Advertisement

அத்தியாயம் – 6

என்றும் விடியும் விடியல் தான் அன்றும் தனக்கு விடிந்து இருக்கிறது என்று நினைத்துத்தான் கதிரவன் அலுவலகம் கிளம்பிச் சென்றது.

ஆனால் அங்கு சென்ற பின் தன் வாழ்க்கையே தலைகீழாக மாற போகிறது என்று அறியாமல், தன்னுடைய அன்றைய பணிகளைக் கவனிக்க ஆரம்பித்தான் அவன்.

மதிய உணவுக்குப் பின் பேக்கிங் அண்ட் செக்கிங் பிரிவில் மேற்பார்வைக்குச் சென்றவன், அங்குத்தான் ஏதோவொரு பலத்த யோசனையின் பிடியில் தன்னைக் கவனிக்காது கடந்து செல்ல முயன்ற ராஜம்மாவைக் கண்டான்.

சாதாரணமாகக் கதிரவன் யாருடைய சொந்த விஷயங்களில் தலையிடவும் மாட்டான். எதைப் பற்றியும் அவர்களிடம் தோண்டித் துருவி கேள்வியும் கேட்க மாட்டான்.

அப்படிப்பட்டவன் அன்று ராஜம்மாவை அழைத்து நிறுத்தி இருந்தான் என்றால், அதற்கு அவரிடம் வெளிப்பட்ட துவளல் ஒரு காரணமாக இருந்தாலும், அதையும் மீறி அவனுள் வேறு ஒரு காரணமும் இருந்தது.

அது அவர் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு வரவில்லை என்பது தான்.

“உடல்நிலை எதுவும் சரியில்லையா?? இல்லை வேறு எதுவும் பிரச்சனையா??” என்று நினைத்து அவரின் வருகைக்காகப் பொறுத்து இருந்தவனுக்கு, இப்பொழுது அவரைக் காண நேர்ந்த போது, நொடியும் தாமதிக்காது, பொறுமையிழந்து அவரை அழைத்து, அவரின் உடலைநிலை குறித்து அக்கறை குரலில் விசாரிக்க ஆரம்பித்திருந்தான் கதிரவன்.

அதுவரை அங்கு அவனிடம் வேலை விஷயமாக பேசிக் கொண்டு இருந்த பாண்டி, இருவரின் உரையாடலில், அவர்களையே குறிப்பாகக் கதிரவனையே கொஞ்சமே கொஞ்சம் ஆச்சரியம் மேலோங்கப் பார்வையால் விழுங்க ஆரம்பித்தார்.

பின்னே? இத்தனை வருடம் அவனுடன் வேலை நிமித்தமாகப் பழகி வரும் யாரிடமும் ஒரு வார்த்தை பெர்சனலாக இதுவரை பேசாதவன், அவ்வளவு ஏன்? அவனின் உயரதிகாரிகளைக் கூட இதுவரை ‘நல்லா இருக்கீங்களா??’ என்று ஒரு முறைக்காகக் கூட கேட்காதவன்.. இன்று அதை இரண்டையும் இந்தப் பெண்மணியிடம் செய்து கொண்டு இருப்பதைக் கண்டு அவர் ஆச்சரியப்படாமல் வேறு என்ன செய்வார்?

‘இவனுக்கு இவ்வளவு கனிவாகக் கூட மற்றவர்களிடம் பேசத் தெரியுமா?’ என்று வாய் பிளக்காத குறையாகக் கதிரவனையே பார்த்திருந்தவரின் பார்வையை உணர்ந்தார் போல, சட்டென்று ராஜம்மாவுடனான தன் பேச்சை நிறுத்தி விட்டு, அவரின் புறம் திரும்ப, அந்தச் செய்கையில் திடுக்கிட்டுப் போனார் பாண்டி.

“நான் சொன்ன எல்லாம் நெக்ஸ்ட் டைம் பேக்கிங்ல ரீப்பீட் ஆகாம பார்த்துக்கோங்க”

மேலும், “இவங்க கூட நான் கொஞ்சம் பேசணும். அவங்க சூப்பர்வைசர்கிட்ட இந்தத் தகவலைக் கொஞ்சம் சொல்லிடுறீங்களா?” என்று சொல்லி விட்டுத் தன்னுடைய கேபினுக்கு ராஜம்மாவை அழைத்துக் கொண்டு சென்றான்.

அதையும் ஒருவித வியப்புடனே கண்டு விட்டு, அவன் சொன்ன வேலையைச் செய்ய இன்சார்ஜை நோக்கிச் சென்றார்.

தன்னுடைய அறைக்கதவைத் திறந்து ராஜம்மா உள்ளே வரும் வரை காத்திருந்து அதை மூடிய கதிரவன், தன் இருக்கையில் அமர்ந்தவாறு, தனக்கு முன்னே இருந்த சேரில் ராஜம்மாவை முதலில் அமரச் சொன்னான்.

“என்னாச்சுமா?”

“ஒன்னுமில்ல தம்பி” என்று வெளியில் சொன்ன பதிலையே மீண்டும் தன்னிடம் ஒப்பிக்க முயன்றவரின் வார்த்தைகளை, அவர் முடிக்கும் முன், தன் பேச்சால் அதை நிறுத்தி இருந்தான் கதிரவன்.

“என்கிட்டே உண்மையைச் சொல்லுங்கம்மா! உங்க முகமே சொல்லுது ஏதோ இருக்குன்னு. அது என்னன்னு என்கிட்டே சொல்லுங்க, என்னால முடிஞ்ச உதவியைச் செய்றேன்”

அதோடு விடாது, “உங்க உடம்புக்கு எதுவும் முடியலையா? பணம் எதுவும் தேவைப்படுதா?” என்று அடிமட்ட மக்களின் அடிநாதமாக இருக்கும் பிரச்சனை குறித்து முதலில் அவரிடம் கேட்டறிய முற்பட்டான்.

ஏனென்றால் அவனுக்குத் தெரிந்த வரை ராஜம்மாவுக்கு பிள்ளைகள் யாருமில்லை. அவரின் கணவர் திருமணமான மூன்றே மாதத்தில் அவரை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும், வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளாது வாழும் தனி மனிதி அவர்!

அதனால் தான் அவரின் மீது அதிக அக்கறை எடுத்து அவ்வாறு பேசிக் கொண்டு இருந்தான் கதிர். அவனின் அந்த அக்கறையில் ஒரு நிமிடம் உருகி போனவரின் கண்கள் ஏனோ சட்டென்று ஈரமாகிப் போனது.

அதைக் கண்டு பதறி போனவன், ‘கேட்க கூடாததை எதையும் கேட்டு விட்டோமோ??’ என்று பயந்து போய், “தப்பா எதுவும் கேட்டு இருந்தா என்னை மன்னிச்சுடுங்கம்மா..” என்றான் வருந்திய குரலில்.

அவனின் தவறான புரிதல் கொடுத்த சங்கடத்தில், “அச்சோ! என்னப்பா மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு?” என்றவரின் கண்ணீரே அவனின் அத்தகைய கேள்விக்கான மூலக்காரணமென உணர்ந்து, உடனே தன் முந்தானை கொண்டு கண்களின் ஈரத்தை ஒற்றி எடுத்தார்.

பின் அவனை ஏறிட்டு, “உன்னை மாதிரி தான்பா தாமரையும்.. என் முகம் பார்த்தே என் நலம் விசாரிப்பா. எனக்கு ஒண்ணுன்னா கூடவே இருந்து அன்பா கவனிச்சுப்பா. தங்கமான பொண்ணு தம்பி! ஆனா இன்னைக்கு அந்தப் பெண்ணுக்கு ஒரு துன்பம்ன்னு தெரிஞ்சும், என்னால ஒன்னும் செய்ய முடியாததை நினைச்சா தான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு தம்பி” என்று அதுவரை அழுத்திக் கொண்டு இருந்த மனபாரத்தை எல்லாம் அவனிடம் இறக்கிக் கொண்டு இருந்தார் அந்த முதியவர்.

அவரின் பேச்சைக் கேட்டவனுள்ளோ, ‘யார் அந்தத் தாமரை? இவரைப் பற்றி விசாரித்தால் எதற்கு அந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருக்கார்?”

பெரியவரின் ஆற்றாமை பேச்சைத் தடுக்காது பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தவனுள் திடீரென ஒரு மின்னல் கேள்வி..!! ‘ஒருவேளை அவளா இருப்பாளோ இந்தப் பெண்?’ என்று!

‘இவருடன் தானே எப்பவும் அவளும் இருப்பாள்? போன வாரம் அவளும் வேலைக்கு வந்தது போல இல்லையே!’ என்று எண்ணம் போன போக்கில் பலவிதமாகத் தனக்குள் சிந்திக்க ஆரம்பித்திருந்தவனை, “மன்னிச்சுடுங்க!” என்ற குரல் நினைவுலகுக்குச் சட்டென அழைத்து வந்து இருந்தது.

“நீங்க ஒண்ணு கேட்டா நான் என்னென்னத்தையோ உளறிக்கிட்டு இருக்கேன்” என்றவரின் மீதி பேச்சையும் கேட்டு முடித்தவனுள்ளோ, ஏதோ ஒரு உந்துதல்! அதை ஏன் என்று ஆராய்ந்து அவன் தடுக்க முற்படும் முன், “அந்தப் பெண் உங்க உறவா?? என்ன பிரச்சனை அவுங்களுக்கு??” என்ற வார்த்தைகள் அவனிடமிருந்து வெளிப்பட்டு இருந்தது.

கேட்ட பின் தான், ‘இதை நாம் ஏன் இவரிடம் கேட்டோம்…? அந்தப் பெண் யாராக இருந்தால் எனக்கென்ன ஆகப் போகிறது? என்னைப் பற்றி என்ன நினைப்பார் இவர்?’ என்று தன்னைத்தானே திட்டித் தீர்த்தவனின் நினைப்புகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல இருந்தது, ராஜம்மாவின் வாயிலிருந்து வந்த அடுத்தடுத்த வார்த்தைகள்..

“என் வீட்டுக்குப் பக்கத்து வீட்ல தான் தம்பி அந்தப் பொண்ணு இருக்கா” என்று தாமரையின் பிறப்பு, அவளின் தாயின் மறைவு, தந்தையின் பொறுப்பில்லாத குடிகாரத்தனம் என்று அவளின் பெற்றோர் குறித்து முதலில் சுருக்கமாகச் சொன்னவர்..

அடுத்து அவள் வாழ்வில் அடித்த சூறாவளியைப் பற்றியும், அதில் அவள் பஞ்சாய் சிதறி போய் நிர்கதியாய் இன்று நின்றிருப்பதையும் சற்றுக் கம்மிய குரலில் சொல்ல ஆரம்பித்தவரின் மனதிலோ, ‘இந்தத் தம்பியின் மூலமாவது அந்த அப்பாவி பெண்ணுக்கு ஏதாவது ஒரு உதவி கிடைத்து விடாதா?’ என்ற பேராசை அதிகமாகவே வேரூன்றி இருந்ததை அவர் மட்டுமே அறிவார்!

அந்த ஆசை தான், அவரை முன்பின் தெரியாத பெண்ணைப் பற்றி ஒரு ஆடவனிடம் சொல்லவும் வைத்துக் கொண்டு இருக்கிறது.

தாமரையின் தற்பொழுதைய நிலையைப் பற்றிக் கதிரவனிடம் சொல்ல ஆரம்பிக்கவுமே, அந்தக் கொடிய நிகழ்வு இன்றும் படமாக அவரின் கண் முன்னே விரிய ஆரம்பித்தது.

ஒரு வாரத்திற்கு முன்..

வேலை முடிந்து வீடு வந்த தாமரை இரவு உணவைத் தயார் செய்து கொண்டு இருந்த நேரம், வீட்டின் உள்ளே தந்தையின் குரல் கேட்டு, நறுக்கிக் கொண்டு இருந்த காயை அப்படியே தண்ணியில் போட்டு விட்டு, கையைப் பாவாடையில் துடைத்தபடி எழுந்து நடுவீடு வந்தாள் தாமரை.

அங்கே சுவற்றில் சாய்ந்து தாயின் படத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த தந்தையிடம் வெளிப்பட்ட நிதானத்தையும், அவர் கண்களின் உணர்வையும் கண்டு சற்றுக் குழம்பிப் போனவள்,

“அப்பா” என்று அழைத்தாள்.

மகளின் குரல் கேட்டு அவளை நிமிர்ந்து பார்த்த முத்துசாமிக்கோ நெஞ்சம் அடைத்தது குற்றணர்வில்!

அதில் மகளை நேருக்கு நேர் சந்திக்க முடியாது தலையைத் தொங்கப் போட்டார் அவர்.

தந்தையின் செயலைக் கண்டு பதறியவளோ, அவர் அருகில் சென்று, “என்னாச்சுப்பா?” என்று அவரின் தோள் தொட்டுக் கேட்டாள்.

மகளின் தவிப்பில் பெருவலி ஒன்று உள்ளத்தை தைத்து எடுப்பது போன்று உணர்ந்தவரின் நெஞ்சத்திலோ, ‘மனைவி சென்ற பின் தான் ஒரு நல்ல தந்தையாகத் தன் மகளுக்கு இல்லாத போதும், எப்பொழுதும் தன்னை ஒரு தாயாகத்தானே பார்த்துக் கொண்டாள் என் மகள்? அவள் வாழ்க்கையைப் போய் நானே நாசம் பண்ணிட்டு வந்து இருக்கேனே?” என்ற ஆற்றாமையில் தன்னுள்ளே போராடிக் கொண்டு இருந்தவரை மீண்டும் உலுக்கினாள் தாமரை.

“என்னப்பா பண்ணுது உடம்புக்கு?” என்று கண் கலங்க தனக்கென்று இருக்கும் ஒரே உறவிடம் தவிப்புடன் தாமரை கேட்கவும், “ஒன்னுமில்லம்மா.. கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொண்டு வரீயா?” என்றார் முத்துசாமி.

“இதோ கொண்டு வரேன் பா” என்று உள்ளே ஓடியவள்… பானையில் இருந்து தண்ணீரை சொம்பில் மோந்து கொண்டு தந்தையை நோக்கித் திரும்பி வந்த நேரம், அங்கே வெளிவாயிலில் ராஜம்மாவின் வரவைக் கண்டாள்.

அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே விறுவிறுவென வீட்டின் உள்ளே நுழைந்திருந்தவர், அங்கே நடுக்கூடத்தில் இருந்த முத்துசாமியைக் கண்டு ஆத்திரம் தாங்காது, அவரின் முதுகில் இரண்டு அடிகளைப் போட்டார்.

“பாவி!! பாவி!! கடன் வாங்கிக் குடிக்காதே குடிக்காதேன்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேனேடா… கேட்டியாடா…?? இப்போ உன் குடியாலேயே உன் குலவிளக்கையே ஒரு நாதாரிக்கிட்ட போய் வித்துட்டு வந்து நிக்குறீயேடா?” என்று மனம் ஆறாது மீண்டும் அடித்தவரின் அடிகளை, தனக்கான தண்டனையாக ஏற்றவரும், கொஞ்சமும் அவரிடம் எதிர்ப்பு காட்டாது கல்லாகச் சமைந்து போனார்.

‘குலவிளக்குன்னு யாரைச் சொல்றாங்க??? என்னையா???’ என்ற எண்ணம் கொடுத்த பதிலிலும், அது உணர்த்திய உண்மையிலும்,  பேரதிர்ச்சி அடைந்தவளின் உடல் நடுங்க ஆரம்பித்ததில், அவள் கையில் இருந்த சொம்பு தானாக நழுவி தரையில் விழுந்து சத்தமிட்டது.

அப்பொழுது தான் தாமரையும் அங்கு இருக்கிறாள் என்பதை மறந்து, தான் ஆத்திரத்தில் வாய் விட்டு விட்டதைப் புரிந்து கொண்ட ராஜம்மா அவளை ஏறெடுத்துப் பார்த்த போது.. அந்தப் பேதை அறிய துடிக்கும் விஷயத்தை அவளிடம் முழுதாக உரைக்கும் தைரியமின்றி அமைதியாகவே நின்றார் அவர்.

“என்ன சொல்றீங்க பாட்டி? யார்கிட்ட யாரை வித்துட்டு வந்து இருக்கிறார் என்…??” என்று அதுவரை அச்சத்தில் தந்தியடித்தபடி வெளிவந்த வார்த்தைகள் கூட அதற்கு மேல் வெளிவராது, அவளின் தொண்டைக்குழியில் சிக்கி நின்று போனது.

தாமரை கேட்க முடியாது நிறுத்திய கேள்வியின் தாக்கம் கொடுத்த வேதனையில் கோபம் தலைக்கேற, அதற்கும் சேர்த்து முத்துசாமியைத் தன் விழிகளால் பொசுக்கினார் ராஜம்மா.

“உன் பொண்ணு கேட்குறது உனக்குக் காதிலே விழல..?? வாயைத் திறந்து பதில் சொல்லு!” என்று ஆத்திரம் தெறிக்க கேட்டவரின் முன் வெட்கித் தலை குனிந்தவரின் கண்களிலோ கண்ணீர் முட்டியது அவமானத்தில்.

என்னதான் குடிகாரராக, ஊதாரியாக, பொறுப்பில்லாதவராக இருந்தாலும் முத்துசாமியும் ஒரு தகப்பன் தானே…? அவரால் எப்படி தலை நிமிர்த்தி, அவரின் மகளிடமே, “என் குடிக்கு உன்னைப் பலிகடா ஆக்கி விட்டேன் மகளே!!’ என்று தைரியமாக அவளின் முகம் பார்த்துக் கூற முடியும்??

அத்தனை நாள் தான் செய்த பாவங்களின் பலன் தான் தன்னுடைய இன்றைய நிலை என்று உணர்ந்து திருந்தியிருந்தவருக்கு,  அப்பொழுதுதான் அவர் அறிந்து இருந்த ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வசனத்தின் உண்மையான அர்த்தமே புரிந்தது.

‘இப்பொழுது புரிந்து இனி என்ன பயன்?’ என்று உள்ளுக்குள் நொந்தவரால் மகளுக்கு எந்தவித பதிலும் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன்பொருட்டு தனக்குள்ளேயே திண்டாடியபடி அமைதியாக அமர்ந்து இருந்தார்.

தந்தையின் மௌனமே அவரின் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் விதமாக இருப்பதைக் கண்டாலும், அடிமனதில் ‘நான் நினைப்பது போல எதுவும் இருக்காது!!’ என்ற குருட்டு நம்பிக்கையின் காரணமாக ராஜம்மாவை நோக்கியவள்,

“நீங்களாவது என்ன நடந்ததுன்னு எனக்குச் சொல்லுங்க பாட்டி. அப்பா என்ன செஞ்சாங்க?”  என்று நடுங்கிய குரலில் கேட்டாள்.

இனி இவளிடம் மூடி மறைக்க முடியாதது மட்டுமில்லாது, சாராயக்கடையில் நடந்த செய்தி எப்படிக் காற்றாகப் பறந்து வந்து தன் காதுக்கு எட்டியதோ..? அதே போல இவளை அடைய எவ்வளவு நேரமாகும்? என்று எண்ணியவர், இன்று சாராயக்கடையில் முத்துசாமிக்கும் வேலுவுக்கும் இடையில் நடந்த வாய் தகராறைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

வேலு.. அவனை அந்தப் பெயரால் தெரிந்து கொள்பவர்களை விட ‘பார் வேலு’ என்று சொன்னால் தான் சட்டென்று யாரும் அறிவர். அந்த அளவுக்கு மலையடிவாரத்தில் பார் வைத்து இருக்கும் ஒயின்ஷாப்பும், அவனும் பிரபலம்.

தன் கடைக்கு குடிக்க வருபவர்களின் பின்புலமறிந்து, அதற்கு ஏற்றார் போலக் கடனுக்கு அவர்களுக்கு ஊற்றிக் கொடுக்கும் வள்ளல் அவன்.

சரியான நேரம் வரும் போது, அவன் கொடுத்த கடனைக் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி அசையும் சொத்தாகவோ இல்லை அசையா சொத்தாகவோ, மொத்தமாக அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு, கடன் வாங்கியவரைக் குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்க வைப்பதில் கெட்டிக்காரன்.

இது நன்கு அறிந்தும், குடிக்கு அடிமையானவர்கள் அவனிடம் தானாகச் சென்று விழுந்து, தெரிந்தே இறுதியில் மடிவது தான் கொடுமையிலும் பெரும் கொடுமை!

முத்துசாமியும் அப்படிச் சென்று விழுந்தவர் தான்! ஆனால் அவரிடம் சொத்தாக அவன் பறிக்க எதுவுமில்லை என்ற தைரியத்தில் தான், அவர் அவனிடம் தாராளமாகக் கடன் வாங்கிக் குடித்தது.

ஒருவேளை கடனை அவன் திருப்பிக் கேட்டாலும் தன்னைத் தானே அடித்து உதைத்துக் கேட்பான் என்ற தைரியத்தில் தான் முத்துசாமி  நினைத்தது.

ஆனால் அவர் அறியாதது என்னவென்றால்.. அவரின் மகளை ஒருமுறை தற்செயலாக மார்க்கெட்டில் பார்த்த பின்பு தான், வேலு அவருக்குத் திட்டம் போட்டுக் குடிக்கக் கடன் கொடுத்தான் என்பது தான்.

ஏற்கனவே இரண்டு பொண்டாட்டி ஊருக்குள்.. அதுமட்டுமில்லாது, ஆங்காங்கே தொடுப்புகளும் வேலுவுக்கு இருந்த போதும், தன் மகளை அவன் இப்படி மணம் புரிய கேட்பான் என்று முத்துசாமி என்ன கனவா கண்டார்??

ஆனால் கேட்டு விட்டானே?? பாவி!! படுபாவி!! இன்று அதையே தன்னிடம் கேட்டு விட்டானே..? அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடி இடி விழுந்தது போல அதிர்ந்த முத்துசாமி, முதலில் அவனை அதட்டி, பின் சண்டை போட்டு, கெஞ்சியும் கூட கொஞ்சமும் மனமிறங்கி வராதவன்,

இறுதியாக சொன்ன வார்த்தைகள் இது தான்..

“ஒண்ணு வாங்குன கடனை வட்டியும் முதலுமா இன்னும் ரெண்டு நாளில் திருப்பிக் கொடுக்கிற வழியைப் பாரு. இல்ல அதுக்கு அடுத்த நாள் உன் பெண்ணுக்கும் எனக்கும் நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாடு பண்ணுற வேலையைப் போய்ப் பாரு” என்றவனின் எகத்தாள பேச்சில், அவனின் மென்னியைக் கடிக்கும் வெறி கொண்டு அவனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு அவனின் மீது பாய்ந்தார் முத்துசாமி.

ஆனால் வயோதிகம் தாண்டி, உள்ளே போயிருக்கும் குடியால் அதிகம் தளர்ந்து போயிருக்கும் உடலை வைத்துக் கொண்டு, எவ்வளவு நேரம் அவனிடம் அவரால் போராட முடியும்??

ஒருநிலைக்கு மேல் அவனை எதிர்க்க முடியாது ஓய்ந்து போனவர், அவன் கொடுத்த ஒரே அடியில் கீழே சுருண்டு விழுந்தார்.

விழுந்தவரைத் தூக்கி விட வந்த ஊரார்களிடம் தன் எரிச்சலைக் காட்டி விட்டு, முதல் முறையாகக் குடிக்கச் சென்று குடிக்காது திரும்பி வீடு வந்து சேர்ந்து இருந்தார் முத்துசாமி.

வீடு வந்தவர், ‘நாளைக்குள் அவ்வளவு பணத்தைத் தன்னால் எப்படிப் புரட்ட முடியும்? தன்னை நம்பி எவன் ஊருக்குள் அவ்வளவு பணத்தைக் கொடுப்பான்? அடமானம் வைக்கப் பூமியும் இல்லை. இந்த நேரத்தில் தங்களைக் காப்பாற்ற எந்தச் சாமியும் இல்லையே?’ என்ற ஆதங்கத்தில் தன் நிலையை நினைத்துத் தனக்குள்ளே சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு இருந்த பொழுது தான், விஷயம் கேள்விப்பட்டு அங்கே வந்து ராஜம்மா அவரை விளாசித் தள்ளியது.

பாட்டி மூலம் தாமரைக்கு நடந்த விபரம் தெரிய வந்த போதும், அதில் இருந்து தன்னை மீட்கும் வழி மட்டும் அவளுக்குத் தெரியவே இல்லை.

அவளுக்கு மட்டுமில்லை.. அங்கே இருந்த மற்ற இருவருக்கும் கூட அது தெரியாமல் போனதால் எழுந்த கோபங்கள் தானே, இவ்வளவு நேரம் அங்கே நடந்த போராட்டத்திற்குக் காரணம்.

சில நிமிட ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் பாட்டியிடம் பேசிய தாமரை,

“அப்பா வேணும்ன்னு எதுவும் செஞ்சு இருக்க மாட்டார் பாட்டி. அவர் தான் இவரை ஏமாத்தி இப்படி இதில் சிக்க வச்சு இருக்கார்.

நாம ஊர்க்காரங்க நாலு பேரை கூட்டிட்டுப் போய் அவர்கிட்ட நியாயம் கேட்கலாமே பாட்டி? அவர் கடனையும் எப்படியாவது நான் சம்பாதிச்சு திருப்பி அடைச்சுடுறேன்னு சொல்லுறேன்” என்று புதிதாகத் தன்னில் பிறந்த நம்பிக்கையின் பலனாகக் குரலில் அதைக் காட்டிப் பேசியவளின் முக மலர்ச்சி, கேட்டுக் கொண்டு இருந்தவரிடம் சிறிதும் வெளிப்படாது போனது.

“உனக்கு அவனைப் பத்தியும், அவன் அரசியல் பின்புலம் பற்றியும் தெரியாது தாமரை. அந்தச் செல்வாக்கால் தான் அவன் இங்கே இந்த ஆட்டம் போட்டும் யாரும் அவன் மீது போலீசில் புகார்  கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும் அது கண்டுகொள்ளப் படுவதுமில்லை என்று இங்கு வாழும் எல்லோருக்கும் நல்லாவே தெரியும்.

அப்படிப்பட்டவன்கிட்ட எல்லாம் நியாயம் கேட்டுப் போவதும், நம்மளை நாமளே செருப்பால் அடிச்சுகிறதுக்குச் சமம்மா” என்றவரின் பேச்சில் இருந்த உண்மையில் தாமரையின் முகம் முழுவதுமாகச் சட்டென்று வாடிப் போனது.

அதைக் கண்டு மனம் பொறுக்காத ராஜம்மா, அவளைத் தேற்றும் விதமாக, “கவலைப்படாதமா! நமக்குன்னு ஏதாவது வழி இல்லாமலா போய்டும்? நாளைக்கு ஊர் பிரஸிடென்ட்கிட்ட போய்ப் பேசுவோம். அவர் ஏதாவது தீர்வு சொல்றாரா பார்ப்போம்” என்றவரின் வார்த்தை கொடுத்த உத்வேகத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றது தாமரையின் முகம்.

அவளின் முகம் கண்டு சற்றே ஆறுதல் அடைந்தவர், தற்பொழுதைய சூழ்நிலையை மாற்ற எண்ணி, “நீ சாப்பிட்டியா?” என்று தாமரையிடம் வினவினார்.

“இல்ல பாட்டி… இப்போ தான் சமைக்க எல்லாம் ரெடி பண்ணிட்டு இருந்தேன்” என்று பதிலளித்தாள் அவள்.

“சரி, முதலில் அதைப் போய் செய்து ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நான் போய் நாளைக்கு வேலைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் லீவ் சொல்லுறேன்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பப் போனவர், அங்கே வேரறுந்த மரமாகக் கிடந்த முத்துசாமியைக் கண்டு அப்படியே அவனை விட்டுச் செல்ல மனம் வராது..

“இப்படியே நீ உட்கார்ந்துட்டு இருந்தா மட்டும் இங்கே எதுவும் மாறிட போறதில்லை முத்து. எழுந்து போய் முகம் கழுவிட்டு வந்து சாப்பிட்டுத் தூங்கு. நாளைக்கு வெள்ளனவே பிரசிடென்ட் வீட்டுக்குப் போகணும்ல?” என்று கூறியவரின் பேச்சில் காரம் லேசாக இருந்தாலும் அதில் ஒளிந்து இருந்த பாசத்தில்,

அங்கிருந்து செல்ல முயன்றவரின் காலை தொட்டு மன்னிப்பு வேண்டியவரின் திடீர் செயலில் திடுக்கிட்டுப் போனார் ராஜம்மா.

அந்தச் செய்கையில், “என்ன பண்ணுற முத்துசாமி? முதலில் எழுந்திரி!” என்று அதட்டலுடன் சொல்லி விட்டுக் குனிந்து அவரை எழுப்பி விடவும் முற்பட்டார் ராஜம்மா.

நிமிர்ந்த முத்துசாமி அவரைப் பார்த்த பார்வையில் என்ன தேங்கி இருந்தது என்பதை அத்தனை அனுபவசாலியான ராஜம்மாவால் கூடக் கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாது போனாலும், முத்துசாமியின் மகள் பாசம் அறியாதவரில்லையே அவர்??

அதனால் அதற்கு மேலும் எதுவும் பேசி முத்துசாமியைச் சங்கடப்படுத்த எண்ணாதவராக, ”சரி விடு! ஆனது ஆகிடுச்சு… அடுத்து என்னன்னு யோசி. நாளைக்கு என்ன செய்தாவது இவளை அந்த ராட்சஷன்கிட்ட இருந்து காப்பாத்திடு முத்து!” என்றவரின் கெஞ்சல் பேச்சே சொல்லாமல் சொன்னது, ‘பிரஸிடெண்ட்டை போய்ப் பார்த்தாலும் நமக்கு ஒரு நன்மையும் அதனால் நடக்கப் போறது இல்லை என்றும், அது தாமரையை சமாதானப்படுத்த மட்டுமே அவர் சொன்ன பொய் என்றும்’

ஏனென்றால் பிரஸிடெண்டும் வேலுவும் அரசியல் வட்டாரத்தில் எவ்வளவு நெருக்கமென்று அவர்களிருவருக்கும் தெரியாததா??

பாட்டியின் மனம் அறிந்தவரும் தீர்க்கமாக கண்களில் உறுதியுடன், “எப்படியாவது என் பொண்ணை அவன்கிட்ட இருந்து நான் காப்பாத்திடுவேன்மா, நீங்க கவலைப்படாம போய்ப் படுங்க” என்றார்.

அவரின் பேச்சில் இருந்த மாற்றமே பெரியவருக்குப் பெருத்த நிம்மதியைக் கொடுக்கவும், ”சரிப்பா” என்று தலையாட்டி விட்டு தன் வீடு நோக்கிச் சென்றார் ராஜம்மா.

இருவரின் உரையாடலையும் அதுவரை கேட்டுக் கொண்டு இருந்த தாமரையின் முகமும் அகமும் மலர்ந்து போனது, எப்படியும் பாட்டியும் அப்பாவும் இதற்கு ஒரு தீர்வை நாளை கண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையின் பொருட்டு.

“நீங்க போய் முகம் கால் கழுவிட்டு வாங்கப்பா… நான் சீக்கிரம் சாப்பாடு செஞ்சுடுறேன்… ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று சொன்ன மகளிடம்,

“இல்லம்மா… எனக்குப் பசியில்லை, நீ போய்ச் சாப்பிடு!” என்று மகள் எவ்வளவு வற்புறுத்தியும் அன்றைய இரவு முத்துசாமி சாப்பிட மறுத்து விட்டுத் தாமரையை மட்டும் சாப்பிடச் சொல்லி அனுப்பி வைத்தார்.

தந்தையின் வற்புறுத்தலில் அடுப்பங்கரை சென்ற தாமரைக்கு, தந்தையை விட்டுவிட்டு சாப்பிட சுத்தமாக மனமில்லாததால், நறுக்கிய காயைக் கொண்டு புளிக்குழம்பு வைத்தவள், அதைக் காலைக்கு உண்ண பத்திரப்படுத்தி வைத்து விட்டு, சாப்பிடாமல் தந்தையிடம் “சாப்பிட்டு விட்டேன்” என்று பொய் உரைத்தாள்.

மகளின் பேச்சை நம்பியவரும், அவள் முகத்தில் தாண்டவமாடும் களைப்பைக் கண்டு, “நீ போய்ப் படும்மா… நான் செத்த நேரம் கழித்துத் தூங்குறேன்” என்று சொன்னார்.

காலையில் இருந்து செய்த ஓயாத வேலை மற்றும் சற்று முன் நடந்த நிகழ்வின் தாக்கத்தில் உண்டான மனச்சோர்வின் காரணமாக, தாமரையின் உடலும் அதிகமாக அவளை ஓய்வுக்கு அழைக்கவும், தந்தையின் பேச்சைத் தட்டாது அவரின் அருகில் பாயை விரித்துப் படுத்து விட்டாள் தாமரை.

மகள் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்ற பின், தன் எண்ணங்களின் ஓட்டம் கொடுத்த தீர்வின் வலியை தாங்கிக் கொள்ள முடியாது, அதுவரை மகளின் முன் வெளிப்படுத்தக் கூடாது என பெரும்பாடுபட்டு அடக்கி வைத்து இருந்த துக்கமெல்லாம்.. மீண்டும் கண்ணீராக அணையை உடைத்துக் கொண்டு முத்துசாமியின் கன்னத்தை நனைக்க ஆரம்பித்தது.

உள்ளுக்குள் இருந்து எழுந்த விசும்பலை ஒரு கைக் கொண்டு தோள் துண்டினால் வாயைப் பொத்தி, சத்தம் வெளியே வராது, அடக்கியபடி அழுது விசும்பியவர்..

அங்கே எதிர் சுவற்றில் தொங்கிக் கொண்டு இருந்த மனைவியிடம் சில நிமிடங்கள் மானசீகமாகப் பேச ஆரம்பித்தார்.

சில நிமிட மனைவியுடான மானசீக மன்னிப்பு படலத்துக்குப் பின், மனைவி தனக்காகத் தன்னை நம்பி மட்டும் விட்டுச் சென்ற தன் மகளை ஆதூரமாகக் கண்டவர், அவளின் உறக்கம் கலையாது முதல் முதலாகப் பாசப் பெருக்கில் அவளின் தலை கோதினார்.

நேரம் கடந்த போதும், இருந்த இடம் விட்டு அசையாது தேவதையாக உறங்கும் மகளையே நெடு நேரம் விழி இமைக்காது பார்த்து ரசித்தவர், “என் தலையை அடமானம் வைத்தாவது உன்னை அவன்கிட்ட இருந்து மீட்பேன் மா” என்று அவள் கேட்காதவாறு தனக்குள் சூளுரைத்து விட்டு, எழுந்து வெளித்திண்ணை சென்று படுத்தவர், எப்பொழுது உறங்கினோம் என்று அறியாத நிலையில் தான் அன்றிரவு முத்துசாமி உறங்கிப் போனார்.

மறுநாள் எப்பொழுதும் போல் அதிகாலை துயில் கலைந்து எழுந்த தாமரை, “இன்றைய பொழுது எல்லாருக்கும் இனிய பொழுதாக அமையட்டும் ஆண்டவா!!” என்று வேண்டியபடியே படுக்கையை விட்டு எழுந்து வாசல் தெளிக்க வெளியில் வந்தவள்,

அங்கே கண்ட காட்சியில், அதிர்ந்து கூச்சலிட்டு மறுகியவள், இறுதியில் அங்கேயே மயங்கி விழுந்தாள்.

Advertisement