Advertisement

அத்தியாயம் – 5

அன்று விடுமுறை நாள் என்பதால் உற்சாகமாக எழுந்து குளித்து வீட்டு வேலைகளை எல்லாம் மடமடவென செய்து முடித்த தாமரை, அரக்கு கலர் பாவாடை ரவிக்கைக்கு ஏற்ற வெள்ளை நிற தாவணி அணிந்து, நிலவாக ஜொலித்த முகத்தில், இருபுறமும் வில்லாக வளைந்து இருந்த புருவ மத்தியில் சிறிய சாந்து பொட்டை வைத்துக் கொண்டு, தலை வாரி முடித்து, கண்ணாடியில் தன் முகம் கண்டவளுக்கு என்றுமில்லாத வண்ணம் அன்று ஏனோ அவளின் முகம் காணப் பிடித்து இருந்தது…

அகத்தின் மகிழ்வு அவளுக்கு அங்குத் தெரிந்ததாலோ என்னவோ..??!!

விடிந்தும் விடியாமலே திண்ணையில் படுத்திருந்த தந்தை எப்பொழுதும் போல ும்ட்டிக்குச் சென்று விட்டதால், வீட்டைப் பூட்டிச் சாவியைக் குடிசையின் மேல் தாழ்வாரத்தில் ஒரு இடத்தில் சொருகி வைத்தவள், கையில் பற்றியிருந்த வயர் கூடையை இறுக பிடித்துக் கொண்டு, வீட்டை சுற்றிப் போடப்பட்டு இருந்த முள்வேலி கதவையும் சாத்தி வைத்து விட்டுக் கிளம்பி மலையடிவாரம் நோக்கிப் புறப்பட்டாள்.

மலைரோடு வந்து கீழே செல்ல ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்து இருந்தவளின் கண்களில் செல்வம் அண்ணன் சரக்கு வண்டி பட்டது. அதில் ஏறிச் செல்ல இடமும் இருந்ததால், வண்டியை மறிப்பது போல தன் கையை அது வரும் பாதையில் நீட்டினாள் தாமரை.

சரக்கு ஏற்றிச் செல்லும் நேரம் தவிர, இப்படி ஆட்களை மலையடிவாரத்துக்கு கீழும் மேலும் ஏற்றிச் சென்று சம்பாதிப்பது அங்கிருக்கும் பலரின் மேல் வருமானமாக இருந்தது.

அரசு போக்குவரத்து ஒருநாளைக்கு நான்கு முறை மட்டுமே வருவதால், மலைவாழ் மக்களின் அவசர தேவை மற்றும் வசதிக்கும் அங்கே அதிகம் பயன்படுத்தப்படுவது இது போன்ற வண்டிகளாகத்தான் இருக்கும்.

“எங்கேம்மா?” என்றபடி அவர் நிறுத்த, 

“மலையடிவார மார்கெட் அண்ணா” என்று பதில் தந்தாள் தாமரை.

சில நேரம் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சில வண்டிகள் பயணிப்பதால், ஆட்களை ஏற்றும் முன், இப்படிக் கேட்டு ஏற்றுவது அங்கே வழக்கம் தான்.

“பஸ் ஸ்டாண்ட் வரை தான் போறேன்மா. அங்கே விட்டுடுவா?” என்று செல்வம் அண்ணா கேட்டார்.

அவர் சொல்லுமிடத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் எதிர்ப்பக்கம் நடந்தால் தான் மார்கெட் செல்ல முடியும் என்றாலும், அந்தப் பாதையில் அடுத்த வண்டி எப்பொழுது வரும் என்று தெரியாத நிலையில், அதற்காகக் காத்திருப்பதை விட இதிலேயே சென்று விடுவோம் என்று எண்ணிக் கொண்டு, அவரிடம் சரி என்றபடி வண்டியின் பின்பக்கக் கதவைத் திறந்தபடி ஏறினாள்.

சில மணி நேர பயணத்தின் முடிவாக இறங்க வேண்டிய இடம் வந்து, பயணித்த காசை செல்வம் அண்ணாவிடம் கொடுத்து விட்டு வண்டியை விட்டு இறங்கியவள், நேராக மார்க்கெட்டை நோக்கி நடந்தாள்.

ஆடிக்கு ஒருமுறை அமாவசைக்கு ஒருமுறை மட்டுமே அங்கே வருபவளுக்குத் தெரிந்த மத்தியதர ஜவுளி கடைகளுக்குள் ஒரு கடைக்குள் சென்றவள், அங்குத் தனக்குத் தேவையானவற்றை கையில் இருந்த காசுக்குத் தக்கவாறு தேர்ந்தெடுத்து வாங்கி முடித்து, அங்கிருந்து கிளம்பியவளினுள் பலநாள் கனவு ஒன்று அன்று நிறைவேறிய மனத்திருப்தி!! 

அது அவளின் முகத்தையும் பூவாக மலரச் செய்து மின்ன செய்திருந்தது.

இதழ் விரியா புன்னகையுடன் பக்கத்தில் நாலு கடை தள்ளி இருந்த கண்ணன் பேக்கரி சென்றவள், அங்கே ரொம்ப நாளாகச் சுவைக்க ஆசைப்பட்ட சூடான அல்வாவை நூறு கிராம் வாங்கினாள்.

வாழை இலையில் வழுக்கிக் கொண்டு சென்ற அல்வாவைக் கண்களில் ஆசையை வழிய விட்டு, அதைச் சிறிது சிறிதாகப் பிய்த்து வாயில் போட்டு, அப்படியே அதன் ருசியில் கண் மூடி அதை ரசித்து உண்டாள். 

தேனாக நாவில் கரைந்து தொண்டைக்குழியில் சறுக்கிக் கொண்டு, வாயினுள் வழுக்கிக் கொண்டு சென்ற அல்வாவின் சுவை, அவள் முழுவதுமாக உண்டு முடித்த பின்னும், இன்னும் அவளின் நாவில் இனித்துக் கொண்டே இருந்தது.

இன்னும் கொஞ்சம் அதை வாங்கிச் சாப்பிட தூண்டிய நாவையும், மனதையும் பெரும்பாடு பட்டு அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தவள், அங்கே சிறிது தொலைவில் ஜீப்கள் வந்து நிற்கும் இடம் நோக்கிச் சென்றாள்.

அதிக நேரம் அவளைக் காக்க வைக்காது அங்கு வந்து நின்ற வண்டியில் போகுமிடம் சொல்லி ஏறியவள், மாலை நெருங்கும் வேளையில் தான் வீடு வந்து சேர்ந்தாள்.

காலையில் போன தந்தை வீடு வரவேயில்லை என்பதை, தான் ஆக்கி வைத்திருந்த உணவு காலி ஆகாது அப்படியே இருப்பதை வைத்தே தெரிந்து கொண்டவள், ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு, தான் வாங்கி வந்திருந்த இரண்டு பைகளில் ஒரு பையை மட்டும் தூக்கிக் கொண்டு, ஒருவித துள்ளலுடன் ராஜம்மாவின் வீடு நோக்கி ஓடினாள் தாமரை.

இந்நேரம் தன் வீடு வந்தவளைக் கண்ட ராஜம்மா, 

“வாடி பொண்ணு.. எங்கே போயிருந்த? மதியம் கருவாட்டு குழம்பு செய்து இருந்தேன். உங்க அப்பனுக்குப் புடிக்குமேன்னு எடுத்துட்டு வந்தா வீடு சாத்தி இருக்கு” என்றார்.

தாமரையோ கையில் வைத்திருந்த பையை அங்கே திண்ணையின் ஓரத்தில் சாத்தி வைத்து விட்டு, கால்கள் நீட்டியபடி அமர்ந்து கேப்பையைப் புடைத்துக் கொண்டு இருந்த ராஜாம்மாவின் கையில் இருந்த சொளகை நைசாக அவரிடமிருந்து வாங்கி மறுபக்கமாக அதை வைத்தாள்.

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன் பாட்டி. முதலில் இதைப் பிடிங்க!” என்று தான் கொண்டு வந்து இருந்த பையை எடுத்து அவரிடம் புன்னகையுடன் கொடுத்தாள் தாமரை.

“என்னடி இது?” 

“திறந்து பாருங்க!” 

‘என்னவா இருக்கும்?’ என்ற எண்ணத்துடன் துணிப்பைக்குள் கை விட்டு அதிலிருந்து ஒரு பிளாஸ்டிக் பையை வெளியில் எடுத்து, அதிலிருந்ததை பிரித்துப் பார்த்தவரின் கண்களில் என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு!!

அதன் தாக்கத்தில் சுருக்கம் விழுந்த முகம் பிரகாசமடைய, தன் முகத்தையே பார்த்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தவர், நெகிழ்ந்து தான் போனார்.

“என்னடி இது?? எனக்கா??” என்று குரலும் நெகிழ, கையிலிருந்த பச்சை நிற நூல் சேலையைக் காட்டிக் கேட்கவும்,

“பின்னே? வேற யார் இருக்கா நான் சேலை வாங்கி கொடுக்க? உங்களுக்குத்தான்  பாட்டி!!  நல்லா இருக்கா?? பிடிச்சு இருக்கா??” 

அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டவளுக்குப் பதில் சொல்லத்தான் ராஜம்மாவிடம் வார்த்தைகள் இல்லாது போனது.

“என்னாச்சு பாட்டி? சேலை பிடிக்கலையா?” என்று அவரின் அமைதிக்கான அர்த்தம் புரியாது, உள்ளே போன குரலில் கேட்டவளின் தலையைச் சட்டென்று தன்னுடைய கைகள் கொண்டு ஆசீர்வதிக்கும்படி தடவி கொடுத்தார் ராஜம்மா.

“நல்லா இருக்குடா” 

“நிஜம்மாவா..? உங்களுக்குப் பிடிச்சு இருக்கா??” என்று அவரின் அகமும் முகமும் மலர்ந்து சொன்ன வார்த்தைகளில் குழந்தையின் குதூகலத்துடன் மீண்டும் கேட்டாள் சின்னவள்.

“ரொம்ப நல்லா இருக்குடா” என்றார் முகம் கொள்ளா சந்தோஷத்துடன். அதில் முழுத் திருப்தி அடைந்தாள் தாமரை.

“எதுக்கும்மா இந்த வீண் செலவு உனக்கு?” என்ற முதியவரின் அக்கறையில்,

“இதுல என்ன வீண் செலவு..? ரொம்ப வருஷமாவே உங்களுக்கு ஒரு புடவை வாங்கித் தரணும்ன்னு எனக்குக் கொள்ளை ஆசை பாட்டி. ஆனா என்கிட்ட தான் காசே சேரலையே? வேலைக்குப் போனதும், முதல் மாசம் சம்பளம் வாங்குனதும் வாங்கித் தந்திடலாம்ன்னு எப்படியெல்லாம் கணக்கு போட்டு வச்சு இருந்தேன் தெரியுமா? ஆனா அது முடியாம போச்சு” என்றாள் முகம் சுருங்கலாய்.

“ஏன்..? போன மாசம் சம்பளம் என்ன ஆச்சு?” 

என்ன நடந்து இருக்கும் என்ற எண்ணத்தில் கேட்டவரிடம், ‘இப்படி அவசரப்பட்டு உளறிக் கொட்டி விட்டோமே?’ என்று தனக்குள் திருதிருத்தாள் தாமரை.

அவளைக் கூர்ந்து கவனித்த முதியவர், “என்ன?? உங்க அப்பன் பிடுங்கிக்கிட்டானா மொத்த பணத்தையும் குடிக்க??” என்று கேட்டார் கோபமாய்.

“அவனும் வாங்கலையா? அப்புறம் என்ன செஞ்ச?” 

“அது.. அது.. வந்து பாட்டி.. அந்த மருது மறுபடியும் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டான் அப்பா வாங்குன கடனுக்கு..” 

“அதனால.. அவன்கிட்ட உன் மொத்த பணத்தை எடுத்துக் கொடுத்துட்டீயா?” 

மென்று முழுங்கிச் சொன்னவளின் பாதி பேச்சில் இருந்தே அவளின் சொல்லாத மீதி என்னவாக இருக்குமென்று சரியாக ஊகித்தார் ராஜம்மா. அதில் தாமரையின் முகம் தாழ்ந்தது.

“நீ கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச பணம் அது. உனக்குன்னு ஒரு நல்ல காரியம் நடக்க அதைச் சேர்த்து வைன்னு நான் படிச்சு படிச்சு சொன்னேனா இல்லையா? அப்புறமும் ஏன் இப்படிச் செஞ்ச? அவன் வந்து கேட்டா, எங்க அப்பாகிட்ட போய் கேளுடான்னு, அவன் மூஞ்சுல அடிச்ச மாதிரி பதில் சொல்லி அவனை விரட்ட வேண்டியது தானே? இல்லை என்னையாவது கூப்பிட்டு இருக்கலாம்ல?” 

ராஜம்மாவின் ஆதங்கம் முழுதும் தாமரையின் மீதான அவரின் பாசத்தின் வெளிப்பாடு! அதைப் புரிந்து இருந்தவளும், அவரின் வலது கையை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு அவரை முதலில் தன் செய்கையால் சமாதானப்படுத்த முயன்றாள் தாமரை.

அதன் பின் மெதுவாக, “உங்களுக்குத் தெரியாது பாட்டி.. கொஞ்ச நாள் முன்னாடி வரை, இப்படி ஒவ்வொருத்தன் வந்து என்கிட்ட ‘உங்க அப்பா வாங்குன பணத்தை நீ கொடுக்குறீயா? இல்லை நானே எடுத்துக்கட்டும்மா?’ன்னு என்னை ஒருமாதிரி பார்த்துக் கேட்குறப்ப, என் உடம்பே கூனி குறுகி போய்டும். பல நேரம் அந்த மாதிரி நேரத்தில் அப்படியே போய் நம்ம ஊர் ஆத்துல குளத்துல விழுந்து செத்துடலாம்ன்னு கூடத் தோணி இருக்கு” 

தாமரை கலங்கும் குரலில் தன் பேச்சை முடிக்க கூட விடாது, அவளின் வார்த்தையில் குலை நடுங்கிப் போய், அவளை அப்படியே வாரி அணைத்திருந்தார் ராஜம்மா.

”பாவி மகளே! இப்படி எல்லாமா நினைச்சு இருந்த?” 

“அது அப்போ பாட்டி.. இப்போதான் நான் வேலைக்குப் போறேனே? இந்தாடா உன் பணம்ன்னு அவன் கேட்ட உடனே எடுத்து கொடுத்தப்ப, அந்த மருது மூஞ்சியை நீங்க பார்க்கணுமே?? ‘பே’ ன்னு இருந்தது” 

அன்றைய நிகழ்வை இப்பொழுது நினைத்துச் சிரிக்க, அவளின் முகத்தில் இருந்த மலர்வு பாட்டியின் முகத்தில் விரியாது போனது.

அதைக் கவனித்தவள், “என்னாச்சு பாட்டி?” என்று கேட்டாள்.

“உங்க அப்பனை நம்பினா உனக்குக் கடைசி வரை எந்த நல்லதும் நடக்காதுன்னு தான், அவன்கிட்ட போராடி உன்னை வேலைக்குக் கூட்டிட்டுப் போய் சம்பாதிக்க வச்சேன். கடைசில அந்தப் பணத்தையும் உங்க அப்பன் உன்கிட்ட இல்லாம பண்ணுறானே பாவி!!” என்று பதில் தந்தார் ராஜம்மா.

“விடுங்க பாட்டி.. எனக்கு இதுல எந்த வருத்தமுமில்லை. எனக்குன்னு ஏதாவது நல்லது நடக்கணும்ன்னு இருந்தா அது கண்டிப்பா நடக்கும். இதையெல்லாம் நினைச்சு நீங்க வருத்தப்படாதீங்க!” என்று அவரைத் தேற்ற முயன்றாள் தாமரை.

அவளின் குணம் அறிந்தவரும், “இனி அவன் வந்து கேட்டான், இவன் வந்து கேட்டான்னு பணத்தை எல்லாம் எடுத்துக் கொடுக்காத! என்னைக் கூப்பிடு, நான் கவனிச்சுக்குறேன்.. எவன் வந்து உன்கிட்ட வாலாட்டுறான்னு..” என்று வீராவேசமாகப் பேச, அதில் உருகி போனாள் தாமரை.

அப்படியே அவரை கட்டிக் கொண்டு, “சரி! சரி! இனி உங்ககிட்ட கேட்காம எதுவும் செய்யலை. போதுமா?” 

அவரை ஆட்டு ஆட்டு என்று ஆட்டிச் சொன்ன விதத்தில் புன்னகைத்த ராஜம்மா, “விடுடி என்னை!” என்றார் சிரிப்புடன்.

“சரி.. உனக்குன்னு ஏதாவது வாங்குனியா இல்லையா?” 

“இல்ல பாட்டி, என்கிட்ட தான் நிறைய துணி இருக்கே? அதனால உங்களுக்கும், அப்பாவுக்கும் மட்டும் தான் வாங்கிட்டு வந்தேன்” என்றாள் தாமரை சிறு சிரிப்புடன்.

ஒரு ட்ரங்க் பெட்டிக்குள் அடங்கி விடும் ஏழு எட்டு செட் உடைகளை வைத்துக் கொண்டு, என்னவோ ஏழு ரூம் முழுவதும் துணி வகைகளை அடுக்கி வைத்து இருப்பதைப் போலச் சொல்பவளை, என்ன செய்வது என்ற ரீதியில் பார்த்தார் ராஜம்மா.

“உனக்குன்னு ஒன்னு வாங்கி இருக்கலாம்ல?” 

“வாங்கலாம்! வாங்கலாம்!” என்று அப்போதைக்கு அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி சொல்லிக் கொண்டு இருந்த நேரம், முத்துசாமியின் குரல் பெண்கள் இருவரின் காதிலும் வந்து விழுந்தது.

“அப்பா வந்துட்டார் போல பாட்டி, நான் போறேன்” என்றபடி எழ, 

“இரு வரேன்” என்றபடி சமையல்கட்டு சென்று ஒரு பாத்திரத்தை எடுத்து வந்தார் ராஜம்மா.

அதைத் தாமரையிடம் நீட்டியபடி, “இந்தா! இதில கருவாட்டு குழம்பு இருக்கு. ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று கொடுக்க, அதை மறுக்காது வாங்கிக் கொண்டு சிட்டாகத் தன் வீடு நோக்கி ஓடினாள் தாமரை.

***

போகும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவரின் மனதிலோ, ‘இந்த நல்ல பெண்ணுக்கு ஒரு நல்ல வழியை சீக்கிரம் காட்டு இறைவா!’ என்ற வேண்டுதல் மட்டுமே அந்நேரம் அவரின் மனதில் நிறைந்து இருந்தது.

அன்றைய குட்ஸ் எக்ஸ்போர்ட் விவரம் பற்றி வசந்திடம் கேட்டுக் கொண்டு இருந்த கதிரவன், “சிங்கப்பூர் பார்ட்டிக்கு இன்னைக்கு நைட்குள்ள ப்ராடக்ட் அனுப்பினா தான், அவர் கேட்ட தேதிக்குள்ள சரக்கு அங்கே போய் சேரும். அது எல்லாம் ரெடியாகிடுச்சா? நீ செக் பண்ணிட்டியா??” என்று கேட்டான்.

“லாஸ்ட் பேட்ச் ரெடி ஆகிட்டு இருக்கு. இன்னும் ரெண்டு மணி நேரத்தில் முழுசா ரெடி ஆகிடும். அதை பாக்கிங் பண்ணி குடோன்ல இருக்குற ஸ்டாக்கோட சேர்த்து இன்னைக்கே வண்டில ஏத்தி அனுப்பி வச்சுடுறேன்” என்று பதில் தந்தான் வசந்த்.

“ம்ம்ம்.. ஓகே” என்ற போது அங்கே அவர்களை நோக்கி ஓடி வந்தான் பாண்டி, அங்கே வேலை செய்பவன்.

கதிர், “என்ன பாண்டி?” என்று அவனின் முகபாவனை சரியில்லாதது கண்டு கேட்டான்.

“பாக்கிங் மெஷின்ல திடீர்ன்னு ப்ராப்ளம் சார்” 

“அதனால என்ன? மெக்கானிக்கைக் கூப்பிட்டு அதைச் சரிபாக்க சொல்ல வேண்டியது தானே?” 

“அவர் செக் பண்ணிட்டார் சார். மெஷின்ல ஒரு பார்ட் போயிடுச்சாம். அதை ரீப்ளேஸ் பண்ண அந்த பார்ட் நம்மகிட்ட ஸ்டாக் இல்லை சார்” என்று உள்ளே போன குரலில் பயத்துடன் அவன் சொல்லி முழுங்கினான்.

“என்னது ஸ்டாக் இல்லையா??” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே தன் ஆக்ரோஷ குரலை கதிர் உயர்த்திக் கேட்க, முன்னே இருந்தவன் மட்டுமில்லாமல் வசந்தும் கூடக் கொஞ்சம் அரண்டு தான் போனான்.

பின்னே! இது ஒருவரை மட்டும் கூண்டில் ஏற்றாதே?? ஒருவரைத் தொட்டு ஒருவரைத் தொட்டு, “என்ன பண்ணீட்டு இருந்தீங்க எல்லாரும் இதைக் கூடக் கவனிக்காமன்னு” என்று பலரை அல்லவா கதிரின் கோபத்திற்கு இரையாக்கும் என்ற பயம் அவனுக்கு.

ப்ரொடக்ஷன் செக்ஷன் நோக்கி காலம் தாழ்த்தாது ஓடிய கதிர், அங்கே இயங்கிக் கொண்டு இருக்க வேண்டிய பேக்கிங் மெஷின் நின்று போய் இருப்பது மட்டுமில்லாது, அதில் இருந்து வெளிப்படும் பொருளைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கும் தொழிலாளர்களும் வேலையின்றி மெஷினைப் போலவே இயங்காது இருப்பதைக் கண்டான்.

அங்கே கையை பிசைந்து கொண்டு நின்று இருந்த மெக்கானிக்கிடம், “ஸ்டாக் ஏன் இல்லை?” என்று விவரம் கேட்டு, அவன் கொடுத்த விளக்கத்தில் கதிர் இன்னொருவனைப் பார்க்க, அவனும் அவன் சார்பில் ஒரு விளக்கத்தை அவனிடம் குரல் நடுங்கக் கொடுக்க முயல, இருவரையும் சேர்த்து வைத்து முறைத்தான்.

‘இது பிரச்சனையைப் பற்றி ஆராயும் நேரமில்லை, அதைச் சரி செய்யும் நேரம்’ என்ற எண்ணம் மேலோங்கிக் கதிரைச் சிந்திக்க வைத்தது.

தன்னுடைய கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவனுக்கு, அன்றே அங்கிருந்து வெளியேற வேண்டிய பொருளின் அவசியத்தை அது அவனுக்கு உணர்த்தியது.

உடனே தன்னுடைய போனில் யாரையோ அழைத்தவன் அவரிடம் என்ன பேசினானோ?? 

அவர் கொடுத்த எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டவன், அடுத்து அந்த எண்ணிற்கு அழைத்துப் பேசி முடித்து போனை அணைத்து, மெக்கானிக்கை அழைத்தான்.

அவரிடம் ஒரு விலாசத்தை கொடுத்து, “உடனே இந்த இடத்துக்குக் கிளம்புங்க. அங்கே நமக்குத் தேவையான பார்ட்ஸ் இருக்கு. அதை செக் பண்ணிட்டு உடனே வாங்கிட்டு வாங்க” என்று கட்டளையிட்டு அங்கிருந்து அவனை அனுப்பி வைத்தான்.

பின்பு வசந்திடம் திரும்பி, “எப்படியும் பார்ட்ஸ் வந்து அதை மெஷினில் செட் பண்ணி மெட்டீரியல் பாக்கிங் வொர்க் நடக்க நாலு மணி நேரமாவது ஆகும். அதுக்கு அப்புறம் பாக்ஸில் அதை அடிச்சு  சீல் வைக்கிற வேலை வேற இருக்கு. அதுக்குள்ள ஆபீஸ் டைமே முடிச்சுடும். அதனால நீ என்ன பண்ணுற.. இப்போவே அந்த டிபார்ட்மென்ட் வேலை செய்றவங்கள யார் யாரெல்லாம் ஓவர் டைம் இன்னைக்குப் பார்க்க முடியும்ன்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி வை. எவ்ளோ நேரமானாலும் அவங்க வீட்டுக்குப் போக நாமளே வண்டி அரேஞ்ச் பண்ணுறோம்ன்னும் சொல்லு!” என்று அவனுக்கும் கட்டளையிட்டான்.

வசந்தும் அவன் சொன்ன வேலையை செய்து முடிக்க நிற்காது ஓடினான்.

ஒருவழியாகக் கதிர் கணக்கிட்டபடியே அவர்களுக்குத் தேவையான பார்ட்ஸ் வாங்கி வந்து, மிஷின் இயங்க நான்கு மணி நேரத்துக்கு மேலேயே ஆனாலும், டென்ஷன் ஆகாமல் ஒருபுறம் மெஷின் இயங்க இயங்க, வெளியிட்ட பேக்கிங்கை எல்லாம் மறுபுறம் வசந்த் ஏற்பாடு செய்திருந்த ஆட்களின் மூலம் பாக்ஸில் அடுக்கி சீல் வைத்து வண்டியில் ஏற்றும் வேலை எவ்வித தடையுமின்றி மிகச் சுறுசுறுப்பாகவே அரங்கேறிக் கொண்டு இருந்தது.

எந்த இடத்திலும் தொய்வு இல்லாது வேலை நடந்ததால், அன்று திட்டமிட்டபடி அனுப்ப வேண்டிய சரக்கு, கொஞ்சம் தாமதமான போதும், சரியான நேரத்திற்கு வாடிக்கையாளரைச் சென்று அடையும்படி ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

அனைத்தும் நல்லபடியாக முடிந்த பின் தான் பலருக்கு அங்கே மூச்சே விட முடிந்தது எனலாம். ஒருவழியாக ஓவர் டைம் முடித்து வீட்டுக்குக் கிளம்பத் தயாராக ஒன்று கூடி நின்று இருந்தவர்களுக்கு முதலில் தன் நன்றியைத் தெரிவித்தான் கதிர். அதன்பின் அவர்கள் பாதுகாப்பாக வீடு செல்ல வண்டிகள் ஏற்பாடு செய்து கொடுத்தான்.

அதிலேறி வீடு செல்ல நடை போட்டவர்களில் அப்பொழுதுதான் ராஜம்மாவுடன் உடனிருந்த தாமரையைக் கதிர் கண்டான்.

கண்டது ஒரு நொடி மட்டுமே!! மறுநொடியே அப்படி ஒருத்தியை அங்கே காணாதது போன்று அவனின்  விழிகள் மற்றவர்களை நோக்கிப் பயணித்து இருந்தது.

அனைவரும் சென்ற பின் தானும் வீடு செல்ல ஜீப்பை நோக்கிச் சென்ற கதிரின் மனதில் தாமரையின் தரிசனம் கொடுத்த தாக்கம் இருந்ததா என்று கேட்டால், அவனின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அவன் மட்டுமே அறிவான்!

ஆம்! கடந்த ஏழு மாதங்களில் அவளை இதுவரை நான்கைந்து முறை கதிர் இன்று போல காண நேர்ந்த பொழுது எல்லாம், ஆரம்பத்தில் அவளால் தன்னுள் ஏற்படும் சலனத்தை உணர்ந்தவன், அது அவனை அழைத்துச் செல்லும் பாதை அறியாது இருக்க அவன் ஒன்னும் நேற்று பிறந்த குழந்தை இல்லையே!

அவள் தன்னில் ஏற்படுத்தும் தாக்கமும், அவளின் நீங்காத நினைவும் தன்னை இறுதியில் எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்று மிகத் தெளிவாக உணர்ந்தவன், அதில் இருந்து விடுபடவும், அவளின் நினைவையும் அவளையும் தன்னிடமிருந்து சுத்தமாக ஒதுக்கி வைக்கவும் தீர்க்கமாக நினைத்தான். அதற்கு அவனிடம் வலுவான ஒரு காரணமும் இருந்தது.

அது என்னவென்றால் சிறுவயது முதலே குடும்பம் என்றால் என்னவென்று அறியாது தெரியாது வளர்ந்தவனுக்கு… ஒரு பெரிய குடும்பமும் உறவுகளும் கொண்ட ஒரு பெண்ணை மணந்து, அவளின் மூலம் அவனுக்குக் கிடைக்கும் சொந்தங்களுடன், அள்ள அள்ளக் குறையாத அன்புடனும், திகட்டாத பாசத்துடனும் வாழ வேண்டும் என்பது தான் அவனுடைய வாழ்நாள் கனவே!

அப்படிப்பட்டவனின் கனவுக்கும் தாமரைக்கும் ஏணி அல்ல ஏரோப்ளேன் வைத்தால் கூடப் பொருந்தாது என்பது நன்கு தெரிந்தும், அவளைப் பற்றி எண்ணுவது கூடத் தவறு என்று எண்ணித்தான், அவளின் நினைவுக்கு ஆரம்பத்திலேயே ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்க முயன்றான் கதிர்.

முதலில் அவளைக் கண்டு சலமின்றிக் கடந்து போவது கொஞ்சம் கஷ்டமாக இருந்த பொழுதும், காலப்போக்கு அவனைக் கொஞ்சம் திடப்படுத்தி விட்டு இருந்தது போல. அதனால் தான் இன்று அவளைக் கண்டும் காணாதது போல கதிரால் நகர்ந்து செல்ல முடிந்திருக்கிறது எனலாம்.

என்னதான் நாம் ஒரு கணக்கு போட்டாலும், நமக்கு மேல் இருக்கிறவனின் கணக்குப்படித்தான் இங்கே எல்லாம் நடக்கும் என்று பாவம் அவனுக்குச் சொல்ல போவது யாரோ?

ஆம்! தன்னுடைய கனவையும், அதை நனவாக்கப் போகும் பெண்ணையும் நோக்கி மட்டுமே தன்னுடைய பயணம் இனி இருக்க வேண்டுமென்று மிக உறுதியாக எண்ணியவனின் உறுதி, இன்னும் சில தினங்களில், அவனாலேயே மாறப் போவது மட்டுமில்லாது..

எந்தப் பெண்ணை பார்க்கக் கூடாது, நினைக்கக் கூடாது என்று நினைத்தானோ.. அவளையே தினம் தினம் நினைத்து அவன் மறுகப் போகும் நாளும் வரத்தானே போகிறது..??

அப்பொழுது அவனின் கனவு ஒரு பகல் கனவா??!!

Advertisement