Advertisement

அத்தியாயம் 29 1

 ஸ்ருதியின் வீட்டருகே இருந்த காலி மனையை அடைத்தாற்போல் தாற்காலிகமாக ஷாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அதில் வண்ண வண்ண பலூன்கள் தொங்கவிடப்பட்டு,  சரம் சரமாக கண்ணைக்கவரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மங்களகரமான நாகஸ்வர ஓசையில் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ‘வாதாபி கணபதிம்’ பாடலும், பக்கவாத்தியமாக தவில் இசையும் ஒலிபெருக்கியில் கேட்டுக்கொண்டிருந்தது. தனபாலனின் கட்டுமான நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்டிருந்த குடியிருப்பு வளாக முதல் பகுதி (phase 1) துவக்க விழாவிற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள்தான் இவை. 

ஸ்ருதியின் வீட்டிற்கு நான்கு மனை தள்ளி ஓட்டு வீடு இருந்த இடமும் அதற்கடுத்த சில கிரவுண்டையும் சேர்த்து பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடம் எழும்பியிருக்க, அவை அலங்கார விளக்குகளின் உபயத்தால் ஜொலித்தன.  

நங்கநல்லூரின் பிரதான சாலையில் இருந்தே வரவேற்பு பதாகைகள், அலங்கார வளைவுகள், அங்கங்கே பீடா கடைகள் போல திடீரென முளைத்திருந்த குடில்கள், அவற்றில் டை கட்டி டிப்டாப்பாக உடையணிந்த விற்பனை பிரதிநிதிகள், சாலையில் போவோர் வருவோரிடம் பிட் நோட்டிஸ்களை குடுத்த வண்ணம் இருக்க, இந்த குடியிருப்பு வளாக துவக்கத்திற்கான முஸ்தீபுகள் பிரம்மாண்டமாக இருந்தது. 

ஸ்ருதியின் வீட்டருகே காலி மனையிருந்ததால், அதை விழாவின்  நுழைவாயில் ஆக மாற்றி இருந்தனர். வாசலில் இருந்து உள்ளே மேடைவரை சிகப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு பந்தலை தாங்க இடையிடையே வைக்கப்பட்டிருந்த தூண்கள் பூக்கள் சுற்றப்பட்டு கண்ணைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. பந்தலின் ஈசான்ய மூலையில் மேடை அமைக்கப்பட்டு ஆளுயர குத்து விளக்கு ஒன்று ஏற்றுவதற்கு தயாராக இருந்தது. தவிர,முக்கிய விருந்தாளிகள் அமர்வதற்காக மேடையில் நான்கு இருக்கைகளும் போடப்பட்டிருந்தது.

பந்தலில் ஆங்காங்கே வட்டவடிவ மேஜைகள் அதை சுற்றி நான்கு நாற்காலிகள் போடப்பட்டு இருக்க, அங்கே நாற்பதுக்கும் மேற்பட்டோர்  பிளாட் குறித்து விசாரித்தனர். அங்கிருந்த ஏஜென்ட்கள் அவர்களுக்கு தேவையான தகவல்களை அளித்து, “இத்தனை வசதி வாய்ப்புகளோடு நங்கநல்லூரில் வேறு எங்கும் வீடு கிடைக்காது”, என்று பேசி அவர்களை மூளைச்சலவை செய்தனர்.  வீடு வாங்க வருபவர்கள் உடனுக்குடன் வீட்டுக் கடன் பெறுவதற்கு ஏற்ப நிகழ்ச்சிக்கு சில வங்கிகளின் பிரதிநிதிகளும் வந்திருந்தனர்.

அன்றைய தினத்தின் முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, லோகேஷ் மற்றும் அவரது சகாக்கள் காரில் வந்திறங்கினார்கள். ஏற்பாடுகளில் ஏதேனும் குறையுள்ளதா என்பதை கவனித்து அதை நிவர்தித்தனர். 

அடுத்த அரைமணி நேரத்தில் தனபாலனும் சீஃப் கெஸ்டும் வந்து சேர.., பூக்கள் தூவி, வரவேற்று உள்ளே மேடையில் அமர்ந்ததும் லோகேஷ் தனபாலன் அருகே வந்து, “சார் முகூர்த்த நேரம் ஆயிடுச்சு. விளக்கு ஏத்திடலாம். இப்ப வரைக்கும் மூணு பார்ட்டிங்க கைல அட்வான்ஸ் செக்கோட ரெடியா இருக்காங்க” 

“சார் இருக்குற கிரவுட் பார்த்தா..அனேகமா எல்லா ஃப்ளாட்டும் புக் ஆயிடும்னு நினைக்கிறேன்”, என்று ஆர்ப்பரித்தான் லோகேஷ்.

மேடையில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து, “அம்மாவை விளக்கேத்த சொல்லு மா”, என்று சொன்னான் தனபாலன்.

‘ஜீவிதம்’ என்று பெயரிடப்பட்டிருந்த அந்த குடியிருப்பை பற்றிய கையேடுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி, தனபாலனின் பேச்சுக்  குரலில் தலை நிமிர்ந்து பார்க்க.., அருகே இருந்த மகள், “மா முகூர்த்தநேரம் வந்திருச்சாம் விளக்கேத்தி இன்னாகரேட் பண்ணுவீங்களாம். மாமா சொல்றாங்க”, என்றாள் அந்தப் பெண்.

பட்டுச்சேலை சரசரக்க எழுந்தவர், “கண்ணம்மா நீயும் வாடா”, என்று மகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். விளக்கின் அருகே வந்ததும், “நீ ஏத்தும்மா”, என்று தீப்பெட்டியை மகளிடமே கொடுத்தார் அப்பெண்மணி. கழுத்தில் அணிந்திருந்த நல்முத்து மாலையும் சிறிய துளசி மாலையும் அவர் கணவனை இழந்தவர் என்பதை சொல்லாமல் சொல்லியது. 

அங்கு குழுமியிருந்த அனைவரும் கைதட்ட விழா இனிதே ஆரம்பித்தது. மேடையில் இருந்த இருகைக்குத் திரும்பிய அப்பெண்மணி அமைதியான புன்னகையோடு, “அண்ணாட்ட இருந்து இன்னும் போன் வரலையாடா? அவன சம்பாத்தியத்துல உனக்காக ஃப்ளாட் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு இருந்தான்?”, என்று பெருமை பொங்க கேள்வி கேட்டார் அப்பெண்மணி. 

மகள், “வந்துடுவேன்னு சொன்னாம்மா. பிளைட் ஒரு மணி நேரம் லேட். இல்லன்னா இத்தனை நேரம் வந்திருப்பான்”,என்று பதிலுரைத்தாள்.

யார் கருத்தையும் கவராத படி அந்த கூட்டத்தின் ஓரமாக யோகியும் சுகுமாரனும் அமர்ந்து கையில் இருந்த கையேடுகளை பார்த்தவாறே இருவரும் மேடையில் நடந்துகொண்டிருப்பதை அவதானித்துபடி இருந்தனர். என்னதான் அமைதியாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் இருவரது முகமும் அசாத்திய இறுக்கத்துடன் இருப்பது தெரிந்தது. 

அச்சமயத்தில், ஈஸ்வரியிடம் இருந்து, “யோகண்ணா, எங்கிருந்தாலும் உடனே வீட்டுக்கு வா”, என்று யோகியின் அலைபேசிக்கு குறுந்தகவல் வர, யோகி புருவம் சுருக்கினான். பொதுவாக ஈஸ்வரி தகவல்கள் அனுப்ப மாட்டாள். இன்னும் சொல்லப்போனால் அவளின் சொற்களே பொறுக்கி எடுத்தாற்ப்போல் சுருக்கமாக இருக்கும்.  

யோகி தனது அலைபேசியை யோசனையோடு பார்த்தான்.’ஈஸு ஏன் மெசேஜ் பண்ணுது?, எப்போவும் போன் தான போடும்?” என்ற யோசனை மனதில் எழும்ப.., எதிரிலிருந்த சுகுமாரனை அழைத்தான். 

“சுகு..”

“சொல்லுங்கத்தான்.,  மீடியா காரங்க வந்துட்டாங்க. எல்லாம் தயாரா இருக்காங்க. அது தவிர..”, என்று படபடப்பாக இருந்தான் சுகுமாரன். 

“ஸ்ஷு.. கொஞ்ச நேரம் நீ பாத்துக்க சுகு. ஈஸு  மெசேஜ் பண்ணியிருக்கு. என்னன்னு பாத்துட்டு வர்றேன்”, என்ற யோகியை குழப்பமாகப் பார்த்தான் சுகுமாரன். 

“என்னாச்சுத்தான்?”, என்றவனின் மனதில் படபடப்பு பின்னுக்குப் போய் கவலை வந்தது. பேசும்போதே அலைபேசியை கையில் எடுத்திருந்தான் சுகுமாரன். தனது மனைவியை அழைக்கவென.

யோகி, சுகுமாரை கவனித்தான். அவன் ஈஸ்வரியிடம் பேசி, அங்கே அவசரமான விஷயம் ஏதுமில்லை என்று தெரிந்தால்..? இவ்வளவு முக்கியமான நேரத்தில் இங்கிருக்காமல் இருப்பதா? ஒருவேளை போனிலேயே காரியம் முடிந்துவிட்டால் என்ற எண்ணம்தான் காரணம். ஆனால் மறுமுனை எடுக்கப்படவில்லை. சுகுமாரின் நெற்றி கவலைக் கோடுகளை பூசிக்கொண்டது. 

“சுகு டென்ஷனாகாத. உன்கிட்ட பேசணும்னுனா ஈஸு உனக்கு மெசேஜ் போட்டிருக்கும். என்கிட்டேதான் எதோ வேலையிருக்கு போல. நீ இங்க பாத்துக்க. அவசரம்னா போன் போடு. அடுத்த வீடுதான? வர்றதுக்கு ரெண்டு நிமிஷம் கூட ஆகாது”, என்று தங்கையின் செயல்களை நிகழ்தகவிட்டு பேசிய யோகி, “அந்த ஓட்டு வீட்டம்மா எங்க இன்னும் காணோம்?”, சுகுமாரனிடம் கேட்டு காரியக்காரனானான். 

ஒரு பெருமூச்சோடு யோகி சொன்னதை ஏற்ற சுகுமாரன் நடப்புக்கு வந்தான்.  “அதோ அந்த மூணாவது டேபிள்-ல உக்காந்துட்டு இருக்கிற பொண்ணை பாத்தீங்களா? அந்த பொண்ணு அவங்க பொண்ணுதான். அதுதான் முதல்ல இங்க மேடைக்கு வந்து பேசி பிரச்சனைய கிளப்பப்போகுது. இந்த பொண்ணால முடியலைன்னா அடுத்து அவங்கம்மா வருவாங்க.”

“ஹ்ம். சரி எல்லாம் ஒழுங்கா போகணும். நம்மாளுங்க..?”

“இருக்காங்க அத்தான்”,என்று சுகுமாரன் சொல்ல.. 

“சரி, வந்துடறேன்”, இருக்கையைவிட்டு எழுந்தான் யோகி. 

“அத்தான் சீக்கிரம் வந்துடுங்க, அந்த அம்மாவை எப்படி சமாளிக்க போறேனோ-ன்னு இப்போவே உதறுது”, என்றான் சுகுமாரன். 

“ஓ! இதைத்தான் பேர்ப்பாசம்னு சொல்லுவாங்களோ? இது மட்டும் உன் பொண்டாட்டிக்கு தெரிஞ்சது அவ்ளோதான். அதைக்கூட நீ அவ கால்ல விழுந்து சமாளிச்சுடுவ. ஆனா உன் மாமியாரை ஒரு செகண்ட் யோசி. நீ போக வர்ற நாட்கள்ல விருந்து வைக்கறவங்க..”, என கிண்டல் த்வனியில் சொன்னாலும் யோகிக்கும் மனம் தந்தியடிக்கத்தான் செய்தது. வசந்தம்மாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். 

“நா பாத்துக்கறேன் அத்தான்”, என்று விட்டு அலைபேசியை எடுத்த ஜீவசுகுமாரன் என்று முழுப்பெயர் கொண்ட சுகுமார் மனைவியை மீண்டும் அழைத்தான். 

ஆனால் ரிங் சென்று கொண்டு இருந்ததே ஒழிய போனை எடுப்பதாக காணோம். ‘சரி அத்தான்தான் பாக்க போயிருக்காருல்ல? வந்த உடனே என்னன்னு சொல்லுவாரு’, என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு முயன்று மனதை நிகழ்விடத்திற்கு திருப்பினான். 

அங்கே மேடையில்…

நிகழ்ச்சி தொகுப்பாளர், “இப்போ இந்த ஜீவிதம் அபார்ட்மெண்ட்டோட முதல் பிளாட்-டோட கீயை வாங்கப்போற லக்கியஸ்ட் பேர்சன்… ராஜலக்ஷ்மி அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்”, என்று அறிவித்து.. அரங்கிலிருந்தவர்கள் கைதட்ட நேரம் கொடுத்த பின்..,

தொடர்ந்து.. “இவங்க கிட்ட பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு. இவங்க இங்க வரும்போதே அட்வான்ஸுக்கான செக், பேங்க் ஸ்டேட்மென்ட்-ன்னு ஹௌசிங் லோன் போடத் தேவையான எல்லா டாகுமெண்ட்ஸோட தயாரா வந்து..  இதோ பாருங்க அவங்க கனவு இல்லத்தை வாங்கப் போறாங்க. பிரெண்ட்ஸ், எங்கே அரங்கம் நிறைந்த கரகோஷம்?”, என்று அப்துல் ஹமீது பாணியில் அறிவிக்க, நளினமாக உடையணிந்த ராஜலக்ஷ்மி எனும் அந்தப் பெண் மேடையேறினாள்.

ஒரு பெரிய புன்னகையோடு மைக்கை ராஜலக்ஷ்மியின் கொடுத்து,  “மேம், வணக்கம்”

“வணக்கம்”

சொல்லுங்க மேம், எப்படி ஃபீல் பண்றீங்க?”,என்று அந்த தொகுப்பாளர்  கேட்க..,

அப்பெண் பார்வையாளர்களை நோக்கி திரும்பி, “சொந்த வீடு வாங்க வந்திருக்கும் எல்லாருக்கும் வணக்கம். சார் ஒரு கேள்வி கேட்டார்.எப்படி உணர்றீங்கன்னு?”, என்றவள், அந்த தொகுப்பாளரைப் பார்த்து, “சொந்த மண்ணை மிதிச்சது போல பீல் பண்றேன் ஸார்”, என்று உணர்ச்சித் ததும்பலாக அவள் கூற, குழுமியிருந்த அனைவரது கவனமும் அவள்மீது குவியமாக விழுந்தது. 

தனபாலனும் லோகேஷும் சற்று முன்புதான் மேடையில் அமர்ந்திருந்தனர். அவர்களது கவனமும் இப்போது அவள் மீது. தனபாலன் மட்டும் அவளை எங்கோ பார்த்தது போலிருக்கிறதே என்ற யோசனையோடு புருவம் சுருக்கி அவளது பேச்சை கவனித்து இருந்தான். 

ராஜலக்ஷ்மி அங்கிருந்த மக்களை பார்த்து, “என்னடா இப்படி சொந்த மண்ணைப்போல இருக்குன்னு சொல்றாளே-ன்னு நினைக்கிறீங்களா?”, என்று ராஜலக்ஷ்மி கேட்க, கூட்டத்தின் சளசளப்பு முழுவதும் அடங்கி அவள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தது. 

தனபாலனுக்கும் லோகேஷுக்கும் அப்பெண்ணின் அழுத்தமான குரலைக் கேட்கையில் என்னவோ சரியில்லை என்பது போல தோன்ற, தொகுப்பாளரை கண்ணால் அழைத்து, ‘அவள் மேற்கொண்டு பேசவேண்டாம். அனுப்பி வை’, என்று கட்டளையிட்டான். ஆனால் இத்தனை பேர் பார்க்க மேடையில்  பேசிக்கொண்டு இருப்பவளை எப்படி?, என்று குழம்பினான் அந்த தொகுப்பாளன். 

மெல்ல லோகேஷ் அருகே வந்து, “ஸார், யூ ட்யூப்-ல லைவ் டெலிகாஸ்ட் போயிட்டு இருக்கு. நீங்க நல்லா கவனிப்போம்னு சொன்னீங்க-ங்கிறதுக்காக ஃபேமஸ் டீ.வி  சேனல்லாம் ஷோ-வை கவர் பண்ண வந்துருக்கு.இப்போ போயி எப்படி நிறுத்த முடியும்?”, என்று முணுமுணுத்தான். இங்கே இப்படி சத்தமின்றி இவர்கள் பேசிக்கொண்டிருக்க.. 

ராஜலக்ஷ்மியோ, “சொந்த மண்ணுதான். பிரெண்ட்ஸ், இதோ  சர்வே நம்பர் 72 ல இவ்ளோ உயரமா நிக்குதே.. இதுல கால்வாசி எங்க நிலம். இந்த இடத்தை இவங்க எங்கப்பாவ ஏமாத்தி எழுதி வாங்கிட்டாங்க”, என்று குற்றம் சாட்ட..  கூட்டத்தில் பெரிய சலசலப்பு எழுந்தது. லோகேஷ் தனது இருக்கையில் இருந்து எழுந்து அவளருகே செல்ல ஆரம்பித்தான். 

“செக் பண்ணிக்கோங்க பிரெண்ட்ஸ்.. இதோ எங்கிட்ட வாரிசு சர்டிபிகேட் இருக்கு. உங்களுக்கு ஒரு காப்பி வேணுமா? இதோ தர்றேன்”, என்று கோபமாக பேசினால் அப்பெண். 

தனபாலன் தனது அருகே இருந்த அடியாளிடம், “டேய்.  முதல்ல இவளை மேடைலேர்ந்து கீழ இறக்கு. அதுக்குமுன்ன அந்த லைவ் டெலிகாஸ்ட்-டை நிறுத்தச்  சொல்லு. கூட்டிட்டு போ”, தனபாலன் கடித்த பற்களிடையே வார்த்தையை துப்ப, அவன் வேகமாக நிகழிச்சியை நேரலையாக ஒளிபரப்பும் ஆட்களிடம் சென்றான். 

அதற்குள்ளாக, ராஜலக்ஷ்மியை அணுகியிருந்த லோகேஷ், “மேடம் நீங்க கீழ இறங்குங்க”,என்று வல்லடியாக அவளிடமிருந்து மைக்கைப் பிடுங்கப்போக.., அவனிடமிருந்து தள்ளி தூர நின்ற அப்பெண் ஆவேசமாக, “இவங்க ஒன்னை மறந்துட்டாங்க. பூர்வீகச்சொத்து கைமாறும்போது வாரிசுகள் எல்லாரும் அதாவது பதினெட்டு வயசு முடிஞ்ச எல்லாரும் அதுல கையெழுத்திட்டு போட்டு இருக்கனும். எங்கிட்ட இவங்க கையெழுத்து வாங்கல. நா கேஸ் பைல் பண்ணிட்டேன். இது வில்லங்கம் இருக்கிற இடம். வாங்கினா பிரச்சன…” என்று மிக வேகமாக பேச.., அடுத்த நொடி, லோகேஷ் அவளிடமிருந்து மைக்கைக் கைப்பற்றினான்.

இவன் கண்ணசைவுக்கு காத்திருந்தாற்போல் இரண்டு குண்டர்கள் மேடையருகே செல்ல ஆரம்பிக்க, அதற்குள்ளாக சுகுமாரன் மேடைக்குச் சென்று விட்டான். 

“பிரெண்ட்ஸ், இந்த பொண்ணு சொல்றது கரெக்ட். நா இவங்களோட லாயர். இந்த பொண்ணுக்கோ இவங்கள சேர்ந்தவங்களுக்கோ ஏதாவது அசம்பாவிதமா ஆச்சுன்னா அதுக்கு இந்த தனபாலும் அவங்க ஆளுங்களும்தான் காரணமாயிருக்கும்ன்னு நா இங்க மீடியாமுன்னால சொல்லிக்கறேன்”, என்று சொல்ல..

மேடையில் இருந்த தனபாலன், லோகேஷ் மட்டுமல்லாமல் சுகுமாரனை பலமுறை தனபாலனின் அலுவலகத்தில் பார்த்த, அவனது அடியாட்கள் கூட அதிர்ந்து நின்றனர். ‘என்ன? சுகுமாரன் இந்த பெண்ணோட  வக்கீலா? அப்போ..?”, சுகுமாரனின் செயல்களை கோர்வையாக யோசித்து என்ன என்று புரிந்து கொள்ள முடியாமல் தனபாலன் குழம்பினான். 

அவன் ஒருபுறம் அப்படியிருக்க, வீடு வாங்க வந்திருந்த கூட்டத்தில் இருந்து, “தம்பி.. இருப்பா.. அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது. முதல்ல நீங்க சொல்றதுல உண்மையிருந்தா மேற்கொண்டு என்ன ஆகணும்னு பாக்கலாம். அதை விட்டுட்டு டிபி கன்ஸ்ட்ரக்ஷன் மேல பொறாமைப்படறவங்க உங்களை அனுப்பி இந்த பங்ஷனை தடுக்கலாம்னு அனுப்பியிருந்தா?”, என்று ஒரு நரைமுடி தாத்தா சுகுமாரனைப் பார்த்துச் கேட்டார்.  

சட்டென அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்து, “ஆமா சார் நீங்க சொல்றாமாதிரி இவங்க பொறாமைல குழப்பம் பண்றவங்களாத்தான் இருக்கும். ஏன்னா, இதுவரைக்கும் நாங்க கட்டிக்குடுத்த அபார்ட்மெண்ட்ஸ்-ல சட்ட சிக்கல் ஏதாச்சும் வந்திருக்கா சொல்லுங்க?”, லோகேஷ் அந்த முதியவரைப் பார்த்து கேட்டான். 

“அவங்க சொல்றதையும்தான் செக் பண்ணி பாத்துடலாமே?”, என்று அவர் கொக்கி போட, மேற்கொண்டு லோகேஷால் பேசமுடியாமல் போனது. கூட்டத்தின் ஒரு பகுதியினர், “ஆரம்பமே சரியில்ல, வில்லங்கம் இருக்கிற இடமாம்?”, என்று பேசியபடி மெல்ல வெளியேற ஆரம்பித்தனர். இன்னும் சிலர், மேடையின் நடப்புகளை வெகு சுவாரசியமாக வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தனர். (அதில் சிலர் சுகுமாரனின் ஆட்கள்)

முதன்முறையாக கைகளைக் கட்டி நிற்க வேண்டிய கட்டாயம் தனபாலனுக்கு ஏற்பட்டது. காரணம் மக்களிடம் அவனது நிறுவனத்தின் மீது இருக்கும் நன்மதிப்பு. அதை கட்டிக்காக்க இப்போது அமைதியாக இருந்தே தீர வேண்டிய இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் நின்றான் அவன். உள்ளே சாக்கடையாக இருந்தாலும் வெளியே பொது அனா பார்வைக்கு தனபாலன் வெள்ளுடை வேந்தன். அந்த இமேஜ் குலைவதில் அவனுக்கு விருப்பமில்லை. 

சுகுமாரனோ, “இதோ இவங்க சொன்ன வாரிசு சட்டிபிகேட் நாங்க வெயிட் பன்றோம்.. நீங்க அலசி ஆராய்ஞ்சு முடிவு சொல்லுங்க”,என்று சொல்லி சட்டமாக அவர் அருகே அமர்ந்துவிட்டான்.  அந்தப்பெண் ராஜலக்ஷ்மியும் உடனிருந்தாள்.

அந்த தாத்தாவோ,மேஜையில் அமர்ந்து வேடிக்கை பார்த்த விற்பனை பிரதிநிதியிடம்,”உங்க டாகுமெண்ட்டெல்லாம் குடுப்பா”, என்று கேட்டு வாங்கினார். கூடவே,மேடையில் இருந்த தனபாலைப் பார்த்து, “எல்லா தாய் பத்திரமும் இதுல இருக்கில்ல?”, என்று கேள்விகனை வீசிவிட்டு, “நா ரிட்டையர்டு சர்வேயர்”, என்று பொதுவாய்ச் சொன்னார். 

மேடையில் அமர்ந்திருந்த தனபாலன் செய்வதறியாது குழம்பினான். பார்வையாளராக நூறு நூற்றைம்பது பேராவது இருக்கக்கூடும். ‘அடுத்து என்ன செய்வது?’ 

குழம்பியது தனபாலன் மட்டுமல்ல அவன் அருகே அமர்ந்திருந்த அந்த பெண்மணியும் அவளது மகளும்தான். “என்ன நடக்குது தனா?”, என்று கேட்டார் அவர்.

“சின்ன பிரச்சனைக்கா, நீவேனா பாப்பாவை கூட்டிட்டு வீட்டுக்கு போறியா?”, தனபாலன் பணிவாக கேட்டான். காரணம் அங்கு மேடையில் அமர்ந்திருந்த அந்த பெண்மணியின் பெயர் ஜீவிதா. அவர் தனபாலன் உடன் பிறந்த சகோதரி. யோகியின் தந்தையின் இரண்டாம் மனைவி.   

இவரின் நினைவாகத்தான் யோகியின் தந்தை, சுகுமாரனுக்கு ஜீவசுகுமாரன் என்று பெயர் வைத்தார். 

Advertisement