Advertisement

 “ப்ளீஸ் அரசி, நீ போ! என்னால சண்டையும் போட முடியாது. நீ அழறதையும் பார்க்க முடியாது…!” என்று சொல்லிக் கொண்டே அவனின் கைகள் தேங்காயை கத்தியை கொண்டு எடுக்க முற்பட்டது.

அவன் எடுக்கும் வரை நின்று, அவன் எடுத்ததும், அவனின் கையில் இருந்து பிடிங்கிக் கொள்ள வந்தாள்.

“ப்ச், போன்னு சொன்னேன்…” என்று பிடிவாதமாய் குரு சொல்ல,

அப்படி ஒரு அழுகை பொங்கிவிட்டது அரசிக்கு. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அரசி அப்படி அழுது பார்த்திராத குரு பயந்து போனான்.

“நீ போக வேண்டாமே, நீயே சமை, ஆனா அழாத…” என்று அவசரமாய் குரு விட்டுக் கொடுத்தான்.

முகத்தை கைகளில் மூடிக் கொண்டு அழுதாள். அருகில் சென்று நின்று கொண்டவனுக்கு அணைக்க கைகள் பரபரத்தாலும், யார் வேண்டுமானாலும் வரக் கூடும் என்பதால் “அழாத அரசி…” என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னான்.

பின்னே அவளானாள் அவனுக்கு பார்த்து பார்த்து செய்ய “என் வயிறு என்ன உனக்கு குப்பை தொட்டியா…?” என்று சொன்னது தாளவே முடியவில்லை.

உண்மையில் அவள் வேறு செய்யலாமா என்று நினைத்தால், ஆனால் சாப்பாடு வீணானால் திட்டுவானே, ஒரு வாரம் கழித்து பார்க்கிறோம், எதற்கு வாக்கு வாதம் என்று தான் அதையே விட்டுவிட்டாள்.

இவன் இப்படி பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. என்னவோ நினைத்து நினைத்து அழுகை பொங்கியது. அதற்குள் பால் காய்ந்து விட, அடுப்பை அணைத்தவன். அவளின் கை பிடித்து ஏறக் குறைய மாடிக்கு இழுத்துத்தான் சென்றான்.

முரண்டு பிடித்தாலும், அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள். ரூமின் உள் சென்றதுமே கதவை தாளிட்டவன், இழுத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் எதுவும் பேசாமல்.

சில நொடிகள் அணைப்பில் நின்றவளின் கைகள் பதிலுக்கு அவனை அணைக்க பரபரக்க அது பிடிக்காமல், “விடு என்னை…” என்று திடீரென்று திமிறினாள்.

அவள் திமிற, திமிற அவனின் அணைப்பு ஏகத்திற்கு இறுகியது. உடல் வலியெடுக்க ஆரம்பிக்கவும் அசையாமல் நின்றவள் “வலிக்குது…” என்று முனகினாள்.

“எனக்கும் ரொம்ப வலிக்குது” என்றான்.

“அவ்வளவு தான் எங்க எங்க” என்று பதட்டத்தோடு அவனின் முகம் பார்த்து கேட்க,

அந்த முகத்தில் இருந்த பதட்டத்தை பார்த்தவன், “அம்மா தாயே, ஐ அம் ஃபைன். ஒரு பீபி என்னை எதுவும் பண்ணாது. என்னை ஹார்ட் பேஷன்ட் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்றதை விடு…” என்று அவளை விலக்கி நிறுத்தி கத்தினான்.

உண்மையில் அரசிக்கு அவனை எப்படி சமாளிக்க என்று தெரியவில்லை. கூட இருந்தாலும் கண்டதையும் யோசிக்கிறான், விலகி வந்தால் அதையும் விட கத்துகிறான்.

மனம் சோர்வாய் உணர, “போடா…” என்று சலிப்பாய் சொல்லி, கதவை திறந்து கீழே இறங்கினாள்.

இறங்கியவள் அப்போதும் அவன் எதுவும் உண்ணவில்லை என்று புரிந்து, சட்னியை விட சாம்பார் என்றால், இன்னும் கொஞ்சம் அதிகம் உண்பான் என்று புரிந்து மிக்ஸ்யில் தேங்காய் கூட தேவையானதை போட்டு அரைத்தாள். மிக்சியின் சத்தத்தில் ஜோதியும் புனிதாவும் வந்தனர்.

“அந்த வெங்காயம் கட் பண்ணு புனிதா, நீ இட்லி வை ஜோதி…” என்று அரசி சொல்ல, என்ன ஏதென்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் வேகமாய் செய்தனர்.

ஆனால் அடிக்கடி அவளின் முகம் பார்த்தனர். அவளின் அழுத முகம் தான் நன்றாய் தெரிந்ததே. அரசியும் எதுவும் சொல்லாமல் அடுப்பில் வைத்து சாம்பாருக்கு தாளித்து விட்டாள். எல்லாம் பத்து நிமிடத்தில் தயாராகி விட்டது.

“மேல போய் உங்கண்ணாவை கூட்டிட்டு வா…” என்றாள்.

புனிதா சென்றவள் “அண்ணி கூப்பிடறாங்க…” என்றாள் முறைப்பாய்.

“இன்னும் இது வேறையா…?” என்று தங்கையின் முறைப்பு குருபிரசாத்திற்கு எரிச்சலை கொடுத்தது.

“நீ போ நான் வர்றேன்…” என்றான்.

கீழே சென்று “வர்றாங்களாம் அண்ணி…” என்று புனிதா சொல்லவும்,

“சரி ரெண்டு பேரும் பால் குடிச்சிட்டு தூங்கப் போங்க…” என்று சொல்ல, இருவரும் பாலை விட்டு எடுத்துக் கொண்டு அவர்களின் ரூம் சென்று விட்டனர்.

அரசி பேசாமல் டைனிங் டேபிளில் தலை வைத்து படுத்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து குரு இறங்கி வரவும், அரவம் கேட்டு நிமிர்ந்தாள்.

அங்கே டேபிளில் இட்லி, சாம்பார், அவனின் தட்டம், தண்ணீர் என்று எல்லாம் ரெடியாய் இருந்த போதும் சேரை இழுத்து போட்டு தட்டத்தின் முன் அமர்ந்து கொண்டான். ஆனால் இட்லி வைத்துக் கொள்ளவில்லை!

“என்ன அராஜகம்?” என்று அரசிக்குத் தோன்ற,

“ஏன் எடுத்து வெச்சு சாப்பிட மாட்டீங்களோ, ஊட்டி விடணுமோ…?” என்று ரோஷமாய் வினவினாள்.

“ஏன் ஊட்டி விட்டா என்ன…?” என்று குருவும் அவளைப் போலவே வினவினான். ஆனால் ரோஷமாய் அல்ல சீண்டலாய்!

“நான் ஊட்டி விடுவேன், நீதான் என் தங்கச்சிங்க இருக்காங்க, நீ என்ன பண்றன்னு நான் என்னவோ உன்னை பண்ற மாதிரி சீனப் போடுவ…” என்று காட்டமாய் பதில் சொன்னாள்.

மிகவும் கோபத்தில் இருக்கிறாள் என்று புரிந்தவனாக, எதையும் பேசாமல் “பசிக்குது, சாப்பாடு போடேன்! அம்மா கூட இல்லை எனக்கு அண்ட் உன்னை மாதிரி என்னை யாரும் பார்த்துக்கிட்டதும் கிடையாது. அதனால நீ இருக்கும் போது என்னால தானா எதுவும் செய்யவே முடியாது…”

“நீ தட்டுல சாப்பாடு போட்டாலும் சரி, இல்லை என் மண்டைல அடி போட்டாலும் சரி, எதுவா இருந்தாலும் நீ தான் போடணும்../” என்றான் அவனின் கண்களை நேராய் பார்த்து.

“என்ன கலாய்க்கறீங்களா…?” என்று அரசி கேட்க,

“சே…சே…! நிஜமா, சீரியஸா சொல்றேன்…” என்றான் விடாமல் பார்த்து.

அவனின் தோற்றம், அவனின் பார்வை எல்லாம் அரசியை என்னவோ செய்தது! இவன் காதலித்தவன் என்று எனக்கே ஞாபகம் வருவதில்லை, இவன் மேல் பித்தாகி கிடக்கின்றேன். இவன் எதற்கு அதை நினைத்து இவனும் வருந்தி என்னையும் வருத்துகின்றான்.

“என்னவோ போடி அரசி!” என்று மனதிற்குள் நொந்து கொண்டவள், எழுந்து அவனிற்கு இட்லியை வைக்க, அதன் பிறகே உண்ண ஆரம்பித்தான்.

அவன் திருப்தியாய் உண்டு விட்டான் என்று தெரிந்த பிறகு மீதம் இருந்ததை இவளும் உண்ண, “நீ இன்னும் சாப்பிடலையா?” என்றான் வாஞ்சையாக.

“சாப்பிட்டிட்டு இருந்தப்போ தான் புனிதா சொன்னா நீங்க சாப்பிடலைன்னு. அதுக்கு பிறகு சாப்பிட முடியலை…” என்று சொல்ல,

அவளின் செய்கையில் எப்போதும் போல வியந்து, “எனக்கு… இது… இது தான் எப்பவுமே தோணுது. எப்படி உன்னால இப்படி என்கிட்டே இருக்க முடியுது, நடக்க முடியுது…?” என்று வினவ, 

“ம்ம்… கூட சேர்த்துக்கங்களேன் இன்னொரு வார்த்தை…” என்றாள்.

“என்ன?” என்றவனிடம், “ம்ம், படுக்க முடியுது!” என்று சொல்ல,

“அரசி!” என்று ஒரு அப்படி ஒரு த்வனியில் அதட்டலிட்டான். முகமும் கோபத்தில் சிவந்து விட்டது. விட்டால் அவளை அடித்து விடும் ஆவேசம் கிளம்பியது.  

அசையாமல் அமர்ந்திருந்தவளிடம், “இனியொருதடவை இப்படி பேசின, என்ன பண்ணுவேன்னு எனக்குத் தெரியாது…” என்றான் கர்ஜனையாக.

ரொம்பவும் பேசியது புரிய அமைதியானாள். அவளின் முகமும் தொங்கிப் போக,  “இவ்வளவு பேசாத அரசி, பேச்சு எப்பவுமே நின்னுடும்…” என்றான் ஆதங்கமாக.

“என்னோட அரசி இப்படி பேசறது எல்லாம் என்னால தாங்க முடியாது. ப்ளீஸ்! உனக்கு பேசணுமா என்னை என்ன வேணா பேசு, ஆனா உன்னை பேசாத…”

அரசி அமைதியாக இருந்தாள். அந்த அமைதி, அந்த முகம் அவனை அமைதிப்படுத்த,

“கோபம் வந்தா நாய் வெச்சு கடிக்க விடுவ இல்லையா, அந்த மாதிரி கூட ஏதாவது பிளான் பண்ணு…” என்றான் அவளின் முகத்தினை பார்த்தாவாறே.

“இல்லை நீயே என்னை கடிச்சு குதறினாலும் எனக்கு ஓகே…” என்றான் அவளை இலகுவாக்க.  

அவனின் பேச்சில் தான் இளகி விட்டால் என்ன செய்வது என்று யோசித்து, திடும் என்று எழுந்து நின்றாள். உண்மையில் மனது இளகத் தான் செய்தது. கோபத்தை இழுத்து பிடித்து தான் வைத்திருந்தாள்.

குரு என்ன செய்தாலும் மனது அதை தானாக இயல்பு போல மன்னித்தோ இல்லை கண்டு கொள்வதோ இல்லை. அவளுக்கே ஏன் இந்த ரோஷம் கெட்டத்தனம் அவனிடம் என்று புரியவில்லை. மனதை நிலைப் படுத்தியவள் பிறகு அவனிடம் விரல் நீட்டி மிரட்டலாய் பேசினாள்.

“புரிஞ்சிக்கோ நல்லா நீ! ஏற்கனவே ஒரு பொண்ணு கிட்ட காதல் சொல்லியிருக்க, அதனால உன்கிட்ட ஐ லவ் யு ன்ற வார்த்தை எல்லாம் சொல்ல முடியாது. ஆனா எனக்கு அப்படி தான் உன்கிட்ட புரிஞ்சதா…?” என்று கோபமாக நிறுத்தினாள்.

குருவின் முகம் இவளின் பேச்சினை கிரகிக்க முற்பட்டது என்ன சொல்கிறாள் இவள் என்று. காதலை மிரட்டலாய் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அண்ட் இன்னொரு விஷயம்…” என்றாள் கடினமாக.

“என்ன?” என்பது போல பார்த்தவனிடம்,   

“உங்க காதலை நீங்க மறக்கணும்!” 

“இல்லை நான் மேக்னாவை நினைக்கவேயில்லை, உன்னை தவிர எனக்கு வேற ஞாபகமே இல்லை…” என உடனே பதில் கொடுத்தான்.

“நான் மேக்னாவை சொல்லலை, உங்க காதலை சொன்னேன். நீங்க காதலிச்சீங்கன்னு நினைக்கறீங்க இல்லையா, அதை சொல்றேன்…” என்றாள் முடிவு போல.

குருபிரசாத் அவளை பார்த்திருக்க,  “முடியும்னா சொல்லுங்க, கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் உங்களோட வருவேன். இல்லையா நான் சென்னை வரமாட்டேன். எங்க வீட்ல என்னை அடிச்சாலும் உதைச்சாலும் மிதிச்சாலும் வர மாட்டேன்…” என்று சொல்லி எழுந்தவள்,

“இதை எல்லாம் கிளீன் செஞ்சு வெச்சிட்டு வாங்க…” என்று சொல்லி படுக்கப் போய்விட்டாள்.

வெகு நேரம் குருபிரசாத் அப்படியே அமர்ந்திருந்தான். அரசியின் பேச்சு அவனின் மனதை இலகுவாகியது. சிரிப்பையும் கொடுத்தது.

“ஆக மொத்தம் என்னை அவ காதலிக்கறதை சொல்ல மாட்டா! ஆனா அதுதான் இல்லையா…?” என்று நினைத்தவனுக்கு சிரிப்பு பொங்கியது.  

“பிரச்சனையே இல்லாத வாழ்க்கையில எப்படி பிரச்சனை பண்ணிக்கனும்னு உன்கிட்ட தாண்டா எல்லோரும் கிளாஸ் எடுத்துக்கணும்…” என்று அவனை அவனே சாடிக் கொண்டான். 

பின் அவனுக்கு அவனே வாய் விட்டே சொல்லிக் கொண்டான் “ஹே ஜக்கம்மா! நானே உன்னை விட்டாலும், நீ என்னை விட மாட்ட. அண்ட் நான் உன்னை விடணும்னா என்னோட உயிர் போனா தான் உண்டு…” என்று.

 

Advertisement