Advertisement

17

அன்று அலுவலகத்திற்குக் கதிரவன் கிளம்பிக் கொண்டு கொண்டு இருக்க, அவனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று அவனையே ஒருவித எதிர்பார்ப்பு மிகு பார்வையுடன் வட்டமடித்துக் கொண்டு இருந்தாள் தாமரை.

மனைவி இப்படித் தன்னைக் குட்டி போட்ட பூனை போலச் சுற்றி சுற்றி வருவதை மிகவும் விரும்பினான் கதிர். அதனாலேயே மனைவியின் சுற்றலுக்கான காரணம் தெரிந்தும், அவளைக் கண்டும் காணாதவனாக ஏய்த்துக் கொண்டு இருந்தான் அவன்.

ஒருநிலைக்கு மேல் “என்ன இப்படிப் பண்ணுறாங்க?” என்று நினைத்துப் பொருமிய தாமரை சோர்ந்து போய் நின்ற நேரம், அவளின் போன் அலறியது.

அதை எடுத்து அவள் காதுக்குக் கொடுக்கவும், “என்னாச்சு? ஓகே சொல்லிட்டாரா அண்ணா?” என்று அந்தப்புறம் கேட்ட அனாமிகாவிடம்  பெருமூச்சு விட்டுக் கொண்டு, “இல்ல, இன்னும் எதுவும் சொல்லலை” என்று ஸ்ருதி இறங்கிய குரலில் சொன்னாள் தாமரை.

அதைக் கேட்டு “நீ விஷயத்தைச் சொல்லிட்டியா இல்லையா?” என்று அனாமிகா கேட்டாள்.

“நேத்து நைட்டே நாளைக்குப் பொருட்காட்சி போகலாம்ன்னு நீங்க  கூப்பிட்டதா சொன்னேன். ஓஹ்ஹ அப்படியான்னு சொன்னாங்களே தவிர வேற எதுவும் சொல்லலை. இப்போ வரை ஏதாவது சொல்ல மாட்டாங்களான்னு அவுங்க பின்னாடியே தான் சுத்திட்டு இருக்கேன் தெரியுமா? ஆனா ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்க” என்றவளின் பேச்சைக் கேட்டவளுக்குள்ளோ, ‘நேத்தே வசந்த் அண்ணாவின் காலில் விழாத குறையா பேசி வெளியே போக சம்மதம் வாங்கிட்டதா தானே சொன்னான். அப்புறம் ஏன் அண்ணா இப்படிப் பண்றாங்க?” என்று அமைதியாகிச் சிந்திக்கும் பொழுதே, “அக்கா இருக்கீங்களா?” என்று அழைத்திருந்தாள் தாமரை. 

“ஹா.. இருக்கேன்” என்று பதிலளித்தவள், “சரி சரி! நீ ஒன்னும் டென்ஷன் ஆகாத.. நானே அண்ணாக்கு போன் பண்ணுறேன்” என்று சொல்லி வைத்தவள், உடனே அதில் கதிரவனைக் கூப்பிட்டாள்.

சற்று முன் இருவரின் உரையாடல்களுமே லேசாக காதில் விழுந்திருந்ததால், அனாமிகாவின் அழைப்பைப் பார்க்கவுமே, “உன் வேலையா இது?” என்பது போல மனைவியைப் பார்த்தான் கதிர்.

அதில் “போச்சு!!” என்று அலறாத குறையாக, என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாது, சமையலறைக்குச் சென்று ஓடாத மிக்சியை ஓட்ட முயற்சித்துக் கொண்டு இருந்தாள் தாமரை.

அவளின்  செயலைக் கண்டு உள்ளுக்குள் நகைத்தபடி, அவளை நோக்கி போனில் பேசியபடியே சென்றவன், மிக்ஸியின் ஸ்விட்சை ஆன் செய்ய,  சடாரென அது ஓட ஆரம்பித்ததில் திகைத்த தாமரை, “யம்மா!!” என்று அலற ஆரம்பிக்கவும், உடனே அதன் பட்டனை ஆப் செய்தான் கதிரவன்.

தாமரையின் கத்தலைக் கேட்ட அனாமிகா, “என்னாச்சு?” என்று போனில் கேட்க, “ஒண்ணுமில்லை.. நட்டு ஒன்னு கழன்றுடுச்சு” என்று ஒரு மார்க்கமாக மனைவியைப் பார்த்தபடி கதிரவன் நக்கலாகச் சொல்லவும், தாமரைக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. பின்னே? சுவிட்சே போடாமல் அவ்வளவு நேரம் மிக்சி ஏன் ஓடவில்லை என்று அதைப் போட்டு ஆட்டிக் கொண்டு அல்லவா அவள் இருந்தாள்?

நெருக்கமாகத் தீண்டிய கணவனின் மூச்சுக் காற்றில் இருந்தே, தான் கொஞ்சம் அசைந்தாலும், தனக்குப் பின்னிருப்பவனிடம் உரச வேண்டி வருமென்ற எண்ணத்தில், சமையல் மேடையைப் பல்லியாக இன்னும் அதிகமாக ஒட்டிக் கொண்டு நின்றாள் தாமரை.

சாவகாசமாக அனாமிகாவிடம் பேசி போனை வைத்த கதிர், முதுகு காட்டி நின்று இருந்த மனைவியிடம், “உனக்குப் போக விருப்பமா?” என்று கேட்டான்.

ஏற்கனவே படபடப்பில் உறைந்து போய் இருந்தவளுக்கு, அவளின் காதருகில் கேட்ட கணவனின் வார்த்தைகளில் உணர்வு மின்னல்கள் உள்ளுக்குள் தெறிக்க ஆரம்பித்ததில், மிக்சியை இன்னமும் இறுக்கமாக பற்றிக் கொண்டு ஊமையாகிப் போனாள்.

“ஏதாவது சொல்லு!” என்றவனின் நெருக்கம் அதிகரித்ததில், மேடையின் இடதுபக்கமாகச் சடாரென விலக முயன்று திரும்பியவளின் முகம் குங்குமமாய் சிவந்து, மாலை நேரத்து ரோஜாவாகத் தலை கவிழ்ந்திருந்தவளைக் கண்டவனின் பார்வை இம்மி கூட அசையவில்லை.

மனைவியை விழி கொண்டு விழுங்கியபடியே மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான் கதிரவன், “உனக்குப் போக விருப்பமா?” என்று.. தான் பதில் சொல்லாது கணவன் இங்கிருந்து நகர போவதில்லை என்று அறிந்தவள், காற்றில் ஆடும் நாணலாக மேலும் கீழும் தலை அசைத்து, “ம்ம்ம்..” என்று சொன்னாள்.

சில நிமிடங்கள் அமைதியாக மனைவியை உள்வாங்கியபடி நின்றிருந்தவனிடமிருந்து எந்தவொரு பிரதிபலிப்பும் வெளிப்படாததில், பூ மலர்வது போன்று, மிக நிதானமாகத் தலையை நிமிர்த்திக் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள் தாமரை.

மனைவியின் விழி தூண்டிலில் சிக்கியவன், அதில் இருந்து தப்பிக்க விரும்பாது, “எனக்கு இன்னைக்கு ஆபீசில் கொஞ்சம் வேலை இருக்கு. அனாமிகா வந்து உன்னைக் கூட்டிட்டுப் போவா. அவ கூடப் பத்திரமா போயிட்டு வா!” என்று மட்டும் சொல்லி விட்டு அங்கிருந்து நகர முயன்றான்.

“வேலை எப்போ முடியும்?” என்று அவசர அவசரமாகக் கேட்ட மனைவியின் குரலில் நின்றவன், அவளை ஆவலாகத் திரும்பிப் பார்த்து “ஏன்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.

“இல்ல.. சீக்கிரம் முடிந்தால் நீங்களும் வரலாமே? அதான்..” என்று இழுத்துச் சொன்னவளின் பேச்சில் இருந்து, ‘உன்னை விட்டுச் செல்ல மனமில்லை’ என்ற அர்த்தம் மறைந்து இருப்பதை உணர்ந்தவனுக்கோ,  ஜில்லென்று சாரல் அடிக்க ஆரம்பித்து இருந்தது. அதை முகத்தில் காட்டி, “முடிந்தால் ஈவனிங் வரப் பார்க்கிறேன்” என்றான் கதிர்.

அதுவே தாமரையை அதிக உற்சாகமடையப் போதுமானதாக இருந்ததால், சரி என்பதாகத் தலையசைத்து விட்டுத் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள் அவள்.

காலை உணவு முடித்து ஆபீஸ் கிளம்பியவனை வழியனுப்ப கையில் மதிய உணவு பேக்குடன் வந்தவள், அதை அவனிடம் கொடுக்கவும், அதை வாங்கிக் கொண்டு, தன் பர்சில் இருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்து மனைவியிடம் கொடுத்தவன், “செலவுக்கு வச்சுக்கோ!” என்றான்.

அதோட சேர்த்து, “கவனம்! போயிட்டு வா!” என்று அக்கறை குரலில் சொல்லிக் கிளம்பியவனின் வார்த்தைகளில் இதயம் நெஞ்சுக்குழி வரை சென்று தாமரையைக் குதூகலிக்க வைத்திருந்தது.

மாலையில் தான் பொருட்காட்சி செல்ல வேண்டும் என்பதால், நிதானமாக மற்ற வீட்டு வேலைகளைச் செய்து முடித்தவள், மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கமும் போட்டு எழுந்த பின்பே, பொருட்காட்சி செல்ல ஆயத்தமானாள்.

அவள் தாயராகி முடிக்கவும், அனாமிகா அவளைத் தேடி அவள் வீடு வரவும் சரியாக இருக்க, இருவரும் சேர்ந்து மலையடிவாரம் நோக்கிப் பயணப்பட்டனர்.

அங்கிருந்து பொருட்காட்சி நடக்கும் இடத்தை நோக்கி இருவரும் பேசியபடியே நடை பயில ஆரம்பித்த நேரம், தாமரையின் போன் அலறியது.

“அவரா இருக்குமோ?” என்ற துள்ளலுடன் அதை எடுத்துப் பார்த்தவளுக்கு முகம் மின்னியது.

கணவனின் அழைப்பை போனின் திரையில் கண்டவள், அதை உடனே எடுத்துக் காதுக்குக் கொடுத்த நேரம், பொருட்காட்சிக்குச் செல்ல ரோட்டைக் கடந்து மறுபுறம் செல்ல வேண்டும் என்பதால், அனாமிகா தாமரையின் கையைப் பற்றி சிக்னல் திரையைப் பார்த்தபடி நின்று கொண்டாள்.

“எங்கே இருக்க?” என்ற கணவனிடம் தான் இருக்குமிடம் தாமரை சொன்னாள்.

அதைக் கேட்டு அவளுக்கு நேர் எதிரே ரோட்டுக்கு மறுபுறம் பொருட்காட்சியின் நுழைவாயிலில், கையில் டிக்கெட்டுடன் நின்று கதிரவன் திரும்பி ரோட்டைப் பார்த்தான்.

தான் இருக்குமிடம் பற்றிக் கதிரவன் சொல்லவும், ரோட்டின் மறுபுறம் பார்த்தவள், அங்கே தன்னைக் கண்களால் தேடும் கணவனைக் கண்டுகொண்டவளுக்குச் சந்தோசம் கரைபுரண்டதில், “இங்கே.. இங்கே..” என்று அனாமிகாவிடம் மாட்டியிருந்த தன் கையை உருவி கொண்டு, கைத் தூக்கித் தான் இருக்குமிடம் மறந்து கையாட்டியவளைக் கண்டுகொண்டவனின் இதழ்கள் தானாகப் புன்னகை பூத்தது.

எப்பொழுதுடா சிக்னல் மாறும்? கணவனிடம் ஓடிச் செல்வோமென்று பரபரத்துக் கொண்டு இருந்தவளுக்கு, சாப விமோசனம் கிடைத்தது போல, சிக்னல் பச்சை விளக்குக்கு மாறியது. உடனே வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக, அனாமிகாவை மறந்து, உற்சாகத்துடன் கணவனை நோக்கி ஓட ஆரம்பித்தாள் தாமரை.

அவள் நேரமோ என்னமோ, அதுவரை அவ்வளவாக வாகனம் செல்லாத அந்த ரோட்டில், கடைசி நேரத்தில் ரோட்டைக் கடக்கும் பிரகஸ்பதி ஒருவன், சிக்னல் மாறியதை கூடக் கண்டுகொள்ளாமல் அதிவேகமாகத் தன் லோடு வண்டியுடன் ரோட்டைக் கடக்க.. கணவனை மட்டுமே கண்ணில் கொண்டு ஓடி வந்து கொண்டு இருந்தவளோ, அதைக் கவனிக்காது  ஓடிக் கொண்டு இருந்தாள்.

மனைவியையும், அவளை இடிக்கும்படி மறுபுறம் வேகமாக வரும் லோடு வண்டியையும் கண்ட கதிரவனுக்கு நடக்கப் போகும் விபரீதம் புரிந்து,  இதயமே நின்று விட்டது. “தாமரை!!” என்று அவன் உயிர் போகும் வலியுடன் கத்தியபடி மனைவியை நோக்கி ஓடி வரும் முன்பே, கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்தில், “அம்மா!!” என்ற அலறலுடன் கீழே சரிந்து இருந்தாள் தாமரை.

அந்த இறுதி அலறலைத் தவிர வேறு எதுவும் கேட்காது, அப்படியே சுற்றும் பூமி சுற்றாது போனது போல, சிலையாகிப் போய், பாதி வழியில் நின்ற கதிர் கண்டது, பூற்றீசல் போல விபத்து நடந்த இடத்தில் கூடிய கூட்டத்தை மட்டுமே.

ஒரு அடி எடுத்து வைக்கவே நெஞ்சம் நடுங்க, மரண பயத்தில் கண்கள் தள்ளாட நின்று இருந்தவனை, அவனுக்குப் பின் ஓடி வந்த வசந்த் தான் பிடித்து இழுத்துக் கொண்டு ரோட்டைக் கடக்கச் செய்து இருந்தான்.

நண்பன் தன்னைத் தொடவுமே தன்னிலை அடைந்த கதிரவன், சட்டென்று ஓடி கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே சென்று பார்த்தது, அனாமிகாவின் கைகளில் கோழிக்குஞ்சாக அடைக்கலமாகி, நடுநடுங்கிக் கொண்டு இருந்த தன் மனைவியைத்தான்!!

விபத்தின் வீரியத்தில் அதிர்ந்து போய் இருந்த மனைவியைத் தலை முதல் கால் வரை முதலில் ஆராய்ந்தவனுக்கு, அவளுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்த போதும், அதை நம்பாது தவித்துப் போய், நடுரோட்டில் மண்டியிட்டு அமர்ந்து, தாமரையை அனாமிகாவிடம் இருந்து பிடுங்காத குறையாகப் பிடித்து இழுத்துத் தனக்குள் அவளை முழுவதுமாக அரவணைத்துக் கொண்டான்.

அவனின் நிலை புரிந்த அனாமிகாவும் சுற்றி இருந்த கூட்டத்திடம், “ஒன்றுமில்லை, அவுங்க ஓகே தான்.. ஓகே தான்..” என்று சொல்லிப் புரிய வைக்கவும், கூடிய கூட்டம் இருந்த இடம் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து செல்ல ஆரம்பித்தது.

போகிற போக்கில் அந்த வண்டிக்காரனைச் சிலர்  திட்டினர் என்றாலும், வசந்த் ஒரு படி மேலே சென்று, “என்னடா வண்டி ஓட்டுற” என்று அவனை அடிக்கவே சென்று விட்டான்

அனாமிகா தான் அவனைத் தடுத்து நிறுத்தி இருந்தது மட்டுமில்லாது, தன் தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்டவனைத் தூக்கிலா போட முடியும்? என்று எண்ணியவள், தவறு அவன் மீது மட்டுமே இல்லையே? என்ற நினைப்பில், அவனை எச்சரித்து வசந்திடமிருந்து விடுவித்து அனுப்பி வைத்தாள்.

“அவனை எல்லாம் சும்மா விடக் கூடாது!” என்று அவன் சென்ற பின்னும் எகிறிய வசந்திடம், “அவன் சிக்னல் விழும் போதே பாதி தூரம் வந்துட்டான். பின்னாடி போகவும் முடியாது என்பதால் தான் முன்னாடி கடக்க நினைத்தான். ஆனால் அதுக்குள்ள தாமரை இப்படிக் குறுக்க ஓடி வருவான்னு அவனும் நினைத்து இருக்க மாட்டான் தானே? அதனால தான் சொல்றேன், இதை இத்தோடு விடு!” என்றவளின் விளக்கம்  புரிந்தவனும், அதற்கு மேல் தர்க்கம் செய்யாமல் நண்பனை நோக்கி நடையைப் போட்டான்.

இன்னமும் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்திராத மனைவியைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்தவன், “உனக்கு ஒன்னும் ஆகலையே?” என்று அவளின் கை, கால், மண்டை, முகமென்று ஒவ்வொன்றையும் தொட்டு திருப்பிக் கேட்டுக் கொண்டு இருந்தான்.

கணவனின் பதட்டம் புரிந்தவளும் தன்னை முயன்று நிலைப்படுத்திக் கொண்டு, “இல்ல, எனக்கு ஒன்னும் ஆகலை” என்று நூறாவது முறையாகக் கணவனிடம் சொன்ன போதும், அதைக் கேட்காது தவித்தவனின் முகத்தைத் தன் கைக் கொண்டு தாங்கியவள்,

“நிஜமாவே எனக்கு ஒண்ணுமில்லைங்க!” என்று தீர்க்கமாக அவனைப் பார்த்து சொன்ன நொடி, கலங்கியவனின் பார்வை தவிப்பு தாங்காதவளாக, இப்பொழுது தானாகவே கணவனின் நெஞ்சத்தில் போய் மஞ்சம் கொண்டாள் தாமரை.

‘ஏன் அவனைக் கட்டிக் கொண்டோம்?’ என்று அவளிடம் கேள்வியுமில்லை! ‘ஏன் அவளை இப்படி இறுக்கிக் கொண்டு இருக்கிறோம்?’ என்பதற்கான பதிலும் அவனிடமில்லை!!

எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்களோ, வசந்தின் அழைப்பில் தன்னிலை அடைந்து எழுந்து நின்ற கதிரவன், மனைவியையும் தன்னுடனே விலக விடாது நிறுத்திக் கொண்டான். அதற்கு மேல் பொருட்காட்சி செல்லும் எண்ணம் துளியும் இல்லாதவனாக, “நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க. நான் இவளைக் கூட்டிட்டுக் கிளம்புறேன்” என்றான்.

அதைக் கேட்டு, “நீங்க இல்லாம நாங்களும் போகலை” என்று சொன்னாள் அனாமிகா. அதோடு விடாது, “சரி வாங்க, எல்லாருமே வீட்டுக்குக் கிளம்பலாம்” என்று அவள் சொல்லித் திரும்பிய நேரம், தாமரை தான்,  “இவ்ளோ தூரம் வந்துட்டு..” என்று ஆரம்பித்தாள். ஆனால் அதைக் கேட்டு கணவன் அவளை அதிகமாக முறைக்கவும், மீதியைச் சொல்லாது தலை தாழ்த்திக் கொண்டாள்.

மனைவியின் பேச்சைக் கேட்டு, ‘இங்கே என்ன நடந்து இருக்கு? நான் எவ்ளோ பயந்து போய் இருக்கேன்!! ஆனா இவளுக்குக் கொஞ்சமாவது அதைப் பத்தி கவலை இருக்கா பாரேன்?” என்று நினைத்தவன், இன்னமும் அவளை முறைத்துக் கொண்டு தான் இருந்தான்.

ஆனால் அவளோ அவனைக் கெஞ்சும் பார்வை பார்த்து வைத்தாள். அதில் பனியாக உருகியவன் நிமிர்ந்து வசந்தைப் பார்த்தான், “நீ என்ன சொல்ற?” என்ற விதமாக.. அவனும் தாமரையின் பேச்சுக்கு ஒத்து ஊதவும், ‘சரி’ என்று வேறுவழியின்றி நால்வரும் பொருட்காட்சி நோக்கிச் சென்றனர்.

உள்ளே போன சிறிது நேரத்திலேயே, மற்றவர்களுடன் சேர்ந்து பேசி, சிரித்து, இயல்பு நிலைக்கு கதிரவன் மாறி இருந்தாலும், அவன் பற்றி இருந்த மனைவியின் கைகளை மட்டும் அவன் சிறிதும் விடுவித்த பாடு இல்லை.

அங்கே இங்கே என்று அனாமிகாவுடன் ரங்கராட்டினம், ஐஸ்க்ரீம் வாங்க, பஜ்ஜி கடை செல்ல என்று தாமரை கணவனின் கையை விடுவிக்க முயன்ற போது எல்லாம், இன்னும் அழுத்தமாக அவளின் கையைத் தனக்குள் அடக்கிக் கொண்டு, அவளை அங்கு எல்லாம் அழைத்துச் சென்றான். ஒரு நொடி கூட அவளைத் தன்னை விட்டு விலக அனுமதிக்கவேயில்லை!!

கணவனின் அடக்குமுறையில், “என்ன இப்படிப் பண்றாங்க? மத்தவங்க என்ன நினைப்பாங்க?” என்று தாமரை கொஞ்சம் ஒதுங்கிச் செல்ல துணிந்த போதும், ‘யார் வேணா எப்படி வேணா நினைத்துக்கட்டும். எனக்கு அது பற்றிக் கவலையில்லை!” என்ற ரீதியில் தான் இருந்தது, கதிரின் ஒவ்வொரு செயலும் சொல்லும்.

வசந்த் – அனாமிகாவிற்கு கூடக் கதிரின் இந்த வெளிப்படையான நேசம் பார்த்து பெருத்த ஆச்சரியமே!

ஒருவழியாக கால்கள் ஓய, உடல் அசர, அந்த இடம் முழுவதும் சுற்றித் திரிந்து முடித்தவர்கள், ஓய்ந்து போய் ஒன்பது மணி அளவில் வீட்டுக்குக் கிளம்பினர்.

விஜயாவுக்குப் போன் செய்து, தானே அனாமிகாவை வீட்டில் கொண்டு வந்து விடுவதாகக் கதிரவன் மாலையே சொல்லி இருந்ததால், அவரும் நேரம் கடந்த போதும், எந்தவித பயமுமின்றியே இருந்தார்.

இரவு உணவை அங்கயே முடித்து கிளம்பியவர்களின் அரட்டை வீடு வந்து சேரும் வரை ஓயவே இல்லை. அதில் முக்கியமான விஷயமாக, அனாமிகா – வசந்த் காதல் மற்றும் கல்யாணப் போராட்டங்கள் குறித்த கேலி, கிண்டல்கள் தான் அதிகமாக இருந்தது.

“ஏன் அண்ணா.. இன்னும் அக்காவைக் பெண் கேட்காமல் இருக்கீங்க? சீக்கிரம் நீங்களும் கல்யாணம் பண்ணிக்கலாம்ல?” என்ற தாமரையின் பேச்சைக் கேட்ட வசந்த்,

“நானாம்மா மாட்டேன்னு சொல்றேன். எங்கே? எனக்கு வாய்ச்சதும் சரியில்லை, வந்ததும் சரியில்லை!” என்று மற்ற இருவர்களையும் மறைமுகமாகத் தாக்கியவன் பேச்சு புரியாதவள், “புரியலையே அண்ணா?” என்றாள் அப்பாவியாகத் தாமரை.

அதைக் கேட்டு, “இப்போ இது ரொம்ப முக்கியம்!” என்று குதர்க்கமாக மனைவியிடன் சொன்னான் கதிர்.

“பின்ன இல்லையா? எவ்ளோ நாள் தான் எங்க அண்ணன் இப்படியே உங்க தங்கச்சிக்காக காத்துட்டு இருக்க முடியும்?” என்று வசந்தின் அன்பில், அவனின் தங்கை பாசத்தில் உருகி போயிருந்தவள், அவனுக்காக ‘அதெப்படி நீங்க அப்படிச் சொல்லலாம்?’ என்று கணவனிடம் மல்லுக்கட்டாத குறையாகக் கேட்டாள்.

அந்தப் பாசமலர் பேச்சில் அவளைத் திரும்பிப் பார்த்தானே தவிர கதிர் அவளிடம்  ஒன்றும் சொல்லவில்லை.

ஆனால், “தெய்வமே! இவ்ளோ நாள் எங்கே இருந்த தெய்வமே!?” என்று தாமரையைக் கையெடுத்துக் கும்பிடு போட்டுக் கேட்ட வசந்தின் செய்கையைக் கண்டு, அனாமிகா சிரித்தே விட்டாள். தாமரையோ, “ஐயோ அண்ணா! ஏன் இப்படிப் பண்ணுறீங்க?” என்று திரும்பி அவனின் கையை கீழே இறக்கி விட்டவள், “உங்களுக்கு  எங்க  அண்ணா மீது அன்பே இல்ல அக்கா. இல்லைன்னா இப்படி அவரைப் பார்த்துச் சிரிக்குறீங்க? பாருங்க.. எங்க அண்ணா எப்படிக் கஷ்டப்படுறார்!!” என்று வசந்தைக் காட்டிச் சொன்னாள்.

“யாரு? இவனா?” என்ற அனாமிகா..

“இவன் மேல அன்பு இல்லாம தான், இவ்ளோ நாளா எங்க வீட்ல வர சம்பந்தத்தை எல்லாம் அதையும் இதையும் சொல்லித் தட்டிக் கழிச்சுட்டு இருக்கேனா?” என்றாள்.

மேலும், “இங்கே பாரு.. நான் ஒன்னும் உங்க அண்ணனை வந்து பொண்ணு கேட்காதீங்க, என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்காதீங்கன்னு சொல்லலையே?” என்று சூடாகச் சொன்னதைக் கேட்டு குழம்பிப் போன தாமரை, “என்ன அண்ணா சொல்றாங்க?” என்று வசந்தைத்தான் பார்த்து வைத்தாள்.

“அங்கே ஏன் பார்க்குற..? இங்கே பாரு!” என்று தன்னை நோக்கி அவளைத் திரும்ப வைத்த அனாமிகா, “லவ் பண்ணுற பொண்ணைப் பெண் கேட்டுப் போறதுக்கும், அதே பொண்ணை எவ்ளோ போராட்டம் வந்தாலும் எதிர்த்து நின்னு கல்யாணம் பண்ணுறதுக்கு எல்லாம் ஒரு மிகப் பெரிய தைரியம் வேணும்.  எனக்குத் தெரிஞ்சு அது எங்க அண்ணாகிட்ட மட்டும் தான் இருக்கு!” என்று சொன்னதில், அவளைத் தவிர மற்ற அனைவருமே கொஞ்சம் அதிர்ந்து தான் போயினர்.

“ஒரே பால்.. ஆல் அவுட்..!!” என்பது போல அங்கிருந்த மற்ற மூவருமே வாயடைத்துப் போகும்படி செய்த அனாமிகா, இல்லாத காலரைத் தூக்கி வசந்திடம் கெத்துக் காண்பிக்க ஆரம்பித்தாள்.

“ராட்சசி! எனக்கே எப்போவாவது தான் இப்படி சப்போர்ட் பண்ண ஒரு ஜீவன் வரும். அதையும் இப்படிப் பேய் அடிச்ச மாதிரி உட்கார வச்சுட்டியேடி!!” என்று ஹஸ்கி வாய்சில் அவளிடம் குமுறினான்.

“தங்கச்சி! தங்கச்சி! இருக்கியாமா?” என்று கூப்பாடு போடாத குறையாகக் கூப்பிடதில், ‘இவுங்க என்னை விரும்பினாங்களா? அதனால தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?’ என்று அவ்வளவு நேரம் தனக்குள் உழன்று கொண்டு இருந்தவள், தன்னிலை அடைந்து, “என்ன அண்ணா?”  வசந்திடம் கேட்டாள்.

“என்னது என்னவா..? அப்போ மறுபடியும் நான் முதலில் இருந்து தம் கட்டி வசனம் பேசணுமா?” என்று எண்ணியவனோ, அதற்கான தெம்பு இப்போதைக்குத் தன்னிடம் இல்லை என்று நொந்து போய், “ஒண்ணுமில்லம்மா, நீ தூங்கு!” என்று சொல்லி விட்டு அவன் தூங்கிப் போனான்.

இருவரையும் அவரவர் வீட்டில் விட்டு விட்டுத் தங்கள் வீடு வந்த சேர்ந்து போதும் கூட, தாமரை மற்றும் கதிரின் இடையே ஒரு பெருத்த அமைதி நிலவி கொண்டு இருந்தது.

கணவன் ரெப்ரெஷ் ஆகி வெளிவரும் வரை ஹாலில் அமர்ந்து இருந்தவள், அவன் வெளிவரவுமே, நேராகக் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள், அவனின் முகம் கூடக் காணாது..

அவளின் செய்கையில், ஹாலுக்கு வந்த கதிரவன் பின் என்ன நினைத்தானோ? மறுபடியும் தங்கள் அறை சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

குளித்து முடித்து இரவு உடை மாற்றி வெளிவந்தவள், கணவனின் தரிசனம் கண்டு கொஞ்சம் ஜெர்க்காகி, அங்கிருந்து ஓட முயன்றவளாக வெளியேறி செல்வதைக் கண்டு, “உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்ற குரல் அவளை அப்படியே நிற்க வைத்தது.

“என்ன கேட்கப் போறாங்க..? எதைப் பத்திக் கேட்கப் போறாங்க? அதுவா? இதுவா?” என்று ஆயிரம் எண்ணங்கள் மனதில் அடங்காது ஆர்ப்பரித்தாலும்  திரும்பி, “என்ன?” என்று கணவனிடம் குரல் வெளிவராது கேட்டாள் தாமரை.

“கொஞ்சம் இங்கே வா!” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டவள், “எதுக்குக் கூப்பிடுறாங்க?” என்று எண்ணினாலும், அவளின் கால்கள் தானாகக் கணவனின் சொல்படி கேட்டு, அவனை நோக்கி நடந்து சென்றது.

தன் முன்னே சிறு இடைவெளியுடன் வந்து நின்றவளிடம், “நான் உன்னைக் கட்டிப் பிடிச்சுக்கலாமா??” என்று கேட்டு அவளைப் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கினான் கதிர்.

ஊமையாகிப் போன மனைவியின் பதிலில் அடிபட்டவன், முகம் வாட, அங்கிருந்து விருக்கென்று எழுந்து செல்ல முயன்ற நேரம், அவனின் வாடலில்,  துணிந்து அவனின் கைப் பற்றி நிறுத்தி இருந்தாள் தாமரை.

மனைவியின் தொடுகையில் சிலிர்த்துத் திரும்பியவனிடம், “கட்டிக் கொள்!” என்ற விதமாக, இரு கைகள் விரித்து நின்று இருந்தாள் தாமரை.

அவ்வளவு தான்!! நொடியும் தாமதிக்காது மனைவியைத் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் கதிரவன்.

கணவனின் வெப்ப மூச்சுக்காற்று அவள் பிடரியில் பட்டுச் சிலிர்க்க வைத்ததில், சொல்ல முடியாத உணர்வுகளின் உணர்ச்சி வேகம் தாங்காது, பெண்ணவளின் தேகம் மெல்ல நடுங்கியது.

கதிரின் தேகச் சூடு அவளில் கொஞ்சம் கொஞ்சமாக ஊருருவி தாமரையைச் சூடேற்றியதில் திணற ஆரம்பித்தவள், அவனது சட்டையையே பற்றி இறுக்க ஆரம்பித்தாள்.

வாஞ்சையுடன் அணைத்திருந்தவனோ, “இன்னொரு முறை இப்படி அஜாக்கிரதையா இருக்காதே! உனக்கு ஒண்ணுன்னா சத்தியமா என்னால தாங்கவே முடியாதுன்றதையே, நான் இன்னைக்குத்தான் தெரிந்து கொண்டேன்” என்று சொன்ன கணவனின் அன்பில் கரைந்து நெகிழ்ந்து போனவள், அவனை நிமிர்ந்து ஆச்சரியமாகப் பார்த்தாள்.

மனனவி என்பவள் மஞ்சத்தில் உருண்டு புரள மட்டுமே என்று எண்ணும் ஆண்களின் வர்க்கத்தில் இப்படி ஒருத்தனா? என்று எண்ணியவளின் பிரமிப்பை அவளின் கண்களில் கண்டவன்,

“என்ன?” என்று கேட்கவும், “உங்களுக்கு என்னைப் பிடிக்குமா?” என்று கேட்டாள் தாமரை கண்களில் மின்னல் மின்ன.

“ஏன்.. உனக்குத் தெரியாதா?” என்று கேட்டவனின் அன்பை அவளும் அறிவாள் தான்! ஆனால் ஏனோ அதை அவன் வாயால் கேட்கப் பேராவல் கொண்டு துடித்தது கன்னியின் மனம்.

“உன்னைப் பிடிக்கும்! உன்னை மட்டும் தான் இந்த உலகத்திலேயே எனக்கு அதிகமா பிடிக்கும்!” என்றான் அவளின் மன்னவன். அதில் பேரானந்தம் கொண்டவள், எக்கி அவனை, அவனை விட அதிகமாக, இறுக்கிக் கொண்டாள் சந்தோஷத்தில்.

வெல்லம் தின்ன கசக்குமா? என்ற விதமாக, மனைவியின் நேசத்தில் அவளுள் கரைந்து போக விரும்பி கதிர் அவளின் இடை வளைத்த நேரம், அடுப்படியில் பால் குக்கர் சத்தமிட்டதில் சுயநிலைக்கு வந்தவள், கணவனிடமிருந்து கூச்சம் தாங்காது வெட்கத்தில் செவ்வனமாக மாறிய முகத்தை மறைத்துக் கொண்டு ஓடி மறைந்தாள்.

எவ்வளவு நேரம் தான் அடுப்பங்கரையிலேயே குடும்பம் நடத்துவாள் என்ற எண்ணத்தில் மனைவியைத் தேடிச் சென்ற கதிர், அங்கே குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டு இருந்தவளைக் கண்டு உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான்.

அவளை நெருங்கி, “இன்னைக்குள்ள பால் தருவியா?” என்று அவன் கேட்க,

திடீரென்று கேட்ட கணவனின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள், ஏற்கனவே அவனுக்காகத் தாயரித்து வைத்து இருந்த பால் டம்ளரை எடுத்துக் குனிந்த தலை நிமிராது அவனிடம் நீட்டினாள். அதை வாங்கிக் குடித்தவன்,

“நீ குடிச்சுட்டியா?” என்று கேட்டான்.

“இல்லை” என்று மறுத்தவளை வேண்டுமென்று உரசிக் கொண்டு அவளுக்குப் பால் கலந்து கொடுத்தவன், அவள் குடித்து முடிக்கும் வரை அவளையே தான் விழுங்கிக் கொண்டு இருந்தான்.

கணவனின் பார்வையில் பனியாக உருகியவளோ, அதன் வீச்சு தாங்க முடியாமல், வேக வேகமாக ஒரே மடக்கில் பாலைக் குடித்து முடித்தாள்.

மனைவியின் கையில் இருந்த டம்ளரை வாங்கி சிங்க்கில் போட்டவன்,

“வா போகலாம்” என்று மனைவியின் கைப் பிடித்து இழுத்தான். “எங்கே?” என்று மத்தளம் கொட்டும் இதயத்தின் சத்தம் வெளியே கேட்டு விடாதவாறு தயங்கிக் கேட்டவளிடம், “எங்கேன்னா உடனே வருவ?” என்று சரச மொழியில் கேட்டவனின் பார்வை மாறுதலில் திடுக்கிட்டுப் போனவள், அதிர்ந்து அவனைப் பார்க்கவும் சிரித்தான் கதிர்.

“வெளியே ஒரு வாக் போயிட்டு வரலாம் வா!” என்று அவன் சொல்லவும் தான், அதுவரை இழுத்து வைத்து இருந்த மூச்சைத் தாமரையால் வெளியே விடவே முடிந்தது.

‘இதை முன்னமே சொல்லியிருக்கலாம் தானே? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சு.. ச்ச்சே! என் புத்தி ஏன் இப்படிப் போகுது?’ என்று தன்னைத்தானே மானசீகமாகக் கொட்டிக் கொண்டவள், கணவனுடன் சேர்ந்து இரவு நடைக்குக் கிளம்பினாள்.

கதிர் எப்பவும் இரவு உணவுக்குப் பின் ஒரு சிறு நடைப் பயணம் செல்வது வழக்கம். அப்பொழுது சில நேரம் தாமரையும் அவனுடன் செல்வாள் தான். ஆனால் இன்று ஏனோ அவனுடன் செல்வது அவளைப் பலமாகத் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. சற்று முந்தைய இருவரின் நெருக்கம் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

“இப்போ கேளு, என்ன தெரியணும் உனக்கு?” என்று கேட்ட கணவனிடம் என்னவென்று கேட்பாள் அவள்?

ஏற்கனவே கேட்டதற்கே இப்பொழுது வரை திண்டாடிக் கொண்டு இருப்பது அவளுக்குத்தானே தெரியும்?

மனைவியின் கையோடு தன் விரல்களை இணைத்துக் கொண்டவனின் செயலில் விதிர்த்துப் போய் நின்றவளைக் கண்டவன்,

“எல்லாத்துக்கும் இப்படி ஷாக் ஆவதைக் கொஞ்சம் நிறுத்துறியா?” என்றான் கதிர்.

அதில், “இவுங்க என்னைத் திட்டுறாங்களா? இல்ல சாதாரணமா சொல்லுறாங்களா?” என்று கணவனையே ஆழ்ந்து பார்த்திருந்தவளிடம், என்னவென்று அவன் செய்கையில் கேட்கவும், “ஒண்ணுமில்லை!!” என்று முகம் தேய சொன்னவளின் தலை தரையைத் தொட்டு நின்றது.

தன் நடையை நிறுத்தி மனைவியை நேருக்கு நேராகப் பார்த்தவன், “இப்படிப் பண்ணாத! எனக்கு அது என்னவோ பண்ணுது” என்று சொன்னவனின் குரலில் அப்பட்டமாக ஏதோ ஒன்று இருந்தது.

அது என்னவென்று புரியாத போதும், தன்னுடைய உணர்வுகள் கூடத் தன் கணவனைத் தாக்குகிறது என்பதில் இன்பம் கொண்டவள், “சரி” என்று தலையாட்டி வைத்தாள்.

அதைக் கண்டு புன்னகைத்தவன், “அனாமிகா சொன்ன மாதிரி உன்னைக் கல்யாணத்துக்கு முன்னாடி விரும்பினேனா என்று எனக்குச் சத்தியமா தெரியாது!” என்றவனின் பேச்சைக் கேட்டவளின் பூஞ்சை மனது லேசாக வாடிப் போனது.

அதை அவளின் ஒரு நிமிட நிறுத்தத்தில் இருந்து தெரிந்து கொண்டவன்,

அவளுடனான நடையை நிறுத்தாது மேலும் அவளுடன் நடந்து கொண்டே, “தெரியாதுன்னு தான் சொன்னேன், விரும்பவே இல்லைன்னு சொல்லவே இல்லையே?” என்றவனின் பேச்சைக் கேட்டு மனைவியின்  இதழ்கள் விரிவதை, அந்த இருட்டிலும் கரண்ட் கம்பத்தின் வெளிச்சத்தால் மிகத் தெளிவாகக் கதிரவனால் காண முடிந்தது.

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன். அவ்ளோ தான் எனக்குத் தெரிந்த பீலிங்! மத்தபடி காதல்… ம்ம்ம்கூம்.. அது எனக்குத் தெரியலை” என்றவன், “ஆனா..” என்று இழுத்து நிறுத்தி, “இப்போ உன்னை அதிகமா விரும்புறேன்னு  நினைக்கிறேன்” என்று சொன்ன நொடி, தாமரையினுள் காதல் மத்தாப்புக்கள் வெடித்துச் சிதறின.

அதில் அவளாகவே கணவனின் தோளில் சாயாத குறையாக அவனை இன்னும் நெருங்கி, அவனின் கையை இன்னும் அதிகமாகத் தன்னுள் இணைத்துக் கொண்டு, “நானும் தான்!!” என்று சொல்லாமல் சொல்லி, அவனுடன் இணைந்து நடந்தாள்.

அந்நேரம் அவர்களைக் கடந்து சென்ற வண்டியின் வேகத்தைக் கண்டு, தன்னிச்சையாக மனைவியை இழுத்து, தனக்கு இடதுபுறம் பாதுகாப்பாகத் தன் கைவளைவிற்குள் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டான் கதிர், மாலை நிகழ்வின் தாக்கத்தில்..

“உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை?” என்ற ரீதியில் நிமிர்ந்து பார்த்துச் சிரித்த தாமரையின் முகத்தைக் கண்டவனுக்கு, அது ஓவராக எல்லாம் தெரியவே இல்லை.

காரணம்.. அவனுக்கென்று இந்த உலகத்தில் இருக்கும் ஒரே ஜீவனை அவன் பொத்திப் பாதுகாப்பதில் என்ன தவறு? என்பதே அவனின் அந்நேர எண்ணமாக இருந்தது.

அதையே தன் வார்த்தைகளில் வடித்து, “இதுவரை நான் காதலிக்கவோ, பாதுகாக்கவோ இந்த உலகத்தில் யாரும் இருந்தது இல்லை. ஆனா..” என்று இழுத்து நிறுத்தியவன், மனைவியின் முகம் தாங்கி, குனிந்து அவளின் பிறை நெற்றியில் தன் இதழை ஆழமாகப் பதித்து, “இப்போ நீ தான்டி என் உலகமே!” என்றவனின் சொல்லில், செயலில் இமை மூடி, அவனின் உணர்வுகளை தனக்குள் உள்வாங்கிக் கொண்டு இருந்தவளின் ஒவ்வொரு ஊனும் உயிரும் அவளின் கணவனுக்காக உருகி வழிய ஆரம்பித்தது.

“அப்படிப்பட்ட உன்னை நான் பாதுகாக்காம வேற யார் பாதுகாப்பாங்க?” என்றவனின் கேள்வியில், எந்தவித பதிலும் சொல்லாது, கணவனின் தோளில் சாய்ந்து கொண்டு, அவனின் இடுப்பைக் கட்டிக் கொண்டாள் தாமரை.

அவளின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது. அது ஏன் என்று கூட யோசிக்க முடியாத ஆனந்தத்தில் கணவனில் இளைப்பாறிக் கொண்டு இருந்தாள் அவள்.

‘இப்படி அன்பைப் பொழியும் ஒருவன் கணவனாக கிடைக்க நான் என்ன புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்?’ என்று எண்ணி எண்ணிப் பூரித்துக் கொண்டு இருந்தவளின் நிலை அறிந்தவனும், அவளை விலக்காது, அதே நேரம் தாங்கள் இருக்கும் இடம் ஆள் நடமாட்டமில்லாத இடமாக இருந்தாலும் கூட, அவ்விடம் விட்டுச் செல்ல நினைத்து, மனைவியை அணைத்தவாறே வீடு வந்து சேர்ந்தான்.

அன்றிருந்த மனநிலையில் கதிரவன் எப்படி நடந்து இருந்தாலும், என்ன செய்து இருந்தாலும், தாமரை அதற்குக் கண்டிப்பாகச் சம்மதித்து இருப்பாள் தான். ஆனால் கதிரவனுக்கு உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி இருக்கும் நேரம், மனைவியோடு மஞ்சம் கொள்ள விருப்பமில்லை போல! அதன் பொருட்டே, படுக்கச் செல்லும் முன் அவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர நினைத்தவன், வேறு சில விஷயங்களை அவளிடம் கலந்துரையாட ஆரம்பித்தான்.

பின்னிரவில் முடிவுக்கு வந்த அவர்களின் உரையாடலில், தாமரை சொன்ன ஒரு விஷயத்திற்காக, கதிரவன் இந்த அளவிற்கு மாறுவான் என்று சத்தியமாக அவள் எண்ணவில்லை.

ஆனால் அவளின் வார்த்தைகளே தனக்கு வேதம் என்று  சொல்லாது செய்தவனின் செயலில், பெண்ணவளின் காதல், மடை திறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்ததைக் கண்டு கதிரவன் தான் பிரமித்துப் போனான்.

Advertisement