Advertisement

அத்தியாயம் – 7

வாழ்க்கையில் அதுவரை கேட்காத, கேட்கவும் தோணாத மன்னிப்பை, தனது பொறுப்பில்லா தனத்தினால் விளைந்த குற்ற உணர்வின் காரணமாக மகளிடம் மற்றும் மனைவியிடம் மனதார மன்றாடி மன்னிப்பு கேட்டு, “என் உயிரைக் கொடுத்தாவது நம் மகளைக் காப்பேன்” என அவர்கள் இருவரிடமும் வாக்குறுதி கொடுத்துச் சென்று படுத்தவர், மறுநாள் எழவே இல்லை.

மகளுக்குக் கொடுத்த நம்பிக்கை தனக்கு இல்லாது போனதால் தன் உயிரை விட்டாரா? இல்லை ‘எப்படியாவது என் மகளைக் காப்பாற்று!’ என்று இரவு முழுதும் ஆண்டவனிடம் மன்றாடியவருக்கு, மரணத்தைக் கொடுத்து, அவரின் வேண்டுதலுக்கான வழி இது தான் என்று அந்த ஆண்டவனும் சொன்னாரோ..?? தெரியாது!! ஆனால் அன்றைய பிந்தைய இரவில் முத்துசாமி இறைவனடி சேர்ந்து இருந்தார்.

மறுநாள் காலை எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போட்ட பின்பும் எழாத தந்தையின் உறக்கம் கண்ட தாமரைக்கு முதலில், “என்னாச்சு இவருக்கு? இப்படித் தூங்குறார்..” என்ற நினைப்புத்தான் வந்தது.

அதனைத் தொடர்ந்து ‘நைட் எப்ப வந்து படுத்தார் தெரியலையே? ஒருவேளை இப்போது தான் வந்து படுத்து இருப்பாரோ?’ என்று நேற்றைய நிகழ்வை மனதில் பார்த்தவளுக்கு, அந்நேரம் தந்தையின் முகம் பார்க்கும் போது பாவமாக இருந்தது.

‘தன்னால் தானே தன் தந்தைக்கு இவ்வளவு மன உளைச்சல்! தான் மட்டும் பிறக்காமல் இருந்து இருந்தால் இவர் இப்படிச் சங்கடப்பட வேண்டி இருக்காதே?’ என்று அப்பொழுதும் கூடத் தந்தையின் மீது பழி சுமத்தாது தன்னைத் திட்டிக் கொள்பவளை எல்லாம் என்னவென்று சொல்வது..??!!

திண்ணையில் ஒருக்களித்து உடலைக் குறுக்கிப் படுத்திருக்கும் தந்தையை எழுப்பி, உள்ளே சென்று படுக்கச் சொல்லலாம் என நினைத்தவள், அவரை நெருங்கி, “அப்பா! அப்பா!” என மெல்லிய குரலில் அவரை லேசாகத் தட்டி எழுப்பினாள்.

என்ன எழுப்பியும் கண் விழிக்காது, கொஞ்சமும் அசைந்து கொடுக்காத தந்தையின் விறைத்த உடலை உணர்ந்தவளுக்கு நெஞ்சம் உறைந்து போனது அச்சத்தில்!!

பயத்தில் வெறி கொண்டவளாக, “அப்பா! அப்பா!” என ஊரே கேட்கும்படி சத்தம் போட்டுக் கத்தி எழுப்ப முயன்றவளின் முயற்சி அவளின் தந்தையிடம் தோற்றுப் போன போதும், அக்கம்பக்கத்தினரிடம் ஜெயித்து இருந்தது.

தாமரையின் இடி முழக்கம் கேட்டு, என்னவோ ஏதோ என்று புரியாத போதும், மனம் பிசைய, ஊரார் அனைவரும் பதறியடித்துக் கொண்டு குரல் கேட்ட திசை நோக்கி ஓடி வர ஆரம்பித்தனர்.

கூடிய கூட்டத்தினரில் முதலில் அங்கு வந்த சின்னப்பன், முத்துசாமியின் உடலை ஆராய்ந்து பார்த்த மறு வினாடியே, அவரின் உயிர் பிரிந்து விட்டது என்று சொல்லி விட்டார்.

இருந்த போதும், மனம் கேளாது இன்னும் சிலர், ‘முத்துசாமி இந்தப் பெண்ணுக்காகவாவது எங்கேயாவது உயிரை பிடித்து வைத்து இருக்க மாட்டானா?’ என்று மாறி மாறி முயற்சித்துப் பார்த்த போதும், முடிவு என்னவோ என்றுமே மாறாத ஒன்றாகவே இருந்தது.

சுற்றி இருந்த அனைவருக்குமே போன உயிரை விட, அங்கு அந்த உயிரை நினைத்துக் கதறி துடிக்கும் உயிரை காணும் பொழுது தான் நெஞ்சம் அடைத்தது.

நேற்று வரை, ‘இப்படி ஒரு அப்பன் இந்தப் பொண்ணுக்கு இருப்பதை விட இல்லாமலே இருக்கலாம்!’ எனக் கரித்துக் கொட்டியவர்கள் கூட, முந்தின நாள் மகளுக்காக முத்துசாமி போட்ட சண்டை அறிந்ததும், இன்று கண் முன்னே ஒரு பெண் அனாதையாகி கதறி துடிப்பதையும் காணும் போது, தானாகவே அவர்களின் மனதில், ‘இந்தப் பொண்ணுக்காகவாவது அந்த மனுஷன் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து இருக்கலாம்!’ என்றே நினைக்கத் தோன்றியது.

“அடப்பாவி! அடப்பாவி! நேத்து தானேடா சொன்ன, என் பொண்ணை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்னு.. நானும் நம்பினேன்டா. ஆனா இப்படி உண்மையிலுமே உயிரை விடுவேன்னு நான் கனவிலும் நினைக்கலையேடா முத்துசாமி??” என்று துக்கம் தாளாது, தந்தையின் பிரிவு துயரில் தாங்காது, அவரைப் பிடித்துக் கொண்டு அரற்றிக் கொண்டு இருக்கும் தாமரையை, தன் மடியில் இழுத்துப் போட்டுக் கொண்டு முறையிட்ட ராஜம்மாவிற்குப் பதில் சொல்லக் கூடியவரோ, பதிலில்லாது அமைதியாகப் படுத்து இருந்தார்.

‘அழுது புரண்டாலும் மாண்டவர் மீண்டு வரப் போவதில்லை’ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப தாமரை ஒரு புறம் எவ்வளவு அழுது புரண்டு கொண்டு இருந்தாலும், மறுபுறம் முத்துசாமியின் இறுதி சடங்கிற்கான வேலை நடந்து கொண்டு தான் இருந்தது.

ஊராரின் உதவி மற்றும் உற்றாரின் துணையுடன் முத்துசாமியின் பூத உடலை, சில பல சலசலப்புகளுக்கு இடையிலும், நல்ல முறையில் அடக்கம் செய்து முடித்திருந்தாள் தாமரை.

ஆனால் மறுநாள் தந்தையின் காரியம் நடந்து முடிக்கும் முன், ‘கொடுத்த கடனைத் தா! இல்லை உன்னைத் தா!’ என்று அங்கு வந்து நின்று இருந்தான் வேலு. முதலில் தாமரைக்காக வக்காலத்து வாங்கிய ஊர்க்காரர்கள் மற்றும் உறவினர்கள், “உனக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? அந்தப் பெண்ணே தந்தையை இழந்து தவித்துப் போய் நிக்குது. அதுகிட்ட போய் இப்படிக் கேக்குறியே?” என்று இப்படி இன்னும் பலப்பல கேள்விகளைக் கேட்டு வேலுவைச் சாடினர்.

அவர்களை எல்லாம் தன்னுடைய ஒரே வாக்கியத்தில் அடக்கி ஒடுக்கி ஓரமாய் நிற்க வைத்து விட்டான் வேலு. “என்ன ரொம்பத்தான் எல்லாரும் துள்ளுறீங்க?” என்று கூடிய கூட்டத்தினரைப் பார்த்துத் தெனாவெட்டாகக் கேட்டவன்,

“அவளோ அக்கறை இவ மீது இருந்தா, அவ கொடுக்க வேண்டிய கடனை வட்டியும் முதலுமா இப்பவே நீங்க கொடுங்க. நான் வாயைப் பொத்திக்கிட்டு வந்த வழியே திரும்பிப் போறேன்.

என்ன நீ கொடுக்கிறியா? என்ன நீ கொடுக்கிறியா?” என்று சற்று முன்பு தன்னை அதட்டியவர்களை எல்லாம் வரிசை கட்டி நிற்க வைக்காத குறையாகப் பணத்தைக் கேட்டான் வேலு.

அன்றாடம் உழைத்துச் சம்பாதித்து பிழைப்பு நடத்துபவர்களால், எப்படி அவன் கேட்கும் பணத்தை எடுத்துக் கொடுக்க முடியும்??

அதனால் அவனை எதிர்த்துப் பேச முடியாது, வாயை மட்டுமில்லாது மனசாட்சியையும் சேர்த்து அடைத்துக் கொண்டு, அனைவரும் அமைதியாகிப் போயினர்.

அதனைக் கண்ட வேலுவுக்கு, ‘இனி தாமரை தனக்குத்தான்’ என்ற எண்ணம் வலுப்பெற்று விட்டது.

அதன் வெளிப்பாடாகச் சுத்தி முத்தி நிற்பவர்களை ஏளனப் பார்வை பார்த்து, “அப்புறம் என்னப்பா.. அதான் எல்லாருமே நான் செய்றது சரின்னு சொல்லிட்டீங்களே??” என்றவன்,

மேலும் அதே தொணியில், “எனக்குச் சொந்தமானவளை இனி நான் எப்படி இங்கே தனியா விட முடியும்? சொல்லுங்க.. அதனால இப்பவே இவளை என் கூடப் பாதுகாப்பா கூட்டிட்டுப் போறேன். கல்யாண தேதி வச்சுட்டு உங்களையெல்லாம் கூப்பிடுறேன். வந்து சாப்பிட்டுட்டுப் போங்க” என்றான்.

ஊரையே அரட்டி மிரட்டி ஒடுங்க வைத்தவன், ’இனி யார் இருக்கா என்னைத் தடுக்க?’ என்ற எகத்தாளத்துடன் விசில் அடித்தபடி, அத்தனை நேரமும் அவனின் அடாவடி பேச்சுகளில் அரண்டு கண்ணீர் சிந்தியபடி நின்று இருந்தவளைப் பிடித்து இழுத்துச் செல்ல தன் கரத்தை அவளை நோக்கி நீட்டினான் வேலு.

தன்னைத் தொட முயலுபவனைக் கண்டு, ‘இப்படியே பூமியில் புதைந்து செத்து விட மாட்டோமா?’ என்று வெந்து போனவளைக் காக்கும் கடவுளாக வேலுவின் கரத்தைத் தீயாக குறுக்கே வந்து தட்டி விட்டார் ராஜம்மா.

தன்னைக் கண்களாலேயே வெட்டி விட்டு ‘எட்டி நில்!’ என்று எச்சரித்தவரின் செய்கையில், அவரைத் திரும்பி அசால்ட்டாகப் பார்த்தான் வேலு. அடுத்து அவன் தன்னிடம் என்ன கேட்பான் என்று தெரிந்தும், அதைத் தன்னால் கொடுக்க முடியாது என அறிந்தும், பேத்தியாய் பாசம் காட்டிய பெண்ணை மற்றவர்களைப் போல இயலாமையில் கைவிட முடியவில்லை போல அவரால்.

“என்ன கிழவி? கையை எல்லாம் தட்டி விடுற. எனக்குக் கொடுக்க பணம் நிறைய வச்சு இருக்க போல!” என்றவனை ஏற இறங்க கேவலமாகப் பார்த்தவர்,

“பணம் இருந்தா தான் இந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியும்ன்னா, அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன். இவளை நெருங்காதே!” என்றவரின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான் வேலு.

“யாரு நீ?? பணத்தை.. அதுவும் அவ்ளோ பணத்தை.. எப்பா!! முடியலடா சாமி..!!” என்று எள்ளி நகையாடியவன்,

“ஏன் பாட்டி? எதுக்கு உனக்கு இந்த வீண் ஜம்பம்? நீயே இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துகிட்டு இருக்க.. இதுல உன்னை நம்பி எவன் தருவான் அவ்ளோ பணம்?

போ பாட்டி.. போய் வெத்தலை போடுற வேலையை மட்டும் பாரு!” என்று மீண்டும் தாமரையை நெருங்கப் போனவனைத் திடமாகத் தடுத்து நிறுத்தி, அவளைத் தனக்குப் பின்னால் மறைத்து நிறுத்திக் கொண்டார் ராஜம்மா.

“உனக்குத் தேவை பணம்.. அதைத்தான் நான் தரேன்னு சொல்லிட்டேன்ல.. அப்புறம் உனக்கென்ன இங்கே வேலை?” என்றவர்,

‘வெளியே போ!’ என்று சொல்லாமல் சொல்லும் விதமாக நிற்கவும், பொறுமை இழந்து அவரைக் கொல்லும் வெறியில் வேலு அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் முன்..

வேலுவின் எண்ணம் புரிந்தவர், அவனைத் தன்னால் மட்டும் எதிர்த்து விட முடியாது என்று சமயோஜிதமாக யோசித்து, சட்டென்று சுற்றி இருந்தவர்களை நோக்கிக் கை நீட்டி, “என்னப்பா..? எல்லாரும் இப்படியே அமைதியா நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்? நாளைக்கு உங்க வீட்டுப் பொண்ணுங்களுக்கும் இந்த மாதிரி ஒரு நிலைமை வந்தாலும், இப்படித்தான் எல்லாரும் சிலையாட்டம் நின்னுட்டு இருப்பீங்களா??” என்று கேட்டு ஊராரை வேலுவுக்கு எதிராக உசுப்பேத்தி விட முயன்றார்.

அவரின் பேச்சில், முன்பு பணத்தினால் வாயடைத்து நின்றவர்கள் எல்லாம், இப்பொழுது வீராவேசம் பெற்று ஒருவர் மாற்றி ஒருவர், “இந்தாறு வேலு.. நீ செய்வது சரியில்லை சொல்லிட்டேன். அந்த அம்மா பணம் தரேன்னு சொன்ன பிறகும், நீ எப்படி எங்க ஊரு பொண்ணுகிட்ட நெருங்குவ? நீ பண்றதை எல்லாம் பார்த்துட்டு இருக்க எங்களை என்ன பொட்ட பயலுகன்னு நினைச்சீயா…?” என்று ஆளாளுக்கு வேலுவை நோக்கி சவுண்டு விட ஆரம்பித்தனர்.

‘இனி, தான் ஒரு அடி தாமரையை நோக்கி எடுத்து வைத்தாலும், அங்கே தன் தலை உருள்வது உறுதி’ என்று வெகுண்டு திரண்ட ஜனத்தைக் கண்டு கொஞ்சம் ஜெர்க்காகிப் போனான் வேலு.

அதனால் சட்டென, “சரிப்பா, என்னோட பணத்தைக் கொடுக்கச் சொல்லுங்க.. நான் கிளம்புறேன்” என்றான் கறார் குரலில். அவனுக்கு நன்கு தெரியும், ராஜம்மாவிடம் அவ்வளவு பணம் இருக்க வாய்ப்பில்லை என்று.

அவனின் மனக்கணக்கைப் பொய்யாக்காதவாறு ராஜம்மாவும், ”நாங்க என்ன உன்னை மாதிரி ஊரை ஏமாத்தி உலையிலா போட்டு வைத்து இருக்கோம்.. நீ கேட்டவுடன் பணத்தை எடுத்து கொடுக்க.. பணத்தை ஏற்பாடு பண்ண கொஞ்சம் டைம் கொடு” என்றார்.

அவரின் பேச்சில் வேலுவின் ரத்தம் சூடேற, “என்ன வாய் ரொம்ப நீளுது??” என்று அவரை நோக்கிக் கர்ஜித்தவன் மேலும், “என் பணம் எனக்கு இப்பவே வேணும்” என்றான் திடமாக.

அதைக் கேட்ட ராஜம்மா மீண்டும் சுற்றி இருந்தோரையே அவனிடம் பஞ்சாயத்து பண்ண வைத்து, வேலுவின் பேச்சைத் தகர்த்தது மட்டுமில்லாது, அவனின் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கான நாட்களையும் இன்னும் பத்து நாள் தள்ளி வாங்கி இருந்தார்.

வந்த வேலை முடியாத கோபம் கொடுத்த எரிச்சலில் ராஜம்மாவை உறுத்து விழித்த வேலு, “நீ எப்படிச் சொன்ன தேதிக்குள் பணத்தை புரட்டுறேன்னு நானும் பார்க்கிறேன்..??!!” என்ற சவாலை கண்களாலே அவரிடம் கடத்தி விட்டு, அங்கிருந்து ஆக்ரோஷம் அடங்காதவனாகத் தன் ஆட்களை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

வேலுவின் கோபமறிந்த போதும், அதை நினைத்து அந்த நேரம் கவலை கொள்ளாது, “எப்படியோ இன்று தாமரையை அவனிடமிருந்து காப்பாற்றி விட்டோம்” என்ற நிம்மதி கொடுத்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக, தனக்கு அருகில் மழையில் நனைந்த கோழி குஞ்சாக நடுநடுங்கிக் கொண்டு இருந்த தாமரையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர், அவளின் முதுகு தடவி கொடுத்து, “நான் இருக்கிறேன் உனக்கு! பயப்படாதே!” என்றார் ஆதரவாக.

அந்த அடைக்கலத்தில் தாயிடம் ஒன்றும் சேயாக மாறி அவரிடம் முழுதாக ஒன்றிக் கொண்டாள் தாமரை.

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ராஜம்மாவின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைக்கும் ஆயுதமாகவே இருந்தது.

அவர் பணம் கேட்ட எவரும் அவருக்குப் பணம் கொடுக்காது இழுத்தடித்ததில் மிகவும் துவண்டு போனார் அவர்.

அவரின் தின அலைச்சல் கண்ட தாமரைக்கோ, ‘தன்னால் தான் இவருக்கு இவ்ளோ கஷ்டம்..??!!’ என்ற மன உளைச்சல்!!

அப்படித்தான் ஒரு நாள் காலை எப்போதும் போல ஒருவரிடம்  பணம் கேட்டுப் போய், அது கிடைக்காது சோர்ந்து வீடு திரும்பிய பாட்டியைக் கண்டு நெஞ்சம் பொறுக்காதவள், “நீங்க இப்படிக் கஷ்டப்படுவதற்குப் பதில் நான் அந்த ஆளையே கட்டிக்கிட்டு கஷ்டப்பட்டுட்டுப் போறேன் பாட்டி” என்று அவரின் மடி சாய்ந்து கதற ஆரம்பித்தவளை அன்று சமாதானப்படுத்துவது ராஜம்மாவுக்குப் பெரும்பாடாகிப் போனது.

அதுவே தொடர் கதையாகத் தொடர்ந்தது.

இன்னும் மூன்று நாட்களில் வேலு அவர்களுக்குக் கொடுத்த கெடு முடிவடைய போகிறது என்ற நிலையில், இதற்கு மேலும் ஊரில் உள்ளவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட ராஜம்மா, நிதானமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்து இருந்தார்.

அதன்படி தாமரையையும் அழைத்துக் கொண்டு மீண்டும் வேலைக்கு வந்து இருந்தார். எப்படியாவது, யாரையாவது பிடித்தாவது முதலாளியிடம் கடன் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில்..

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் கதிரவனே இன்று அவரிடம், “என்னாச்சு?” என்று கேட்கவும், மொத்தத்தையும் அவனிடம் ஒன்று விடாது சொல்ல ஆரம்பித்து விட்டார்.

“பாவம் தம்பி அந்த அப்பாவி பொண்ணு!! யாரோ செஞ்ச தப்புக்குத் தன் வாழ்க்கையைப் பலிகடாவாக்கக் காத்திட்டு இருக்கு” என்று தாமரையின் நிலையை அவனிடம் விளக்கிச் சொன்னவர்,

இறுதியாக, “நீங்க மனசு வச்சா அந்தப் பெண்ணை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றி விடலாம் தம்பி” என்று சொல்லி நிறுத்தவும், “நானா?? நான் எப்படி??” என்று கேட்டான் கதிரவன் புரியாது.

“நீங்க தான் தம்பி எப்படியாவது மேனேஜர் சார்கிட்ட பேசி ஆபிசில் அந்தப் பெண்ணுக்கு கடன் வாங்கித் தரணும்” என்று அவனிடம் வேண்டுகோள் வைத்தார் ராஜம்மா.

தாமரையின் நிலை அறிந்த கதிரவனுக்கு, ‘பாவம் அந்தப் பொண்ணு!’ என்ற எண்ணம் எழாமல் இல்லை.

ஆனாலும் இன்னும் முழுதாக ஒரு வருடம் கூட இங்கு வேலை செய்து முடிக்காத பெண்ணுக்கு எப்படி அலுவலக கடன் தன்னால் கொடுக்க முடியும்? அது சிறிதும் சாத்தியமில்லை என்பதை நன்கு அறிந்திருந்தவனுக்கோ, இந்த உண்மையை எப்படித் தன்னையே கடைசி நம்பிக்கையாகப் பார்த்திருப்பவரிடம் சொல்வது? என்ற தர்ம சங்கடம்!

அதற்காகப் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து அவரை இன்னும் ஏமாற்றத்தில் தள்ளி விட விரும்பாதவன், இருதலைக் கொள்ளி எறும்பாக அந்நேரம் திண்டாடினான்.

ஆனாலும் வெளியில், “நான் என்னால் முடிந்த வரை அந்தப் பெண்ணுக்காக லோனுக்கு முயற்சிக்கிறேன் பாட்டி” என்றான்.

நிம்மதியின்றி தத்தளித்துக் கொண்டு இருந்தவருக்கு கதிரவனின் இந்த வார்த்தைகள் போதாதா…?? “ரொம்ப நன்றி தம்பி! நீங்க நல்லா இருப்பீங்க தம்பி!” என்று கதிரவனை மனதார வாழ்த்தி விட்டு, அங்கிருந்து அந்த நல்ல செய்தியைத் தாமரையிடம் சொல்ல முகம் கொள்ளா சந்தோஷத்துடன் கிளம்பினார் ராஜம்மா.

அவர் என்னவோ சென்று விட்டார். ஆனால் அவர் சொன்ன செய்தியோ, இல்லை அந்தப் பெண்ணின் நிலையோ, எதுவோ ஒன்று கதிரவனைத் தன்னிலை இழக்கச் செய்து தடுமாற செய்து கொண்டு இருந்தது.

மிகவும் பிரயத்தனப்பட்டு அதிலிருந்து தன்னைத்தானே மீட்டுக் கொண்டு, அன்றைய வேலைகளை முடித்து வீட்டுக்குச் செல்ல பாக்டரி வாசல் வந்து நின்றவன் முன்னால், திடீரென மூச்சு வாங்க ஓடி வந்து நின்றவளைக் கண்டு கதிரவன் அதிரும் முன், அவனின் காலில் விழுந்து இருந்தாள் தாமரை.

முக்கால்வாசி பேர் வேலை முடிந்து சென்று இருந்ததால் வெளியே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருந்தாலும்… ‘ஒரு பெண் சடாரென தன் காலில் விழுவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?’ என்று நினைத்த கதிரவன் உடனே குனிந்து, “என்ன பண்ற நீ? எழுந்திரி!” என்று சுற்றும் முற்றும் பார்த்தபடியே சொன்னான்.

அவனின் சொல்பேச்சு கேட்டு எழுந்து நின்றவள், “ரொம்ப நன்றி சார்.. பாட்டி சொன்னாங்க, நீங்க பணத்தை கடனாக வாங்கித் தரேன்னு சொன்னீங்கன்னு” என்று கலங்கிய விழிகளுடன் சொன்னவளைக் கண்டவனுக்கோ, “நான் எப்போ அப்படிச் சொன்னேன்??” என்ற எண்ணம்.

அதை அறியாதவளோ, “என் வாழ்நாள் முழுவதும் இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன் சார்! உங்களையும் தான் சார்!”என்று அவள் சொன்ன நொடி கதிரவனினுள் ஒரு அதிர்வு!!

அவன் அதை உணர்ந்து முடிக்கும் முன், ”நான் மாடா உழைச்சாவது அந்தக் கடனை திருப்பி அடைச்சிடுவேன் சார். என்னை நீங்க நம்பலாம் சார்” என்று உற்சாகப் பெருக்கில் சொல்லி முடித்தவளுக்கு, தான் என்ன பதில் சொல்வது என்றே விளங்காத நிலை கதிரவனுக்கு.

“நன்றி எல்லாம் எதுக்கு? நான் ட்ரை பண்ணுறேன்… நீ இப்போ கிளம்பு!” என்று பதற்றம் பற்றிக் கொள்ள, கதிரவன் தாமரையை எப்படியாவது யாரும் பார்க்கும் முன் அங்கிருந்து அனுப்ப அவன்  முயற்சித்துக் கொண்டு இருந்த நேரம், அங்கு வந்து சேர்ந்தார் ராஜம்மா.

“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி.. ரொம்ப வேதனை பட்டுக்கிட்டு இருந்தவளுக்கு விடிவு காலம் பொறக்கப் போகுதுன்னு தெரிஞ்சதும் சந்தோஷத்தில் உங்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சா. அதான் நீங்க வேலை முடிஞ்சு வர வரைக்கும் ரெண்டு பேரும் வெளியே காத்திட்டு இருந்தோம்.

நான் கூட வருவதற்குள் இவ ஓடி வந்துட்டா. அவ்ளோ சந்தோஷம்!!” என்று தாமரையின் முக மலர்ச்சியைக் கண்டு உள்ளம் மலர்ந்து ராஜம்மா சொல்வதைக் கேட்ட கத்திரவனுக்குத்தான், ஏனோ அவர்களின் சந்தோஷத்தில் முழுதாகப் பங்கு கொள்ள முடியவில்லை.

இவர்களின் உரையாடல் நடந்து கொண்டு இருக்கும் போதே அங்கு வீடு செல்ல வண்டியை எடுத்து வந்து நிறுத்திய முருகன், “போலாமா சார்?” என்று கதிரவனிடம் கேட்டான்.

“சரி பாட்டி, நான் கிளம்புறேன்” என்று ராஜம்மாவிடம் சொல்லவும், “சரிப்பா” என்று அவர் தலையாட்ட, தாமரையின் புறம் திரும்பாமலே ஜீப்பின் முன் சீட்டில் ஏறி அமர்ந்து வீடு நோக்கிச் சென்றான்.

தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாது கிளம்பிச் சென்றவனையே பார்த்திருந்த தாமரையின் முகத்தையே, ஜீப்பின் பக்கவாட்டு கண்ணாடியில் சாலை விளக்கின் உதவியுடன் கண்டுகொண்டு இருந்த கதிரவனுள் சொல்ல முடியாத ஆயிரம் போராட்டங்கள்!!

“போலாமா தாமரை?” என்ற பாட்டியின் வார்த்தைகளில் தன்னை மீட்டு எடுத்துக் கொண்டவளும் “சரி! அவுங்க பேசலைன்னா என்ன? அதான் பணம் ஏற்பாடு பண்ணித் தர்றேன்னு சொல்லிட்டாங்களே.. அது போதாதா?” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு உற்சாகத்துடனே பாட்டியுடன் வீடு வந்து சேர்ந்தாள்.

Advertisement