Advertisement

அத்தியாயம் – 1

சூரியனுக்கே ஸ்வெட்டர் போட சொல்லும் வால்பாறை! 

இங்குச் சராசரியாகப் பகலில் 17 டிகிரியும், இரவில் 12 டிகிரிக்குக் குறைவாகவும் தட்பவெப்பநிலை பதிவாகிறது. துள்ளி ஓடும் அருவிகள், அவற்றைச் சேகரிக்கப் பயன்படும் அணைகள், பசுமை மாறாத பள்ளத்தாக்குகள், எங்குத் திரும்பிப் பார்த்தாலும் பச்சைப் பசேலென்று இருக்கும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த ஏழாவது சொர்க்க நகரத்தில், வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளுக்கு மத்தியில், அழகு மிளிர ஜொலிக்கும் கிராமம் தான் அட்டகட்டி. 

இந்தக் கிராமம் மட்டுமின்றி மலையடிவாரத்தைச் சுற்றி இருக்கும் ஏழு சிறிய கிராமத்தினரின் பிரதான ஜீவனாம்சமே, மலை மேல் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் வீற்றிருக்கும் “ராஜதுரை தேயிலை எஸ்டேட்” வேலையிலிருந்து தான் கிடைத்துக் கொண்டு இருந்தது.

ஆண்கள், பெண்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அவரவர் தகுதிகளுக்கு ஏற்ற வேலை எஸ்டேட்டில் கிராமத்தினருக்கு வயிற்றை நிரப்பவும், குடும்பத்தினரைக் கவனிக்கவும் போதுமானதாக இருந்ததால் தான், விவசாயமும் அரசாங்கமும் பலநேரம் கைவிட்ட போதிலும், அதிக மக்கள் இன்னமும் நகரம் நோக்கிச் செல்லாது அங்கேயே வாழ்ந்து வருகின்றனர்.

இளஞ்சிவப்பு சூரியன் தனது பூமி காதலியை ஒட்டி உறவாடி, கிழக்கில் புலர்ந்து எழுந்து, பறவைகளின் ஒலி நாலாபுறமும் தேனாக இசைத்த நேரம்.. 

தன் வீட்டு வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த போது, தன்னைத் தழுவி சென்ற காற்றின் உரசலில் அதன் முகவரி அறிய முயன்றவளாக, இமைகள் மூடி அதை ஆழ்ந்து சுவாசித்தாள் தாமரை. அது கொடுத்த குளிர்ச்சியில் தேகம் ஜில்லிட்டதில், தன் இரு கைகளைக் குறுக்கே இதமாகக் கட்டிக் கொண்டு, மீன் விழிகள் திறந்து, என்றுமே சலிக்காத இயற்கையின் அழகைக் கண்டு ரசித்தவளின் அழகை வர்ணிப்பார் யாரோ!?

பனியில் பூத்த மலராக மலர்ந்து நின்றிருந்தவளை அழைத்தார் பக்கத்து வீட்டு ராஜம்மா. 

“ஏய்! தாமரை!” 

“என்ன பாட்டி?”

“உங்க அப்பாகிட்ட நான் சொன்ன விஷயம் பேசுனியா? என்ன சொன்னான்?” 

தங்கள் வீட்டைச் சுற்றிப் போடப்பட்டு இருந்த முள்வேலியை நெருங்கியவள், அதன் மறுபுறம் நின்று கொண்டு இருந்த பாட்டியிடம்,

“ஹோ! கேட்டுட்டேன் பாட்டி. போகச் சொல்லிட்டாங்க” என்று முகம் மலர்ந்து சொல்லவும், அந்த மகிழ்ச்சி ராஜம்மாவையும் வந்து ஒட்டிக் கொண்டதில் முகச்சுருக்கங்கள் அகல புன்னகைத்தார்.

“சரிம்மா, நீ போய் வீட்ல வேலையை முடிச்சுட்டு விரசா எஸ்டேட்டுக்கு வேலை செய்ய கிளம்பு. நானும் போய் கிளம்புறேன்” என்று சொல்லித் திரும்பியவரின் மனதிலோ தாமரை பற்றிய எண்ணங்களே மேலோங்கி இருந்தன.

“அவ பிறக்கிறப்ப தாமரைப்பூ மாதிரி ரோஸ் கலரா இருந்தா அம்மா. அதான் என் பொண்ணுக்கு அந்தப் பேரு வச்சேன்” என்று முகம் கொள்ளா பூரிப்புடன் சொன்ன பாக்கியம் இன்று உயிருடன் இருந்திருந்தால்..?!

அவளின் மலர் போன்ற மகள் இன்று அவளின் குடிகார தந்தையுடன் படும் பாட்டை பார்த்து என்னவாகி இருப்பாளோ?

மகராசி! ஐந்து வருடங்களுக்கு முன்பே கொடிய நோய் தாக்கி இறைவனடி போய்ச் சேர்ந்து விட்டாள். அன்று முதல் தாமரையின் உலகமே அவளின் தந்தை என்றானது என்றால், அவரின் உலகமோ வேறாக இருந்தது. 

முத்துசாமி இன்று திடீரென்று குடிகாரர் ஆனவர் இல்லை தான்! ஆனால் பாக்கியம் உயிரோடு இருந்த வரை அளவாகக் குடித்து, அவளின் வருமானத்தை வைத்து ஊதாரியாக ஊர் சுற்றிக் கொண்டு இருந்தவர். 

அவளின் மறைவுக்குப் பின் முழுக் குடிகாரனாக மாறிப் போனது மட்டுமில்லாது, ஊரெல்லாம் கடன் வாங்கவும் ஆரம்பித்து இருந்தார்.

யார் தான் அவரை நம்பி கடன் கொடுப்பார்களோ தெரியாது? ஆனால் பணம் கொடுத்தவன், அதைத் திருப்பிப் பெற வந்து நிற்கும் இடம் என்னவோ, முத்துசாமியின் வீடாகத்தான் இருக்கும்!!

நேற்று கூட ஒருவன் வந்து கடனைக் கேட்டான்.

அதற்குப் பதில் சொல்ல கூட முடியாத நிலைமையில் குடித்து விட்டு, சுயநினைவின்றி, தரையில் உருண்டு பிரண்டு கொண்டு கிடந்த தந்தையை நினைத்து அழுவதா?? 

இல்லை தன்னிடம், “உங்க அப்பன் வாங்கிய  பணத்தை நீ கொடு!” என்று மிரட்டுபவனின் மனசாட்சியை நினைத்து நோவதா?? 

எதுவும் தெரியாது அரண்டு, கண்களில் கண்ணீர் வழிய, கதவைப் பிடித்துக் கொண்டு ஒடுங்கிப் போய் நின்று இருப்பாள் தாமரை.

மாலையில் வேலை விட்டு வீடு நெருங்கிக் கொண்டு இருந்த ராஜம்மாவின் கண்களில் அந்தக் காட்சி படவுமே, எப்பொழுதும் போல ஓடி வந்து, கதவின் பின்னிருந்த தாமரையைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவர்,

”வெட்கமா இல்லை?? ஒரு சின்னப் பொண்ணுகிட்ட வந்து உன் வீராப்பைக் காட்டிக்கிட்டு இருக்க. நீ கடன் கொடுத்தவன் அதோ கிடக்குறான். அவனை எழுப்பி வாங்கிக்கோ, இல்லை தூக்கிட்டுப் போய் மிதி! அதை விட்டுட்டு இங்க நின்னு கத்துற வேலை எல்லாம் வச்சுக்காத. இது நல்லா இல்லை சொல்லிட்டேன்” என்று சத்தம் போட்டார்.

அதுவரை ஆளில்லா வீடு என்று எகிறி குதித்துக் கொண்டு இருந்தவனுக்குத் தட்டிக் கேட்க ஒருவர் வந்தது மட்டுமில்லாது, அவர் சொல்லிய நியாயம், அவனை வெளியே துரத்தாத குறையாகத் துரத்தியது.

அப்போதும், “உங்க அப்பன் எழுந்ததும் என்னை வந்து பார்க்கச் சொல்லு!” என்று அவன் சொல்லிச் செல்லவுமே, நிம்மதியில் கதவை ஒட்டியபடியே அப்படியே கால்கள் துவண்டு தரையில் அமர்ந்து விட்டாள் தாமரை.

வாடிய கொடியாகத் துவண்டவளைக் கண்டு நெஞ்சம் பொறுக்காது, அவளைத் தன் தோள் சாய்த்துத் தலை வருடி, “எல்லாமே சீக்கிரம் மாறிடும் கண்ணு, கவலைப்படாதே!” என்று ஆறுதல் படுத்தினார் ராஜம்மா. 

அவரை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களிலோ, ‘அந்த நாள் என்று வரும்?’ என்ற ஏக்கம் மட்டுமே தேங்கி இருந்தது.

அதைக் கண்டவரும், “நான் சொல்றதைக் கேளு தாமரை. நான் முன்னமே உன்கிட்ட சொன்னது தான். என்னோட நீயும் எஸ்டேட் வேலைக்கு வந்தின்னா, இந்த மாதிரி பிக்காலி பயலுககிட்ட மாட்டிக்கிட்டு இப்படித் தவிக்க வேணாம் தானே?” என்று அறிவுறுத்தினார்.

தாமரைக்கும் வேலைக்குச் செல்ல ஆசைதான். ஆனால் அவளின் தந்தை பேச்சை மீறி எப்படி அவளால் வேலைக்குச் செல்ல முடியும்??

குடிகாரனாக இருந்தாலும், கால் வயிறாக இருந்தாலும், அவர் கொடுத்த பணத்தில் தானே இத்தனை நாளும் அவளின் வாழ்வு ஓடிக் கொண்டு இருக்கிறது.

அந்த எண்ணத்தினாலேயே ராஜம்மாவின் அக்கறை புரிந்தும், அவர் சொன்னதை ஒருவித மனச்சங்கடத்துடனே தட்டிக் கழித்துக் கொண்டு இருந்தாள் தாமரை.

முத்துசாமியைப் பொறுத்தவரை தன் மகளை வேலைக்கு அனுப்பினால், ‘எங்கே அவள் அங்கே காதல் கீதல் என்று வந்து தன் மானத்தை வாங்கி விடுவாளோ?’ என்ற எண்ணம். 

அதன்பொருட்டே தாமரையின் வேலைக்குச் செல்லும் ஆசைக்குத் தடை விதித்து இருந்தார்.

‘இந்த வெட்டி வீம்பு வீராப்புக்கு ஒன்னும் குறைச்சலில்லை!’ என்று ஆத்திரம் தாளாது பலமுறை முத்துசாமியிடம் நேரடியாகவே ராஜம்மா கேட்டு விடுவார்.

அந்த நேரம் முத்துசாமியும் சும்மா இருக்க மாட்டார்.

“அந்த ஏழுமலை பொண்ணு வேலைக்குப் போறேன்னு போய்க் காதல் பண்ணி ஊரை விட்டே ஓடிப் போன கதை, உங்களுக்கும் தெரியும் தானே? அவுங்க அப்பனை போல என்னையும் சந்தி சிரிச்சு நிக்க சொல்லுறீங்களா?” 

பதிலுக்கு மானஸ்தனாக முத்துசாமி கேள்வி கேட்கும் பொழுது, ராஜம்மாவுக்குத்தான் எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போல இருக்கும்.

‘இவனால் ஊரே சிரிப்பது எல்லாம் இவன் கண்ணுக்குத் தெரியவே தெரியாது போல!’ 

“இப்போ என் பொண்ணுக்கு என்ன குறைச்சல்?? அதான் வீட்லயே கூடை பின்னிக் கொடுத்து சம்பாதிக்குறாளே? அதுவே போதும் எங்களுக்கு!!” 

முத்துசாமியின் பெருந்தன்மை பேச்சைக் கேட்டு, தலையில் அடித்துக் கொண்டு நகர்வதைத் தவிர பெரியவருக்கும் வேறு வழியில்லாது போகும் பல நேரம்.

பின்னே.. விதவிதமாகக் கூடை பின்னி மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு கடைக்கு வாடிக்கையாகத் தாமரை கொடுத்து, அதில் வரும் வருமானம் ஓரளவுக்கு அவளுக்குக் குடும்பத்தை நடத்த உதவினாலும், பெரும்பாலான மாதங்கள் பின்பாதியை ஓட்ட அதுவும் பத்தாது போய் விடும், அவளின் தந்தையின் குடியாலும் கடனாலும். 

அது கூட அறியாது பேசும் அந்த முட்டாளை என்னவென்று திட்டுவது? என்பது ராஜம்மாவின் ஆதங்கமாகிப் போகும்.

தாமரையின் நிலையறிந்தும், அதற்கான தீர்வைக் கொடுக்க முடியாது வருந்தினார் ராஜம்மா.

சில நொடிகள் அமைதியின் பின் உண்டான ஒரு முடிவுடன், “உங்க அப்பன் எழுந்ததும் என்னைக் கூப்பிடு தாமரை. நான் மீண்டும் அவன்கிட்ட பேசிப் பார்க்கிறேன்” என்று தட்டிக் கொடுத்து அவளை எழுப்பி நிற்க வைத்தார்.

“சாப்பிட்டியா?” என்று வினவினார், அவளின் கவலையையும் மீறி முகத்தில் தென்பட்ட அசதியில், 

ஊமையாகத் தலை குனிந்து நின்று இருந்தவளின் நிலையே, அவளின் வயிற்றின் நிலையை அவருக்குப் புரியவைப்பதாக இருந்தது.

“மொகத்தை கழுவிட்டு என் வீட்டுக்கு வா. இன்னைக்கு கம்மங்களியும் கருவாட்டு குழம்பும் செஞ்சு இருக்கேன். ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்”

“இல்ல பாட்டி. உலை வைக்கப் போகும் போது தான் அவர் வந்து கத்த ஆரம்பிச்சுட்டார், அதான்…” என்று இழுத்து மறுத்தாள் தாமரை.

“இனி உலை வச்சு எப்போ சாப்பிடுவ?? ஒன்னும் வேண்டாம். நான் நாளைக்கும் சேர்த்துத்தான் பண்ணிருக்கேன். அதனால மறுத்துப் பேசாம வந்து சாப்பிட்டுட்டு உங்க அப்பனுக்கும் எடுத்துட்டு வந்திடு”

அவளின் தயக்கம் எதற்காக என்பதை அறிந்தவராகப் பேசியவரின் பேச்சைக் கேட்டு, அவரின் புரிதலில் லேசாகப் புன்னகைத்து, ‘சரி’ என்று தலையாட்டினாள் தாமரை.

ராஜம்மா வீட்டில் முழு வயிறு இல்லையென்றாலும் மனதார சாப்பிட்டு விட்டு, அவர் போட்டுக் கொடுத்த உணவை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தன் வீடு திரும்பிய நேரம், வாசலில் குத்துக்காலிட்டுப் போதை இறங்கி எழுந்து அமர்ந்திருந்த முத்துசாமியைக் கண்டாள்.

“அப்பா! குளிச்சுட்டு வாங்க, சாப்பிடலாம்”

பசி வயிற்றில் கடமுட சத்தம் உண்டாக்கியதில், மறுபேச்சு பேசாது எழுந்து குளிக்கச் சென்ற முத்துசாமி, குளித்து முடித்துத் திரும்பியதும் சாப்பாட்டு தட்டை அவரின் புறம் நீட்டினாள் தாமரை.

பசியில் திருப்தியாக அதை உண்டவருக்கு, அப்பொழுது தான் சுயவுணர்வு முழுதாகத் திரும்பியது போல..

“நீ சாப்பிட்டியா??” என்று கேட்டார் அந்த அக்கறை மனிதர்.

“ம்ம்ம்.. சாப்பிட்டேன் அப்பா”

அதனுடன் சேர்த்து மாலை கடன் கேட்டு வந்தவனைப் பற்றியும் சற்றுத் தயக்கத்துடன் தந்தையிடம் உரைத்தாள். முத்துசாமிக்கோ கைகள் அப்படியே கிலியில் நிலைப்பெற்று நின்றது.

“அவன் எதுக்கு வீட்டுக்கு எல்லாம் வந்தான்?” 

சூரப்புலியாக மாறி மகளிடம் முத்துசாமி கேள்வி கேட்ட போதே அங்கே வந்து விட்டார் ராஜம்மா.

“வாங்குன கடனை கொடுக்கலைன்னா வீட்டுக்கு வராம அவன் வேற எங்கே போவான்??” 

வீட்டுக்குள் வந்தபடி ராஜம்மா அதட்டிக் கேட்டதற்கு முத்துசாமியிடம் பதிலில்லாது போனது. 

அவரின் முன் அமர்ந்தவர், “என்னப்பா பதிலைக் காணோம்?” என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.

தன் தாய் வயதுடையவர் மற்றும் மகளுக்குத் தன் மனைவிக்குப் பின் எப்பொழுதும் அரணாக உடனிருப்பவர் என்ற மரியாதை எப்பொழுதுமே முத்துசாமிக்கு ராஜம்மா மீது உண்டு. அவரின் பேச்சுக்கு எதிர்வாதம் புரிந்தாலும், ஒருபோதும் அவரை உதாசீனப்படுத்தி எடுத்தெறிந்து பேசியதில்லை அவர்.

“இனி.. இனிமே அ.. அ.. அவன் இங்கே வந்து சத்தம்  போடாம பார்த்துக்குறேன்” என்று பெரியவருக்குப் பதில் சொல்ல முடியாது முதலில் தடுமாறி, பின் அவரின் பார்வை அனல் தாங்காது பதில் சொன்னார்.

“எப்படிக் குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்ற மாதிரியா..?” 

ராஜம்மாவின் நக்கல் புரிந்த போதும் முத்துசாமி வாய் திறக்கவில்லை. அவரின் மகள் மீதான பாசம் புரியாதவரில்லையே ராஜம்மா! 

என்னதான் முழுக் குடிகாரனாக இருந்தாலும், மகளுக்கு ஒன்று என்றால் துடிக்கும் தகப்பன் தான் அவனும் என்பதால் தன் குரலைச் சற்று இறக்கி, கனிவான குரலில் பேச்சைத் தொடர்ந்தார்.

“இப்போ எல்லாம் நீ அதிகமா குடிச்சு நிதானம் இல்லாம தான் முக்கால்வாசி நாள் கிடக்குற. இதுல ஊரெல்லாம் கடன் வேற! அவனுங்க எல்லாம் இங்கே வந்து நிக்கும் பொழுது பாதி நேரம் நீ இங்கே இருக்குறதே இல்லை. மீதி நேரம் இருந்தாலும் பதில் சொல்லுற நிலைமைல இல்லை. இதுனால அவனுங்ககிட்ட மாட்டித் தவிக்கிற உன் பொண்ணோட நிலைமையைப் பத்தி கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா?” 

அதில் நெஞ்சடைத்துப் போனார் முத்துசாமி.

முதலில் உடல் அசதிக்காக, பின்  இறந்த மனைவியின் துக்கம் தாளாது என்று அதிகம் குடிக்கப் பழகியவர், பின்னாளில் அது இல்லாது வாழவே முடியாது என்ற நிலைக்கு ஆளாகி விட்டார்.

இப்படி மகள் சில நேரங்களில் தன்னால் வருந்தி நிற்கும் பொழுது எல்லாம், அவரும் இந்தக் கருமத்தை விட்டு விட வேண்டும் என்றுதான் எண்ணிப் படுப்பார். ஆனால் மறுநாள் விடிந்ததுமே அவரின் கால்கள் குடிக்கத்தான் சென்று நிற்கும். 

குடி அவரின் குடியைக் கெடுப்பதை நன்றாக அறிந்தும், அதை விட முடியாத நிலையில் மறுகிக் கொண்டுதான் இருக்கிறார் முத்துசாமியும்.

தன்னுடைய பலவீனத்தால் படாதபாடு படும் மகளை நினைத்தும் மனம் வெந்தவரின் முகத்தொங்கலில் இருந்தே அவரின் மனம் அறிந்த ராஜம்மா,

“நான் சொல்றதைக் கேளு முத்து. வீணா பிடிவாதம் பிடிக்காம தாமரையை என் கூட எஸ்டேட் வேலைக்கு அனுப்பி வை” என்றார்.

ஏதோ பேச வாய் திறக்கப் போன முத்துசாமியின் பேச்சு என்னவாக இருக்கும் என்று அறிந்திருந்த ராஜம்மா, அவரைப் பேச விடாது,

“முதல்ல நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சுடுறேன். அதைக் கேட்டுட்டு அதுக்கு அப்புறம் நீ பேசு!” என்று கண்டிப்போடு கூற, அதற்குக் கட்டுப்பட்டு அமைதியாகிப் போனார் முத்துசாமி.

அவரின் மௌனத்தை தனக்குச் சாதமாக்கிக் கொள்ள  நினைத்தவரும் காலம் தாழ்த்தாது, 

“பாக்கியம் உயிரோடு இருந்து இருந்தா நான் இதை உன்கிட்ட சொல்ல வேண்டி வந்து இருக்காது. ஆனா இப்போ தான் அவள் இல்லையே? அதனால நான் உன்கிட்ட கேட்கிறேன். உன் பொண்ணைக் கடைசி வரை உன் கூடவே வச்சுக்கப் போறியா? இல்லைல.. இன்னொரு வீட்டுக்குக் கல்யாணம் பண்ணி அனுப்பித்தானே ஆகணும்? இப்பவே அவளுக்கு இருபத்தி ஒரு வயசு ஆகிடுச்சு. ஆனா இன்னும் ஒரு துரும்பை கூட நீ அவளுக்காகச் சேர்த்து வைக்கலை?” என்றார் கடுமையாக.

அந்தச் சுடுபேச்சு முத்துசாமியைச் சுட்டதைப் போல அவரை நிமிர்ந்து பார்த்திருந்தார் அவர்.

“உண்மை சொல்லணும்ன்னா பொண்ணை வைக்கிற இடத்துல ஒரு பூவை வைக்க கூட உனக்குத் துப்பு இல்லை. அப்புறம் எதுக்கு இந்த வீராப்பு? நான் சொல்றதைக் கேளு. என்னை நம்பி உன் பொண்ணை வேலைக்கு அனுப்பு. நான் அவளை அங்கே பார்த்துக்குறேன். அவளுக்குத் தேவையான பணத்தை அவளாவது கொஞ்சம் சேர்க்கட்டுமே” என்றார்.

அப்பொழுதும் முத்துசாமியின் மௌனம் கண்டு, கடைசி ஆயுதமாக,

“இன்னைக்கு நான் இருந்ததுனால இவளைக் கண்டபய பேச்சுல இருந்தும் காப்பாத்த முடிஞ்சது. நாளைக்கு ஒருத்தன் இதே மாதிரி வந்து நின்னா, உன் பொண்ணோட நிலைமை என்னன்னு கொஞ்சம் யோசிச்சு பார்த்ததியா?” 

அந்தத் தாக்குதலில் உண்மையாகவே நிதானித்து சிந்தித்த முத்துசாமி, “நீங்க சொல்றது எல்லாம் சரிதான் அம்மா. ஆனா நிறைய பயலுக வேலை செய்யுற இடத்துல எப்படி என் பொண்ணை வேலைக்கு அனுப்புறது??” என்று கேள்வி எழுப்பினார்.

“அவனுங்ளைப் பத்தி நினைக்கிற நீ முதல்ல உன் பொண்ணைப் பத்தி யோசி. அவ மேல நம்பிக்கை வை! அவளை நீயே நம்பலைன்னா எப்படி?’ 

ராஜம்மா அதட்டிக் கேட்ட நொடி அதிர்ந்து போன முத்துசாமி, சில நிமிடங்கள் அமைதிக்குப் பின், அரைமனதாக என்றாலும் மகள் வேலைக்குச் செல்ல அனுமதி கொடுத்தார்.

அதைக் கேட்டு அங்கு இருந்த இரு பெண்களுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி!! அடுத்த இரண்டாவது நாளே எஸ்டேட் மேனேஜரிடம் வேலைக்குப் பேசி விட்டதாகவும், “நாளை என்னுடன் சேர்ந்து நீயும் வேலைக்கு வர ரெடி ஆகிடு” என்று பாட்டி சொன்ன நொடி, தாமரையின் உள்ளம் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.

பாட்டி சொன்னது போல கடகடவென வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து, தந்தைக்குச் சாப்பாடு சமைத்து வைத்து விட்டு, தனக்கான மதிய சாப்பாட்டைக் கட்டிக் கொண்டு வேலைக்குக் கிளம்பியவள், சில நிமிடங்கள் கண் மூடி அம்மாவின் படத்தின் முன் நின்றாள்.

“நல்லபடியா நடந்து நல்ல பேர் எடுக்க எனக்கு ஆசீர்வாதம் பண்ணும்மா!!” என்று வேண்டி அவரின் ஆசிர்வாதத்தை மானசீகமாகப் பெற்றுக் கொண்ட திருப்தியுடன் சாப்பாட்டு கூடையை எடுத்துக் கொண்டு, வீட்டுக் கதவைச் சாத்தி விட்டுப் பாட்டியின் வீடு நோக்கிச் சென்றாள்.

பாட்டி மற்றும் இன்னும் சில பேருடன் சேர்ந்து குறுக்குப் பாதையில் தேயிலை எஸ்டேட் நோக்கி நடந்தவளுக்கு, இதுவரையில்லாத புதுவித உணர்வுகள் உள்ளுக்குள் அலை அலையாக ஆர்ப்பரித்தது.

தன் வீட்டை விட்டு அனாவசிய தேவைகளின்றி வேறு எதற்காகவும் அதிகம் வெளியில் செல்லாதவள் தாமரை. அப்படிப்பட்டவளுக்கு இன்று வேலைக்காக வெளியில் செல்வது, அதுவும் தன்னைப் போன்று அதிகம் பேர் வேலை செய்யும் ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறோம் என்பதே அவளை அதிகமாக உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தது.

இங்கே ஒருத்தி புதிய வாழ்க்கை பயணத்தில் காலடி எடுத்து வைத்துக் கொண்டு இருந்த அதே நேரம்.. 

அவளுக்கானவனோ, அங்கே எப்பொழுதோ விடிந்த அழகான விடியலைக் கூட ரசிக்காது, ரசிக்கவும் தோணாது, அவளுக்காகவே பல காலமாகக் காத்துக் கொண்டு இருந்தான்.

Advertisement