Advertisement

20

அன்று கதிரவன் வேலை முடித்து வீடு வந்ததில் இருந்து தாமரை அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.. “ப்ளீஸ்ங்க! ஒத்துக்கோங்க ப்ளீஸ்!” என்று..

மனைவி  இப்படிக் கெஞ்சுவதில் கதிரவனின் மனம் இளகத்தான் செய்தது. ஆனாலும் அவள் சொல்வதைச் செய்வது என்பது அவனுக்கு மிகவும் அசௌகரியமான விஷயமாச்சே! அதன் பொருட்டே மிகப் பொறுமையாக அவளிடம் மறுத்துக் கொண்டு இருந்தான் அவன்.

ஒருநிலைக்கு மேல், மூக்கு விடைக்க, தரையில் ஒரு காலை எத்தி விட்டு, முகம் திருப்பிக் கொண்டு வெளிவாசல் சென்றவளைக் கண்டவனுக்கு, அவளின் புதுவிதமான பிடிவாதத்தைக் கண்டு, ஒரு நிமிடம் மனைவியை ஆழ்ந்து ரசித்தவனால் ஏனோ அவள் சொல்பேச்சு மட்டும் கேட்க முடியவில்லை.

அவளாகவே கோபம் குறைந்து வருவாள் என்று அவளின் குணமறிந்து எண்ணிக் கொண்டவனுக்கு, இரவு சாப்பிடும் நேரம் நெருங்கியும் தன்னை அழைக்காத மனைவியை நினைக்கும் போது, அவள் குறித்துத் தான் போட்ட கணக்கு தப்போ? என்று தோன்றியது.

அவளைத் தேடி முன்வாசல் சென்றவன், அங்கே போடப்பட்டு இருந்த சாய்வு நாற்காலியில் ஒருக்களித்துக் கால்களைக் குறுக்கிக் கொண்டு படுத்து இருந்தவளைக் கண்டு, அவளின் அருகில் சென்று, “என்ன டிபன் செய்யலையா?” என்று கேட்டான்.

குரல் கேட்டும் திரும்பாது, “கிச்சனில் இட்லியும், சட்டினியும் செஞ்சு வச்சு இருக்கேன். போய்ச் சாப்பிடுங்க!” என்று வீம்பாகச் சொன்னாள்.

“என்னது நான் மட்டும் சாப்பிடணுமா?” என்ற எண்ணம் தோன்றவுமே, ஏனோ கதிருக்குக் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது.

முன்னே எப்படியோ? ஆனால் என்று தாமரை அவனின் வாழ்வில் வந்தாளோ, அன்றில் இருந்து தனிமை என்ற ஒன்றை உணவருந்தும் போது கூட உணராதவன், இந்த நொடி அதை உணர்ந்தான்.

“நீ என் கூடச் சாப்பிட வர மாட்டியா?” என்றவனின் குரலில் இருந்த ஏக்கம் பெண்ணவளைத் தட்டி எழுப்பியதில் திரும்பிக் கணவனைப் பார்த்தவள், ஒன்றுமே சொல்லாது எழுந்து நின்று, “வாங்க சாப்பிடலாம்” என்று மட்டும் சொல்லி உள்ளே சென்றாள்.

மனைவியின் அந்தப் புரிதலில் தலைகால் புரியாது குதூகலித்துப் போனான். அவளைப் பின்தொடர்ந்து உள்ளே வந்தவன், அவள் ஹாலைக் கடந்த நேரம், அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

என்ன தான் இப்பொழுது எல்லாம் கணவனின் சிறு சிறு அணைப்புகளுக்கும், முத்தங்களுக்கும் தாமரை பழகி இருந்தாலும், அவனின் தேகம் தன் தளிர் மேனியை உரசி உண்டாக்கும் மோகத் தீயை அடக்கும் வழி மட்டும் அவள் அறியாது தவித்தாள்.

கணவனின் நெருக்கத்தில் கிறங்கிப் போனவள், தானாகவே அவனின் மார்பை நோக்கித் திரும்பி நின்றவளைக் கண்டவனுக்குள், மோகம் தீப்பற்றி எறிய ஆரம்பித்து இருந்தது.

என்று முடியுமோ இந்த விரகதாபம்? என்று ஒவ்வொரு நொடியும காத்துக் கொண்டு இருந்தவனுக்கு, மனைவியின் அந்தச் சிறு செய்கை கூட உசுப்பி விடும்படி இருந்ததில், “இதற்கு மேல் முடியாது!” என்ற எண்ணத்தில் வீழ்ந்தவன், மனைவியைக் கட்டிலில் வீழ்த்த நினைத்த நேரம், பூஜை வேளை கரடியாக வசந்த் அவனை அழைத்திருந்தான்.

அழைப்பது யாராக இருக்குமென்று அறிந்து இருந்த தாமரையின் இதழ்கள் குறும்பில் விரிந்தன. மனைவியின் செயலில் அவளை முறைத்துப் பார்த்தவனுக்குள்ளோ, “இந்த ஜென்மத்தில் எனக்கு எதுவும் நடக்கப் போறதில்லை!” என்ற ஏக்கம் எழுந்தது.

பின்னே? அவனும் எத்தனை நாள் தான் இப்படி சந்நியாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பான்?

தங்களின் வாழ்க்கை தங்களின் புரிதலில், அன்பில் நிகழ வேண்டுமேன்ற எண்ணத்தில் தான், இத்தனை நாளும் கதிர் மனைவியை நெருங்காது இருந்தான்.

ஆனால் சில நாட்களாகவே ஒருவரை ஒருவர் அளவு கடந்து விரும்புகிறோம் என்பதைத் தங்களின் சிறுசிறு செயல்களில் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு இருந்ததில், தன் சந்நியாசம் உடையப் போகும் அந்த தருணத்திற்காகத்தான் கதிரவன் அதிக ஆவலுடன் காத்திருந்தான்.

அந்த ஒரு நொடி இதுதான்! என்று அவன் உணர்ந்து செயல்படும் முன் இப்படிக் குறுக்கீடுகள் வந்தால், அவன் கடுப்பாகாமல் வேறு என்ன செய்வான்?

கணவனின் அணைப்பில் இருந்து விடுபட்டு உள்ளே சென்றவளைக் கண்டபடியே சார்ஜரில் போடப்பட்டு இருந்த தன் போனின் வயரை பிரித்துதெடுத்து, அதன் திரையைக் கண்டவன், பல்லைக் கடித்தான்.

“தங்கச்சி சொன்னாளாடா?” என்ற நண்பனிடம், “ஏன்டா, உனக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா?” என்று அனல் பறக்கக் கேட்டான் கதிரவன்.

“இப்போ எதுக்கு இவ்ளோ கடுப்பா பேசுறான்?” என்று எண்ணியவனோ, சில நிமிட அமைதிக்குப் பின், ‘ஆமா, இவனெல்லாம் என்னைக்கு நம்மகிட்ட பாசமா பேசி இருக்கான்?!’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, “அதை விடுப்பா! இப்போ அதுவா முக்கியம்? தங்கச்சி விஷயத்தைச் சொன்னாளா?” என்று மீண்டும் தன் வேலையே முக்கியமென கேட்டவனை, அதற்கு மேல் திட்ட முடியாதவன்,

“ம்ம்ம்.. சொன்னாள்” என்று மட்டும் உரைத்தான்.

அதைக் கேட்டவன் சந்தோஷத்துடன், “அப்போ நாளைக்கு எல்லாம் ரெடி பண்ணிடலாம் தானே?” என்றவனை ஏடாகூடமாகத் திட்ட போனவனைக் கண்களால், “ப்ளீஸ்!!” என்று செய்கை செய்து நிறுத்தி இருந்தாள் தாமரை.

மனைவி சும்மா கேட்டாலே எதையும் செய்யும் மனநிலைக்கு மாறிப் போயிருந்தவன், அவள் இப்படி உருகி கேட்டால் வேண்டாமென்றா சொல்லுவான்?

கதிரின் பார்வை மனைவியின் மீதே இருந்தாலும் அவனின் வார்த்தைகள், “ம்ம்ம்..” என்று நண்பனிடம் சொல்லியது. அதைக் கேட்டுத் துள்ளிக் குதிக்காத குறையாகக் குதித்தவனின் நன்றியை வாங்கிக் கொண்டவன், “சரி, அவ்ளோ தானே? போனை வைக்கவா?” என்று மனைவியின் புறம் தாவி ஓடும் இதயத்தை அடக்க முடியாது கேட்டான்.

 “அவ்ளோ தானா? இனிமே தான் நாம செய்ய வேண்டிய வேலையே இருக்கு” என்று சொல்லி நண்பனின்  தலையில் இடியை இறக்கிய வசந்த், மேலும், “நீ சாப்பிட்டு ரெடியா இரு! இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அங்கே வரேன்” என்றான்.

அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தவன், “எதுக்கு?” என்று கேட்டான்.

“எதுக்குன்னா என்ன அர்த்தம்? நாளைக்குப் பிறந்தநாள் கொண்டாட இன்னைக்கே வீட்டை அலங்காரம் பண்ண வேண்டாமா? அதுக்குத்தான்!” என்றவன் கதிரவன் அதற்குப் பதில் பேசும் முன் போனை வைத்து இருந்தான்.

“என்னாச்சு?” என்று முகம் கடுகடுக்க நின்றிருந்த கணவனைப் பார்த்துத் தாமரை கேட்கவும், “எல்லாம் உன்னைச் சொல்லணும். அவன் பொண்டாட்டிக்குப் பிறந்தநாள் கொண்டாடணும்ன்னா, அதை அவன் வீட்ல கொண்டாட வேண்டியது தானே? அதுக்கு என் வீடு தான் கிடைச்சதா?” என்று சத்தம் போட்டவனின் குரல் உயர்வுக்கான காரணம் அறிந்தவளின் உள்ளமோ, நாணத்தில் தானாகச் சிரித்துக் கொண்டது.

வெளியில் நகைத்தால் கண்டிப்பாகக் கணவனின் கோபம் பல மடங்காக ஆகும். அதை விட இந்த நொடியுடன் முடிவது அல்ல தங்களின் நேசமும், பந்தமும் என்று எண்ணிக் கொண்டு, கணவனைக் கைப் பிடித்து அழைத்துச் சென்று சாப்பாட்டு சேரில் அவனை அமர வைத்தவள்,

“முதல்ல சாப்பிடுங்க!!” என்று அவனின் தட்டில் நான்கு இட்லியை வைத்துச் சட்னி பரிமாறியவள், “அவுங்களுக்கு இன்னும் கல்யாணமாகாத நிலையில் எப்படி அவுங்க வீட்டில் கொண்டாட முடியும்? அதான் அக்காவுக்கு இங்கே சர்ப்ரைசா கொடுக்க நினைக்குறாங்க” என்று வசந்த் மதியம் தன்னிடம் சொன்னதை அப்படியே கணவனிடம் இப்பொழுது ஒப்பித்தாள் தாமரை.

மனைவியின் சொல்லில் இருக்கும் நியாயம் புரிந்தாலும், ஏனோ கதிரின் ஆசை மனது அதை ஒத்துக் கொள்ளாது முரண்டு பிடித்ததை அவனின் விரல்கள் தட்டில் கோலமிட்டுக் கொண்டு இருப்பதில் கண்டுகொண்டவள், எந்தவித தயக்கமுமின்றி, இட்லியைப் பிய்த்துச் சட்னியில் தோய்த்து, கணவனின் உதட்டருகே கொண்டு சென்றதைக் கண்டவன், மனைவியை அதிசயித்துப் பார்த்தான்.

இதுவரை கட்டியவளை மனைவியாக மட்டுமே எண்ணி கொண்டாடிக் கொண்டு இருந்தவனுக்கு, அந்தச் செயல் ‘நான் தான் உனக்குத் தாயும்!’ என்று சொல்லாமல் சொல்லியது போல இருக்கவும், சட்டென்று அவனின் கண்கள் ஈரமானது.

கணவனின் கண்ணீரில் பதறிப் போனவள், “என்னங்க என்னாச்சு?” என்று அக்கறையாகக் கேட்ட நொடி, உணர்ச்சி பெருக்கில் சிக்கித் தவித்தவன், மனைவியை இடையோடு கட்டிக் கொண்டு அவளின் வயிற்றில் முகம் புதைத்து இளைப்பாற முயன்றான்.

கதரவனின் செய்கைக்கான காரணம் அறியாத போதும், அவனின் உணர்வுகளை அவனின் அணைப்பில் இருந்தே அறிந்து கொண்டவளோ, நொடியும் தாமதிக்காது, தன்னுடைய இடக்கையால் அவனின் தலை கோதி அவனைச் சாந்தப்படுத்த முயற்சித்தாள்.

மனைவியின் அமைதியான வருடலில் தன்னிலை அடைந்தவன், அவளின் கைப் பிடித்து இழுத்துத் தனக்கு அருகில் அவளை அமர வைத்து, எந்தவித கூச்சமுமின்றி, மனைவிக்கு தன் தட்டில் இருந்த உணவை எடுத்து ஊட்டி விட முயற்சித்தான். அதில் பெண்ணவளின் கண்களுமே கலங்கிப் போனது உணர்ச்சி பெருக்கில்.

அப்பொழுது தான் அவளுக்குமே புரிந்தது, கணவனின் கண்களின் ஈரம் ஏன் என்று!

இருவரின் வாழ்க்கை முறையும், வாழ்ந்த இடமும் வேறாக இருந்தாலும் இருவரும் வேண்டியது, இந்த அன்பு ஒன்று தானே?!

அந்த அன்பை மழையாகப் பொழிய தனக்கென்று ஒருவர் கிடைத்துப் போனதை எண்ணி இருவருமே பூரித்துப் பேரானந்தம் கொண்டனர்.

ஒருவழியாக ஒருவரின் நேசத்தில் மற்றவர் கரைந்து கரையேறி சாப்பிட்டு முடித்த நேரம், அங்கே வசந்த் இரு பெரிய பையுடன் வந்து நின்றான்.

அவனுடன் சேர்ந்து அலங்கரிப்பில் ஈடுபட்ட தாமரையை கதிரவன் முறைத்தான் என்றால், வசந்தையோ, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எல்லாம் திட்டித் தீர்த்தான்.

அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாது கருமமே கண்ணாக இருந்தவனைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போன தாமரை, “எப்படிண்ணா இப்படி?” என்று அவனிடம் கேட்டே விட்டாள்.

“நமக்கு வேலை ஆகணும்னா பேயை கூடப் பெருமாளா பார்க்கக் கத்துக்கணும்மா!” என்றவனின் பக்தி பேச்சைக் கேட்டவள், அவனை அனல் பார்வை பார்க்கவும்,

“ஹா… ஹா… இருந்த ஒரு விக்கெட்டையும் இழந்து வீட்டுக்குப் போகிற நிலைமை வந்திடும் போலயே வசந்து!” என்று உஷாரானவன், “பேய்னா சொன்னேன்? அது.. அது… டங்கு சிலிப்பாகி பிசாசு வந்திடுச்சு” என்று மீண்டும் உளறி சமாளிக்க முயன்றவனின் முகபாவனையில் கொல்லென்று சிரித்து விட்டாள் தாமரை.

மனைவியின் சிரிப்பு சத்தம் கேட்டு டிவி பார்த்துக் கொண்டு இருந்த கதிரவன் அவளிடம் என்னவென்று கேட்டான்.

உடனே பதறிப் போய் தாமரை கையைப் பிடித்துக் கொண்டு, “தங்கச்சி! அவன்கிட்ட மட்டும் சொல்லிடாதம்மா!” என்று தலையை மறுப்பாக ஆட்டிச் செய்கை செய்த வசந்த், மேலும் நண்பன் பார்க்காதவாறு, அவளின் காதில் குனிந்து அழுகாத குறையாக, “உங்க அண்ணன் சிங்கத்தோட கூடக் குடும்பம் நடத்திடுவான்மா. ஆனால் சிங்கிளா மட்டும் குடும்பம் நடத்த வச்சிடாதம்மா. என் வாழ்க்கையே இப்போ உன் வாயில தான் இருக்குமா. அதனால பார்த்து வார்த்தையை விடும்மா” என்று கெஞ்சாத குறையாகக் கதறினான் வசந்த்.

மீண்டும் கதிரவன் என்ன என்று தாமரையிடம் கேட்க, அவளுக்கு முன், “அதான் கேட்கிறான்லம்மா.. தைரியமா சொல்லும்மா! சொல்லும்மா!”  என்று நண்பனைப் பார்த்து தெனாவெட்டு லுக்குடன் சொன்னவன், தாமரையின் புறம் திரும்பி, “சொல்லிடாதம்மா!” என்று கண்களாலேயே கதறினான்.

அதில் மேலும் நகைத்தவள், “இல்ல ஒண்ணுமில்ல.. அண்ணன் ஒரு ஜோக் சொன்னாங்க அதான்..” என்று கணவனிடம் சொல்லி மழுப்பவும், அதை நம்பாத கதிர் நண்பனின் புறம் திரும்பி, “டேய்!” என்று அழைத்தான்.

அதில் பயந்து போனவன், “என்ன நண்பரே?” என்று மரியாதையுடன் வசந்த் பதிலளிக்க, அதைக் கேட்டு தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அடித்துக் கொண்டவன், ”இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் இதை முடிக்க?” என்று கேட்டான்.

“யாருக்குத் தெரியும்?” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட வசந்தின் பேச்சு தன் காதில் விழாததில், “என்னது?” என்று மீண்டும் கதிர் அதட்டிக் கேட்டான்.

அதற்கு, “இப்ப தான் கட் பண்ணவே ஆரம்பித்து இருக்கோம். இனி அதையெல்லாம் ஒட்டணும், சேர்க்கணும். அப்புறம் எல்லாத்தையும் தொங்க விடணும். எப்படியும்..” என்று அவன் இழுக்கும் போதே, “பண்ண வரைக்கும் போதும்! கிளம்பு, நாளைக்கு மீதியைப் பண்ணிக்கலாம்” என்று சொன்னான் கதிர்.

‘இதுக்கு மேல வாயைக் கொடுத்தால் வாயை உடைத்து அனுப்பினாலும் அனுப்பி விடுவான்’ என்று நண்பனைப் பற்றிச் சரியாக அறிந்து வைத்து இருந்தவன், “உனக்குத் தூக்கம் வந்தா நீ போய்த் தூங்கு நண்பா! நாங்க இதை மட்டும் ஒட்டி முடிச்சுடுறோம்” என்றான்.

அதைக் கேட்டவனோ, நண்பனை விடுத்து மனைவியைக் காரமாகப் பார்த்து விட்டு, அங்கிருந்து வெடுக்கென்று எழுந்து படுக்கையறைக்குச் சென்றான்.

கணவனின் கோபம் அறிந்தும் அங்கிருந்து நகர முடியாத நிலை தாமரைக்கு!

ஒருவழியாக ஒட்ட வேண்டியதை எல்லாம் ஒட்டி முடித்து, அதை அப்படியே ஒரு பக்கமாக அலேக்காக எடுத்து வைத்த வசந்த், “முடிஞ்சது!” என்று நெட்டி முறித்து எழுந்து நின்றவன், “சரி தங்கச்சி, அது எல்லாம் காயட்டும். நாளைக்கு நாம மீதி வேலையைப் பார்த்துக்கலாம்” என்று சொல்லிக் கிளம்பினான்.

அவனை வழியனுப்பி விட்டுக் கதவைத் தாழிட்டு, கையைக் கழுவி விட்டுப் படுக்கை அறை சென்றவள், விடிவிளக்கின் வெளிச்சத்தில் தட்டுத் தடுமாறாமல் கணவனின் அருகில் சென்று சத்தமில்லாமல் படுத்த நேரம், அவளின் இடையைப் பற்றி இருந்தன கதிரின் கரங்கள்.

“இன்னும் நீங்க தூங்கலையா?” என்றவளின் கேள்விக்கு,

“என்னால தூங்க முடியாதுன்னு உனக்குத் தெரியாதா?” என்று பட்டென்று பதில் அளித்து இருந்தான் அவளின் கணவன்.

‘அவனவன் கஷ்டம் அவனவனுக்கு!’ என்ற தோரணையில் வெளிவந்த கணவனின் வார்த்தைகளில் அவனின் புறம் திரும்பிப் படுத்தவள், அவனின் நெஞ்சத்தில் தலை வைத்து அவனைக் காற்று புகாதபடி அணைத்துக் கொண்டாள்.

அதுவரை அடங்காத கொந்தளிப்பில் குமுறிக் கொண்டு இருந்தவன், குமரியின் அணைப்பில் நெருப்பில் உருகிய பனியாக, அவளுள் அடங்கி உறங்கிப் போனான்.

அனாமிகாவின் பிறந்தநாளையொட்டி காலையிலேயே அவளுக்கு அழைத்து, தம்பதியாக அவளுக்கு வாழ்த்து சொன்னவர்கள், அவளை மதியம் விருந்துக்குக் குடும்பத்துடன் அழைத்திருந்தனர்.

மதிய விருந்து செய்வதில் தாமரை பிசியாகி விட, வேறு வழியின்றி, “நண்பா! கொஞ்சம் வந்து உதவ கூடாதா?” என்று கெஞ்சி கொஞ்சி வசந்த் கேட்டதற்கு, “முடியாது போடா!” என்றான் கதிர்.

அங்கே ஓரமாக அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டு இருந்தவள், “அண்ணா பாவம் தானே? கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்!” என்று கணவனிடம் முறையிடவும், அவளை முறைத்துக் கொண்டே வேறு வழியின்றி அவனுக்கு உதவ முன்வந்தான் கதிர்.

மதியம் நெருங்கிய நேரம் பிறந்தாள் அலங்கார வேலைகளை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்த வசந்த், “எப்படி நண்பா? செமையா இருக்குல்ல!!” என்று கதிரிடம் கேட்க, “சகிக்கலை!!” என்றான் அவன் வேண்டுமென்றே.. அந்தப் பதிலில் வசந்த் கடுப்பாகி நண்பனைப் பார்த்திருக்கும் போதே, கணவனை ஒரு இடி இடித்து விட்டு, “செமையா இருக்குண்ணா!” என்று பாராட்டினாள் தாமரை.

அதைக் கேட்டவன் உற்சாகத்தில் சும்மா இல்லாமல், “கழுதைக்குத் தெரியுமா..” என்று ஆரம்பித்து விட்டு கதிரவன் அவனைப் பார்த்துத் திரும்பவும், பக்கென்று வாயில் அடித்துக் கொண்டு மற்றதை வாய்க்குள்ளே முழுங்கினான்.

ஆனாலும் விடாது, “என்ன சொன்ன?” என்று கதிர் நண்பனிடம் கேட்கவும், பயந்து திருதிருத்தவன், “அது.. அது கழுதை ஆர்டர் பண்ணி இருந்தேன். அது பத்தி உனக்கு எதுவும் தெரியுமான்னு..” கேட்க,

“லூசாடா நீ?” என்று கதிர் அவனைப் பார்த்திருக்கும் பொழுதே, தாமரையோ வந்த சிரிப்பைப் பெரும்பாடுபட்டு அடக்கப் போராடிக் கொண்டு இருந்தாள்.

“டங்கு.. டங்கு சிலிப்பாகிடுச்சு  நண்பா. ஆக்சுவல்லி என்ன சொல்ல வந்தேன்னா.. நான் கேக் ஆர்டர் பண்ணி இருக்கேன். அது உனக்குத் தெரியுமான்னு..” என்றவன், நண்பன் அவனை நம்பாது கடித்துக் குதறும் முன் அவசர அவசரமாக, “நான் போய் அதை வாங்கிட்டு வந்திடுறேன்” என்று அங்கிருந்து ஓடிப் போனான்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் அனாமிகா குடும்பம் அங்கே வந்து சேர்ந்தனர். ஹாலில் செய்யப்பட்டு இருந்த அலங்காரத்தைக் கண்டு வந்திருந்தவர்கள் அனைவரும் வாய் பிளக்காத குறையாக, ‘நீயா செய்தாய்??’ என்பதாகக் கதிரைப் பார்த்த நேரம்..

“வசந்த் அண்ணா தான் எல்லாம் செஞ்சாங்க, அக்காவுக்காக..” என்று பெருமையாகத் தாமரை சொன்ன நொடி, அனாமிகாவின் முகம் காதலில் கசிந்தது என்றால், அவளின் பெற்றோரின் உள்ளங்களோ நெகிழ்ச்சியில் பூரித்தது மருமகனின் மகள் மீதான அன்பில்!!

அதன்பின் வாசலையே அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்த அனாமிகாவை, அதிகம் காக்க வைக்காமல் ஆர்டர் கொடுத்திருந்த கேக்குடன் வீட்டினுள் வந்த வசந்தைக் காதலுடன் பார்த்து நின்றாள் அனாமிகா.

தன்னவளின் காதலில் கரைந்தவன், அவளை உருக்கும் குரலில், அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னான்.

நேற்று இரவு பன்னிரண்டு மணிக்கு அவனின் வாழ்த்தை எதிர்பார்த்து, அது கிடைக்காது, அவனின் மீது கொலைவெறியில் இருந்தவளுக்கு, இப்பொழுது அவன் மீது கோபம் மறைந்து பாசம் பொங்கியது.

அதற்குத் தானே அவனும் ஆசைப்பட்டான்? அதனால் விழிகளினால் தன்னவளைப் பருகி நின்றவனிடம், “கை கால் கழுவிட்டு வாங்க அண்ணா, சாப்பிடலாம்” என்று அழைத்தாள் தாமரை.

அனைவரும் ஒன்றாக, ஒரு குடும்பமாக, அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிட்ட போது, வயிறு நிறைந்ததை விட அங்கே அனைவரின் மனமும் அதிகமாகவே நிறைந்து இருந்தது.

மாலை ஐந்து மணி அளவில் அனைவரின் வாழ்த்துகளில் மிதந்தபடியே, முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன், தன் பிறந்தநாள் கேக்கை வெட்டினாள் அனாமிகா.

அதன்பின் கேக்கைச் சாப்பிட்டபடியே சிறிது நேரம் அரட்டையில் அமர்ந்தவர்களுக்குச் சுடச்சுட காபியும், பஜ்ஜியும் எடுத்து வந்து தாமரை கொடுக்கவும், மாலை குளிருக்கு இதமாக அதை வாங்கிச் சுவைத்தனர் அனைவரும்.

ஏழு மணி அளவில் டிபன் சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று தாமரை சொல்லியும், “இல்லம்மா, மதியம் சாப்பிட்டதே புல்லா இருக்கு. அதுமட்டுமில்லாம மழை வேற வர மாதிரி இருக்கு” என்றவர்களை அதற்கு மேல் வற்புறுத்த முடியாத தம்பதியினர் வாசல் வரை வந்து  வழியனுப்பி வைத்தனர்.

வந்திருந்தவர்கள் அனைவரும் கிளம்பிச் சென்ற பின், அசதியின் காரணமாக, நேராக படுக்கை அறை சென்று படுத்து விட்டாள் தாமரை.

காலையில் இருந்து செய்த வேலையின் காரணமாக, ஒன்பது மணி ஆகியும் எழும்பாத மனைவியின் சோர்வு புரிந்து, அவளின் வயிற்று பசி அறிந்தவனாக அவளை எழுப்பி, தூக்கத்துடனே அவளுக்குக் கதிரவன் ஊட்டி விட, மறுக்காது அதை உண்டு முடித்தவள் மீண்டும் உறங்கிப் போனாள்.

மறுநாள் வீடு முழுவதையும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சுத்தம் செய்ததில், இருவருமே களைத்துப் போய், அப்படியே ஹால் தரையில் கால்களை நீட்டிக் கொண்டு சாய்ந்து விட்டனர்.

கண் மூடிச் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்த கதிர், பக்கவாட்டில் படுத்து இருந்த மனைவியைக் கண்டு, அவள் உடலெங்கும் பூத்திருந்த வெண்ணிற வேர்வை துளிகளின் மினுமினுப்பில் பேரழகியாக ஜொலித்துக் கொண்டு இருந்தவளின் பாந்தமான அழகில் ஈர்க்கப்பட்டு, அவளை நெருங்கிப் படுத்துக் கொண்டான்.

கழுத்து வளைவில் உணர்ந்த கணவனின் சுவாசத்தில் எழுந்த சலனத்தில், சட்டென்று அவனின் புறம் திரும்பிப் படுத்தவளை இமைக்க மறந்து பார்த்தவனின் விழிகளின் மொழி அறிந்தவளுக்கு, கொஞ்சமும் அவனை எதிர்நோக்கும் தைரியமில்லாது போனதில், அவனின் நெஞ்சாங்கூட்டில் முகத்தை மறைத்துக் கொண்டு, அவனில் அடைக்கலமாகிப் போனாள் தாமரை.

ஒரு வார்த்தை பேசாது, அந்த இனிமையான தருணத்தை தன்னில் உள்வாங்க நினைத்து இமைகள் மூடியவன், அதன் நிம்மதி கொடுத்த தாலாட்டில் சோர்வில் அப்படியே உறங்கியும் போனான்.

சில நிமிடங்கள் ஆகியும் கணவனிடமிருந்து எந்தவொரு எதிர்வினையும் நிகழாததில் அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, அவனில் இருந்து வெளிப்பட்ட சீரான மூச்சுக்காற்று அவனின் உறக்க நிலையை அவளுக்கு எடுத்து உரைத்ததில், தான் லேசாக அசைந்தாலும் அவனின் தூக்கம் கெட்டு விடும் என்று நினைத்தவள், வேறு வழியின்றி அவனை ஒட்டிக் கொண்டே கண் மூடி உறங்கிப் போனாள்.

மாலை நேர மழைச்சாரல் ஜன்னலின் வழியாகத் தேகத்தில் பன்னீராகப் படவும், கண் விழித்த கதிரவனுக்கு அப்பொழுது தான் இருட்டி விட்டது என்பதே புரிந்தது.

மழையின் காரணமாக சீக்கிரமாக இருட்டி இருந்ததை உணர்ந்தவனுக்கு, விளக்கைப் போடாததால் வீட்டில் சூழ்ந்து இருந்த இருளைப் போக்க நினைத்து அவன் எழ முயன்ற போது, தனது கைகளில் துயில் கொண்டு இருந்த மனைவியின் அருகாமையை அவன் உணர்ந்தான்.

மெதுவாக அவளின் தலையைத் தன்னுடைய கைகளில் இருந்து தூக்கித் தரையில் வைக்கும் போதே தூக்கம் கலைந்து எழுந்து விட்டாள் தாமரை. காரிருளில் ஒன்றும் புரியாது அவள் முழித்துக் கொண்டு இருக்கும் பொழுது, அவள் கண்களைக் கூசும்படி வெளிச்சம் அந்த அறையை வியாபித்து ஒளியூட்டியது.

வெளியில் பெய்து கொண்டு இருந்த மழையின் வாசம் அவளின் நாசியை தழுவியதில், எழுந்து சென்று ஜன்னல் கம்பியைப் பற்றிக் கொண்டு, தன்னை மறந்து அதில் லயித்து நின்றாள் தாமரை. என்னவோ அவளுக்கு சிறுவயதில் இருந்தே இந்த மழையின் வாசம் மிகவும் பிடிக்கும்.

வருடத்தில் முக்கால்வாசி மழை அடிக்கும் இடத்தில் வசித்த போதும் கூட, அவளுக்கு அந்த வாசமும் அதன் மீதான அவளின் ஆர்வமும் எப்பொழுதுமே குறைந்ததே இல்லை.

மனைவின் மழை காதல் பற்றி அறிந்து இருந்தவனும், ஒன்றும் பேசாது அவள் அருகில் வந்து நின்றவன், ரசித்தது என்னவோ, அவனின் மனைவியை மட்டும் தான்!!

ரசனையில் துளிர்த்தெழுந்த உணர்வுகளின் சலனங்களைத்  தாங்காதவனாகக் குனிந்து மனைவியின் காதில், “ஐ லவ் யூ!” என்றவனின் ஆத்மார்த்தமான வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து அவனைப் பார்த்தவள் தாமரை.

“நிஜமாவே உங்களுக்கு என்னைப் பிடிச்சு இருக்கா?” என்று எப்பொழுதும் கேட்பது போல அப்பொழுதும் அவள் கேட்டு வைக்க, அதில் கதிரின் பொறுமை கொஞ்சம் விடைபெற்றுச் சென்றது.

பின்னே? தன்னுடைய ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் அவளின் மீதான தன் காதலை அவன் பறைசாற்றிக் கொண்டு இருக்கத்தானே செய்கிறான்? அப்படி இருந்தும் இவளுக்கு ஏன் தன் காதலில் இவ்வளவு சந்தேகம்? என்று நினைத்தவன், மனைவியைக் கடுப்புடன் பார்த்ததில் விழிகள் தாழ்த்தியவளை முகம் நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்தவன், கொஞ்சம் சூடாகவே, “என்னடி உனக்கு பிரச்சனை, என் காதலை நம்புவதில்?” என்று கேட்டான்.

“இல்ல, அப்படி இல்லை” என்று அவள் அவசர மொழி உரைத்தாலும், அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன்,

“இங்கே பாரு.. உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்த உலகத்திலேயே உன்னை மட்டும் தான் எனக்கு அந்த அளவுக்குப் பிடிக்கும்!!” என்றவனின் அழுத்தம் நிறைந்த வார்த்தைகள் வஞ்சியவளை வஞ்சமில்லாது வஞ்சித்துப் பேரானந்தத்தில் தள்ளியதில், அவள் உடலெங்கும் இன்ப ஊற்றுகள் ஆறாகப் பொங்கியது.

அதை அறியாதவனோ, தன் போக்கில், மனைவி இப்படி தன் அன்பைச் சந்தேகப்படுகிறாளே? என்று புலம்ப ஆரம்பித்து இருந்தான்.

“உனக்கு  ஒவ்வொரு முறை சொல்லிச் சொல்லித்தான் என் அன்பை புரிய வைக்கணுமா? ஏன் உனக்கே புரியாதா?” அப்படி.. இப்படி.. என்று அவன் வெகுண்டு பேசிக் கொண்டு இருப்பதைத் துளியும் கோபம் கொள்ளாது குறும்பு சிரிப்புடன் ரசித்துக் கேட்டுக் கொண்டு இருந்தாள் தாமரை.. பெண்களுக்கே உரித்தான குணத்துடன்..

ஆம்! என்ன தான் பெண்கள் தன் கணவன் தன்னை விரும்புவதை நன்கு அறிந்து இருந்த போதும், “என்னைப் பிடிக்குமா? என்னைப் பிடிக்குமா?” என்று அடிக்கடி அவர்களை நச்சரிப்பதும், அதற்குக் கணவன்கள், “ஏன் உனக்குத் தெரியாதா? சொல்லித்தான் தெரியணுமா? உன்னை மட்டும் தான் பிடிக்கும்” இப்படி என்று பலவிதத்தில் பலமுறை சொல்லியிருந்தாலும், மீண்டும் மீண்டும் அதைக் கேட்க வைத்து, என்னவோ இப்பொழுது தான் முதல் முறை அதைக் கேட்பது போன்று உள்ளம் உவகை கொண்டு, வானில் சிறகில்லாமலே பறக்கும் செயல் எல்லாப் பெண்களுக்கும் பிடித்த காதல் கிறுக்கு!

அதைத்தான் தாமரையும் இப்பொழுது செய்து கொண்டு இருந்தாள். ஆனால் பெண்ணவளின் குணம் அறியாதவனோ, தன் காதலை எப்படியாவது மனைவிக்கு இன்று புரிய வைத்து விடும் நோக்கில், தம் பிடிக்காத குறையாகப் பேசிக் கொண்டு இருந்தான்.

“இவ்ளோ பேசுறியே.. நானாவது அப்போ அப்போ உன்னைப் பிடிக்கும்ன்னு சொல்லி இருக்கேன். ஆனா நீ இதுவரை ஒருமுறையாவது ஒழுங்கா சொல்லி இருக்கியாடி?” என்று கதிர் ஆவேசத்துடன் சொல்லி முடிக்கும் முன், அவனின் இதழ்களைத் தன் இதழ்கள் கொண்டு மூடி இருந்தாள் தாமரை.

ஒரு பெண்ணின் முத்தத்திற்கு இவ்வளவு சக்தியா?! என்று மனைவியின் உயிர் தீண்டலில் விழிகள் விரித்து நின்று இருந்தவனைக் கண்டவள், ‘சொல்லித் தெரிவது இல்லை காதல் கலை!’ என்ற விதமாகத் தன் அன்பை செயலில் வெளிப்படுத்தி விட்டு, அவனை விட்டு அகல நினைத்த நேரம்…

என்னவோ அதுவரை சுவாசித்த மூச்சுக் காற்று அவனை விட்டுப் போவதைப் போலத் தவித்துப் போனவன், மனைவியின் பிரிய இருந்த இதழ்களை மீண்டும் இழுத்துப் பிடித்து தன்னிதழோடு ஒட்டி உறவாடியதில், தாமரையின் இமைகள் தானாகவே மூடிக் கொண்டது.

மனைவியின் நெருக்கமும், தேக உரசலும் கதிரின் விரகதாபத்தைத் தூண்டியதில் அதுவரை மென்மையாளனாக இருந்தவன், காமத்தின் பிடியில் சிக்கி கொஞ்சம் கொஞ்சமாக காதல் வன்மையாளனாக மாறிக் கொண்டு இருந்தான்.

தாமரையின்  மயக்கம் கலந்த ஒத்துழைப்பில் பித்தாகிப் போன கதிர், அதுநாள் வரை எப்பொழுது முடியும் தன்னுடைய சன்னியாசம் என்று ஏங்கித் தவித்துக் கிடந்தவனின் உணர்வுகள் அனைத்தும், அந்நேரம் விமோசனம் கிடைத்தது போலக் கரையை உடைத்துக் கொண்டு பொங்கிப் பெருகியதில், மனைவியின் தலையை இருபுறமாகத் தன் கைக் கொண்டு இறுக பற்றிக் கொண்டவன், அவள் இதழ் தேனை பருகியபடியே அங்கிருந்து நகர்ந்து, தங்களறை கதவைக் கால்களால் எட்டி உதைத்து உள்ளே சென்றான்.

ஒரு முத்தத்தில் முடியக் கூடியதா கதிரின் காத்திருப்பு? மனைவியை கட்டிலில் கிடத்தி அவளின் ஆடையாக மாற போனவனை நாணத்தில் தடுத்து நிறுத்திய தாமரையின் உணர்வுகளைப் படிக்கும் நிலையில் இல்லாதவன், தடைபட்ட தன் உணர்வுகளை அடக்க முடியாது, “என்னடி?” என்று கேட்டான் சற்றுக் கிறக்கமாகவே.

கணவனின் கண்களில் தெறித்த தாபத்தில் ஏக்கத்தில் “அவசரப்பட்டுட்டோமோ?” என்று எண்ணியவள், என்னவென்று சொல்வாள்? கூச்சமாக இருக்கிறது என்றா? அதைச் சொல்ல முடியாமல் வார்த்தைகளை விழுங்கியவள்,

“இன்.. இன்.. னும் நீங்க சாப்..பிடலையே?” என்று எதையோ ஒருவாறாகத் திக்கித் திணறி சொன்னவளைக் கண்டு, மந்தகாசப் புன்னகை ஒன்றை சிந்தியவன்,

“எனக்கு இப்போ தேவை நீதான்!” என்று சொன்னது மட்டுமில்லாது அதைச் செயலிலும் காட்ட ஆரம்பித்து இருந்தான்.

தாமரையை முழுவதுமாக வருடிய கதிரவனின் விழி தீண்டலில், அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்று உணர்ந்தவள், நாணத்தால் தன் இரு கைக் கொண்டு கணவனின் கண்களை மூட முயற்சித்தாள்.

அவளால் முயற்சிக்க மட்டுமே முடிந்தது. ஏனென்றால் அவளின் கைகளை விலக்கி அதில் முத்தமிட்டபடியே மனைவியை நெருங்கியவன், இப்பொழுது அவளையே முழுவதுமாக முத்தத்தில் குளிப்பாட்ட ஆரம்பித்தான்.

இமை மூடிய போதும் தன்னை நெருங்கி வரும் கணவனின் அருகாமையை உணர்ந்தவளின் இதயமோ, ‘தாம் தூம்’ என அடுத்து என்ன அடுத்து என்னவென்று மத்தளம் கொட்ட ஆரம்பித்தது.

தன்னில் உண்டான சலனத்தைக் கட்டுப்படுத்த முடியாத தாமரையின் உடல் லேசாக நடுங்கியது. அந்த நடுக்கத்தை தடுக்க முயன்றவாறு அவள் தன் கீழுதட்டை பற்களால் கடிக்க, அப்பொழுதும் அடங்காத உணர்ச்சிகளை அவள் கட்டுப்படுத்த போராடிக் கொண்டு இருந்த நேரம், அவளின் கழுத்தில் அழுத்தமாக இதழ் பதித்து அவளின் தோள் வளைவில் முகம் புதைத்தான் கதிர்.

கணவனின் தேக தீண்டலில் ஜிவ்வென்று உடல் முழுவதும் சூடாகி தீ மூட்டியதில் மோகத்தில் துடித்தவள், மெத்தை விரிப்பை இறுக பற்றிக் கொண்டு அப்படியே பக்கவாட்டில் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

செங்கொளுந்தாக மாறி இருந்தவளின் முகத்தைத் தன் புறம் திருப்பிய போதும், தன் விழி பார்க்காதவளின் பிடிவாதத்தை உடைக்க நினைக்காதவன், அவளின் இதழில் சிக்கி இருந்த இதழை பிரித்தெடுத்து தன் இதழால் அதற்கு ஒத்தடமிட்டவனின் கைகள் பெண்ணவளின் மேனியில் அத்துமீற துவங்கியது.

கணவனின் தீண்டலில், அது உணர்த்திய தேடலில், அவனில் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைக்க ஆரம்பித்தாள் தாமரை.

ஒரு கட்டத்தில் மனைவியின் குழைவில், அவளின் நெருக்கத்தில், பித்தாகி போனவனின் வேகம் தாளாது திண்டாடி போனவள், வெளிப்படுத்திய இன்பமான முனங்கல்கள் கதிரை இன்னமும்  போதையேற்றியதில், காதலோடு மனைவியை அதிகம் நாடியவனின் உணர்ச்சி வேகத்துக்கு இணையாக அவளும் உருகி கரைய, அவளின் பெண்மையில் தன்னை முழுதுமாக தொலைத்தவன், அவளில் கலந்து ஈருடல் ஓருயிராகக் கலந்த நேரம், உடல் முழுவதும் பரவி படர்ந்த புதுவிதமான பரவசத்தில் தாமரையின் மூடியிருந்த விழிகளில் இரு துளி நீர் வெளிப்பட்டது.

தன்னுடைய ஆவேசம் அடங்கி ஒடுங்கிய நொடி, சொர்க்கத்தையே அடைந்து விட்டதாக உணர்ந்தவன், அதைத் தனக்கு உணர்த்திய மனைவியைக் காதல் கொண்டு பார்த்த நேரம், அவளின் கண்களில் தெறித்த கண்ணீரில் பதறித் துடித்து, அவளில் இருந்து விலகி, அவள் முகம் தாங்கி, “என்னாச்சு?” என்று அக்கறையாகக் கேட்டான்.

முதலில் “ஒன்றுமில்லை” என்றவாறு போர்வையில் தன்னை முழுவதுமாக மறைத்தபடி எழுந்து அமர்ந்தவளின் பேச்சில்  சமாதானமாகாதவன், “ரொம்ப வலிக்குதா?” என்றான் குற்றணர்வுடன்.

கணவனின் அந்த அனுசரணையில் ஒரு நிமிடம் அவன் பால் உருகிப் போனவள்,  இமை தாழ்த்தாது அவனையே பார்த்தபடி, “சொல்ல தெரியலை! ஆனா சந்தோஷத்தில் வந்த கண்ணீர் தான் அது” என்று வெட்கத்துடன் சொன்னவளின் வார்த்தைகளில் மனதில் இருந்த சங்கடங்கள் விலகப் பெற்றவன், பக்கவாட்டில் அமர்ந்தபடியே ஒரு நிமிடம் மனைவியை ஆழ்ந்து பார்த்து ரசித்தவன், அப்படியே தன் கைகளை நீட்டி தாமரையின் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்து, அவள் நெற்றியில் தன் நேச முத்தத்தை அழுந்த பதித்தான்.

அவனுக்குமே இப்பொழுது தான் தன்னுடைய உலகமே அர்த்தமயமானது போன்ற ஒரு உணர்வு! அதன் பொருட்டே அந்த அர்த்தத்தைத் தனக்குக் கொடுத்தவளுக்கு, தன் நன்றியைத் தன் முத்தத்தில் பறைசாற்றினான் அந்தக் கள்வன்.

கணவனின் அணைப்பில் நிம்மதியாகக் கட்டுண்டு இளைப்பாறிக் கொண்டு இருந்தவளுக்கு, அப்பொழுது தான் சிறுகுடலை பெருங்குடல் தின்பது போன்ற பசி எடுக்கவும், தாமரை தலை நிமிர்த்தி கணவனைப் பார்த்தாள்.

மனைவியின் அசைவில் அவள் பார்வையின் அர்த்தம் விளங்காதவன், “என்னவென்று” கேட்கவும், சிறுபிள்ளை முக பாவத்துடன் “உங்களுக்குப் பசிக்கலை?” என்று தன் பசியை எடுத்துரைத்தவளைப் பார்க்க பார்க்கத் திகட்டவில்லை கதிருக்கு. “உனக்குப் பசிக்குதுன்னு சொல்லு!” என்று நகைத்தபடி சொன்னவன்..

“வா, சாப்பிடலாம்” என்று மனைவியைக் கையோடு எழுப்பியவன், அவளைக் குளியறை அனுப்பி, தானும் உள்ளே புகுவதைக் கண்டு அவள் விழிகள் தெறித்து விடும் அளவுக்கு அதிர்வைக் காட்டவும்,

“தனியா குளித்தால் நேரமாகும் அதான்!” என்றவனின் குறும்பு பேச்சைக் கேட்டு சிவந்து போனவள், “இல்ல இல்ல வேண்டாம்” என்று மறுப்பதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுக்காதவன், மனைவியுடனே சேர்ந்து  குளித்து முடித்து, ஒரே தட்டில் உணவு உண்ட நொடிகள் எல்லாம் கதிரவன் கனவிலும் நினைத்துப் பார்த்திராத தேவ நொடிகளாக இருந்தது.

அடுத்தடுத்து வந்த நாட்கள் அனைத்துமே ஒருவரின் அருகாமையை மற்றவர் அதிகம் எதிர்பார்த்து மருகும் நாட்களாவே இருந்தது.

அதில் காமத்தையும் தாண்டிய காதல் மட்டுமே அதிகம் இருந்ததாலோ என்னவோ, ஒருவரின் உயிராக மற்றவர் மாறி வாழ ஆரம்பித்து இருந்தனர்.

***************

ஐந்து வருடங்களுக்குப் பின்..

அன்று தீபாவளி நன்னாள் என்பதால் தாமரை பலகாரம் சுடுவது, சாமி கும்பிட அனைத்தையும் எடுத்து வைப்பது என்று அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டு இருந்தாள்.

அவளை இழுத்துப் பிடித்து நிறுத்தி, அவளின் நெற்றியில் பூத்திருந்த வேர்வை துளியை அவளின் முந்தானை கொண்டு ஒற்றி எடுத்த கதிர்,

“பொறுமையா தான் செய்யேன். என்ன அவசரம்?” என்றான் காதலுடன். கணவனின் நெருக்கத்தில் லஜ்ஜை கொண்டவள், அவனுள் தன்னைத் தொலைக்க ஆரம்பித்த நொடி அங்கே, “அப்பா! அப்பா!” என்று இடியாகக் கத்தியபடி வீட்டுக்குள் ஓடி வந்து கொண்டு இருந்தாள், அவர்களின் மகள் சம்யுக்தா.

அவளின் சத்தம் கேட்டு, “அதானே? உங்க பொண்ணுக்கு மூக்கு வேர்த்துடுமே!” என்று நொடித்துக் கொண்டாள் தாமரை.

அவள் சொன்னத்தை மெய்ப்பிப்பது போல உள்ளே வந்தவள், ஒன்றாக நின்று இருந்த பெற்றோரைப் பிரிப்பது போல அவர்களுக்கு இடையில் வந்து நின்ற சம்யுக்தா, கதிரின் புறம் திரும்பி, “அப்பா!” என்று கையைத் தூக்கியதும், மகளின் அழைப்பில் அவளைக் குனிந்து வாஞ்சையுடன் தூக்கிக் கொண்டான் அவன்.

அரக்கு பட்டுப்பாவாடை சட்டையில், தலையின் இருபக்கமும் குடுமி போட்டு, காதில் தொங்கிக் கொண்டு இருந்த சிறு கம்மல் ஜதி போட, பூவுக்குக் கைகால்கள் முளைத்தது போல கையை ஆட்டி ஆட்டி அபிநயத்துடன் பேசிக் கொண்டு இருந்த தன் தேவதையின் அழகைக் கண்டு கதிர் எப்பொழுதும் போல ரசித்து நின்ற நேரம், “அப்பா! அந்த ராகுல் பெரிய பெரிய பட்டாசு எல்லாம் வெடிச்சுக்கிட்டு இருக்கான்பா.. நானும் வெடிக்கட்டுமான்னு கேட்டா, நீ சின்னப் பொண்ணு, அது எல்லாம் வெடிக்கக் கூடாது சொல்லிட்டான் அப்பா” என்று உதடு பிதுக்கிச் சொல்லும் மகளின் அழகில் கதிர் மயங்காமல் இருந்தால் தான் அதிசயம்!!

“அப்பா! நாமளும் அது போல வெடிக்கலாமா?” என்று உலுக்கிக் கேட்ட மகளின் வார்த்தைகளில் தன்னை மீட்டு எடுத்தவன்,
“சரி, வா போகலாம்” என்று மகளுடன் வெளியே செல்ல முயன்ற நேரம், “சாமி கும்பிடணும், எங்கே போறீங்க?” என்ற தாமரையின் குரலில், “நீ எல்லாம் எடுத்து வை! நாங்க வந்திடுறோம்” என்று சொல்லிச் சென்றான் கதிர்.

கணவனின் செயலில், “அதானே! மகள் பேசினால் மனைவியின் பேச்சு காதிலே கேட்காதே?” என்று முணுமுணுத்துக் கொண்டவள், சாமி அறை நோக்கிச் சென்றாள்.

படையலுக்கு அனைத்தையும் தயார் செய்து விட்டு வாசல் வந்தவள், அங்குக் குழந்தையுடன் குழந்தையாக மாறி, குதூகலித்துப் பட்டாசு கொளுத்திக் கொண்டு இருந்த கணவனைக் கண்டும், அவனின் இந்த மாற்றங்கள் குறித்தும் அவ்வளவு சந்தோசம் அடைந்தாள்.

அதுவும் சம்யுக்தா பிறந்த பின், அவன் தங்கள் இருவரின் மீதும் காட்டும் அன்புக்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.

கணவன், மகளுடன் சாமி கும்பிட்டு முடித்து, அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு மதிய உணவு முடித்து, மனைவி கொடுத்த பலகாரங்களை எடுத்துக் கொண்டு கிளம்பிய கதிரவன் குடும்பம், முதலில் ராமமூர்த்தி வீட்டுக்குச் சென்று அங்கே சிலமணி நேரம் இருந்து விட்டு, அதன் பின் வசந்த் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கும் பலகாரம் கொடுத்து விட்டு, இறுதியாக ராஜம்மா வீட்டுக்குச் சென்று அங்கேயே மாலை வரை இருந்தனர்.

சம்யுக்தாவைக் காணும் பொழுது எல்லாம் சிறு வயது தாமரையைக் காண்பது போலத் தோன்றியது ராஜம்மாவுக்கு.

இரவு உணவை அங்கேயே சமைத்து உண்டு முடித்து கிளம்பிய நேரம், தாமரை ராஜம்மாவின் கைகளில் சில ரூபாய் நோட்டுக்களைக் கொடுக்க, அதை அவர் பிடிவாதமாக வாங்க மறுத்த போதும், அதை அவரிடம் திணித்து விட்டு, “எங்க கூடவே வந்து தங்கிடலாம்ல பாட்டி” என்று எப்பொழுதும் போல அப்பொழுதும் அவரிடம் தாமரை கேட்டாள்.

“என்னால முடியாதுன்ற நிலைமை வரும் போது கண்டிப்பா நான் உன்கிட்ட தான் வருவேன்டா” என்று எப்பொழுதும் போல அப்பொழுதும் ராஜம்மா திடமாக மறுத்து விட்டார்.

தாமரை வீட்டுக்குக் கிளம்ப வாசல் வந்த நேரம், தன் சுருக்குப் பையில் இருந்து நூறு ரூபாய் தாளை எடுத்து ராஜம்மா பேத்திக்குத் தீபாவளி பரிசாகக் கொடுக்க, அதை வாங்கும் முன் தாயைப் பார்த்தாள் சம்யுக்தா.

அவள் தலையாட்டி, “வாங்கிக்கோ!” என்று சொல்லவும், நன்றி சொல்லி அதை வாங்கிக் கொண்டவள், பாட்டியை குனிய சொல்லி அவரின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, அந்த ரூபாயை தந்தையிடம் காட்ட கொலுசுகள் சிணுங்க அவனிடம் ஓடினாள்.

தாமரை இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமென்று தானே பலகாலம் ராஜம்மா தவமிருந்தார்! இன்று அந்த வாழ்க்கை அவள் வாழ்வதைக் கண்டு உள்ளம் உவகை கொள்ள, ஆண்டவனுக்கு மனதார நன்றி சொன்னார் அவர்.

“சரி பாட்டி.. நான் கிளம்புறேன். நேரம் கிடைக்கும் போது நீங்களும் வீட்டுக்கு வாங்க” என்று சொல்லி விட்டுக் குடும்பத்துடன் கிளம்பி வீடு வந்து சேர்ந்தாள் தாமரை.

இரவு உணவு முடித்து, ஆசுவாசமாக முன்வாசல் படிக்கட்டில் அமர்ந்தவாறு, கணவனும் மகளும் பட்டாசு வெடிப்பதைக் கண்டுகளித்துக் கொண்டு இருந்தவளின்  விழிகள், மகளை விட அதிகமாகக் கணவனின் மீதே தான் பதிந்து இருந்தது.

“என்ன தவம் செய்தேன், இப்படி ஒரு கணவன் எனக்குக் கிடைக்க..!!” என்று அந்நேரம் எண்ணியபடி அமர்ந்து இருந்தவளின் எண்ணங்கள் சில வருடம் பின்னோக்கிச் சென்றது.

ராஜம்மா அடிக்கடி தங்கள் வீடு வராத போதும், நேரம் கிடைக்கும் போது எல்லாம் தாமரை அவரைச் சந்திக்க ஓடி விடுவாள். சில சமயங்களில் கதிரும் அவளுடன் சென்று வருவதும் உண்டு.

அப்படி ஒரு நாள் அவர் வீட்டுக்குத் தாமரை சென்ற போது, கதிர் தாமரையின் கடனை அடைக்கக் கொடுத்த பணம் பற்றி அவளுக்குப் பாட்டி மூலம் தெரிய வந்தது.

“எப்படி உங்களுக்கு இது பற்றி தெரியும் பாட்டி?” என்று அவள் கேட்டதற்கு, “நம்ம கனகா அவ புருஷன் ஆபரேஷனுக்காக ஆபீஸில் கடன் கேட்டு இருக்கா. ஆனா அவுங்க நிரந்தர வேலையில் இல்லாதவங்களுக்கு லோன் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.

அதைச் சொல்லி என்கிட்டே புலம்பின போது தான், அப்புறம் நமக்கு எப்படிக் கிடைச்சதுன்னு நான் யோசிச்சு ராமமூர்த்தி ஐயாவைச் சந்திச்சு உண்மையைக் கேட்டேன். அவரும் என் வற்புறுத்தலை மீற முடியாமல் உண்மையைச் சொல்லிட்டார்” என்றவரின் பேச்சைக் கேட்டு அதிர்ந்தாள்.

அன்று மாலை கணவன் ஆபீஸ் விட்டு வீடு வந்ததும், “நீங்கதான் என்னுடைய கடனை அடைக்க ராமமூர்த்தி அப்பாகிட்ட பணம் கொடுத்து அனுப்புனீங்களா?” என்று கேட்டாள்.

எப்படியும் ஒரு நாள் இந்த உண்மை மனைவிக்குத் தெரிய வரும் என்று தெரியும். அதனால் அதிகம் அலட்டிக் கொள்ளாதவன் “ஆம்” என்று மட்டும் சொன்னான்.

ஏதாவது நீட்டி முழக்கி கணவன் சமாளிப்பான் என்று தாமரை  நினைத்து இருக்க, அவன் இப்படி ஒரு பதிலை கொடுக்கவும், அவளின் மனம் பலவிதத்தில் சிந்திக்க ஆரம்பித்தது.

“இந்த மூளையில் இப்போ என்ன ஓடிட்டு இருக்கு?” என்று மனைவியின் சிந்தனையைக் கலைக்கும் விதமாக, அவளின் தலையில் ஒரு விரல் வைத்து அசைத்துக் கேட்டவனைப் பார்த்தவள்,

“எதுக்கு எனக்காக அவ்ளோ பணம் பொய் சொல்லிக் கொடுத்தீங்க? என்னைக் கல்யாணம் பண்ணிக்கவா?” என்று கேட்டவளிடம்,

“இந்த மாதிரி நீ கேட்கக் கூடாதுன்னு தான்..” என்று திடமாகச் சொன்னான் கதிர்.

அதைக் கேட்டு, “புரியலை” என்றவளிடம்,

“இங்கே வா!” என்று நாற்காலியில் அவளை அமர வைத்து, அவளின் கையை எடுத்துத் தன் கைக்குள் அதை அடக்கிக் கொண்டவன், “உண்மையைச் சொல்லணும்ன்னா, உன்னோட கஷ்டம் தீர்க்கத்தான் உனக்கு அந்தப் பணத்தை நான் கொடுக்க நினைத்தேன். அதை என்கிட்டே இருந்து வாங்க எங்கே உன் தன்மானம் தடுக்குமோ? ஊர் ஆயிரம் பேசுமோ? என்பதால் தான், அலுவலக லோன்னு சொல்லி உனக்கு அதைக் கொடுக்கச் சொன்னேன்.

அதுக்கு அப்புறம் எனக்குள் எழுந்த உந்துதலில் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு முடிவு செய்த போதும், நீ அதை மறுத்த போதும் கூட, நான் பணம் கொடுத்த விஷயம் உனக்குத் தெரிய கூடாதுன்னு தான் நான் அதிகம் தவித்தேன்.

ஏன்னா.. அனாதையான என்னைக் கல்யாணம் பண்ணிக்க, நீ தானா முன்வரணுமே தவிர, நான் கொடுத்த பணத்தின் கட்டாயமாக இருக்க கூடாது என்பதில் நான் உறுதியா இருந்தேன்.

கடவுள் அனுக்கிரகத்தில் நம்ம கல்யாணமும் நடந்தது. எனக்கென நீ உனக்கென நான்னு இப்போ வாழவும் ஆரம்பிச்சுட்டோம்” என்றவனின் நீண்ட நெடிய விளக்கத்தில் வெளிப்பட்ட அவனின் குணத்தில், எப்பொழுதும் தன்னைக் குறித்தே சிந்தித்து முடிவெடுத்த அவனின் எண்ணத்தில், அப்படியே கணவனின் பால் உருகி போனவள், அவனைப் பிடித்து இழுத்து அவன் முகமெங்கும் முத்த மழை பொழிந்தாள்.

இதோ! இந்த நொடி வரை அந்தப் பணத்தினால் எந்தவித தயக்கமோ, குற்றவுணர்வோ இல்லாது தாமரை  கணவனுடன் வாழ்கிறாள் என்றால், அந்தளவுக்கு அவன் அவளின் மனமறிந்து ஒவ்வொன்றையும் செய்து இருப்பதால் தான் என்பதை நினைத்து பேரானந்தம் கொண்டவள், புன்னகையுடன் கணவனை நேச பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்த கதிர் தற்செயலாக மனைவியின் புறம் திரும்பியதில், தன்னைக் காதல் பார்வை பார்த்து இருப்பவளைக் கண்டு, குழந்தை பக்கத்து வீட்டுப் பையனுடன் சமாதானமாகி விளையாட ஆரம்பிக்கவும், தன்னவளை நோக்கி வந்தான்.

தன்னை இடித்துக் கொண்டு வாசலில் அமர்ந்தவனை நோக்கி நேசப் பார்வை தாமரை வீசவும், “என்ன பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு?” என்று கதிர் கேட்கவும், “ஏன்.. என் புருஷனை நான் பார்க்க கூடாதா?” என்றாள் தாமரை.

அவளின் “என் புருஷனில்” மயங்கிப் போனவன், “பார்க்கலாமே!” என்றான் பலமாகத் தலையசைத்து.

மனைவியியைத் தன் தோளோடு சேர்த்து அணைத்தபடி, வாசலில் விளையாடிக் கொண்டு இருக்கும் தன் மகளை பார்த்துக் கொண்டு இருந்தவனிடம், “நீங்க எனக்கு கிடைத்த வரம்!!” என்றாள் கணவனின் தோளில் சாய்ந்தபடி தாமரை.

மனைவியை நிமிர்த்தி, அவளின் விழியோடு விழி கலந்தவன், “இல்லைடா, நீ தான் என்னுடைய வரம், பொக்கிஷம் எல்லாமே!!” என்றான் இன்பக்குரலில்.

“அப்படியா? எப்படி?” என்றவளின் குறும்பு கேள்விக்கு, “நீ என் வாழ்க்கையில் வருவதற்கு முன், சொந்த பந்தம் இருக்கிற பொண்ணைக் கட்டிக்கிட்டா தான், அவளின் உறவுகள் அனைவரும் எனக்கும் உறவாகி என் மீது பாசம் காட்டுவார்கள். எனக்குன்னு ஒரு குடும்பமும் கிடைக்கும்ன்னு நான் கண்மூடித்தனமா நம்பிட்டு இருந்தேன்.

ஆனா அதையெல்லாம் பொய்யாக்கி, எத்தனை பேர் இருந்தாலும், உனக்கென நான் எனக்கென நீன்னு வாழ ஒரு உறவு இருப்பது தான் உண்மையான குடும்பம்ன்னு நீ எனக்குப் புரிய வச்சது மட்டுமில்லாமல், சொந்தத்தால் வருவது மட்டுமே உறவும், பாசமும், பந்தமும் இல்லைன்னும் என்னைத் தெளிய வச்சதும் நீதான்.

இன்று நான் என் தயக்கங்கள் நீங்கி, பலருடன் நட்புடன்  பழகுகிறேன் என்றால் அதற்குக் காரணமும் நீதான்டா.

அதனால் தான் சொல்கிறேன்.. நீ தான் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்!!” என்றவனைக் காதலுடன் நெகிழ்ந்து பார்த்தவள், அவனை அணைத்துக் கொண்டு அவனின் நெஞ்சில் முகம் பதித்த நேரம், சம்யுக்தா ஓடி வந்து கதிரவனின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

மனைவி ஒருபுறம், குழந்தை மறுபுறம் என்று அணைத்தபடி, வானத்தில் மின்னி மறைந்து கொண்டு இருந்த வானவேடிக்கைகளைக் கண்டவனின் மனதில், சொல்லில் வடிக்க முடியாத ஆயிரம் வர்ணஜாலங்கள் சந்தோஷமாக மின்னி, அவன் வாழ்க்கையையே வண்ணமயமாக்கிக் கொண்டு இருந்தன.

இன்று போல் கதிர் – தாமரை வாழ்க்கை என்றும் வண்ணமயமாக அமைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு, நாமும் அவர்களிடமிருந்து விடைபெறுவோம்!!

நன்றி

 

Advertisement