிச்ச அவமானம், வலி வேதனை, பயம் எல்லாம் அவங்களும் அனுபவிக்கனும்… அந்த பரணிய நான் மாமான்னு சொன்னதுக்கே அவங்க மாமன் துள்ளிக் குதிச்சான்….
அந்த பரணிய என் புருஷன் ஆக்கணும். அவன் மூலமே அந்தக் குடும்பத்துக்குள்ள உரிமை உள்ளவளா நுழையணும். அவங்க நிம்மதி சந்தோசம் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா அழிக்கணும்….’’
அவள் பேசும் போது பழிவெறி மின்ன செம்பழுப்பு நிறத்திற்கு மாறிய கண்களைக் கண்ட செங்கனின் முகமே அச்சத்தில் வெளிறியது. அன்றில் இருந்து சரியாய் நான்காம் ஆண்டே நாட்சியா தன் லட்சிய இலக்கை அடைந்துவிட்டாள்.
முதல் முறை எழுதிய தேர்விலேயே இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்து, பயிற்சிகள் முடித்து, உதவி ஆட்சியராக திருநெல்வேலி மண்ணையும் மிதித்துவிட்டாள்.
பரணியோடான திருமணம் வரை எல்லாம் அவள் திட்டப்படியே நடந்து முடிந்தது. ஆனால் இயல்பிலேயே அன்பிற்கு ஏங்கும் குணம் படைத்தது இருந்த நாட்சியாவால், சதா தாய் அன்பை பிரதிபளித்துக் கொண்டிருக்கும் செல்வாம்பிகையின் முக வாடலை பொறுக்க முடியவில்லை.