Advertisement

ஜெய் இப்படிக் கறாராகப் பேசவும், வெண்ணிலாவுக்கும் அப்படியெல்லாம் நடக்காது என உறுதியாகச் சொல்ல முடியாத நிலை. ஆனால் அண்ணனை நினைத்தும் தவித்தாள். 
ஜெய்குமே மனைவியின் கலங்கிய முகம் கண்டு வருத்தம்தான். ஆனால் அவளுக்காகக் கூட அவன் இறங்கி வருவதாக இல்லை. 
கற்பகம் தினமுமே மருமகளிடம் உங்க வீட்ல இருந்து தகவல் வந்ததா எனக் கேட்டு விடுவார். வசதியை மட்டும் பார்த்திருந்தால்… இந்நேரம் உடனே சம்மதம் எனப் பதில் வந்திருக்கும். எல்லோரும் பணத்தைப் பெரிதாக நினைப்பது இல்லை என்பது அன்றுதான் கற்பகம் மற்றும் ராஜகோபாலுக்குப் புரிந்தது. 
நமக்கு இருக்கும் வசதிக்கும், அந்தஸ்த்திற்கும், நாம் கேட்டதும் பறந்து கொண்டு வந்து பெண் கொடுப்பார்கள் என நினைத்திருப்பார்கள் போல… ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றதும் உறுத்த தொடக்கி விட்டது. 
“என்ன வெளி இடமா உங்க அண்ணன் வீடு தானே… வாங்க நாமே போய்ப் பேசலாம்.” எனக் கற்பகம் மகன் மருமகளை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி கிளம்பி விட்டார். 
இவர்கள் எல்லாம் திடிரென்று வந்து நிற்பார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெயராமனுக்கே பதட்டம் தான். அவர் சமாளித்துக் கொண்டு வந்தவர்களை வரவேற்க… காபி பலகாரம் என உபசரணை நடந்தது. 
அங்கே மாடி அறையில் ராதிகாவிடம் அகல்யா, “உன்னைப் பெண் கேட்டு தான் வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன். உனக்கு விருப்பமா?” எனக் கேட்க, 
“அண்ணனுக்குத் தான் விருப்பம் இல்லையே.” என ராதிகா ஜெய்யைப் பார்க்க, அவன் கண்டு கொண்டால் தானே… 
“முதல்ல நீ சொல்லு.” என அகல்யா சொல்ல… 
“அக்கா நான் உன்னோட சேர்த்து வச்சு தானே யுவராஜ் அத்தானை பேசுவேன். ஒருவேளை நீ மனசுல அப்ப எதுவும் ஆசை வளர்த்திருந்தா… நான் இப்ப அத்தனை கல்யாணம் பண்ணிகிட்டா உனக்குக் கஷ்டமா இருக்காதா?” என ராதிகா பேசியதில், அகல்யா அரண்டு போய் ஜெய்யைப் பார்க்க, எதிர்பார்த்தது போல அவன் முறைத்துக் கொண்டு தான் இருந்தான். 
“நீதான் லூசு மாதிரி பேசிட்டு இருந்த, எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.” என்றால் அகல்யா கடுப்பாக. 
“எனக்கு அப்பவே தெரியும் நீ பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்டது எதுக்குன்னு… ரொம்ப நடிக்காத.” என்றான் ஜெய் ராதிகாவை பார்த்து, 
“நான் ஒன்னும் நடிக்கலை. உண்மையாத்தான் சொன்னேன். உனக்கு இஷ்டம் இல்லைனா எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்.” என ராதிகாவின் வாய்தான் சொன்னது. அது ஜெய்கும் புரிந்துதான் இருந்தது. 
“அவளே வேண்டாம்னு சொல்றா இல்லை… ராதிகாவுக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லிடு.” என ஜெய் வேண்டுமென்றே சொல்ல… ராதிகாவின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. அவன் அதைக் கண்டுகொள்ளாமல் சென்றான். 
காபி பலகாரம் உண்டு முடித்ததும், கற்பகம் நேராகவே பெண் கேட்டு விட்டார். 
“என் பேரனுக்கு உங்க பெண்ணைக் கேட்டு வந்திருக்கோம். நீங்க என்ன சொல்றீங்க?” 
“அண்ணன் முடிவுதான் என் முடிவு.” எனச் சந்திரன், ஜெயராமன் பக்கம் திருப்பி விட..” 
“எங்களுக்கு இஷ்டம் தான்.” என ஜெயராமன் இழுக்க, 
“பிறகு ஏன் பதில் சொல்ல இவ்வளவு தயக்கம்?” எனக் கற்பகம் கேட்க, 
“இல்லை ஜாதகம் பார்த்திட்டு பேசலாம்னு.” எனச் சொன்ன ஜெயராமன் மகனை அர்த்தத்துடன் பார்க்க…அதுவரை ஓரமாக நின்றிருந்த ஜெய் வந்து கற்பகத்தின் எதிரில் அமர்ந்தான். 
இவன் என்ன பேசப் போகிறானோ என எல்லோருக்கும் பயம் பிடித்துக்கொள்ள… வெண்ணிலா கடவுளை வேண்டாவே ஆரம்பித்து விட்டாள். பிறகு, அவன் எக்குதப்பாகப் பேசி வைத்தால்… அவளுக்கும் அவள் அம்மாவுக்கும் பிறந்த வீடே பகையாகி விடும் அல்லவா… அந்தப் பயம் அவளுக்கு. 
“என்னப்பா உன் தங்கையைக் கொடுப்ப தானே…” எனக் கற்பகம் கேட்க, 
“உங்க அந்தஸ்த்துக்கு இன்னும் பெரிய இடத்திலேயே செய்யலாமே பாட்டி.” என ஜெய் மறைமுகமாகத் தனது விருப்பம் இல்லாமையைச் சொல்ல… 
“எதுக்குப்பா சொந்தத்துல பொண்ணு இருக்கும் போது வெளியே செஞ்சிட்டு.” என்றார் கற்பகமும் விடாமல். 
“எங்க வீட்லயே ராதிகா தான் செல்லம். ரொம்ப வீட்டு வேலை எல்லாம் செஞ்சது கிடையாது. பக்கத்தில இருந்தா வந்து போய் இருப்பா, நாங்களும் அடிக்கடி போய்ப் பார்த்துக்கலாம். அதனால அகல்யாவுக்கு போல உள்ளுர்ல இருக்கிற பையனா இருந்தா பரவாயில்லை. அதுதான் யோசிக்கிறேன்.” 
“என்ன நாங்க வெளி இடமா நீ இவ்வளவு யோசிக்க, உன் அத்தை வீடு தானே… அதெல்லாம் முன்ன பின்ன இருந்தாலும், ஒன்னும் பிரச்சனை இல்லை. சின்னப் பெண் தானே… நாங்க பார்த்துக்க மாட்டோமா. நீ ரொம்ப யோசிக்காத.” 
கற்பகம் அவ்வளவு சொல்லியும் ஜெய் பதில் சொல்லாமல் யோசனையில் இருக்க, 
“எனக்கு என் பையன் மன நிம்மதி தான் முக்கியம். ஏற்கனவே ஒரு தடவை அவன் மனசுல ரொம்ப அடிவாங்கிட்டான். அதுக்குக் காரணம் என் பேரன்தான் இல்லைன்னு சொல்லலை. அது போல அவனுக்கு இன்னொரு தடவை நடந்தா, அவன் தாங்க மாட்டான்.” 
“உன் அத்தைக்கும் அண்ணன் மகளே மருமகளா வந்தா நல்லாத்தானே இருக்கும். ரொம்ப யோசிக்காதப்பா சரின்னு சொல்லு.” என்றதும்,

ஜெய்க்கும் அவர்களே நேரில் வந்து முறையாகப் பெண் கேட்கட்டும் என்ற எண்ணம் தான். தங்கள் பக்கத்தையும் தெளிவாக விளக்கி விட்டதால்… அவர்களே வந்து பெண் கேட்கும் போது, ராதிகாவை நன்றாக வைத்துக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில், “சரி பாட்டி உங்க விருப்பம் போலச் செய்யலாம்.” என்றான். 

எல்லோருக்கும் அதன் பிறகு தான் நிம்மதி ஆனது. ஜெய் திரும்பி வெண்ணிலாவை பார்த்துக் கண் சிமிட்ட, அவள் அவனை முறைத்து விட்டு சென்றாள். 
இன்னும் அண்ணன் சம்மதம் சொன்னது ராதிகாவுக்கு நம்பவே முடியவில்லை. ஜெய்யை அறைக்கு அழைத்து, “அண்ணா, நிஜமா உனக்கு ஓகே தானே…” எனக் கேட்க, 
“ம்ம்… ஆனா அங்க போய் வாய் வச்சிட்டு சும்மா இல்லாம எதாவது வம்புக்கு பேசி வச்ச.. பஞ்சாயத்து பண்ண நான் வர மாட்டேன். இப்பவே சொல்லிட்டேன்.”
 
“நீ நம்ம வீட்ல பேசுற மாதிரி எடுத்தெறிஞ்சு பேசினா… வீணா அத்தைக்குத் தான் பிரச்சனை ஆகும் பார்த்து இருந்துக்கோ. அவ்வளவு தான் சொல்லுவேன்.” 
ராதிகா எல்லாவற்றிற்கும் சரி சரியெனத் தலையாட்ட… இவள் என்ன செய்து வைப்பாளோ என்ற கவலை ஜெய்க்கு இருக்க… 
“அண்ணன் பார்த்துப்பாங்க. நீங்க டென்ஷன் ஆகாதீங்க.” என்ற வெண்ணிலா, யுவராஜிற்குப் போன் செய்து இங்கு எல்லாம் சுபம் என்றவள், போன்னை ராதிகாவிடம் கொடுத்து பேச சொல்லிவிட்டு கணவனை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றாள். 
திருமணம் முடிவான சந்தோஷத்தில், நிச்சயத்திற்கு நாள் குறித்து விட்டுக் கற்பகம் மகன் மருமகளோடு கிளம்பி சென்றார். 
இரவு அறைக்கு வந்த வெண்ணிலா, “எல்லாம் உங்க இஷ்டபடி நடந்ததா இப்ப நிம்மதியா… உங்க பிளான் தெரியாதுன்னு நினைக்காதீங்க. எங்க பாட்டி வாயில இருந்தே ராதிகாவை பெண் கேட்க வைக்கணும். அதுக்குத் தானே இவ்வளவும்.” என்றதும், ஜெய் மறுக்காமல் ஒத்துக் கொண்டான். 
“ஆமாம் உன் பாட்டி இன்னொரு தடவை என் பேரனை வளைச்சு போட்டீங்கன்னு சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? அதுக்குதான் இப்ப என்ன?” 
“ஹப்பா சரியான அடாவடி நீங்க. உங்க விருப்பத்துக்கே எல்லாம் நடந்திடுச்சு. இனிமேயாவது முகத்தைத் தூக்கி வச்சிட்டு சுத்தாம ஒழுங்கா இருங்க.” 
“சரிங்க பொண்டாட்டி.” என ஜெய் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, வெண்ணிலாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 
அவள் சிரித்ததும் ஜெய்க்கும் சிரிப்பு வர… மனைவியை இழுத்து மடியில் சாய்த்துக் கொண்டான். 
நாட்கள் துரிதமாகச் செல்ல, யுவராஜ் ராதிகாவின் திருமண நாளும் வந்தது. திருமணம் கரூரில் பெரிய மண்டபத்தில், உற்றார் உறவினர் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. 
கரனும் குடும்பத்துடன் வந்திருந்தான். அவனுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. வெளிநாடு வாழ்க்கை என்ற பெரிய பேர்தான். ஆனால் தினமும் அல்லாடும் வாழ்க்கை. 
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால்… குழந்தையைப் பார்த்துக்கொள்ள, இருவரின் பெற்றோரும் ஆளுக்கு ஆறு மாதங்கள் வந்திருப்பர். 
மகள் வெளிநாட்டில் இருக்கிறாள் என்ற பெருமையில் அனுபமாவின் பெற்றோர் சந்தோஷமாக வந்து செல்ல… அன்பரசிக்கு அந்த ஊரே பிடிக்காது. அந்த ஊரின் குளிரும் ஒத்தக் கொள்ளாது. 
காலை பேருக்கு உண்டுவிட்டு அலுவலகம் ஓடுபவர்கள், மதியத்திற்கு வெளியே வாங்கி உண்டு, இரவு வீடிற்கு வந்ததும், அன்பரசி சமைத்து வைத்திருக்கும் உணவை தான் வயிறு நிறைய  உண்ணுவார்கள். 
“இதெல்லாம் என்ன டா பொழைப்பு…. நாம் ஊர்ல வேலையா இல்லை. சென்னைக்கே போயிடலாம்.” என அன்பரசி சொல்ல… கரனுக்குமே அந்த ஆசை உண்டுதான். ஆனால் அவன் மனைவி காரராகச் சொல்லிவிட்டாள்… வெளிநாட்டில் வேலை என்பதால் தான் உன்னைத் திருமணம் செய்தேன் என்று… அதன் பிறகு எங்கே பேசுவது. 
மேடையில் நின்ற மணமக்களை விட… அவர்கள் அருகில் நின்ற வெண்ணிலாவின் மீதுதான் கரணின் பார்வை இருந்தது. 
அவள் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறாள் என்பது அவளைப் பார்க்கும் போதே தெரிந்தது. மேடையில் நின்று வரும் உறவினரோடு பேசுவது என்று இருந்தாலும், நொடிக்கொருமுறை அவள் தன் கணவனைப் பார்த்துக் கொள்வதையும் கவனித்து இருந்தான். 
ஒழுங்கா வீட்ல பேசினபடி இவளையே கல்யாணம் பண்ணி இருக்கலாமோ… தேவையில்லாமல் வாழ்க்கையைச் சிக்கலாக்கி கொண்டது போலத் தோன்றியது. இனி நினைத்து என்ன ஆகப் போகிறது? 
இவன் வேண்டாம் என்று போனதால்… வெண்ணிலாவுக்கு ஒன்றும் நட்டமில்லை. அவளை விரும்பியவனையே கரம் பிடித்து அவளது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 
ராதிகா திருமணம் முடிந்த நான்கு மாதத்தில் யஸ்வந்த் சினேகா திருமணமும் சிறப்பாகக் கோயம்புத்தூரில் நடந்து முடிந்தது. 
சினேகாவின் பெற்றோர் வீட்டிற்கு அருகிலேயே வீடு எடுத்து இருந்தனர். அதனால் வார இறுதியில் இருவரும் இங்கே வந்துவிட்டு, ஞாயிறு மாலை தான் கிளம்பி செல்வார்கள்.
சத்யாவும் கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தான். அவன் சென்னையில் படிப்பதால் மாதம் ஒருமுறை தான் வருவான். 
அகல்யா அருகிலேயே இருப்பதால் வார இறுதியில் இங்கே தான் இருப்பாள். யுவராஜ்க்கு சொந்த தொழில் என்பதால் விடுமுறை எல்லாம் இல்லை. அதனால் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஞாயிறு காலை வந்துவிட்டு மாலை சென்று விடுவார்கள். 
அந்த ஒரு நாளே ராதிகா மிகவும் அழிச்சாட்டியம் செய்வாள். என்னவோ இவள்தான் புகுந்த வீட்டில எல்லா வேலையும் செய்வது போல.. இங்கே வந்தால் ஒரு வேலையும் செய்ய மாட்டாள். 
“நல்லவேளை இவளை பக்கத்துல கட்டிக் கொடுக்கலை.” எனக் காமாக்ஷி அவள் வரும் போது எல்லாம் புலம்புவார். அவர் வெளிப்படையாகச் சொல்கிறார் மற்றவர்கள் சொல்லவில்லை. 
அவள் எப்போதோ ஒருமுறை வருவதால்… ஜெய்யும் ஒன்றும் சொல்ல மாட்டான். யுவராஜிற்கு ராதிகாவை தெரியும் தானே.. அதனால் அவனுமே கொஞ்சம் கண்டிப்பாகத் தான் இருப்பான். அவனுக்கு பயந்து, ராதிகாவும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பாள். 
அந்த வார ஞாயிறுகிழமை எல்லோருமே வந்திருக்க.. வீட்டில் விருந்து தடபுடலாகத் தயாராகி இருந்தது. எல்லோரும் சேர்ந்து உணவருந்திவிட்டு, மாலை வரை ஒரே அரட்டை தான்.
மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டும் என யஸ்வந்தும் சினேகாவும் மாலை ஆறு மணி போலத் தங்கள் காரில் கிளம்ப… அதே போல யுவராஜும் ராதிகாவும் கிளம்பி சென்றனர். 
இரவு உணவு வரை இருந்துவிட்டு அகல்யாவும், புகழும் தங்கள் மகள் இலக்கியாவுடன் அவர்கள் வீட்டிற்கு செல்ல, இரவு பேருந்துக்குச் சத்யாவும் கிளம்பிவிட்டான். 
அதன் பிறகு அமுதாவும் காமாட்சியும் இன்று அதிகபடியான வேலையில் களைத்துப் போய் நேரமே உறங்க சென்றிருக்க… வெண்ணிலா அடுக்களையை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள். 
ஜெய் அவன் அப்பாவையும் சித்தப்பாவையும் உறங்க அனுப்பி விட்டு, எல்லோரும் கிளம்பியதால் அழுதுகொண்டிருந்த மகனை தனது தோளில் சாய்த்து உறங்க வைத்துக் கொண்டிருந்தான். 
வெண்ணிலா வேலை முடித்து வரவும், மூவரும் அவர்கள் அறைக்குச் சென்றனர். உறங்கிய மகனை ஜெய் கட்டிலில் படுக்க வைக்க… 
“வாரம் வாரம் இவனோடு இதே தொல்லை. எல்லோரும் கிளம்பியதும் உட்கார்ந்து அழ வேண்டியது.” 
“அவனும் என்ன செய்வான்? எல்லோர் கூடவும் இருந்து பழகிட்டான். அதுதான் அவங்க போனதும் அழறான். 
“விட்டா உங்க பையனுக்காக எல்லோரும் இங்கயே இருக்கணும்னு சொல்வீங்க போல…” 
“அது எப்படிச் சொல்ல முடியும்? நாம வேற ஏற்பாடு தான் பண்ணனும்.” என்ற கணவனை, 
“என்ன ஏற்பாடு?” எனப் புரியாது வெண்ணிலா பார்க்க… 
“இங்கயே அவனோட இருக்க ஒரு ஆள் ரெடி பண்ணிட்டா.” என்றான். 
வெண்ணிலாவுக்கு இன்னும் புரியவில்லை. விழித்துக்கொண்டு நின்றிருந்த மனைவியை இழுத்து தன் மடியில் உட்கார வைத்த ஜெய்… “இப்ப ஆரம்பிச்சா பத்து மாசத்தில ரெடி ஆகிடும்.” என்றதும்தான் கணவனின் எண்ணம் வெண்ணிலாவுக்குப் புரிய…. 
“நிஜமாத்தான் சொல்றீங்களா…” என அவள் வெட்கமும் ஆர்வமுமாகக் கணவனைப் பார்க்க…
வார்த்தையால் அல்லாமல் முத்தத்தால் பதில் தந்தான் அவளின் அன்புக் கணவன். வெண்ணிலா கணவனின் கழுத்தில் மாலையாகக் கரம் கோர்க்க… ஜெய்க்கு அது போதாதா? 
மனமொத்த தம்பதிக்கு வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி தான். இவர்கள் வாழ்க்கையில் மட்டும் அல்ல… வானில் வெண்ணிலாவும் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது.

 

Advertisement