Advertisement

அபிஷிக்த் அதன் பின்னர் யுவாவிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. தான் கேட்டும் சொல்லவில்லை என்ற கோவம் அவனுக்கு. அவனது மௌனம் யுவாவை வதைத்தாலும் அரவிந்தனின் பெயரைக்கூறி தன்னால் அவனது வேலைக்கு மீண்டும் பிரச்சனை வருவதை அவள் விரும்பவில்லை. அவனின் நன்மைக்காக அவனிடமே மோதிக்கொண்டாள் பெண்ணவள். அவளின் மனதை அறியாத ஆடவனுக்கோ அவள் தன்னை ஒதுக்கி விட்டாள் என்ற கோவம். அவளுக்கு பிரச்சனை என்றால் தன்னிடம் கூறி இருக்க வேண்டும் என்ற எண்ணம். 

இவர்களின் இடையில் சிக்கித்தவித்த விதியோ பேந்தப் பேந்த முழித்துக்கொண்டு இருந்தது. ‘இவனுக தான் என்னைப் போட்டு விளையாடுறது! ஆனா திட்டெல்லாம் எனக்குத் தான்’ என்று பெருமூச்சுடன் எண்ணிக்கொள்வதைத் தவிர அதற்கும் வேறு வழி இருக்கவில்லை. 

யுவா மீண்டும் வீட்டிற்கு வந்ததில் இருந்து அபி யுவாவைக் கவனிக்கும் விதம் சாரதாவிற்கு நன்கு தெரியும். கடந்த ஒரு வாரமாக அவள் இருந்தாலும் கணக்கிலேயே எடுக்காமல் செல்லும் அபியையும், செல்லும் அவனை வேதனையாக நோக்கும் யுவாவையும் பார்த்துக்கொண்டு இருந்தவருக்கு தாங்கள் அறியாமல் ஏதோ ஒரு ஊடல் அவர்களிடையே செல்வதை உணர முடிந்தது.

தனது அறையில் அமர்ந்திருந்த யுவரத்னாவும் அதைத்தான் யோசித்துக்கொண்டு இருந்தாள்.

 அன்று அவன் கோவமாகப் பேசி இவள் மேலே தனது அறைக்கு வந்து தன்னைச் சுத்தப்படுத்திவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தது தான் தாமதம் அறைக்கதவு தட்டப்பட்டது. யார் என்று சென்று பார்த்தாள் வேலைக்காரப்பெண் செல்வி! 

“என்ன செல்வி?” என்று இவள் வினவவும் புன்னகைத்தவள் ஒரு ட்யூப் ஒன்றில் இருந்த க்ரீமை நீட்டினாள். புருவம் சுருக்கியவாறே வாங்கியவளின் கேள்விப்பார்வையை உணர்ந்தது போல 

“அபி ஐயா தான்மா உங்ககிட்ட இதைக்கொடுக்கச்சொன்னாங்க! ஏதோ உடம்புக்கு ஒத்துக்காம முகம் கழுத்துலாம் சிவந்து போய் இருந்திச்சாமே!” என்றவளின் கண்களிற்கும் சிவந்த அவளது முகமும் கழுத்தும் தென்பட நாடியில் கை வைத்தவள் 

“அட ஆமாமா! இப்பிடி சிவந்து போய் இருக்கு. பால் நிறம்மா நீங்க. அதுதான் பளிச்சென்று தெரியுது போல” என அதிசயிக்கவும் சிரித்தவளின் மனதிற்குள் ஒரு தேன் துளியொன்று இறங்கியது போல இனித்தது அபியின் செயலில். அவனிற்கு அதற்காக நன்றி சொல்ல முயன்றவளிடம் முகம் கொடுத்தே பேசவில்லை அபி! ம்ச்! என்று சலித்தவள் இன்டர்காமில் சாரதா அழைக்கவும் கீழே இறங்கிச்சென்றாள்.

இறங்கும் பொழுதே சோபாவில் அபியும் சாரதாவுடன் அமர்ந்திருப்பதைக் கண்ட யுவாவின் கால்கள் அவளையறியாமலே விரைந்து கீழே இறங்கியது. சாரதாவின் அருகில் சென்றவள் அபிஷிக்த்தை அருகில் கண்டதும் ஏதோ ஒரு முணுமுணுப்பு  மனதில் எழ தயங்கி நின்றாள்.

“அத்தை!” சாரதாவை நோக்கி விளித்தாலும் விழிகள் என்னவோ அபியின் மேலே தான் இருந்தது. அபியோ அவளது குரல் கேட்டாலும் அதனை அசட்டை செய்தவாறே போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தான். 

“வாமா யுவா! அன்றைக்கு  நம்ம நகை எடுக்க போனோம் ல?” என்று சாரதா கூறவும்  அபியின் விழிகள் சட்டென்று நிமிர்ந்து அவனையறியாமலே யுவாவை நோக்க அவளும் அவனைத்தான் அப்போது பார்த்துக்கொண்டு இருந்தாள். பார்வை அங்கு இருந்தாலும்  இயல்பாக 

“ஆமா! அதுக்கென்ன அத்தை?” என்ற சொல்லை உதிர்த்து இருந்தது. 

“அன்றைக்கு உனக்கு நகை எடுத்துட்டு அப்பிடியே நாலைஞ்சு செட் புடவையும் எடுக்கலாம் என்று ப்ளான் பண்ணி இருந்தேன். எல்லாமே குழம்பி போய்ட்டு” என்று அபியை முறைத்தவாறே கூற தோள்களைக் குலுக்கியவாறே மீண்டும் ஃபோனின் புதைந்து போனான் அவன்.

“அது எதுக்கு அத்தை இப்போ?”

“இன்றைக்கு எப்பிடியும் உனக்கு நான் வாங்க நினைச்சதை வாங்கிடனும். இனி விரதகாலம் தொடங்கிடும். நம்ம வீட்டுப்பொண்ணு நீ! மங்களகரமா இருக்க வேணாம்?”

“அய்யோ அத்தை!” என்று  மறுத்துக்கூற வந்தவளை 

“அத்தை சொன்னா கேட்டுப் பழகு யுவா” என்ற படி அங்கே வந்தார் தயாபரன்.

“அப்பா” என்று பல்லைக் கடித்தவள் “அத்தை அதுல எல்லாம் எனக்கு  ஆர்வம் இல்லை”

“ஆனா எனக்கு இருக்கே?” என்றதும் தொப்பென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவள் 

“சரி. இப்போ என்ன செய்யனும்?” என்று கேட்கவும் 

“அப்பிடிக்கேட்டா நான் சொல்லிட்டுப் போறேன்” என்று ராகமாக இழுத்தவர் “அபி! இன்றைக்கு வீட்டில தான் இருப்பான். நீ அவனோட போய் புடவை அப்புறம் நகைங்க கொஞ்சம் ஆடர் பண்ணி இருக்கேன் அதை எல்லாம் போய் எடுத்துட்டு வா” என்று கூற “என்னது?” என்றவாறே மீண்டும் எழுந்து நின்றாள் யுவா!

அபியும் அதனை எதிர்பார்க்கவில்லை போலும் “அம்மா! இப்போ எதுக்கு என்னை இதுக்குள்ள இழுக்கிற நீ?” என்று சாரதாவை முறைக்க

“ஹ! உன்னோட வேலையால என்னோட மருமக அடிபட்டு கிடக்காம இருந்து இருந்தா அன்றைக்கே நாங்க இந்த வேலையெல்லாம் செய்து முடிச்சு இருப்போம். நீ தானே எல்லாத்தையும் குழப்புன? இதை நீ செய்யத்தான் வேணும்”

அபி ஏதோ அதற்கு கூற வருவதற்குள் “அபி மாமா வேணாம் அத்தை. நம்ம போகலாமே” என்று அவனுக்க்காக பேசுவதாக எண்ணி மீண்டும் அபியின் அனல் பார்வைக்குள் சிக்கிக்கொண்டாள் அவனவள்.

அவளை முறைத்தவாறே காலின் மேல் காலைப்போட்டு நன்கு சாய்ந்து அமர்ந்த அபி “ஏன் மாமா? உங்க பொண்ணை நான் என்ன கடிச்சா தின்னப்போறேன்? என்கூட வர முடியாதாமே? கேட்டு சொல்லுங்க” என்று கூறவும் கைகளைப் பிசைந்தவள் 

‘இவர் என்ன எந்தப்பக்கம் போனாலும் அடிக்கிறார்’ என்று எண்ணியபடி பாவமாக சாரதாவை நோக்கினாள். கண்களை மூடி அவளை ஆறுதல்ப்படுத்தியவர் 

“அதான் அபியே சொல்லிட்டான் ல யுவா? போய்க் கிளம்பு மா. வானிலை எப்போ மாறும் என்று கூற முடியாது” என்று நக்கலாக அபியை நோக்கவும் “உங்களையும் வானிலை அறிக்கை படிக்கச் சொல்லி யாரும் கேக்கலை” என்ற படியே எழுந்தவன் “பத்து நிமிஷத்துல தயாராகி வரச்சொல்லுங்க உங்களோட அண்ணன் பொண்ணுகிட்ட” என்ற படி போர்ட்டிக்கோவில் நின்ற காரை நோக்கிச் சென்றான்.

சொன்னது போல பத்துநிமிடங்களில் வந்தவளை அழைத்துக்கொண்டு அபி சென்ற இடம் ஒரு பெரிய ஷாப்பிங்க் மால். அங்கே அனைத்து விதமான ஆடைகளும் கிடைக்கும் அத்துடன் நிறைய தேர்வுகளும் இருக்கும் என்பதாலேயே அவளை அவன் அங்கு அழைத்துச்சென்றது. யுவாவோ அபியுடன் செல்லும் மகிழ்ச்சியில் எங்கு செல்கின்றோம் என்றே யோசிக்கவில்லை. அமைதியாகக் கழிந்த இருபது நிமிடப்பயணம் அவளுக்கு அப்படி ஒரு நிறைவைத் தந்தாலும் அபியிடம் பேசப்பயத்திலேயே அந்நேர நிம்மதியைக் குலைக்காமல் அமைதியாக இருந்து கொண்டாள்.

இவர்கள் செல்லவேண்டிய இடம் நான்காம் தளத்தில் இருந்ததால் அபி லிஃப்ட்டை நோக்கி நடக்க அங்கே ஏற்கனவே வந்திருந்ததால் யுவாவும் அபியைப் பின்பற்றி லிஃப்ட்டை நோக்கிச்சென்றாள். லிஃப்ட் கீழே வரும் மட்டும் காத்துக்கொண்டு இருந்த நேரத்தில் அபி ஃபோனை நோண்ட யுவாவோ விழிகளை அங்கும் இங்கும் சுழற்றியவாறு அவன் அருகிலேயே நின்று கொண்டாள்.  

சிறிய நேரத்திலேயே லிஃப்ட் தரையை அடைந்ததற்கான சப்தம் எழவும் திறந்த கதவை நோக்கியவள் உள்ளே இருந்த அரவிந்தனை அங்கே எதிர்பார்க்கவில்லை. குனிந்தவாக்கில் ஃபோனைப்பார்த்துக்கொண்டு இருந்தாலும் அருகே இருந்த யுவாவின் பாதங்களிலும் ஒரு கண்ணை வைத்திருந்த அபி லிஃப்ட்டைக்கண்டதும் பின்னே நகரும் அவளது பாதங்களை புருவச்சுழிப்புடன் பார்த்தவாறே நிமிர்ந்து லிஃப்ட்டை நோட்டமிட்டான்.  

அனைத்தும் ஒரு சிலவிநாடிகளில் நிகழ்ந்திருக்க அரவிந்தனோ அபிஷிக்த்தை நோக்காது வன்மத்துடன் யுவாவையே முறைத்தவாறு லிஃப்ட்டை விட்டு வெளியேறாமல் அப்படியே நின்றார். அரவிந்தனைக் கண்டதும் சட்டென்று யுவாவின் புறம் சென்ற அபியின் பார்வை அவளது கைகள் இயல்பாக எழுந்து கழுத்தைத்தடவவும் சட்டென்று கூர்மை பெற்றது. 

லிஃப்ட் மூட முன்னர் சட்டென்று லிஃப்ட்டின் கதவுகளுக்கிடையில் காலை வைத்தவன் யுவாவைத் திரும்பி நோக்கியபடி “இங்கேயே நில்லு. எங்கேயும் போகக்கூடாது. நான் வந்திடுறேன்” என்று உள்ளே ஏறி இறுதித் தளத்திற்கு மேல் மொட்டை மாடியில் அமைந்து இருந்த ரெஸ்டாரன்டிற்கான ஆளியை அழுத்தினான். அழுத்திய கையுடன் வெளியே செல்லச்சென்ற அரவிந்தனின் கைகளையும் அழுந்தப் பற்றிக் கொண்டான். பேந்தப் பேந்த விழித்த யுவா நடப்பதைக் கிரகிக்க முன்னமே லிஃப்ட் மேல்த் தளத்தை நோக்கி விரைந்தது.

*********

மொட்டைமாடியில் வீசிய காற்றினால் கூட அங்கே நின்றிருந்த அபியின் கோவத்தைக் குறைக்க இயலவில்லை. யுவாவை அன்று காயப்படுத்தியது தான் தான் என்று தன்னிடமே நெஞ்சை நிமிர்த்தி சொல்பவரை என்ன செய்தால் தகும் என்றபடி நோக்கிக் கொண்டு இருந்தவன் 

“யுவா மேல கை வைக்க என்ன ரைட்ஸ் இருக்கு உங்களுக்கு?” என்று கடித்தப் பற்களிடையே உறுமலாகக் கேட்க விழிகளைச் சுருக்கியவர் 

“என் மகனைக் கொன்றவள் என்ற காரணம் போதாதா?” என்று கோவச்சிரிப்புடன் கேட்டார். 

பொங்கிய கோவத்துடன் அருகில் இருந்த சுவற்றைக் குத்தியவன் “இதே என் முன்னால வேற யாரும் நின்றிருந்தா நடக்கிறதே வேற! அதுதான் அந்தக் கேஸைக் க்ளோஸ் பண்ணிட்டீங்க இல்ல? பிறகென்ன?” என்று பல்லைக் கடிக்கவும் 

“ஹ! நாங்க எங்க க்ளோஸ் பண்ணோம்? உன்னோட மாமா மகளுக்காக நீ க்ளோஸ் பண்ண வைச்ச! ” என்று எகத்தாளமாகக் கூறவும் புருவம் சுருக்கியவன் 

“இதென்ன புதுக்கதை?” 

“புதுக்கதை இல்லை அபி. நீ எழுதுன கதை தான். கொலைசெய்ததா ஒருத்தனை காசு கொடுத்து அந்தப் பழியை ஏத்துக்க வைச்சு இருக்க.கேஸைக் க்ளோஸ் பண்ண கையோட உன்னோட முறைப்பொண்ணை பாரினிற்கு அனுப்பல நீ?” என்று கூறவும் மேலும் கோவம் எழும்ப சிவந்த விழிகளால் அவரை உறுத்து விழித்தவன் இயலாமையுடன் கையை விசிறியவாறு

“உங்களைப் போல தொழிலுக்கு துரோகம் பண்ண எனக்கு தெரியாது. நான் செய்த ஒரே ஒரு தப்பு அந்தக் கேஸில மோப்ப நாய்களை உங்க அனுமதி இல்லாம இறக்குனது தான். யுவாவுக்கு பக்க பலமா நிற்கிறது என்னோட தனிப்பட்ட விருப்பு. உங்களுக்காக அவளை எதிர்க்க மாட்டேன். ஆனா ஒன்று தெரிஞ்சுக்கோங்க அவ கொலை செய்து இருந்தா அவளே அதை ஒத்துப்பாளே ஒளிய இப்படி எங்கேயும் ஓடிப்போக மாட்டா! அவளை நான் பாரின் அனுப்புனது அவளோட  மனமாற்றத்துக்கு!”

“அப்படி தப்பிக்க வைக்க அனுப்பி இருந்தா திரும்ப இங்க கூட்டிட்டு வந்திருக்க மாட்டேன்.என் கையிலை அந்தக் கேஸை தாங்க பத்து நாள்ல முடிச்சுக்காட்டுறேன் என்று எவ்வளவு  கெஞ்சுனேன். ஷ்யாம் கிட்ட கேஸைக் கொடுத்தீங்க. ஆறு மாசம் இழுத்தாங்க. அப்புறம் யாரோ ஒருத்தன் தான் செய்தேன் என்று சரணடைஞ்சுட்டான் என்று கேஸை மூடி இருக்கீங்க. ஒன்று சொல்லுறேன் கேட்டுக்கோங்க உங்க மகனோட சாவுக்கு சரியான நியாயம் தேடாம உங்க வறட்டு பிடிவாதத்தால நீங்க தான் உங்க மகனுக்கு துரோகம் செய்துட்டு இருக்கீங்க. முதல்ல உங்களோட கண்ணைத் திறந்து சுத்திப்பாருங்க” 

என்று கூறிவிட்டு தலையை அழுந்தக்கோதியவன்நீங்க உங்க மகனுக்கு மட்டும் இல்லை சார். உங்களோட இன்னொரு மகனா இருந்த எனக்கும் நியாயம் செய்யலஎன்றுவிட்டு திரும்பி இரண்டடி எடுத்துவைத்து நின்றவன் மீண்டும் அவர் புறம் திரும்பிஎதுவேணா இருக்கட்டும்! இன்னொரு முறை யுவா மேல உங்க நிழல் பட்டிச்சுநீங்க தேஜை பார்க்க வேண்டி வரும்என்றுவிட்டு அவரது அதிர்ந்த தோற்றத்தையும் கணக்கில் எடுக்காமல் விரைந்து சென்றான்.

அபி சென்றதும் அவ்விடத்திலேயே உறைந்து நின்ற யுவாவிற்கு சிறிது நேரத்திலேயே பதட்டம் தொற்றிக்கொண்டது. நகத்தைக்கடித்தபடி மூடித்திறக்கும் லிஃப்ட்டின் கதவுகளையே வெறித்துக்கொண்டு இருந்தவள் ஒரு கட்டத்தில் அபி வெளியே வரவும் அவனை நோக்கி ஓடிச்சென்றாள். தன்னைக்கண்டதும் ஓடி வந்து பக்கத்தில் தயங்கி நின்ற யுவாவின் கையை இயல்பாக தனது கைகளுக்குள் பொதித்து வைத்துக் கொண்ட அபி வாசலை நோக்கி நடக்கத் தொடங்கவும் அவனிடம் எதையும் கேட்கமுடியாமல் உதட்டைக் கடித்தபடி அவனது இழுவைக்கு உட்பட்டு சென்றாள் பாவையவள்.

காரைச்செலுத்திக்கொண்டு இருந்த அபியிடம் எதையோ கேட்கவருவதும் தயங்கியதுமாக இருந்த யுவாவைக் கண்டுகொண்ட அபிக்கு சிரிப்புத் தான் வந்தது காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன் கைகளைக் கட்டியபடி திரும்பி யுவாவைப் பார்க்க அவள் கார் நின்றதும் தெரியாமல் எதையோ காற்றில் எழுதுவதும் யோசிப்பதும் நகத்தைக்கடிப்பதுமாக நின்றாள். சில விநாடிகளில் அபியின் புறம் திரும்பியவளுக்கு அவன் தன்னையே நோக்கியவாறு அமர்ந்திருக்கவும் தூக்கிவாரிப்போட்டது. 

“அவுட் வித் இட்” என்று அபி சாகவாசமாக கூற 

“அது..அது” என்று திணறியவள் “அரவிந்தன் அங்கிளுக்கும் உங்களுக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை தானே?”  அவளைக் கடைக்கண்ணால் முறைத்தவாறே காரை மீண்டும் இயக்கியவன் 

“இப்போ கூட அவர் தான் உன்னை அடிச்சார் என்று உன்னால சொல்ல முடியல இல்ல?” என்று அபி உணர்வே இல்லாத குரலில் கேட்கவும் சட்டென்று விழிகளில் பூத்த நீருடன் வெளிப்புறமாக முகத்தைத் திருப்பியவள் “என்னால உங்களோட வேலைக்கு திரும்ப பாதிப்பு வர்ரத நான் விரும்பல” என்று முணுமுணுத்தாள். 

அவள் கூறியதை சரியாக கணித்தவன் “இங்க பாரு யுவா! இது தான் நான் உனக்கு இதைப்பற்றிக் கொடுக்கிற லாஸ்ட் எக்ஸ்ப்ளநேஷன். நீ என்னை என்னோட வேலைக்கு ரிஸ்க் எடுத்து உன்னைக் காப்பாத்தச் சொல்லிக் கேட்கல. ஏன் அம்மாவோ மாமாவோ யாருமே கேட்கல. எனக்கு யாரும் கேட்க வேண்டிய தேவையும் இருக்கல. என்னோட மனசுல பட்டதை செய்தேன். இதுல நீ கில்டியா ஃபீல் பண்ண எதுவுமே இல்லை. அதோட நீ ஒரு லாயர்! நான் ஃபர்ஸ்டா பார்த்த யுவாவைத் தான் எனக்கு திரும்ப பார்க்கனும். இப்படி எதுக்கெடுத்தாலும் பயப்பிடுற யுவாவை இல்லை. உன்மேல கைவைக்க அவருக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? உன்னை அடிச்சா தப்பு செய்யாத பட்சத்தில திருப்ப அடி.!! பொண்ணுங்க கிட்ட வீரம் காட்டுறவங்களாம் பெரிய மனுஷங்க என்று மதிக்கத் தேவை இல்லை. இனி ஏதும் பிரச்சனை என்றால் தயவு செய்து என்கிட்ட மறைக்காத. என்ன புரிந்தாதா?” என்றவன் அவள் பவ்வியமாக தலை அசைப்பதைக் கண்டு எழுந்த புன்னகையை மறைத்தவாறே பாதையில் கவனம் வைத்தான்.

Advertisement