Advertisement

ஒரு வழியாக தப்பிப் பிழைத்து தாம்பரம் வந்தால், பர்வதம்மா, “ஏன் ராகவா. ஏற்கனவே அத்தனை செலவு. இப்ப நாலு நாள் அங்க வேற போகப்போறங்கற ?”, என்று மகனின் காதைக் கடித்தார்.
“மா… இது விஜய்யும் ரமேஷும் புக் செஞ்சாங்க. கல்யாண கிஃப்ட்டா. என் செலவு பெருசா ஒன்னும் இல்லை. மாலினி முன்னாடி இப்படி கேட்டு வெக்காதீங்க.”, அவன் கடிந்தாலும்,
“ம்ம்… இதை பணமா குடுத்திருந்தாலும் உபயோகமா இருந்திருக்கும்.”, பர்வதம் தன் போக்கில் புலம்பினார்.
“அதான்மா சொன்னான் விஜய். நாங்க காசா குடுத்தா, உன் குடும்பத்துக்குதான் செலவு செய்வ, உனக்குன்னு எதுவும் செஞ்சுக்கமாட்ட. அதனாலதான் இப்படின்னு சொல்லித்தான் குடுத்தான்.”, நக்கலாய் ராகவன் சொல்ல பர்வதம் பதில் சொல்லத்தெரியாமல் முழித்தார்.
மாலை மருமகளுடன் கிச்சனில் காபி போட்டுக்கொண்டிருக்கும்போது மெதுவாக மாலினியின் காதைக் கடித்தார் பர்வதம்.
“மாலினி, வந்து…நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத….”, என்ற பீடிகையுடன் நிறுத்த, ‘அடுத்தது என்னடா’, என்று பார்வையை அவர் புறம் திருப்பினாள் மாலினி.
“சொல்லுங்க அத்தை.”
“இல்ல… இப்ப காயத்ரி தொட்டில், உங்க கல்யாணம்னு செலவு மேல செலவு. உன் சம்பளம் வெச்சு சீக்கிரம் அடைச்சிடலாம்தான்…..”, என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் பார்த்திருந்தாள் மாலினி.
“வந்து…. நீ… நீ உடனே குழந்தை பெத்துக்கிட்டா, அடைக்க அடைக்க இன்னும் கடன்தான் ஏறும்…. அதனால… இப்பதான் நிறைய வழி இருக்கே …கொஞ்சம் தள்ளிப் போடுமா….புள்ள கிட்ட என்னால இது பேச முடியாது…..”, சொல்வது தவறு என்று தெரிந்து பேசுபவரிடம் என்ன சொல்ல முடியும் ? இதே காரணத்திற்காக அவர்களும் இந்த முடிவுதான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் அதை சொல்ல மாலினி பிரியப்படவில்லை. எவ்வளவு தூரம் போகிறது பார்க்கலாம் என்று நினைத்தாள்.
“அது… நான் எப்படி அத்தை சொல்ல முடியும் ? எவ்வளவு நாள் தள்ளிப் போடணும்?”, என்று கேட்டாள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு.
“அவனுக்கும் தெரியும்தான, நீ சொல்ற மாதிரி எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவான். ”, ‘அடிங்க…நான் சொல்லணுமா…’, என்று ஓடியது மாலினி மைண்ட் வாய்ஸ்.
“நானா சொன்னா, நீங்க உடனே பேர பிள்ளை எதிர்பார்ப்பீங்கன்னு சொல்லுவார். நீங்க எங்கிட்ட சொன்னதாத்தான் சொல்ல முடியும் அத்தை. எத்தனை மாசம் தள்ளிப் போடணும்?”, கொஞ்சம் கறாராகவே கேட்டாள்.
“நீ கோவப்படுறது புரியுதுமா… என்ன செய்ய? ஒரு அஞ்சாறு மாசம் போச்சுன்னா, கொஞ்சம் மீணடுக்கலாம். “, பர்வதம்மா சொல்ல,
‘எதே… நீங்க இழுத்து வெச்ச செலவுக்கு ஆறு மாசம் போறுமா ? எந்த ஊர்ல?’, என்று கவுண்ட்டர் வாய் வரை வந்தாலும், அதை தலையில் தட்டி அனுப்பியவள், “சரியத்தை. சொல்லி பார்க்கறேன்.”, என்று அப்போதும் பிடி குடுக்காமலேயே பேசினாள்.
அன்றிரவு பாண்டியன் எக்ஸ்ப்ரசில் ஏறி அமர்ந்ததும் ஒரு விடுதலை உணர்வு இருவருக்குமே வந்தது.
“என்னவோ போ மயிலு. ட்ரெயினலதான் இருந்தாலும், கல்யாணமாகி இன்னிக்கு ராத்திரிதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.”, ராகவன் மாலினியின் தோளணைத்து ட்ரெயின் கதவருகில் நின்றபடியே இருட்டைப் பார்த்திருந்தான்.
“விடுங்க ரகு… சென்னை ப்ரச்சனையை அங்கயே விடுங்க. இந்த நாலு நாளாச்சம் கொஞ்சம்  நமக்காகன்னு இருப்போம். வேற யாரும் நமக்காகன்னு பார்க்கற மாதிரி தெரியலை. எங்க அப்பா அம்மா கூட அவங்க கௌரவத்துக்காகத்தான் கல்யாணத்தை சிறப்பா செஞ்சாங்க. எனக்காக இல்லைங்கற மாதிரிதான் இருந்துச்சு. பெரிய பாடம் எனக்கு அது.”
“ஹே… என்னை சொல்லிட்டு இப்ப நீ எதுக்கு அதையெல்லாம் யோசிக்கறடா. விடு. நாலு நாள் கொடைக்கானல்ல என்ன செய்யலாம்? நீ சொல்லு ?”
“ம்ம்… குறிஞ்சி ஆண்டவர் கோவில், லேக், பில்லர் ராக்ஸ், தையலார் ஃபால்ஸ், டால்ஃபின் நோஸ் வ்யூ பாயிண்ட், ஷாப்பிங், ட்ரெக்கிங்….”, மாலினி அடுக்க, ராகவனின் முகம் போன போக்கைப் பார்த்து, வாய் பொத்தி சிரித்தவள், சிரிக்கும் விழிகளோடே….” எல்லாம் ஏற்கனவே பார்த்துட்டேன்.  அதுனால…. அதுனால….”, என்று நிறுத்தி மீண்டும் சிரித்தவளோடு இணைந்து சிரித்தவன், “ ரூமை விட்டு, ரிசார்ட்டை விட்டு வெளியவே போக வேணாம்…சரியா ?”, என்று காதருகில் கிசுகிசுத்தான்.
“ம்ம்… தெரியுமே…அப்பறம் எதுக்கு என்னை கேட்டீங்க ?”, தலையால் அவன் தோளை முட்டினாள்.
“என் மனசை தெரிஞ்சு சொல்ல மாட்டியான்னு நினைச்சேன். நீ இப்படி அடுக்கவும்…”,  ராகவன் அசடு வழிய,
“ஐயா முகம் போன போக்கை பார்த்து ரசிக்க இந்த நைட்லைட் பத்தலையே….”, என்று கலாய்த்தாள் மாலினி.
மதுரை வந்து, அங்கிருந்து மற்றுமொரு ரயில் மாறி கொடைக்கானலை அடைந்து ரூமிற்கு வர மதியமாகியிருந்தது. நான்கு யூனிட் கொண்ட குடில்கள், கீழே இரண்டு, மேலே இரண்டு அமைத்திருந்தார்கள். பெரிய பெட் ரூம், சிட்டிங் ஏரியா, பால்கனி, பாத்ரூம் என்று அழகாக இருந்தது. குளித்து, உணவை முடித்துவர்கள் ரிசார்ட்டை சுற்றியிருந்த பூங்கா, வீயூ பாயிண்ட் என்று புகைப்படம் எடுத்து இப்போதுதான் புதுமண தம்பதிகளாக அவர்கள் உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார்கள்.
இன்றிரவு நிச்சயமாக அடுத்த படியைத் தொடப்போகிறோம் என்ற நினைவே முகத்தில் மலர்ச்சியைக் கொடுத்தது. செல்லச் சீண்டல்கள், பார்வைகள் என்று வயதிற்கானசேட்டைகள் செய்யும் மாலினியை சமாளிக்கவே ராகவனுக்கு  நேரம் சென்றது.
ஒரு வழியாக உணவு முடித்து தாயிடம் பேசிக்கொண்டிருந்தவனிடம் சைகை செய்து சாவியை வாங்கிக்கொண்டு சென்றாள் மாலினி. ஏதோ அவசரம் போல என்று ராகவனும் கொடுத்துவிட்டு, பர்வதம் மதுரையில் காயத்ரி வீட்டிற்கு சென்று விருந்து முடித்து வரவேண்டியதற்கான உத்தரவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தான். ஒரு வழியாக பேசி முடித்து அவர்கள் இருக்கும் ரூமிற்கு வர, இனிய அதிர்ச்சி காத்திருந்தது.
இதமான நறுமணம், மல்லிப் பூக்கள் படுக்கையில் சிதறியிருக்க, டிம் லைட்டில் மெலிதாக பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
“மாலினி ? ஏது மல்லிப்பூ…  செம்மையா இருக்கு ஏற்பாடு ?”, குதுகலமாகக்கி கூறி அவளை அணைத்தான்.
“தண்ணி பாட்டில் வாங்கப் போன போது, மதுரையிலயே மல்லியும் வாங்கிட்டேன். உங்களுக்குத் தெரியாம ஒளிச்சு வெச்சிருந்தேன்…. ஒரு ஃபர்ஸ்ட் நைட் ஃபீல் வேண்டாமா ?”,  வெட்கத்தை மறைத்து ஒரு புன்னகையோடே அவன் கழுத்தில் கைகோர்த்து லேசாய் ஆடினாள்.
“அடி மயிலு…. பூ உன் தலையில் இருந்து, காலையில் படுக்கை பூரா இருந்தா எனக்கு பெருமை. நீ இப்பவே சிதறவிட்டா, எப்படி ? இன்னும் இருக்கா ?”, என்று அவள் நெத்தியில் முட்டிக் ரகசியமாகக் கேட்க,
 “இல்லையே…. இப்படி ஒரு அப்பாவி… அடப்பாவியாகிற மொமென்ட் வரும்னு தெரியாதே….”, என்றாள் விழி விரித்து. அவள் விழிகளில் எப்போதும்போல தொலைந்தவன்,
“ம்ம்…இப்பவும் அப்பாவியா இருந்தா எப்படி மயிலு?  எனக்காக இவ்வளவு செஞ்சிருக்க ? அதுக்கான பதில் மரியாதை நான் செய்ய வேணாமா ?”, ஆழ்ந்த குரலில் கேட்க, அவன் மயிலிடம் பதிலில்லை. விழிகளில் எதிர்பார்ப்பு மட்டுமே.
 அவனின் பதில் மரியாதை இனிக்க இனிக்கக் கொடுத்து வாங்கி அவன் இசைக்கு அவன் மயிலை தோகை விரித்தாடவைத்தான்.  
“நீங்க எல்லாத்துலயும் வித்தியாசம்தான் ரகு. “, கலைந்து களைத்திருந்த பொழுதில் மாலினி சொல்ல, ‘என்ன?’ என்பது போல அவள்  புறம் திரும்பிப் படுத்தான் ராகவன்.
“இல்ல… ஆபிஸ் ஃப்ரெண்டு ஒருத்தி சொல்லிகிட்டு இருந்தா…. மென் இந்த விஷயத்துல கொஞ்சம் அவசரப்படுவாங்க Aலர்ந்து நேரா Zன்னுவாங்க… நீ ரொம்ப எதிர்பார்க்காத மாலு. போக போக நீ பொறுமையா சொல்லுன்னு. பட்…. “, அதற்கு மேல் அவனைப்பார்க்க முடியாமல் அவன் மார்பில் புதைந்து கொள்ள,  அவள் சொல்ல வருவது புரிந்து சிரித்தவன், “ ம்ம்… பட் நானு….”, அவள் எதுவோ முணுமுணுப்பதை உணர்ந்தவன், “சொல்லுடா… எனக்கு கேக்கலை”, என்றான்.
“ம்ம்… நானு இதுலையும் ரொம்ப லக்கி…. நான் எதுவுமே சொல்லத் தேவையில்லை.”, கண்கள் அவனை பார்க்காமல் அவன் கழுத்து வளைவில் நிலைத்திருந்தது.
“உனக்கு எப்பவும் அந்த ‘நீ லக்கி’ங்கற ஃபீல் குடுக்கணுங்கறதுதான் என் ஆசை, மயிலு. “, ராகவன் அவள் முகம் பற்றி நிமிர்த்த,
அதைக் கேட்டு நெகிழ்ந்தவள், “ எத்தனை பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு புருஷன் அமைவார்? உங்க அருமை எங்க அப்பா அம்மாக்குத் தெரியலை பாருங்க ரகு…. எல்லாத்தையும் காசு பணத்தை வெச்சே எடை போடுறாங்க. அப்பா கூட இந்த மாதிரி நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. “
“ஹே… என்ன கோலத்துல இருக்கும்போது உங்க அப்பாவை கொண்டுவர….”, என்று பொய்யாக அலறி, அவள் வருத்தத்தை திசை திருப்பினான் மாலினியின் ரகு.

Advertisement