Advertisement

“இனிது மானுடம், அது தரும் சுகந்தம்
    சுழலாய் சுழற்றிட தந்து செல்லும்
    சுக(மை)யென நினைவுகளை”
      இவ்வாறு தான் வாழும் இந்த வாழ்விலே கரைபுரண்டு ஓடும் எண்ணங்களை ஆராய்ந்தவாறு அடிமேல் அடி வைத்து அந்த கோவிலின் பிரகாரத்தை சுற்றிக் கொண்டு வந்தாள் ரூபினி. வாரம் இருமுறை வந்துவிடுவாள் கோவிலுக்கு. அதுவும் விருப்பத்தோடு என்றால் அதுவும் இல்லை. வீட்டில் அவள் தாயின் நீங்காத புலம்பல்களாலே அவளின் கோவில் விஜயம்.
      பள்ளி கல்லூரி என அனைத்திலும் ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்றே தேர்ந்தாள். நல்ல வேலையும் கிடைத்தது. ஆனால் பெற்றோர் அனுமதி கிட்டவில்லை. நாட்கள் செல்லச் செல்ல தாய் தந்தை திருமணம் என்று வந்து நின்றனர். பெற்றோரிடம் சிறிது நாட்கள் அவகாசம் கேட்டாள்.
      ஆனால் அவளின் பெற்றோர்களோ ” உனக்கு அடுத்து உன் அண்ணன் இருக்கான். உனக்கு நல்லபடியா முடிஞ்சா தான் உன் அண்ணனுக்கு பார்க்க முடியும் சொன்னா கேட்டுக்க எதிர்த்து பேசாத” என்று முடித்து விட்டனர். இதில் அவள் அண்ணன் வேறு பாவமாய் பார்க்கவும் சரி என்று விட்டாள் ரூபினி.
      அதனால் அவளின் ஜாதகத்தை எடுத்து ஜோசியரிடம் சென்றனர். அவரோ பல தோஷங்கள் இருக்கிறது என்று கூறி விட அன்றிலிருந்து இப்படி தான் கோவில் பரிகாரம் என சுற்ற வைத்துக் கொண்டு இருக்கின்றனர் அவளின் பெற்றோர். விதியே என அவளும் தலையை ஆட்டிக் கொண்டும் அத்துணை பரிகாரங்களை செய்து கொண்டும் இருந்தாள்.
       அனைத்தையும் முடித்து விட்டு வீட்டை அடைந்தாள் ரூபினி. அன்று வீடு என்றும் இல்லாமல் பரபரப்பாக இருந்தது. அதை புரியாமல் பார்த்துக் கொண்டு வந்தாள் ரூபி. “ஹே வா ரூபி. என்னடா இன்னும் காணோமேனு பாத்தேன் வந்துட்டியா. சீக்கிரம் ரூமுக்கு போ அங்க உனக்கு டிரஸ் ஜீவல்ஸ்லா எடுத்து வச்சிருக்கேன் ரெடியாகிரு என்ன” என்றாள் அவள் தாய்.
      “என்ன மா எங்கயாவது வெளியே போறமா” என்றாள். “இல்லை உன்னை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க” என்றார் தாய். “என்னம்மா இப்ப சொல்ற” என்ற ரூபியின் கேள்விக்கு “காலைலயே சொல்லலாம்னு நினைச்சேன் மறந்துட்டேன். இப்ப என்ன உன்கிட்ட சொல்லிட்டு தான் எல்லாம் செய்யனுமா? சொன்னா சொன்னத செய் போ சும்மா எதிர்த்து பேசிக்கிட்டு” என்றார் அதிகாரமாய். இதை என்றும் கேட்டு பழக்கப்பட்ட ரூபி அறை சென்று தன்னை தயார் செய்துக் கொண்டாள்.
       சிறிது நேரம் சென்று அவள் அறைக்கு வந்த அவள் அண்ணனும் தந்தையும் “ரூபி நீ இந்த அலையன்சுக்கு ஒத்துகிற புரியுதா. உன் ஜாதகத்துக்கு செட் ஆன ஒரே இடம் இதுதான். நீ வர சரின்னு சொல்ற புரியுதா. சும்மா பிடிக்கலைனு சொன்னாலும் அது இங்க நடக்காது” என  கடினமான முகத்துடன் சொல்லி சென்றனர். அவளுக்கு புரிந்து விட்டது முடிவு செய்தே அவளின் பெற்றோர் இதை தன்னிடம் கடைசியாக கூறுகின்றனர் என.
      அறையில் தன் வாழ்வை எண்ணி கடைசியாக தன் பெற்றோர்கள் தன் வாழ்வை வீண் செய்து விடமாட்டார்கள் என உறுதியாக நம்பினாள். ஆனால் அந்த உறுதியும் சிறிது நேரத்தில் உடைந்து விடும் என அவள் எண்ணவில்லை.
      வீட்டில் உள்ள அனைவரும் யாரையோ வரவேற்கும் சத்தம் கேட்டது. வந்து விட்டார்கள் என புரிந்தது என்னதான் ஈடுபாடு இல்லை என்றாலும் சிறிது பயம் எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. கொஞ்ச நேரத்திலே அவளை அவள் அன்னை அழைத்து சென்றாள்.
      அனைவர் முன்னும் வந்துவிட்டாள். பின் மெதுவாக வந்த மாப்பிள்ளையையும் பார்த்தாள். பார்த்து அவளுக்கு பெரிய அதிர்ச்சி தான். முன்னே வழுக்கை எறி இருக்க பார்த்தாலே தெரிந்தது வயது கண்டிப்பாக அதிகம் என. நீங்கா அதிர்வுடன் தன் பெற்றோரை ஏறிட்டாள் ரூபி.
      ஆனால் அவர்களோ வந்தவர்களிடம் எப்படியாவது அவளை இந்த இடத்தில் திருமணம் நல்லபடியாக நடக்க பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருந்தனர். சரி வெளி அழகு சீக்கிரம் போய் விடும் மனது தான் முக்கியம் என தேற்றி கொண்டாள். சிறிது நேரம் கழித்து தான் தெரிந்தது அவர்களுக்கு இது முதல் திருமணம் அல்ல இரண்டாவது என.
     நெஞ்சில் பாரம் ஏறிய உணர்வு. தன் அண்ணன் தன்னை புரிந்து கொள்வானா என்ற சிறிய எதிர்ப்பார்ப்பில் தன் அண்ணனை கண்டாள். ஆனால் அவளின் அண்ணானோ அந்த பையனின் தங்கையை உரிமையாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
     பின்பு தான் தெரிந்தது அந்த பெண்ணை தன் அண்ணனுக்கு எடுக்கின்றனர் என. இப்போது தான் புரிந்தது ஏன் தன் அண்ணன் அமைதியாக இருக்கிறான் என. தன்னை ஏன் தன் பெற்றோருக்கு பிடிக்காமல் போனது என தன் மனதே அவளை நிந்தித்தது கொண்டது. தன் வாழ்வு ஏன் இப்படி ஆக வேண்டும் என நினைத்து மருக மட்டுமே முடிந்தது அவளால்.
     இனி என்ன ஆகும் என பெரிய கேள்வியோடு தன் எதிரிலேயே தன்னை பண்டமென மாற்றும் தன் வீட்டினரை எதுவும் செய்ய முடியாத இயலாமையுடன் இந்த பண்டமாற்ற முறையை வெறும் பார்வையாளராக மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
     நாட்டில் பல பெண்களின் நிலையும் இப்படி தான் பண்டமென மாற்றம் பெற்று கொண்டிருக்கிறது குடும்பம் எனும் போர்வையில்.
–சாந்தி கவிதா

Advertisement