Advertisement

அத்தியாயம் 9

“உங்ககிட்ட இரண்டு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று ஆரம்பித்தார் ராமமூர்த்தி. அதில் முதல் விஷயமாக, “தாமரைக்குக் கிடைத்து இருக்கும் லோன் பற்றி பாக்டரியில் யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்றார்.

அதைக் கேட்டு இரு பெண்களும் ‘ஏன்?’ என்றவாறு அவரையே பார்த்திருக்கவும்,

“அது ஏன்னா, உங்களுக்கு முன்பே பலர் ஆபீஸில் லோன் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னே, உங்களின் சூழ்நிலை கருதி முதலாளி உங்களுக்குப் பணம் முதலில் கொடுக்கச் சொல்லி விட்டார்.

ஆனால் இந்த விஷயம் பணியாளர்களுக்குத் தெரிய வந்தால் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும்ல? அதான்..” என்றவரின் பேச்சில் இருந்த சாராம்சம் புரிந்து கொண்டவர்களும் உடனே அவரின் பேச்சுக்குச் சம்மதம் தெரிவித்தனர்.

அடுத்துச் சொல்ல வேண்டிய விஷயத்தை ‘நீ சொல்!’ என்ற விதமாக மனைவியை ராமமூர்த்தி பார்க்கவும், கணவரின் எண்ணமறிந்து சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார் விஜயா.

“இந்த விஷயத்தை தாமரைகிட்ட பேசுவதை விட உங்ககிட்ட பேசினா சரியா இருக்கும்னு தோணுது ராஜம்மா. அதனால நீங்க நான் சொல்றதைக் கேட்டு நல்லா யோசிச்சு தாமரைக்கிட்டையும் கலந்தாலோசித்துட்டு ஒரு முடிவை சொல்லுங்க” என்று முதலிலேயே  பீடிகை போட்டுப் பேச்சை ஆரம்பித்தவர்..

அதன்பின், “நம்ம கதிருக்குத் தாமரையைக் கல்யாணம் செய்து வைக்கலாம்ன்னு நாங்க நினைக்கிறோம்” என்றார்.

இப்படி ஒரு பேச்சைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத பெண்கள் இருவருமே  திகைத்துப் போயினர்.

முதலில் அதில் இருந்து  மீண்ட ராஜம்மா, ‘தான் கேட்டது நிஜமா?’ என்ற சந்தோஷ உற்சாகத்தில் குரல் தளும்ப, “அம்மா! நீங்க சொல்றது உண்மையா? நம்ம கதிர் தம்பிக்கா தாமரையைக் கேட்குறீங்க?” என்று கேட்டார்.

அவரின் பேச்சில் இருந்தே அவருக்கு இந்தச் சம்பந்தத்தில் இருக்கும் சம்மதம் புரிய, இன்முகமாக, “நம்ம கதிருக்கு இல்லாம வேற யாருக்கு ராஜம்மா நாங்க இங்கே பொண்ணு கேட்டு வரப் போறோம்? அவனும் எங்களுக்கு ஒரு பிள்ளை மாதிரி தான்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?” என்றார் விஜயா.

“அது தெரியும்மா” என்று பதிலளித்த ராஜம்மா,

“இல்ல, அந்தத் தம்பி எங்கே? தாமரை எங்கே? அதான்…” என்று இருவரின் ஏற்ற இறக்கங்களை இழுத்துச் சொன்னார்.

அதற்குப் பதிலளிக்க விஜயா வாய் திறக்கும் முன், ராஜம்மாவின் இழுப்புகளுக்கு எல்லாம் சேர்த்துத் தன்னுடைய ஒரே பதிலைக் கொடுத்தார் ராமமூர்த்தி.

“இந்தப் பணம், பதவி, படிப்பு, பகட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்மா நம்ம கதிர். அவனுக்கு மனிதர்களின் குணம் தான் முக்கியம். அதனால் தான் அவனுக்கு உங்க வீட்டு பொண்ணைக் கேட்டு நாங்க வந்து இருக்கிறோம்” என்றவரிடம் அடுத்து என்ன பேசுவது? இல்லை என்ன கேட்பது? என்று புரியாத ராஜம்மா சந்தோஷத்தின் உச்சத்தில் மௌனமாகிப் போனார்.

அவரின் அமைதியைக் கண்ட விஜயா, “என்னம்மா, உங்க பெண்ணை எங்க பையனுக்குக் கொடுக்க விருப்பமில்லை போல! பதிலையே காணோம்?” என்று கேலியாகக் கேட்கவும், பதறிப் போனார் பெரியவர்.

“என்னம்மா.. இப்படிச் சொல்லிட்டீங்க? நாங்க கனவுல கூட நினைச்சுப் பார்க்க முடியாத ஒரு சம்பந்தத்தைக் கொண்டு வந்து இருக்கீங்களேன்ற திகைப்பில் நான் ஊமையாகிப் போய் கிடக்கிறேன்மா” என்றவரின் பூரிப்பைக் கண்ட விஜயாவின் பார்வை, தானாக அதே பிரதிபலிப்பை எதிர்பார்த்துத் தாமரையின் முகத்துக்குச் சென்றது.

அங்கே அவர் கண்ட குழப்பரேகைகளின் காரணமாக, “என்னம்மா… என்னாச்சு? நீ கதிரவனைப் பார்த்து இருக்க தானே? உனக்கு இந்தச் சம்பந்தத்தில் இஷ்டம் தானே?” என்றவருக்கு, “என்ன சொல்வது?” என்ற தெளிவில்லாதவள், அதையே முகத்தில் பிரதிபலித்து, அவரைப் பார்த்து வைத்தாள்.

அதில், ‘ஒருவேளை இந்தப் பொண்ணுக்கு கதிரவனைப் பிடிக்கவில்லையா? அது எப்படி அவனைப் பிடிக்காமல் போகும்? அவனுக்கு என்ன குறை?’ என்று சில நிமிடங்களில் பல விஷயங்களைத் தனக்குள் கேட்டுப் போராடியவரின் பார்வை அருகில் அமர்ந்திருந்த கணவரின் மீது பாய்ந்தது, ‘என்னங்க… இந்தப் பொண்ணு பதிலே சொல்ல மாட்டேங்குது’ என்பதாக..

மனைவியின் விழிகளில் உள்ள தவிப்பை உணர்ந்தவருக்கு அவ்வித தவிப்புகள் எதுவும் இல்லை போல.

சமீபத்தில் தான் தந்தையைப் பறி கொடுத்து, அவர் வாங்கிய கடனுக்காக அந்நியன் ஒருவனின் இச்சைக்குப் பலியாகி விடுவோமோ? என்று அனுதினமும் அல்லாடிக் கொண்டு இருந்தவளின் அல்லல்கள் அடங்கி முடிக்கும் முன்னரே, ‘கல்யாணம் பண்ணிக்கிறியா?’ என்று கேட்டால், எந்தப் பெண்ணால் தான் உடனே பதில் சொல்ல முடியும்?

தாமரையின் தற்பொழுதைய மனநிலையை மிக நன்றாக ராமமூர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்ததால், “ஒன்னும் அவசரமில்லைமா, நல்லா டைம் எடுத்து ஒரு நல்ல பதிலா சொல்லுமா” என்று கூறியவர்,

ராஜம்மாவைப் பார்த்து, “இனி இந்த மாதிரி யாராவது வந்து பிரச்சனை பண்ணா தயங்காம என்கிட்ட சொல்லுங்கம்மா” என்று சொல்லியவாறு புறப்பட எழுந்தார்.

அவரின் வார்த்தை அழுத்தங்களே ‘இனி தாமரைக்கு நாங்களும் இருக்கிறோம்’ என்ற மறைமுகப் பாதுகாப்பை உணர்த்துவதாக இருந்ததில் ராஜம்மாவின் நெஞ்சம் நெகிழ்ந்து போனது.

“சரிம்மா, அப்போ நாங்க கிளம்புறோம்” என்றதும்,

“இவ்ளோ தூரம் வந்துட்டு ஒன்னும் சாப்பிடாம போறீங்களே சார்?” என்றார் ராஜம்மா.

“அதுக்கு என்ன? பொண்ணு மட்டும் சம்மதிக்கட்டும், விருந்தே சாப்பிட்டுறோம் கதிரோடு வந்து” என்று கேலியாகச் சொன்னார் ராமமூர்த்தி.

அந்த வாரத்தைகளின் பிரதிபலிப்பு அங்கிருந்த மூத்த பெண்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது என்றால், தாமரையின் இதயத்திலோ, ஏன் என்றே தெரியாத ஒருவித உணர்வை உண்டாக்கி, கதிரின் முகத்தை மனக்கண்ணில் மின்னலாக வெட்டியதில், அவளின் தளிர்மேனி திடுக்கிட்டது.

வந்தவர்கள் சென்ற பின்னும் அவர்கள் சொல்லிச் சென்ற வார்த்தைகள் தான், வேறு வேறு விதமாக, ராஜம்மாவின் வாயிலிருந்து தாமரையின் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருந்தது.

“எவ்ளோ பெரிய சம்பந்தம்!! சொக்க தங்கம் கதிர் தம்பி… நீ கொடுத்து வச்சவ தாமரை!!” என்று அவளின் முகம் சுற்றி நெட்டி முறித்தவர்,

தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார் அன்றைய நாள் முடியும் வரை..

ஆனால் அவரின் எந்த உற்சாகத்துக்கும், எந்த உத்வேகத்துக்கும் பதில் கொடுக்காது, தன்னிச்சையாகத் தன் வேலைகளைச் செய்து கொண்டு இருந்தவளின் மனதிலோ ஆழ்கடலின் ஆர்ப்பாட்டங்கள்!!

மாலையில் வெளித்திண்ணையில் அமர்ந்து கால்களை நீட்டியபடி, சுளகில் அரிசி கொட்டி, அதில் கல் பொறுக்கிக் கொண்டு இருந்தவரின் எந்தப் பேச்சுக்கும் தாமரையிடமிருந்து பதில் வராது போகவும், தன் வேலையை விடுத்து அவளை நிமிர்ந்து பார்த்தவருக்கு, அப்பொழுது தான் காலையில் இருந்தே அவளிடமிருந்து எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லை என்பதே மண்டையில் உரைத்தது.

“என்ன இந்தப் பொண்ணு இப்படி இருக்கா? எந்த சந்தோஷமும் முகத்தில் காணோமே?” என்று தாமரையின் முகத்தை ஆராய்ந்து எண்ணியவர், உடனே தாமரையை அழைத்தார்.

ஏதோ ஒரு சிந்தனையின் தாக்கத்தில், ‘கோழிகளுக்கு இரையை அளவுக்கு மீறி போட்டுக் கொண்டு இருக்கிறோம்’ என்பது கூடத் தெரியாது, குருணையை அள்ளி அள்ளி தரையில் தூவி கொண்டு இருந்தவளின் காதில் விழுந்த அழைப்பில் திடுக்கிட்டுப் போய்த் திரும்பி, “என்ன பாட்டி?” என்றாள்.

“ஒரு மாசம் கோழிகளுக்குப் போட வேண்டிய அரிசியை இப்படி ஒரே நாளில் போட்டுத் தீர்த்துடுவ போலயே?” என்றார் ராஜம்மா.

அவரின் வார்த்தைகளைக் கேட்டு கையில் இருந்த டப்பாவையும் கீழே சிதறிக் கிடந்த அதிக அரிசிகளையும் கண்டு, தப்பு செய்த குழந்தையின் முகபாவம் காட்டியவளைக் கண்டவருக்கு நெஞ்சம் அடைத்தது.

‘இவளின் நிலை புரியாது, புரிந்து கொள்ளவும் முயலாது, நாமளே அதிகம் கனவு காண ஆரம்பித்து விட்டோமோ??’ என்று எண்ணியவர், “இங்கே வாம்மா” என்றழைத்து, அவளைத் தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டார்.

தன் மடியில் இருந்த சுளகை பக்கத்தில் கிடத்தி விட்டு தாமரையின் புறம் திரும்பி அமர்ந்தவாறு, “உனக்கு இந்தச் சம்பந்தத்தில் விருப்பமா?” என்று கேட்டார் ராஜம்மா.

அது தானே அவளுக்கே புரியாத புதிராக இருக்கிறது? இதில் அவள் எங்கிருந்து பாட்டிக்குப் பதில் சொல்லுவாள்.

தன்னுடைய வார்த்தைக்காகத் தன்னையே பார்த்திருப்பவரின் பார்வையை உணர்ந்து, ‘இன்னும் எவ்வளவு நேரம் தனக்குள்ளே இப்படிக் குமைந்து கொண்டு இருப்பது?’ என்று எண்ணியவள்,

வாயைத் திறந்து, “நிஜமாவே எனக்கே தெரியலை பாட்டி” என்றாள் உண்மையை மறைக்காது.

“உன் மனசில் என்னம்மா ஓடுது? அதைச் சொல்லு!” என்றார் பாட்டி விடாது.

“அது..து.. பலது ஓடுது பாட்டி”

“அதுல சிலதை சொல்லு பார்ப்போம்” என்றவரின் பேச்சைக் கேட்டவளுக்கும், ‘இவரிடம் சொல்லியாவது நமக்கு ஒரு தெளிவு கிட்டுதான்னு பார்ப்போம்’ என்று எண்ணித்தில், “இப்போ இந்தக் கல்யாணம் எனக்குத் தேவை தானா பாட்டி?” என்றாளே பார்க்கலாம்! அவ்வளவு தான்! பாட்டி அரண்டு போய் விட்டார்.

‘பின்ன.. ஊர் ஊரா தேடி நாயா பேயா அலைந்தாலும் கிடைக்காத சம்பந்தம், இன்று தங்களின் வாசல் தேடி தானா வந்து இருக்குதுன்னு நான் பூரிச்சுப் போய் கிடக்க, இவ என்னான்னா அந்தச் சம்பந்தமே தேவையான்னுல கேட்கிறா?’ என்று எண்ணியவர், “என்ன தாமரை இப்படிக் கேக்குற?” என்றார்.

பெரியவரின் கேள்வி தோரணையே, ‘இப்படி நீ கேட்கலாமா?’ என்ற விதத்தில் அமைந்ததில், அவரை ஏறெடுத்துப் பார்த்தவளுக்கு அடுத்த வார்த்தை வெளிவராது போனது.

அதைக் கண்டுகொண்டவரும் தன் வார்த்தைகளின் போக்கை மாற்றி, “ஏன்மா இப்படி நினைக்கிற? எப்படியும் இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துக்குள்ள உனக்குக் கல்யாணம் முடிச்சு தானே ஆகணும்? அதை இப்போ பண்ணிக்குறதில் உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்டார்.

“அந்த இப்போ தானே என்னுடைய பிரச்சனையே!!” என்று எண்ணியவள், அதையே தன் வாய்மொழியாகப் பாட்டியிடமும் மொழிந்தாள்.

“எனக்குப் புரியலைமா” என்றவருக்கு, “அப்பா செத்து இன்னும் வருஷம் திரும்பலை. அதுக்குள்ள..” என்ற பேச்சைக் கேட்கவும், அதன் போக்கு அறிந்தவர், உடனே அதை இடைமறித்துப் பேச ஆரம்பிக்க முயலவும்,

“நான் இன்னும் சொல்லி முடிக்கலை பாட்டி” என்றவள், “நான் முழுசா சொல்லி முடிச்சுடுறேனே?” என்றவள் தொடர்ந்து பேசினாள்.

“நீங்க என்ன கேட்கப் போறீங்க தெரியும்… அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு தானே?” என்றவளுக்கு, “ஆமாம்” என்றே தலையாட்டினார் ராஜம்மா.

“ஆயிரம் சம்பந்தம் இருக்கு பாட்டி… சொல்றேன் கேட்டுக்கோங்க. நீங்க இப்போ நடக்கப் போற கல்யாணம் பற்றி மட்டும் யோசிக்கிறீங்க.

ஆனா நாளைக்கு எங்க அப்பாவுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்தவன் யாராவது, நான் கல்யாணமாகிப் போன வீட்டுக்கு முன்னாடி வந்து நின்னு, அவர் கடனை கேட்டா… அது எனக்கு எவ்ளோ சங்கடம்ன்னு நீங்க யோசிச்சீங்களா???” என்றவளின் கேள்வியில் நிஜமாகவே அப்பொழுது தான் அவளின் அந்தக் கோணத்தைச் சிந்திக்க ஆரம்பித்தார் ராஜம்மா.

“இவள் சொல்வதும் சரி தானே? இதை நாம எப்படி மறந்தோம்?” என்று நினைத்தவர், ‘இந்தப் பெண்ணுக்கு ஒரு நல்வாழ்வு அமைய போகுதுன்னு நினைச்சமே தவிர, இதையெல்லாம் யோசிக்காம போய்ட்டோமே?’ என்று எண்ணி நொந்தவர், அந்த நேரத்திலும், வயதில் சின்னவளாக இருந்தாலும் தாமரையிடம் வெளிப்படும் அந்தப் பக்குவத்தை எண்ணி வியந்து போனார்.

“என்னை விடுங்க பாட்டி, எனக்கு இதெல்லாம் பழக்கம் தான். ஆனா என்னைக் கட்டிக்க போறவருக்கு… அது எவ்ளோ பெரிய அசிங்கத்தை உண்டு பண்ணும் சொல்லுங்க” என்றவளின் பேச்சில் இருந்த உண்மையில் அவளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஊமையாகிப் போனார் ராஜம்மா.

“என்னைக் கட்டிக்கிறேன்னு பெருந்தன்மையா வந்தவருக்கு, நான் கொடுக்கப் போகும் சீதனம் அவமானங்களா பாட்டி?” என்று தன் மன அழுத்தங்களை எல்லாம் கண்களில் நீராக தளும்ப விட்டுப் பேசியவளின் வலியை உணர்ந்து, அவளை ஆரத் தழுவியவர், “கலங்காதடா!” என்றார் கலங்கிய குரலில்.

“இல்ல இல்ல பாட்டி… நான் அழுவலை” என்றவாறு தன் கண்களைத் துடைத்துச் சொன்னவள்..

“என்னைப் போன்றவளுக்கு கல்யாணம் என்பது ஒரு பகல் கனவுதான் பாட்டி! அது நிஜத்தில் நடக்கும்ன்னு நினைக்கிற அளவுக்கு நான் முட்டாளா இருக்க விரும்பவில்லை.

அதனால் தான் அவுங்க கேட்கும் பொழுதும் சரி…

நீங்க கேட்கும் போதும் சரி, என்னால சந்தோஷமா எந்தச் சம்மதமும் சொல்ல முடியலை” என்றவளின் முதிர்வு பேச்சைக் கேட்ட ராஜம்மாவுக்கு, அவள் வாழ்வை எண்ணி நெஞ்சம் அடைத்தது.

“அப்படிச் சொல்லாதம்மா… கண்டிப்பா உனக்கும் ஒரு நாள் கல்யாணம் நடக்கும்!” என்றவரின் வாழ்த்தைக் கேட்டு விரக்தி புன்னகை சிந்தினாள் தாமரை.

“கேட்க நல்லா இருக்கு பாட்டி.. ஆனா நிஜத்தில் அந்தக் கல்யாணம் நடக்கணும்ன்னா, நாம சீர்ன்னு ஒண்ணு கொடுக்கணும்.. தெரியும்ல?” என்றாள் விரக்தியின் விளிம்பில் நின்று.

“பெரிய இடமா இருந்தா தான்மா அதிகமா கேட்பாங்க. நாம ஏழைக்கேத்த எள்ளுருண்டையா ஏதாவது வரன் பார்ப்போம்” என்ற ராஜம்மாவும், ‘உனக்குக் கல்யாணம் பண்ணியே தீருவேன்!’ என்பது போல அவளிடம் விவாதம் புரிந்து கொண்டு தான் இருந்தார்.

“பொண்ணு வைக்கிற இடத்துல பூவையாவது வைக்கணுமே பாட்டி… அந்த பூவாவது நம்மகிட்ட இருக்கா?” என்றாள் அவளும் நக்கலுடன்.

“நான் சம்பாரிக்கிறது, என் கடனுக்கும் என் சோத்துக்குமே சரியா இருக்கு. இதுல எங்கே இருந்து அந்த பூவுக்கானதை நான் சேர்த்து வைப்பேன்? நீங்களே சொல்லுங்க!”

“முடியாதுல…?” என்று கேள்வியும் நானே பதிலும் நானே போல் சொன்னவள்,

இறுதியாக ராஜம்மா அடுத்து எதையும் பேசும் முன், “இந்தப் பேச்சை இத்தோடு முடிச்சுக்குவோம் பாட்டி… பாக்டரி கடனை தீர்த்து நாம நிம்மதியா வாழ்ந்தாவே எனக்குப் போதும்!” என்று எதார்த்தத்தை எடுத்துச் சொல்லி விட்டு, இரவு உணவை கவனிக்க உள்ளே எழுந்து செல்ல போனவள்,

தன்னுடன் எழுந்து வராது சிலையாக இருளடைந்த வானமாக மாறிப் போனவரின் முகம் கண்டவளுக்கு, தனக்காக, தன்னுடைய வாழ்க்கைக்காக, இந்த அளவுக்கு வாதாடுபவரின் மனதை ஒரேடியாக நோகடிக்க விரும்பாது, “சரி பாட்டி, நீங்க சொல்றபடி எனக்குக் கண்டிப்பா ஒரு நாள் கல்யாணம் நடக்கும் போதுமா?” என்றதும் தான் ராஜம்மாவின் முகம் சற்று மலர்ந்தது.

அதைக் கண்ட தாமரையின் முகமும் தானாகவே கனிந்தது, தனக்காகவும் அக்கறை கொள்ள ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இருக்கிறதே என்று..

ஒருவாறாக இரவு உணவை தயாரித்து உண்டு முடித்து, அன்று  உறங்க சென்ற இரு பெண்களின் மனநிலையுமே வேறு வேறாக இருந்தது.

பெரியவரோ, ‘இந்தப் பொண்ணோட தங்கமான மனசுக்காகவது இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பா!’ என்று ஆண்டவனிடம் வேண்டினார். சின்னவளோ, ‘நாளைய பொழுது எந்தவித பிரச்சனைகளும் இல்லாத பொழுதாக அமையட்டும் ஆண்டவா!’ என்றே வேண்டிக் கொண்டாள்.

ஆக மொத்தம் இருவரின் மனமுமே, ‘கதிர் – தாமரை கல்யாணம் இனி நடக்க வாய்ப்பில்லை’ என்ற நிலைக்கு வந்து இருந்தது என்பதே அங்கே நிதர்சனமான உண்மை! ஆனால் கொடுக்க நினைத்து விட்டானே இறைவன்! அவனைத் தடுக்க யார் இருக்கிறார்?

மறுநாள் பொழுதும் விடுமுறையாக அமைந்ததால் இரு பெண்களுக்கும் அது சாதாரண பொழுதாகவே விடிந்து மறைந்து இருந்தது.

திங்கள் காலை வழக்கமாக பாக்டரி செல்வது போல எழுந்து தயாராகிச் சென்றவர்களுக்கு, ஏனோ பாக்டரியின் உள்ளே கால் வைத்த நொடி, அதுவரையில்லாத கதிரின் எண்ணம் தானாக வந்து ஒட்டிக் கொண்டு இருவருக்குள்ளேயுமே ஒருவித அழுத்தத்தைக் கொடுத்தது.

‘தங்களின் முடிவை எப்படி அந்தத் தம்பியிடம் சொல்வது?’ என்ற எண்ணம் ராஜம்மாவுக்கு..

அதே போல, ‘தனக்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்டு உதவியவரின் முகத்தை இனி எப்படி எதிர்கொள்வேன்?’ என்ற சஞ்சலம் தாமரையினுள் எழுந்தது.

எதுவாக இருந்தாலும், அதை நாம் எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்? என்ற உந்துதல் ஒருபுறமிருந்தாலும், தங்களின் இந்த முடிவிற்குள் கதிரின் நன்மையும் தானே அடங்கி இருக்கிறது என்பதில் சற்று ஆறுதல் கொண்டவர்கள், ‘நடப்பது நடக்கட்டும்!’ என்ற எண்ணத்துடன் தங்கள் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

“யோசித்து முடிவைச் சொல்லுங்கள்” என்று சொல்லி வந்து இன்றோடு ஒரு வாரமாகியும், இன்னமும் அவர்கள் பக்கமிருந்து எந்தவித பதிலும் வராததில் கடுப்பான விஜயா காலையில், “என்னங்க.. இன்னும் ஒன்னும் சொல்லாம இருக்காங்க?” என்று சொல்லவும்,

எதையோ சொல்லி அந்நேரம் அவரைச் சமாதானப் படுத்தி இருந்தாலும், அவருக்குள்ளேயும் ஒருவித நெருடல் இருக்கத்தான் செய்தது.

அதன்பொருட்டு, அன்று மாலையே தனியாகத் தாமரையின் வீடு நோக்கிப் புறப்பட்டார் அவர்.

அங்கே தாமரையின் முடிவையும், அதற்காக அந்தப் பெண் சொன்ன காரணத்தையும் கேட்டு, நிஜமாகவே அந்தப் பெண்ணின் மீது ராமமூர்த்திக்குக் கோபத்திற்குப் பதிலாக, “இப்படியும் ஒரு பெண்ணா?” என்ற வியப்புத்தான் அவருள் அதிகமாகத் தோன்றியது.

அதற்காக, அவள் சொல்லும் விஷயத்தின் வீரியம் தூக்கி எறிந்து விட்டு, அந்தப் பெண்ணின் குணத்துக்காகக் கதிருக்குத் திருமணம் செய்து வைத்து, தினம் தினம் வீட்டு முன் வந்து நிற்கும் கடன்காரர்களிடம் கதிரை அல்லாட விடவும் முடியாதே?

தாமரையின் குணமா? கதிரின் நிம்மதியா? என்று பார்க்கும் போது, ராமமூர்த்திக்குக் கதிரின் நிம்மதி தான் முக்கியம் என்பதே மேலோங்கி இருந்ததால், “உன் முடிவில் எங்களுக்கு எந்தவித வருத்தமுமில்லைமா” என்றவர்..

அங்கிருந்து புறப்படும் முன் தாமரையின் தலை தொட்டு, ”நல்லா இரும்மா!” என்று அவளை மனதார ஆசீர்வதித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

இரவு வீடு வந்து சேர்ந்தவர், நடந்த விஷயத்தை விஜயாவிடம் சொல்லவும், அவருக்குமே அதுவரை தாமரை மீது இருந்த சுணக்கமெல்லாம் மறைந்து போனது.

அதன்பின் கதிரை தங்கள் வீட்டுக்கு அழைத்து, அவனிடமும் தாமரையின் முடிவை ராமமூர்த்தி தெரியப்படுத்தினார் தான். ஆனால் அப்போதும் அதற்குப் பின்னால் உண்டான அவளின் உண்மையான காரணத்தை அவனிடம் சொல்லாது மறைத்திருந்தார் அவர்.

ஏனென்றால், எந்தப் பெண் தான் இப்படி ஒரு காரணத்தை வெளிப்படையாகச் சொல்லி, தன்னைத் தானே மற்றவர்கள் முன் கீழிறக்கிக் கொள்ளத் துணிவாள்?

அதனால் தான் தாமரை ராமமூர்த்தியிடம், ‘இந்த விஷயம் பற்றிக் கதிரவனுக்குத் தெரிய வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டு இருந்தாள்.

அதன்படியே அவரும், “இப்போதைக்கு அந்தப் பெண்ணுக்கு கல்யாணம் செய்து கொள்ற ஐடியாவே இல்லையாம் கதிர்” என்று மட்டும் அவனிடம் விளக்கம் சொன்னார்.

“ஏன் என்ன காரணமாம்?” என்று எல்லாம் ஒரு வார்த்தை கூட திருப்பிக் கேட்காதவன், “ஓஹ்ஹ்!” என்று மட்டும் சொல்லி விட்டு, “சாப்பிட்டுப் போ!” என்று பலமுறை சொல்லிய விஜயாவிடமும், “இல்லம்மா, வீட்டில் டிபன் ரெடி பண்ணிட்டுத்தான் இங்கு வந்தேன்” என்று மறுப்பு சொல்லி விட்டு  அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

தன் வீடு வந்து டிபன் முடித்து, வெளிவாசலில் ஒரு நாற்காலியில் சாய்வாக கண் மூடி அமர்ந்திருந்தவனின் உள்ளத்திலோ, புதிதாக முளைத்திருந்த சில சலசலப்புகள்..!!

இதற்கு முன்பும் கதிரவனின் கல்யாணப் பேச்சு பல காரணங்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது தான்!

ஆனால் அப்பொழுது எல்லாம் அதை நினைத்துப் பெரிதாகச் சஞ்சலம் கொள்ளாதவன்,

இன்று ஏனோ கொஞ்சம் சஞ்சலித்துத்தான் போனான்.

அதற்குக் காரணம்.. இந்தச் சம்மந்தம் நல்லபடியாக முடியும் என்ற அவனின் அதிகப்படியான நம்பிக்கையா? அல்லது தாமரை தன்னை மறுக்க வாய்ப்பில்லை என்றவனின் அவளின் நிலைக்குறித்தான அதிகப்படியான  கணிப்பா? ஏதோ ஒன்றில் கொஞ்சமே கொஞ்சம் ஏமாந்து துவண்டு போனான் கதிர்.

அந்த ஏமாற்றத்தை ஏனோ கதிரவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை.

மற்றவர்களின் முன் முகத்திற்குத் திரையிட்டு, தன் உணர்வுகளை மறைத்து எதையும் காட்டிக் கொள்ளாவிட்டாலும், அவனிடமே அவனால் பொய்யுரைக்க முடியாது தானே? அதன்பொருட்டே இவ்வாறு தனக்குள்ளே திண்டாடிப் போனான்.

ஒரு மாதிரியான உணர்வுகள் எல்லாம் கிளர்ந்தெழுந்து தன்னை அலை அலையாக அடித்து, தன்னை அலைக்கழிக்கப் பார்க்கவுமே, அதிலிருந்து விடுபட எண்ணியவன், சில நிமிடங்கள் எழுந்து சென்று தனிமையில் யோகா செய்ய ஆரம்பித்தான்.

அதன் பலனாக கிட்டிய மன அமைதியில், அவனின் மன ஆர்ப்பாட்டங்கள் எல்லாமே இருந்த இடம் தெரியாமல் தானாகவே அவனுக்குள் அடங்கிப் போனது.

அதன்பின் வந்த நாட்களில் ராஜம்மாவையும், தாமரையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் வந்த பொழுதும், முன்பு போலவே அவர்களிடம் நடந்து கொண்டான் கதிரவன்.

அதைக் கண்ட ராஜம்மாவுக்குத்தான் சற்று ஏக்கமாக இருந்தது, ‘இப்படி ஒரு நல்லவன் கிடைத்தும் அவனைத் தாங்களே தவிர்க்கும்படி ஆகி விட்டதே?’ என்று..

ஆனால் தாமரைக்கோ அந்த மாதிரி எதுவுமில்லை போல! அதற்குப் பதிலாக, “சீக்கிரம் இந்த சாருக்கு ஏத்த பொருத்தமான பெண்ணா கிடைக்கணும் ஆண்டவா!” என்ற வேண்டுதல் மட்டுமே அவள் மனதில் இருந்தது.

அவரவர் வாழ்க்கையை அவரவர் எண்ணப்படி வாழ்ந்து கொண்டு இருக்கும் போது தான், அந்தச் செய்தி கதிரவனை வந்தது.

எதற்காகவும்  எப்பொழுதும் அசைந்து கொடுக்காதவன், முதல் முறையாகத் தான் கேட்ட செய்தியில், ஒரு நிமிடம் உறைந்தே போனான்.

Advertisement