Advertisement

“என்ன விக்ரம் சொல்ற? அகெய்ன் கொலை கேஸா? கத்தியால குத்தி. அதிலும் ஒருவன் சரண்டர் ஆகி இருக்கின்றானா? ஹ்ம்ம்ம் எங்கேயோ இடிக்குதே” தாடையைத்தடவிய படி யோசித்த அபி ஏதோ நியாபகம் வந்தவனாக

“ஒன்று செய் விக்ரம்! எங்கட க்ரைம் ப்ராஞ்ச் க்கு வந்த இதே போல சிமிலர் கேஸஸோட எல்லா டீடெய்ல்ஸையும் எடுத்துட்டு வந்து நாளைக்கு காலையில என்னை வீட்டில பாரு. இப்ப நடந்த இந்தக் கேஸை யார் சார்ஜ் எடுத்து இருக்கா?”

“ஷ்யாம் சார் தான்

“அவனா?” என்று முகத்தைச் சுழித்த அபிக்கு ஷ்யாமைக் கண்ணிலும் காட்டப் பிடிக்காது. ஏதேனும் பொறுப்புக்களைக் கொடுத்தால் அதை சரியாக முடிக்கின்றோமா இல்லையா எதையும் யோசிக்காமல் கேஸை மூடித் தூரப் போட்டால் போதும் என்று நினைப்பவன். அப்படி செய்யும் பொழுதுகளில் பாதிக்கப்பட்டவர்களே திரும்பவும் பாதிக்கப் படுவதைப் பற்றி சிறிதும் சிந்திக்காதவன்.

அரவிந்த் தனது மகனின் கேஸையும் இவனிடம் கொடுத்ததால் தான் அபிக்கு அப்பொழுதே வந்த சந்தேகத்தைத் தீர்க்க முடியாமல் போனது. இதோ இப்பொழுதும் அவனிடம் கேஸைக் கொடுத்துள்ள அரவிந்தனின் மடமைத்தனத்தை என்ன செய்வது? இழப்பு தான்! யார் இல்லை என்றது? அதற்காக கண்ணில் படுபவர்கள் எல்லோரும் குற்றவாளிகளா?

“என்ன தான் டா அவருக்கு பிரச்சனை? ஏன் இப்படி யோசிக்காம.. ம்ச்!” என்று சலித்தவன் “சரி விடு! நான் ஒரு தடவை கேஸஸை கோ த்ரூ பண்ணிடுறேன். பிறகு அரவிந்தன் சார் கூட கதைக்கலாம்”

“ஒகே பாஸ்” என்றவன் கிளம்பப் போகவும் “அப்பா அம்மா வந்துட்டாங்களா விக்ரம்?”

“யெஸ் பாஸ்! நேற்றே வந்துட்டாங்க. அதுனால தான் மாதாஜியை வந்து பார்க்க முடியல” அவனின் முகத்தில் வீட்டிற்கு வராததற்கு சாரதா என்ன சொல்லுவாரோ என்ற பீதி தொக்கி நிற்பதைப் பார்த்த அபிக்கு சிரிப்புத் தான் வந்தது,

“பார்ரா! கிரிமினல்ஸோட விளையாடுற க்ரைம் ஆபிஸர் எங்க அம்மாவைப் பார்த்து இப்படி பயப்பிடுறத” என்று நக்கலாகக் கூறவும்

“சார்! நான் எப்பவுமே அன்புக்கு அடிமை சார்” என்று பாவமாகக் கூறினான்.

அதற்குமேல் அடக்க முடியாமல் “ஹா..ஹா” என்று சிரித்தவன் “அடிமை சார்! நாளைக்கு வந்துடுங்க” என்று தோளில் தட்டி விட்டுச் சென்றவனை விசித்திரமாகப் பார்த்தான் விக்ரம். இப்படி இறுக்கம் தளர்ந்து இருப்பதும், சிரிப்பதும், பேசுவதும் இவனது இயல்பல்லவே! எல்லாம் யுவாவின் வருகை தான். அதை அபியைத் தவிர அவனைச் சுற்றி இருந்த அனைவருமே உணர்ந்தது தான் வேடிக்கை!

விக்ரமுடன் பேசிவிட்டு அபி வீட்டிற்கு வர இரவு ஒரு மணி ஆகிவிட்டது. அனைவரும் தூங்கி இருப்பர் என்று அனுமானித்தவனாக தன்னிடம் இருந்த சாவியைப் போட்டுக் கதவைத் திறந்து பின் லாக் செய்தவன் ஷர்ட்டின் மேல் இரு பட்டன்களை விடுவித்தவாறே தனது அறைக்குச் செல்ல படியேறினான்.

படியேறும் போதே மெல்லிய முணகல் ஒலி கேட்கவும் புருவம் சுருக்கியவன் அவ்வொலியை உற்றுக்கேட்டவாறே தனது அறையை நோக்கி நடந்தான். அவனது அறையை அடைய யுவாவின் அறையைத் தாண்டும் போது அம்முணகல் ஒலிவடிவம் பெறவே யுவாவின் அறையின் முன் நின்றவன் உதட்டைக் கடித்தபடி நின்றது ஒரு நொடி தான். பெரியவர்கள் உறங்குவதால் கதவைத்தட்டி சப்தம் செய்து சிறிய பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று எண்ணினானோ என்னவோ தயக்கமாக என்றாலும் யுவாவின் கதவைத் திறந்து வாசலில் நின்றே எட்டிப் பார்த்தான்.

யுவா காயம் பட்டு இருக்கும் போதே அவள் கதவை லாக் செய்வதில்லை என்று தெரியும். அவளது மனதில் இன்னும் விதுரனின் கொலை செய்யப்பட்ட உடலைப் பார்த்ததன் தாக்கம் இருப்பதை அறிந்தவனாக அதைத்தடுக்க முயலவில்லை அபி. இப்பொழுதும் கதவைத் திறந்தவனின் கண்களின்

“நான் கொலை பண்ணல! நான் இல்லை. விதுரனை கொல்லல! அய்யோ நம்புங்கவேன்” என்று புலம்பியவாறே உடலை முறுக்கும் யுவாவின் விம்பம் விழ நொடியும் தாமதிக்காது அவளருகில் விரைந்து சென்று தோளைத் தனது கைகளால் இலேசாகத் தட்டிக் கொடுத்தவாறே

“ஒன்றுமில்லை யுவா! தூங்கு..தூங்கு” என்று மெல்லியகுரலில் கூறினான். அபியின் குரல் கேட்டதும் சட்டென்று அடங்கியது அவளின் புலம்பல்.

“அபி மாமா! வந்துட்டீங்களா?” என்று தூக்கத்திலேயே முணகியவள் மெல்ல மெல்லக் கண்ணயரவும் ஒரு பெருமூச்சுடன் விலகி நின்று உறங்கும் அவளைப் பார்த்தான் அபி!

பிஞ்சுக் கால்களுடன் குடு குடுவென தன்னுடன் ஓடித் திருந்த தேவதையை அவனுக்கு சிறிது நினைவு இருந்தது. சோகங்கள் என்றால் என்ன என்றே தெரியாமல் தந்தையின் அரவணைப்பில் சமூகத்தின் அவலங்களை நேரில் காணாமல் துடிதுடிப்புடன் வளர்ந்தவள் சமூகத்தின் கோர முகம் கண்முன் ஆடும் போது பயத்தில் ஒடுங்கிப் போவது இயல்பு தான். ஆனால் அதைக் காலம் சரியாக்கும் என்று கைகட்டி வேடிக்கை பார்த்தது தவறோ என்று இப்பொழுது தோன்றியது. அவளின் மனதில் இருக்கும் கசடுகளை வெளியேற்றி வெளிப்பார்வைக்கு மட்டும் அன்றி மனதளவிலும் எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் யுவாவாக மாற்ற உள்ளம் விழைந்தது.

எதையோ எண்ணியவன் மீண்டும் அவளை நோக்கினான். எதையாவது செய்துவிட்டு திரு திருவென விழித்துக் கொண்டு இருக்கும் இரு நட்சத்திர விழிகளும் உறக்கத்தில் மூடி இருக்க இரவு விளக்கின் மெல்லிய ஒளியில் பொன்னிறமாக மின்னிக்கொண்டிருந்த தேகமும் சிவந்து போன உதடுகளும் எதையோ எண்ணி சுழித்த அந்த விற்புருவங்களும் எது உந்தியதோ! மெல்ல அவளருகே சென்று அமர்ந்தவன் இலேசாக தனது ஆள்காட்டி விரலால் சுழித்த புருவங்களை வருடிக்கொடுத்தான்.

“ம்ம்” என்றபடி மறுபுறம் திரும்பியவளை உணர்ந்து திடுக்கிட்டு கையை விலக்கியவனின் மனதில் ‘இப்போ இதை அம்மா மட்டும் பார்த்து இருக்கனும்’ என்ற வாக்கியம் தான். சிரிப்புடன் தலையசைத்தவன் அப்படியே அவளைப் பார்க்கும் படி போடப்பட்டிருந்த சோபாவில் சென்று அமர்ந்து சிறிது நேரம் அவளைப் பார்த்த நிகழ்வுகளை ஓட விட்டுக் கொண்டு இருந்தான்.

முதலில் அவனைக் கண்டது முறைத்தது, அழுகையுடன் வந்து தன் நெஞ்சில் மோதியது, கோர்ட்டில் பிழையான பதிலைக் கூறிவிட்டு எப்படி என்பதாக விழி அசைத்தது, மல்கோத்ராவின் கேஸில் நடந்தவற்றை சிறு குழந்தை போல் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தது, அவள் ஒரு குற்றவாளியாக அடையாளம் காட்டப் பட்ட போது தன்னையே சரணடைந்தது, இரு வருடங்கள் எங்கோ இருந்தாலும் அவளையே அனைவரையும் நினைக்க வைத்தது, அரவிந்தனிடம் இருந்து இவனது வேலையைக் காப்பாற்றுவதாக எண்ணிச் செய்த சிறு பிள்ளை வேலைகள் அனைத்தும் மாறி மாறி நினைவலையில் எழ எழ பிடித்த பானத்தைச் சொட்டு சொட்டாக உதட்டினுள் செலுத்தி நாவில் சுவைக்க செய்வதைப் போல அந்த நினைவலைகளை இதயத்தினுள் இறக்கி உள்ளத்தை உணரச் செய்தான் அவளது இனிமைகளை.

எவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டு இருந்தானோ மெல்ல மெல்ல அப்படியே சோபாவில் தலை சாய்த்தவன் உடற்களைப்பில் உறங்கியும் போனான்.

காலை ஆறுமணியளவில் விழிப்பு வந்து விட்டது யுவாவிற்கு. “ஹாவ்” என்று கொட்டாவி ஒன்றை வெளியேற்றி உடலை முறுக்கியவாறே எழுந்து அமர்ந்தவள் தனது இஷ்டதெய்வமான முருகனையும் அன்னையையும் ஒரு கணம் மனதில் கொண்டு வந்து விட்டு விரிந்து கிடந்த கூந்தலை கொண்டையாக முடிந்து கொண்டு தன் பாட்டிற்கு எழுந்து கட்டிலை ஒழுங்கு படுத்தியபடி ஏதோ உந்த நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் எதுவுமே விளங்கவில்லை.

அவளது அறை தானே? குழப்பத்தில் சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு இப்பொழுது அது அபி தானா என்ற சந்தேகம். வெண்ணிற நைட் பான்ட் டீஷர்ட்டில் இருந்தவள் மெல்ல அபியின் அருகே சென்று இடுப்பில் கைவைத்து உற்றுப் பார்த்தாள். கண்களைக் கசக்கி விட்டுப் பார்த்தாள். அவனே தான்! அபி ஏன் தனது அறையில்? யோசித்தவள் அவனையே எழுப்பிக் கேட்போம் என்று எண்ணியவளாக கையை அவனருகே கொண்டு சென்றவள் சட்டென்று பின்னால் இழுத்துக் கொண்டாள்.

“ம்ச். லேட்டா தானே வந்து இருப்பார்? டயர்டா இருக்குமே! இப்ப என்ன செய்ய? செல்வி வந்து இவரை இங்க பார்த்தா. முடிஞ்சுது” என்று கையை உதறியவள் மீண்டும் கையை முன்னே எடுப்பதும் பின்னே நகர்த்துவதுமாக எவ்வளவு நேரம் செய்தாளோ அபியே சட்டென்று விழித்தான். அவன் விழித்ததும் தெரியாமல் கையை முன்னே பின்னே என்று அசைத்துக் கொண்டு இருந்தவளை அப்படியே இழுத்து தனக்குள் புதைத்துக்கொண்டு விட்ட தூக்கத்தைத் தொடருவோமா என்று எண்ணியவன் தனது சிந்தனை செல்லும் பாதையில் திகைத்து தலையை உலுக்கிக் கொண்டான்.

அப்பொழுது தான் அவன் விழித்ததை உணர்ந்தவள் “அபி மாமா! நீங்க ஏன் இங்க சோபாவில என் ரூம் ல?” என்று கேட்கவந்ததைத் திக்கித் திணறிக் கேட்கவும்

“ஆமா யுவா. உன்னைப் பார்க்க வந்து டயர்ட் ல அப்பிடியே தூங்கிட்டேன். விக்ரம் நைன் அப்படி மீட் பண்ண வருவான். என்னை எழுப்பி விடு. ஐம் டயர்ட்” என்றவன் கண்களைக் கசக்கியவாறே எழுந்து சென்று யுவாவின் கட்டிலிலே சென்று விழுந்தான்.

அவன் கட்டிலில் விழுந்ததும் “அய்யய்யோ” என்று கையை உதறியவள் நின்ற இடத்தில் இருந்தே திரும்பி அவனைப் பார்த்தாள். முகத்தில் அவ்வளவு களைப்பு. அதோடு ஒரே அறையில் அவளைது கட்டிலில் அவனது வாசத்தை இரசிக்காமலும் இருக்க முடியவில்லை. அதுவும் உரிமையாக அவனை எழுப்புமாறுக் கூறிச் சென்றதும் ஏனோ பிடித்தது பாவைக்கு. ஒரு ஆனந்தப் பெருமூச்சுடன் ஏசியின் அளவைக் குறைத்து போர்வையால் அவனை மூடிவிட்டு மெல்லக் கதவைத் திறந்து பூனைப் பாதம் வைத்து கீழிறங்கியவள் “யுவா” என்ற சாரதாவின் குரலில் சிலையாகிப் போனாள்.

Advertisement