Advertisement

அதற்கு அவள் பதில் சொல்லும் முன்,

“அபி!” என்று சற்றே குரலை உயர்த்தி அழைத்த வேலம்மாள் பொருமலுடன், “இப்படி கூடவே இருந்து ஏமாத்திட்டியே! இதை உன் கிட்ட நான் எதிர்பார்க்கலை” என்றார்.

“எதிர்பார்த்து இருக்கணும்” என்றவன், “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்றதோடு முடித்துக் கொண்டான். அப்பொழுதும் அவன் முகத்தில் சிறு மென்னகை குடிகொண்டிருந்தது தான்.

“போயும் போய் இந்த சிறுக்கிக்காக அம்மாவை விலக்குறியா?” 

சட்டென்று கோபத்துடன் அன்னையை முறைத்தவன், “பார்த்து பேசுங்கம்மா.. மலர் இந்த ஊரோட தலைவி” என்றான்.

“உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. ஒரு வேலைக்காரியோட மகளும் வேலைக்காரி தான்” என்று அவர் முடித்த நொடி,

கீழே இருந்த இளைஞர் பட்டாளம், “ஏய்!” என்றும்,

“ஆர பார்த்து யன்ன வார்த்த சொல்லுற? உசுரோட ஊரு போயி சேர மாட்ட!” என்றும் கத்த,

ஒருவனோ, “எட்றா அந்த வீச்சருவாள” என்று வேற கூற, வேலம்மாள் சற்று பயந்து தான் போனார்.

ஆனால் பயத்தை வெளியே காட்டாமல் அவர்களை முறைக்கவே செய்தார்.

ஒரு பெரியவர், “பாத்து பேசு வேலம்மா.. வீரையன் தங்கச்சிங்கிற ஒரே காரணத்துக்காக தா அமைதியா இருக்கோம்.. ஆனா யங்க பொறுமைக்கும் ஒரு யெல்ல வுண்டு” என்றார்.

பனிமலர், “வுடுங்க ஐயா.. சூரியனைப் பார்த்து குரைக்கிற நாயை கண்டுக்கிடுறோமா என்ன!” என்று கூற,

“யாரை பார்த்துடி நாய்னு சொல்ற! பார்த்து பேசு.. இல்ல பேசுற நாக்கை இழுத்து வச்சு அறுத்திடுவேன்!” என்று வேலம்மாள் எகுற,

மீண்டும் இளைஞர் பட்டாளம், “ஏய்!” என்றும்,

“யெங்க! அக்கா கிட்டக்க வா பார்க்கலாம்!” என்றும்,

“அதுக்கு மொத ஓ ஒடம்புல கை இருக்கணுமே!” என்றும்,

“ஒரு அடி மின்ன வெச்சா ஒரே சீவா சீவிபுட மாட்டோம்!” என்றும் ஒரே நேரத்தில் எகிறிக் கொண்டு முன்னேற, ஒற்றை பார்வையில் அவர்களை அடக்கிய பனிமலர் வேலம்மாள் பக்கம் திரும்பி,

அலட்டிக் கொள்ளாமல், “எங்க கை மட்டும் பூ பறிச்சுட்டு இருக்குமா?” என்றாள், பின், “தப்பு தான்.. உங்களை போய் நாய் கூட ஒப்பிடலாமா? நாய் நன்றி உள்ளதாச்சே!” என்றாள்.

பனிமலரின் கூற்றில் இளைஞர்கள் சத்தமாக சிரித்தனர். அதில் அவமானமாக உணர்ந்த வேலம்மாள் பெரும் கோபம் கொண்டாலும் இளைஞர்களின் ஆவேசத்தில் அச்சம் கொண்டவராக அவளை முறைக்க மட்டுமே செய்தார்.

அந்த பெரியவர் பனிமலரிடம், “செரி தாயி.. இப்ப முடிவா யன்ன சொல்லுற?” என்று கேட்டார்.

“நா தா அப்பவே இவுரு கூட வாழ விருப்பமில்லனுட்டு சொல்லிபுட்டேனே ஐயா” என்று பனிமலர் கூற,

அவரோ, “இத ஓ கழுத்துல தாலி ஏற மின்னல நீயி சொல்லி இருக்கோணும்” என்றார்.

“நடந்தத பாத்தீங்க தான! என்னிய வார்த்தயால இழுத்து கட்டிபுட்டாங்கலே!” என்றவள் சுப்பையாவை குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்தாள்.

பெரியவர், “நீரடிச்சு நீர் வெலகாது.. ரத்த சொந்தம் எந்நாளும் வுட்டு போவாதுனுட்டு சொல்லி கேட்டது இல்லியா தாயி?” என்றார்.

அவளோ, “யெல்லாம் தெரிந்தும் நீங்களே இப்புடி பேசலாமா ஐயா?” என்றாள்.

இளைஞர் கூட்டத்தில் ஒருவன், “அதான் அக்கா சொல்லுறாங்கல.. திரும்பத் திரும்ப யன்னத்த கேட்டுகிட்டு!” என்று குரல் கொடுக்க,

“வெவரம் புரியாம சும்மானாக்க சலம்பாதல.. நா பேசிட்டு இருக்கதே ஒங்க அக்கா நல்லபடியா பொழைக்கதே.. நம்ம மலரு இப்புடியே நம்மூருக்கு ஒழச்சிகிட்டு மொட்ட மரமா நிக்கோனுமா?” என்று குரலை உயர்த்தி அவனை அடக்கியவர் பனிமலர் பக்கம் திரும்பி இயல்பாகிய சாந்த குரலில்,

“நீயி சொல்லுறது வாஸ்தவம்தெ.. யெல்லாருக்கும் நடந்த யல்லாம் தெரியும் தா தாயி.. ஆனா, இப்ப இந்த கிழவன் பேசிகிட்டு இருக்கது ஓ பொழப்புக்காக.. தண்டன கொடுக்கேனுட்டு தம்பிய வாழாவெட்டியா அனுப்புறதா சொல்லுறது, செரி இல்லியே! இதில பாழாபோறது ஓ வாழ்க்கயு தான! யன்ன இருந்தாலும் ரத்த சொந்தம் வுட்டு போவுமா! வீரையன் இருந்தாக்க ஒன்னிய மொட்ட மரமா நிக்கதேன் வுடுவானா?” என்றார்.

“என்னிய மன்னிச்சிபுடுங்க ஐயா.. இந்த வெசயத்துல, யெ முடிவுல மாற்றம் இல்ல.. நீங்க சொன்னது போல யெ அப்பா இருந்து இருக்கணும்.. ஆனா இல்லியே!” என்று தந்தையின் நினைவில் லேசாக கரகரத்த குரலில் கூறியவள் நொடி பொழுதில் சுதாரித்து தனது கம்பீரத்தை மீட்டு தீர்க்கமான கோப குரலில், “என்னிய பொறுத்த மட்டும் இவுக ரத்த சொந்தம் இல்ல.. யெ அப்பாவோட உயிர குடித்த ரத்தகாட்டேரிங்க” என்றாள். 

“யாரைப் பார்த்துடி ரத்தகாட்டேரினு சொல்ற?” என்று வேலம்மாள் ஆவேசத்துடன் கத்தியபடி அவளை அடிக்க வர,

அபியுதித் அன்னையை நெருங்கும் முன், அவள் அவரது ஓங்கிய கையில் ஒரு தட்டு தட்டியபடி அலட்சியமும் எள்ளலும் கலந்த பார்வையுடன், “உங்களையும் உங்க பெரிய அண்ணன் குடும்பத்தையும் தான் சொன்னேன்” என்றாள்.

(லீலாவதி குடும்பமும் அவரது அண்ணன் குடும்பமும் திருமணத்திற்கு முன்பே வெளியேறி இருந்தனர்.)

வேலம்மாள் வலியில், “ஆ!” என்று கத்த,

நக்கல் பார்வையுடன், “லேசா தான் தட்டினேன்.. ஓங்கி அடிச்சா எப்படி இருக்கும்னு போய் உங்க நாத்தனார் மருமகனை கேளுங்க” என்றாள்.

அடிவாங்கிய வலது கையை இடது கையால் தாங்கியபடி நின்றிருந்த வேலம்மாள் வலியிலும் அவளை முறைத்தார். மகனின் விலகல் தந்த வலியையும் வெறுப்பாக பனிமலர் மீது திருப்பியவர் அவளை முறைத்தபடி, ‘என்னை மீறி என் மகனுடன் எப்படி நீ வாழறனு பார்த்துடலாம்என்று வன்மத்துடன் மனதினுள் நினைத்துக் கொண்டார்.

மைத்ரேயி, “ஓங்கி அடிச்சா ஒன்ர டன் வெயிட் இருக்குமோ!” என்று தமையனிடம் முணுமுணுக்க,

அவள் பக்கம் திரும்பிய பனிமலர் கிண்டலான பார்வையுடன், “சேம்பிள் காட்டவா?” என்று கேட்டாள்.

“ஆத்தி! நானில்ல” என்றபடி அவள் அபியுதித் பின் மறைய, அவன் சிரித்தான்.

நெல்லைவடிவைத் தாங்கி பேசிய மூதாட்டி பனிமலரின் தாய்மாமனைப் பார்த்து, “யன்ன ஆவுடையப்பா! வாயி தொறக்காம நிக்க!” என்றார்.

ஆவுடையப்பன், “யெ மருமவ மனசு யனக்கு தெரியும்மே ஆத்தா.. பெரியையா சொன்னச் சொல்லுக்காக மட்டுதே நானு இந்த கலியாணத்த தடுக்கல.. யெ மருமவ யது செய்தாலும் இந்த மாமன் தொணையா இருப்பான்” என்றார்.

அவள் நெகிழ்ச்சியுடன் தனது தாய்மாமனைப் பார்க்க, அவர் கண்களை மூடி திறந்து தைரியம் கூறினார்.

“இது செரி இல்லியேப்பு.. நீ தான புள்ளைக்கு தாய்மாமனா நல்லது கெட்டது யெடுத்துச் சொல்லோனும்” 

“நல்லது கெட்டது தெரியாமயா யெ மருமவ இந்த ஊருக்கே தலைவியா இருக்கா?” 

“அதே தானப்பு நாங்க சொல்லுறதும்.. தலைவியா இருந்துகிட்டு இப்புடி ஒரு காரியத்த செய்யிலாமா? தப்பான முன் உதாரணமா இருக்கலாமா?” 

பனிமலர், “இப்பவும் நா செரியான முன் உதாரணமாதே இருக்கேன்.. யெ வாழ்க்கைய பணயம் வெச்சு பெரியவங்களுக்கு ஒரு பாடமும், இளையவர்களுக்கு தைரியத்தையும் கொடுத்து இருக்கேன்.. இனி ஆரும் வூட்டு புள்ளைகள, முக்கியமா பெண்களை வார்த்தையால கட்டிப் போட்டு கலியாணத்த செஞ்சு வைக்க நெனைக்க கூடாது.. வாழ்க்கைய வாழப் போறது புள்ளைங்க தானே!” என்றாள்.

“ஒங்க வயச வுட யங்க அனுபவம் ஜாஸ்தித்தா.. அனுபவமும் பக்குவமும் இருக்க நாங்க அப்புடியா தப்பான முடிவ யடுத்துபுட போறோம்! வாழ்க்கைய வாழ்ந்தே பாக்காம முடியாதுனுட்டு சொன்னாக்க எப்புடி கண்ணு?” 

“விருப்பம் இல்லாத கலியாண வாழ்க்க நரகம் தான!” 

“இந்த சட்டம் கூட ஒரு வருசம் கழிச்சுதே கோர்ட்டு படிய மிதிக்க வுடுது.. நீயி தாலி கட்டிய ஒத்த நிமிசத்துல பிரியோனும்னு சொல்லுதியே! நியாயமா ராசாத்தி?”

அவள் அமைதியாக இருக்க,

“தம்பியோட கண்ணுலேயே ஓ மேல இருக்க நேசம் தெரியுது..” என்றவரின் பேச்சை இடையிட்டவள்,

“அவுருக்கு மட்டும் நேசம் இருந்தாக்க போதுமா? யனக்கும் மனசுனு ஒன்னு இருக்கே! அதுல அவுரு மேல துளி கூட நேசம் இல்ல” என்றாள்.

சட்டென்று அவளது கையை தனது தலை மீது வைத்த அபியுதித், “என் மேல உனக்கு நேசம் இல்ல?” என்று கேட்டான்.

அவனை தீர்க்கமாக பார்த்தவள் நொடியும் தாமதிக்காமல், “இல்லை” என்றாள்.

“பொய்” 

“மெய்” 

“என் தலை மேல் சத்தியம் செய்து பேசிட்டு இருக்க.. நான் செத்தா உனக்கு ஒன்னுமில்லையா?” 

“உங்க அம்மாவே சாகனும்னு நான் நினைச்சது இல்லை” 

‘இதான் நீ டியு-ட்ராப்! இந்த குணம் தானே உன்னை இன்னும் இன்னும் நேசிக்க வைக்குதுஎன்று மனதினுள் கூறிக் கொண்டவனின் இதழோரம் அழகிய ரசனையான புன்னகை.

அதை அவள் எரிச்சலுடன் பார்க்க,

அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன் அழுத்தமான குரலில், “என்னைக்குமே என் மேல் உனக்கு கொஞ்சம் கூட நேசம் இருந்தது இல்லையா?” என்று கேட்டான்.

ஒரு நொடி மௌனித்தவள், “ஒரு காலத்தில் சின்னதா பிடித்தம் இருந்தது.. ஆனா…” 

அவளது கையை விடுவித்தபடி, “எனக்கு இந்த ஆனா ஆவன்னாலாம் வேணாம்.. சின்னதோ பெருசோ, பிடித்தம் இருந்தது தானே! பிடித்தம் தான் நேசத்தின் அடித்தளம்.. அப்போ ஒரு வருஷம் என்னோட வாழ்ந்து பார்த்துட்டு பிரிவைப் பத்தி பேசு” என்றவன் அவளை பேச விடாமல் தனது கையை அவள் தலை மீது வைத்து,

“உன் விருப்பம் இல்லாமல் உன்னை நெருங்கி நம்ம வாழ்க்கையை தொடங்க மாட்டேன்” என்றிருந்தான்.  

பனித்துளி குளிர காத்திருப்போம்…

Advertisement