Advertisement

மின்னல் 7

அருகில் இருந்த கோவிலில் அன்று திருவிழா நடைபெற்றுக்கொண்டு இருந்தது. பக்கத்துவீட்டு அக்காவுடன் கோவில் செல்வதாக யுவா திட்டமிட்டு இருக்கவும் தயாபரனிற்கு தங்கையைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. சோபாவில் சம்மனமிட்டு டீவியின் திரையில் சென்று கொண்டிருந்த பாடலை இரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தவளின் அருகே வந்தமர்ந்த தயாபரன் “க்கும்” என்று தொண்டையைச் செறுமவும் அவரை கடைக்கண்ணால் நோக்கியவள் கனகாரியமாக டீ.வியின் திரையையே வெறித்துக்கொண்டு இருந்தாள்.

‘இந்தக் கால பிள்ளைங்களுக்கு எவ்வளவு கொழுப்பு? நாங்கலாம் அப்பா பக்கத்தில நடந்தாலே எழுந்து நிற்போம்’ என்று  மனதிற்குள் நொடித்துக்கொண்டவர் 

“ஏம்மா யுவா!” என்று அழைத்துப்பார்த்தார்.

“ம்ம். சொல்லுங்கப்பா” என்றவள் விழிகளை சிறிதாகக் கூட அசைத்தாள் இல்லை. 

“இங்க பாரும்மா” என்று தந்தை சலித்துக்கொள்ளவும் புன்னகையுடன் டீவியை அணைத்தவள் அவர் புறம் திரும்பி கன்னத்தில் கைவைத்தவாறு புருவத்தை உயர்த்தி 

“சொல்லுங்கப்பா” என்று கூறி புன்னகைத்தாள். மகளின் புன்னகையில் மனம் நிறைய சிரித்தவரிற்கு தெரியவில்லை அதன் பின்னர் மனம் நிறையச்சிரிக்க நிறையக் காலம் காத்திருக்க வேண்டும் என்று!  

“சாரதா வரச்சொல்லிட்டே இருந்தா! நீதான் திருவிழாவிற்கு போற தானே? வர எப்படியும் மணி ஒன்பது ஆகிடுமா? நான் அதற்குள்ளாகவே வந்திடுவேன்! போய்ட்டு வந்துடட்டுமா?” என விழி சுருக்கிப்பார்க்கவும், அபியின் நியாபகம் எழ 

“ம்ம்ம்!” என்று யோசனையாகவே தலை அசைத்தாள். 

அவளை வேற்றுக்கிரகவாசியைப் போலப் பார்த்தவர் “ஏம்மா!  உண்ண்மையாவா சொல்லுற? ஒரு சின்ன முறைப்பைக் கூட காணல! நான் அபியோட வீட்டிற்கு போறன் மா”

“ம்ச்! அப்பா. தெரியும். அதுதான் அபி மாமா செய்றதுல நியாயம் இருக்கிறதை நானே பார்த்தேனே! இப்போ கோவம்லாம் இல்லை. அதுக்காக கல்யாணம் அது இது என்று கனவெல்லாம் காணாதீங்க சொல்லிட்டேன்” என்று தலையை சாய்த்துக்கூறியவள் எழுந்து தயாராகச்செல்லவும் தயாபரனின் முகத்தில் ஈ ஆடவில்லை!

“மாமாவாம்! நியாயமாம்! அடேங்கப்பா.. நீயா வருவ மகளே” என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டவர் தயாராகி மகள் திருவிழாவிற்கு செல்லவும் வீட்டைப்பூட்டிவிட்டு சாவியை வாசலில் இருந்த பூந்தொட்டியின் கீழே வைத்துவிட்டு தங்கையைக் காண கால் டேக்ஸி ஒன்றில் விரைந்தார்.

திருவிழாவிற்கு சென்ற யுவாவிற்கு சிறிது நேரத்தில் அங்கு எழுந்த சப்தங்களுக்கும் விளக்கின் ஒளிக்கும் தலைவலிக்கத்தொடங்கவே எதையும் யோசிக்காமல் தன்னுடன் வந்த அக்காவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். அவளின் வீடு இருக்கும் பாதையை நெருங்கும் போதுதான் மின்சாரம் தடைப்பட்டு இருப்பதே தெரிந்தது. 

அத்துடன் சைக்கிளில் யாரோ அருகில் நெருங்குவது தென்படவும் அப்படியே திரும்பிச் சென்றால் என்ன என்று நினைத்து உறைந்து நின்றவளைத்தாண்டி சைக்கிள் சென்ற பின்னர் தான் யுவாவிற்கு உயிரே வந்தது.  மனதிற்குள் பக்கென்று இருந்தாலும் தலைவலி வேறு மண்டையைப் பிளக்க ஃபோனின் டோர்ச்சை ஆன் செய்துகொண்டு வீட்டின் அருகே விரைந்தவளுக்கு திறந்திருந்த கதவு தென்படவும் தான் ஆறுதலானது. ‘ஹப்பா’ தந்தை வந்துவிட்டார் என்ற எண்ணத்தில் உள்ளே சென்றவள் 

“அப்பா” என்று அழைத்தபடி டோர்ச்சை சுற்றி அடித்தபடி ஹாலில் அறைகளில் என்று தேடி மீண்டும் ஹாலிற்கு வர காலில் ஏதோ தட்டுப்பட்டு அவளது நடையை நிறுத்தியது.  

“என்னது” என்று யோசித்தவாறே டோர்ச்சை தரைக்குத்திருப்பியவளின் கண்களில் விழிகளும் வாயும் பிளந்து விதுரன் இறந்து கிடக்க அப்படியே போனை பயத்தில் அலறியவாறு தரையில் போடவும் மின்சாரம் வரவும் சரியாக இருந்தது.

விதுரனுக்கும் அவளுக்கும் எதுவும் இல்லை தான் எனினும் அவன் இறக்க வேண்டும் என்று அவள் நினைக்கவே இல்லையே. மூச்சு இருக்கின்றதா என்று அருகில் சென்று பார்த்தவள் அவனைப் பற்றி குலுக்கியபடி அவனை எழுப்பத்தொடங்கினாள். 

“விதுரன்! ஹேய்! எழுந்திரு! பயமுறுத்தாத” என்றபடி உலுக்கியவளின் மூக்கில் இரத்தவாடை பலமாகத் தாக்கத் தொடங்கவும் பட்டென்று அவனைவிட்டு தள்ளிச்சென்று நடுங்கியபடியே சுவரோடு ஒன்றியவாறு அமர்ந்தவளுக்கு போலிஸ் அழைத்து வரும் மட்டும் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

நடந்தவற்றை மளமளவென்று கூறிவிட்டு முன்னால் இருந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடித்தவள் பாவமாக தன்முன்னால் இருந்த அபிஷிக்தையும் ரிஷியையும் நோக்கினாள். நேற்று இரவு போலிஸிடம் கடமைக்காக பதிலளித்தவள் அபியிடம் தனக்குத்தெரிந்த எல்லாவற்றையும் ஒப்பித்து முடித்தாள். கூறிமுடித்துவிட்டு “அப்..அப்பா எப்படி இருக்கார்?” என்று விழிகளில் நீரோடு கேட்கவும் அபிக்குத்தான் அய்யோ என்றானது. 

‘நான் என் பொண்ணோட போய் இருந்து இருக்கனும்” என்று கூறுவதும் அழுவதும் என்று இருந்தவரை தூக்கமாத்திரை கலந்த பாலை கட்டாயப்படுத்திக் குடிக்கவைப்பதற்குள் சாரதாவிற்கும் அபிக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது. அதனை இவளிடம் சொல்ல முடியுமா? மூக்கின் நுனி சிவந்திருக்க ஈரவிழிகளில் கேள்வியைத் தாங்கி தன்னைப் பார்த்தவளை மனம் வலிக்கப் பார்த்தவன் 

“வொர்ரி பண்ணாத யுவா! மாமாவை அம்மா பாத்துக்கிறாங்க. உன்னை இன்றைக்கே ஜாமின்ல எடுத்துடுவோம். விதுரனைக் குத்துன கத்தி இன்னும் கிடைக்கல. ஸோ ஜாமின் கிடைக்கிறது ஈஸி தான். என்னோட பர்ஸனல் ரிஸ்க்கும் போட்டு இருக்கேன்” என்றவன் ரிஷியை நோக்கவும் தனக்கு தேவையான மேலும் சிலகேள்விகளைக் கேட்ட ரிஷி

“மிஸ். யுவரத்னா! ஜாமின் ல வந்தாலும் கேஸை முடிக்கும் மட்டும் எனக்கு உங்களோட சப்போர்ட் தேவை. ஸோ ஏதாச்சும் மூளைக்குள்ள தட்டுப்பட்டா அதைக் கவனமா நியாபகம் வைச்சு இருங்க. இப்போ நாங்க கோர்ட்டுக்கு போகனும்” என்றவாறே அபியுடன் கிளம்பிச்சென்றான்.

வெளியில் வந்த அபியின் தோளை அழுத்திய ரிஷி “அபி இதெல்லாம் தேவையா? நான் பார்த்துப்பேனே! நீ இதுல இன்வால்வ் ஆகிறது தெரிஞ்சா அரவிந்தன் சார் என்ன பண்ணுவார் என்றே தெரியாது. இது நீ சொல்லித்தான் எனக்கே தெரியும். நீ இன்வால்வ் ஆகாம இருக்கலாமே?” என்று கேட்டதும் அழுந்த தலையைக் கோதிய அபி

“ம்ச். இல்லை டா. என்னால தள்ளி நின்று யுவாவோட கேஸில ரிஸ்க் எடுக்க முடியாது டா. அவ எனக்கு முக்கியம் ரிஷி” என்று கூறியவன் தனது ஜீப்பில் ரிஷியையும் ஏற்றிக்கொண்டு கோர்ட்டை நோக்கி விரைந்தான்.

******

“அபிஷிக்த்! நீ செய்யிறதை எல்லாம் பார்த்திட்டு சும்மா இருப்பேன் என்று நினைக்கிறியா?” ஜாமினில் வெளியே வந்த யுவாவை வீட்டில் விட்டுவிட்டு தன்னைக் காண வந்த அபிஷிக்த்தின் முன்னால்  ருத்ரமூர்த்தியாக இருந்த அரவிந்த் விழிகள் சிவக்க கர்ஜித்தார். உனது உறுமல் என்னை ஒன்றும் செய்யாது என்று நிமிர்ந்து நின்ற அபி 

“நான் என்ன சார் செய்தேன்?” என்று கேட்கவும் விரைந்து அபியை நெருங்கி அவனின் ஷர்ட்டைக் கொத்தாக பற்றி “உன்னையும் என்னோட மகன் போலத்தானேடா நினைச்சேன்! என்னோட பையனைக் கொன்ற உன்னோட மாமன் பொண்ணைக் காப்பாற்ற நினைக்கிறது தப்பு இல்லையா டா? என்ன செய்தேன் என்று கேட்கிற? வேணாம் அபி! விளையாடாத” என்று கத்தவும் ஆறுதலாக அவரது கைகளை விலக்கிவிட்டு ஷர்ட்டை இழுத்துவிட்டவன் 

“நானும் உங்களை அப்பாவா நினைக்கிறதால தான் இப்போ உங்களை என் மேல கைவைக்க அனுமதிச்சு இருக்கிறேன்! உங்க மகன் இறந்து போனதுக்கு யுவா ரீஸன் இல்லை என்று எனக்கு நூறு வீதம் உறுதியா தெரிஞ்சதுனால தான் நான் அவ பக்கம் நிற்கிறேன். புரிஞ்சுக்கோங்க சார்! என்கிட்ட இந்தக் கேஸைத்தாங்க. பத்து நாளிலேயே முடிச்சுக்காட்டுறேன்” 

“ஹ! உன்னோட பேச்சை நம்பி என்னோட பையன் சாவுக்கு நியாயம் கிடைக்காம செய்ய நான் என்ன முட்டாளா? இந்தக்கேஸ் போலிஸே ஹண்டில் பண்ணும். அப்படி எங்க டிப்பார்ட்மென்டிற்கு வந்தாலும் உன்கிட்ட கேஸைக் கொடுக்க நான் என்ன பைத்தியமா?” என்று இளக்காரமாகப் பேசவும் சலிப்பான ஒரு சிரிப்புடன் திரும்பியவனை சொடக்கிட்டார். திரும்பாமல் அப்படியே நின்றவன் 

“இதுக்கு நீ அனுபவிப்ப அபிஷிக்த்” என்ற அவரது குரல் எட்ட இருவிரல்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்து உயர்த்திக் காட்டிவிட்டு அப்படியே முன்னேறினான்.

*******

யுவாவை அன்று விடுதலை செய்திருந்தனர். சோகமாக நடமாடிக்கொண்டு இருந்த அனைவரின் முகத்திலும் சிரிப்பு மலர்ந்திருந்தது. அபியோ எப்பொழுதும் போல இறுக்கமாகவே இருந்து கொண்டான். ஆனால் யுவாவால் அவ்வளவு சீக்கிரமாக அதன் தாக்கத்தில் இருந்து வெளியே வர இயலவில்லை. 

யுவாவை பொலிஸ் கைது செய்தபோது ஒரு ஆயுதமும் கிடைத்து இருக்கவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரங்களும் கிடைத்திருந்தன. ஆனால் யுவாவை கைது செய்த பின்னர் விதுரனைக் குத்திய கத்தி இல்லாமல் அவள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் யுவாவின் வீட்டில் கத்தி கிடைத்து இருப்பதாக பொலிஸ் அறிவித்து இருந்தது.

கத்தியின் அளவு குற்றுப்பட்ட காயங்களின் அடையாளங்களுடன் பொருந்துவதால் அதுதான் கத்தி என்று எடுத்தாலும் அதில் இருந்த கைரேகைகள் அழிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை முறியடிக்க அபிஷிக்த் அரவிந்தனின் ஆடரையும் மீறி மோப்பநாய்களை கொலை நடந்த ஏரியாவில் இறக்கியிருந்தான். மோப்ப நாய்களின் உதவியுடன் விதுரனைக் குற்றிய கத்தி ஒன்று விதுரனின் இரத்தக்கறையுடன் யுவாவின் வீட்டில் இருந்து பத்து மீற்றர் தொலைவில் கண்டறியப்பட்டது. கெட்டநேரம் அந்தக்கத்தியிலும் கைரேகைகள் பதிவாகி இருக்கவில்லை. 

அது இன்ஸ்பெக்டரிடம் கையளிக்கும் போது நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களையும் அழைத்திருந்தான் அபிஷிக்த். எனவே யுவாவின் மேல் பழி வரவேண்டும் என்பதற்காக யாரோ திட்டமிட்டு அவளின் வீட்டில், யுவாவைக்கைது செய்தபின்னர்  சென்று கத்தியை வைத்து இருப்பது ரிஷியின் வாதாடலின் மூலம்  உறுதி செய்யப்பட்டதுடன் பொலிஸ் டிப்பார்ட்மென்ட்டும் கடும் கண்டணத்திற்கு ஆளாகி இருந்தனர்.

என்னதான் அபிஷிக்த்தின் செயல் நன்மைக்காக இருந்தாலும் அவனின் உயர் அதிகாரியின் சொல்லை மீறியதற்காகவும் அவனே சாட்சயங்களை உறவுக்காக அழிக்க வாய்ப்பு இருப்பது தெரிந்தும் இந்த வழக்கில் தொடர்பு பட்டதாலும் அபியை ஆறுமாதம் இடைநிறுத்தம் செய்து இருந்தனர். என்னதான் யுவா விடுதலை செய்யப்பட்டு இருந்தாலும் விதுரனின் கொலைவழக்கு முடிக்கப்படாமல் அப்படியே ஸ்பெஷல் க்ரைம் டிப்பார்ட்மென்ட்டிடமே கையளிக்கப்பட்டு இருந்தது. 

*******

யுவாவினை விடுதலை செய்து அழைத்து வந்தபின்னர் அவளது நடவடிக்கைகளில் தெரிந்த மாற்றம் தயாபரனை மேலும் கலங்கச்செய்தது. எங்கேயோ வெறிப்பதும், இரவில் கனவுகளின் தாக்கத்தால் அலறுவது, உண்ணாமல் உறங்காமல் என்று அவளைப் பார்ப்பதற்கே இயலவில்லை. யுவாவின் மனதோ மிகுந்த அழுத்தத்தில் இருந்தது. 

எண்ணியே பாகாத சம்பவங்கள் அவளது மனதைக் குழப்பி விட்டிருந்தன. அதுமட்டுமன்றி அன்று அவள் இரவு தண்ணீர் எடுப்பதற்காக வெளியில் வர கதவைத்திறந்தபோது அபியும் விக்ரமும் பேசிக்கொண்டு இருப்பது கேட்டது. 

“சார் விதுரனோட கேஸ் இப்போ நம்ம டிப்பார்ட்மென்ட்டுக்குத்தான் வந்து இருக்கு”

“ஹ்ம்ம்ம்.. யார் சார்ஜ் எடுத்து இருக்கா?”

“ஷ்யாம் சார்”

“ஓஹ்!”

“சார் நீங்க சஸ்பென்ட் ஆகாம இருந்து இருந்தா உங்களுக்கு தான் இந்த கேஸ் வந்து இருக்கனும். அரவிந்தன் சார் நீங்க யுவா மேடமிற்கு சப்போர்ட் பண்றிங்க என்று வேணும் என்றே கோவத்துல செய்யுறார்”

“ஹ்ம்ம்! தெரியும்”

“சார்! நீங்க இந்த வேலையை எவ்வலவு விரும்புறீங்க என்று எனக்குத் தெரியும். இப்படி ரிஸ்க் எடுத்து இருக்கத்தான் வேணுமா? ஆறுமாதம் சஸ்பென்ஸ் ஆகி இருக்கிறது அம்மாவிற்கு தெரிஞ்சால்?”

“பச். விக்ரம்!! இது யாருக்கும் தெரியவேணாம். குடும்பத்தைவிட என்னோட கனவு எனக்கு முக்கியம் இல்லை. அதோட யுவா தப்பு பண்ணல! இதைப் பற்றி யாரிடமும்” என்றபடி திரும்பியவனின் கண்களில் விழிகளை விரித்து அதிர்ந்து நிற யுவாவின் விம்பம் விழுந்த கண்ணாடி தெரிந்து அபியயும் அதிர வைத்தது.

Advertisement