Advertisement

விலோசனாவின் அன்றைய மனநிலையே வேறு. முதன் முதலாய் மாப்பிள்ளை பார்க்க வந்தது ஆதியின் குடும்பத்தினர் தான், வீட்டை விட்டு அதிகம் வெளியில் போகாத பெண் அவள்.
அருகில் இருக்கும் பள்ளி, நடந்து போகும் தொலைவில் உள்ள கல்லூரி என்று இதோ அவள் படித்த பள்ளியில் தான் அவள் வேலையும் பார்க்கிறாள்.
பெண் பார்க்க வந்த அன்று உண்டான இயல்பான படபடப்பு அவளை அவனை பார்க்க விடாமல் செய்தது. நிமிர்ந்து பார்த்தால் தப்பாகிப் போகுமோ என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் வேறு அவளை அப்படிச் செய்யவிடவில்லை.
அதற்குள் ஆதி ஏதோதோ பேசி அவள் நெஞ்சில் அது ஆறாத ரணமாய் போனது.
ஆதி அவளுடன் தான் திருமணம் என்று சொன்ன பிறகு வீட்டினர் கால தாமதம் செய்யவில்லை. அடுத்த நல்ல முகூர்த்த நாளிலேயே அவர்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தனர்.
ஏற்பாடுகள் ஜரூராய் நடந்தது. ஆதி விலோசனாவிடத்தில் தனியே பேச முயற்சி செய்தான். அவளோ அதற்கு சற்றும் வாய்ப்பளிக்கவில்லை.
இளவரசனின் சொந்தங்கள் ஆதியோடா திருமணம் என்று ஒரு மாதிரியாய் கேட்ட போதும் அருள்செல்வனின் பதவியை முன்னிருத்தி யாரும் அதிகம் பேசிவிடவில்லை.
ஒரு மாதத்தில் திருமணம் என்றிருந்தது போய் இதோ விடிந்தால் திருமணம் என்றிருந்தது. விலோசனா உறங்காமல் புரண்டுக் கொண்டிருந்தாள்.
அருகில் படுத்திருந்த நயனாவும் உறங்கியிருக்கவில்லை. விலோ புரண்டு படுக்கவும் நயனா திரும்பி அவளைப் பார்த்தாள்.
“விலோ”
“ஹ்ம்ம்”

“என்னாச்சு தூக்கம் வரலையா??”
“ஆமா”
“ஏன்??”
“நான் சரியான முடிவு தான் எடுத்திருக்கேனா நயன். நாள் நெருங்க நெருங்க ரொம்ப பயமா இருக்குடி, நாளைக்கு காலையில கல்யாணம்” என்றவளின் குரலில் இருந்த கலக்கத்தை நயனாவினால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
“விலோ எப்போ வந்து கேட்கறே சரியான முடிவு தானான்னு. உனக்கென்ன பயம் இப்போ.,ஆதியை நினைச்சா. எனக்கென்னமோ அவர் அவ்வளவு பயம் காட்டுறவர் எல்லாம் இல்லைன்னு தோணுது”
“அவரை நீ புரிஞ்சுகிட்டா போதும் அவர் நீ சொல்றதெல்லாம் கேட்பாருன்னு தான் எனக்கு தோணுது. தவிர அத்தையும் அந்த மாமாவும் நல்ல மாதிரியானவங்க”
“ஒரு குறையும் சொல்ல முடியாது. ஆதிக்கு கோபம் வரும் அவ்வளவு தானே, அதெல்லாம் நீ பொறுத்துக்க மாட்டியா என்ன. அப்பா திட்டினா கேட்டுப்பல்ல அது போல நினைச்சுக்கோ” என்று சமாதானம் செய்தாள் தமக்கையை.
“ஹ்ம்ம் சரி நயன்… ஹ்ம்ம்” என்று ஏதோ சொல்ல வந்தவள் நிறுத்தினாள்.
“என்ன விலோ??”
“அவரை…”
“அவரை??”
“நீ பேர் சொல்லிக் கூப்பிட்டா நல்லாவா இருக்கும்”
லேசாய் சிரித்த நயனா “இனிமே சொல்ல மாட்டேன் சாரி” என்றாள்.
“இல்லையில்லை நீ நான்…” என்று விலோசனா உளற “நீ எதுவும் சொல்லத் தேவையில்லை. எனக்கு புரியுது என்கிட்ட உனக்கு என்ன தடுமாற்றம். கூப்பிடாதன்னு சொன்னா நான் கூப்பிட போறதில்லை”
“அது அப்போ ரொம்ப கோவத்தில இருந்தேனா அப்போ அவர் பேர் சொல்லி கூப்பிட்டு கூப்பிட்டு அதே பழக்கம் வந்திடுச்சு”
“இப்போ அவர் மேல உனக்கு கோவம் போயிடுச்சா??”
“அதெல்லாம் அப்படியே தான் இருக்கு”
“ஏன்??”
“உன்னை பிடிக்கலைன்னு சொன்ன கோபம் அப்படியே தான் இருக்கு. ஆனா நீ தான் வேணும்ன்னு வந்து நின்னாரு பாரு, அதை நான் எதிர்பார்க்கலை. அப்பவும் கோபம் தான்”
“ஆனா அவர் பொண்ணு பார்க்கறதை கூட விட்டுட்டு நேரா இங்க வந்து நின்னாருன்னு அத்தை சொன்னதை கேட்டப்போ முடிவு பண்ணிட்டேன். மாமா உன்னை நல்லா பார்த்துக்குவாருன்னு” என்றாள் நீண்ட விளக்கமாய் நயனா.
“ஹ்ம்ம்…”
“நீ தெளியலைன்னு தெரியுது. எதையும் யோசிக்காம பேசாம தூங்கு”
“ஹ்ம்ம்…”
“அந்த ஹ்ம்ம் தவிர வேற எதையாச்சும் கூட நீ பேசலாம். நான் கேட்டுக்குவேன்”
“ஹ்ம்ம்…”
“அடப்போம்மா எனக்கு தூக்கம் வருது, நீ இப்படியே ஹ்ம்ம் கொட்டிட்டே இரு” என்றுவிட்டு நயனா உறங்க ஆரம்பித்திருந்தாள் இப்போது.
காலை ஒன்பது பத்தரை முகூர்த்தம் என்பதால் விலோசனாவை ஆறு மணிக்கு தான் எழுப்பினாள் நயனா. இரவெல்லாம் தூங்காமல் மூன்று மணிக்கு மேலே தான் உறங்கியிருந்தாள் அவள்.
“நயன் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கட்டுமா”
“பியூட்டி பார்லர்ல இருந்து வந்திடுவாங்க விலோ. நீ குளிச்சுட்டு வந்திடு சரியா இருக்கும்” என்று பரபரத்தாள் தங்கை.
“அந்த கோவில்பட்டி அத்தை வேற வந்திருக்கு. மூக்கு வேர்த்த மாதிரி நேரா இங்க தான் வரும், அதுக்குள்ளே நீ ரெடி ஆகிடு இல்லைன்னா அது பாட்டுக்கு ரம்பம் போட்டு தள்ளிரும் பார்த்துக்க” என்று அவள் சொல்ல அது சற்று வேலை செய்தது விலோசனாவிடத்தில்.
அவள் குளித்துவிட்டு வர “இந்தா விலோ இந்த புடவையை கட்டிக்கோ சீக்கிரம் டைம் இல்லை நான் முன்னாடி போய் நிற்கணும்” என்று அவசரம் காட்டினாள் அவள்.
“நயன் நீ என்னை தனியாவிட்டு போகாதே”
“இனிமே நீ தனியா நான் தனியா தான் இருக்கப் போறோம் விலோ” அவள் சொல்ல இவளுக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
“விலோ இப்போ எதுக்கு அழறே??”
“நீ ஏன் இப்படியெல்லாம் பேசறே??”
“நான் உன்னை கஷ்டப்படுத்த எல்லாம் பேசலை. இதான் பேக்ட் விலோ அதை தானே சொன்னேன். போம்மா ரெடியாகு போ…” என்று தமக்கையின் கண்ணீர் துடைத்து அவள் தயாராக உதவி செய்தாள்.
நயனா எதற்கும் சட்டென்று கலங்காதவள். தமக்கை தான் எப்போதும் தாயாய் இருப்பார் உடன் பிறந்தோர்க்கு. இங்கு தங்கை தான் தாயாய் இருந்தாள் பெரும்பாலான நேரத்தில்.
அடுத்தடுத்த நிகழ்வுகள் ஆரம்பித்திருக்க நேரம் ரயிலின் வேகத்தை போல் ஓடியது. 
ஆதியின் அருகில் வந்து அமர்ந்திருந்தாள் விலோசனா. மாங்கல்யம் பெரியவர்களின் ஆசிக்காக அட்சதையுடன் கொண்டு சென்றிருந்தாள் நயனா.
கெட்டிமேளச் சத்தம் முழங்க ஆரம்பித்திருக்க ஆதித்யன் விலோசனாவின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தன்னில் பாதியாக்கிக் கொண்டான்.
“விலோசனா” என்று அவள் முழுப்பெயரை அழைக்கும் குரல் கேட்க அருகில் திரும்பி பார்த்தால் அழைத்தது ஆதித்யன்.
“ப்ரீயா இரு, நான் உன்னோட ஹஸ்பன்ட், உனக்கு வில்லன் இல்லை. என்கிட்ட உனக்கு எந்த பயமும் வேண்டாம். என்னையே முழுசா உன்கிட்ட இன்னைக்கு முதல்ல ஒப்படைச்சாச்சு”
“நீ திட்டலாம் அடிக்கலாம் என்ன வேணா செய்யலாம்” என்று இவன் அவள் புறம் சரிந்து சொல்லிக் கொண்டிருக்க “மாப்பிள்ளை நீங்க அப்புறம் பேசுங்க, இங்க சடங்கை முதல்ல முடிச்சிடுங்க” என்று ஐயர் கிண்டல் செய்ய அவன் அதை கவனித்தான்.
திருமணம் சாதாரணமாய் இருவீட்டு உறவினர்கள் மட்டும் புடைசூழ நடந்து முடிந்திருந்தது. மறுநாள் மாலை ரிஷப்ஷன் என்று முன்பே முடிவு செய்திருந்தனர்.
மாப்பிள்ளையும் பெண்ணும் அவன் வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு ஆர்த்தி சுற்றி உள்ளே அழைத்து சென்றனர். சந்தியா மருமகளை பூஜையறையில் விளக்கேற்றச் சொல்ல அவளும் அவர் சொன்னதை செய்தாள். ஆதியும் அவளுமாய் அங்கு நின்று கண் மூடி நின்றிருந்தனர்.
ஆதி மெதுவாய் கண் விழித்து பார்த்திருக்க விலோசனா இன்னமும் வேண்டுதலை முடித்த பாடில்லை. மற்றவர்கள் அங்கிருந்து விலகியிருக்க “ரொம்ப பெரிய வேண்டுதலோ” என்றான் ஆதி அவள் காதில் மெதுவாய்.
அதில் திடுக்கிட்டு கண் விழித்திருந்தாள் விலோசனா. அவனிடம் எதுவும் பேசவில்லை. பின்னர் பால் பழம் கொடுத்தனர் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்.
நயனாவும் இளவரசனும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு விடைபெற விலோசனாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. நயனா அருகே வந்தவள் “விலோ கண்ணை துடை, நாங்க எங்க போய்ட போறோம், வீட்டுக்கு தானே. நாளைக்கு மறுபடியும் பார்க்க போறோம்”
“அதுக்கு எதுக்கு அழறே?? வீட்டில நம்ம சொந்தகாரங்க எல்லாம் வந்திருக்காங்கல்ல அவங்களை எல்லாம் கவனிக்கணும். அதான் சீக்கிரமே கிளம்ப வேண்டியதா போச்சு. நீ அழுதா அப்பாக்கு மனசு தாங்குமா சொல்லு”
“ப்ளீஸ் விலோ” என்று பார்க்க அவள் கண்ணை துடைத்துக் கொண்டாள். ஆதி இப்போது அவளருகே வந்து நின்றிருந்தான்.
அவன் வரவை உணர்ந்த நயனா திரும்பி அவனைப் பார்த்தாள். “மா… மாமா அக்காவை பார்த்துக்கோங்க” என்று சொல்ல “கண்டிப்பா” என்ற ஆதி “நயனா நீ இன்னைக்கு இங்கவே ஸ்டே பண்ணலாமே, உங்கக்காவும் கொஞ்சம் இயல்பா இருப்பா”
விலோசனாவிற்கு அவன் பேச்சு சற்றே தெம்பைக் கொடுக்க திரும்பி அவனைப் பார்த்து தன் தங்கையை பார்த்தாள். “அதான் அவங்க சொல்றாங்கல்ல நீ இன்னைக்கு இங்க இரேன் நயன்”
“இல்லை மாமா வீட்டில கெஸ்ட் எல்லாம் இருக்காங்க. அப்பாக்கு தனியா சமாளிக்க முடியாது. சுகர் பேஷன்ட் அப்பா அவரை நேரத்துக்கு மாத்திரை சாப்பிட வைச்சு படுக்க வைக்கணும்”
“உனக்கு தான் தெரியும்ல விலோ புரிஞ்சுக்கோ. நாங்க கிளம்பறோம் மாமா, பை விலோ” என்றுவிட்டு அவள் கிளம்பியிருந்தாள்.

Advertisement