Advertisement

அத்தியாயம் 19

தனிமையில் தனித்து விடப்பட்ட தாமரைக்கு, காலையில் இருந்து கணவன் காட்டிய நெருக்கத்தின் கிறக்கம் கொடுத்த அலைகழிப்புகளில், வீட்டுக்குள் செல்லவோ, கணவனை நேருக்கு நேராகச் சந்திக்கவோ முடியாத கூச்சத்தில் தன்னை ஒருநிலைப்படுத்த முயற்சித்தவளாக, பின்வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்தவளைத் தேடி வந்த கதிரவன், எந்தவித தயக்கமுமின்றி அவளை உரசியபடியே அவளருகில் அமர்ந்தான்.

கணவனின் வருகையிலும், அவனின் தீண்டலிலும் திடுக்கிட்டுப் போனவளின் உடலிலோ மின்சாரம் பாய்ந்தது.

அந்த அதிர்வைக் கண்களில் காட்டி அவனைக் கண்டவளை என்னவென்று கண்ஜாடையில் கேட்டவனிடம், ஒன்றுமில்லை என்று தலையசைத்து நாணம் மேலிட குனிந்து கொண்டாள் தாமரை.

சில நிமிட நிசப்தம் அந்த ஏகாந்த வேளையில் இருவருக்குள்ளும் பலவித உணர்வுகளை விதைத்திருந்த நேரம், “நன்றி!!” என்று சொன்னாள் தாமரை.

“எதுக்கு?” என்றவனிடம், “எல்லாத்துக்கும்..” என்றாள் அவள்.

“எனக்குப் புரியலை” என்று சொன்னவனிடம், “வசந்த் அண்ணாவுக்காக அனாமிகா அக்கா வீட்ல பேசினதுக்கு” என்று தலை நிமிராது பேசியவளைப் பார்த்தவாறு திரும்பி அமர்ந்தவன்..

“யார் சொன்னா நான் அவனுக்காகப் பேசினேன்னு?” என்று சொன்ன கணவனின் பேச்சில் அவனைப் புரியாது ஏறிட்டவளிடம், “நான் உனக்காகத்தான் பேசினேன்” என்று சொல்லி அவளை அதிகம் வியப்பில் ஆழ்த்தினான் கதிர்.

“உண்மையைச் சொல்லணும்ன்னா உன்னால நான் நிறைய மாறி இருக்கேன் தாமரை. அந்த மாற்றங்கள் தான் என்னை மத்தவங்ககிட்ட பேச வைத்து இருக்கு. மத்தவங்களுக்காகவும் பேச வைத்து இருக்கு. அதுக்கு உனக்குத்தான் நான் நன்றி சொல்லணும்” என்றான்.

“எனக்கு எதுக்கு நன்றியெல்லாம்?” என்று விழி அசைத்துக் கேட்டவளிடம், “ஏன்னா.. நான் இப்படி மாற நீ தானே காரணம்?” என்றவன்,

மேலும், “என்னுடைய இந்த மாற்றங்களை நானே அதிகம் இப்போதெல்லாம் ரசிக்கிறேன், உன்னை ரசிக்கிற மாதிரி” என்று ஆழ்ந்து சொன்னவனின் பேச்சில் பெண்ணவளின் மேனி குங்குமமாகச் சிவந்து போனது.

“தாமரை!” என்று அழைத்தவனின் குரலில் கணவனைப் பார்த்தவளிடம், “நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கிறேன்” என்று சொன்னவனின் மகிழ்வைக் கண்டவளும், “நானும் தான்!!” என்று  முகம் மலர்ந்து சொல்லி, கணவனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

மனைவியின் செய்கையில், கதிரவனின் கைகள் தானாக அவளின் தோளைப் பற்றி, அவளை இன்னும் அணைவாக அவனில் அணைத்துக் கொண்டது.

இருவருமே ‘மற்றவர்களைப் போல் நாங்கள் திருமண வாழ்க்கை வாழாமல் இருக்கலாம். ஆனால் இப்படி ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வதில், எவ்வளவு ஒரு நிறைவு இருக்கிறது!’ என்பதை மனதார உணர்ந்து இருந்தனர்.

மார்கழி பனியில் தன்னில் அடைக்கலமாகி இருந்தவளின் மேனி சிலிர்ப்பில, “உனக்குக் குளிருதா? உள்ளே போகலாமா?” என்று கேட்டவனின் அனுசரணையில், “இல்ல, இப்படி இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம்” என்று கண் மூடிச் சொன்னவளின் பேச்சைக் கேட்டவனுக்கும், அப்படி இருக்கத்தான் மனம் விரும்பியது.

வாடை காற்று குத்தூசியாக உடலைத் தழுவிய போது, மனைவியின் லேசான தேக நடுக்கம் உணர்ந்தவன், அவளை எழுப்பிக் கொண்டு உள்ளே சென்றான்.

படுக்கையில் இடதுபுறமாக ஒருக்களித்துப் படுத்தவளின் அருகில் சென்று படுத்தவன், என்றுமில்லாத திருநாளாக, மனைவியின் சேலையை விலக்கி விட்டு, அவளின் இடையில் பதித்த தன் கரங்களின் சூட்டை அவளின் தேகம் முழுவதும் கடத்துபவனாக, அவளோடு ஒட்டிப் படுத்துக் கொண்டான்.

அதுவரை பனிக்காற்றில் சிலிர்த்து இருந்த தாமரையின் உடல், இப்பொழுது கணவனின் உறவாடலில் தீப்பற்றிக் கொண்டது போல சூடான போதும், அவனை விலக்காது விலக்கவும் விரும்பாது, அவனில் குளிர் காய்பவளாக, அவனை அணைத்துக் கொண்டு சுகமாக உறங்கிப் போனாள்.

********

வீட்டிற்குச் சென்று யோசித்துத் தன் முடிவைச் சொல்கிறேன் என்று சொன்ன ராமமூர்த்தி, வசந்தின் பேச்சில் இருந்த நேர்மையிலும், அவன் தன் மகளை விட்டுக் கொடுக்காது பேசிய விதத்திலும், அங்கேயே அவர்களின் திருமணத்திற்கு தங்களின் சம்மதத்தைச் சொன்னதும் சொன்னார். அதற்கு அடுத்து வந்த நாட்களில் வசந்தைக் கையில் பிடிக்க முடியவில்லை.

காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற வித்தையை அறிந்து இருந்தவன், மறுநாளே  அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குக் கிளம்பி விட்டான்.

திரும்பி வரும் போது தன் பெற்றோர்களையும் கூடவே அழைத்து வந்தவன், முறையாக அனாமிகாவை அவளின் பெற்றோரிடம் பெண் கேட்டான்.

நிச்சயதார்த்தத்தை அதிக நாட்கள் கடத்த வேண்டாமென்று எண்ணிய இருவீட்டினரும், அடுத்த வாரமே ஒரு நல்ல நாள் அதற்காகக் குறித்தனர்.

நிச்சயதார்த்தத்திற்கு முந்தின நாளே தங்கள் வீட்டுக்கு வந்திட வேண்டுமென்று தாமரையிடம் விஜயா வேண்டுகோள் வைத்த போதும், “பக்கத்தில் தானே இருக்கேன்மா, விடியகாலையிலேயே ஓடி வந்துடுறேன்” என்றவளுக்கு, உள்ளுக்குள் ஒரு நாள் கூடக் கணவனைப் பிரிந்து உறங்க முடியாது என்ற நிலை! அதன் பொருட்டே அவள் அவ்வாறு அவரிடம் சொல்லி இருந்தாள்.

ஆனாலும் கணவன் என்ன மாதிரி இதற்கு ரியாக்ட் செய்கிறான் என்ற எண்ணத்தில், அன்று மாலை வீடு வந்தவனிடம், “நான் இன்று அனாமிகா வீட்டில் தங்கட்டுமா?” என்று கேட்டவளின் கேள்வி கொடுத்த அதிர்வை அதிகம் முகத்தில் காட்டவில்லை என்றாலும், “உன்னிஷ்டம்!” என்று சுரத்தே இல்லாது சொன்னான் கதிரவன்.

அவனின் குரல் தேக்கத்தில் இருந்தே அவனின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவளுக்குள் அவ்வளவு குஷி! இருந்தும், உண்மையைச் சொல்லாது, அவனை அன்று இரவு வரை அலைபாய விட்டவள், நேரம் கடந்த பின்னும் கிளம்பாதது கண்டவன், “போகலை??” என்று ஆர்வமாகவே கேட்டான்.

“போகணும்” என்றவள், “என்னைக் கூட்டிட்டுப் போய் விடுறீங்களா?” என்று கேட்கவும், வாடிப் போனவன், ஒரு வார்த்தை பேசாது உள்ளே சென்று உடை மாற்றி வரச் செல்ல முயன்ற நேரம், அவனின் கைப் பிடித்து நிறுத்தியவள், அவன் நிமிர்ந்து பார்க்கவும், “நான் போகலை” என்றாள் குறும்பு முகத்தில் மின்ன.

அவளின் பாவனையில் அவ்வளவு நேரமிருந்த அழுத்தம் காணாமல் போகப் பெற்றவன், “ராட்சசி!!” என்றான் பல்லைக் கடித்து.

“யாரு நானா? அப்போ நான் போறேன்” என்றவளை இப்பொழுது தன்னில் பிடித்து இழுத்து அணைத்திருந்தான் கதிர்.

பின்னங்கழுத்தில் வந்து விழுந்த கணவனின் சூடான மூச்சுக் காற்றில் அப்படியே சிலையாகிப் போனவளிடம், “போகாதே!!” என்றவனின் கிறக்கத்தில் மயங்கியவளும், “ஏன்?” என்றாள் அவனைக் கிறங்கடிக்கும் குரலில்.

“என்னால் நீயில்லாம தனியா தூங்க முடியாது!” என்றான் எந்தவித தயக்கமுமின்றி கதிரவன்.

“என்னாலயும் தான்!” என்று கணவனின் கைவளைவை விடுவிக்காது  திரும்பி  நின்றவளுக்கு,  எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்ததோ? தன் கூச்சங்களைப் புறந்தள்ளி விட்டு, கால்களைத் தரையில் ஊன்றி எக்கி, கணவனின் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்டு, அவனின் கழுத்து வளைவில் முகம் புதைத்தாள் தாமரை.

மனைவியின் பெண்மை சொன்ன செய்தியில் இன்ப அலைகள் உடல் முழுவதும் தீயை மூட்டியதில், அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவன், மனைவியின் இருபுற கூந்தலிலும் தன் விரல்களை நுழைத்துக் கொண்டு, அவளின் முகத்தை நிமிர்த்தி அவளின் இதழ்களுக்குள் தன் இதழ்களைப் புதைத்தவன், மூச்சுத் திணற திணற அவளை முத்தமிட்டான்.

ஆவேசங்கொண்டு எழும் தாபங்களை அடக்க முடியாதவன், அப்பொழுதே மனைவியை முழுவதுமாக உணர துடித்து, தன் இதழ் நீக்காது, அவளை முத்தமிட்டபடியே பின்னோக்கிச் சென்று தங்களறை கதவை காலால் உதைத்துத் திறந்து கொண்டு, உள்சென்று படுக்கையில் மனைவியைக் கிடத்தினான்.

தாமரையின் முழு ஒத்துழைப்பும், இணக்கமும் கதிரவனைப் பித்தாக்கி முன்னேற சொல்லியதில், மனைவியின் மேல் படர்ந்தவனின் கரங்கள் அவளின் பொன் மேனியில் அத்து மீற துவங்கியது.

கணவனின் தீண்டல்களின் தேடல்களில் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் இழந்து கொண்டு இருந்தவளின் உடலும் மனமும் நெகிழ்ந்து பாகாய் உருகி, ஒருவருள் ஒருவர் சங்கமிக்கத் துடித்த நேரம், கதிரவனின் அலைபேசி அலறியது.

அந்தச் சத்தத்தில் மோகம் கட்டவிழ தன்னிலை அடைந்த தாமரை, தன்னில் மயங்கி கரைந்து கொண்டு இருப்பவனின் நெஞ்சில் கை வைத்து, அவனை முன்னேற விடாது தடுத்தபடி, “போன் அடிக்குது!” என்றாள்.

“இப்போ அதுவாடி முக்கியம்?” என்றவன், தன் காரியத்தில் மீண்டும் முழு மூச்சாக இறங்க நினைத்து, மனைவியின் கழுத்து வளைவில் முகம் புதைத்த நேரம், மீண்டும் அலறிய அழைப்பில் எரிச்சல் அடைந்தான்.

ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவாறு எழுந்து கட்டிலில் அமர்ந்தவன், சில நிமிட சலிப்புக்குப் பின் திரும்பி மனைவியைப் பார்க்க, அவளோ தான் இருந்த நிலையை கண்டு வெட்கி, அருகில் இருந்த போர்வையை எடுத்து தன்னைப் போர்த்திக் கொண்டு, செந்தாமரையாகத் தலை கவிழ்ந்தவளின் துடிக்கும் இதழ்களைக் காணும் போது, கதிரவனுக்கு அங்கிருந்து நகரவே மனம் வரவில்லை.

இருந்தும் தொடர்ந்து அழைக்கும் ஓசை கேட்டு அதன் அவசியம் புரிந்தவனாக, ஹாலை நோக்கி எழுந்து சென்றவன், போனை எடுத்துக் காதுக்குக் கொடுத்த நேரம், மறுபுறம் பேசிய அனாமிகா விஷயத்தைச் சொன்னாள்.

“சரி, நான் உடனே போறேன்” என்று போனை வைத்தவன், மீண்டும் படுக்கையறை சென்ற போது, அங்கே தன் உடைகளைச் சரி செய்து கொண்டு, கட்டிலை விட்டு இறங்காது அமர்ந்து இருந்த மனைவியைக் கண்டு, அவளை நெருங்கியவன்,

“நாளை விருந்துக்குச் சமைக்க மளிகை, காய்கறி சாமான்கள் வாங்கிட்டுத் திரும்பி வரும் போது, வண்டி ரிப்பேர் ஆகி ராமமூர்த்தி அப்பா பாதி வழியில் இருக்கிறாராம். சோ நான் போகணும்” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டவள், “சரி” என்று தலையசைக்கவும், அவளை நெருங்கி அவளின் நெற்றியில் அழுத்தமாகத் தன் இதழ்களைப் பதித்து விட்டு,

“எனக்காக வெய்ட் செய்யாத, நீ தூங்கு! நான் பூட்டிட்டுச் சாவி எடுத்துட்டுப் போறேன்” என்று சொல்லிக் கிளம்பினான் கதிர்.

தன் ஜீப்பை எடுத்துச் சென்று, ராமமூர்த்தி வாங்கி வைத்து இருந்த அனைத்தையும் தன் வண்டிக்கு மாற்றி விட்டு, அவரையும் அழைத்துக் கொண்டு, அவருடைய வண்டியை அங்கேயே ஓரமாகத் தள்ளி நிறுத்தி பூட்டி விட்டுக் கிளம்பியவன், அவர்களின் வீட்டில் பொருட்களை எல்லாம் இறக்கி வைத்து விட்டு, தன் வீடு வந்து சேர கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகியிருந்தது.

வீட்டை திறந்து கொண்டு சத்தமிடாமல் தங்களறை கதவைத் திறந்தவன், அங்கே இன்னமும் தூங்காது, கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்து மொபைலை நோண்டிக் கொண்டு இருந்த மனைவியைக் கண்டு, “இன்னும் தூங்கலையா?” என்று கேட்டான் கதிர்.

“இல்ல, தூக்கம் வரலை” என்றவளின் உள்ளே போன குரலைக் கேட்டுப் புன்னகைத்துக் கொண்டவனுக்கு, ‘தூக்கம் வரக் கூடிய செயலையா நாம செய்து விட்டுப் போனோம்?’ என்ற எண்ணம்!

ஆனாலும் விட்டுச் சென்றதைத் தொடர முடியாத ஏமாற்றம் அந்நேரம் அவனைச் சூழ்வதை உணர்ந்த போதும், காலையில் சீக்கிரம் எழ வேண்டுமே என்ற எண்ணத்தில், பாத்ரூம் சென்று முகம், கை, கால் கழுவி வந்தவன், படுக்கையில் இடதுபுறமாகப் படுத்துக் கொண்டு, தனது வலது கையை நீட்டியபடி, “வந்து படு!” என்று அழைப்பு விடுத்தான் மனைவிக்கு.

புள்ளி மானாய் துள்ளிக் கொண்டு கணவனின் கைவளைவில் புகுந்து கொண்டவள், அவனின் இதயம் மீட்டிய இசையில் அப்படியே கண்ணயர்ந்து போனாள்.

மறுநாள் அதிகாலை எழுந்த கதிரவனும், தாமரையும் குளித்து முடித்து, அனாமிகாவுக்காக வாங்கி வைத்திருந்த பொருட்களை ஒரு பையில் எடுத்துக் கொண்டு கிளம்பி, ராமமூர்த்தி வீட்டுக்குச் சென்றனர்.

அங்கே நிற்க கூட நேரமில்லாது அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டு, வந்தவர்களை வரவேற்றுக் கொண்டு வேலை செய்து கொண்டு இருந்த கணவனைக் கண்களாலேயே கபளீகரம் செய்து கொண்டு இருந்த தாமரையை, அனாமிகா தான் அப்போ அப்போ தலையில் தட்டாத குறையாக, “தெய்வமே! கொஞ்சம் என்னையும் கவனிமா!” என்று தனக்கு உதவுமாறு கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.

அவளின் கேலியில் முகம் சிவந்த போதும் கணவனை சைட் அடிப்பதை தாமரை நிறுத்தவே இல்லை. அந்த அளவுக்குக் கணவன் எல்லாவற்றையும் பொறுப்பாக எடுத்துச் செய்வதைக் கண்டு உள்ளம் சிலாகித்துப் போயிருந்தாள் அவள்.

நல்ல நேரத்தில் உற்றார் உறவினர் முன்னிலையில் நிச்சய பத்திரிக்கை வாசிக்க, வசந்த் – அனாமிகா திருமணம் நாள் குறிக்கப்பட்டு, மோதிரமும் மாற்றிக் கொண்டனர்.

அன்றைய நிகழ்வுகளைப் படம்பிடிக்கவென்று போட்டோகிராபர் வைத்திருந்த போதும், தாமரையுடன் செல்ஃபி எடுக்க எண்ணிய அனாமிகா, முதலில் அவளின் போனில் சில படங்களை க்ளிக்கியவள், அதன்பின் தாமரை கேட்டுக் கொண்டதன் பேரில் அவளுடைய போனிலும் எடுக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் இருவரும் மாடியில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு இருந்த நேரம், அங்கே ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகளில் ஒருவன், விளையாட்டு மும்முரத்தில் அனாமிகாவை இடித்து விட்டு ஓடவும், அவள் கையில் இருந்த போன் தவறி கீழே விழுந்து விட்டது.

எதிர்பாராது நடந்த நிகழ்வில் பெண்கள் இருவரும் அதிர்ந்து, பின் அங்கிருந்து கீழே ஓடிச் சென்று போனை எடுத்துப் பார்த்த போது, அதன் திரை லேசாக உடைந்து இருந்தது. அதைக் கண்ட தாமரைக்குச் சொல்ல முடியாத வலி ஒன்று உள்ளுக்குள் உண்டாகி அவளை ரணமாக வாட்டியது.

“சாரி! சாரி தாமரை!” என்று புது போன் உடைந்ததையும், அதில் முகம் வாடிப் போய் நிற்பவளையும் கண்ட அனாமிகா, “சாரி! சாரி தாமரை! தெரியாம விழுந்துடுச்சு. மன்னிச்சுடு!” என்று ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கவும், தன் முகத்தைச் சாதாரணமாக மாற்றிக் கொண்ட தாமரை,

“பரவாயில்லை விடுங்க அக்கா.. தெரியாம நடந்ததுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?” என்று அவள் சங்கடப்படக் கூடாது என்று சொல்லி அவளைச் சமாதானப்படுத்திய போதும், ஏனோ அவளுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு இருந்தது.

அனாமிகாவிடமிருந்து போனை வாங்கியவள், “உள்ளே போகலாம் அக்கா, அம்மா தேடுவாங்க” என்று சொல்லி உள்ளே சென்றவள், அதன்பின் காலையில் இருந்த உற்சாகம் வடிந்தே காணப்பட்டாள்.

மனைவியின் முக மாற்றத்தைக் கண்ட கதிரவன், “என்னாச்சு?” என்று அவளைத் தனியே அழைத்துச் சென்று கேட்ட போது, ஒன்றும் சொல்லாமல் கையில் இருந்த போனையே பார்த்துக் கொண்டு இருந்தவளை உலுக்கி, “என்னாச்சுடி?” என்று இந்த முறை அதட்டிக் கேட்டான் கதிரவன்.

அதில் முகம் நிமிர்ந்து கணவனைப் பார்த்தவள், அப்பொழுதும் ஒன்று சொல்லாமல் தலையைத் தொங்கப் போடவும், அடுத்து எப்படிக் கேட்பது என்றே புரியாது அவன் தவித்தான்.

அந்த நேரம் அங்கே வசந்துடன் வந்தாள் அனாமிகா. “என்னால் என்னாலதான்..” என்றவளின் பேச்சைக் கேட்டு அவளின் புறம் திரும்பிய கதிர், “என்ன சொல்ற?” என்று அவளிடம் கேட்டதும், நடந்த விஷயத்தைச் சொல்லி முடித்தாள் அவள்.

தாமரையின் கையில் இருந்த போனை வாங்கி பார்த்தவன், “டிஸ்ப்ளே தானே? ஒன்னும் பிரச்சனையில்லை! மாத்திடலாம் விடு!” என்று சொல்லவும், முகம் மாறாத தாமரையைக் கண்ட வசந்த், “எல்லாம் இவளால!” என்று அனாமிகாவைப் பார்த்துத் திட்ட ஆரம்பித்தான்.

அதில் சுதாரித்து முகத்தை மாற்றிக் கொண்ட தாமரை, “இல்ல அண்ணா.. அக்கா மேல எந்தத் தப்புமில்லை. நான் தான் அவுங்களை செல்ஃபி எடுக்கச் சொன்னேன்” என்று சொன்னவள், மேலும், “அதான் இவுங்களே போனைச் சரி பண்ணிடலாம்ன்னு சொல்லிட்டாங்களே? இப்போ நான் ஒகே தான்!” என்று வரவழைத்த புன்னகை ஒன்றை புரிந்தவள், “அப்போவே விஜயாம்மா வந்தவங்களுக்குப் பூ, பழம் பிரிச்சு வைக்கச் சொன்னாங்க, மறந்துட்டேன்!!” என்று சொல்லி, அனாமிகாவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று மறைந்தாள்.

மதியம் விருந்து முடிந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் சென்ற பின், முக்கிய சொந்தங்கள் மட்டும் மாலை வரை இருந்து கிளம்பினர்.

இரவு நெருங்கிய நேரம் கதிரவனும், தாமரையும், “நாங்க  கிளம்புறோம் அம்மா!” என்று சொல்லவும், அவர்களிடம் ஒரு பையை எடுத்து வந்து கொடுத்த விஜயா, “நைட் எதுவும் டிபன் செய்ய வேண்டாம். இதில் இட்லியும் கார சட்னியும் வச்சு இருக்கேன். போய்ச் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க” என்றார்.

பையை வாங்கிக் கொண்டு, “நாங்க போயிட்டு வரோம்” என்று அனைவரிடமும் சொல்லிக் கிளம்பிய கதிர், அனாமிகாவுக்குத் தன்னுடைய வாழ்த்தைச் சொன்ன நேரம், அவளும், “தாங்ஸ் ப்ரோ!” என்றாள்.

அது அவனின் வாழ்த்துக்காக மட்டுமில்லை, இன்று இந்த நிச்சயம் நடந்து முடியும் வரை, அப்பாவுடனே இருந்து  அனைத்தையும் கவனித்துக் கொண்டான் என்பதற்கும் சேர்த்துத்தான்.

“நாளை லீவ் தானே? முடிந்தால் வீட்டுக்கு வந்திட்டுப் போங்க” என்ற விஜயா – ராமமூர்த்தி அழைப்பை ஏற்றவர்கள், “ம்ம்ம்.. பார்க்கிறோம்” என்று மட்டும் சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள்.

போகும் வழியில் கதிரவன் பேசிய நாலு வார்த்தைக்கு ஒரு வார்த்தை மட்டுமே தாமரையிடம் பதிலாக வந்து கொண்டு இருந்தது. அதைக் கவனித்தவன், வீடு சென்ற பின் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

வீட்டைத் திறந்து உள்ளே வந்த கதிரவன் ரெஃப்ரெஷ் பண்ண நினைத்து நேராகக் குளியலறை சென்றான்.

விஜயா கொடுத்து அனுப்பி இருந்த பையில் இருந்து பூ, பழங்களை எடுத்து உள்ளே வைத்தவள், டிபனை எடுத்து வெளியில் வைத்தாள்.

கதிரவன் வெளியே வரவும், உள்ளே சென்று உடை மாற்றி முகம், கை கால் கழுவி வந்தவள், கணவனுக்குப் டிபன் பரிமாறி விட்டுத் தானும் உண்டு முடித்து, அனைத்துப் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு சமயலறை சென்றாள்.

தங்களறையில் மனைவியின் வருகைக்காகக் காத்திருந்த கதிரவனுக்கு, நெடு நேரமாகியும் அவள் வராததில் எழுந்து ஹால் வந்தவன், அங்கே டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த மனைவியைக் கண்டு, “என்னாச்சு இவளுக்கு?” என்று முதுகு காட்டி அமர்ந்து இருந்தவளை நோக்கிச் சென்றான்.

தாமரையின் தோளின் மீது கைகளை வைத்துத் தன் புறம் அவளின் முகம் திரும்ப வைத்தவன், அங்கே மடை திறந்த வெள்ளமாக வழிந்து கொண்டு இருந்த கண்ணீரைக் கண்டு பதறிப் போய் விட்டான்.

“ஏய்! எதுக்கு இப்போ இப்படி அழுதுட்டு இருக்க?” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டவளின் விழிகள் மீண்டும் அவளுக்கு முன் இருந்த போனின் மீது பதிந்து நின்றது.

“ஓஹ்ஹ.. இது தான் பிரச்சனையா? அதான் அப்போவே அதைச் சரி பண்ணிடாலாம்ன்னு சொன்னேனே? அப்புறமும் எதுக்கு இப்படிக் கலங்குறா?”  என்று நினைத்துக் கொண்டவன் “ஒருவேளை  நான் திட்டுவேன்னு அழறாளா?” என்று நினைத்து, மனைவியின் அருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

“என்னமா.. எதுக்கு இப்போ இந்த அழுகை?” என்று அனுசரணையாகக் கேட்டவனின் வார்த்தைகள் காதில் விழுந்தாலும், அவனின் புறம் திரும்பாதவள், கையில் வைத்து வருடிக் கொண்டு இருந்த உடைந்த போனின் திரையைப் பார்த்தபடியே, “என்னை மன்னிச்சுடுங்க!” என்று மட்டும் சொன்னாள்.

அவளைத் தன்புறம் திருப்பி அவளின் கண்ணீரைத் துடைத்தவன், “போன் தானே? விடு!” என்று சொன்ன பொழுது, “இல்லை” என்ற விதமாகத் தலையயை மறுப்பாக ஆட்டிய தாமரை, “நீங்க முதல் முதலா எனக்காக வாங்கிக் கொடுத்தது. அதை இப்படி உடைந்த நிலையில் பார்க்கும் போது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குங்க” என்று ஒரு உயிரில்லாத பொருளுக்காக உயிருள்ள தன்னவள் இப்படி அழுது கரைவதைக் கண்டவனுக்கு, ‘தான் வாங்கிக் கொடுத்தேன் என்ற ஒன்றிக்காகவா இப்படி அழுது கரைகிறாள்?’ என்று எண்ணும் பொழுதே, கதிரவனுக்கு ‘இவள் என்னவள்!!’ என்ற கர்வம் அதிகமாகவே ஆழப் பதிந்தது.

“இங்கே பார்! இங்கே பார்!” என்று சொல்லியும் பார்க்காதவளை, அவள் முகம் பிடித்துத் திருப்பித் தன்னைப் பார்க்க வைத்தவன்,

“உனக்கு இது போல பத்து போனை என்னால் வாங்கித் தர முடியும். ஆனால் எதுக்காகவும் நீ இப்படி அழறதை என்னால தாங்கிக்கவே முடியாது. சோ ப்ளீஸ்! அழாதே!” என்றவனின் அன்பில் அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டவளின் முதுகை வருடிக் கொடுத்தவன்,

“சரி, வா படுக்கலாம்” என்று சொல்லி மனைவியின் கைப் பிடித்து அழைத்துச் சென்று விளக்கை அணைத்துப் படுத்தவனுக்கு ஏனோ அப்படி ஒரு நிம்மதி!

“மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்!” என்பது எந்தளவுக்கு உண்மை என்பதை, இன்று தன் வாழ்வில் வந்தவளின் மூலம் அறிந்து கொண்டவன், முதல் முறையாக அந்த இறைவனுக்கு மனதார நன்றி சொன்னான், தன்னவள் தனக்குக் கிடைத்ததற்காக…

Advertisement