Advertisement

மின்னல் 8

சிலுசிலுவென தென்றல் வீச மொட்டைமாடிச் சுவற்றைப்பற்றியபடியே எங்கோ வெறித்துக்கொண்டு இருந்த யுவா அருகில் கேட்ட கனைப்புச் சத்தத்தில் விழிகளைத்திருப்பிப் பார்த்தாள். அபிதான்! கைகளை முன்னால் கட்டியபடி அவளையே ஆழப்பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு பெருமூச்சுடன் அவன் புறம் திரும்பி அவனைப்பார்த்தவள் 

“ஏன் மாமா? ஏன் இப்படிப் பண்ணீங்க?” என்று கேட்கவும் புருவத்தை ஏற்றி இறக்கியவனிற்கு அவளின் அழைப்பு ஆச்சர்யமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் 

“எதைக் கேட்கிற யுவா?” என்று அமைதியாகக் கேட்டான். விழிகளில் சட்டென்று நிறைந்து வழிந்த நீரை அழுந்தத் துடைத்தவள் 

“ம்ச்சு! இது வேற!” என்று சலித்தபடி “நீங்க எனக்காக வேலையை விட்டுட்டு இருக்கிறதை சொன்னேன்”

“அது சஸ்பென்ட் ஆடர் தான் யுவா”

“அது தான் ஏன் மாமா? நாங்க உங்களை விட்டுத் தள்ளி இருந்தப்போ நீங்க சந்தோஷமாத் தான் இருந்தீங்க! எப்போ எங்களை.. இல்லை… இல்லை… என்னைப் பார்த்தீங்களோ அப்போல இருந்து  பிரச்சனை தான்” 

“இப்போ நீ தான் லூஸு போல பேசுற! தள்ளி இருந்தா சொந்தம் இல்லை என்று ஆகிடாது யுவா”

அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பியவள் கைகளை இறுகமூடித் திறந்தபடி 

“வேணாம் மாமா! என்னால எவ்வளவு தொந்தரவு உங்களுக்கு! நான் உங்களை இந்தக் கேஸுக்குள்ள இழுத்துவிட்டிருக்கவே கூடாது. என்னால அப்பாவுக்கும் பிரச்சனை. அவரைப் பார்த்து அத்தைக்கும் கவலை. என்னை வெளியில கொண்டு வந்து இப்போ உங்க வேலைக்கும் பிரச்சனை. நான்..நான் அந்த விதுரனைக் காதலிச்சு இருக்கவே கூடாது மாமா! எல்லாம் நான் தான் பண்ணேன்! நான்லாம் இருக்கவே கூடாது ..என்னால தான் எல்லாம்” என்று கைகளில் முகம் புதைத்துக் கதறவும் ஓரெட்டில் அவளை நெருங்கி அவளது தோள்களைப் பற்றிக் கோவத்துடன் திரும்பிய அபிஷிக்த் கைகளை ஓங்கியபடியே 

“அடிச்சேன்னா தெரியும்! மூடு வாயை! மூடுடி” என்று ருத்திரமூர்த்தையாக கர்ஜிக்கவும் ஸ்விட்ச் போட்டாற் போல யுவாவின் அழுகை நின்று போனது. 

“சும்மா எப்போ பாரு நொய்! நொய்! என்று அழுதுட்டே இருக்கிறது. இதெல்லாம் பிரச்சனையா? சொல்லுடி பிரச்சனையா? உலகத்துல எவ்வளவு பேர் எவ்வளவு வெளிவர முடியாத பிரச்சனையில இருக்கிறாங்க தெரியுமா? உனக்கு நாங்க இருக்கோம் ல? அந்தத் திமிர்” என்று அழுந்தத் தலையைக் கோதி கோவத்தை அடக்கியவன் அவள் முன்னால் கைகளை நீட்டி 

“உன்னால உன்னால என்று சொல்லுறியே தவிர. அதை எப்படி மாத்துறது என்று கொஞ்சமாச்சும் நினைச்சியா? உன்னோட அப்பாவுக்கு இருக்கிறது ஒரே ஒரு தங்கச்சி. அவங்களுக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன் நான். உனக்கு ஒரு பிரச்சனை என்றப்போ என்னைக் கூப்பிடாம வேற எவனைப் போய்க் கூப்பிடுவ?” 

சொன்னவனின் கண்களில் வேறு எவனையாவது சொல்லித்தான் பாரேன் என்ற சவால் இருந்ததோ?  

“மாமா வேதனைப்படுறதும். என்னோட அம்மா அதான் உன்னோட அத்தை வருத்தப்படுறதும் உன் மேல விழுந்த பழியை எண்ணி இல்லை! இதோ பைத்தியம் பிடிச்ச மாதிரி அவங்க முன்னால சுத்திட்டும் அழுதுட்டும் இருக்கிறியே  இப்போ இருக்கிற உன்னால! முதல்ல நீ வெளியில வா! வந்து சுத்திப்பாரு என்ன நடக்குது என்று. எவன் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசட்டும். அவனுக்கு வேற வேலை இல்லை. உனக்குமா இல்லை? அழுதுட்டே இருக்கா. பைத்தியம்” என்றவன் விருட்டென்று கிளம்பிச்செல்லவும் அதிர்ந்து நின்ற யுவாவின் மனதில் ஆயிரம் ஆயிரம் யோசனைகள்.

அவள் வெளியில் வர அபிஷிக்த்தின் அந்த அதிர்ச்சி வைத்தியம் பெரிதும் உதவியது. ஆனால் அவளது மனமோ ஒரு இடமாற்றத்தை விரும்பியது. அத்துடன் அபிஷிக்த் தன்னால் வேலைக்கு செல்லாமல் இருக்கும் குற்ற உணர்வும் அவளை அந்த நாட்டில் இருந்தே ஓட வைத்தது. மறுநாள் காலையிலேயே ஹாலில் அமர்ந்து இருந்த தந்தையின் அருகில் அமர்ந்து அவரது தோள்களில் சாய்ந்து கொண்டவளை தயாபரனின் கரம் ஆறுதலாக வருடிக்கொடுத்தது. 

“என்னடாமா?” என்று பாசமாக கேட்ட தந்தையை அண்ணாந்து பார்த்தவள்

“எனக்கு இங்க இருந்து போகனும் பா” என்று கூறவும் 

“நானும் யோசிச்சேன் மா! அபிகிட்ட கூட இதைப்பத்தி பேசுனேன் மா! பக்கமா வீடு பார்த்துத் தரேன் என்று சொல்லி இருக்கான்” என்று கூறவும் அவர் கூறுவதைக் கேட்டபடி வந்து அவர்கள் முன்னால் அமர்ந்த சாரதாவும் 

“ஆமாடா! பக்கமாவே வந்தீங்கன்னா எங்களுக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும் ல?” என்று பரிவாக கேட்டார். 

தயக்கமாக தந்தையின் தோளில் இருந்து எழுந்து அமர்ந்தவள் கைவிரல்களைப் பார்த்தவாறே “இல்லப்பா! கொஞ்சநாள் பாரினில ஏதும் கோர்ஸ் செய்துட்டு வர்ரேனே?” என்று மென் குரலில் கேட்கவும்  தயாபரனும் சாரதாவும் அதிர்ந்து பார்க்க கிளாஸ் ஒன்று  சிலீர் என்று சிதறும் ஒலி கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள் யுவரத்னா! 

அங்கே விழிகள் சிவக்க இவளை முறைத்தவாறு அபி நிற்கவும் அவனது கோவம் உணர்ந்தவள் உறுதியாக தலையை நிமிர்ந்து அவனது விழிகளை நோக்கி 

“அப்பா! இதுதான் என்னோட முடிவு” என்று உறுதியாகக் கூறி அதில் நின்று சாதித்தும் காட்டினாள். தனது பேச்சை மீறிச்செல்லும் அவள் மீது இருந்த கோவத்தினால் யுவாவிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவளை வெளிநாட்டிற்கு அனுப்பிய அபிக்குத் தெரியவில்லை அவனது புறக்கணிப்பே அவன் மீது அவளிற்கு ஆர்வம் வரக் காரணமாகின்றது என!

அதன் பின்பு தயாபரனும் அபியின் வீட்டிற்கு அருகில் இருந்த வீடொன்றில் தனியாகக் குடியேறியிருந்தார். இரு வருடங்களாகியும் தாயகம் திரும்பமல் போக்குக்காட்டிக் கொண்டு இருந்த யுவா அவரிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவும் தான் தனது உறுதியைத் தளர்த்தி தாயகம் திரும்பியுள்ளாள். 

******

கடந்து போன நிகழ்வுகளில் மூழ்கி இருந்த அபியின் நாசியில் கருகியவாடை வரவும் சித்தம் தெளிந்தவன் சட்டென்று தலையைக் குலுக்கியபடி சமையலறைக்கு விரைந்தான்.  விரைந்தவனின் கண்களில் எங்கோ வெறித்தபடி இருந்த யுவா தென்படவும் அவளும் கடந்த கால நினைவுகளில் சிக்கியிருப்பதை உணர்ந்து விரைந்து சென்று கேஸை அணைத்தான்.

அருகில் தெரிந்த அசைவில் திடுக்கிட்ட யுவா சட்டென்று அடுப்பைப் பார்க்கவும் கருகிய தோசையே அவளைக் கண்டு பல்லிளித்தது.  பாவமாக தோசையையும் தனது முகத்தையும் மாறி மாறிப்பார்த்த யுவாவைக் கண்டு ஒரு புறம் யோசனையாகவும் ஒருபுறம் சிரிப்பாகவும் இருந்தது அபிக்கு. அவளது பிடறியில் இலேசாகத்  தட்டியவன் 

“கனவு காணாம! ஒழுங்கான தோசையை சுட்டு கொண்டு வா! எனக்கு பசிக்குது” என்று கூறி விலகவும் அவன் தட்டிய இடத்தை தடவிய படியே புன்னகைத்துக் கொண்டவள் மகிழ்வாகவே தோசை வார்க்கத் தொடங்கினாள். தோசையை உண்டுவிட்டு ஒரு குட்நைட்டுடன் அபி செல்ல தானும் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு கட்டிலில் விழுந்தவளுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்ற அப்படியே தூங்கிப்போனாள். சிறிது நேரத்திலே இரத்தம் வழிந்த முகத்துடன் விதுரனின் முகம் அருகில் வந்து 

“என்னை மறந்துட்டியா யுவா?” என்று கேட்டு சிரித்தவாறே சிறிது சிறிதாக கோரமாக மாறவும் “வீல்” என்று அலறியபடியே எழுந்தவள் வீட்டினரின் நினைவு எழ சட்டென்று மூடியிருந்த கதவைப் பார்த்தாள். கதவைத் தாண்டி சத்தம் சென்று இருக்காது என்று ஆசுவாசமடைந்தவள் அருகில் இருந்த நீரை குடித்துவிட்டு ஏசியியின் குளிரை மீறி வேர்த்திருந்த முகத்தைத்  துடைத்தவள் அப்படியே கட்டிலில் சாய்ந்தாலும் கண்ட கனவின் தாக்கம் தூக்கத்தை நெருங்க விடவில்லை.

*****

யுவாவிற்கு ரிஷியின் உதவியுடன் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளர் பதவியொன்றை வாங்கிக்கொடுத்து இருந்தான் அபி. வேலையொன்று இல்லாவிடில் அவளது மனம் கண்டதையும் யோசித்துக்குழம்பிக்கொண்டு இருக்கும் என்ற பயம் அவனுக்கு. அதென்னமோ உண்மை தான்! வார நாட்களில் விரிவுரை, வார இறுதிகளில் தந்தை, அத்தையுடன் சேர்ந்து கோவில் தோட்டம், தொலைக்காட்சி என்று சிறிது சிறிதாக யுவா மாறி இருந்தாலும் இரவு நேரங்களில் வரும் கனவின் தொல்லையில் இருந்து அவளால் வெளியில் வர முடியவில்லை.

விதுரனைக் கொன்றவன் இன்னும் இனங்காணாமல் இருப்பதுதான் விதுரன் தனது கனவில் வரக்காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வேறு சிலநாட்களாக மனதை அரித்துக்கொண்டு இருந்தது. அந்தக் கேஸ் அதன் பின்னர் என்னவானது என்று அபியிடம் சரியான நேரத்தில் கேட்கவேண்டும் என்று குறித்துக்கொண்டவளுக்கு அபிஷிக்த்தைக் காண்பதே அரிதாகிப் போனது. ஏதோ ஒரு கேஸ் விட்டயமாக அதிகாலையிலேயே செல்பவன் நடுநிசியில் தான் வருகின்றானாம். அதுகூட அத்தையின் புலம்பலில் அறிந்து கொண்டது. அவனைக்காண அவளது மனம் தவித்துக்கொண்டு இருந்தாலும் நேரடியாக அவனோடு பேச வேண்டும் என்று யாரிடமும் அவளால் கூற இயலவில்லை.

*****

அன்று விரிவுரை முடிந்து மாலையில் தந்தையுடன் சிரித்துக் கதையளந்தபடியே தோட்டத்தில் உலாவிக்கொண்டு இருந்தவள் அபியின் ஜீப்பின் சத்தம் கேட்கவும் சட்டென்று தன்னையறியாமலே நடையை நிறுத்தி இருந்தாள். மகளின் நடைநிற்கவும் புருவம் உயர்த்திய தயாபரன் அவளின் பார்வை சென்ற திக்கைப் பார்க்கவும் ஜீப்பில் இருந்து அபிஷிக்த் குதித்து இறங்கி வீட்டினுள் நுழைவது கண்ணில் பட்டது.

மனதிற்குள் சிரித்துக்கொண்டவர் “என்னமா! போகலாமா?” என்று கேட்க திடுக்கிட்டவள் “என்..என்னப்பா?” என்று தடுமாறவும் “வீட்டுக்குள்ள போகலாம்மா! கால் வலிக்குது” என்று கூறவும் “அய்யோ! முதலே சொல்லி இருக்கலாமே பா! வாங்க போவோம்” என்று அவரையும் இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவளின் கண்களில் சோபாவில் களைப்பாக தலை சாய்த்து விழி மூடி இருந்த அபிஷிக்த்தின் விம்பமே விழுந்தது.

சாரதா காரில் கோவிலிற்கு சென்று இருந்தார்! வேலைக்காரியும் இல்லை. சோர்வாக இருந்தவனைப் பரிவாகப் பார்த்தவள் சமையலறைக்கு விரைந்து அவனுக்கும் தந்தைக்கும் விரைவாக காபி போட்டுக்கொண்டு ஹாலிற்கு சென்றாள். ஒரு கோப்பையைத் தந்தையிடம் கொடுத்தவள் மற்றைய கோப்பையுடன் அவன் அருகில் சென்று 

“அபி மாமா!” என்று அழைத்தாள்.  

அவளின் அழைப்பில் நெற்றியைச் சுருக்கியபடி நிமிர்ந்தவன் அவள் காபியை நீட்டவும் சோர்வாகப் புன்னகைத்தபடியே அவள் நீட்டிய கோப்பையை வாங்கிக்கொண்டான். கோப்பையில் இருந்த காபியை விழிகளை மூடி உறிஞ்சிக்கொண்டவனுக்கு தலைவலி குறைவது போல இருக்கவும் யுவாவை நோக்கிப் புன்னகைத்தான். 

தானும் புன்னகைத்தவாறு அவனது அருகில் சற்று இடம் விட்டு அமர்ந்தவள் 

“ஏதாச்சும் பிரச்சனையா மாமா?” என்று தயக்கமாகவே கேட்டாள். 

“அது ஒரு கேஸை இப்போ தான் முடிச்சேன் யுவா! இவ்வளவு நாள் அலைஞ்சது டயர்ட்டா இருக்கு”

“ஓஹ்! என்ன கேஸ் மாமா?” என்று ஆவலாகக் கேட்கவும் பழைய யுவா தான் அபியின் கண்களில் தெரிந்தாள். “என்ன தண்டனை” என்று அன்று மல்கோத்ராவின் கேஸின் போது ஆர்வமாக பார்த்த யுவா தெரியவும் தன் முன்னால் இருந்த மாமாவைப் பார்த்து புன்னகைத்த அபிஷிக்தைப் பார்த்த தயாபரனின் முகத்திலும் புன்னகை.

வழமையாக யாரிடமும் கேஸைப்பற்றிப் பகிர்ந்து கொள்ளாத அபிஷிக்த்திற்கு யுவாவின் ஆவலை குழப்ப  மனம் வரவில்லை. 

“ஒரு இருபது வயதுப் பொண்ணு, பெற்ற தாயையே உடம்பு முழுக்கக் கத்தியாலக் குத்திக் கொலை பண்ணி இருக்கா! அந்தக்கேஸ் தான்” (உண்மைச்சம்பவத்தை தழுவியது)

“என்னது?” என்று யுவா விழிவிரித்துக்கேட்கவும் அதில் ஆர்வமில்லாமல் தயாபரன் தனது அறைக்கு குளித்து வருவதாகக் கூறிச்சென்றார்.

அவருக்கு தலையசைத்தவன் “ஆமா! அந்தப்பொண்ணோட அம்மா அப்பா அவளோட சின்ன வயதுல சந்தோசமா வாழ்ந்து இருக்காங்க. நல்ல குடும்பச்சூழலில அந்தப்பொண்ணு வளர்ந்திட்டு இருக்கும் போது தான் அவளோட அம்மா அப்பாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிஞ்சு இருக்காங்க! கோர்ட் ஆடர் படி அம்மா கூட அந்தப்பொண்ணை அனுப்பி இருக்காங்க”

“ம்ம்”

“அந்தப்பொண்ணுக்கு அம்மா அப்பா பிரிஞ்சது சின்னவயசுலேயே மனசுல பெரிய தாக்கம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கு. இப்போ இவளுக்கு இருபது வயதுல அவளோட அம்மா இன்னோரு திருமணம் செய்து இருக்காங்க. அதை அவளால ஏத்துக்க முடியல! ஒரே சண்டை பிடிச்சுட்டு இருந்து இருக்கா. அவளோட அம்மா, அவளோட உண்மையான அப்பாவைக் கூப்பிட்டு மகளோட கதைக்க சொல்லி இருக்காங்க. ஆனா அந்தப்பொண்ணோட மனசுல இது என்னோட அம்மா இல்லை. வேற யாரோ! இவளைக் கொன்றால் தான் என்னோட அம்மா வருவாங்க என்று ஒரு எண்ணம் வளர்ந்துட்டே இருந்து இருக்கு. அதனால அவளோட அம்மாவைக் குத்திட்டு ஓடிட்டா! அதுவும் உடம்பு  முழுக்க நூற்றுக்கு மேல கத்திக்குத்து “

“அய்யோ”

“ஹும்ம். அவளைத் தேடிப்பிடிக்கிறதுக்குள்ள போதும் போதும் என்று போய்ட்டுது” என்றவன் “தாங்க்ஸ் ஃபார் த காபி யுவா” என்ற படி மேலே ஏறிச்செல்லவும் அவன் செல்வதையும் உணராமல் இருந்தவளின் மனதில் 

“உலகத்துல எவ்வளவு பேர் எவ்வளவு வெளிவர முடியாத பிரச்சனையில இருக்கிறாங்க தெரியுமா?” என்ற அன்றைய அபியின் குரல் காதில் அறைந்து கொண்டே இருந்தது.

Advertisement