கங்காதரன் சொல்லவும், “சார், எனக்கு டெக்னிகலா ஒன்னுமே தெரியாது. நான் என்னன்னு சொல்வேன் ?” என்று கேட்டாள் ஜெயந்தி.

“சஞ்சய் வந்து சொல்ற வரை இரண்டு பக்கமும் பேசிக்காம பார்த்துக்கோ. மோகன் பாதி நேரம் ஆஃபீஸ்ல இருக்கமாட்டான். இப்ப சஞ்சய் இல்லாததுனாலதான் இங்க பார்க்க முடியுது. அவனும் இல்லைன்னா அடுத்த கன்ட்ரோல்  நீ”, என்று சொல்ல, “அடக் கடவுளே, இது வேறயா?”, என்றிருந்தது. ‘பேசாம குரு சாரை கூப்பிட்டு எதாவது கலாட்டா செய்ய சொல்ல வேண்டியதுதான்’, என்று  நினைக்கும்போதே புன்னகை மலர்ந்தது ஜெயந்தியிடம்.

அடுத்த சில நாட்களில் வினாயகர் சதுர்த்தி வரவும், அலுவலகத்தில் முதல் நாள் மாலை கொண்டாடுவதாக ஏற்பாடு. பெண்கள் புடவை உடுத்தி வர, ஆண்கள் கையோடு எடுத்து வந்த வேட்டியை மாற்றிக்கொண்டு வந்தனர். டெக் டீம் அவர்கள் அலுவகலத்திலிருந்த பிள்ளையாரை ஜோடித்துக்கொண்டிருந்தனர்.

ஜெயந்தி வங்கியோடு பேச்சு வார்த்தை முடித்துவிட்டு வெளியில் வந்து பார்க்க, கலர் மாவுகள் இருக்க, சாக் பீஸ் ருலர் என்று வரைந்து, அழித்துக்கொண்டிருந்தான் நவீன், உடன் இரு பெண்கள் கையில் ஒரு தாளுடன், “இதில்லடா… மூணாவது ரோலர்ந்து வரணும்”, என்று விவாதம் ஓடிக்கொண்டிருந்தது.

“என்னாச்சு? “, என்று எட்டிப்பார்த்தாள் ஜெயந்தி.

“இல்லக்கா… இங்க கோலம் போட ஒரு டெம்ப்ளேட் எடுத்தோம். நாந்தான் எஞ்சினீர்னு இவன் வரைஞ்சு தரேன்னானேன்னு நம்பினா…இவனுக்கு சர்க்யூட் டையக்ராம் மட்டும்தான் வரும் போலருக்கு…”, என்று மஞ்சு கலாய்த்தாள்.

“ஏன் எஞ்சினீயரம்மா நீதான் வந்து வரையறது? வேணும்னே கஷ்டமானதா எடுத்து தரா”, நவீன் முறைத்தபடியே எழுந்தான்.

எங்கே சண்டை வரப்போகிறதோ என்று நினைத்தவள், “ஏய்… இருங்கப்பா. கோலம் போடணும் அவ்வளவுதானே?”, என்றவள் மஞ்சுவிடம் இருந்த பேப்பரை பார்க்க, அது கோவில் தேர் போன்றதொரு  சிக்குக் கோலம்.

“இதெல்லாம் தெரியாது. வினாயகர் மாதிரியே ஒரு ரங்கோலி போடலாம். ஓகே? இன்னும் அரை மணி நேரத்துல மோகன் வந்துடுவார். பாஸ் வேற ஜூம்ல கலந்துக்கறார். லேட் பண்ணக்கூடாது”, என்றவள் வேகமாக  நவீன் ஸ்கேலில் அளவெடுத்து வைத்த புள்ளிகளை அழித்துவிட்டு, அடுத்த பத்து நிமிடத்தில் அழகானதொரு வினாயகரை சிறிய அளவில் வரைந்தாள்.

சுற்றி நின்றவர்கள் “ஓ…வாவ்…சூப்பர்க்கா”, என்று ஆர்பரிக்க, “சரி கலரிங்க நீங்க பாருங்க”, என்று எது எங்கே வர வேண்டும் என்று சொல்லவும், டெக் படை அடுத்த பத்து நிமிடத்தில் முடித்துவிட்டது. லேசாக மீண்டும் ஒரு பார்டர் கொடுத்து அழகாக்கினாள். நிஜமாகவே அற்புதமாக வந்திருந்தது.

அவல் பொரி, பழங்கள் என்று ட்ரேக்களில் வைத்து அடுக்க, ஆர்டர் செய்திருந்த கொழுக்கட்டைகள் வந்து சேர அதுவும் அடுக்கப்பட்டது. மோகன் அவன் லேப்-டாப்பில் சஞ்சையை இணைத்து, அலங்கார ஏற்பாடுகளை காட்டினான்.

“வாவ்…ரங்கோலி செம்மையா இருக்கு. போன வருஷமெல்லாம் இல்லையே, யார் போட்டது?”

“அப்ப இந்த வருஷம் புதுசா வந்தவங்க போட்டதுன்னு தெரிய வேணாமா சஞ்சய்? ஜெயந்தியோட கைவண்ணம்”, என்று மோகன் சொல்ல, “நான் சும்மா அவுட்லைன் தான் செஞ்சேன். உங்க டெக் டீம்தான் கலரிங் கொடுத்தாங்க”, என்றாள் ஜெயந்தி.

“க்கா… பாஸ்கிட்ட வாவ் வாங்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம், வந்தா வாங்கி போட்டுக்கணும். இப்படி நான் இல்லை டீம்னுல்லாம் சொல்லக்கூடாது”, பெரிதாக ரகசியம் சொல்லும் பாவனையில் அறிவுரைத்தான் நவீன்.

ஆளாளுக்கு அவனை கலாய்க்க, கலகலப்பாக பூஜையை முடித்தார்கள். இருந்தது பத்து பேர் என்றதால் அனைவருமே ஆரத்தி காட்டி முடிக்கவும், சஞ்சய் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறினான்.

அப்போது அசரடிக்கும் அழகுடன் ஒரு பெண், “ஹோ… ஹே சஞ்சே…”, என்று இயல்பாய் அவன் தோள் மேல் கைவைத்து, கேமரா வழியாக இங்கிருக்கும் டீமிடம் வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை அமெரிக்க வாடையுடன் கூறினாள்.

மோகன், நவீன் மற்றும் இரு ஆண்கள் கோரஸாக பதில் வாழ்த்து சொல்ல, ஜெயந்திக்கே சிரிப்பு வந்தது.

“ஜெயந்தி… புது ஃபைனான்ஸ் சீஃப்  நீங்கதானா?”, என்று கேட்கவும், அவளும் கையசைத்து ஆமோதித்தாள்.

“ஹ்ம்ம்… நான் தீக்ஷனா”, என்று சொல்லவும், ஓஹ் இவள்தான் அமெரிக்க கிளையை நிர்வகிக்கிறாள் என்று புரிந்தது.

“ஹ்ம்ம்… ஈமெயில்ல பேசியிருக்கோம்”, ஜெயந்தி ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தாள்.

“யா.. வெல் சீக்கிரமே  நேர்ல பார்க்கலாம். அடுத்த வாரம், சஞ்சய் கூட நானும் அங்க வரேன் கைய்ஸ். ஒரு அவுட்டிங் ப்ளான் பண்ணலாம்”, என்றவள் மேலும் சில நிமிடங்கள் பேசி வைத்தாள்.

“அங்க காலையில மணி ஏழு கூட ஆகலை, பாரு வேலை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. நீங்களும் இருக்கீங்களே!”, மோகன் அலுத்துக்கொள்ள, “ம்ம்… சாயந்திரம் நாலு மணிக்கு ஹாப்பி அவர்னு கிளம்பிடுவாங்க. நாங்கதான் நைட் பத்து மணியானாலும், இஷ்யூ முடிச்சிட்டு போறோம்… நினைப்புல வைங்க சார்”, என்று பழிப்பு காட்டினாள் மஞ்சு.

“அதென்ன  எல்லாரும் கோரஸா பதில் வாழ்த்து சொல்றீங்க?”, ஜெயந்தி கேட்கவும், “அப்படி கேளுங்கக்கா… ஆல் பாய்ஸ் தீஷா பார்த்தாலே லவ்ஸ்தான். இப்ப இங்க வராங்களா, பூராப் பயலும் ஆஃபீஸ்ல ஆஜராகிடுவாங்க. கிளையன்ட் சைட்டுக்கு பொண்ணுங்கதான் போகணும். ஆஃபீசே இவங்க வழிசல்ல மூழ்கிடும்”, தலையில் தட்டிக்கொண்டாள்.

அவள் பேச்சை காதிலேயே வாங்காமல், “மோகன்ணா… இந்த டீம் அவுட்டிங் பக்காவா ப்ளான் பண்ணனும்.”, நவீன் சொல்லவும்,

“டேய்… ஃபைனான்ஸ் பாஸ் எவ்வளவு தருவாங்கன்னு கேட்டுக்க. அப்பறம் லொகேஷன் டிசைட் பண்ணலாம்”, என்று இவளிடம் திருப்பிவிட்டான் மோகன்.

“குபேர லக்ஷ்மி, ஒரு வைவ் லாக்ஸ் அலாட் பண்ணுங்க, ஒரு செம்ம ரிசார்ட்ல ஒவர் நைட் ஸ்டே போடலாம்”, என்று உடனே கோரிக்கை வைத்தான் நவீன்.

அவனின் விளிப்பில் சிரிப்புடன் ஆசீர்வதிப்பது போல கையை தூக்கியவள், “போன முறை என்ன பட்ஜெட் இருந்ததுன்னு பார்த்துட்டு சொல்றேன்”, எனவும், பெண்கள் கூட்டம் நகைத்தது.

“அப்ப சரவண பவன் லஞ்ச்தான்! கங்கா சார் இதெல்லாம் தண்ட செலவுடான்னு காசே தரலையே”, கொழுக்கட்டையை மொக்கிக்கொண்டே மஞ்சு வாரினாள்.

சித்தி வீட்டிற்கு அன்றிரவே வந்துவிட, அலுவலகத்தில் பூஜை செய்த கதையெல்லாம் கூறி சிரித்துக்கொண்டிருந்தாள் ஜெயந்தி.

“பரவாயில்ல, ஆஃபீஸ்ல நல்லா பொழுது போகுதுன்னு சொல்லு. அப்ப விட இப்பதான் ஜெயந்தி கலகலப்பா இருக்க”, என்றவர்,

“நீ திட்டினியேன்னுதான் அந்த ஏஜென்சில வரன் பார்க்கறதை நிறுத்தி வெச்சேன். திரும்ப ப்ரோஃபைல் ஆக்டிவேட் பண்ண சொல்லவா ஜெயந்தி?”  அவள் நல்ல மூடில் இருக்கவும் நைசாக பேச்சை ஆரம்பித்தார்.

“சித்தி…. ஒரு ஆணியும் வேணாம். சும்மா இருப்பீங்களாம்”, என்று செல்லமாக அதே நேரம் அழுத்தமாகவும் கூறினாள்.

‘அம்மா துர்கே ! இரண்டு வாரத்துல வரன் அனுப்பின, அப்பறம் மறந்திட்டியே மா. இந்தப் பொண்ணுக்கு ஒரு வழி செய்யற வரை உன்னை விட மாட்டேன் பார்த்துக்கோ. இந்த வாரம் கடைசி வாரம். அவளை வெச்சே முடிக்கறேன், திரும்ப ஒரு மண்டலம் ஸ்டார்ட் பண்றேன்’, என்று தீவிரமாக துர்கையோடு டீல் போட்டுக்கொண்டே ஜெயந்தியோடு சேர்ந்து பூஜை அறையை சுத்தமிட்டு கோலம் போட்டு முடித்தார் ரமா.

மறு வாரம் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. சஞ்சய் இந்தியா வந்து, இன்று அலுவலகம் வருகிறான்.

வழமைபோல உள்ளே வந்து தன் சீட்டிற்கு வந்தவள், எச். ஆர் என்று சொல்லிக்கொள்ள இருக்கும் ஒரே ஆளான ராகினிக்கு முகமன் கூறி கணினியை உயிர்பித்தாள்.

“ஜெய்.. சஞ்சய் காலையிலேயே வந்துட்டார். நான் என் அப்டேட் இப்பதான் முடிச்சிட்டு வரேன். நீ வந்தா வரச் சொன்னார்.”

ராகினி கூறவும், ஜெயந்தி உள்ளே சென்றாள். வழக்கமான முகமன் முடிந்து, அலுவலக விஷயங்களை சுருக்கமாகக் கூறினாள். அனேகமான விஷயங்கள் ஈமெயில் தகவல்களாக ஏற்கனவே சொல்லியிருக்க, சுருக்கமாக அதன் தற்போதைய நிலைகளை விவரித்தாள்.

“ரைட். எல்லாம் ஸ்மூத்தா போகுது ஜெயந்தி. குட் ஜாப்”, என்றவன், “பசங்க அவுட்டிங் கேட்கறாங்கன்னு மோகன் சொன்னான். போன வருஷம் அளவுதான் சாங்க்ஷன் பண்ண முடியும்னு சொல்லிட்டீங்களாம்?”

தோளை குலுக்கியவள், “அவங்க கேட்கறதை நீங்க ஓகே செய்தா தரலாம் சஞ்சய். பிரச்சனை இல்லை. ஆனா வருஷா வருஷம் இதே மாதிரி எதிர்பார்ப்பாங்க. யோசிச்சு சொல்லுங்க. அதே மாதிரி இங்கே ஓவர் நைட் ஸ்டேயோட அவுட்டிங்னா, அங்க யூ.எஸ் ஆஃபீஸ்லேயும் எதிர்பார்ப்பாங்க, அங்க பட்ஜெட் இன்னுமே எகிரும்.”

மோவாயை தேய்த்தவன், “மோகன் சொன்னது இப்ப புரியுது”, என்றான் லேசான புன்னகையுடன்.

“என்ன சொன்னார்?”

“இதோ இப்படி சட்டுன்னு லாங்க் டெர்ம் எஃபக்ட் யோசிச்சி சொல்றீங்களே, அதை சொன்னேன். கங்கா மாமா எப்பவும் செலவு பண்ணாதேடான்னு இறுக்கி மட்டும்தான் பிடிப்பார். ம்ம்…. சரி இதுக்கு என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க. ஆரம்பிச்சபோது அலாட் பண்ணது இந்த அம்பதாயிரம் லன்ச் செலவு. இப்ப கொஞ்சம் வளர்ந்துட்டோம், கொஞ்சம் தாராளம் காட்டலாம்.”

சற்று யோசித்தவள், “இது ஒரு தடவைங்கறது பதியணும். என்னைக் கேட்டா இப்ப இந்த புது க்ளையன்ட் ஓகே சொல்லிட்டாங்கன்னா, அது காரணமா வெச்சு ஒரு டே ட்ரிப் போகலாம். டீமுக்கு ஒரு மோடிவேஷ்ன் இருக்கும். இங்க மாதிரியே யூ.எஸ் ப்ராஞ்ச்க்கும் அலாட் பண்ணலாம். அங்க ஆளுங்க கம்மி, சோ ஒரு மாதிரி பாலன்ஸ் ஆகும்.”

அதில் புன்னகைத்தவன், “ஸ்மார்ட். அனேகமா நாளை மறு நாள் ரிசல்ட் தெரிஞ்சிடும். பாசிடிவ்வாதான் இருக்கும். லெட்ஸ் சீ”, என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பெர்ஃபூம் நறுமணம் சூழ உள்ளே வந்தாள் தீக்ஷனா.

“ஹாய் சஞ்சய்! ஹே ஜெய்”, என்று பல நாள் பழகியவள் போல தோளணைத்து விடுத்தவள், சஞ்சயின் இருக்கை அருகில் அமர, ஜெயந்தி விடை பெற்றுக்கொண்டாள்.

அலுவலகமே ஜே ஜே என்றிருந்தது. ஜெயந்தியே வந்தது முதல் பார்க்காத இருவர் கூட வந்திருந்தனர். மஞ்சு அன்று சொன்னதில் தவறே இல்லை என்று தெரிந்து சிரிப்புதான் வந்தது.

ஹீல்ஸ் ஷூவும் ,இறுக்கிப் பிடித்த ஜீன் பான்ட்டும் கால்களை எடுப்பாகக் காட்ட, வெள்ளை சட்டை இன் செய்து, முதல் இரு பட்டன் கழட்டி விடப்பட்டிருக்க, எதுவும் எக்குத்தப்பாக தெரியாவிடினும், தெரிந்துவிடாதா என்ற நப்பாசையில் இருந்தனர் போலும். தீக்ஷனா உள்ளே பனியன் போன்று போட்டிருந்தது கூட வெள்ளை சட்டையின் உள்ளிருந்து தெளிவாகத் தெரிந்தது. அடங்காத தலை முடியை தூக்கி க்ளிப் செய்திருந்தாள், அங்கங்கே மெரூன் ஹைலைட்ஸ் விளக்கொளியில் டாலடித்தது. சில பல முடிக் கற்றைகள் வெளியில் இருக்க, கோதுமை நிறமும், மேக்கப் பூசிய கண்கள், லேசான பிங்க் நிற க்ளாஸ் போட்ட உதடுகள் என்று அழகாக இருந்தாள். திருத்தமான ஓவல் முகம், ஒடிசலான உயரமான பெண் ஒயிலாக இருந்தாள்.

 அனைவரோடும் அளவளாவி விட்டு ஒரு மணி நேரம் சென்று, “ஜெய்  என் ட்ரீட் எல்லாருக்கும். லன்ச் ஆர்டர் பண்ணிடு”, என்றாள்.

வேலையாக இருந்தவள், “உங்க ட்ரீட் தீக்ஷ்னா, பசங்க யார் ஃப்ரீன்னு பார்த்து சொல்லச் சொல்லுங்க.  எனக்கு இந்த இன்வாய்ஸ்சஸ் க்ளீயர் பண்ணனும்”, என்று சொல்லி அவள் வேலையை தொடர, தீக்ஷனா முகம் சுருக்கியவள் வேறு பேசாது சென்றுவிட்டாள்.

“என்ன ஜெய்?”, என்று ராகினி கேட்க, புருவம் உயர்த்திப் பார்த்தவள்,

“வந்ததுலர்ந்து அவளும் வேலை பார்க்கலை, மத்தவங்களையும் வேலை பார்க்க விடலை.  இந்த கடலையெல்லாம் லஞ்ச் டைம்ல போட வேண்டியதுதான? இதுல என் வேலையும் கெடுக்கணுமா? யார் ட்ரீட் வெக்கறாங்களோ அவங்கதான பார்க்கணும்? நான் என்ன அவங்க அசிஸ்டென்ட்டா இல்லை ஆஃபீஸ் அட்மினா?”, என்று  நக்கலடித்தவள், தன் வேலையை தொடர்ந்தாள்.