Advertisement

அத்தியாயம்  – 3

வேலையில் மூழ்கியிருந்த கதிரைச் சந்திக்க வந்தான் வசந்த்.

“ஸ்டாக் எல்லாம் குவாலிட்டி செக் முடிச்சு ரெடியா இருக்கு. நீ ஒருதடவை வந்து பார்த்து ஓகே சொல்லிட்டா, எல்லாத்தையும் இன்னைக்கு குடோன் அனுப்பி வச்சுடலாம்” என்றான்.

“அஞ்சு நிமிஷம்! இதை மட்டும் செக் பண்ணிட்டு வரேன்” என்று நண்பனின் பேச்சுக்குக் கதிர் பதில் தர, சரி என்ற விதமாகத் தலையசைத்துச் சொல்லி விட்டு அங்கிருந்த நாற்காலி ஒன்றில் சாய்வாக அமர்ந்தான் வசந்த்.

“போகலாமா?” ஐந்து நிமிட முடிவில் சொன்னது போலவே தன் வேலை முடித்து எழுந்து நின்றபடி கேட்டான் கதிர்.

வசந்த்தோ அதுவரை போனிலேயே புன்னகை மன்னனாய் முகம் புதைத்து இருந்தவன், காதில் வந்து விழுந்த நண்பனின் வார்த்தைகளில், உடனே தன்னுடைய போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, அங்கிருந்து செக்கிங் டிப்பார்ட்மென்ட் நோக்கி நடை போட்டான்.

“ஆபீஸ் நேரத்தில் ஒழுங்கா வேலை பார்க்காம கடலை போட்டுக்கிட்டு இருக்கியா??” என்று கதிர் தன் நடையை நிறுத்தாமல் திரும்பியும் பாராமல் கேட்டான்.

வசந்தோ, கதிரை நிமிர்ந்து பார்த்தவன், “என் தெய்வீக காதலை கடலை முதலைன்னு சொல்லிக் கொச்சை படுத்த வேண்டாம் மச்சான்!” என்று முறுக்கிக் கொண்டு முறை வைத்துப் பேச, சட்டென்று நின்று விட்ட கதிரோ, குத்தீட்டி விழிகளால் குத்தினான்.

“நான் உனக்கு மச்சானா?”

“பின்ன இல்லையா? அனாமிகாவுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தா, அவ அண்ணன் எனக்கு மச்சான் தானே மச்சான்??”

முகமெல்லாம் பல்லாக வசந்த் சொல்ல, “அப்படி ஒன்னு நடந்தா பார்க்கலாம்!” என்று கதிர் அசால்ட்டாகப் பதில் தந்தான்.

வசந்துக்கோ, .‘அட பாதகா! எவ்ளோ நல்லவன்டா நீ!’ என்று பியூஸ் போன பல்பாக முகம் இருள நினைத்தான்.

“ஏன் இவ்ளோ நல்லெண்ணம் தங்களுக்கு??” வசந்த் கேள்வி எழுப்பினான் நக்கலாய்!

“முதலில் ராமமூர்த்தி சார்கிட்ட உங்க காதலைப் பத்தி சொல்லிச் சம்மதம் வாங்குற வழியைப் பாரு. அப்புறம் வந்து இந்த டையலாக் எல்லாம் விடலாம்” என்று கட் அண்ட் ரைட்டாகச் சொன்னான் கதிர்.

எதுவாக இருந்தாலும் அது முறைப்படி நடக்க வேண்டும் என்று கதிர் சொல்வது வசந்துக்குப் புரியாமல் இல்லை.

ஆனால் காலமும் நேரமும் கூடி வருவதைப் போல, அவனுக்குத் தைரியமும் வர வேண்டுமே அவரிடம் பேச? அது புரியாது, அண்ணனும் தங்கையும் இதே பாட்டை பாடுவதைக் கேட்டு, அவனுக்குக் கடுப்புத்தான் எழுந்தது.

பின்னே.. அவன் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறான்?

நிஜமாகவே ராமமூர்த்தி முன் சென்று நின்றாலே அவனின் நாடி நரம்பு எல்லாம் தடதடவென்று ப்ரேக் டான்ஸ் ஆடும். அதை நிறுத்தவே அவன் தினமும் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவனுக்கு மட்டும் தானே தெரியும்!

அது போதாதென்று அவரிடம் வாயைத் திறந்தாலே பயத்தில் வெறும் காத்து தான் வெளியே வரும்.

“இந்த லட்சணத்தில் எங்கேயிருந்து அவரிடம், ‘மாமா! உன் பொண்ணைக் கொடு’ என்று கேட்பது?” என்று தனக்குள் நொடித்துக் கொண்டவன்,

“இப்படி டீமோடிவேட் பண்ணுறதுக்குப் பதிலா, கொஞ்சம் மோட்டிவேட் பண்ணி நண்பனுக்குக் கொஞ்சம் உதவலாமே மச்சான்??” என்று குரல் இறக்கிக் கெஞ்சலில் இறங்கினான்.

“எப்படி??” என்று கதிர் அதற்கு புருவங்கள் இரண்டும் உயர கேட்ட தொணியே, ‘சத்தியமாக உனக்கு மட்டும் உதவ மாட்டேன்!’ என்பது போல் தோன்றியது வசந்த்துக்கு.

ஆனாலும் மனம் தளராது, “என் சார்பா அங்கிள்கிட்ட கொஞ்சம் நீங்க பேசலாமே??” என்றதும் தான் தாமதம்!!

கதிரின் முகம் மாற ஆரம்பிப்பதைக் கண்டவனுள், ‘இந்த ஜென்மத்தில் எனக்குக் கல்யாணம் நடந்த மாதிரி தான்டா சாமி!!’ என்று அல்லு விட்டது.

“ஒரு பொண்ணைத் துரத்தி துரத்தி அவ காறி துப்பாத குறையாகத் துரத்தி அடிச்சும், பின்னாடியே போய் காதலிக்க முடிந்த உனக்கு, அவங்க அப்பாகிட்ட பேச மட்டும் முடியலையா??”

கதிரின் குத்தல் வார்த்தைகள் வசந்திற்கு ஓங்கி முகத்தில் ஒரு குத்து விட்டது போல இருந்தது.

ஒரு நிமிடம் கண் மூடி அந்தக் குத்தை வாங்கிக் கொண்டு கண் விழித்தவனுள்ளோ, “இதுக்கு அவர்கிட்டயே நேரா போய் பேசி தர்ம அடி வாங்கி இருக்கலாம் போலயேடா வசந்த்!!” என்ற ஞானம் பிறந்ததில், ஒரு கையை உயர்த்தி நண்பனின் பேச்சுக்குத் தடை போட்டான்.

‘போதும்! இதுக்கு மேல தாங்காது!” என்றவன் மேலும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு,

“போறேன்.. போயி அவர்கிட்ட நானே பேசுறேன், போதுமா??” என்று வீரமாகவும் வீராப்பாகவும் சொல்ல, அவனின் செய்கையைக் கண்ட கதிருக்குச் சிரிப்பு தான் வந்தது.

“ம்ம்ம் குட்… இதை முன்னாடியே செஞ்சு இருக்கலாம்ல?”  என்று அப்பவும் நக்கலாகத்தான் சொன்னான்.

வசந்த்தோ, மௌனமும் கடுப்பும் போட்டி போட, வாயை மூடிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

இருந்தும் அவனது மனமோ, “நான் எங்கடா செஞ்சேன்? எப்பவும் நீங்கதானடா என்னை வச்சு செய்றீங்க!’ என்று உள்ளே அழுது புலம்பத்தான் செய்தது. ஆனாலும் வெளியில் கெத்தாகப் பார்த்து வைத்தான் வசந்த்.

செக்கிங் ரூம் வந்தவுடன் க்வாலிட்டி செக் செய்து, அதன் தரத்தின்படி, பிரிவு வாரியாக பிரித்து வைத்திருந்த தேயிலை இலைகளை ஒருமுறை முழுவதுமாகச் சரிபார்த்தான் கதிர்.

பின்பு அங்கிருந்த ஆட்களிடம், “இதை முதலில் குடோனுக்கு அனுப்பிட்டு இதையெல்லாம் நாளைக்கே பாக்கெட்டிங் டிப்பார்ட்மென்ட்க்கு அனுப்பிடுங்க” என்று மேலும் சில விஷயங்களை உரைத்தவன், அதற்குரிய ஆவணங்களில் கையொப்பமிட்டு விட்டு, மற்ற வேலைகளை வசந்தை மேற்பார்வையிடும்படி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

மாலை வேலை முடிந்து வீட்டிற்குக் கிளம்பிய கதிரை நோக்கி வந்த அனாமிகா, “எனக்கும் வேலை முடிஞ்சிருச்சு. நானும் உங்க கூடவே இன்னைக்கு வரேன்” என்று சொன்னாள்.

சரியென்று தலையசைத்த கதிர், அவளை முன்பக்கம் ஏற சொல்லி விட்டு பின்பக்கம் ஏற, அவர்களையே பார்த்துக் கொண்டு மௌன சாமியாராய் நின்றிருந்த வசந்த்தோ, கொலை செய்யும் கடுப்பில் கதிரை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

பின்னே.. காதலியுடனான பயணத்தை நினைத்து வானத்தில் பறந்தவனை, ஒரே நிமிடத்தில் இப்படித் தொபுக்கடீர் என்று கீழே தள்ளி விட்டால், அவனும் தான் என்ன செய்வான்??

“எங்கே இருந்துடா எனக்குன்னு இப்படிக் கிளம்பி வரீங்க?” நொந்து போய் பின்புறம் ஜீப்பில் ஏறி அமர்ந்தான்.

அதே முறைப்புடன், “அண்ணன் அக்கறை..!! இருக்கட்டும்.. இருக்கட்டும்..” என்று வசந்த் சொன்ன விதத்தில் அனாமிகா சிரிப்பை அடக்கப் பாடுபட்டாள்.

ஆனால் கதிரோ ஒன்றும் சொல்லாமல், “போலாம் முருகா” என்றானே பார்க்கலாம்.. அவ்வளவு தான்!! சீறி எழுந்து விட்டான் வசந்த்.

“ஹலோ.. ஹலோ மிஸ்டர்! இங்கே ஒருத்தன் புலம்பிக்கிட்டு இருக்கேன். அதாவது உங்க கண்ணுக்குத் தெரியுதா??”

“அப்படியா?” என்று கதிர் சொல்ல, இந்த முறை அனாமிகா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.

“ரொம்பச் சிரிக்காத!! பல் சுளுக்கிக்கப் போகுது!!” என்று முன்னே இருப்பவளிடமும் கடுப்படிக்க,

“கொஞ்சம் அடக்கி வாசிக்குறியா??” என்று கதிர் அதட்டினான்.

அவனை நிமிர்ந்து பார்த்த வசந்திற்கு, முருகனின் மீது பதிந்து மீண்ட நண்பனின் பார்வைக்கான காரணம் புரிந்து, தலையைச் சொறிந்து, கண்களால் அவனிடம் மன்னிப்பு கேட்டவனும், அதன்பின் பொதுவான அரட்டையில் இறங்கி இருந்தான்.

அவர்கள் மூவரின் பாசப் பிணைப்பு மொத்த எஸ்டேட்டுக்கும் பிரசித்தம் என்பதால், முருகனால் வசந்தின் பேச்சையோ, இல்லை அவர்கள் மூவரின் பிணைப்பையோ எந்த விதத்திலும் தவறாக எண்ண முடியாது போனது.

முதலில் வசந்தை அவன் வீட்டில் இறக்கி விட்ட கதிர், தன் வீடு அடுத்து வரவும் தானும் இறங்கிக் கொண்டவன், முருகனிடம் அனாமிகாவை டிராப் செய்து விட்டு அப்படியே வீடு சென்று விடும்படி பணித்தான்.

புதிய வேலை! புதிய அனுபவங்கள்! புது மனிதர்களுடனான நட்பு! என்று பலவித உணர்வுகளில் மிதந்து திளைத்துக் களைத்து, அன்று ராஜம்மாவுடன் பொடி நடையாகக் காட்டுப் பாதையில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த தாமரையின் உள்ளம் முழுவதுமே உத்வேகம் மட்டுமே நிரம்பித் தளும்பியது.

இன்னும் சில பெண்களும் அவர்களுடன் நடை போட்டுக் கொண்டு இருந்ததால், ஆளாளுக்கு ஒவ்வொரு கதையைப் பேசிக் கொண்டு வந்தது மட்டுமில்லாது, தாமரையையும் தங்களின் பேச்சில் இழுத்துப் பேசி, அவளையும் கொஞ்சமே கொஞ்சம் பேச வைத்துக் கொண்டு இருந்தனர்.

முதலில் அவர்களுடன் பேசத் தயங்கியவளை அபூர்வ பிறவியாகப் பார்த்தவர்கள், ‘இந்தக் காலத்தில் இப்படி ஒரு பொண்ணா?’ என்று ராஜம்மாவிடம் கேட்டுச் சிரித்தபடி, அதன்பின் தாமரையின் குடும்பச் சூழல் தெரிந்து, அவளின் மீது பாசத்தைப் பொழிய ஆரம்பித்தனர்.

ஏழைகளால் எப்பொழுதும் எந்நேரமும் மற்றவர்களுக்குத் தயங்காது கொடுக்க முடிந்தது, அன்பு ஒன்று தானே?? அதைத்தான் அவர்களும் தாமரையின் மீது அந்நேரம் செலுத்தினர்.

அதிலும் ஒரு பெரியவர், “அம்மா இல்லைன்னு கவலைப்படாத ராசாத்தி! எப்போ என்ன பிரச்சனைன்னாலும் என்னை உன் அம்மாவா நினைச்சு என்கிட்டே வந்து சொல்லு! என்னால முடிஞ்ச உதவியைச் செய்றேன்” என்று சொல்ல, அதைக் கேட்ட நொடி தாமரையின் கண்கள் கலங்கி விட்டது.

இப்படியே பேச்சும் நடையுமாக மனம் முழுவதும் சந்தோசம் பொங்க, அன்று அலர்ந்த மலராக வீடு வந்து சேர்ந்த தாமரையின் முகம், வீட்டு வாசலில் போதையில் ஆடைகள் நசுங்கி அலங்கோலமாகக் குப்புற கிடந்த தந்தையைக் கண்டு, ஒரே நொடியில் கருகி சுருங்கிப் போனது.

“இவனெல்லாம் என்னைக்குத்தான் திருந்த போறானோ?” என்று தலையில் அடித்துக் கொண்ட ராஜம்மா,

“விசனப்படாத தாமரை… இது என்ன நமக்குப் புதுசா??” என்று ஆறுதல் சொல்லி விட்டு, அவளுடன் சேர்ந்து வெளி வேலிக்கதவு தட்டியைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்.

மண்ணில் குப்புற கிடந்த முத்துசாமியைப் பெண்கள் இருவரும் கைத்தாங்கலாகத் தூக்கி, கொல்லைக்கு இழுத்துச் சென்று ஒரு கல்லின் மீது அமர்த்தி, ஒரு குடம் தண்ணீரை அவனின் மீது ஊற்றியதில், லேசாக சுயவுணர்வு பெற்ற முத்துசாமி, “மழை! மழை!” என்று கத்தினார்.

கையில் வைத்திருந்த காலி குடத்தாலேயே ஓங்கி அவரின் தலையில் ராஜம்மா ஒரு போடு போடவும்,

இப்போது, “ஐயோ! இடி! இடி!” என்று அலறினார் முத்துசாமி. அதைக் கேட்டு பெண்கள் இருவருமே சிரித்து விட்டனர்.

ஒரு வழியாகத் தந்தையைத் தண்ணீர் ஊற்றி போதை தெளிய வைத்து முடிக்கவும், “இனி நான் பார்த்துக்குறேன் பாட்டி. நீங்க வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுங்க, நேரமாச்சு” என்று தாமரை ராஜம்மாவை அவரின் உடல் நலம் கருதி அனுப்பி வைத்தாள்.

தந்தையைக் குளிப்பாட்டி, உடை மாற்றி, வீட்டினுள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று, தரையில் பாய் விரித்துப் படுக்க வைத்த தாமரை, அதன்பின் இரவு உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.

காலையில் மீதமிருந்த சாதத்தில் ஒரு எலுமிச்சை பழத்தைத் தாளித்துக் கொட்டி உணவு தயாரித்தவள், அதற்குத் தொட்டுக் கொள்ள பொட்டுக்கடலை சட்னி அரைத்து, ஒரு தட்டில் அதை எடுத்து வைத்துக் கொண்டு உண்டு முடித்த நேரம், முத்துசாமிக்கு போதை முக்கால்வாசி தெளிந்ததை உணர்த்தும் விதமாக அவரிடமிருந்து மகளுக்கு அழைப்பு வந்தது.

அடுப்படியில் பாத்திரங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டு இருந்தவளின் காதில் விழுந்த சத்தத்தில் தந்தையிடம் சென்றவள், அவரின் பசி உணர்ந்து அவருக்கு உணவு பரிமாறினாள் தாமரை.

குடிகாரனாக இருந்தாலும் மகளின் அன்றைய வேலை பற்றி அந்நேரம் விசாரித்தார் முத்துசாமி.

அவரின் கேள்விக்கு, “ஒன்னும் பிரச்சனை இல்லைப்பா. கஷ்டமா இல்லைப்பா” என்று சுருக்கமாகப் பதிலளித்த தாமரை, அவர் சாப்பிட்டு முடிக்கவும், அவரின் தட்டை வாங்கிக் கொண்டு கொல்லைப்புறம் சென்று, ஏற்கனவே அங்கு இருந்த பாத்திரத்துடன் சேர்த்து அதையும் கழுவி முடித்து, அங்கே பக்கத்தில் இருந்த கல்லில் அனைத்தையும் கவிழ்த்து வைத்து விட்டு உள்ளே சென்றாள்.

வெளித்திண்ணையில் தந்தை உறங்க பாய் தலைகாணியை ஒரு பக்கமாக விரித்துப் போடவும், முத்துசாமி அங்கே சென்று உட்கார்ந்து கொண்டு, வேட்டியில் சொருகி இருந்த மலபார் பீடிக்கட்டை எடுத்துப் புகைக்க ஆரம்பித்தவர், ஒரு காலின் மீது மற்றொரு காலை மடக்கி வைத்து அமர்ந்தவாறு, வாயில் சுகமாக ரயில் விட்டுக் கொண்டு இருந்தார்.

அவர் எப்பொழுது தூங்குவார் என்பதை அவர் மட்டுமே அறிவார் என்பதை அறிந்து இருந்த தாமரை, காலை வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், உள்ளறையில் தனக்குத் தூங்கப் பாயை விரித்தவள், அதில் அமர்ந்து கொண்டு, தனக்கு முன்னே இருந்த களிமண்ணாலான சுவற்றில் தொங்கி கொண்டு இருந்த தாயின் படத்தைப் பார்த்து, அன்றைய நாளின் மகிழ்வை முகத்தில் காட்டி, “இன்று போல என்றும் எனக்குத் துணையா இரும்மா” என்று அவரிடம் வேண்டிக் கொண்டு பின் நிம்மதியாக உறங்கிப் போனாள்.

கவலைகள் ஆயிரம் தினம் தினம் அவளைச் சுற்றி சூழ்ந்து சுழற்றியடித்த போதும், அதில் ஒரேடியாக துவண்டு போகாது, ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலேயே சென்று வாழ முயன்று கொண்டு இருந்தவளுக்கு, அந்தக் கடவுளின் துணை இருக்கிறதோ இல்லையோ..?! ஆனால் அவளின் தாயின் துணை எப்பொழுதும் இருப்பதாகவே அவள் நம்பிக் கொண்டு இருப்பதாலேயே அனுதினமும் தாயை மனதில் பூஜித்தாள் தாமரை.

அவளின் பூஜைக்கான பலனை அவளின் தாய் அவளுக்குக் கொடுப்பாரா? தாயை விட உயர்ந்த தெய்வம் உண்டோ?  பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
****************
இரவு வீடு வந்து தனக்கான உணவாகத் தோசையை ஊற்றி, காலையில் அரைத்து மீதி இருந்த சட்னியை ப்ரிட்ஜில் இருந்து எடுத்து, அதையும் சூடு பண்ணிக் கொண்டு ஹாலுக்கு வந்த கதிரவன், டிவியை ஆன் செய்து ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு, அன்றைய செய்தி சேனலைப் பார்க்க ஆரம்பித்தான்.

அவனுடைய வீடு இரண்டு படுக்கை அறை, ஹால் மற்றும் கிட்சன் வசதி கொண்டு சற்று விசாலமானது தான். ஆனால் அங்கு இருக்கும் பொருட்கள் என்று பார்த்தால் ஒன்றுமே இருக்காது, மிகவும் அத்தியாவசிய பொருட்கள் தவிர.

வசந்த் கூட ஒரு முறை சொல்லிப் பார்த்தான்.

‘ஒரு சோபா வாங்கி ஹாலில் போடலாமே?? கொஞ்சம் பெரிய கட்டில் வாங்கலாமே?? கிட்சனுக்கு இதை வாங்கலாமே?? ஹாலுக்கு அதை வாங்கலாமே?? பெட்ரூமுக்கு இதை வாங்கலாமே?’ என்று..

ஆனால் அதை எதையும் வாங்காததற்கு கதிர் சொன்ன பதிலில், அதற்குப் பின் வசந்த் வாயைத் திறக்கவில்லை.

“நீ சொன்ன எல்லாமும் நான் வாங்கலாம். ஆனா அதை அனுபவிக்க இங்கே யார் இருக்கா சொல்லு?? நான் ஒருத்தன் மட்டும் தானே?? யாருமில்லாத எனக்கு இதுவே போதும்!!”

அந்த வார்த்தைகளில் என்ன இருந்தது?? கோபமா??? விரக்தியா??? நிதர்சனமா??? அது இன்று வரை வசந்தால் அறிய முடியா விடுகதை தான். அதன்பின் அவனும் கதிரை மாற்ற முயற்சிக்கவில்லை. அவனும் இதுவரை மாறவில்லை.

ஒற்றைக் கட்டில் இருக்கும் படுக்கையறை, அங்கே ஓரத்தில் இருக்கும் அலமாரியில் மூன்று சாமி படங்கள். காலையும், மதியமும் ஃபாக்டரி கேன்டீனில் சாப்பிடுபவன், இரவு மட்டும் வீட்டில் சமைக்கத் தேவையான பாத்திரங்கள் வாங்கி வைத்திருந்தான்.

பொழுது போகாத நேரத்தில் பார்க்க ஒரு சிறிய டிவி. யாராவது ஊழியர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை உட்கார வைக்க மூன்று பிளாஸ்டிக் சேர்கள். இவ்வளவு தான் சொல்லிக் கொள்ளும்படியான பொருட்கள் கதிரின் வீட்டில் இருந்தன.

வீண் செலவுக்கும், வீண் பந்தாவுக்காகவும் எதையும் செய்யும் பழக்கமில்லாதவனுக்கு இந்த எளிய வாழ்க்கை வாழவே பிடித்து இருந்தது.

சாப்பிட்டு  முடித்து  ஆண்டவனிடம் கேட்கவோ, இல்லை தாமரை போலப் பெற்றோரிடம்  சொல்லவோ  என்று  அவனுக்கென்று யாருமில்லாததால், எப்பொழுதும் போல அன்றும் தன் வீட்டைச் சுற்றிப் போடப்பட்டு இருந்த நடைபாதையில் சிலமணி நேரம், தன் போனுடன் இணைக்கப்பட்டு இருந்த ஹெட் போனை காதில் பொருத்தி, அதில் இளையராஜா பாடலை ஒலிக்க விட்டவன் மனது லேசாகி கண்கள் தூக்கத்தை நாடிய நேரம், படுக்கை அறை சென்று உறங்கிப் போனவனுக்குத் தெரியவில்லை!

இன்று ‘யாருக்காக நான் மாற வேண்டும்?’ என்று கேட்டவனே, இன்னும் சில காலத்தில் ஒருத்திக்காக ஒட்டுமொத்தமாக மாறப் போகிறான் என்று!!

Advertisement