Advertisement

அத்தியாயம் – 11

உணவு மேசைக்கு வந்த ஆதி, கையோடே அவள் காலையில் கொடுத்த நோட்டையும் எடுத்து வந்திருந்தான்.

“பார்த்துட்டேன் மது. எனக்கு ஓக்கேதான். ரெண்டு மூணு பாயிண்ட் மட்டும் கேட்கணும்.”,  என்றபடியேஅமர்ந்தான்.

“நேத்து ரெண்டு பேரும் போட்ட சண்டை என்ன? அது வேற வாய்ன்னு சொல்ற அளவுக்கு இப்ப சாதாரணமா பேசறதென்ன?”, என்று நினைத்த சங்கரிதான் இருவரையும் மாறி மாறி பார்த்து முழித்தார்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். இடையில் சங்கரியிடம் கேட்க திரும்ப, அப்போதுதான் அவர்களைப் பார்த்து முழித்துக்கொண்டிருப்பது தெரிந்து, மது சிரித்தவாறே, “ஆன்ட்டி? என்னாச்சு? நேத்து அப்படி சண்டை போட்டமே, இப்ப பேசறமேன்னு பாக்கறீங்களா?”

“ஹா.. ஆமா.. இல்லை..”, அசடு வழிய சிரித்தார் சங்கரி.

“தப்பு என் மேல, அதனால் நான் சாரி கேட்டேன்.”, என்று மது சொல்லவும், “ இல்லை, என் மேலயும்தான், நானும் சாரி கேட்டேன்.”, என்று ஆதியும் சொல்ல,

“ஆண்டவா, இந்த ஒரு மாசத்துல நம்மளை மென்டலாக்கிடுவாங்க போலவே.”, என்று எண்ணி, தலையை மைய்யமாய் ஆட்டி சாப்பாட்டில் கவனமாகினார்.

பேச்சு மீண்டும் காரியத்திற்கான ஏற்பாடுகள், அழைக்க வேண்டியவர்கள் என்று சென்றது. இருவருமாய் மேற்பார்வைகளைப் பங்கிட்டுக்கொள்ள சுமூகமாய் முடிந்தது.

அன்று முழுதும் ஒரு சுமூகமான நிலையே இருந்தது. ஆறு மணி போல மதுவைத் தேடி வந்தான் ஆதி. அவள் முகம் சற்று வாடியிருந்தது.

“ஹே மது? என்னாச்சு, வாட்டமா இருக்க?”, என்று கேட்டபடி அமர்ந்தான்.

“ச்ச் .. ஒண்ணும் புதுசில்லை. அப்பா அம்மாவை காரியத்துக்கு வர சொன்னேன். இரெண்டு பேருக்குமே வர  இஷ்டமில்லை. அதை வேலையிருக்கு டைமில்லைன்னு பொய்முலாம் பூசி சொல்றாங்க.”

என்ன சொல்ல முடியும்? குறைந்த பட்சம் மதுவைப் பார்க்கவாவது வந்திருக்கலாம். இரண்டு வாரங்களாகப் பிரிந்திருக்கிறாள். சிறிய அமைதி நிலவியது.

“விடு. இது எனக்கு புதுசில்லை.”, என்று தோள் குலுக்கினாள் மது, முயன்று ஒரு புன்னகையை வரவழைத்து.

“ஏன் இப்படி இருக்காங்க மது? அவங்களுக்குள்ள அக்கறை இல்லாட்டியும், உன் மேல இருக்கணும் இல்லையா? உனக்காகவாச்சம் ஒருத்தராவது வந்திருக்கணும்.”

“இருக்கணும். இதுல ஜோக் என்னன்னா, எனக்காகத்தான் பிரியாம இருக்காங்களாம்.  அப்பா ஒரு வாட்டி சொன்னார்.”, விரக்தியாய் சொன்னாள்.

“எனக்கு புரிஞ்சிக்கவே முடியலை. உன் அப்பா ஏன் இப்படி இருக்கார்ன்னு. அதை உங்கம்மா எப்படி அனுமதிக்கறாங்க?”, ஆதி கேட்க, சட்டென்று முகம் மாறியவள்,

“அவங்க வாழ்க்கை பத்தி நாம பேசக்கூடாது.  என்னவாயிருந்தாலும் என் அப்பா அம்மா அவங்க. இப்படி விமர்சனம் பண்றது எனக்கு புடிக்காது ஆதி.”, என்று கத்தரித்தாள்.

இரு கைகளையும் தூக்கியவன், “ நான் காசிப் பண்ண கேக்கலை மது. ஆனா இப்படி அவங்க விமர்சிக்கபடறது உன்னையும் ஹர்ட் பண்ணுது. நீ எங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். ஆனா ஊர் பேசறது உன்னை ஹர்ட் பண்றதை நீ கண்டிப்பா அவங்ககிட்ட சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்டணும். “

அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். “தாங்க்ஸ். எனக்காக யோசிக்கறதுக்கு. பேசறவங்களோட பேச்சு, அவங்க காதுக்கும் போகும்தானே? அவங்களுக்கே தெரியாதா? இதை நான் வேற சொல்லணுமா? சொன்னாலும் எதுவும் மாறாது. அது ஒரு டாக்சிக் சிட்சுவேஷன். வேற பேசலாம் நாம.”, என்றாள் முடிவாக.

“உங்க வீட்ல பேசிட்டியா?”, என்று அவளே பேச்சை மாற்றினாள்.

“ம்ம். அப்பாக்கு வர முடியாதுன்னார். சபரி அம்மாவை கூட்டிட்டு வருவான். அங்கிள் ப்ரூப் பார்த்துட்டராம், நாளைக்கு காரிய பத்திரிக்கை வந்துடும். அட்ரெஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டியா?” .

“ஆச்சு.  நாளைக்கு குரியர் செய்திடலாம்.  நோனாக்கு ஒரு புடவை, ஐயர் வேட்டின்னு கொஞ்சம் ஷாப்பிங் செய்யணும். நானும் ஆன்ட்டியும் போயிட்டு வரோம் நாளைக்கு.“

பேச்சு பொதுவாய் சென்றது அதன் பின்.

“கேக்கணும்னு நினைச்சேன். காலைல எங்க போன?”, என்றான் ஆதி.

“சும்மா நேச்சர் வாக். தினமும்தான் போவேன். நீ எங்க அந்த நேரம் எழுந்துக்கற? பார்க்க ஃபிட்டா இருக்க, ஆனா வந்த நாளா எதுவும் நீ எக்ஸ்சர்சைஸ் பண்றா மாதிரியே தெரியலையே.”, மது கிண்டல் செய்தாள்.

அருகிலிருந்த குஷினை அவள் மேல் வீசியவன், “ஹே.. நான் ஆறரைக்கெல்லாம் எழுந்துடுவேன். ஒரு மணி நேரம் ப்ளாங்க்ஸ், புஷ்-ஷ்ப், ஸ்க்வாட்னு வொர்க் அவுட் செய்வேன் தினமும்.”

“ஓ.. இப்படி ரூமுக்குள்ள பண்றதுக்கு வெளிய வரலாமில்லை? இயற்கை அழகு கொட்டிகிடக்கு  இங்க. அதை நின்னு ரசிக்கத்தான் கண்ணில்லை.”

“சரி.  நாளைக்கு உன்னோட நானும் வரேன். நீ எவ்வளவு தூரம் ஜாகிங்க் போவ?”

“என்னது, ஜாகிங்கா? சீ சீ… அதெல்லாம் இல்லை. அப்படி காலாற நடந்து போய், கண்ணுக்கு படற சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்து ரசிச்சு….”

ஹ ஹ ஹா என்று ஆதி சத்தமாக சிரிக்க, “என்ன? இப்ப என்ன சொன்னேன்னு இந்த சிரிப்பு?”

இல்லை… நீ சொன்னதை கொஞ்சம் அப்படியே திரும்ப யோசி.  நாயை வாக்கிங் கூட்டிட்டு போகும் போது, அதுதான் அங்கங்க நின்னு, மோப்பம் பிடிச்சி…ஹ ஹ..”, மீண்டும் சிரிக்க, அவன் தலை நோக்கி பறந்து வந்தது குஷின்.

“சே.. உங்கிட்ட சொல்றேன் பாரு.  போ போ, நாலு சுவதுக்குள்ளயே குதி.”, என்று எழப் போனவளை, கைப்பிடித்து அமர வைத்தவன்,

“ஈசி. சரி நாளைக்கு நான் வரேன். உன் கண்ணால உலகத்தைப் பார்க்கலாம். அப்படி என்னை நீ நெஜமா சர்ப்ரைஸ் செஞ்சா, நீ கேட்டது நான் செய்யறேன்.”, டீல் பேசினான் ஆதி.

உதட்டைக் கடித்து ஒரு நொடி யோசித்தவள், “டீல். பட் நான் அப்படி செஞ்சா, உடனே வசூல் பண்ணுவேன். அதனால, நீ நாளைக்கு ஜீன்ஸ், லைட் யெல்லோ ஸ்வெட்டெர் வெச்சிருக்கியே அது போட்டு, உன் டெனிம் ஜாக்கெட் எடுத்துகிட்டு வரணும்.”

ஆச்சரியப்பட்டவன், “ஏன்?”

“நாளைக்கு நான் காட்டப்போற இடத்துல வெச்சு, உன்னை போட்டோஸ் எடுக்கணும். கவலைப்படாதே, முகம் முழுசா தெரியாம டிஸ்டன்ஸ் ஷாட்தான் எடுப்பேன்.”, அவள் திட்டத்தை சொல்லவும்,

“இன்ட்ரெஸ்டிங்…”, என்று அவன் சொல்லும்போதே போன் வர, கிளம்பினான் ஆதி.

 மறு நாள் காலை ஆறு மணிக்கெல்லாம் ஆதி அவள் சொன்ன உடையில் ஆஜராகியிருந்தான்.

“குட் மார்னிங்.”, என்று மது சொல்ல, காலையில் புது மலராய் அவனுக்காக காத்திருந்தவளைப் பார்த்து பதில் கூறினான்.

இருவருமாய் பனி மூட்டததுடன் சோம்பலாய் விடியும் அந்த காலை நேரத்தில் கிளம்பினர்.சிறிது நேரமே சாலையில் சென்ற மது, குறுக்கே வந்த ஓரு மண் பாதையில் செல்லத் தொடங்கினாள்.

ஜன சந்தடி குறையவும், “காலைல பறவைகளோட சத்தம் கேளு. அங்க ஒரு மரம் தெரியுது பார். அங்க போகலாம். நிறைய பர்ட்ஸ் இப்ப அங்க இருக்கும், ஆனா சத்தம் போடாம வா.”, என்று அழைத்துச் சென்றாள்.

அந்த பெரிய மரத்தில் பல கூடுகள் இருக்கும் போல. காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இருக்கும் வீடு போன்ற இரைச்சலில் இருந்தது. பல விதமான அழைப்புகள் பறவைகளிடம்.

ஆதியை நெருங்கியவள், குனிய சொல்லி, “கண்களை கொஞ்சம் பழகவிட்டு, எத்தனை விதமான பறவை தெரியுதுன்னு பாரு. “, என்று கிசுகிசுத்தாள். கூடவே அவள் கைபேசித் திரையில் சில பறவைகளின் போட்டோ, அதன் பேரோடு இருப்பதைக் காட்டினாள்.

அதைப் ஒரு முறை பார்த்த ஆதி, மெதுவே தேடினான். அங்கே ஆரஞ்சு வண்ண அலகும், கறுத்த மேனியுமாய் மரங்கொத்திப் பறவையைக் கண்டதும் மதுவை இழுத்து காண்பித்தான். சிரித்தபடி தலையாட்டியவள்,பல வண்ணத்தில் சிறிய பறவை ஒன்றை அவள் பங்குக்குக் காட்டினாள். இலைகளூடே இருந்த பறவையை அவள் காட்டியிருக்காவிட்டால் பார்த்திருக்க மாட்டான்.  அதன் பெயரை கைபேசித்திரையில் மறுபடி பார்க்க ‘நீலவால் பன்சுருட்டான்’, Chestnut Bee Eater என்றிருந்தது.

“பறந்துகிட்டு இருக்கிற பூச்சிங்களை மட்டும்தான் பிடிச்சி சாப்பிடும். அதுவே பக்கத்துலயே  இருந்தாலும் மரத்துல பூச்சி உக்கார்ந்திருந்தா சாப்பிடாது. அப்படி ஒரு பாலிசி இந்த பறவைக்கு.”, என்று சொல்ல ஆதி நம்பவில்லை.

“அப்பறமா கூகிள் பண்ணிக்கோ.”, என்று சொன்னவள் மேலும் நகர்ந்து பறவைகளைப் பார்க்கலானாள். ஆதிக்கு நிஜமாகவே வித்தியாசமாக இருந்தது. பைனாகுலர் எடுத்து வந்து ஒரு நாள் இன்னும் நெருக்கமா பார்க்கணும் என்று நினைத்துக்கொண்டான்.

மெதுவாய் அவன் புஜம் பற்றி, போகலாம் என்று சைகை செய்யவும், சுற்றி சுற்றிப் பார்த்தவாறே அவளுடன் சென்றான்.

சரிவிலிருந்து மேட்டுக்கு அதே மண் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருந்தாள். 

“ ரொம்பவே நல்லாருந்தது மது, ஒத்துக்கறேன். இன்னொரு முறை பைனொகுலர்ஸ் வாங்கிட்டு வந்து பார்க்கணும்.”, என்றான் ஆதி உற்சாகமாய்.

“இன்னும் சின்ன சின்ன அழகான விஷயங்கள் நிறைய இருக்கு. ஆனா உனக்கு பொறுமை கிடையாது. அதுனால், அடுத்த இடம் சீக்கிரமே போயிடலாம்.”, என்று நடந்தாள்.

“அதெப்படி எனக்கு பொறுமை கிடையாதுன்னு நீ டிசைட் செய்வ? நீ காட்டு நான் போர் அடிச்சா சொல்றேன்.”, அவள் பின்னே நடந்தபடியே முறுக்கிக் கொண்டான்.

சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்து சிரிப்பை உதிர்த்து மது நடக்க, பளிச்சிட்ட அவள் கண்களும் அந்த பாதி சிரிப்பும் ஆதியை ஒரு நொடி நிறுத்தியது. கண்களை இமைத்து, தலையை ஆட்டி, ‘என்னடா, மது அழகுதான். உனக்கு தெரியும்தானே.  அது ஜஸ்ட்  போட்டோ ஃப்ளாஷ் மொமென்ட். ‘ என்று சொல்லிக்கொண்டே நடையைத் தொடர்ந்தான்.

மேட்டில் கவனமாய் ஏறும் மதுவைப் பார்க்கையிலேயே தெரிந்தது, அவளுக்கு இப்படி நடப்பது பழக்கமானதுதான் என்று.  எடுத்து வைக்கும் அடிகள் நிதானமாக , உறுதியாக இருந்தது. ஒரே சீராய் நடந்தாள். லேசாக மூச்சு வாங்கியது ஏறி முடிக்கவும்.

மேலிருந்து பச்சை புல்வெளியைக் காட்டப் போகிறாள் என்று நினைத்தவன், அவள் பார்த்திருந்த திசையில் திரும்ப , அங்கே பார்த்ததோ, கண்களை கொள்ளை கொண்டது. வரிசையாக இருபுறமும் குல்மொஹர் மரங்களிலிருந்து கொட்டியிருந்த பூக்கள் அந்த இடத்தையே செம்மை நிறமாக மாற்றியிருந்தது.

“உனக்காக இயற்கை சிகப்பு கம்பளம் விரிச்சி வெச்சிருக்கு பார். “, என்றாள் அவனருகே நின்றிருந்த மது.

“சுப்பர்ப் மது. வார்த்தையே இல்லை சொல்ல.”, என்று பார்த்த பார்வையை மாற்றாமல் மெங்குரலில் கூறினான்.

அவன் ஆசை தீர பார்க்கட்டும் என்று மெதுவாய் அந்த செம்பட்டுக் கம்பளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவன் பின்னே சென்றாள். என்னவோ அவன் இப்படி அவளுடன் இயற்கையைப் பார்ப்பதில், பெயருக்காக என்றில்லாமல் நிஜமாகவே அவளுடன் அதை அனுபவிப்பதில் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷம் மனதில் குடிபுகுந்தது. அவனுக்கு இப்படி ஒரு விஷயத்தை காண்பித்ததில் ஏனென்று சொல்லத் தெரியாத ஒரு பெருமை, கர்வம் வந்து ஒட்டிக்கொண்டது. அதை ஆராய முற்படவில்லை மது. அப்படியே ஏற்றுக்கொண்டாள். இந்த நொடி, இந்த உணர்வு பிடித்திருந்தது, மெதுவாய் அனுபவித்தபடியே, இன்னும் விழுந்து கொண்டிருந்த பூக்களின் இதழ்களைப் பிடித்த ஆதியைப் பார்த்து புன்னகை பூத்தாள்.

கிட்டதட்ட இருபதடி தூரத்திற்கு நீண்டது பூக் கம்பளம். அவன் பிடித்த பூவை அவள் காதோரம் வைத்தவன், மதுவின் கைப்பிடித்து,

“தாங்க்ஸ் மது. “, என்றான்.

அவன் நன்றியை தலையசைத்து ஏற்றவள், “ போட்டோக்கு போஸ் குடுக்க ரெடியா? வெளிச்சம் நல்லா வந்துடுச்சு. ஆள் நடமாட்டம் வரதுக்குள்ள எடுக்கணும்.”, என்றாள் புருவம் தோக்கி.

“ஹ்ம்ம்… கண்டிப்பா இதுக்கு பே பண்ணலாம். சொல்லு என்ன செய்யணும்?”, புன்னகையுடனே கேட்டாள்.

ஜாக்கெட்டை கையில் பிடித்தவாறு, மரத்தின் மீது கால் வைத்து பார்வையை எதிரே காதலியின் வருகைக்கு காத்திருப்பவன் போல ஒரு போஸ், முன்னே பாதி வரை பூக்கள் மத்தியில் நடந்து, லேசாய் பின் புறம் திரும்பிப் பார்ப்பது போல, தீவிர யோசனையாக நடந்து வருவது போல என்று விதவிதமாக எடுத்தாள்.

அவள் கேட்ட படியெல்லாம் செய்தான் ஆதி. அவள் முடித்ததும்,  “எனக்கு ஒரு போட்டோ வேணும். ஒரு செல்ஃபி. வா. “, என்று அவளை அழைத்தவன், இழுத்து அமர வைத்து அருகில் அமர்ந்து அவர்களை சுற்றி பூக்கள் மட்டும் தெரிய நாலைந்து போட்டோக்கள் எடுத்தான். இருவருமே நிறைவான புன்னகைகளுடனும் இருந்தனர்.

“என் போட்டோஸ் வெச்சு என்ன செய்ய போற?, என்று கேட்டவாறு அவள் எடுத்திருந்த போட்டோக்களைப் பார்த்தான். ஐ-போனில் அவள் திறமையைக் காட்டியிருந்தாள்.

“இது ஒரு சாரிட்டி போட்டோ சேல்காக எடுத்தேன் ஆதி.”, இந்த போட்டோஸ் விக்கற காசை நான் வேலை பார்க்கற அந்த இல்லத்துக்கு கொடுப்பேன்.

“நல்ல விஷயம்தான். இது எவ்வளவுக்கு போச்சுன்னு சொல்லு. அந்த அமௌண்ட் நான் டபுள் பண்றேன்.”, என்றான் ஆதி.

பார்த்துக்கொண்டே வந்தவனின் கைகளிலிருந்து சட்டென்று பறித்துக்கொண்டாள் போனை.

“ஹே ,  அது என் க்ளோஸ்-அப் ஷாட் தானே?, காட்டு.”

“அ..அது சும்மா ஆங்கிள் பார்க்க எடுத்தேன். அதெல்லாம் விக்க கொடுக்கமாட்டேன்.”, என்று அவசரமாய்க் கூறினாள்.

பொய் சொல்லுகிறாள் என்று தோன்றியது ஆதிக்கு. ஆனாலும் அவன் போட்டோவை எடுத்திருக்கிறாள் என்றது இனித்தது.

“சரி, வா போலாம். நான் எடுத்தது உனக்கு அப்பறம் அனுப்பறேன்.”, என்று எழுந்து, அவளுக்கும் ஒரு கை கொடுத்து தூக்கிவிட்டவன், ஏனோ சற்று நேரம் பிடித்த கையை விடாமலே சரிவில் அவளுடன் இறங்கினான். மனதில் ஒரு சந்தோஷம், அமைதி , நிறைவு என்று கலவையான உணர்வுகள் இருந்தது ஆதிக்கு. அதை பிரித்தறிய தெரியாவிட்டாலும், அந்த உணர்வு பிடித்திருந்தது.

Advertisement