Advertisement

மயிலிறகு பெட்டகம் 15

அன்று எதுவுமே பிடிக்கவில்லை அனுரதிக்கு! எதைப் பார்த்தாலும் எரிச்சலாய் இருந்தது. வீட்டில் வேறு கல்யாணக்களை கூடி ஒரே குதுகலமாய் இருக்க எதையும் முகத்தில் காட்டாமல் இயல்பாய் நடப்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தது.

தேவையான பொருட்களை எடுத்துவைத்து விட்டு வெளியே வந்தவள் தன் பையை காரில் வைத்துவிட்டு எதிர்வீட்டிற்குள் நுழைந்தாள். அங்கே அனைவரும் கிளம்பி தயாராக இருக்க,

“எல்லாம் எடுத்து வச்சாச்சாமா….” என்று கேட்க,

“ம்…எல்லாம் வச்சாச்சுமா, அங்கே அண்ணா, அண்ணி கிளம்பியாச்சா…” என அகல்யா வினவ,

“ம்..ரெடிமா..இருங்க பூரணி அக்கா கிட்ட வந்துட்டாங்க, அவங்க வந்ததும் சேர்ந்து கிளம்பிடலாம்…” எனவும்,

“ஒன்னும் அவசரமில்லை அனு வரட்டும்…” என்றார்

சரியென்றவள் முக்கியமான பொருட்களை அகல்யாவோடு சேர்ந்து சரிபார்த்து காரில் வைக்க, பூரணி வீட்டாரும் வர அனைவரோடும் சேர்ந்து தன் அண்ணன் திருமணத்திற்காக பூர்விக கோவிலை நோக்கி  பயணம் செய்ய ஆயத்தமானாள்.

இளவட்டங்கள் ஏறிய காரில் ஜன்னலோரமாய் அமர்ந்தவள் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாய் வெளியே பார்வையை திருப்பிகொண்டாள். அவர்களின் சலசலப்பு, ஊர்புறத்தின் செழிப்பு எதுவும் அவள் மனதில் பதியவில்லை. ஏதேதோ எண்ணங்கள் தோன்றி  அலைகழித்தன. எதையும் யோசிக்க பிடிக்காமல் தூங்குவதைப் போல கண்களை மூடிக்கொண்டவள் அப்படியே உறங்கியும் போனாள்.

நன்றாக தூங்கி விட்டவளை பூரணி உசுப்ப,  லேசாய் கண்களை கசக்கியவாறே மெதுவாய் எழுந்து சுற்றிப்பார்த்தாள். அதைப் பார்த்த பூரணி, சிரித்தபடியே

“என்ன அனு, நைட்டெல்லாம் என் தம்பியை மிஸ் பண்ணுற பீலிங்கில சரியா தூங்கலையா…” என்று குறும்பாய் கேட்க, ஒரு நொடி மலங்க விழித்தவள் சட்டென்று சுதாரித்து மௌனமாய் ஒரு புன்னகையை சிந்தினாள். அதிலிருந்து எதையும் கண்டுகொள்ளாத பூரணி அவளைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்குள் செல்ல,

தலைக்கு மேல் வேலையிருந்து படபடவென நடந்துகொண்டிருந்தாலும் அனுவின் எண்ணம் முழுக்க விக்ரமையே வியாபித்திருந்தது.

அவளை அழைத்த முரளி,

“ என்னமா…விக்ரம் உனக்கு போன் பண்ணிணானா….? எப்ப வரேன்னு சொன்னானா…? காலையிலேயிருந்து போன் பண்ணா எடுக்கலையே…” என்று கேட்க,

“இல்லை மாமா, எனக்கும் பண்ணல, பிஸி போல, நான் போன் பண்ணி பார்க்கிறேன் மாமா…” என்றுவிட்டு மெதுவாய் அங்கிருந்து நகர்ந்தவள் பின்னாடி தோட்டப்பக்கம் இருந்த கிணத்தடி திண்டில் அமர்ந்தாள்.

மாலைநேர காற்று குளிர்ச்சியாக உடலை தாக்க, அந்த இதம் ஏனோ மனதிற்குள் நுழையவில்லை. வீடு நிறைய ஆட்கள்  இருந்தும் தனியாய் இருப்பதை போல இருந்தது. அதைவிட பூரணி, அசோக்கின் நெருக்கத்தை பார்க்கும் பொழுதெல்லாம் ஒருவித உணர்வு ஆட்கொள்வதை தவிர்க்க முடியவில்லை. போதாக்குறைக்கு உறவினர்கள் வேறு விக்ரம் போன் பண்ணினானா, கிளம்பிவிட்டானா… என்று கேட்டு அவள் காதில் ரத்தம் வராதது ஒன்று தான் மிச்சம்.  என்ன சொல்வதென்று தெரியாமல் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு விதமாய் சமாளித்து கொண்டிருந்தாள். அவளும் தான் என்ன செய்வாள்!

நாலைந்து நாட்களுக்கு முன் பார்லர் போய் விட்டு வந்தபொழுது தவிர்க்க முடியாத முக்கியமான வேலையாக விக்ரம் வெளியூருக்கு உடனே சென்றுவிட்டான், முடிந்த அளவுக்கு விரைவாக திரும்புவேன் என்றுவிட்டு சென்றான் என்று கமலா தான் அவளிடம் சொன்னார்! அத்தோடு சரி!  இன்றுவரை காதால் அவன் விஷயம் கேட்பது மட்டுமே. அழைப்பு என்ன, புதிதாய் முளைத்திருந்த மெசேஜ் விஷயம் கூட மறைந்திருந்து. இந்த அழகில் இவர்கள் சொல்வது போல ஏதோ அவன் தன்னிடம் மணிக்கு ஒருதடவை அழைத்து பேசுவது போல ஆளாளுக்கு கேட்பது அவளை மேலும் எரிச்சல் படுத்தியிருந்தது.

ஒருவிதமான உணர்வு கலவையில் சிக்கி அமர்ந்திருந்தவளை அகல்யாவின் குரல் கலைக்க, எழுந்து சென்றாள்.

தன்னிடம் கேள்வி கேட்பவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவாது அவன் சீக்கிரம் வரவேண்டும்  என்று அனுரதி எதிர்பார்க்க அவனோ திருமணத்தின் முதல்நாள் இரவு வரை வரவில்லை. அப்படி என்ன வேலை! கோபமெல்லாம் வரவில்லை, சலிப்பாய் இருந்தது அவளுக்கு, எப்போதுமே அவர்களின் பூர்விக வீட்டில் தங்குவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். வாசலை சூழ்ந்திருக்கும் பூச்செடிகள், வீட்டின் பின்னே வைத்திருந்த குட்டி தோட்டம், பழமையான மச்சு வீடு, அவளது அறை மாடியில இருக்க, அதன் பால்கனி தோட்டத்தை அப்படியே படம்பிடிக்கும். இப்படி பார்க்க பார்க்க தெவிட்டாத இடம் இன்று வெறுமையை தான் உமிழ்ந்தது அனுரதிக்கு.

விடிய விடிய உறக்கத்தை தொலைத்து நேரத்தை நெட்டி தள்ளியவள்,  நேரத்தில் எழுந்து அடுத்தவர் வாயில் அவலாக  விரும்பாமல் அழகாகவே அலங்கரித்து கொண்டு போனாள்.

கோவிலில் திருமணத்திற்கு முன் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். புதுமண தம்பதிகளான பூரணி, அசோக் இருவரையும் தனியே அர்ச்சனை செய்ய வைத்தார்கள். அடுத்து இவர்கள் தானே! அந்நேரம் பார்த்து கமலா வேறு ,

“விக்ரம் கரெக்டா வந்திருவான்ல அனு…” என்று கேட்க,

அந்நேரம் மட்டும் விக்ரம் பக்கத்தில் இருந்திருந்தால் அவனை பார்வையிலேயே பொசுக்கியிருப்பாள். இப்படி எல்லோரிடமும் மாட்டி விட்டு சென்றுவிட்டானே என குமைந்த போதும் தன்னை சமாளித்து பதில் கூற அவள் முனைந்த போது, வெகுஅருகில் அவளை சாவகாசமாக உரசியவாறே,

“ நாங்க இப்போ போகலாமா…அம்மா…” என்று கமலாவை பார்த்து சிரித்தபடி கேட்டதோடு நிற்காமல் அவர் கையிலிருந்த அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டு அனுவின் கைபிடித்து கூட்டிக்கொண்டு போய் சாமியின் முன் நின்றான் விக்ரமாதித்தியன்.

அதன் பின் அவ்வளவு தான் என்பது போல் அவன் சாமியை பார்த்து கர்மசிரத்தையாய் வேண்டிக்கொண்டிருக்க, அனுரதி தான் சற்றுமுன்பு என்ன நடந்தது, திடீரென எங்கிருந்து வந்தான் என்று புரியாமல் அவஸ்தையாய் அங்குமிங்கும் கவனத்தை சிதறடித்து கொண்டிருந்தாள்.

அதற்குப்பிறகு அவளிடம் அதிகமாக  பேசவில்லை,  அப்பா, அம்மாவிடம் மட்டும்  அவளருகே இருக்கும்பொழுது பயண விவரத்தை சுருக்கமாக முடித்து விட்டான். ஆனால் அவள் எங்கிருந்தாலும் அவனின் பார்வை அவளை தழுவியே இருந்தது. திருமணத்தின் போது அனு வெற்றியின் பின் நின்று மணமகளுக்கு மூன்றாவது முடிச்சிட விக்ரம் வந்து அவளருகில் நின்று விட்டான். அதன்பின் திருமணம் முடியும்வரை அவளைவிட்டு நகரவே இல்லை. அதுவும் அவள் கட்டியிருந்த அரக்கு நிற பட்டுப்புடவையின் நிறத்தை ஒட்டியே அவனும் சட்டை அணிந்து பார்க்கிற எல்லோரையும் திரும்பி மறுமுறை பார்க்க வைத்தான்.   

இப்படி கலவையான நிமிடங்களோடு ஒருவாறாக திருமணம் முடிந்து ஊருக்கு கிளம்பும் நேரம் காரில் ஏறும்போது அனுவின் கண்கள் தானாகவே விக்ரமைத் தேடின, பின் மௌனமாய் காரில் ஏறி ஓரமாய் அமர்ந்து கொண்டாள். எல்லோரும் ஏறி கார் கிளம்பும் நேரம்  திடீரென வந்து கதவை திறந்தான் விக்ரம்.  அவளை உள்ளே தள்ளி அமருமாறு சைகை செய்துவிட்டு அவளுக்கு என்னவென்று புரியும் முன்னரே அவளை இடித்தவாறே உள்ளே அமர்ந்துகொண்டவனை பார்த்து அவள் முறைக்க, இனிமையாய் ஒரு புன்னகையை அவளைப் பார்த்து தவழவிட்டவன்,

“என்னாச்சு அனு…” என்றான் அதை விட இனிமையான குரலில்,

அவனின் செய்கையில் படபடத்து லேசாய் வியர்க்கவே ஆரம்பித்து விட்டது அனுவிற்கு! சட்டென்று அவள் முகத்தை திருப்பி கொண்டாள்,

“என்ன அனு, ஏன் திரும்பிக்கிட்ட…” காதுமடல் அருகே  கிசுகிசுப்பான குரலும் சூடான மூச்சுக்காற்றும் பட சட்டென்று தோன்றிய உணர்வில் வெலவெலத்து போக அவசரமாக திரும்பியவள்  ஒன்றுமில்லை என தலையாட்டினாள்.

அவளின் போராட்டமும் செய்கையும் முழுதாய் புரிய விக்ரமாதித்தியனின் இதழ்கள் அகலமாய் , தெளிவாய் விரிய அவளுக்கு இன்னும் அவஸ்தையாய் போயிற்று.

“ இதென்ன புதுசா என்னென்னமோ பண்றான்” என்று அவள் தவிக்க, அவளை மேலும் படுத்தாமல் உதட்டில் உறைந்த புன்னகையுடன் சன்னல் பக்கமாய் திரும்பி பார்வையை பதித்தான். அனுரதிதான் யோசனையாய் அவனை பார்ப்பதும் பார்வையை திருப்புவதுமாய் இருந்தாள். யோசனைகளூடே அலுப்பும் சேர்ந்து கொள்ள நேராய் அமராமல் தூங்கி வழிந்துவிடவே அதுவரை அவளின் மேல் கவனத்தை வைத்திருந்தவன், திரும்பி அவள் அசந்ததை உறுதி படுத்தியபின் அவளை இழுத்து தன் தோள் மேல் சாய்த்து கொண்டு அவள் கன்னத்தில் விழுந்த கூந்தல் கற்றையை ஒதுக்கி விட்டவன்  சிரிப்புடன் திரும்பி தூரத்தில் தெரிந்த நிலவை பார்த்தபடி புன்னகையுடன் கண்மூடிக் கொண்டான்.

Advertisement