Advertisement

அத்தியாயம் 07

ஷியாம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி இருந்தவன் தன் அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு இரவு உணவுக்காக வந்து உணவு மேசையில் அமர, அங்கு அவனுக்காக ஏற்கனவே காத்திருந்தார் அவனது தந்தை. வசுமதியும், அவன் பாட்டி தேவகியும் ஏற்கனவே உண்டு முடித்து உறங்க சென்றிருக்க, வழக்கமாக அவனது தந்தையும் இந்நேரத்திற்கு உண்டு முடித்திருப்பார்.

இன்று ஷ்யாமிடம் பேச வேண்டி இருந்ததால் அவனுக்காக காத்திருந்தார் அவர். ஷியாம் வரவும் அவன் அன்னை அவனுக்கான உணவை எடுத்து வைக்க, அவனது தந்தையும் அவன் உண்டு முடிக்கும் வரை அமைதியாகவே இருந்தார். அவன் உண்டு முடித்து எழும் நேரம் அவன் தந்தை ஏதோ பேச முற்பட “சாப்பிட்டுட்டு வாங்கப்பா. ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்றேன்.” என்று விட்டு அலுவலக அறையை நோக்கி நடந்துவிட்டான்.

மகன் தன்னை கணித்துவிட்டதில் பாலகிரிஷ்ணனுக்கு பெரிதாக ஆச்சர்யம் இல்லை, எனவே அமைதியாக உண்டு முடித்தவர் மகனை காண சென்றார். சோபாவில் அமர்ந்திருந்த ஷ்யாமின் முன் அமர்ந்தவர் “நம்ம GK  கார்மெண்ட்ஸ் குருமூர்த்தி உனக்கு தெரியும் இல்ல ஷியாம்” என்று கேட்க

புன்னகைத்தவன் “தெரியும்பா, அவரை தெரியாம எப்படி இருக்கும்.உங்க நண்பராச்சே” என்று கூறவும்

“அதுவும் சரிதான். ஆனா இப்போ நண்பனா இல்ல உறவாகணும்ன்னு ஆசைப்படறான். அவனுக்கும் ஒரே மகதான். வெளியே எங்கேயும் கொடுக்கறதுக்கு அவனுக்கு விருப்பம் இல்ல, நீயா இருந்தா அவன் மகளை நல்லா பார்த்துக்குவேன்ன்னு என்கிட்ட கேட்டான்.” என்று அவர் கடகடவென்று கூறிவிட

“நீங்க என்கிட்டே பிடிச்சிருக்கா ன்னு கேக்கலப்பா. உங்க நண்பருக்கு பிடிச்சிருக்கு ன்னு தகவல் சொல்றிங்க. இதுக்கு நான் ஆள் இல்ல.” என்று அவன் முடித்துவிட

“இல்ல ஷியாம், நல்ல குடும்பம். நமக்கு இணையான இடம், பொண்ணும் நல்ல பொண்ணு” என்று கூற

“இருக்கட்டுமே!! நான் என்ன செய்ய முடியும்ப்பா. உங்க பிரெண்டுக்கு மாப்பிள்ளை தேவையில்லை, அவர் பொண்ணுக்கும்,சொத்துக்கும் வாட்ச்மேன் தான் தேவை. என்னால வாட்ச்மேன் வேலை பார்க்க முடியாது  . சொல்லிடுங்க ” என்றவன் எழுந்துவிட

“வேற என்ன பண்ணலாம் ன்னு இருக்க ஷியாம்.” என்று அவர் தந்தை அவனை கூர்மையாக பார்த்துக்கொண்டே கேட்க

“என்ன பண்ணட்டும்ப்பா நீங்களே சொல்லுங்க.” என்று அவன் அவரிடமே கேட்க

” நீ ஆசைப்படறது கண்டிப்பா உனக்கு கிடைக்காது ஷ்யாம். இது நமக்கு சரிவராது”

” நீங்க என்னைப்பத்தி இந்தளவுக்கு புரிஞ்சி வச்சிருக்கறது சந்தோஷம் தான் ப்பா.ஆனா ஒரு விஷயத்தை மறந்துட்டிங்க. ஷ்யாம் ஒன்னு வேணும் ன்னு முடிவு பண்ணிட்டா அடையற வரைக்கும் போராடுவான் அவன் அப்பாவை போல. நிச்சயமா பாதியில விட மாட்டேன்”

“சில விஷயங்கள் தூர இருந்து பார்க்க மட்டும்தான் அழகா தெரியும் ஷ்யாம். பக்கத்துல போனாதான் தெரியும் உண்மை என்னன்னு. கசந்து போய்டும்” என்று கூற

“பக்கத்தில போறதா இருந்தாலும், நானே பார்த்து முடிவு எடுத்துக்கறேன்ப்பா. என் முடிவுகளை நானே எடுக்க பழக்கப்படுத்தினதே என் அப்பா தான். நிச்சயம் தப்பா போகாது.”

” இது கண்டிப்பா தப்பா தான் முடியும் ஷியாம். நான் சொல்றதை கேளு, உனக்கு இது சரிவராது”

“ப்பா ப்ளீஸ். நானே இன்னும் நிச்சயமா ஒரு முடிவுக்கு வரல. நீங்க மறுத்துட்டே இருந்து என்னை அதைநோக்கி தள்ளிவிடாதிங்க. உங்களுக்கு தெரியாம நிச்சயம் எதுவும் செய்ய மாட்டேன்” என்றவன் அதோடு பேச்சை முடித்துக் கொண்டு சென்றுவிட, பாலகிருஷ்ணனுக்கு எதுவோ தவறாகவே பட்டது.

அவரால் நிச்சயம் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் அறிந்திருந்த ஸ்ரீகன்யாவின் குடும்ப பின்னணி அவரை வேறு யோசிக்க விடவே இல்லை. ஸ்ரீரஞ்சனியையும் அவருக்கு தெரிந்திருக்க, ஸ்ரீகன்யாவின் இன்றைய பின்புலமும் தெரிந்திருந்தது அவருக்கு. அவர்களின் குடும்ப விஷயத்தில் தன் மகன் பெயர் அடிபடுவதை அவர் விரும்பவே இல்லை.

என் மகன் உயரத்திற்கு அவனவன் பெண் கொடுக்க வரிசையில் நிற்க இவனுக்கென்ன தலையெழுத்து இப்படி ஒரு பெண்ணின் பின்னால் போக வேண்டுமென்று” என்பதே அவர் எண்ணமாக இருந்தது. நிச்சயம் ஸ்ரீகன்யா தன் குடும்பத்திற்கு ஏற்றவள் இல்லை என்பது அவரது எண்ணமாக இருந்தது.

அவரின் குடும்பப்பெயர், பாரம்பரியம் அத்தனையும் கண்முன் வந்துபோக அவர்கள் காலம் காலமாய் காத்து வந்த பேரை அவர் எங்கும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. ஸ்ரீகன்யாவை மருமகளாக ஏற்றுக்கொள்வது அவர் கௌரவத்திற்கு இழுக்கு என்பதே அவரது எண்ணமாக இருந்தது. அவரை பொறுத்தமட்டில் அது சரியும் கூட. அவருடைய மகன், குடும்பம் என்று குடும்பத்தலைவனாக சற்றே சுயநலமாகத்தான் எண்ணமிட்டார் அவர்.

தந்தையிடம் பேசிவிட்டு வந்தவனோ தந்தையாக கண்டுகொண்டதில் சற்றே அசுவாசமாகவே உணர்ந்தான். அவருக்கு மறைத்து எதையும் செய்வதாக இனி யோசிக்க வேண்டியதில்லை என்பதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது. தந்தை மீதும் அவனுக்கு நம்பிக்கை இருக்க ஸ்ரீகன்யா மட்டுமே அவன் யோசனையில்.

இந்த நிமிடம் வரை அவளை பொறுத்தமட்டில் அவன் யாரோ ஒருவன் தான். ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறாள் ஒரே முறை பேசி இருக்கிறாள் அவ்வளவே அவளை பொறுத்தவரையில் இதில் காதல் என்று எப்படி அவள் முன் நிற்பது. யோசிக்கையில் அவனுக்கே இப்போது சிறுபிள்ளைத்தனமாக தோன்றியது.

என்ன சொல்வாள்? என்ன செய்வாள்? எப்படி எடுத்துக் கொள்வாள்? ஏற்றுக்கொள்வாளா ? இல்லை அவமதிப்பாளா? என்று அவன் உள்ளம் விதவிதமாக கேள்வியெழுப்ப பதில்தான் இல்லை. நள்ளிரவு வரை அவனை உறங்கவிடாமல் ஆட்சி செலுத்தியவள் அவன் தன்னை மறந்து உறங்கும் வேளையில் விடைபெற்று இருந்தாள்.

—————————–

காலை எப்போதும் போல் இசைப்பள்ளிக்கு வந்த ஸ்ரீகன்யா, இரண்டு நாட்கள் இடைவெளியில் ஒரு கச்சேரி இருக்கவும் அதற்கான வேலைகளில் மூழ்கி விட்டாள். மாணவர்களோடு தரையில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு அவள் அவர்களுக்கு பாடிக் கொடுக்க, அவர்களும் அவளை பின்பற்றிக் கொண்டிருந்தனர்.

அவள் தன் அலைபேசியை அறையிலேயே விட்டு வந்திருக்க, அது பாட்டிற்கு இரண்டுமுறை அடித்து ஓய்ந்திருந்ததை அவள் அறிந்திருக்கவில்லை. ஒருவழியாக அன்றைய பயிற்சி நேரம் முடியவும் அவள் தன் அலுவலக அறைக்கு திரும்ப அப்போதும் அலைபேசியை பார்க்கவில்லை. வேலைகளை முடித்துக்கொண்டு கிளம்பும்வேளையில் அலைபேசியை தேடி எடுக்க அதில் ஏதோ புது எண்ணிலிருந்து இரண்டு மிஸ்ட் கால்கள் காட்டவும், யோசனையோடு திரும்ப அழைத்தாள் அவள்.

இது அவளின் தனிப்பட்ட எண்ணாக இருக்க, அவளின் நெருங்கிய சிலருக்கு மட்டுமே இந்த எண் தெரியும். அவர்கள் எண்ணும் இவளிடம் இருக்க, இந்த புது எண் யாராக இருக்கும் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க அதற்குள் எதிர்முனையில் அழைப்பு எடுக்கப்பட்டிருந்தது.

இவள் “ஹலோ” எனவும் “என்ன ஸ்ரீகன்யா மேடம், என்னோட மீதிப்பெயரை கண்டுபிடிச்சிட்டிங்களா ” என்று உற்சாகமாக ஒலித்தது ஷ்யாமின் குரல். அந்த குரலிலேயே அவனை அறிந்து கொண்டவள் ஒருநொடி  மௌனமாக “இருக்கீங்களா ஸ்ரீகன்யா ” என்று மீண்டும் அவன் கேட்டுவிட

“இருக்கேன் ஷியாம்” என்றவளிடம் “இப்போவும் முழுப்பேர் சொல்ல மாட்டீங்க போலவே. இல்ல இன்னும் ஞாபகம் வரலையா” என்று அவன் கேட்க

“ஷியாம் கிருஷ்ணா.” என்று நிதானமாக அவள் உச்சரிக்க, அவன் பெயரே புதிதாக ஒலித்தது அவனுக்கு. மெல்லியதாக விசில் அடித்துக் கொண்டவன் அமைதியாகிவிட,

எதிர்புறம் இருந்தவளோ  “என்ன விஷயம் ஷியாம். அதோட இந்த நம்பர் எப்படி கிடைச்சது” என்று கேட்க

“சொல்லிட்டு போனை வைடா ன்னு சொல்றிங்களா”

” அப்படி இல்ல ஷியாம்.இது என்னோட பர்சனல் நம்பர். என்னை சேர்ந்த ஒருசிலரை தவிர இது யாருக்கும் தெரியாது.”

“உங்க கேசவ் அண்ணன்கிட்ட இருந்துதான் வாங்கினேன் ஸ்ரீகன்யா.” என்று அவன் உண்மையை சொல்லிவிட

இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அவளுக்கு. அனால் எதற்காக அழைத்திருக்கிறான் என்றாவது கேட்கவேண்டுமல்லவா. “சரி சொல்லுங்க ஷியாம் என்ன விஷயம்?” என்று கேட்க

என்னவென்று சொல்லுவான் அவன். பெருமூச்சொன்றை வெளியிட்டுக் கொண்டே “சுத்தி வளைக்க வேண்டாமே ஸ்ரீகன்யா. எனக்கு உங்களோட கொஞ்சம் பேசணும். போன்ல பேச முடியாது, எங்க மீட் பண்ணலாம்.” என்று கேட்க

நிச்சயம் இதை எதிர்பார்த்திருக்கவில்லை அவள். திடுதிப்பென அவன் அழைத்ததே ஆச்சரியம் என்றால் இப்போது இப்படி வேறு பேசவும், என்ன சொல்வது என்று புரியவில்லை அவளுக்கு. பேச்சு போகும் பாதையும் ஆபத்தானதாகவே தோன்ற, இப்போதே முடித்துவிடும் எண்ணம்தான் அவளுக்கு.

“எனக்கு இப்போ நேரமில்லை ஷியாம். அதோட நேர்ல மீட் பண்ணி பேசற அளவுக்கு நமக்குள்ள எதுவும் இல்லங்கிறது என்னோட எண்ணம்.  நீங்க கேசவ் அண்ணாவோட பிரெண்ட், சோ எனக்கும் ஒரு நல்ல பிரெண்ட் அவ்ளோதான். ஆனா இந்த மீட் பண்றதெல்லாம் ஒத்து வராது ஷ்யாம். எனக்கு அடிக்கடி வெளில வரவும் முடியாது. சாரி” என்றவள் அழைப்பை துண்டிக்கப்போக

“ஒருநிமிஷம் ஸ்ரீகன்யா.” என்று அவன் நிறுத்த, அழைப்பை துண்டிக்க போனவளிடம் கணநேர தாமதம். அதை பயன்படுத்திக் கொண்டவன்  “உன்கிட்ட நேர்ல தான் சொல்லணும் ன்னு நெனச்சேன். ஆனா என்ன செய்ய உனக்குதான் நேரமில்லையே. அதோட எங்கே சொன்னாலும் விஷயம் மாற போறதுமில்லை அப்படியிருக்க எங்கே  சொன்னா என்ன ?” என்று ஒருநொடி மௌனமானவன் மறுநொடி “இந்நேரம் உனக்கே புரிஞ்சிருக்கணும். இருந்தாலும் நானும் சொல்லணும் இல்லையா, சொல்லிடறேன். என்னை கல்யாணம் பண்ணிக்கோ கன்யா” என்றுவிட்டிருந்தான்.

அவன் ஆரம்பிக்கும்போதே ஏதோ சங்கடப்படுத்த போகிறான் என்றுதான் நினைத்தாள் அவள். “காதல் என்று கழுத்தறுக்க போகிறான்” என்று அவள் நினைத்திருக்க, எடுத்த எடுப்பில்  “கல்யாணம் பண்ணிக்கோ ” என்று கேட்டிருக்க, நிம்மதியாகவே உணர்ந்தாள் அவள். காதல் அது இது என்று கூறாமல் இத்தோடு நிறுத்திக் கொண்டானே என்று ஆசுவாசம் தான் அவளிடம்.

இப்போது தெளிவாக ” பேசி முடிச்சிட்டீங்க இல்லையா ஷியாம். நான் பதிலும் சொல்லிடலாம் இல்லையா?” என்று கேட்க

“நிச்சயம் பதில் வேண்டாம் கன்யா. நான் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு உன்னை கேட்கவே இல்ல. என்னை கல்யாணம் பண்ணிக்கோ ன்னு சொல்லிட்டேன். அது எப்போ ன்னு நீ முடிவெடுத்துக்கோ. நீ எவ்ளோ டைம் எடுத்தாலும் பரவால்ல. ஆனா முடிவு பண்ணிட்டா என்கிட்டே சொல்லிடு” என்று அவன் பாட்டிற்கு சொல்லியவன் சட்டென போனை அணைத்து விட்டான்.

கையிலிருந்த மொபைலை முன்னிருந்த மேசையில் வைத்தவன் ஒருசில நொடிகள் அதையே பார்த்து நின்றிருந்தான். நிச்சயம் அது திரும்ப அழைக்கவில்லை என்று ஊர்ஜிதமானதும் அதுவரை பிடித்து வைத்திருந்த மூச்சை “ஊஃப்” என்று வெளியிட்டவன் தன் அறையின் ஜன்னலின் வழியாக வெளியே தெரிந்த சென்னையை பார்த்து நின்றுவிட்டான்.

காரணமில்லாமல் புன்னகை வர, அவளிடம் சொல்லிவிட்டதே மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு. நிச்சயம் அவள் மறுப்பை ஏற்க முடியும் என்று தோன்றவில்லை அதன் காரணமாகவே அவளை பேசவிடாமல் ஏதேதோ பேசி அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவனுக்கே சிரிப்பாக இருந்தது அவன் செயல்களை நினைத்து. ஒரு வாரத்திற்கு முன்பு தான் இப்படியெல்லாம் செய்வோம் என்று யாரும் சொல்லி இருந்தால் கூட அவர்களை முறைத்து நின்றிருப்பான் அவன். அப்படி இருக்க இப்போது ஏதோ சிறுபிள்ளை போலான அவனது செயல்கள் அவனுக்கே ஏற்கமுடியாமல் போக சிரிப்புதான் வந்தது அவனுக்கு.

என்ன நினைத்தான் அவளைப்பற்றி? இல்லை என்ன தெரியும் அவளைப்பற்றி என்று கேட்டால் நிச்சயம் அவனிடம் சரியான பதில் இருக்காது. அவனுக்கே அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று புரியாத நிலைதான். ஆனால் அவளிடம் சொல்லிவிடு என்று உள்மனம் சொல்லிக்கொண்டே இருக்க, எப்போதும் போல் அதன் பேச்சை கேட்டவன் அவளிடம் சொல்லி விட்டிருந்தான்.

ஆனால் இப்போது சொல்லி முடிக்கவும் தான் அவளின் நிலை என்னவாக இருக்கும் என்று மனது யோசிக்க ஆரம்பிக்க, நிச்சயம் பயந்து போயிருப்பாள் என்றே தோன்றியது அவனுக்கு. வெறும் இரண்டு மூன்று முறை பார்த்த ஒருவன் திடீரென்று போனில் இப்படி பேசினால் பயம் வராமல் என்ன செய்யும் என்று யோசித்தவனுக்கு ஆவலாய் நினைத்து வருத்தமாக இருக்க, நிச்சயம் சொதப்பிவிட்டதாகவே தோன்றியது அவனுக்கு.

அந்த தீரஜ் ஒருவழியில் பெற்றோர் வழியாக நெருக்கடி கொடுத்தால் இப்போது நான் என்ன செய்து வைத்திருக்கிறேன் என்று யோசித்தவனுக்கு எங்கே தீரஜ்ஜை போல் தன்னையும் நினைத்து விடுவாளோ என்ற நினைப்பே கசந்து வழிந்தது.

இல்லை தான் அப்படி இல்லை என்று அப்போதே அவளுக்கு உணர்த்திவிட வேண்டும் என்று அவன் மனம் துடிக்க, என்ன செய்வது என்றுதான் புரியவில்லை.

அவள் இப்போது எங்கே இருப்பாள் என்று யோசித்தவனுக்கு நிச்சயம் தெரியவே இல்லை அவள் எங்கே இருப்பாள்? என்ன செய்து கொண்டிருப்பாள் ? என்று. எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தவன் கேசவ்விற்கு அழைத்து அவள் எங்கே இருப்பாள் என்று விவரம் கேட்டுக் கொண்டவன் உடனே அலுவலகத்திலிருந்து கிளம்பி இருந்தான்.

அவன் வெளியேறும்போது எதிர்ப்பட்ட ராகவ் அவனை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனை கடந்து சென்றுவிட்டான் அவன். அவனை கண்டுகொள்ளவே இல்லை. இந்த மதிய நேரத்தில் எங்கே செல்கிறான் இவன் அதுவும் இத்தனை அவசரமாக என்று யோசித்துக் கொண்டே ராகவ் நிற்க அவன் காரில் ஏறி கிளம்பி இருந்தான்.

அங்கு  இவனிடம் பேசி முடித்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டிருந்தவளுக்கு ஆத்திரமாக வந்தது. உச்சகட்ட கோபத்தில் அமர்ந்திருந்தாள் அவள். கண்கள் வேறு கலங்கி இருக்க ” என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன். இவன் சொல்லிவிட்டால் அடுத்தகணமே இவனுக்கு மாலையிட்டு மணமுடித்து கொள்ள வேண்டுமா ” என்று தோன்ற, ஏனென்றே தெரியாமல் கண்ணீர் வேறு வந்து தொலைத்தது.

என்ன தெரியும் இவனுக்கு என்னைப்பற்றி என்று யோசித்தவளுக்கு கண்ணை கட்ட அவனின் பின்புலம் வேறு நினைவில் வந்து மிரட்ட “கடவுளே ” என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் அவள்.

Advertisement