Advertisement

18

விஜயா வீட்டுக்குத் தாமரை அடிக்கடி செல்வதும், அவர்கள் இங்கே வருவதும் எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு தான்.

ஆனால் நேற்று அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது, “கதிரவனையும் கூட்டிட்டு நாளைக்கு வீட்டுக்கு வாம்மா. அவன் வந்து ரொம்ப நாள் ஆச்சு!”  என்றவரின் பாச அழைப்பைப் பற்றிக் கணவனிடம் சொன்ன போது, முன்பு போல வேண்டாம் என்று உடனே மறுக்காத போதும், “போகணுமா?” என்று மட்டும் லேசாக இழுத்துக் கேட்டான் கதிரவன்.

ஏனென்றால் அவனுக்கு நன்கு தெரியும்! தான் வேண்டாம் என்று சொன்னால், கண்டிப்பாக மனைவியின் முகம் வாடும். அதே நேரம், ‘பாசம் வைப்பது என்ன அவ்வளவு கஷ்டமா? இல்ல கொலை குற்றமா?’ என்ற அறிவுரைகளும் சேர்ந்து வந்து விழும். அதன் பொருட்டே சற்று உஷாராக அப்படிக் கேட்டு வைத்தான் அவன்.

தாமரைக்கும் கணவனிடம் உண்டாகி இருக்கும் மாற்றங்கள் தெரியாமல் இல்லை. இருந்தாலும் அது அவளுக்குப் போதாததாகவே இருந்ததால் தான், எப்போ எப்போ சந்தர்ப்பம் கிடைக்குதோ, அப்போ அப்போ அவனை முடிந்தளவுக்கு எல்லோரிடமும் பேசிப் பழகச் சொல்லுவாள்.

அப்படிப்பட்ட நேரங்களில், “என்ன பேச சொல்ற?” என்று தன்னையே திருப்பிக் கேட்கும் கணவனுக்கு ஒரு முறைப்பைக் கொடுத்து, “நல்லா இருக்கீங்களா கேளுங்க” என்று அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கொடுத்துப் பேச வைப்பாள்.

அதன் விளைவாக, முன்பெல்லாம் தன் அண்டை வீட்டில் இருப்பவர்கள் யார் என்றே தெரியாது இருந்த கதிரவனுக்கு, இப்பொழுது அவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்து  இருப்பது மட்டுமில்லாது, அவர்களை எங்குக் கண்டாலும் நின்று புன்னகைத்து அவர்களிடம் ஓரிரு வார்த்தை பேசுமளவிற்கு, இப்பொழுது தேற்றிக் கொண்டு வந்து இருந்தாள் தாமரை.

“நீ  மட்டுமே  என் உலகம்!” என்று சொன்னவனிடம் “நமக்கான உலகம் இன்னும் பெரியது” என்று சொல்லாமல் சொல்லி, அதை அவனுக்கு நிஜத்திலும் மற்றவர்களோடு பழக வைத்துக் காட்டிக் கொண்டும் இருந்தாள் அவனின் ஆசை மனையாள்.

இப்படிப்பட்ட உறவுகள், உரிமைகள் கிடைக்காமல் தனக்குள்ளே ஒடுங்கிப் போயிருந்தவனுக்கு, இப்பொழுது அந்தக் கூட்டை விட்டு வெளியேறி வந்து, எல்லோருடனும் உறவாடுவது உண்மையாகவே பிடித்து  இருந்தது.

மனைவியால் தன்னில் எழுந்து இருக்கும் மாற்றங்களைக் கதிர் வாய் விட்டுச் சொல்லாவிட்டாலும், சில நேரம் செயலில் அதைக் காட்டித் தாமரையையே வாய் பிளக்கச் செய்வதுண்டு.

அது போல் தான், அன்று காலை எழுந்து வந்தவன், “இன்று ராமமூர்த்தி அப்பா வீட்ல இருந்து நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வராங்க” என்று சொல்லி மனைவியைத் திகைப்பில் ஆழ்த்தியது மட்டுமில்லாது, அவனே கடைக்குச் சென்று மனைவி சொன்னதை எல்லாம் வாங்கி வந்து கொடுத்து இருந்தான்.

அதன்பின் தாமரைக்குச் சொல்லவா வேண்டும்? தரையில் கால்கள் படாது, அங்கும் இங்கும் ஒருவித பரபரப்புடனே, அன்றைய விருந்தைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டாள்.

மனைவி தனியாகச் சிரமப்படுவதை ஹாலில் இருந்தபடி கண்டவனுக்கு என்ன தோன்றியதோ? டிவியை ஆப் செய்து விட்டு மனைவியை நோக்கி வந்தவன், “நான் ஏதாவது உதவி செய்யட்டுமா?” என்று கேட்டான்.

அவன் குரல் கேட்டும் திரும்பாது, மீன் வறுவலுக்கு மசாலா தயார் செய்து கொண்டு இருந்தவள், “இல்ல இல்ல.. வேண்டாம் நானே பார்த்துக்குறேன்” என்று சொன்ன பின்னும் அங்கிருந்து நகர்ந்து செல்லாதவன்,

“நீ மட்டும் எப்படி எல்லாத்தையும் செய்வ? நானும் உதவுகிறேன்” என்று சொல்லவும், அவனைத் திரும்பிப் பார்த்தவள், “சரி இருங்க!” என்று சொல்லி விட்டு, ஒரு தட்டு நிறைய வெங்காயம், தக்காளி நிரப்பி அவனிடம் கொடுத்து, “இதை நறுக்கிக் கொடுங்க!’ என்று சொன்னாள்.

மனைவி கொடுத்த வெங்காய அளவைக் கண்டு மலைத்துப் போனவன், “இவ்வளவு தேவைப்படுமா?” என்று அதிசயித்துக் கேட்டதற்கு, “பின்ன? ஆறு பேர்க்கு மட்டன் பிரியாணி, சிக்கன் மசாலா, நண்டு கிரேவி, வெங்காய பச்சடி, மீன் குழம்பு வைக்கணும்ல..” என்றவளின் பட்டியலைக் கேட்டு மேலும் மலைத்துப் போனவன், “இவ்வளவும் செய்யப் போறியா?” என்று மீண்டும் கேட்டான்.

“இல்லையே?” என்றாள் தாமரை.

அவளின் பதிலில் குழம்பிப் போனவன், “என்ன சொல்ற?” என்று கேட்க,

“இதுமட்டும் இல்லை.. இன்னும் சாதம், ரசம், மீன் வறுவலும் செய்யப் போறேன்ன்னு சொல்ல வந்தேன்” என்றதைக் கேட்டு ‘இவ்வளவு எதற்கு?’ என்று கேட்க கதிருக்குத்  தொண்டை வரை வார்த்தைகள் வந்தாலும், அதைக் கேட்டால் தான் அவ்ளவு தான் என்று புரிந்து இருந்தவன், அமைதியாக அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்து மனைவி சொன்னதைச் செய்ய ஆரம்பித்தான்.

கணவனின் செயலைக் கண்ட தாமரையின் இதழ்கள் தானாகவே மலர்ந்தது. இதுவரை தாங்கள் இருவருக்கும் மட்டுமே சமைத்ததால், அதில் பெரிதாகக் கதிரவன் வந்து உதவும் அளவுக்குத் தாமரைக்கு வேலை இருந்தது இல்லை. அப்படி இருந்தாலும், அவன் வந்து சில நேரங்கள் கேட்கும் பொழுது, வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விடுவாள்.

ஆனால் இன்று கணவனுடன் சேர்ந்து சமைப்பது அவளுக்குச் சொல்லவே முடியாத சந்தோஷத்தைக் கொடுத்தது. அது மட்டுமா? அவனை வேலை வாங்குகிறேன் பேர்வழி என்று இவளே அனைத்தையும் செய்ய முயலுவதைக் கண்ட கதிர், ஒரு நிலைக்கு மேல், அவளைப் பிடித்து நிறுத்திய நெருக்கத்தில், உணர்வுகள் தடுமாறி, கையில் இருந்த பாத்திரத்தைத் தவற விட்டாள் தாமரை.

அதைத் தன் கைகளில் சரியாகப் பிடித்த கதிரவனுக்கு, மனைவியின் படபடக்கும் பட்டாம்பூச்சி இமைகளின் மீது முத்தம் வைக்கத் தோன்றவும், ஆசை பொங்க, மனைவியின்  இடை பிடித்துத்  தன்னோடு  இழுத்து அணைக்க முயன்றான் அவன்.

கணவனின் அதிரடியில், கையில் பிசைந்திருந்த மாசாலா கலவை அவனின் மீது பட்டு விடக் கூடாது என்று தன்னிச்சையாகக் கைகளை மேலே தூக்கியவளின் செயல், இன்னமும் கதிருக்கு வாட்டமாகப் போய் விட்டது.

இன்னமும் மனைவியுடனான நெருக்கத்தைக் கூட்டியவன், மெதுவாகக் குனிந்து, அவளின் இமை, கன்னம், கழுத்து என்று முத்தமிட்டான். கணவனின் தீண்டலோடு நாசி உணர்ந்த அவனின் பிரத்யேக வாசனையை உள் இழுத்தவளுக்கு, அடிவயிற்றில் சில்லென்ற உணர்வு எழுந்து, அவளை முழுவதுமாகச் சிலிர்க்க வைத்தது.

அதுவரை சமையலுக்குத் தேவையானது மட்டுமே நறுக்கிப் பிசைந்து அரைத்து வைக்கப்பட்டு இருந்ததால், இன்னமும் அடுப்பு ஆன் செய்யாதது தம்பதியினருக்கு இன்னமும் வசதியாகிப் போனது.

அதன்பொருட்டு பற்றி இருந்தவளை இடையோடு லேசாகப் பின்புறமாக வளைத்தவன், அவளின் மென்மையில் பித்தாகிப் போய், தன் இதழ் தேடலில் அதைக் காட்ட ஆரம்பித்தான்.

கால நேரம் மறந்து இயல்பாக உண்டான உணர்வுக்கு வடிகால் தேடி, இருவரும் ஒருவரில் ஒருவர் கரைந்து காணாமல் போக முயன்ற நேரம், வீட்டின் அழைப்பு மணி அடித்து அவர்களைப் பதறடித்துக் கொண்டு விலகச் சொல்லியது.

ஒரு நிமிடம் இப்போ இங்கே என்ன நடந்தது? என்பதே புரியாது, கணவன் – மனைவி இருவருமே மலைத்து, பின் சுயம் உணர்ந்த நேரம், கதிரவனுள் ஏமாற்றத்திற்குப் பதிலாக,  ஏனோ  மனைவியுடனான அந்தச் சிறு கூடல் கூட அவனை அதிகம் உற்சாகம் கொள்ளச் செய்து கொண்டு இருந்தது.

இன்னமும் பதற்றம் குறையாது இமைகள் படபடக்க நின்று இருந்த மனைவியைக் குறும்பு புன்னகையுடன் நெருங்கியவன், அவளை முழுவதுமாக அணைத்து, அவளின் முதுகை மெதுவாகத் தடவி கொடுத்து, அவளை கொஞ்சம் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தான்.

“நீ ஒகே தானே?” என்று கேட்டு, அதற்கு அவள் குங்குமாகச் சிவந்த முகத்தை அவனுக்குக் காட்டாது தலை அசைத்து, “ம்ம்ம்..” என்று சொல்லவும் தான், வாசல் நோக்கிச் சென்றான் கதிர்.

கதவைத் திறந்ததும் அங்கே வெளியே நின்ற வசந்தைப் பார்த்தவன் “நீயா? வா! வா!” என்று அழைத்து முன்னே செல்ல, அவனின் பின்னேயே வந்தவனுக்கோ, உள்ளுக்குள் ஆயிரம் கேள்வி போராட்டங்கள்.

“நீ நல்லா தானே இருக்க?” என்று கேட்டபடியே சோபாவில் அமர்ந்தவனைப் பார்த்தவன், “என்ன நக்கலா?” என்று கேட்க,

“பின்ன? என்னை என்றும் இல்லாத திருநாளா வீட்டுக்கு எல்லாம் கூப்பிட்டா, ஒரு சின்ன பையன் என்னன்னு நினைப்பேன்? பாரு! உன்னால பதறியடிச்சுக்கிட்டுப் பல்லு கூட விளக்காமா ஓடி வந்துட்டேன்” என்றவனைப் பார்த்துச் சிரிக்காது முறைத்தான் கதிர்.

“சரி சரி! பல்லு விளக்கிட்டுத்தான் வந்தேன். நீ விஷயத்தைச் சொல்லு!” என்று  அவன்  கேட்க ஆரம்பித்த போதே, அங்கே கையில் தண்ணீர் தம்ளருடன் வந்த தாமரை, அதை வசந்திடம் நீட்டியபடியே, “வாங்க அண்ணா!” என்றாள்.

“முதலில் அதைக் கொடும்மா. டென்ஷன் தலைக்கு ஏறி கபாலம் காய்ந்து போய் கிடக்கு” என்று மொத்த தண்ணீரையும் வாங்கி ஒரே மடக்காகக் குடித்து முடித்தவன், “இப்போவாவது சொல்லுடா.. எதுக்குடா கூப்பிட்ட?” என்ற நண்பனின் கேள்விக்கு,

“சும்மா சாப்பிட கூப்பிட்டேன்” என்றான் கதிரவன் சாதாரணமாக.

“என்னது சாப்பிடவா?” என்று முன்பை விட அதிகமாக அதிர்ந்த வசந்த், ‘இதுகெல்லாம் கூப்பிடுற ஆள் இவன் இல்லையே? எப்போ இருந்து இவ்ளோ நல்லவனா ஆனான்?’ என்று எண்ணிய போதும், எங்கே வெளியே அதைச் சொன்னால், ‘போடுறேன்னு சொன்ன சாப்பாட்டையும் போட மாட்டானோ?’ என்று எண்ணியவன்..

“சாப்பிடவா?” என்று இழுத்துச் சொல்லி விட்டு, “ஓஹ்ஹ.. சாப்பிடலாமே? நல்லா சாப்பிடலாமே?” என்றவன், “தங்கச்சி சாப்பாடு ரெடியாம்மா?” என்று கேட்கவும், தாமரை திருதிருத்துப் போனாள், ‘அதுக்குள்ளயா?’ என்ற எண்ணத்தில்.

அதைக் கண்டு நகைத்த கதிர், “நீ போய்ச் சமையலைக் கவனி!” என்று மனைவியை அனுப்பி விட்டு, மீண்டும் நண்பனை முறைத்தான். அதைக் கண்டு உஷாரானவன், “சும்மா விளையாட்டுக்கு!” என்று சொல்லிச் சிரிக்க, “என் கூட வா, உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்று நண்பனுடன் வெளிவராண்டா சென்று அமர்ந்த கதிர் அவனிடம் பேச ஆரம்பிக்கவுமே, வசந்த்க்கு மயக்கம் வாராதது ஒன்று தான் குறை! என்ற நிலைக்குச் சென்று கொண்டு இருந்தான்.

ஒருவழியாக அவனிடம் கேட்க வேண்டியதைக் கேட்டு விட்டு, சொல்ல வேண்டியதும் சொல்லி முடித்து உள்ளே வந்தவன், நண்பனை ஹாலில் அமரச் சொல்லி டிவியை ஆன் செய்து வைத்து விட்டு அடுப்பங்கரை சென்றான்.

அதற்குள் பாதி சமயலை முடித்து வைத்து இருந்த தாமரையிடம், “வேறு ஏதாவது உதவி வேணுமா?” என்று கதிர் கேட்கவுமே, தானாக, அவன் காலையில் உதவுகிறேன் பேர்வழி என்று செய்த அட்டூழியங்கள் தாமரையின் நினைவுக்கு வந்து அவளின் கன்னங்களை மேலும் சிவக்கச் செய்தது.

அதை மறைக்க முயன்றும் முடியாது திரும்பி, “இல்லை, ஓரளவுக்கு முடிஞ்சிடுச்சு. நீங்க அண்ணா கூடப் பேசிட்டு இருங்க” என்று சொன்னவளை ஆழ்ந்து பார்த்து ரசித்தவனுக்கு, அங்கிருந்து நகரவே விடாது இளமை உணர்வுகள் குதித்துக் கும்மாளமிட்டதில், அப்படியே மனைவியை அள்ளி அணைக்க ஆசை வந்த போதும், சூழ்நிலை காரணமாக உணர்வுகளை அடக்கிக் கொண்டு குறும்பு புன்னகையுடன் அங்கிருந்து  சென்றான்.

கணவனின் பார்வை தீண்டலில் தனக்குள் மீட்டப்பட்ட காதல் அலையினை உணர்ந்தவளுக்கு, உடலெங்கும் ஒருவித குறுகுறுப்பு உண்டாகி, அவளை அதிகம் இம்சித்தது. ஆனால் அதுவும் ஒரு சுகமாகவே அவளுக்குத் தோன்றியது.

கதிரிடம் பேசியதில் இருந்து  பேயறைந்தவன் போலவே இருக்கும் வசந்தைக் கண்டு, “என்னடா?” என்று முதுகில் தட்டிக் கேட்ட கதிரிடம், “ஹாங்..” என்று முழித்தவனுள்ளோ, ஆயிரம் போராட்டங்கள், படபடப்புகள்!!

“நான் வேணா வீட்டுக்குப் போயிட்டு ஈவ்னிங் போலத் திரும்பி வரவா?” என்றவனின் பேச்சில், “ஏன் வர? அப்படியே பொட்டியைக் கட்டிட்டு ஊரை விட்டே ஓடிப் போய்டு!” என்றவனின் வார்த்தைகளில் காரம் ஏறி இருந்தது.

“என்னடா இப்படிச் சொல்ற?” என்று வசந்த் கேட்க,

“பின்ன? எப்படிச் சொல்ல சொல்ற? லவ் பண்ணத் தெரிஞ்சவனுக்கு, அந்த விஷயத்தை அந்தப் பொண்ணு வீட்ல பேசவும் தைரியம் இருக்கணும்!

அதை விட்டுட்டு மத்தவங்க பேசி முடிச்சு, மணமேடை வந்து தாலி கட்ட, நீயென்ன அவ மாமா பையனா?” என்ற நண்பனின் முகத்தில் அடித்தார் போன்ற பேச்சில், சத்தியமாக வசந்துக்கு கோபம் வரவில்லை. மாறாக, ‘அவன் சொல்வதும் சரி தானே?’ என்ற எண்ணமே எழுந்தது.

நண்பனின் நிலை கதிருக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அவன் இப்படித்தானே ‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டு’ என்கிற ரகம்.

அப்படிப்பட்டவனிடம், “அண்ணாக்குக் கொஞ்சம் நீங்க உதவக் கூடாதா? அவருக்கு அனாமிகா அப்பாவிடம் நேரடியா பேசக் கொஞ்சம் தயக்கமா இருக்கும் போல!” என்று சொல்லும் மனைவியிடம், “இது அவர்கள் வாழ்க்கை.. அப்போ அதைப் பற்றி அவன் தானே அவரிடம் பேச வேண்டும்?” என்று சொல்லிப் பார்த்தான் கதிர்.

அதை ஒத்துக் கொள்வாளா அவன் மனைவி? அந்தப் பொருட்காட்சி உரையாடலுக்குப் பின், சிலமுறை அவர்களின் வாதத்தில் இந்த விவாதம் நடந்து இருக்கிறது.

அப்பொழுது எல்லாம் எதை எதையோ சொல்லித் தட்டிக் கழித்தவனிடம், “ஏன்.. உங்களுக்காக அனாமிகா அப்பா – அம்மா தானே என்னைப் பெண் கேட்டு வந்தார்கள். அப்போ அது மட்டும் சரியா?” என்று கேட்ட மனைவியின் பேச்சில் ஒரு நிமிடம் பேச்சற்றுப் போனான் கதிர்.

“இவளுக்கு இந்த அளவுக்குப் பேசத் தெரியுமா?” என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுதே, “அவுங்க உங்களுக்காகக் கேட்கும் பொழுது, அவுங்க பொண்ணுக்காக நீங்க இதைச் செய்ய கூடாதா?” என்ற மனைவியின் வாதத்தை உள்வாங்கியவன்,
“அவுங்க ரெண்டு பேரும் காதல் செய்றாங்க. அப்போ அவுங்க தானே பேசணும். நம்ம விஷயத்தில் அப்படியில்லையே?” என்று சொன்னதில் சட்டென்று முகம் வாடிப் போனாள் தாமரை.

முன்பு ஒருநாள் அனாமிகா இவர் தன்னை விரும்பினார் என்று சொன்னதும் சந்தோஷப்பட்டவள், அதன் பின் கணவன் அதைப் பற்றிக் கேட்கும் பொழுது, தெரியலை என்றானே தவிர ஒரேடியாக மறுக்கவில்லையே?

“ஆனால் இப்போ இவர் பேசுவதில் இருந்தே நன்றாகத் தெரிகிறது. என்னைப் பிடித்து ஒன்னும் இவர் கல்யாணம் பண்ணிக்கலை” என்று நினைத்து மனம் வாடிப் போனவள், அதன் பின் ஒரு வார்த்தை கணவனிடம் பேசாது ஒதுங்கிச் சென்று விட்டாள்.

மனைவியின் முக மாற்றத்தில் அவளின் அக எண்ணங்களைப் படிக்க முடியாதவனோ, கொஞ்சமே கொஞ்சம் தவித்துத்தான் போனான். அவளின் இந்த ஒதுக்கம் எதற்கு என்று புரியாது..

அதன்பின் வந்த நாட்களும் தாமரை அப்படியே இருக்கவும், கதிரால் அதைக் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாது, நேராக அவளிடமே சென்று, “ஏன் இப்படிச் செய்ற?” என்று கேட்டு விட்டான். அப்பொழுதும் அவளின் பதில் மழுப்பலாகவே இருந்தது.

கட்டிலில் அமர்ந்தவாக்கில் தன்னைக் கடக்க முயன்றவளின் கைப் பிடித்து நிறுத்தியிருந்தவன், அவளின் முகம் பார்த்து, “நிஜமாவே உன்னோட ஒதுக்கம் எனக்குக் கஷ்டமா இருக்கு” என்று சிறுகுழந்தையாக மாறி, அன்புக்கு ஏங்கும் பாவனையுடன் சொன்னதில் தாமரையின் நெஞ்சம் வலித்தது.

அந்நேரம் அவனைக் காணும் பொழுது அவளினுள் எழும் தாய்மை உணர்வை  உணர்ந்தவள்,  இன்முகமாக அவனின் தலை கோதி, “இனிமே  இப்படிச் செய்யலை, ஓகேவா?” என்று சொன்னதும் தான் தாமதம்!! கதிர் அவளின் வயிற்றில் முகம் புதைத்து அவளின் இடுப்பை அணைத்துக் கொண்டான், ‘என்னை விட்டு எங்கும் செல்லாதே!’ என்பதாக..

அந்த இரும்பு பிடியில் இருந்தே, எந்த அளவுக்குக் கணவனைத் தான் பாதித்து இருக்கிறோம் என்பதை, அந்த அணைப்பில் உணர்ந்து கொண்டவளுக்கு, அவனின் அந்த நேசத்தில் விழாமல் இருக்க முடியவில்லை!

அந்த நொடி சொல்ல முடியாத அளவுக்கு அவன் மீது காதல் கொண்டாள் தாமரை.

அடுத்தடுத்த நாட்களில் தாமரையே அவர்களுக்கிடையேயான அந்த வாதத்தை மறந்து இயல்பு வாழ்க்கைக்கு மாறி விட்டாள். ஆனால் ஏனோ மீண்டும் இப்படி எந்தவித நிகழ்வும் தங்களுள் ஏற்படக் கூடாது என்று எண்ணிய கதிர், அதன் பொருட்டே, இன்று ராமமூர்த்தி வீட்டினரையும் வசந்தையும் மதிய உணவுக்குச் சேர்த்தே வீட்டுக்கு வரச் சொன்னது.

கதிரைப் பொறுத்தவரை எந்த விஷயத்தையும் யாருக்காகவும் செய்யக் கூடியவன் அவன் இல்லை.

அப்படியிருந்தும் இன்று இந்த பேச்சுவார்த்தைக்கு அவன் ஏற்பாடு செய்ததற்கு முக்கிய காரணம், மனைவி எப்பொழுதும் சொல்லும் ஒரு விஷயம் தான்!

‘அதாவது “அண்ணன்… நண்பா… பிள்ளை…” என்று பேருக்கு அவர்கள் யாரும் உங்களை அழைக்கவுமில்லை, பழகவுமில்லை! அதே போல நீங்களும் அவர்களை நினைக்க ஆரம்பித்தாலே, எதற்கும், எங்கேயும் அவர்களிடம் பேசவோ, பழகவோ உங்களுக்கு எந்தவித தயக்கமும் ஏற்படாது’ என்பதே அது.

அந்த வார்த்தைகள் கதிரை அதிகமாகவே சிந்திக்க வைத்து இருந்தது. அதன் பொருட்டே, “அண்ணா அண்ணா” என்று மூச்சுக்கு முன்னூறு தடவை  தன்னைப் பாசம் பொங்க அழைக்கும் தன் தங்கையின் வாழ்வுக்கு, தான் ஒரு அண்ணனாக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய இன்று தடைகளைத் தகர்த்து எறிந்து முன்வந்து இருக்கிறான் கதிர்.

தான எண்ணியதை இன்று செயல்படுத்த  நினைத்தவன், அதை இப்பொழுது வரை மனைவியிடம் சொல்லவில்லை.

தன்னுடைய மாற்றம் கண்டு, அவளின் மீன் விழிகள், ஆகாயமாக ஆச்சரியத்திலும், அன்பிலும் விரிவதைக் காணப் பேராவல் கொண்டு இருந்தான் அவன். எங்கே வசந்த் தன்னுடைய ஆசையில் மண்ணைப் போட்டு விடுவானோ? என்று எண்ணித்தான், அவனைத் தனியாக அழைத்துச் சென்று, இன்று அவனின் காதல் குறித்துத் தான் பேசப் போவதைக் கூறி இருந்தான் கதிர்.

அதைக் கேட்டு நண்பன் சந்தோஷப்படுவான் என்று பார்த்தால், அவன் என்னவோ, சீக்கு வந்த கோழியாக பம்முவதைக் கண்டவனுக்குக் கொஞ்சம் எரிச்சல் தான் வந்தது.

பின்ன? காதல் செய்தால் எப்பவும், எங்கேயும் ஸ்டெடியாக இருக்க வேண்டாமா? என்பது கதிரின் எண்ணம்.

நண்பனின் சூடான பேச்சில் ஒருவித தெளிவையும், உறுதியையும் பெற்ற வசந்த், “அவுங்ககிட்ட பேச்சை நீ முதலில் ஆரம்பிக்கிறியா இல்லை நானே ஆரம்பிக்கவா?” என்று கேட்டான்.

அதைக் கேட்ட கதிருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. “முதலில் நான் பேசுறேன். அப்புறம் அவரே உன்கிட்ட பேசுவார். அப்போ நீ பேசுனா போதும்!” என்றதும், “சரி” என்று சொல்லி வேறு சில விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டு இருந்த சில மணி நேரங்களில், அங்கே ராமமூர்த்தி குடும்பம் வந்து சேர்ந்தனர்.

வந்தவர்களை வரவேற்று கதிர் ஹாலில் அமர வைக்கும் போது தான் அங்கே இருக்கும் வசந்தைக் கண்டார் ராமமூர்த்தி. அவருக்கு அவனை ஏற்கனவே அபிசியலாகத் தெரியும் என்ற போதும், கதிர் அளவுக்கு அதிகப் பழக்கமில்லை.

அதனால் ஒரு புன்னகையை மட்டும் அவனுக்குக் கொடுத்து விட்டு அமர்ந்தவரிடம், அவனும் பதிலுக்குப் புன்னகைத்து, “எப்படி இருக்குறீங்க சார்?” என்று கேட்டான்.

“ம்ம்ம்.. நல்லா இருக்கேன் பா” என்றவர், அவன் அங்கு இருப்பதைக் கண்டு அதிகம் சிந்திக்கவில்லை. ஏனென்றால் தங்களை விருந்துக்கு அழைத்தது போல, கதிர் அவனின் நண்பனையும் அழைத்து இருக்கான் என்றே அவர் எண்ணினார்.

வீட்டுக்குள் நுழைந்தது முதல், தனது காதலனைக் கண்ட நொடியில் இருந்தே அனாமிகாவின் இதயம் எகிறிக் குதிக்க ஆரம்பித்து விட்டது.

அதன் பொருட்டு தாமரையை நோக்கி ஓடியவள், “என்ன விஷயம்?” என்று வசந்த் குறித்து அவளின் காதில் ரகசியமாகக் கேட்க, “அவுங்களையும் சாப்பிட கூப்பிட்டு இருக்காங்க அக்கா, அவ்ளோ தான்!” என்று தாமரை தாழ்ந்த குரலில் அவளிடம் பதிலளித்துக் கொண்டு இருக்கும் பொழுதே, அங்கே இரு பைகளைத் தூக்கிக் கொண்டு வந்தார் விஜயா.

“இந்தாடா.. இதில் கொஞ்சம் பூ, பழம், ஸ்வீட் எல்லாம் இருக்கு” என்று தாமரையிடம் அதைக் கொடுக்கவும், அதை வாங்கி உள்ளே வைத்தாள் அவள்.

“காலையில் உங்க அப்பா சொன்னதில் இருந்து எனக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை தெரியுமா? நிஜமாவே அவன் தான் நம்மளைக் கூப்பிட்டானான்னு இதுவரை ஆயிரம் தடவை அவர்கிட்ட கேட்டுட்டேன்” என்று நெகிழ்ந்த குரலில் சொல்ல ஆரம்பித்தவர்..

“இவ கூட அப்படி ஒன்னும் நம்பாம நீங்க வர வேண்டாம். நாங்க மட்டும் உங்க பையன் வீட்டு விருந்துக்குப் போயிட்டு வரோம்ன்னு என்னைக் கேலி பண்ண ஆரம்பிச்சுட்டா”  என்ற பொழுது தான் தன் மகளின் முகத்தைக் கவனித்தார் விஜயா.

“என்னடி ஆச்சு?” என்றவரிடம் என்னவென்று சொல்வாள் அனாமிகா.

“லேசா தலை வலிம்மா” என்றாள் அவள்.

“இவ்ளோ நேரம் நல்லாத்தானே என்னை ஓட்டிட்டு இருந்த.. இப்போ என்ன?” என்றவர், “தைலம் எதுவும் தடவுறியா?” என்று கேட்கும் பொழுதே, “இல்ல, வேண்டாம்.. லேசா தான் இருக்கு” என்றவளிடம், “தலையைக் குளிச்சுட்டு ஒழுங்கா காயப் போடுன்னு சொன்னா, கேட்குறியா? அதான் தலை வலிக்குது போல! போ, பின்னாடி போய் உட்கார்ந்து தலையை விரித்துக் காயப் போடு!” என்றவரின் பேச்சைக் கேட்டு, ‘விட்டால் போதும்!’ என்று அங்கிருந்து சென்று விட்டாள் அனாமிகா.

“ஏதாவது வேலை இருக்காடா?” என்ற விஜயாவிடம், “எல்லாம் முடிந்ததும்மா. ரசம் மட்டும் தான் தாளிக்கணும்” என்று சொன்னவள், “நீங்க ஹாலில் இருங்கம்மா. நான் இதை வச்சுட்டு வந்துடுறேன்” என்று சொன்னதைக் கேட்டு அவரும் அங்கே சென்று கணவரின் அருகில் அமர்ந்து கொண்டார்.

சாப்பாட்டு நேரம் வரவும், அனைவரையும் அமர சொல்லி, தாமரை பரிமாற அனைத்தையும் எடுத்து வந்து  ஹாலில் வைக்கவுமே, “நான் உனக்கு ஹெல்ப் செய்றேன்” என்று மற்றவர்கள் அனைவரையும் அமர சொல்லி, கதிரும் மனைவியுடன் சேர்ந்து வந்தவர்களுக்கு உணவைப் பரிமாறினான்.

கதிரின் இந்த மாற்றங்களைக் கண்கூடாகக் காணும் போது விஜயாவுக்கும், ராமமூர்த்திக்கும் அவ்வளவு மனநிறைவாக இருந்தது. அதில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உணவு உள்ளே சென்றது அவர்களுக்கு.

காதல் ஜோடிகளோ, ஒருவரின் முகத்தை ஒருவர் நிமிர்ந்து கூடப் பார்க்காது, இலையில் வைத்தது என்ன என்று கூட அறியாது, இயந்திரமாக ஒரு வார்த்தை பேசாது உண்டு முடித்து எழுந்தனர்.

சாப்பிட்டு முடித்த விஜயா, “நீங்க ரெண்டு பேரும் உட்காருங்க. நான் பரிமாறுறேன் உங்களுக்கு” என்று சொன்னதை மறுத்தான் கதிர்.

“இல்லம்மா, கொஞ்சம் பேசணும்.. நீங்களும், அப்பாவும் கொஞ்சம் உட்காருங்க. பேசி முடிச்சுட்டு நாங்க சாப்பிடுறோம்” என்றவனின் பேச்சை மீற முடியாது என்பதை விட, அவன் அழைத்த அப்பா – அம்மாவில் நெகிழ்ந்தவர், “என்ன சொல்லுப்பா!” என்றவாறு கணவருடன் சேர்ந்து சோபாவில் அமர்ந்து கொண்டார்.

கிட்டத்தட்ட ராமமூர்த்தியின் நிலையும் மனைவியின் நிலை தான் என்பதால், அவரும் எந்தக் கேள்வியும் எழுப்பாது கதிர் சொல்படி செய்தார்.

அனாமிகாவுக்குத்தான் வேர்த்து விறுவிறுத்தது, ‘என்ன பேசப் போகிறார்?’ என்ற எண்ணத்தில்..

அவர்களுக்கு எதிர் இருக்கையில் வசந்துடன் வந்தமர்ந்த கதிர், எதையும் சுற்றி வளைக்காமல், நேரடியாக அனாமிகா – வசந்த் காதல் விஷயத்தைச் சபையில் போட்டு உடைத்தான்.

அதைக் கேட்ட பெரியவர்களுக்கு அதிர்ச்சி! விஜயா மகளைப் பார்த்தார், “என்னடி இது?” என்பது போல.. அவளோ தலை கவிழ்ந்து கொண்டாள்.

“இப்போ நீ எதுக்குத் தலை குனியுற?” என்று அனாமிகாவின் செயலைப் பார்த்துக் கேட்டான் கதிர்.

“நீ தலை குனியுற மாதிரி எதுவும் செய்யலை. சோ தலையை நிமிர்த்தி அம்மாவுக்குப் பதில் சொல்!” என்றான், ஒரு அண்ணனாகத் தங்கையிடம்.. அதைக் கேட்டவளுக்கு என்ன தோன்றியதோ? தலை நிமிர்ந்து அன்னையிடம், “ஆமா, நான் அவரைக் காதலிக்கிறேன்” என்றாள் அனாமிகா முன்பு இல்லாத துணிவுடன்.

அதைக் கேட்டு அனாமிகாவை ஒரு மெச்சும் பார்வை கதிர் பார்த்து விட்டு, ராமமூர்த்தியின் புறம் திரும்பி, வசந்த் பற்றி நல்லவிதமாகச் சொன்னவன், தன் நண்பனின் பின்புலம் பற்றியும் சொல்லி முடித்தான்.

“கல்யாணம் பண்ணிக்கிட்டா நிஜமா ரெண்டு பேரும் நல்லா வாழ்வாங்ன்னு எனக்குத் தோணினதுனால தான், இவுங்க காதல் தெரிந்தும், நான் அதிகம் எதிர்க்கவில்லை. உங்ககிட்டயும் இப்போ இதைப் பத்திப் பேசிட்டு இருக்கேன்.

ஆனா இதுல இறுதி முடிவு எடுக்கக் கூடிய அதிகாரம் பெத்தவங்களான உங்ககிட்ட மட்டும் தான் இருக்கு!” என்றவனின் பேச்சை அவசரப்படாது ஆழ்ந்து கேட்டு முடித்த ராமமூர்த்தி,

“சட்டுன்னு முடிவெடுக்கக் கூடிய விஷயம் இது இல்லைன்னு உனக்கே தெரியும். அதனால எனக்குக் கொஞ்சம் டைம் தேவைப்படுது. நான் யோசிச்சு எங்க முடிவைச் சொல்றேன்” என்றவரிடம்,  முதல் முறையாக வாய் திறந்து, தன் காதலுக்காக, தன் காதலிக்காகப் பேசினான் வசந்த்.

“உங்க பெண்ணைச் சும்மா டைம் பாசுக்காகவோ, இல்ல வயது கோளாறிலோ நான் லவ் பண்ணலை அங்கிள். அவள் தான் எனக்கு ஏற்றவள்னு எனக்குத் தோணுனதுனால தான், அவுங்களை லவ் பண்ணினேன்.

முதல்ல உங்க பொண்ணு ஒத்துக்கவே இல்லை அங்கிள். நான் தான் அவுங்களை அதிகமா பின்னாடியே சுத்தி, கன்வின்ஸ் பண்ணி, லவ் பண்ண வச்சேன். அதனால பெண்ணை ஒழுங்கா வளர்க்கலைன்னு மட்டும் நீங்க எப்பவும் நினைச்சுடாதீங்க!” என்றவனின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த விஜயாவுக்கு, அந்தக் கடைசி வார்த்தைகளைக் கேட்ட நொடியே, ஒரு தாயாக, தன் மகளின் வளர்ப்பை நினைத்துத் தன்னைப் பெருமைப்பட  வைத்தவனை மிகவும் பிடித்துப் போனது.

“லவ் பண்ணி இருக்கோமே தவிர, இதுவரை எந்தவித எல்லைக்கோட்டையும் நாங்க தாண்டினதும் இல்லை. ஒரு நொடி கூடத் தாண்ட நினைச்சதும் இல்லை அங்கிள். இது என் அம்மா மேல சத்தியம்!” என்றவன், இறுதியாக, “உங்க பெண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுங்க அங்கிள். நாங்க சந்தோஷமா வாழ்வோம்” என்று ஆத்மார்த்தமாகச் சொல்லி முடித்தான்.

எந்தவித சினிமா டயலாக்குகள் இல்லாது, அப்படி இப்படி என்று ஏக வசனம் பேசாது,  ‘நாங்கள் சந்தோஷமா வாழ எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கள்!’ என்றானே, அந்த வார்த்தைகளிலேயே ராமமூர்த்திக்கு வசந்தின் மீது ஒரு மதிப்பு வந்தது.

“பரவாயில்ல  தம்பி! உனக்கு இப்பவே கல்யாணம் பண்ணிக்குற எல்லா தகுதியும் வந்திடுச்சு” என்றவரின் பேச்சு புரியாது பார்த்திருந்தவனிடம், “இப்போ என் பொண்ணுக்கு இப்படி வக்காலத்து வாங்கிப் பேசுறியே, அதைச் சொன்னேன்” என்றவரின் பேச்சில் வசந்த் அசடு வழிந்தான் என்றால், அனாமிகாவோ வெட்கிப் புன்னகைத்தாள்.

“ஒரு நல்ல நாள் பார்த்து, உங்க அப்பா – அம்மாவை வீட்டுக்குப் பொண்ணு கேட்டு வரச் சொல்லுங்க” என்றவரின் முடிவில் அங்கிருந்த அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி!!

அனாமிகாவுக்கு சந்தோஷத்தில் நெஞ்சமே வெடித்து விடும் போல இருந்ததில், அவள் துள்ளிக் குதித்துக் கொண்டு தாமரையைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள்.

பின்ன? அவளால் தானே இத்தனை நாள் பெயரளவில் அண்ணனாக இருந்தவன், இன்று உண்மையான அண்ணனாக மாறி, ‘என் வாழ்வுக்காக இந்த அளவு பேசி இருக்கிறான்’ என்றும், அந்த உற்சாகம் கொடுக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை என்று எண்ணியவளின் கைவளைவில் சிக்கிப் புன்னகைத்துக் கொண்டு இருந்தவளின் கண்களோ, கணவனிடம்  மட்டுமே சிறைப்பட்டு இருந்தது அதிக வியப்புடன்.

அந்தச் சிறையில் வேண்டி விரும்பி மாட்டிக் கொண்டு இருந்தவனுக்கு, அதில் இருந்து மீள விருப்பமில்லை என்றாலும், மனைவியின் அசரடிக்கும் பார்வை காட்டிய மாயாஜாலங்களில் தனக்குள் எழும் உணர்வுகளில் தடுமாறிக் கொண்டு இருந்தான் கதிர்.

“சரிப்பா, அப்போ நாங்க கிளம்புறோம்” என்ற ராமமூர்த்தியின் பேச்சைக் கேட்டவன், அதற்குப் பதிலளிக்கும் முன் முந்திக் கொண்டு பேசிய தாமரை,

“எவ்ளோ பெரிய நல்ல விஷயம் பேசி இருக்கோம். ஸ்வீட் சாப்பிடாமல் யாரும் இங்கே இருந்து கிளம்ப கூடாது. எல்லாரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவனிங் போலக் கிளம்பலாம், சரியா?” என்றவளின் பேச்சைக் கேட்ட பெண்களுக்கு அங்கே இருக்கவே எண்ணம் தோன்றியதால், உடனே ‘சரி’ என்று சொல்லி விட்டனர் அவர்கள். வேறுவழியின்றி ஆண்களும் அதையே ஆமோதித்தனர்.

காலையில் விட்டதை வட்டியும் முதலுமாக இப்பவே மனைவியிடம் வசூலிக்கத் திட்டமிட்டு இருந்தவனின் எண்ணத்தில், அவனின் மனைவி இப்படி ஒரு லாரி மண்ணைப் போடுவாள் என்று நினைத்தானா என்ன? அதை அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்த நேரம், வேண்டுமென்றே தாமரையின் முந்தானையில் கைத் துடைத்து, அதை விடுவிக்காது ஏக்கப் பார்வையை மனைவியின் மீது வீசியவனின் வீச்சை எதிர்கொண்டவளுக்கோ, இதயம் தடுமாறி தறிகெட்டு ஓடியது.

கணவனின் மயக்கும் பார்வையில் அவனில் கிறங்கிப் போனவளை விஜயா எதற்கோ அழைக்கவும், “நான் போகணும்” என்றாள் உள்ளே போன தடுமாற்ற குரலில்.

சமையல் அறை மறைவில் இருந்ததால், இங்கே நடக்கும் ஓரங்க நாடகத்தை மற்றவர் அறிந்திருக்கவில்லை.

“போ!” என்று மனைவியின் முந்தானையை விடுவித்தவனின் பார்வையிலோ, அப்பட்டமான தாபத்தைக் கண்டவளுக்குள் அடித்த சிலிர்ப்பு அலைகளின் வேகம் தாங்காது, பெண்ணவளின் தேகம் முழுவதும் சில்லிட்டுப் போனது.

அதன்பின் யார் யார் தன்னிடம் என்ன என்ன பேசினார்கள், தான் அவர்களுக்கு என்ன என்ன பதிலுரைத்தோம் என்று கேட்டால் சத்தியமாகத் தாமரைக்கு எதுவுமே தெரியாது.

அந்த அளவிற்குக் கணவனின் அவ்வப்போது சுண்டி இழுக்கும் பார்வையிலும், உயிரைக் கரைக்கும் சிறு உரசல்களிலும் அதிகம் திண்டாடிக் கொண்டு இருந்தாள் அவள்.

மாலை கேசரி, பஜ்ஜி சாப்பிட்டு, இரவு டிபனையும் அங்கே முடித்து, அனைவரும் அவரவர் வீடு கிளம்பிச் சென்ற பின் தான், தாமரை – கதிருக்கு இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்திற்கான முடிவும் நெருங்கியது.

அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற மனதின் ஆர்ப்பரிப்பிலேயே தாமரைக்கு மயக்கம் வருவது போல இருந்தது. ஆனால் எவ்வளவு நேரம் தான் கணவனிடம் சிக்காமல், அவளால் போக்குக் காட்டிக் கொண்டு இருக்க முடியும்?

எதை நினைத்து அவ்வளவு நேரமும் பயந்து நடுங்கி ஒரு மாதிரி திணறிக் கொண்டு இருந்தாளோ, அதெல்லாம் வீண் என்பது போல இருந்தது, கதிரின் அடுத்தடுத்த சொற்களும் செயல்களும்..

அதில் தாமரையின் மனதில் இன்னும் ஆழமாகக் கதிர் தன் காதல் தடத்தைப் பதித்திருந்தான்.

Advertisement